Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 1

கடவுள்மீது அன்பு காட்டுவது என்றால்...

கடவுள்மீது அன்பு காட்டுவது என்றால்...

“நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் அவர்மீது அன்பு காட்டுவதாகும். அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.”—1 யோவான் 5:3.

1, 2. யெகோவா தேவன்மீது அன்புகாட்ட எது உங்களைத் தூண்டுகிறது?

கடவுள்மீது உங்களுக்கு அன்பு இருக்கிறதா? யெகோவா தேவனுக்கு உங்களை அர்ப்பணித்திருந்தால், ‘ஆம்’ என ஆணித்தரமாகச் சொல்வீர்கள். நாம் யெகோவாமீது அன்பு காட்டுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனென்றால், அவர் நம்மீது அன்பு காட்டியிருக்கிறார்; அதனால்தான் நாமும் அவர்மீது அன்பு காட்டுகிறோம். “[யெகோவா] முதலில் நம்மேல் அன்பு காட்டியதால் நாமும் அன்பு காட்டுகிறோம்” என்று பைபிள் சொல்கிறது.—1 யோவான் 4:19.

2 யெகோவா நம்மீது அன்பு வைத்திருப்பதைப் பல வழிகளில் காட்டியிருக்கிறார். பூமியை நமக்கு அழகிய வீடாகத் தந்திருக்கிறார். அதுமட்டுமா, உடல் ரீதியில் நமக்குத் தேவையானவற்றைக் கொடுத்து நம்மைக் கவனித்துக்கொள்கிறார். (மத்தேயு 5:43-48) அதைவிட முக்கியமாக, ஆன்மீக ரீதியிலும் நம்மைக் கவனித்துக்கொள்கிறார். அவருடைய வார்த்தையாகிய பைபிளை நமக்குக் கொடுத்திருக்கிறார். அதோடு, தன்னிடம் ஜெபம் செய்யும்படி நம்மை அழைக்கிறார்; நம்முடைய ஜெபத்தைக் கேட்பதாகவும் தனது சக்தியைத் தந்து உதவி செய்வதாகவும் நம்பிக்கை அளிக்கிறார். (சங்கீதம் 65:2; லூக்கா 11:13) மிக மிக முக்கியமாக, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுதலை செய்வதற்காகத் தனது அன்பு மகனையே நமக்கு மீட்பராகக் கொடுத்திருக்கிறார். யெகோவாவின் அன்பு எப்பேர்ப்பட்டது!யோவான் 3:16-ஐயும் ரோமர் 5:8-ஐயும் வாசியுங்கள்.

3. (அ) கடவுளுடைய அன்பில் நிலைத்திருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி என்ன, அதற்கு பதிலை எங்கே காணலாம்?

3 தன்னுடைய அன்பிலிருந்து நாம் என்றென்றும் பயன்பெற வேண்டுமென யெகோவா விரும்புகிறார். ஆனால், அதிலிருந்து பயன் பெறுவதும் பெறாததும் நம் கையில்தான் உள்ளது. “எப்போதும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள். அதேசமயத்தில், முடிவில்லாத வாழ்வுக்கு . . . ஆவலோடு காத்திருங்கள்” என்று கடவுளுடைய வார்த்தை நமக்கு அறிவுரை கூறுகிறது. (யூதா 21) “பாத்திரமானவர்களாக இருங்கள்” என்ற சொற்றொடர் கடவுளுடைய அன்பில் நிலைத்திருப்பதற்கு நம் பங்கில் முயற்சி தேவை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அப்படியானால், கடவுள்மீது நமக்கு அன்பு இருப்பதை நம்முடைய செயலில் காட்டுவது அவசியம். எனவே, முக்கியமான இந்தக் கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘கடவுள்மீது அன்பு வைத்திருக்கிறேன் என்பதை நான் எப்படிக் காட்டுவேன்?’ கடவுளுடைய சக்தியினால் அப்போஸ்தலன் யோவான் எழுதிய வார்த்தைகள் இதற்குப் பதில் சொல்கின்றன: “நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் அவர்மீது அன்பு காட்டுவதாகும். அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.” (1 யோவான் 5:3) இந்த வசனத்தின் அர்த்தத்தை நாம் கவனமாகச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. ஏனென்றால், நாம் கடவுள்மீது அளவில்லாத அன்பு வைத்திருக்கிறோம் என்பதை அவருக்குக் காட்ட விரும்புகிறோம்.

