Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 11

‘திருமண ஏற்பாட்டை மதியுங்கள்’

‘திருமண ஏற்பாட்டை மதியுங்கள்’

“இளவயதில் கைப்பிடித்த உன் மனைவியோடு சந்தோஷமாக இரு.”—நீதிமொழிகள் 5:18.

1, 2. என்ன கேள்வியைச் சிந்திக்கப் போகிறோம், ஏன்?

நீங்கள் திருமணம் ஆனவரா? அப்படியானால், உங்கள் மணவாழ்வில் மகிழ்ச்சித் தென்றல் வீசுகிறதா, அல்லது துன்பப் புயல் வீசுகிறதா? உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே உள்ள உறவு தேய்பிறை போல் தேய்ந்துகொண்டே வருகிறதா? ஏதோ பேருக்குக் குடும்பம் நடத்துகிறீர்களா? அப்படியானால், ஒருகாலத்தில் உங்களுக்கு இடையே நிலவிய அன்பும் அன்னியோன்னியமும் மறைந்துவிட்டதை எண்ணி நீங்கள் துயரத்தில் வாடலாம். நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பதால், உங்களுடைய மணவாழ்க்கை நீங்கள் நேசிக்கும் கடவுளாகிய யெகோவாவுக்குப் புகழ்சேர்க்க வேண்டுமென்றே விரும்புகிறீர்கள். எனவே, தற்போது உங்கள் நிலைமை எவ்வளவுதான் கவலைக்குரியதாக, மனவேதனை தருவதாக இருந்தாலும், ‘இனி என் வாழ்க்கை அவ்வளவுதான்’ என்று முடிவுகட்டிவிடாதீர்கள்.

2 ஒருகாலத்தில் எவ்வித சந்தோஷமும் இல்லாமல் ஏதோ ஒப்புக்குக் குடும்பம் நடத்திக்கொண்டிருந்த தம்பதியர் சிலர், இப்போது தங்களுடைய பந்தத்தைப் பலப்படுத்தியிருக்கிறார்கள். நீங்களும் உங்களுடைய மண வாழ்வில் திருப்தியைக் காண முடியும். எப்படி?

கடவுளிடமும் துணையிடமும் நெருங்கிவர...

3, 4. கடவுளிடம் தம்பதியர் நெருங்கிவர முயன்றால், எப்படி ஒருவருக்கொருவர் நெருங்கிவர முடியும்? விளக்கவும்.

3 கணவனும் மனைவியும் கடவுளிடம் நெருங்கிவர முயன்றால், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நெருங்கிவர முடியும். எப்படி? இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: உங்கள் கண் முன்னால் ஒரு மலை இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். மலையின் அடிவாரம் அகலமாகவும் உச்சி குறுகலாகவும் இருக்கிறது. மலை அடிவாரத்தின் வடபகுதியில் ஓர் ஆண் நின்றுகொண்டிருக்கிறான், தென்பகுதியில் ஒரு பெண் நின்றுகொண்டிருக்கிறாள். இருவரும் மலையுச்சியை நோக்கி ஏற ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் மலை அடிவாரத்தில் இருக்கும்போது இருவருக்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்கிறது. ஆனால், அவர்கள் மேலே ஏற ஏற, அவர்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்துகொண்டே வருகிறது. இந்த உதாரணம் புகட்டுகிற நம்பிக்கையூட்டும் பாடம் என்ன?

