Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 9

“பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்”

“பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்”

“பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, கட்டுக்கடங்காத காமப்பசி, கெட்ட ஆசை, சிலை வழிபாட்டுக்குச் சமமான பேராசை ஆகியவற்றைத் தூண்டுகிற உங்களுடைய உடல் உறுப்புகளை அழித்துப்போடுங்கள்.” —கொலோசெயர் 3:5.

1, 2. கடவுளுடைய ஜனங்களுக்குக் கெடுதல் விளைவிக்க பிலேயாம் என்ன திட்டம் தீட்டினான்?

வழக்கமாக மீன் பிடிக்கும் இடத்திற்குத் தூண்டிலும் கையுமாக போகிறார் ஒருவர். ஒருவகை மீனைப் பிடிக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை. என்ன இரை போட்டால் அந்த மீன் சிக்கும் என அவர் யோசிக்கிறார். பிறகு, அந்த மீனுக்குப் பிடித்தமான இரையைக் கொக்கியில் மாட்டி தூண்டில் போடுகிறார். நிமிஷங்கள் கரைகின்றன. ஏதோ அகப்பட்டது போல் தெரிகிறது. தூண்டில் வளைகிறது. சட்டென்று அதை மேலே எடுக்கிறார். சரியான இரையைப் போட்ட சந்தோஷத்தில் வெற்றிப் புன்னகை சிந்துகிறார்.

2 இப்போது நாம் சரித்திரத்தில் பின்னோக்கிச் செல்லலாம். வருடம் கி.மு. 1473. பிலேயாம் என்ற ஒரு மனிதன் என்ன “இரை” போடலாம் என்று ஆழ்ந்து யோசித்தான். அவன் பிடிக்க நினைத்த “மீன்கள்” கடவுளுடைய ஜனங்கள். இவர்கள் மோவாப் சமவெளியில் முகாமிட்டிருந்தார்கள். இந்தச் சமவெளி வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் எல்லையில் அமைந்திருந்தது. பிலேயாம் தன்னை யெகோவாவின் தீர்க்கதரிசி எனச் சொல்லிக்கொண்டான்; ஆனால் அவன் பேராசை பிடித்தவன், இஸ்ரவேலரைச் சபிப்பதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்டவன். யெகோவா தலையிட்டதால் இஸ்ரவேலரை அவனால் சபிக்க முடியவில்லை, ஆசீர்வதிக்கத்தான் முடிந்தது. ஆனால், எப்படியாவது வெகுமதியைப் பெற வேண்டுமென பிலேயாம் நினைத்தான். இஸ்ரவேலரை ஏதாவது பயங்கரமான பாவம் செய்ய வைத்தால் கடவுளே அவர்களைச் சபித்துவிடுவார் என்று மனக்கணக்கு போட்டான். இஸ்ரவேலரைப் “பிடிக்க” மோவாப் தேசத்து கவர்ச்சிக் கன்னியரை “இரையாக” போட்டான்.—எண்ணாகமம் 22:1-7; 31:15, 16; வெளிப்படுத்துதல் 2:14.

3. பிலேயாமின் திட்டம் எந்தளவுக்குப் பலித்தது?

3 பிலேயாம் போட்ட திட்டம் பலித்ததா? ஓரளவுக்குப் பலித்தது. ஆயிரக்கணக்கான இஸ்ரவேல் ஆண்கள் பிலேயாம் போட்ட தூண்டிலில் மாட்டிக்கொண்டார்கள்; ஆம், “மோவாபியப் பெண்களுடன் பாலியல் முறைகேட்டில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.” மோவாபிய தெய்வங்களையும் வழிபட ஆரம்பித்தார்கள், ஏன், காம தெய்வமான அருவருப்புமிக்க பாகால் பேயோரைக்கூட வழிபட ஆரம்பித்தார்கள். அதனால், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் எல்லையில் 24,000 இஸ்ரவேலர் மடிந்துபோனார்கள். எப்பேர்ப்பட்ட அவலம்!—எண்ணாகமம் 25:1-9.

4. ஆயிரக்கணக்கான இஸ்ரவேலர் பாலியல் முறைகேட்டில் ஈடுபடக் காரணம் என்ன?

4 இதற்கெல்லாம் காரணம் என்ன? இஸ்ரவேலருடைய இதயம் பொல்லாததாக மாறியிருந்ததே இதற்குக் காரணம்; அவர்களில் பலர் யெகோவாவைவிட்டு விலகிச் சென்றிருந்தார்கள். இத்தனைக்கும் யெகோவாதான் அவர்களை எகிப்திலிருந்து விடுதலை செய்திருந்தார், வனாந்தரத்தில் உணவளித்திருந்தார், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் எல்லைவரை கைப்பிடித்து வழிநடத்தியிருந்தார். (எபிரெயர் 3:12) இந்தச் சம்பவத்தை மனதில் வைத்தே அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: “அவர்களில் சிலர் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதால் ஒரே நாளில் 23,000 பேர் செத்துப்போனார்கள்; அவர்களைப் போல் நாமும் பாலியல் முறைகேட்டில் ஈடுபடாமல் இருப்போமாக.” *1 கொரிந்தியர் 10:8.

5, 6. மோவாப் சமவெளியில் இஸ்ரவேலர் பாவம் செய்ததைப் பற்றிய பதிவிலிருந்து இன்று நாம் என்ன முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

5 இன்று கடவுளுடைய மக்களுக்கு, இந்த எண்ணாகமப் பதிவில் மிக முக்கியமான பாடங்கள் உள்ளன. ஏனென்றால், இவர்கள் நவீனகால வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் வாயிலில் நிற்கிறார்கள். (1 கொரிந்தியர் 10:11) பூர்வகால மோவாபியரைப் போலவே இன்றும் உலக மக்கள் காம வெறி பிடித்து அலைகிறார்கள். அதோடு, ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஒழுக்கக்கேடு எனும் கண்ணியில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆம், அன்று இஸ்ரவேலர் அகப்பட்டுக் கொண்ட அதே கண்ணியில் இன்று இவர்களும் சிக்கிக்கொள்கிறார்கள். (2 கொரிந்தியர் 2:11) சிம்ரி என்பவன் இஸ்ரவேல் முகாமிலிருந்த தன்னுடைய கூடாரத்துக்கு ஒரு மீதியானிய பெண்ணைத் துணிச்சலுடன் கூட்டிக்கொண்டு வந்தான்; அவனைப் போலவே கிறிஸ்தவ சபைக்குள்ளிருக்கும் சிலர் சபையார்மீது தீய செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள்.—எண்ணாகமம் 25:6, 14; யூதா 4.

6 மோவாப் சமவெளியில் இஸ்ரவேலர் எதிர்ப்பட்டதைப் போன்ற ஒரு சூழ்நிலையில் நீங்களும் இருப்பதாக உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? நீண்ட காலமாக நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் புதிய உலகம் உங்களுக்குமுன் இருப்பதை உங்களால் பார்க்க முடிகிறதா? அப்படியானால், “பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்” என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க முழுமூச்சோடு முயலுங்கள்.—1 கொரிந்தியர் 6:18.

மோவாப் சமவெளி

பாலியல் முறைகேடு என்றால் என்ன?

7, 8. “பாலியல் முறைகேடு” என்றால் என்ன, அதில் ஈடுபடுகிறவர்கள் எப்படித் தாங்கள் விதைத்ததை அறுவடை செய்கிறார்கள்?

7 பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள “பாலியல் முறைகேடு” (கிரேக்கில், போர்னியா) என்ற வார்த்தை வேதப்பூர்வமாக திருமண பந்தத்தில் இணையாதவர்கள் கள்ளத்தனமான பாலுறவுகொள்வதைக் குறிக்கிறது. மணத்துணைக்குத் துரோகம், விபச்சாரம், மணமாகாதவர்களுக்கு இடையே பாலுறவு (வாய்வழி, ஆசனவழி செக்ஸும் இதில் உட்படும்), மணத்துணை அல்லாத வேறொருவரின் பாலுறுப்புகளை கிளர்ச்சியடையச் செய்தல் போன்றவை பாலியல் முறைகேட்டில் உட்பட்டுள்ளன. ஓரினச் சேர்க்கையும் மிருகத்தோடு புணர்வதும்கூட இதில் உட்பட்டுள்ளன. *

8 பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்கள் கிறிஸ்தவ சபையின் அங்கத்தினராக இருக்க முடியாது, முடிவில்லாத வாழ்வையும் பெற முடியாது என வேதவசனங்கள் தெளிவாகச் சொல்கின்றன. (1 கொரிந்தியர் 6:9; வெளிப்படுத்துதல் 22:15) அதுமட்டுமல்ல இப்படிப்பட்டவர்கள் இன்றும் பல துன்பங்களைத் தேடிக்கொள்கிறார்கள்: தன்மானத்தையும், மற்றவர்களுடைய நம்பிக்கையையும் இழந்துவிடுகிறார்கள், மண வாழ்வில் விரிசல், குறுகுறுக்கும் மனசாட்சி, முறைதவறிய கர்ப்பம், நோய், ஏன், மரணத்தையும்கூட வருவித்துக்கொள்கிறார்கள். (கலாத்தியர் 6:7, 8-ஐ வாசியுங்கள்.) இந்தளவு வேதனை தரும் ஒரு பாதையில் ஏன் அடியெடுத்துவைக்க வேண்டும்? கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தப் பாதையில் முதல் அடியெடுத்து வைக்கும் முன்பே அதன் பின்விளைவுகளைப் பற்றி அநேகர் நினைத்துப் பார்ப்பதில்லை. ஆபாசத்தைப் பார்ப்பதே அந்த முதல் படி.

ஆபாசம்—முதல் படி

9. ஆபாசத்தைப் பார்ப்பதில், படிப்பதில், கேட்பதில் எந்தக் கெடுதலும் இல்லை என்று சிலர் சொல்வது சரியா? விளக்கவும்.

9 அநேக நாடுகளில், புத்தகக் கடைகள், இசைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் ஆபாசம் மலிந்து கிடக்கிறது; * இன்டர்நெட்டைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. ஆபாசத்தைப் பார்ப்பதால், கேட்பதால், படிப்பதால் எந்தக் கெடுதலும் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள், ஆனால் அது சரியா? இல்லவே இல்லை! ஆபாசத்தைப் பார்ப்பவர்கள் சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையாகலாம், ‘கட்டுக்கடங்காத காமப்பசியை’ வளர்த்துக்கொள்ளலாம். * இதன் விளைவு? செக்ஸ் வெறியர்களாக, வக்கிர ஆசை உள்ளவர்களாக அவர்கள் ஆகிவிடலாம்; மண வாழ்வில் பெரும் சச்சரவுகளைச் சந்திக்கலாம், ஏன், விவாகரத்துவரை சென்றுவிடலாம். (ரோமர் 1:24-27; எபேசியர் 4:19) செக்ஸ் வெறியைப் புற்றுநோய்க்கு ஒப்பிட்டுப் பேசுகிறார் ஓர் ஆராய்ச்சியாளர். “அது வளர்ந்து மளமளவென்று பரவும்; ஒருமுறை வந்துவிட்டால் போவது கஷ்டம், அதற்குச் சிகிச்சை அளிப்பதும் அதைக் குணப்படுத்துவதும் ரொம்ப சிரமம்” என்று அவர் சொல்கிறார்.

வீட்டில் எல்லாரும் புழங்கும் இடத்தில் இன்டர்நெட்டைப் பயன்படுத்துவது ஞானமான செயல்

10. யாக்கோபு 1:14, 15-ல் உள்ள நியமத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்? ( பக்கம் 115-ல் உள்ள பெட்டியையும் காண்க.)

10 யாக்கோபு 1:14, 15 சொல்வதைச் சிந்தித்துப் பாருங்கள்: “ஒவ்வொருவனும் தன்னுடைய ஆசையால் கவர்ந்திழுக்கப்பட்டு, சிக்க வைக்கப்பட்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு அந்த ஆசை கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது, பாவம் கடைசியில் மரணத்தை உண்டாக்குகிறது.” ஆகவே, உங்கள் மனதில் கெட்ட ஆசை எட்டிப் பார்த்தால், அதை ஒழித்துவிட உடனடியாகச் செயல்படுங்கள்! உதாரணமாக, நீங்கள் ஆபாசக் காட்சிகளை எதேச்சையாகப் பார்த்துவிட்டால், உடனே உங்கள் பார்வையை வேறு பக்கம் திருப்புங்கள், அல்லது கம்ப்யூட்டரை அணைத்துவிடுங்கள், அல்லது டிவி சேனலை மாற்றுங்கள். கெட்ட ஆசை உங்கள் மனதில் வேகமாய்ப் பரவி உங்களை ஆட்டிப்படைப்பதற்குமுன் அதைத் தடுப்பதற்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யுங்கள்!மத்தேயு 5:29, 30-ஐ வாசியுங்கள்.

11. கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராடும்போது யெகோவாவைச் சார்ந்திருக்கிறோம் என எப்படிக் காட்டலாம்?

11 நம்மைப் பற்றி நம்மைவிட நன்கு அறிந்த யெகோவா தேவன் நல்ல காரணத்தோடுதான் இப்படி அறிவுரை கூறுகிறார்: “பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, கட்டுக்கடங்காத காமப்பசி, கெட்ட ஆசை, சிலை வழிபாட்டுக்குச் சமமான பேராசை ஆகியவற்றைத் தூண்டுகிற உங்களுடைய உடல் உறுப்புகளை அழித்துப்போடுங்கள்.” (கொலோசெயர் 3:5) இப்படிச் செய்வது சவாலாக இருக்கலாம். ஆனால், அன்பும் பொறுமையும் நிறைந்த பரலோகத் தகப்பனிடம் உதவிக்காக நாம் மன்றாடலாம் என்பதை நினைவில் வையுங்கள். (சங்கீதம் 68:19) எனவே, கெட்ட எண்ணங்கள் மனதில் நுழைந்தால் உடனடியாக அவரிடம் ஜெபம் செய்யுங்கள். ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ தரும்படி அவரிடம் கேளுங்கள்; அதோடு, உங்கள் மனதை மற்ற காரியங்களில் ஒருமுகப்படுத்த முயலுங்கள்.—2 கொரிந்தியர் 4:7; 1 கொரிந்தியர் 9:27; “ கெட்ட பழக்கத்தை விட்டுவிட நான் என்ன செய்ய வேண்டும்?” என்ற பெட்டியைப் பக்கம் 118-ல் காண்க.

12. நம் ‘இதயம்’ என்பது எதைக் குறிக்கிறது, அதை ஏன் காத்துக்கொள்ள வேண்டும்?

12 “எல்லாவற்றையும்விட முக்கியமாக உன் இதயத்தைப் பாதுகாத்துக்கொள். ஏனென்றால், உன் உயிர் அதைச் சார்ந்தே இருக்கிறது” என்று ஞானியாகிய சாலொமோன் எழுதினார். (நீதிமொழிகள் 4:23) நம் ‘இதயம்’ என்பது உள்ளுக்குள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம், அதாவது கடவுளுடைய பார்வையில் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம், என்பதைக் குறிக்கிறது. மற்றவர்களின் பார்வையில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதைப் பொறுத்தல்ல, யெகோவாவின் பார்வையில் எப்படி இருக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நமக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும். இது சாதாரண விஷயமாகத் தோன்றலாம். ஆனால், சிந்திக்க வேண்டிய விஷயம். உத்தமரான யோபு எந்தப் பெண்ணையும் தவறான எண்ணத்தோடு பார்க்கக்கூடாது என்று தன் கண்களோடு ஒப்பந்தம் செய்திருந்தார். (யோபு 31:1) நமக்கு எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி! இவரைப் போலவே மனதில் உறுதிபூண்டிருந்த சங்கீதக்காரன் ஒருவர், “வீணான காரியங்களைப் பார்க்காதபடி என் கண்களைத் திருப்புங்கள்” என்று ஜெபம் செய்தார்.—சங்கீதம் 119:37.

தீனாளின் கெட்ட சகவாசம்

13. தீனாள் யார், கானானியப் பெண்களோடு அவள் பழகியது ஏன் புத்திகெட்ட செயல்?

13 மூன்றாம் அதிகாரத்தில் பார்த்தபடி, நாம் யாருடன் நெருங்கிப் பழகுகிறோமோ அவர்களைப் போலவே ஆகிவிடுவோம்; ஆம், நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ ஆகிவிடுவோம். (நீதிமொழிகள் 13:20; 1 கொரிந்தியர் 15:33-ஐ வாசியுங்கள்.) யாக்கோபின் மகள் தீனாளின் உதாரணத்தை இப்போது ஆராயலாம். அவளுடைய பெற்றோர் அவளை நன்றாகத்தான் வளர்த்தார்கள், ஆனால் அவளோ புத்திகெட்டுப்போய் கானானியப் பெண்களோடு பழக்கம் வைத்துக்கொண்டாள். மோவாபியரைப் போலவே, கானானியர்களும் ஒழுக்கக்கேட்டுக்குப் பேர்போனவர்கள். (லேவியராகமம் 18:6-25) கானானிய ஆண்கள் தீனாளைப் பார்த்தபோது, தங்கள் ஆசைக்கு அவள் அடிபணிந்துவிடுவாள் என்று நினைத்தார்கள். ஏன், தன் அப்பாவின் குடும்பத்தில் “அதிக மதிப்பும் மரியாதையும்” பெற்றிருந்த சீகேமும்கூட அப்படித்தான் நினைத்தான்.—ஆதியாகமம் 34:18, 19.

14. தீனாளின் கெட்ட சகவாசத்தால் என்னென்ன அசம்பாவிதங்கள் நேரிட்டன?

14 சீகேமைப் பார்த்தபோது, தீனாளின் மனதில் எந்தத் தப்பான எண்ணமும் வராமல் இருந்திருக்கலாம். ஆனால், காம உணர்வுகள் கிளர்ந்தெழுந்தபோது கானானியர்கள் இயல்பாக என்ன செய்திருப்பார்களோ அதைத்தான் சீகேமும் செய்தான். கடைசி நேரத்தில் அவள் என்னதான் போராடியிருந்தாலும் அதில் எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் போய்விட்டது. ஏனென்றால், அவன் “அவளைக் கொண்டுபோய்ப் பலாத்காரம் செய்தான்.” அதற்குப் பின்பு தீனாளை அவன் ‘காதலித்ததாக’ தெரிகிறது. ஆனால், அவன் அவளுக்குச் செய்த அநியாயம் மறைந்துவிடவில்லை. (ஆதியாகமம் 34:1-4-ஐ வாசியுங்கள்.) தீனாளுக்கு வந்த துன்பம் அவளோடு முடிந்துவிட்டதா? இல்லை, அவளுடைய கெட்ட சகவாசத்தால் பல அசம்பாவிதங்கள் நடந்தன; கடைசியில் அவளுடைய முழுக் குடும்பத்துக்கும் அவமானமும் அவப்பெயரும் வந்தன.—ஆதியாகமம் 34:7, 25-31; கலாத்தியர் 6:7, 8.

15, 16. கடவுள் தரும் ஞானத்தை நாம் எப்படிப் பெறலாம்? ( 124-ஆம் பக்கத்தில் உள்ள பெட்டியையும் காண்க.)

15 இந்தக் கசப்பான அனுபவத்திற்குப் பிறகு தீனாள் ஒருவேளை பாடம் கற்றிருக்கலாம். ஆனால், யெகோவாவை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிகிறவர்கள் எதையும் அனுபவப்பட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. அவர்கள் கடவுள் பேச்சைக் கேட்டு, ‘ஞானமுள்ளவர்களோடு நடக்கிறார்கள்.’ (நீதிமொழிகள் 13:20அ) இவ்வாறு, “நல்ல வழிகள் எல்லாவற்றையும்” தெரிந்துகொண்டு அநாவசியமான பிரச்சினைகளையும் துயரங்களையும் தவிர்க்கிறார்கள்.—நீதிமொழிகள் 2:6-9; சங்கீதம் 1:1-3.

16 கடவுள் தரும் ஞானம் அதற்காக ஏங்குகிறவர்களுக்கும் முயற்சி செய்கிறவர்களுக்கும் மட்டுமே கிடைக்கும். ஆம், விடாமல் ஜெபம் செய்து, பைபிளையும் உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வெளியிடும் பிரசுரங்களையும் தவறாமல் படிக்கிறவர்களுக்கு மட்டுமே அந்த ஞானம் கிடைக்கும். (மத்தேயு 24:45; யாக்கோபு 1:5) அதோடு, ஞானத்தைப் பெற நமக்கு மனத்தாழ்மையும் முக்கியம். அப்போதுதான் பைபிளிலிருந்து அறிவுரை கொடுக்கப்படும்போது அதை மனதார ஏற்றுக்கொள்வோம். (2 ராஜாக்கள் 22:18, 19) உதாரணமாக, தன் இதயம் நயவஞ்சகமானது என்பதையும், அது எதையும் செய்யத் துணியும் என்பதையும் ஒரு கிறிஸ்தவர் ஒத்துக்கொள்ளலாம். (எரேமியா 17:9) ஆனால், தன் இதயத்தின் பேச்சைக் கேட்டு அவர் தவறு செய்துவிடும்போது, யாராவது ஒருவர் அன்புடன் தக்க ஆலோசனை கொடுத்தால் மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வாரா?

17. குடும்பத்தில் எழும் ஒரு சூழ்நிலையைப் பற்றி விவரியுங்கள், மகள் நியாயமாகச் சிந்தித்துப் பார்க்க அப்பா எப்படி உதவலாம் என விளக்குங்கள்.

17 இந்தச் சூழ்நிலையைக் கற்பனை செய்யுங்கள்: ஒரு பெண் தான் காதலிக்கும் கிறிஸ்தவ இளைஞருடன் வெளியே செல்வதற்கு அப்பாவிடம் அனுமதி கேட்கிறாள். ஆனால், துணைக்கு யாரும் இல்லாமல் இருவரும் தனியாகப் போகக்கூடாது என்று அவளுடைய அப்பா சொல்கிறார். அதற்கு அந்தப் பெண், “அப்பா, உங்களுக்கு என்மேல் நம்பிக்கை இல்லையா? நாங்கள் எந்தத் தப்பும் செய்ய மாட்டோம்!” என்று சொல்கிறாள். அவள் யெகோவாவை நேசிக்கலாம், அவளுடைய எண்ணங்கள் சுத்தமாகவே இருக்கலாம். என்றாலும், ‘[கடவுளுடைய] ஞானத்தின்படி’ அவள் நடக்கிறாளா? ‘பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுகிறாளா’? அல்லது முட்டாள்தனமாக ‘தன்னுடைய இதயத்தையே நம்புகிறாளா’? (நீதிமொழிகள் 28:26) இதுபோன்ற சூழ்நிலையில் இருக்கும் ஓர் அப்பாவும் மகளும் நியாயமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேறென்ன பைபிள் நியமங்கள் அவர்களுக்கு உதவலாம் என்று யோசித்துப் பாருங்கள்.—காண்க: நீதிமொழிகள் 22:3; மத்தேயு 6:13; 26:41.

பாலியல் முறைகேட்டிலிருந்து யோசேப்பு விலகி ஓடினார்

18, 19. யோசேப்பு என்ன சோதனையை எதிர்ப்பட்டார், அதை எப்படி வெற்றிகரமாகச் சமாளித்தார்?

18 இளம் பருவத்திலேயே கடவுளை நேசித்து, பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடியவர் யோசேப்பு; இவர் தீனாளின் ஒன்றுவிட்ட தம்பி. (ஆதியாகமம் 30:20-24) சிறு வயதில், தன் அக்காவின் முட்டாள்தனமான செயலால் வந்த விளைவுகளை அவர் கண்ணாரக் கண்டார். பல வருடங்கள் கழித்து, அவர் எகிப்தில் அடிமையாக இருந்தபோது அவருக்கு ஒரு சோதனை வந்தது. அவருடைய எஜமானின் மனைவி தன் ஆசைக்கு இணங்கும்படி “தினமும்” அவரை வற்புறுத்தினாள். சிறு வயதில் அவர் மனதில் பதிந்த அந்தச் சம்பவமும், கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க வேண்டுமென்ற ஆசையும் அவரைப் பாதுகாத்தன. உண்மைதான், யோசேப்பு ஓர் அடிமையாக இருந்ததால் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து போக முடியவில்லை! அந்தச் சூழ்நிலையில் அவர் விவேகமாகவும் தைரியமாகவும் நடக்க வேண்டியிருந்தது. அதனால்தான், அவளுடைய ஆசைக்கு இணங்கவே முடியாது என மீண்டும் மீண்டும் உறுதியாகச் சொன்னார், கடைசியில் அவளைவிட்டு ஓடியே போனார்!ஆதியாகமம் 39:7-12-ஐ வாசியுங்கள்.

19 இப்படி யோசித்துப் பாருங்கள்: யோசேப்பு அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போல் கற்பனை செய்துகொண்டு அல்லது செக்ஸைப் பற்றி சதா பகல்கனவு கண்டுகொண்டு இருந்திருந்தால், அவரால் கடவுளுக்குப் பிரியமாய் நடந்திருக்க முடியுமா? முடியவே முடியாது. யோசேப்பு கெட்ட எண்ணங்களை மனதில் அசைபோட்டுக் கொண்டிருக்கவில்லை; யெகோவாவுடன் உள்ள பந்தத்தையே பொக்கிஷமாய்க் கருதினார். போத்திபாரின் மனைவியிடம் அவர் சொன்ன வார்த்தைகளில் இது தெளிவாகத் தெரிகிறது. ‘என் எஜமான் . . . எதையுமே எனக்குத் தராமல் இருக்கவில்லை, உங்களைத் தவிர! ஏனென்றால், நீங்கள் அவருடைய மனைவி! அப்படியிருக்கும்போது, நான் எப்படி இவ்வளவு பெரிய தவறு செய்து, கடவுளுக்கு விரோதமாகப் பாவம் பண்ணுவேன்?’ என்று அவளிடம் சொன்னார்.—ஆதியாகமம் 39:8, 9.

20. யோசேப்பின் விஷயத்தில் யெகோவா தலையிட்டு என்ன செய்தார்?

20 குடும்பத்தைவிட்டு வெகு தூரத்தில் இருந்தபோதிலும், இளம் யோசேப்பு தினம் தினம் தனக்குப் பிரியமாய் நடந்ததைப் பார்த்து யெகோவா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்! (நீதிமொழிகள் 27:11) பிற்பாடு யோசேப்பு சிறையிலிருந்து விடுதலை பெறுவதற்கு மட்டுமல்லாமல், எகிப்தின் பிரதம மந்திரி ஆவதற்கும், உணவுத்துறை நிர்வாகி ஆவதற்கும் யெகோவா வழிசெய்தார்! (ஆதியாகமம் 41:39-49) “யெகோவாவை நேசிக்கிறவர்களே, கெட்ட காரியங்களை வெறுத்துவிடுங்கள். தனக்கு உண்மையாக இருக்கிறவர்களின் உயிரை அவர் காக்கிறார். பொல்லாதவர்களின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்” என்று சங்கீதம் 97:10 சொல்வது எவ்வளவு உண்மை!

21. ஆப்பிரிக்காவில் வசிக்கும் இளம் சகோதரர் ஒருவர் ஒழுக்கத்தைக் காத்துக்கொள்வதில் எப்படி உறுதியாய் இருந்தார்?