கடவுள்மீது அன்பு காட்டுவது என்றால்...

4, 5. உங்கள் உள்ளத்தில் எப்போது யெகோவாமீது அன்பு ஊற்றெடுத்தது? விளக்குங்கள்.

4 ‘கடவுள்மீது அன்பு காட்டுவதை’ பற்றி அப்போஸ்தலன் யோவான் எழுதியபோது அவர் எதை மனதில் வைத்திருந்தார்? கடவுள்மீது நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆழமான அன்பையே மனதில் வைத்திருந்தார். அப்படியானால், முதன்முதலாக உங்கள் உள்ளத்தில் யெகோவாமீது அன்பு ஊற்றெடுத்த சமயத்தை எண்ணிப்பாருங்கள்.

அன்பின் காரணமாக யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறோம் என்பதைக் காட்ட நம்மையே அவருக்கு அர்ப்பணித்து, ஞானஸ்நானம் பெறுவதுதான் முதல் படி

5 யெகோவாவையும் அவருடைய நோக்கத்தையும் நீங்கள் கற்றுக்கொண்டு, அவர்மீது விசுவாசம் வைக்கத் தொடங்கிய சமயத்தை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். யெகோவாவோடு எந்தப் பந்தமும் இல்லாத ஒரு பாவியாக நீங்கள் பிறந்தபோதிலும், உங்களுக்காக அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தீர்கள். ஆம், ஆதாம் இழந்துபோன பரிபூரணத்தை நீங்கள் அடைவதற்கும், முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கும் கிறிஸ்துவின் மூலம் வழியைத் திறந்தார் என்பதைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தீர்கள். (மத்தேயு 20:28; ரோமர் 5:12, 18) தன் பாசத்துக்குரிய மகனையே உங்களுக்காக பலி செலுத்தியதன் மூலம் யெகோவா செய்த மாபெரும் தியாகத்தை நீங்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்தீர்கள், அதனால் உள்ளம் நெகிழ்ந்துபோனீர்கள்; உங்கள்மீது இப்பேர்ப்பட்ட அன்பைக் காட்டிய கடவுளை நேசிக்கத் தொடங்கினீர்கள்.1 யோவான் 4:9, 10-ஐ வாசியுங்கள்.

6. உண்மையான அன்பு எப்படி வெளிப்படுகிறது, கடவுள் மீதுள்ள அன்பு என்ன செய்ய உங்களை உந்துவித்தது?

6 அந்தச் சமயத்தில்தான் யெகோவாமீது உங்களுக்கு உண்மையான அன்பு துளிர்விட ஆரம்பித்தது. அன்பு என்பது வெறுமனே மனதளவில் உணர்வதோ ‘யெகோவாமீது எனக்கு அன்பு இருக்கிறது’ என்று வாயளவில் சொல்வதோ அல்ல; கடவுள்மீது காட்டுகிற உண்மையான அன்பில் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்துள்ளது. விசுவாசத்தைப் போலவே உண்மையான அன்பும் செயலில் வெளிப்பட வேண்டும். (யாக்கோபு 2:26) சொல்லப்போனால், நாம் ஒருவரை நேசிக்கும்போது அவருக்குப் பிடித்த காரியங்களைச் செய்வதன்மூலம் நம் அன்பைக் காட்டுகிறோம். பரலோகத் தகப்பனாகிய யெகோவாமீது உங்கள் உள்ளத்தில் அன்பு வேர்விட ஆரம்பித்தபோது, அவருக்குப் பிரியமாக வாழ வேண்டுமென்ற ஆசை உங்களுக்குள் ஏற்பட்டது. நீங்கள் ஞானஸ்நானம் பெற்றவரா? அப்படியானால், யெகோவா மீதிருக்கும் உள்ளப்பூர்வமான பாசமும் பக்தியும்தான் உங்கள் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு உங்களை உந்துவித்தது. அதனால்தான், யெகோவாவின் விருப்பத்தைச் செய்ய உங்களையே அர்ப்பணித்தீர்கள்; ஞானஸ்நானம் எடுத்து அதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தினீர்கள். (ரோமர் 14:7, 8-ஐ வாசியுங்கள்.) நீங்களாகவே எடுத்த இந்த உறுதிமொழியை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும் என்று அப்போஸ்தலன் யோவான் சொல்கிறார்.

“கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் . . .”

7. கடவுளுடைய கட்டளைகள் சில யாவை, அவற்றைக் கடைப்பிடிக்கிறீர்கள் என்பதை எப்படிக் காட்டுவீர்கள்?

7 “கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான்” அவர்மீது அன்பு காட்டுவதாகும் என யோவான் விளக்குகிறார். அப்படியென்றால், கடவுளுடைய கட்டளைகள் யாவை? யெகோவா தனது வார்த்தையாகிய பைபிளில் திட்டவட்டமான அநேக கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார். உதாரணமாக, குடிவெறி, பாலியல் முறைகேடு, சிலை வழிபாடு, திருடுதல், பொய் சொல்லுதல் போன்ற பழக்கங்களை அவர் கண்டனம் செய்கிறார். (1 கொரிந்தியர் 5:11; 6:18; 10:14; எபேசியர் 4:28; கொலோசெயர் 3:9) எனவே, கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பது என்பது பைபிளிலுள்ள ஒழுக்க நெறிகளுக்கு இசைவாக வாழ்வதைக் குறிக்கிறது.

8, 9. பைபிளில் நேரடியான கட்டளைகள் இல்லாத சந்தர்ப்பங்களில்கூட கடவுளுக்குப் பிரியமானது எது என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்? உதாரணம் தருக.

8 யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்கு, அவர் கொடுத்திருக்கும் நேரடியான கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் மட்டும் போதாது. உண்மைதான், தொட்டதற்கெல்லாம் சட்டங்களைப் போட்டு யெகோவா நம்மைத் திணறடிப்பதில்லை. அன்றாட வாழ்வில் நாம் எத்தனையோ சந்தர்ப்ப சூழ்நிலைகளை எதிர்ப்படலாம், ஆனால் இவற்றுக்கெல்லாம் பைபிளில் நேரடியான கட்டளைகள் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், கடவுளுக்குப் பிரியமானது எது என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்? கடவுளுடைய சிந்தையை பைபிள் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. நாம் பைபிளைப் படிக்கும்போது யெகோவா எதை விரும்புகிறார், எதை வெறுக்கிறார் என்பதையெல்லாம் தெரிந்துகொள்கிறோம். (சங்கீதம் 97:10-ஐ வாசியுங்கள்; நீதிமொழிகள் 6:16-19) அவர் உயர்வாய்க் கருதுகிற சிந்தைகளையும் செயல்களையும் நாம் புரிந்துகொள்கிறோம். நாம் எந்தளவுக்கு யெகோவாவின் சுபாவத்தையும் வழிகளையும் கற்றுக்கொள்கிறோமோ அந்தளவுக்கு அவருடைய சிந்தை நம்மை ஆட்கொள்ளும்; அதோடு, நம்முடைய தீர்மானங்களிலும் செயல்களிலும் அது வெளிப்படும். எனவே, திட்டவட்டமான பைபிள் சட்டங்கள் எதுவும் இல்லாத சந்தர்ப்பங்களிலும்கூட “யெகோவாவின் விருப்பம் என்னவென்று” நாம் பெரும்பாலும் பகுத்துணர்ந்துகொள்வோம்.—எபேசியர் 5:17.