4 யெகோவாவுக்கு முழுமனதோடு சேவை செய்ய நீங்கள் எடுக்கும் முயற்சியை மலையேறுவதற்கு எடுக்கும் முயற்சியுடன் ஒப்பிடலாம். நீங்கள் யெகோவாவை நேசிப்பதால், ஏற்கெனவே கடினமாக முயன்று மலை ஏறிக்கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லலாம். ஆனால், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே நெருக்கம் இல்லாதிருந்தால், நீங்கள் இருவரும் மலையின் எதிரெதிர் திசையிலிருந்து ஏறிக்கொண்டிருப்பீர்கள். என்றாலும், நீங்கள் தொடர்ந்து மலையேறும்போது என்ன நடக்கும்? ஆரம்பத்தில் உங்கள் இருவருக்குமிடையே அதிக இடைவெளி இருந்தாலும், கடவுளிடம் நெருங்கி வர வர, அதாவது உயர ஏற ஏற, நீங்களும் உங்களுடைய துணையும் அதிகமதிகமாய் நெருங்கி வருவீர்கள். சொல்லப்போனால், கடவுளிடம் நெருங்கிவருவதே உங்கள் துணையுடன் நெருங்கி வருவதற்குச் சிறந்த வழி. அப்படியானால், நடைமுறையில் இதை எப்படிச் செய்யலாம்?

பைபிள் அறிவுக்கு இசைவாக வாழும்போது, திருமண பந்தம் பலப்படும்

5. (அ) யெகோவாவிடமும் துணையிடமும் நெருங்கிவருவதற்கு ஒரு வழி என்ன? (ஆ) திருமணத்தை யெகோவா எப்படிக் கருதுகிறார்?

5 திருமணம் சம்பந்தமாக கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் அறிவுரைகளைப் பின்பற்றுவதே யெகோவாவிடமும் துணையிடமும் நெருங்கிவருவதற்கு ஒரு முக்கியமான வழி. (சங்கீதம் 25:4; ஏசாயா 48:17, 18) “திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் சொல்வதைக் கவனியுங்கள். (எபிரெயர் 13:4) ‘மதிப்பது’ என்றால், ஒன்றை மிக உயர்வாக, அருமையானதாகக் கருதுவதாகும். அப்படித்தான் திருமணத்தை யெகோவா கருதுகிறார்; ஆம், அதை அவர் மிக உயர்வாக, அருமையானதாகக் கருதுகிறார்.

யெகோவாமீது உள்ளப்பூர்வ அன்பு அவசியம்

6. திருமணத்தைப் பற்றி பவுல் கொடுத்த அறிவுரையின் சூழமைவு எதைக் காட்டுகிறது, இதை மனதில் வைத்திருப்பது ஏன் முக்கியம்?

6 திருமண பந்தம் அருமையானது மட்டுமல்ல புனிதமானதும்கூட என்பது கடவுளின் ஊழியர்களாகிய உங்களுக்குத் தெரியும். திருமணம் என்பது யெகோவா செய்த ஏற்பாடு. (மத்தேயு 19:4-6-ஐ வாசியுங்கள்.) தற்போது உங்கள் திருமண வாழ்வில் பிரச்சினைகளை எதிர்ப்படுகிறீர்கள் என்றால், திருமண பந்தம் மதிப்புமிக்கது என அறிந்திருப்பது மட்டுமே ஒருவரையொருவர் அன்புடனும் மதிப்புடனும் நடத்த உதவாது. அப்படியானால், எது உதவும்? மதிப்பு காட்டும் விஷயத்தைப் பற்றி பவுல் எழுதிய விதத்தைக் கவனியுங்கள். “திருமண ஏற்பாடு மதிப்புள்ளது” என அவர் சொல்லவில்லை, மாறாக ‘திருமண ஏற்பாட்டை மதியுங்கள்’ என்றே சொன்னார். பவுல் அதை ஒரு தகவலாகச் சொல்லவில்லை, கட்டளையாகக் கொடுத்தார். * இதை மனதில் வைத்திருந்தால், உங்கள் துணையை மீண்டும் மதிக்க தூண்டப்படுவீர்கள். ஏன்?

7. (அ) பைபிளிலுள்ள எந்தக் கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிகிறோம், ஏன்? (ஆ) கீழ்ப்படியும்போது என்ன பலன்கள் கிடைக்கின்றன?

7 பைபிளிலுள்ள மற்ற கட்டளைகளை, அதாவது சீஷராக்குவது, வழிபாட்டுக்காக ஒன்றுகூடி வருவது போன்ற கட்டளைகளை, நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள் என ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். (மத்தேயு 28:19; எபிரெயர் 10:24, 25) உண்மைதான், இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது சில சமயங்களில் சவாலாக இருக்கலாம். நீங்கள் சொல்லும் செய்தியை மக்கள் அலட்சியம் செய்யலாம்; நாளெல்லாம் வேலை செய்து களைத்துப்போவதால், கூட்டங்களுக்குப் போவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். என்றாலும், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிப்பதையோ கூட்டங்களுக்குச் செல்வதையோ நீங்கள் நிறுத்திவிடுவது கிடையாது. அவற்றைச் செய்வதிலிருந்து யாரும் உங்களை நிறுத்த முடியாது, சாத்தானாலும் முடியாது. ஏன்? யெகோவாவை நீங்கள் முழுமனதோடு நேசிப்பதால் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறீர்கள். (1 யோவான் 5:3) அதனால் உங்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கின்றன? ஊழியத்திற்கும் கூட்டங்களுக்கும் நீங்கள் போகும்போது உங்களுக்கு மனசமாதானமும் மனமகிழ்ச்சியும் கிடைக்கின்றன; ஏனென்றால், அது கடவுளுடைய விருப்பம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அதோடு, நீங்கள் பெறும் சமாதானமும் மகிழ்ச்சியும் உங்களுக்குப் புதுப்பெலனையும் அளிக்கிறது. (நெகேமியா 8:10) இதிலுள்ள பாடம் என்ன?

8, 9. (அ) திருமண பந்தத்தை மதிக்க வேண்டுமென்ற கட்டளைக்குக் கீழ்ப்படிய எது நம்மைத் தூண்டும், ஏன்? (ஆ) இப்போது நாம் என்ன இரண்டு காரியங்களைச் சிந்திப்போம்?

8 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிப்பது, கூட்டங்களுக்குச் செல்வது போன்ற கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது நமக்குச் சிரமமாக இருந்தாலும் கடவுள் மீதுள்ள ஆழமான அன்பு நம்மைக் கீழ்ப்படியத் தூண்டுகிறது; அதுபோல, “திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்” என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிவது நமக்குச் சிரமமாக இருந்தாலும் யெகோவாவின் மீதுள்ள அன்பு அதைச் செய்ய நம்மைத் தூண்ட வேண்டும். (எபிரெயர் 13:4; சங்கீதம் 18:29; பிரசங்கி 5:4) ஊழியத்திற்குச் செல்லவும் கூட்டங்களில் கலந்துகொள்ளவும் நீங்கள் எடுக்கும் முயற்சியைப் பார்த்து யெகோவா உங்களை அபரிமிதமாய் ஆசீர்வதிக்கிறார். அதேபோல, உங்கள் திருமண பந்தத்தை மதிக்க நீங்கள் முயற்சி எடுக்கும்போது அதைப் பார்த்து யெகோவா உங்களை ஆசீர்வதிப்பார்.—1 தெசலோனிக்கேயர் 1:3; எபிரெயர் 6:10.

9 அப்படியானால், உங்கள் திருமண பந்தத்தை மதிக்கிறீர்களென எப்படிக் காட்டலாம்? முதலாவதாக, திருமண பந்தத்தைச் சிதைக்கும் பேச்சையும் நடத்தையையும் தவிர்க்க வேண்டும்; இரண்டாவதாக, அதைப் பலப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

திருமண பந்தத்தை அவமதிக்கும் பேச்சையும் நடத்தையையும் தவிர்த்தல்

10, 11. (அ) எப்படிப்பட்ட பேச்சு திருமண பந்தத்தை அவமதிக்கிறது? (ஆ) துணையிடம் கேட்க வேண்டிய கேள்வி என்ன?

10 “சகித்து வாழ பலம் கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்கிறேன்” என்று கொஞ்ச காலத்திற்கு முன்பு ஒரு கிறிஸ்தவ மனைவி சொன்னார். எதைச் சகிப்பதற்கு? “என் கணவர் வார்த்தைகளால் என் மனதை நோகடிக்கிறார். என் உடம்பில் ஒரு பொட்டுக் காயமில்லாமல் இருக்கலாம், ஆனால், ‘நீ எதுக்குமே லாயக்கில்லை!’ ‘உன்னால் எப்போதுமே எனக்குத் தலைவலிதான்!’ என்றெல்லாம் அவர் என்னை சதா திட்டும்போது என் இதயம் ரணமாகிறது” என்று அவர் குமுறினார். இந்தப் பெண்ணின் குமுறல் ஒரு முக்கியமான பிரச்சினையை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது—அதுதான் புண்படுத்தும் பேச்சு.

11 கிறிஸ்தவ கணவனோ மனைவியோ ஒருவரையொருவர் சொல்லால் தாக்குவது வருத்தமான விஷயம். அதனால் உணர்ச்சி ரீதியில் உண்டாகும் காயம் சீக்கிரத்தில் ஆறாது. தம்பதிகள் ஒருவர்மீது ஒருவர் சொல் அம்பு எய்தால், திருமண பந்தத்தை அவர்கள் மதிக்கிறார்கள் என சொல்ல முடியாது. இந்த விஷயத்தில் உங்கள் மணவாழ்வு எப்படி? “நான் பேசுகிற விதம் உன் மனதைக் கஷ்டப்படுத்துகிறதா?” என உங்கள் மனைவியிடம் தாழ்மையாகக் கேட்பதே அதைத் தெரிந்துகொள்ள ஒரு வழி. * உங்கள் பேச்சு அடிக்கடி தன் மனதைக் காயப்படுத்துவதாக மனைவி சொன்னால், உங்கள் சுபாவத்தை மாற்றிக்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.—கலாத்தியர் 5:15; எபேசியர் 4:31-ஐ வாசியுங்கள்.

12. ஒருவருடைய வழிபாடு கடவுளுடைய பார்வையில் எப்போது வீணாக இருக்கும்?

12 உங்கள் துணையிடம் நீங்கள் பேசும் விதம் யெகோவாவுடன் உங்களுக்குள்ள பந்தத்தைப் பாதிக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். “கடவுளை வழிபடுவதாக நினைத்துக்கொண்டிருக்கிற ஒருவன் தன் நாக்கை அடக்காமல் தன் இதயத்தை ஏமாற்றிக்கொண்டிருந்தால், அவனுடைய வழிபாடு வீணானதாக இருக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:26) உங்கள் பேச்சுக்கும் வழிபாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் கடவுளுக்குச் சேவை செய்வதால் அவர் வீட்டில் எப்படி நடந்துகொண்டாலும் பரவாயில்லை என்ற கருத்தை பைபிள் ஆதரிப்பது கிடையாது. உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். ஏனென்றால், இது சாதாரண விஷயமல்ல. (1 பேதுரு 3:7-ஐ வாசியுங்கள்.) உங்களுக்குத் திறமையும் பக்திவைராக்கியமும் இருக்கலாம்; ஆனால், குத்தலான பேச்சால் உங்கள் துணையை வேண்டுமென்றே புண்படுத்தினால், திருமண ஏற்பாட்டை அவமதிக்கிறீர்கள், உங்கள் வழிபாடு யெகோவாவின் பார்வையில் வீணாக இருக்கும்.

13. ஒருவர் தனது துணையின் மனதை எப்படிப் புண்படுத்திவிடலாம்?

