Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிற்சேர்க்கை

வணக்கத்தில் மெய்க் கிறிஸ்தவர்கள் ஏன் சிலுவையைப் பயன்படுத்துவதில்லை

வணக்கத்தில் மெய்க் கிறிஸ்தவர்கள் ஏன் சிலுவையைப் பயன்படுத்துவதில்லை

கோடிக்கணக்கானோர் சிலுவையை மதிப்பு மரியாதையோடு வணங்குகிறார்கள். சிலுவையை “கிறிஸ்தவ மதத்தின் முக்கிய சின்னம்” என தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா அழைக்கிறது. என்றபோதிலும், மெய்க் கிறிஸ்தவர்கள் சிலுவையைப் பயன்படுத்துவதில்லை. ஏன்?

இயேசு கிறிஸ்து சிலுவையில் சாகவில்லை என்பதே அதற்கான ஒரு முக்கிய காரணமாகும். “சிலுவை” எனப் பொதுவாக மொழிபெயர்க்கப்படுகிற கிரேக்க வார்த்தை ஸ்டொரோஸ் (stau·rosʹ) ஆகும். “நேரான ஒரு கம்பம் அல்லது கழுமரம்” என்பதே அதன் அடிப்படை அர்த்தம். த கம்ப்பேனியன் பைபிள் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது: “[ஸ்டொரோஸ்] என்பது இரண்டு மரக்கட்டைகளை எந்தவொரு கோணத்திலும் குறுக்காக வைப்பதை அர்த்தப்படுத்துவது கிடையாது . . . இரண்டு மரக்கட்டைகள் இருந்ததாக [புதிய ஏற்பாட்டின்] கிரேக்க மொழியில் மறைமுகமாகக்கூட எதுவும் பதிவு செய்யப்படவில்லை.”

இயேசுவை எதில் கொலை செய்தார்கள் என்பதைப் பற்றிக் குறிப்பிடுகையில், பைபிள் எழுத்தாளர்கள் அநேக வசனங்களில் மற்றொரு வார்த்தையையும் உபயோகித்திருக்கிறார்கள். அது ஸைலான் (xyʹlon) என்ற கிரேக்க வார்த்தையாகும். (அப்போஸ்தலர் 5:30; 10:39; 13:29; கலாத்தியர் 3:13; 1 பேதுரு 2:24) இந்த வார்த்தைக்கு வெறுமனே “ஒரு கம்பம், தடி, அல்லது மரம்” அல்லது “மரக்கட்டை” என்று அர்த்தம்.

மரண தண்டனை வழங்குவதற்குப் பெரும்பாலும் ஏன் ஒரு சாதாரண கழுமரம் பயன்படுத்தப்பட்டது என்பதை சிலுவையும் சிலுவையில் அறையப்படுதலும் என்ற ஜெர்மானிய புத்தகத்தில் ஹெர்மான் ஃப்யூல்டா என்பவர் இவ்வாறு விளக்குகிறார்: “பொதுமக்கள் முன்பாக மரண தண்டனை வழங்குவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா இடங்களிலும் மரங்கள் இருக்கவில்லை. எனவே ஒரு சாதாரண கம்பம் குழிதோண்டி நிறுத்தப்பட்டது. இந்தக் கம்பத்தில் குற்றவாளிகளுடைய கைகள் மேலே தூக்கிக் கட்டப்பட்டன அல்லது ஆணியடிக்கப்பட்டன, பெரும்பாலும் அவர்களுடைய பாதங்களுக்கும் அவ்வாறே செய்யப்பட்டன.”—டாஸ் கிராய்ட்ஸ் யூன்ட் டீ கிராய்ட்ஸிகூங்.

என்றபோதிலும், அதிக நம்பகமான அத்தாட்சியைக் கடவுளுடைய வார்த்தையே நமக்குத் தருகிறது. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொல்கிறார்: “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.” (கலாத்தியர் 3:13) இங்கு பவுல், உபாகமம் 21:22, 23-ல் உள்ள வசனங்களை மேற்கோள் காண்பிக்கிறார்; இவ்வசனங்கள் ஒரு சிலுவையை அல்ல, ஆனால் ஒரு கழுமரத்தையே குறிப்பிடுகின்றன என்பது தெளிவாக உள்ளது. கழுமரத்தில் அறையப்பட்ட நபர் ‘சபிக்கப்பட்டவராக’ கருதப்பட்டதால், கிறிஸ்து அவ்வாறு அறையப்பட்டதைப் போன்ற உருவங்களை வைத்து கிறிஸ்தவர்கள் தங்களுடைய வீடுகளை அலங்கரிப்பது சரியல்ல.

கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொண்டவர்கள் கிறிஸ்துவின் மரணத்திற்குப் பின் 300 ஆண்டுகளுக்கு வணக்கத்தில் சிலுவையைப் பயன்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், நான்காவது நூற்றாண்டில், புறமதப் பேரரசரான கான்ஸ்டன்டைன் விசுவாசதுரோக கிறிஸ்தவத்திற்கு மதம் மாறி, சிலுவையே அதன் சின்னம் என்று பிரபலப்படுத்த ஆரம்பித்தார். கான்ஸ்டன்டைன் எந்த நோக்கத்தோடு அவ்வாறு செய்திருந்தாலும், இயேசு கிறிஸ்துவுக்கும் சிலுவைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. சொல்லப்போனால், சிலுவை என்பது புறமதத்திலிருந்து ஆரம்பமானது. நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு ஒத்துக்கொள்கிறது: “கிறிஸ்தவத்துக்கு முன்னான காலத்திலிருந்த கலாச்சாரங்களிலும் கிறிஸ்தவமற்ற கலாச்சாரங்களிலும் சிலுவை காணப்படுகிறது.” வேறுபல நிபுணர்களும் சிலுவையை இயற்கை வழிபாட்டோடும் புறமதப் பாலியல் சடங்குகளோடும் சம்பந்தப்படுத்திக் காண்பித்திருக்கிறார்கள்.

அப்படியானால், இந்தப் புறமதச் சின்னம் ஏன் பிரபலப்படுத்தப்பட்டது? “கிறிஸ்தவ மதத்தை” புறமதத்தவர் எளிதில் ஏற்றுக்கொள்வதற்காகவே அது பிரபலப்படுத்தப்பட்டது போல் தெரிகிறது. ஆனால், எந்தவொரு புறமதச் சின்னத்தையும் வழிபடக் கூடாதென்று பைபிள் தெளிவாகவே எச்சரித்திருக்கிறது. (2 கொரிந்தியர் 6:14-18) எல்லா விதமான விக்கிரகாராதனையையும் அது தடைசெய்கிறது. (யாத்திராகமம் 20:4, 5; 1 கொரிந்தியர் 10:14) ஆகையால், சரியான காரணத்தோடுதான் மெய்க் கிறிஸ்தவர்கள் சிலுவையை வணக்கத்தில் பயன்படுத்துவதில்லை. *

^ பாரா. 4 சிலுவையைப் பற்றிய இன்னும் விவரமான கலந்தாலோசிப்புக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 89-93-ஐக் காண்க.