Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிற்சேர்க்கை

பிரதான தூதனாகிய மிகாவேல் யார்?

பிரதான தூதனாகிய மிகாவேல் யார்?

மிகாவேல் என்றழைக்கப்படுகிற ஆவி சிருஷ்டியைப் பற்றி பைபிள் அதிகமாகக் குறிப்பிடுவதில்லை. ஆனால் அப்படிக் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள், மிகாவேல் மும்முரமாய்ச் செயல்பட்டு வருவதாகச் சொல்கின்றன. பொல்லாத தூதர்களோடு அவர் போரிட்டுக் கொண்டிருப்பதாக தானியேல் புத்தகம் சொல்கிறது; சாத்தானோடு விவாதித்துக் கொண்டிருப்பதாக யூதாவின் நிருபம் சொல்கிறது; பிசாசோடும் அவனுடைய பேய்களோடும் யுத்தம் பண்ணிக் கொண்டிருப்பதாக வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. ‘கடவுளுக்கு நிகர் யார்?’ என்ற தம் பெயரின் அர்த்தத்திற்கு ஏற்ப, மிகாவேல் யெகோவாவின் ஆட்சியை ஆதரித்து, கடவுளுடைய எதிரிகளோடு போரிடுகிறார். அப்படியென்றால், மிகாவேல் யார்?

சில சமயங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களால் சில நபர்கள் அறியப்படுகிறார்கள். உதாரணமாக, முற்பிதாவான யாக்கோபுக்கு இஸ்ரவேல் என்ற பெயரும் இருந்தது, அப்போஸ்தலன் பேதுருவுக்கு சீமோன் என்ற பெயரும் இருந்தது. (ஆதியாகமம் 49:1, 2; மத்தேயு 10:2) அதுபோலவே, இயேசு கிறிஸ்துவின் மற்றொரு பெயர்தான் மிகாவேல் என்று பைபிள் சுட்டிக்காட்டுகிறது; பூமிக்கு வருவதற்கு முன்னும், பரலோகத்திற்குச் சென்ற பின்னும் அவருடைய பெயர் அதுதான். இந்த முடிவுக்கு வருவதற்கான வேதப்பூர்வ காரணங்களை இப்போது நாம் சிந்திக்கலாம்.

பிரதான தூதன். மிகாவேலை ‘பிரதான தூதன்’ என்று கடவுளுடைய வார்த்தை குறிப்பிடுகிறது. (யூதா 9) இதன் அர்த்தம் “தலைமைத் தூதன்” என்பதாகும். பைபிளில், பிரதான தூதன் என்ற வார்த்தை ஒருமையில்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது, பன்மையில் ஒருபோதும் கொடுக்கப்படவில்லை. எனவே, அப்படி ஒரேவொரு தூதன் மட்டுமே இருக்கிறார் என்பதை இது காண்பிக்கிறது. அதோடு, இயேசு பிரதான தூதனின் ஸ்தானத்தோடு சம்பந்தப்படுத்திப் பேசப்படுகிறார். உயிர்த்தெழுப்பப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து 1 தெசலோனிக்கேயர் 4:16 இவ்வாறு சொல்கிறது: “கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும் [அதாவது, குரலோடும்] . . . வானத்திலிருந்து இறங்கி வருவார்.” இவ்வாறு இயேசுவின் குரல் பிரதான தூதனுடைய குரலாக இருக்கிறதென விவரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இயேசுவே பிரதான தூதனாகிய மிகாவேல் என்பதை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது.

சேனைத் தலைவர். ‘மிகாவேலும் அவரைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம் பண்ணினார்கள்’ என்று பைபிள் தெரிவிக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:7) ஆகவே, விசுவாசமிக்க தேவதூதர்களின் சேனைக்கு மிகாவேல் தலைவராக இருக்கிறார். அதே வெளிப்படுத்துதல் புத்தகத்தில், தேவதூதர்களின் சேனைக்கு இயேசு தலைவராக இருக்கிறார் என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 19:14-16) “கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடு” வருவதாக அப்போஸ்தலன் பவுலும் தெளிவாய்க் குறிப்பிடுகிறார். (2 தெசலோனிக்கேயர் 1:8) ஆக, மிகாவேல் மற்றும் ‘அவரைச் சேர்ந்த தூதர்கள்’ பற்றியும் இயேசு மற்றும் ‘அவருடைய தூதர்கள்’ பற்றியும் பைபிள் சொல்கிறது. (மத்தேயு 13:41; 16:27; 24:31; 1 பேதுரு 3:22) பரலோகத்தில், விசுவாசமிக்க தேவதூதர்களாலான இரண்டு வெவ்வேறு சேனைகள் இருப்பதாக, அதாவது மிகாவேலைத் தலைவனாகக் கொண்ட ஒரு சேனையும், இயேசுவைத் தலைவராகக் கொண்ட வேறொரு சேனையும் இருப்பதாகக் கடவுளுடைய வார்த்தையில் எங்குமே குறிப்பிடப்படவில்லை; எனவே, பரலோக ஸ்தானத்திலுள்ள இயேசு கிறிஸ்துதான் மிகாவேல் என்ற முடிவுக்கு வருவது நியாயமாகவே இருக்கிறது. *

^ பாரா. 1 மிகாவேல் என்ற பெயர் கடவுளுடைய குமாரனுக்குப் பொருந்துகிறது என்பதைக் காண்பிக்கிற கூடுதல் விவரங்கள், யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமத்தின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் தொகுதி 2-ல், பக்கங்கள் 393-4-லும் வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் என்ற புத்தகத்தில் 218-ம் பக்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன.