Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிற்சேர்க்கை

“ஆத்துமா,” “ஆவி”—உண்மையிலேயே எதை அர்த்தப்படுத்துகின்றன?

“ஆத்துமா,” “ஆவி”—உண்மையிலேயே எதை அர்த்தப்படுத்துகின்றன?

“ஆத்துமா,” “ஆவி” என்ற வார்த்தைகளைக் கேட்கும்போது, உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இந்த வார்த்தைகள் நமக்குள் இருக்கிற காணக்கூடாத, அழியாத ஏதோவொன்றைக் குறிப்பதாக அநேகர் நம்புகிறார்கள். இறக்கும்போது, காணக்கூடாத இந்தப் பாகம் உடலை விட்டுப் பிரிந்து தொடர்ந்து உயிர் வாழ்கிறதென அவர்கள் நினைக்கிறார்கள். இந்த நம்பிக்கை மிகவும் பரவலாக இருப்பதால், அத்தகைய ஒன்றை பைபிள் கற்பிப்பதே இல்லை என்பதை அறியும்போது அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அப்படியானால், கடவுளுடைய வார்த்தையின்படி, ஆத்துமா என்றால் என்ன, ஆவி என்றால் என்ன?

“ஆத்துமா”—பைபிளின்படி

முதலாவதாக, ஆத்துமா என்ற வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள். பைபிள் முக்கியமாய் எபிரெய, கிரேக்க மொழிகளிலேயே ஆரம்பத்தில் எழுதப்பட்டது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆத்துமாவைக் குறிப்பதற்கு, பைபிள் எழுத்தாளர்கள் நெஃபெஷ் (neʹphesh) என்ற எபிரெய வார்த்தையை அல்லது சைக்கீ (psy·kheʹ) என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். இவ்விரண்டு வார்த்தைகளும் வேதாகமத்தில் 800-க்கும் அதிகமான தடவை காணப்படுகின்றன; புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் அவ்வார்த்தைகளை அந்த எல்லா இடங்களிலும் “ஆத்துமா” என்றே மொழிபெயர்த்திருக்கிறது. “ஆத்துமா” அல்லது “ஆத்துமாக்கள்” என்ற வார்த்தை பைபிளில் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நீங்கள் ஆராய்கையில், அந்த வார்த்தை பொதுவாக (1) ஆட்களை, (2)மிருகங்களை, அல்லது (3)ஓர் ஆளின் அல்லது ஒரு மிருகத்தின் உயிரை அர்த்தப்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியவரும். இந்த மூன்று வித்தியாசமான அர்த்தங்களைக் கொடுக்கிற சில வசனங்களை இப்போது நாம் ஆராயலாம்.

ஆட்கள். ‘நோவாவின் நாட்களிலே . . . சிலராகிய எட்டுப் பேர் [சைக்கீ] மாத்திரம் . . . ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.’ (1 பேதுரு 3:20) இங்கே, சைக்கீ என்ற கிரேக்க வார்த்தை “பேர்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; இது தெளிவாகவே நோவா, அவருடைய மனைவி, அவருடைய மூன்று மகன்கள், அவர்களுடைய மனைவிகள் ஆகியோரைக் குறிக்கிறது. மன்னா என்ற உணவைச் சேகரிப்பது குறித்து இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையை யாத்திராகமம் 16:16 குறிப்பிடுகிறது. அவர்களுக்கு இவ்வாறு சொல்லப்பட்டது: “உங்களிலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்தின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக . . . [அதை] எடுத்துக்கொள்ளக்கடவன்.” எனவே, ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை பேர் இருந்தார்களோ அதற்கேற்ப மன்னா சேகரிக்கப்பட்டது. “ஆத்துமா” அல்லது “ஆத்துமாக்கள்” ஓர் ஆளை அல்லது ஆட்களை அர்த்தப்படுத்துகிறது என்பதைக் காண்பிக்கும் வேறுசில பைபிள் உதாரணங்கள் ஆதியாகமம் 17:14; யாத்திராகமம் 12:15, 19; லேவியராகமம் 20:6; 23:30; வெளிப்படுத்துதல் 18:14 ஆகிய வசனங்களில் உள்ளன.

மிருகங்கள். பைபிளில், படைப்பைப் பற்றிய பதிவில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “பின்பு தேவன்: நீந்தும் ஜீவ ஜந்துக்களையும் [நெஃபெஷ்] பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். பின்பு தேவன்: பூமியானது ஜாதி ஜாதியான ஜீவ ஜந்துக்களாகிய [நெஃபெஷ்] நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும், ஜாதி ஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.” (ஆதியாகமம் 1:20, 24) இவ்வசனங்களில், மீன்கள், நாட்டு மிருகங்கள், காட்டு மிருகங்கள் என எல்லா ஜீவ ஜந்துக்களையும் குறிப்பதற்கு நெஃபெஷ் என்ற ஒரே எபிரெய வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய உலக மொழிபெயர்ப்பில், ஆதியாகமம் 9:10; லேவியராகமம் 11:46; எண்ணாகமம் 31:28 ஆகிய வசனங்களில் பறவைகளும் மற்ற மிருகங்களும் ஆத்துமாக்கள் என்றே அழைக்கப்பட்டுள்ளன.

