Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிற்சேர்க்கை

பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றிய உண்மை

பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றிய உண்மை

திரித்துவ போதனையை நம்புகிறவர்கள் கடவுளில் மூன்று நபர்கள் இருப்பதாக, அதாவது பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்று நபர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இம்மூன்று நபர்களும் ஒருவருக்கொருவர் சரிசமமானவர்கள் என்றும், சர்வ வல்லமையுள்ளவர்கள் என்றும், ஆரம்பம் இல்லாதவர்கள் என்றும் சொல்கிறார்கள். எனவே, திரித்துவ போதனையின்படி, பிதாவும் கடவுள், குமாரனும் கடவுள், பரிசுத்த ஆவியும் கடவுள், என்றாலும் கடவுள் ஒருவரே என்று அது சொல்கிறது.

இந்தப் போதனைக்குத் தங்களால் விளக்கமளிக்க முடியவில்லை என்று திரித்துவத்தை நம்பும் அநேகர் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனாலும், அது ஒரு பைபிள் போதனை என அவர்கள் நினைக்கலாம். ஆனால் பைபிளில் “திரித்துவம்” என்ற வார்த்தை கிடையவே கிடையாது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஆனால், திரித்துவத்தை ஆதரிக்கிற கருத்து ஏதாவது அதில் இருக்கிறதா? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க ஒரு வசனத்தை, அதாவது திரித்துவ ஆதரவாளர்கள் அடிக்கடி மேற்கோள் காண்பிக்கிற ஒரு வசனத்தை, இப்போது நாம் பார்க்கலாம்.

“அந்த வார்த்தை தேவனாயிருந்தது”

யோவான் 1:1 இவ்வாறு சொல்கிறது: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.” இயேசுதான் “அந்த வார்த்தை” என்று அதே அதிகாரத்தில் பிற்பாடு அப்போஸ்தலன் யோவான் தெளிவாகக் காண்பிக்கிறார். (யோவான் 1:14) ஆனாலும், அந்த வார்த்தை தேவன் என்று அழைக்கப்படுவதால் பிதாவும் குமாரனும் ஒரே கடவுளின் பாகமானவர்கள்தான் என்ற முடிவுக்குச் சிலர் வந்துவிடுகிறார்கள்.

பைபிளிலுள்ள இந்த வசனம் ஆரம்பத்தில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது என்பதை நினைவில் வையுங்கள். பிற்பாடு, இந்தக் கிரேக்க சொற்றொடரை மொழிபெயர்ப்பாளர்கள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்தார்கள். என்றபோதிலும், ஏராளமான பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் “அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என்று அதை மொழிபெயர்க்கவில்லை. ஏன்? பைபிள் எழுதப்பட்ட கிரேக்க மொழியில் அவர்கள் புலமை பெற்றிருந்ததால், அந்தச் சொற்றொடரை வேறு விதத்தில்தான் மொழிபெயர்க்க வேண்டுமென அவர்கள் முடிவு செய்தார்கள். அப்படியானால் எந்த விதத்தில் அவர்கள் மொழிபெயர்த்தார்கள்? இதோ சில உதாரணங்கள்: “அந்த லோகோஸ் [வார்த்தை] தெய்வீகமாயிருந்தது.” (எ நியூ டிரான்ஸ்லேஷன் ஆஃப் த பைபிள்) “அந்த வார்த்தை ஒரு தேவனாயிருந்தது.” (த நியூ டெஸ்டமென்ட் இன் அன் இம்ப்ரூவ்ட் வர்ஷன்) “அவ்வாக்கு கடவுள்தன்மை கொண்டிருந்தது.” (பொது மொழிபெயர்ப்பு, அடிக்குறிப்பு) இந்த மொழிபெயர்ப்புகளின்படி, அந்த வார்த்தை கடவுளை அர்த்தப்படுத்துவதில்லை. * அந்த வார்த்தை “ஒரு தேவனாயிருந்தது” எனக் குறிப்பிடப்படுவதற்குக் காரணம் யெகோவாவின் சிருஷ்டிகளிலேயே அவர் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பதுதான். இங்கே ‘தேவன்’ என்று கொடுக்கப்பட்டுள்ள வார்த்தை “வல்லமைமிக்கவர்” என்பதை அர்த்தப்படுத்துகிறது.