9 உதாரணமாக, பயங்கரமான சண்டைக் காட்சிகளோ ஆபாசக் காட்சிகளோ நிறைந்த திரைப்படங்களை அல்லது டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கக்கூடாது என்று பைபிள் நேரடியாகச் சொல்வதில்லை. ஆனால், இதற்கெல்லாம் நமக்கு நேரடியான சட்டம் வேண்டுமா? இவற்றை யெகோவா எப்படிக் கருதுகிறார் என நமக்கு நன்றாகவே தெரியும். “வன்முறையை விரும்புகிற எவனையும் அவர் [யெகோவா] வெறுக்கிறார்” என்று அவருடைய வார்த்தை சுற்றிவளைக்காமல் சொல்கிறது. (சங்கீதம் 11:5) “பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்களையும், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் கடவுள் நியாயந்தீர்ப்பார்” என்றும் சொல்கிறது. (எபிரெயர் 13:4) இந்த வசனங்களைச் சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் யெகோவாவின் விருப்பத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இப்படிப்பட்ட மோசமான பழக்கங்களைக் கடவுள் வெறுப்பதால் அவற்றை சித்தரித்துக் காட்டுகிற காட்சிகளை நாம் பார்ப்பதில்லை. தரங்கெட்ட பொழுதுபோக்கைக்கூட நல்ல பொழுதுபோக்கு என்று சொல்லி இந்த உலகம் நம்மை ஏமாற்றினாலும் அவற்றை நாம் தவிர்க்கும்போது யெகோவாவைப் பிரியப்படுத்துகிறோம். *

10, 11. நாம் ஏன் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய விரும்புகிறோம், எப்படிப்பட்ட கீழ்ப்படிதலை நாம் காட்டுகிறோம்?

10 கடவுளுடைய கட்டளைகளை நாம் கடைப்பிடிப்பதற்கு முக்கியக் காரணம் என்ன? ஒவ்வொரு நாளும் கடவுளுடைய சிந்தைக்கு இசைவாக வாழ நாம் ஏன் விரும்புகிறோம்? தண்டனையிலிருந்து தப்பிக்கவோ கடவுளுடைய விருப்பத்தை அவமதிப்போருக்கு வருகிற தீய விளைவுகளைத் தவிர்க்கவோ அல்ல. (கலாத்தியர் 6:7) யெகோவாமீது நமக்கு எந்தளவு அன்பிருக்கிறது என்பதைக் காட்டுவதற்கு ஒரு வாய்ப்பாகக் கருதியே நாம் அவருக்குக் கீழ்ப்படிகிறோம். ஒரு சிறு பிள்ளை தன் அப்பாவிடம் நல்ல பெயர் வாங்க ஆசைப்படுவதைப் போல, நாமும் யெகோவாவிடம் நல்ல பெயர் வாங்க ஆசைப்படுகிறோம். (சங்கீதம் 5:12) அவர் நம்முடைய தகப்பனாக இருப்பதால் நாம் அவர்மீது அன்பு காட்டுகிறோம். ‘யெகோவாவின் பிரியத்தை சம்பாதிக்கும்’ விதத்தில் வாழ்கிறோம் என்ற உணர்வு மட்டுமே நமக்கு அதிக மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரும், வேறெதுவும் தராது.—நீதிமொழிகள் 12:2.