13 துணையின் மனதை மறைமுகமான விதத்திலும் புண்படுத்தாதிருக்க தம்பதியர் கவனமாயிருக்க வேண்டும். இது சம்பந்தமாக இரண்டு உதாரணங்களைக் கவனியுங்கள்: மணமான சகோதரரிடம் ஆலோசனை கேட்டு ஓர் ஒற்றைத் தாய் அடிக்கடி அவருக்கு போன் செய்கிறாள், அவர்கள் மணிக்கணக்காக பேசுகிறார்கள். மணமாகாத சகோதரர் ஒருவர் மணமான ஒரு சகோதரியுடன் சேர்ந்து ஒவ்வொரு வாரமும் அதிக நேரம் ஊழியம் செய்கிறார். திருமணமான இந்த நபர்களின் மனதில் எந்தத் தப்பான எண்ணமும் இல்லாதிருக்கலாம்; என்றாலும், இவர்களுடைய செயல் இவர்களது கணவனையோ மனைவியையோ எப்படிப் பாதிக்கும்? “என் வீட்டுக்காரர் எப்போது பார்த்தாலும் வேறொரு பெண்ணுடன் நேரம் செலவிடும்போது, அவள்மீது ரொம்ப அக்கறை காட்டும்போது, என்னால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடிவதில்லை. என்னிடம் ஏதோ குறை இருக்கிற மாதிரி நினைக்க வைக்கிறது” என்று ஒரு மனைவி பொருமினாள்.

14. (அ) திருமணமானவர்கள் மிக முக்கியமாக யாருக்குக் கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஆதியாகமம் 2:24 எப்படி எடுத்துக்காட்டுகிறது? (ஆ) என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்?

14 ஆம், இந்தப் பெண்ணும் இதே சூழ்நிலையில் இருக்கும் மற்றவர்களும் அனுபவிக்கிற மனவேதனையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. “மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்” என்று கடவுள் தந்த முக்கிய கட்டளையை அவர்களது துணைகள் அசட்டை செய்திருக்கிறார்கள். (ஆதியாகமம் 2:24) உண்மைதான், மணமான பின்பும் அநேகர் தங்கள் பெற்றோருக்கு மதிப்புக் காட்டுகிறார்கள்; ஆனால், மிக முக்கியமாக அவர்கள் தங்களுடைய துணைக்கு கவனம் செலுத்த வேண்டும்—இதுவே கடவுளின் ஏற்பாடு. அதுபோல, கிறிஸ்தவர்கள் சக விசுவாசிகளை அதிகமாய் நேசித்தாலும் முதலாவது தங்கள் துணைக்குத்தான் கவனம் செலுத்த வேண்டும். எனவே, திருமணமான கிறிஸ்தவர்கள் சக விசுவாசிகளுடன், குறிப்பாக எதிர்பாலாருடன் அளவுக்குமீறி நேரம் செலவிடும்போது அல்லது நெருங்கிப் பழகும்போது, அவர்களுடைய திருமண உறவில் விரிசல் ஏற்படுகிறது. உங்கள் மண வாழ்விலும் பிரச்சினைகள் வருவதற்கு இதுதான் காரணமா? அப்படியென்றால், ‘நியாயமாக என் துணைக்கு காட்ட வேண்டிய பாசத்தையும் நேசத்தையும் காட்டுகிறேனா, கொடுக்க வேண்டிய நேரத்தையும் கவனத்தையும் கொடுக்கிறேனா?’ என்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

15. மத்தேயு 5:28-ன்படி, மணமான கிறிஸ்தவர்கள் எதிர்பாலாரிடம் அளவுக்குமீறி அக்கறை காட்டுவதை ஏன் தவிர்க்க வேண்டும்?

15 அதுமட்டுமல்ல, திருமணமான ஒரு கிறிஸ்தவர் எதிர்பாலார் ஒருவரிடம் அளவுக்குமீறி அக்கறை காட்டுகிறார் என்றால், அவர் அநாவசியமாக ஆபத்தை விலைக்கு வாங்குகிறார். மணமான கிறிஸ்தவர்கள் சிலர், எதிர்பாலாரோடு நெருங்கிப் பழகுவதோடு, நாளடைவில் அவர்களைக் காதலிக்கவும் ஆரம்பிக்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். (மத்தேயு 5:28) இப்படி மனதளவில் இணைந்துவிடும் இவர்கள் பின்னர் உடலளவிலும் இணைந்து திருமண ஏற்பாட்டை அவமதித்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக அப்போஸ்தலன் பவுல் சொல்வதைக் கவனியுங்கள்.

