Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிற்சேர்க்கை

‘மகா பாபிலோனை’ அடையாளம் காணுதல்

‘மகா பாபிலோனை’ அடையாளம் காணுதல்

வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள சில வார்த்தைகளை அப்படியே சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. (வெளிப்படுத்துதல் 1:1, NW) உதாரணத்திற்கு, நெற்றியில் “மகா பாபிலோன்” என்ற பெயர் எழுதப்பட்டிருந்த ஒரு வேசியைப் பற்றி அது சொல்கிறது. அந்த வேசி, ‘கூட்டங்கள் மீதும் ஜாதிகள் மீதும்’ உட்கார்ந்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 17:1, 5, 15) சொல்லர்த்தமான எந்தப் பெண்ணாலும் அப்படி உட்கார முடியாது; ஆக, மகா பாபிலோன் அடையாள அர்த்தமுடையதாகவே இருக்க வேண்டும். அப்படியானால், அந்த வேசி எதற்கு அடையாளமாக இருக்கிறாள்?

அடையாளப்பூர்வ அந்தப் பெண், ‘பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரம்’ என்பதாக வெளிப்படுத்துதல் 17:18 விவரிக்கிறது. ‘நகரம்’ என்ற வார்த்தை ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் தொகுதியைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. இந்த ‘மகா நகரம்’ “பூமியின் ராஜாக்கள்” மீது அதிகாரம் செய்வதால், மகா பாபிலோன் என்ற பெயருடைய அந்தப் பெண் மிகுந்த செல்வாக்குள்ள உலகளாவிய ஓர் அமைப்பாகத்தான் இருக்க வேண்டும். அதனால், மகா பாபிலோனை ஓர் உலகப் பேரரசு என்று மிகச் சரியாகவே நாம் அழைக்கலாம். எத்தகைய பேரரசு அது? அது ஒரு மதப் பேரரசு. இந்த முடிவுக்கு வர வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள சில வசனங்கள் நமக்கு எப்படி உதவுகின்றன என்பதைக் கவனியுங்கள்.

ஒரு பேரரசு என்பது அரசியல் பேரரசாகவோ, வர்த்தகப் பேரரசாகவோ, மதப் பேரரசாகவோ இருக்கலாம். மகா பாபிலோன் என்ற பெயருள்ள அந்தப் பெண் ஓர் அரசியல் பேரரசாக இருக்க முடியாது, ஏனெனில் “பூமியின் ராஜாக்கள்,” அதாவது இவ்வுலக அரசியல் அமைப்புகள், அவளோடு ‘வேசித்தனம் பண்ணியதாக’ கடவுளுடைய வார்த்தை தெரிவிக்கிறது. வேசித்தனம் செய்தது இவ்வுலக ஆட்சியாளர்களோடு அவள் கூட்டுச் சேர்ந்திருப்பதைக் குறிக்கிறது, அதோடு, அவள் “மகா வேசி” என்று அழைக்கப்படுவதற்கான காரணத்தையும் அது அளிக்கிறது.—வெளிப்படுத்துதல் 17:1, 2; யாக்கோபு 4:4.

மகா பாபிலோன் ஒரு வர்த்தகப் பேரரசாகவும் இருக்க முடியாது, ஏனெனில் “பூமியின் வர்த்தகர்,” அதாவது வணிக அமைப்புகள், அவளுடைய அழிவின்போது அவளுக்காகத் துக்கித்து அழுது கொண்டிருப்பார்கள். சொல்லப்போனால், ராஜாக்களும் வர்த்தகர்களும் மகா பாபிலோனைத் ‘தூரத்திலிருந்து’ பார்த்துக் கொண்டிருப்பது போல விவரிக்கப்பட்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 18:3, 9, 10, 15-17) எனவே, மகா பாபிலோன் என்பது ஓர் அரசியல் பேரரசும் அல்ல, வர்த்தகப் பேரரசும் அல்ல, ஆனால் அது ஒரு மதப் பேரரசு என்ற முடிவுக்கு வருவதே நியாயமானது.

மகா பாபிலோன் எல்லா ஜாதிகளையும் தனது “சூனியத்தால்” மோசம்போக்குகிறாள் என்ற வசனம், அவள் ஒரு மதப் பேரரசுதான் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 18:23) எல்லா விதமான சூனிய வேலைகளும் மத சம்பந்தமானவை என்பதாலும், அவற்றிற்குப் பேய்கள்தான் காரணம் என்பதாலும் மகா பாபிலோனை “பேய்களுடைய குடியிருப்பு” என்று பைபிள் அழைப்பதில் ஆச்சரியமே இல்லை. (வெளிப்படுத்துதல் 18:2; உபாகமம் 18:10-12) இந்தப் பேரரசு, ‘தீர்க்கதரிசிகளையும்’ ‘பரிசுத்தவான்களையும்’ துன்புறுத்துவதன் மூலம் மெய் வணக்கத்தைத் தீவிரமாய் எதிர்த்து வருகிறது எனவும் விவரிக்கப்பட்டுள்ளது. (வெளிப்படுத்துதல் 18:24) உண்மையில், மெய் வணக்கத்தை மகா பாபிலோன் அந்தளவு அதிகமாக வெறுப்பதால், ‘இயேசுவினுடைய சாட்சிகளை’ அவள் கொடூரமாகத் துன்புறுத்தி, கொலைகூட செய்கிறாள். (வெளிப்படுத்துதல் 17:6) ஆகையால், மகா பாபிலோன் என்ற பெயருள்ள அந்தப் பெண் பொய் மத உலகப் பேரரசையே அடையாளப்படுத்துகிறாள், யெகோவா தேவனை எதிர்த்து நிற்கிற எல்லா மதங்களுமே அந்தப் பொய் மதங்களில் அடங்கும்.