11 எனவே, நாம் வேண்டா வெறுப்பாகவும் கீழ்ப்படிவதில்லை, நிபந்தனையின் பேரிலும் கீழ்ப்படிவதில்லை. * நமக்குப் பிடித்தமான கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்துவிட்டு பிடிக்காதவற்றை விட்டுவிடுவதுமில்லை. அதேபோல், நமக்குச் சௌகரியமாக இருக்கும்போது அல்லது சுலபமாக இருக்கும்போது மட்டுமே கீழ்ப்படிவதில்லை. மாறாக, நாம் ‘மனப்பூர்வமாகக் கீழ்ப்படிகிறோம்.’ (ரோமர் 6:17) “உங்களுடைய கட்டளைகளை நான் மிகவும் விரும்புகிறேன். அவற்றை நேசிக்கிறேன்” என்று சங்கீதக்காரன் உணர்ந்ததைப் போலவே நாமும் உணர்கிறோம். (சங்கீதம் 119:47) ஆம், யெகோவாவுக்குக் கீழ்ப்படிய நாம் விரும்புகிறோம். அவர் நம்மிடம் முழுமையான கீழ்ப்படிதலை, நிபந்தனையற்ற கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார்; அதற்கு அவர் தகுதியானவர் என்பதை நாம் ஒத்துக்கொள்கிறோம். (உபாகமம் 12:32) விசுவாசமுள்ள நோவாவைப் பற்றி கடவுள் சொன்னதைப் போலவே நம்மைப் பற்றியும் கடவுள் சொல்ல வேண்டுமென விரும்புகிறோம். பல ஆண்டுகளாகக் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்ததன் மூலம் அவர்மீது அன்பு காட்டிய நோவாவைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “கடவுள் சொன்ன எல்லாவற்றையும் நோவா செய்தார். அவர் அப்படியே செய்தார்.”—ஆதியாகமம் 6:22.

12. எப்படிப்பட்ட கீழ்ப்படிதல் யெகோவாவை சந்தோஷப்படுத்துகிறது?

12 யெகோவாவுக்கு நாம் மனப்பூர்வமாகக் கீழ்ப்படியும்போது அவர் எப்படி உணருகிறார்? அவருடைய ‘இதயம் சந்தோஷப்படுகிறது’ என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 27:11) நம்முடைய கீழ்ப்படிதலைக் கண்டு சர்வலோகப் பேரரசர் உண்மையிலேயே சந்தோஷப்படுகிறாரா? ஆம், சந்தோஷப்படுகிறார், அதற்கு நல்ல காரணமும் இருக்கிறது! சுயமாகத் தீர்மானிக்கும் திறமையுடன் யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார். எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்க நமக்குச் சுதந்திரம் இருக்கிறது. ஆகவே, கடவுளுக்குக் கீழ்ப்படிவதா வேண்டாமா என்று தீர்மானிப்பதும் நம் கையில்தான் இருக்கிறது. (உபாகமம் 30:15, 16, 19, 20) நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவுக்கு நாம் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படியும்போது, அன்பு நிறைந்த இதயத்தோடு கீழ்ப்படியும்போது, அவரை சந்தோஷப்படுத்துவோம், அவருக்குப் பிரியமானவர்களாகவும் இருப்போம். (நீதிமொழிகள் 11:20) நாம் மிகச் சிறந்த வாழ்க்கைப் பாதையையும் தேர்ந்தெடுப்போம்.

“அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல”

13, 14. கடவுளுடைய “கட்டளைகள் பாரமானவை அல்ல” என்று ஏன் சொல்லலாம், உதாரணத்துடன் விளக்குங்கள்.

13 யெகோவாவின் கட்டளைகள் “பாரமானவை அல்ல” என்ற நம்பிக்கையூட்டும் தகவலை அப்போஸ்தலன் யோவான் அளிக்கிறார். “பாரமானவை” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம் “சுமையானவை.” * பொது மொழிபெயர்ப்பு இவ்வாறு சொல்கிறது: “அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை.” யெகோவா விதிக்கும் கட்டளைகள் நியாயமற்றவையோ பாரமானவையோ அல்ல. பாவ இயல்புள்ளவர்களாகிய மனிதர்கள் கீழ்ப்படிய முடியாதளவுக்கு அவை கஷ்டமானவையும் அல்ல.