“தாம்பத்திய உறவின் புனிதத்தைக் கெடுக்காதீர்கள்”

16. திருமணத்தைக் குறித்து பவுல் என்ன கட்டளை கொடுத்தார்?

16 “திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்” என்ற அறிவுரையை பவுல் கொடுத்த பிறகு, இந்த எச்சரிப்பையும் கொடுத்தார்: “தாம்பத்திய உறவின் புனிதத்தைக் கெடுக்காதீர்கள்; ஏனென்றால், பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்களையும், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் கடவுள் நியாயந்தீர்ப்பார்.” (எபிரெயர் 13:4) திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் மட்டுமே ‘தாம்பத்திய உறவை’ அனுபவிக்கையில் அதன் ‘புனிதம் கெடாமல்’ இருக்கும். எனவே, “இளவயதில் கைப்பிடித்த உன் மனைவியோடு சந்தோஷமாக இரு” என்ற தெய்வீக கட்டளைக்குக் கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிகிறார்கள்.—நீதிமொழிகள் 5:18.

17. (அ) வேறொருவருடன் உறவு வைத்துக்கொள்வதைப் பற்றிய உலகின் கருத்து கிறிஸ்தவர்கள்மீது ஏன் செல்வாக்கு செலுத்தக்கூடாது? (ஆ) யோபுவின் முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்?

17 தனது துணையல்லாத ஒருவரோடு உடலுறவுகொள்ளும் ஒருவர் ஒழுக்கம் சம்பந்தமாக கடவுள் கொடுத்திருக்கும் சட்டங்களை அவமதிக்கிறார். வேறொருவருடன் “உறவு” வைத்துக்கொள்வதை இன்று பலர் சகஜமாகக் கருதுகிறார்கள் என்பது உண்மைதான். என்றாலும், மனிதர்களின் கருத்து தங்கள்மீது செல்வாக்கு செலுத்த கிறிஸ்தவர்கள் அனுமதிக்கக்கூடாது. “பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்களையும், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் கடவுள் நியாயந்தீர்ப்பார்,” மனிதர் அல்ல என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (எபிரெயர் 10:31; 12:29) எனவே, உண்மைக் கிறிஸ்தவர்கள் இந்த விஷயத்தில் யெகோவாவின் கருத்தையே ஏற்றுக்கொள்கிறார்கள். (ரோமர் 12:9-ஐ வாசியுங்கள்.) “என் கண்களை அலையவிடக் கூடாது என்று தீர்மானம் செய்திருக்கிறேன்” என்று யோபு சொன்னதை நினைவுபடுத்திப் பாருங்கள். (யோபு 31:1) ஆம், மணத்துணைக்குத் துரோகம் செய்வதற்கு வழிநடத்தும் பாதையில் ஓர் அடிகூட எடுத்து வைக்காமல் இருக்க உண்மைக் கிறிஸ்தவர்கள் கவனமாய் இருக்கிறார்கள்; அவர்கள் தங்கள் கண்களை அலைபாய விடுவதில்லை, தங்கள் துணையல்லாத ஒருவர்மீது மோகப் பார்வை வீசுவதில்லை.—பக்கங்கள் 251-253-ல் உள்ள பிற்சேர்க்கையைக் காண்க.

18. (அ) மணத்துணைக்குத் துரோகம் செய்வதை யெகோவா எப்படிக் கருதுகிறார்? (ஆ) மணத்துணைக்குத் துரோகம் செய்வதற்கும் சிலை வழிபாட்டுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