21 இன்றும் கடவுளுடைய ஊழியர்கள் அநேகர் ‘கெட்டதை வெறுத்து, நல்லதை நேசிப்பதை’ தங்கள் வாழ்க்கையில் காட்டுகிறார்கள். (ஆமோஸ் 5:15) ஆப்பிரிக்காவில் வசிக்கும் இளம் சகோதரர் ஒருவர் தன்னுடைய அனுபவத்தைச் சொல்கிறார்: “‘கணக்கு பரிட்சையில் நீ எனக்கு உதவி செய்தால் நான் உன்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்கிறேன்’ என்று என்னுடன் படித்த மாணவி வெட்கமே இல்லாமல் என்னிடம் சொன்னாள். ‘முடியாது’ என நான் பட்டென்று சொல்லிவிட்டேன். கடவுளுக்கு நான் உண்மையாக நடந்துகொண்டதால் என்னுடைய கண்ணியத்தையும் சுயமரியாதையையும் காத்துக்கொண்டேன். இவைதான் பொன், வெள்ளியைவிட மதிப்புமிக்கவை.” பாவம் செய்தால் ‘தற்காலிகச் சந்தோஷம்’ கிடைக்கலாம் என்பது உண்மைதான், ஆனால் இந்தத் தற்காலிக சந்தோஷம் பெரும் துன்பத்தையே கொண்டுவரும். (எபிரெயர் 11:25) யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதால் வரும் நிலையான சந்தோஷத்தோடு ஒப்பிட இது ஒன்றுமே இல்லை.—நீதிமொழிகள் 10:22.

இரக்கமுள்ள கடவுளின் உதவியை நாடுங்கள்

22, 23. (அ) ஒரு கிறிஸ்தவர் பயங்கரமான பாவத்தைச் செய்துவிட்டால் அதிலிருந்து அவரால் மீண்டு வரவே முடியாதா? (ஆ) தவறு செய்தவருக்கு என்ன உதவி கிடைக்கும்?

22 நாம் எல்லாரும் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், கெட்ட ஆசைகளை அடக்குவதற்கும் கடவுளுடைய பார்வையில் சரியானதைச் செய்வதற்கும் போராடுகிறோம். (ரோமர் 7:21-25) இது யெகோவாவுக்கு நன்றாகவே தெரியும், ஏனென்றால் நாம் “மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்.” (சங்கீதம் 103:14) என்றாலும், சில சமயங்களில் ஒரு கிறிஸ்தவர் பயங்கரமான பாவத்தைச் செய்துவிடலாம். அதிலிருந்து அவரால் மீண்டு வரவே முடியாதா? முடியும்! இருந்தாலும், தவறு செய்தவர் தாவீது ராஜாவைப் போல அதற்குரிய பலனை அனுபவிக்க வேண்டும். ஆனால், தவறை உணர்ந்து ‘பாவத்தை வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறவர்களை’ கடவுள் எப்போதும் ‘மன்னிக்கத் தயாராக இருக்கிறார்.’—யாக்கோபு 5:16; சங்கீதம் 86:5; நீதிமொழிகள் 28:13-ஐ வாசியுங்கள்.

23 அதோடு, ஆன்மீக முதிர்ச்சியுள்ள மேய்ப்பர்களை, தகுதிவாய்ந்த, உதவும் மனப்பான்மையுள்ள மேய்ப்பர்களை கிறிஸ்தவ சபையில் “பரிசுகளாக” கடவுள் கொடுத்திருக்கிறார். (எபேசியர் 4:8, 12; யாக்கோபு 5:14, 15) தவறு செய்தவர் மீண்டும் கடவுளுடன் நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ள உதவுவதே இவர்களுடைய நோக்கம்; சாலொமோன் ஞானியின் வார்த்தைகளில் சொன்னால், அவர் “புத்தியை சம்பாதிக்க” உதவுவதே இவர்களுடைய நோக்கம்; அப்போதுதான் செய்த தவறையே மீண்டும் மீண்டும் அவர் செய்யாமலிருப்பார்.—நீதிமொழிகள் 15:32.

‘புத்தியை சம்பாதியுங்கள்’

24, 25. (அ) நீதிமொழிகள் 7:6-23-ல் சொல்லப்பட்ட இளைஞன், தான் ‘புத்தியில்லாதவன்’ என்பதை எப்படிக் காட்டினான்? (ஆ) நாம் எப்படி ‘புத்தியை சம்பாதிக்கலாம்’?

24 ‘புத்தியில்லாதவர்களை’ பற்றியும் ‘புத்தியை சம்பாதிப்பவர்களை’ பற்றியும் பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 7:7) ‘புத்தியில்லாதவனுக்கு’ ஆன்மீக முதிர்ச்சியோ கடவுளுடைய சேவையில் அனுபவமோ இருக்காது. எனவே, அவன் விவேகமாய்ச் செயல்படவும் மாட்டான், சரியாகத் தீர்மானம் எடுக்கவும் மாட்டான். நீதிமொழிகள் 7:6-23-ல் சொல்லப்பட்ட இளைஞனைப் போல், இவனும் படுமோசமான பாவத்தில் சுலபமாக விழுந்துவிடுவான். ஆனால், ‘புத்தியை சம்பாதிப்பவர்’ தவறாமல் பைபிள் வாசித்து ஜெபம் செய்வதன் மூலம் தன் இதயத்தை ஆராய்ந்து பார்க்கிறார். பாவ இயல்புள்ளவராக இருந்தாலும், முடிந்தவரை தன் எண்ணங்களையும், ஆசைகளையும், உணர்ச்சிகளையும், லட்சியங்களையும் கடவுளுடைய விருப்பத்திற்கு இசைவாக மாற்றிக்கொள்கிறார். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் அவர் ‘தன்னை நேசிக்கிறார்,’ அதாவது தனக்கு ஆசீர்வாதம் தேடிக்கொள்கிறார், அதோடு எதிர்காலத்தில் ‘வெற்றி பெறுவார்.’—நீதிமொழிகள் 19:8.