அதிக விவரத்தைப் பெற ஆராயுங்கள்

பைபிளை எழுதப் பயன்படுத்தப்பட்ட கிரேக்க மொழி அநேகருக்குத் தெரியாது. அப்படியானால், அப்போஸ்தலன் யோவான் உண்மையிலேயே எதை அர்த்தப்படுத்தினார் என்று எப்படித் தெரிந்துகொள்வது? இந்த உதாரணத்தைச் சற்று யோசித்துப் பாருங்கள்: ஒரு ஸ்கூல் டீச்சர் தன்னுடைய மாணவர்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார். அந்த விளக்கத்தைப் புரிந்துகொள்வதில் பிற்பாடு அந்த மாணவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினையை மாணவர்கள் எப்படித் தீர்த்துக்கொள்ளலாம்? இன்னுமதிக விவரங்களை அளிக்குமாறு டீச்சரை அவர்கள் கேட்கலாம். கூடுதலான விவரங்களைத் தெரிந்துகொள்வது அந்த விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ள நிச்சயம் அவர்களுக்கு உதவும். அவ்வாறே, யோவான் 1:1-ன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள யோவானின் அதே சுவிசேஷத்தில் இயேசுவின் ஸ்தானத்தைப் பற்றிய கூடுதலான விவரங்களை நீங்கள் வாசித்துப் பார்க்கலாம். அவற்றைத் தெரிந்துகொள்வது, இந்த விஷயத்தின் பேரில் சரியான முடிவுக்கு வர உங்களுக்கு உதவும்.

உதாரணத்திற்கு, 1-ம் அதிகாரம், 18-ம் வசனத்தில் யோவான் மேலுமாக என்ன எழுதுகிறார் என்று கவனியுங்கள்: “[சர்வவல்லமையுள்ள] தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை.” ஆனால், குமாரனான இயேசுவை மனிதர்கள் பார்த்திருக்கிறார்கள், யோவான் இவ்வாறு சொல்கிறார்: “அந்த வார்த்தை [இயேசு] மாம்சமாகி, . . . நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்.” (யோவான் 1:14) அப்படியானால், குமாரன் எப்படிச் சர்வவல்லமையுள்ள கடவுளின் பாகமாக இருக்க முடியும்? மேலும், அந்த வார்த்தை, ‘தேவனிடத்திலிருந்தது’ எனவும் யோவான் குறிப்பிடுகிறார். ஆனால், ஓர் ஆள் ஒரு நபரிடத்திலிருந்துகொண்டே எப்படி அந்த நபராகவும் இருக்க முடியும்? மேலும், யோவான் 17:3-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, தமக்கும் தம்முடைய பரலோகப் பிதாவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இயேசு தெளிவாகக் காட்டினார். தம்முடைய பிதாவை ‘ஒன்றான மெய்த் தேவன்’ என்று அவர் அழைத்தார். யோவானும் தனது சுவிசேஷத்தின் முடிவில், இவ்வாறு சுருங்கச் சொல்கிறார்: ‘இயேசுவே தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாக . . . இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.’ (யோவான் 20:31) இந்த வசனம் இயேசுவை தேவன் என்று அல்ல, ஆனால் தேவனுடைய குமாரன் என்று அழைப்பதைக் கவனியுங்கள். யோவான் சுவிசேஷத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்தக் கூடுதலான விவரம், யோவான் 1:1-ஐ எப்படிப் புரிந்துகொள்வதென்று காண்பிக்கிறது. ஆகவே, வார்த்தையான இயேசுவுக்கு உயர்ந்த ஒரு ஸ்தானம் இருக்கிறதென்ற அர்த்தத்தில்தான் அவர் ‘ஒரு தேவனாக’ இருக்கிறார், ஆனால் அவரும் சர்வவல்லமையுள்ள தேவனும் ஒரே நபர்கள் அல்ல.