உயிர். சில சமயம் “ஆத்துமா” என்ற வார்த்தை ஒருவருடைய உயிரைக் குறிக்கிறது. மோசேயை நோக்கி யெகோவா இவ்வாறு சொன்னார்: “நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை [நெஃபெஷ்] வாங்கத் தேடின மனிதர் எல்லாரும் இறந்துபோனார்கள்.” (யாத்திராகமம் 4:19) மோசேயின் எதிரிகள் எதற்காக அவரைத் தேடி அலைந்தார்கள்? மோசேயின் பிராணனை, அதாவது உயிரைப் பறிப்பதற்காகத் தேடி அலைந்தார்கள். ராகேல் தன் மகன் பென்யமீனைப் பிரசவிக்கையில் ‘அவள் ஆத்துமா [நெஃபெஷ்] பிரிந்தது.’ (ஆதியாகமம் 35:16-19) அந்தச் சமயத்தில் அவள் உயிரிழந்தாள். இயேசுவின் வார்த்தைகளையும் சிந்தித்துப் பாருங்கள்: “நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் [சைக்கீ] கொடுக்கிறான்.” (யோவான் 10:11) மனிதகுலத்திற்காக இயேசு தம்முடைய சைக்கீயை, அதாவது உயிரைக் கொடுத்தார். இந்த பைபிள் வசனங்களில், “ஆத்துமா” அல்லது ‘பிராணன்’ என்ற வார்த்தை ஒரு நபரின் உயிரையே குறிக்கிறதென்பது தெளிவாக இருக்கிறது. இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள “ஆத்துமா” என்ற வார்த்தையை 1 இராஜாக்கள் 17:17-23-லும், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் மத்தேயு 10:39; யோவான் 15:13; அப்போஸ்தலர் 20:10 ஆகிய வசனங்களிலும் நீங்கள் காணலாம்.

கடவுளுடைய வார்த்தையை இன்னும் ஆழமாகப் படிக்கும்போது, பைபிளில் எங்கேயுமே, “ஆத்துமா” என்ற வார்த்தையோடு “அழியாத” என்ற சொல்லோ “நித்திய” என்ற சொல்லோ சேர்க்கப்படவில்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். அதற்குப் பதிலாக, ஆத்துமா சாகும் என்றே வேதவசனங்கள் சொல்கின்றன. (எசேக்கியேல் 18:4, 20) ஆகையால், செத்துப்போன ஒருவரை இறந்த நெஃபேஷ் என்றே பைபிள் அழைக்கிறது. ஆக, ஒருவர் இறந்த பிறகு அவர் எங்கேயும் உயிர் வாழ்வதில்லை.—பிரசங்கி 9:5, 10.

“ஆவி”—அர்த்தம் தெரிய வந்துள்ளது

“ஆவி” என்ற வார்த்தையை பைபிள் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தி உள்ளது என்பதை இப்போது நாம் சிந்திக்கலாம். “ஆத்துமா” என்பதற்கான இன்னொரு வார்த்தைதான் “ஆவி” என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அது தவறு. “ஆவி” என்ற வார்த்தையும் “ஆத்துமா” என்ற வார்த்தையும் வெவ்வேறு அர்த்தமுடையவை என்பதை பைபிள் காட்டுகிறது. அவை எவ்வாறு வித்தியாசப்படுகின்றன?

‘ஆவியைப்’ பற்றி எழுதும்போது, பைபிள் எழுத்தாளர்கள் ரூவாக் என்ற எபிரெய வார்த்தையை அல்லது நியூமா என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். அவ்வார்த்தைகளுக்கான அர்த்தத்தை வேதவசனங்களே சுட்டிக்காட்டுகின்றன. உதாரணத்திற்கு, “[யெகோவாவாகிய] நீர் அவைகளின் சுவாசத்தை [ரூவாக்] வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும்” என சங்கீதம் 104:29 குறிப்பிடுகிறது. யாக்கோபு 2:26-ரும் இவ்வாறு சொல்கிறது: “ஆவியில்லாத [நியூமா இல்லாத] சரீரம் செத்ததாயிருக்கிறது.” அப்படியானால், இந்த வசனங்களிலுள்ள “ஆவி” என்ற வார்த்தை உடலுக்கு உயிரூட்டுகிற ஒன்றைக் குறிப்பிடுகிறது. ஆவியில்லாமல் உடல் செத்ததாயிருக்கிறது. ஆகையால், ரூவாக் என்ற வார்த்தை பைபிளில் “ஆவி” என்று மட்டுமல்ல, ஆனால் ‘ஜீவ சுவாசம்,’ அதாவது உயிர்ச்சக்தி, என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக, நோவாவின் நாளில் நடந்த ஜலப்பிரளயத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது கடவுள் இவ்வாறு சொன்னார்: “வானத்தின் கீழே ஜீவ சுவாசமுள்ள [ரூவாக்] சகல மாம்ச ஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்.” (ஆதியாகமம் 6:17; 7:15, 22) ஆகையால், “ஆவி” என்பது சுவாசமுள்ள எல்லா ஜீவராசிகளையும் உயிர்த்துடிப்புடன் வைக்கிற காணக்கூடாத ஒரு சக்தியை (உயிர்ச்சக்தியை) குறிக்கிறது.