14 இதற்கு ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். உங்கள் நெருங்கிய நண்பர் குடிமாறிப் போகிறார்; கூடமாட உதவும்படி உங்களிடம் கேட்கிறார். நிறைய அட்டைப் பெட்டிகளைப் பழைய வீட்டிலிருந்து புது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. சில பெட்டிகள் லேசானவையாக இருக்கின்றன; அவற்றை ஒருவரே தூக்கிச் சென்றுவிடலாம். ஆனால், மற்ற பெட்டிகளோ கனமானவையாக இருக்கின்றன; அவற்றை தூக்கிச்செல்ல இரண்டு பேர் வேண்டும். நீங்கள் எந்தெந்த பெட்டிகளைத் தூக்க வேண்டுமென உங்கள் நண்பர் சொல்கிறார். உங்களால் தூக்கவே முடியாத பெட்டிகளைத் தூக்கும்படி உங்கள் நண்பர் சொல்வாரா? கண்டிப்பாகச் சொல்லமாட்டார். ஏனென்றால், தனியாகத் தூக்கினால் பாரம் தாங்க முடியாமல் நீங்கள் விழுந்துவிடலாம். அதேபோல்தான் அன்பும் கருணையும் உள்ள நம்முடைய கடவுள் நம்மால் கடைப்பிடிக்கவே முடியாத கட்டளைகளைக் கடைப்பிடிக்கச் சொல்லமாட்டார். (உபாகமம் 30:11-14) ஆம், பாரமான சுமைகளைத் தூக்கும்படி நம்மிடம் ஒருபோதும் சொல்லமாட்டார். ஏனென்றால், நம்முடைய வரம்புகளை யெகோவா நன்கு அறிந்திருக்கிறார். “நாம் எப்படி உருவாக்கப்பட்டோம் என்பதை அவர் நன்றாக அறிந்திருக்கிறார். நாம் மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்.”—சங்கீதம் 103:14.

15. யெகோவாவின் கட்டளைகள் நமக்கு மிகவும் பயனுள்ளவையாய் இருக்கின்றன என்பதில் நாம் ஏன் நிச்சயமாய் இருக்கலாம்?

15 யெகோவாவின் கட்டளைகள் பாரமானவையே அல்ல, சொல்லப்போனால் அவை நமக்கு மிகவும் பயனுள்ளவை. (ஏசாயா 48:17-ஐ வாசியுங்கள்.) எனவேதான், பூர்வகால இஸ்ரவேலரிடம் மோசே இப்படிச் சொன்னார்: “இந்த எல்லா விதிமுறைகளையும் கடைப்பிடித்து, நம் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்கும்படி யெகோவா கட்டளை கொடுத்தார். நாம் என்றென்றைக்கும் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அவர் அப்படிக் கட்டளை கொடுத்தார்.” (உபாகமம் 6:24) நம் நன்மைக்காகவே, அதுவும் நிரந்தர நன்மைக்காகவே யெகோவா நமக்குக் கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார் என்பது உறுதி. அப்படியிருக்கும்போது நமக்குக் கெடுதல் உண்டாக்குகிற கட்டளையை அவர் கொடுப்பாரா? யெகோவா தேவன் எல்லையில்லா ஞானம் படைத்தவர். (ரோமர் 11:33) எனவே, நமக்கு எது சிறந்தது என்பதை அவர் நன்கு அறிந்திருக்கிறார். யெகோவா அன்பே உருவானவர். (1 யோவான் 4:8) அன்பே அவருடைய பிரதான பண்பு. அதுவே அவரது சொல்லிலும் செயலிலும் மேலோங்கி நிற்கிறது. தனது ஊழியர்களுக்கு அவர் விதிக்கும் எல்லா கட்டளைகளுக்கும் அன்புதான் மூலக்காரணம்.

16. சீர்கெட்ட இந்த உலகின் செல்வாக்கும் நம்முடைய பாவ இயல்பும் நமக்குத் தடைக்கல்லாக இருந்தாலும் நாம் ஏன் எப்போதும் கடவுளுக்குக் கீழ்ப்படிய முடியும்?