விஷயங்களை உறுதிசெய்து கொள்ளுங்கள்

ஸ்கூல் டீச்சரையும் மாணவர்களையும் பற்றிய உதாரணத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வாருங்கள். டீச்சர் அளித்த கூடுதலான விளக்கத்தைக் கேட்ட பிறகும், சிலருக்குச் சந்தேகங்கள் இருக்கிறதெனக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அப்போது அவர்கள் என்ன செய்யலாம்? அதே விஷயத்தின் பேரில் மேலுமான விவரங்களைப் பெற்றுக்கொள்ள வேறொரு டீச்சரை அணுகலாம். இந்த இரண்டாவது டீச்சர், முதல் டீச்சர் சொன்ன விவரங்கள் சரியானவையே என ஊர்ஜிதப்படுத்தினால், பெரும்பாலான மாணவர்களின் சந்தேகங்கள் தீர்ந்துவிடலாம். அதுபோலவே, இயேசுவுக்கும் சர்வவல்லமையுள்ள கடவுளுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி பைபிள் எழுத்தாளரான யோவான் உண்மையில் என்ன சொன்னார் என்பது குறித்து நீங்கள் நிச்சயமாய் இல்லையென்றால், மேலுமான விவரங்களைப் பெற்றுக்கொள்ள வேறொரு பைபிள் எழுத்தாளர் என்ன சொல்கிறார் என்பதற்கு நீங்கள் கவனம் செலுத்தலாம். உதாரணமாக, மாற்கு எழுதிய விஷயங்களைச் சிந்தித்துப் பாருங்கள். இந்த உலகத்தின் முடிவைக் குறித்து இயேசு இவ்வாறு சொன்னதாக அவர் மேற்கோள் காட்டுகிறார்: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.” (மாற்கு 13:32) இயேசு சர்வவல்லமையுள்ள கடவுளல்ல என்பதை இந்த வார்த்தைகள் எப்படி ஊர்ஜிதப்படுத்துகின்றன?

குமாரனைவிட பிதாவுக்கு அதிகம் தெரியுமென்று இயேசு இங்கே சொல்கிறார். ஆனால், இயேசு சர்வவல்லமையுள்ள கடவுளின் பாகமாக இருந்தால், பிதாவுக்குத் தெரிந்த விஷயங்கள் அனைத்தும் அவருக்கும் தெரிந்திருக்கும். எனவே, பிதாவும் குமாரனும் சரிசமமானவர்களாய் இருக்க முடியாது. ஆனாலும் சிலர்: ‘இயேசு, கடவுளாகவும் இருந்தார், மனிதனாகவும் இருந்தார். இங்கே அவர் ஒரு மனிதனாக இருந்தபோதுதான் பேசினார்’ என்று சொல்வார்கள். ஒருவேளை அது அப்படியிருந்தாலும், பரிசுத்த ஆவியைப் பற்றியென்ன? பிதாவைப் போல, பரிசுத்த ஆவியும் அதே கடவுளின் பாகமாக இருக்கிறதென்றால், பிதாவுக்குத் தெரிந்துள்ள விஷயங்கள் பரிசுத்த ஆவிக்கும் தெரியுமென்று ஏன் இயேசு இங்கே சொல்லவில்லை?

எனவே, பைபிளைப் படிக்கப் படிக்க, இந்த விஷயத்தின் பேரில் இன்னும் ஏராளமான வசனங்களை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றிய உண்மையை அவ்வசனங்கள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.—சங்கீதம் 90:2; அப்போஸ்தலர் 7:55; கொலோசெயர் 1:15.

^ பாரா. 3 யோவான் 1:1-க்குப் பொருந்துகிற கிரேக்க இலக்கண விதிகளைப் பற்றிய கலந்தாலோசிப்புக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் என்ற புத்தகத்தில் பக்கங்கள் 212, 416-ஐக் காண்க.