ஆத்துமாவும் ஆவியும் ஒன்றல்ல. ரேடியோ இயங்குவதற்கு எப்படி மின்சாரம் தேவையோ, அப்படியே உடல் இயங்குவதற்கு ஆவி தேவை. இதை இன்னும் நன்கு புரிந்துகொள்ள, போர்ட்டபிள் ரேடியோவை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அந்த ரேடியோவுக்குள் பேட்டரிகளைப் போட்டு, அதை ‘ஆன்’ செய்யும்போது, பேட்டரியிலுள்ள மின்சாரம் ரேடியோவை உயிர் பெறச் செய்கிறது எனலாம். பேட்டரிகள் இல்லையென்றால், ரேடியோ செத்ததாயிருக்கிறது. மின்சாரத்தில் இயங்குகிற ரேடியோவும், மின்சார இணைப்பு துண்டிக்கப்படும்போது அவ்வாறே ஆகிறது. அதுபோலவே, ஆவி என்பது நம் உடலை உயிர்ப்பிக்கிற ஒரு சக்தியாகும். அதுமட்டுமல்ல, மின்சாரத்தைப் போல, அந்த ஆவிக்கு எந்த உணர்ச்சியும் கிடையாது, அதுவால் சிந்திக்கவும் முடியாது. அது ஆள்தன்மையற்ற ஒரு சக்தியாகும். ஆனால், சங்கீதக்காரன் குறிப்பிட்டபடி, அந்த ஆவி இல்லையென்றால், அதாவது உயிர்ச்சக்தி இல்லையென்றால், நம்முடைய ‘உடல் மாண்டு, மண்ணுக்குத்தான் திரும்பும்.’

மனிதனின் மரணத்தைப் பற்றிப் பேசும்போது, பிரசங்கி 12:7 இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘மண்ணானது [மண்ணினாலான அவனது உடலானது] தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகிறது.’ இந்த ஆவி, அதாவது உயிர்ச்சக்தி, உடலைவிட்டுப் பிரியும்போது உடல் மரிக்கிறது; பிறகு அந்த உடல் எங்கிருந்து வந்ததோ அந்த இடத்திற்கே, அதாவது பூமிக்கே, திரும்பிச் செல்கிறது. அதுபோல, உயிர்ச்சக்தியானது எந்த இடத்திலிருந்து வந்ததோ அந்த இடத்திற்கே, அதாவது கடவுளிடத்திற்கே, திரும்பிச் செல்கிறது. (யோபு 34:14, 15; சங்கீதம் 36:9) ஆனால், அந்த உயிர்ச்சக்தி சொல்லர்த்தமாகப் பரலோகத்திற்குப் பயணித்துச் செல்கிறது என்று அர்த்தமல்ல. மாறாக, இறந்துபோன ஒருவருடைய எதிர்கால வாழ்க்கை யெகோவா தேவன் மீது சார்ந்திருக்கிறது என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது. ஒருவிதத்தில், அந்த நபருடைய உயிர் கடவுளுடைய கைகளில் இருக்கிறது என்று சொல்லலாம். அந்த நபர் திரும்ப உயிர்பெறுவதற்குத் தேவைப்படுகிற ஆவியை, அதாவது உயிர்ச்சக்தியைக் கொடுக்க கடவுளுடைய வல்லமையால்தான் முடியும்.

‘பிரேதக்குழிகளில்’ தூங்கிக் கொண்டிருக்கிற அனைவருக்கும் கடவுள் அதைத்தான் செய்யப் போகிறார் என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலளிக்கிறது! (யோவான் 5:28, 29) அந்த உயிர்த்தெழுதலின்போது, மரணத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு யெகோவா புதிய உடலைக் கொடுத்து, அதற்கு ஆவியை, அதாவது உயிர்ச்சக்தியை, அளித்து உயிருக்குக் கொண்டு வருவார். அது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியான சமயமாக இருக்கும்!

“ஆத்துமா,” “ஆவி” ஆகிய வார்த்தைகளின் அர்த்தத்தைப் பற்றி இன்னுமதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்பினால், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? என்ற ஆங்கிலச் சிற்றேட்டிலும், வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் என்ற புத்தகத்தில் 375-84 பக்கங்களிலும் அருமையான விவரங்கள் இருப்பதை நீங்கள் காணலாம்; இவை இரண்டும் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.