25 உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுளுடைய நெறிமுறைகளே சரியானவை என நான் ஆணித்தரமாக நம்புகிறேனா? அவற்றைக் கடைப்பிடித்தால் எனக்கு மிகுந்த சந்தோஷம் கிடைக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேனா?’ (சங்கீதம் 19:7-10; ஏசாயா 48:17, 18) இதில் உங்களுக்கு கடுகளவு சந்தேகம் இருந்தாலும் உடனடியாக அதைத் தீர்த்துக்கொள்ளுங்கள். கடவுளுடைய சட்டங்களை அலட்சியம் செய்வதால் உண்டாகும் விளைவுகளை யோசித்துப் பாருங்கள். சத்தியத்திற்கு இசைவாக வாழ்வதன் மூலமும், உங்கள் மனதை நல்ல விஷயங்களால் நிரப்புவதன் மூலமும், அதாவது உண்மையான, நீதியான, சுத்தமான, விரும்பத்தக்க, ஒழுக்கமான விஷயங்களால் நிரப்புவதன் மூலமும், ‘யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்.’ (சங்கீதம் 34:8; பிலிப்பியர் 4:8, 9) இதையெல்லாம் அதிகமாய்ச் செய்யச் செய்ய கடவுளை அதிகமாய் நேசிப்பீர்கள், கடவுள் நேசிப்பதையே நீங்களும் நேசிப்பீர்கள், கடவுள் வெறுப்பதையே நீங்களும் வெறுப்பீர்கள். யோசேப்பு நம்மைப் போல் சாதாரண மனிதர்தான். இருந்தாலும், ‘பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடினார்.’ ஏனென்றால், சிறுவயது முதல் யெகோவா தன்னை வடிவமைக்க, அதாவது தன்னை ஞானவானாக்க யோசேப்பு அனுமதித்தார். நீங்களும் அப்படியே செய்வீர்களாக!—ஏசாயா 64:8.

26. அடுத்த கட்டுரையில் நாம் என்ன முக்கியமான விஷயத்தைச் சிந்திப்போம்?

26 இன்று பலர் இன்பத்திற்காக தங்கள் பிறப்புறுப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்கும் கணவனும் மனைவியும் அன்னியோன்னியமாய் இருப்பதற்குமே நம் படைப்பாளர் அவற்றைப் படைத்தார். (நீதிமொழிகள் 5:18) திருமணத்தைப் பற்றிய கடவுளின் கண்ணோட்டத்தை அடுத்து வரும் இரண்டு அதிகாரங்களும் சிந்திக்கும்.

^ பாரா. 4 எண்ணாகமப் பதிவில், யெகோவாவால் நேரடியாகக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையோடு நியாயாதிபதிகளால் கொல்லப்பட்ட ‘தலைவர்களின்’ எண்ணிக்கையும் உட்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நியாயாதிபதிகளால் கொல்லப்பட்டவர்கள் மொத்தம் ஆயிரம் பேராக இருந்திருக்கலாம்.—எண்ணாகமம் 25:4, 5.

^ பாரா. 7 அசுத்தமான பழக்கம், வெட்கங்கெட்ட நடத்தை பற்றிய விளக்கத்திற்கு, காவற்கோபுரம் (யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது) ஜூலை 15, 2006 இதழில், “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியைக் காண்க.

^ பாரா. 9 “ஆபாசம்” என்பது செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் படங்களை, புத்தகங்களை, போன் உரையாடல்களைக் குறிக்கிறது. காம உணர்வுகளைத் தூண்டும் வகையில் ஒருவர் கவர்ச்சியாக தோற்றமளிக்கும் படங்கள்முதல், இருவரோ பலரோ சேர்ந்து அருவருப்பான பாலியல் செயல்களில் ஈடுபடுவதை வர்ணிப்பதுவரை எல்லாமே ஆபாசத்தில் உட்படுகிறது.

^ பாரா. 9 சுய இன்பப் பழக்கம் பற்றி 249-251 பக்கங்களில் உள்ள பிற்சேர்க்கையில் கூடுதல் தகவல் உள்ளது.