16 கடவுளுக்குக் கீழ்ப்படிவது சுலபமான விஷயம் என்றும் சொல்லிவிட முடியாது. உலகம் முழுவதும் ‘பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பதால்’ சீர்கெட்ட இந்த உலகத்தின் செல்வாக்கை நாம் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. (1 யோவான் 5:19) நமக்குள் இருக்கும் பாவ இயல்போடும் நாம் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது. ஏனென்றால், கடவுளுக்கு எதிரான பாதையில் செல்லவே நம் மனம் நாட்டம் கொள்கிறது. (ரோமர் 7:21-25) ஆனால், கடவுள்மீது நமக்கு அன்பு இருந்தால் இந்தப் போராட்டத்தில் வெல்லலாம். தனக்குக் கீழ்ப்படிந்து நடப்பதன் மூலம் தங்கள் அன்பைக் காட்டுகிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார். “தனக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு” கடவுள் தனது சக்தியை அருளுகிறார். (அப்போஸ்தலர் 5:32) நாம் எப்போதும் கீழ்ப்படிந்து நடப்பதற்கு உதவுகிற அற்புதமான குணங்களை இந்தச் சக்தி நம்மில் பிறப்பிக்கிறது.—கலாத்தியர் 5:22, 23.

17, 18. (அ) இந்தப் புத்தகத்தில் நாம் எதைப் பற்றிச் சிந்திப்போம், அப்படிச் சிந்திக்கும்போது எதையெல்லாம் நாம் மனதில் வைக்க வேண்டும்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் படிப்போம்?

17 இந்தப் புத்தகத்தில், யெகோவாவின் நியமங்களையும், ஒழுக்க நெறிகளையும், அவருடைய விருப்பத்தை வெளிப்படுத்துகிற பல்வேறு அம்சங்களையும் நாம் சிந்திப்போம். அப்படிச் சிந்திக்கும்போது, பல முக்கியமான விஷயங்களை நாம் மனதில் வைக்க வேண்டும். தனது சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிய வேண்டுமென யெகோவா நம்மை ஒருநாளும் வற்புறுத்துவது கிடையாது; நாம் இதயப்பூர்வமாகக் கீழ்ப்படிய வேண்டுமென்று அவர் விரும்புகிறார். இக்காலத்தில் அளவில்லாத ஆசீர்வாதத்தையும் வருங்காலத்தில் முடிவில்லாத வாழ்வையும் பெறுவதற்கு ஏற்ற முறையில் வாழும்படி யெகோவா நம்மிடம் சொல்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது. யெகோவாவுக்கு நாம் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படியும்போது, அவர்மீது நமக்கு எந்தளவு அன்பிருக்கிறது என்பதைக் காட்டுகிறோம், நம் அன்பை நிரூபிக்க இதை ஓர் அரிய வாய்ப்பாகக் கருதுகிறோம்.

18 சரி எது தவறு எது என்பதைப் பகுத்துணர மனசாட்சி எனும் பரிசை யெகோவா நமக்கு அன்புடன் தந்திருக்கிறார். ஆனால், நம் மனசாட்சி ஒரு நம்பகமான வழிகாட்டியாக இருக்க வேண்டுமென்றால், அதை நாம் பயிற்றுவிக்க வேண்டும். அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் படிப்போம்.

^ பாரா. 9 தரமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தின் 6-ஆம் அதிகாரத்தைக் காண்க.

^ பாரா. 11 பேய்களும்கூட வேண்டா வெறுப்போடு கீழ்ப்படியலாம். இயேசுவின் காலத்தில் பேய்பிடித்த சிலர் இருந்தார்கள். அவர்களைவிட்டு வெளியே வரச் சொல்லி பேய்களிடம் இயேசு கட்டளையிட்டபோது, அவை வேண்டா வெறுப்போடு அவருடைய அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு வெளியேறின.—மாற்கு 1:27; 5:7-13.

^ பாரா. 13 இதே கிரேக்க வார்த்தை மத்தேயு 23:4-ல் “பாரமான சுமைகளை” விவரிப்பதற்கு, அதாவது வேத அறிஞர்களும் பரிசேயர்களும் பாமர மக்கள்மீது சுமத்திய விலாவாரியான சட்டங்களையும் மனித பாரம்பரியங்களையும் விவரிப்பதற்கு, பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதே கிரேக்க வார்த்தை அப்போஸ்தலர் 20:29, 30-ல் “கொடிய” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ‘உண்மைகளைத் திரித்துச் சொல்வது’ மட்டுமல்லாமல் மக்களை ஒடுக்கி, மோசம்போக்கி வந்த விசுவாச துரோகிகளைக் குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.