18 மணத்துணைக்குத் துரோகம் செய்வதை யெகோவா எப்படிப்பட்ட பாவமாகக் கருதுகிறார்? இந்த விஷயத்தில் யெகோவாவின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள மோசேயின் திருச்சட்டம் நமக்கு உதவுகிறது. மணத்துணைக்குத் துரோகம், சிலை வழிபாடு போன்ற குற்றங்களுக்குப் பூர்வ இஸ்ரவேலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. (லேவியராகமம் 20:2, 10) இந்த இரண்டுக்கும் என்ன ஒற்றுமை? ஓர் இஸ்ரவேலன் சிலை வழிபாட்டில் ஈடுபடும்போது, யெகோவாவுடன் உள்ள ஒப்பந்தத்தை முறித்துக்கொள்கிறான். அதேபோல், ஓர் இஸ்ரவேலன் தன் துணைக்குத் துரோகம் செய்யும்போது தன் துணையுடன் உள்ள ஒப்பந்தத்தை முறித்துக்கொள்கிறான். இருவருடைய செயலும் வஞ்சகமானது. (யாத்திராகமம் 19:5, 6; உபாகமம் 5:9; மல்கியா 2:14-ஐ வாசியுங்கள்.) எனவே, நம்பிக்கைக்குப் பாத்திரமான யெகோவாவுக்கு முன்பு இருவருமே குற்றவாளிகள்.—சங்கீதம் 33:4.

19. மணத்துணைக்குத் துரோகம் செய்யாதிருக்க ஒருவருக்கு எது உறுதி அளிக்கும், ஏன்?

19 கிறிஸ்தவர்கள் இன்று திருச்சட்டத்தின்கீழ் இல்லைதான். என்றாலும், மணத்துணைக்குத் துரோகம் செய்வதைப் பூர்வ இஸ்ரவேலர் பெரும் பாவமாகக் கருதினார்கள் என்பதை அவர்கள் மனதில் வைத்திருக்க வேண்டும்; அப்போதுதான், அந்தப் பெரும் பாவத்தைச் செய்யாதிருக்க அவர்கள் உறுதியுடன் இருக்க முடியும். ஏன் அப்படிச் சொல்கிறோம்? இதைச் சிந்தித்துப் பாருங்கள்: நீங்கள் ஒரு கோயிலுக்குள் நுழைந்து, சிலைக்கு முன்பு மண்டியிட்டு, பிரார்த்தனை செய்வீர்களா? ‘ஒருநாளும் அப்படிச் செய்ய மாட்டேன்’ என்று சொல்வீர்கள். ஒருவேளை கோடிகோடியாகப் பணம் தருவதாக யாராவது ஆசைகாட்டினால்? அப்போதும் ‘செய்ய மாட்டேன்’ என்றுதான் சொல்வீர்கள். சொல்லப்போனால், சிலையை வழிபட்டு யெகோவாவுக்குத் துரோகம் செய்கிற எண்ணமே ஒரு கிறிஸ்தவருக்கு அருவருப்பாக இருக்கிறது. அதேபோல், வேறொருவரோடு உடலுறவு கொள்வதன் மூலம் யெகோவாவுக்கும் துணைக்கும் துரோகம் செய்யும் எண்ணமே ஒரு கிறிஸ்தவருக்கு அருவருப்பாக இருக்க வேண்டும்—அப்படிப்பட்ட பாவம் செய்வதற்கு எது அவரைத் தூண்டினாலும் சரி. (சங்கீதம் 51:1, 4; கொலோசெயர் 3:5) சாத்தானுக்குச் சந்தோஷத்தையும், யெகோவாவுக்கும் புனிதமான திருமண ஏற்பாட்டுக்கும் அவமரியாதையையும் கொண்டுவருகிற செயலை ஒருபோதும் செய்யாதிருப்போமாக.

திருமண பந்தத்தைப் பலப்படுத்த...

20. சிலருடைய மணவாழ்க்கை எப்படி இருக்கிறது? விளக்கவும்.

20 திருமண பந்தத்தை அவமதிக்கும் நடத்தையைத் தவிர்ப்பதோடு, உங்கள் துணையின் மீது மீண்டும் மதிப்பை வளர்த்துக்கொள்ள நீங்கள் என்ன படிகள் எடுக்கலாம்? பதில் கண்டுபிடிக்க, திருமண ஏற்பாட்டை ஒரு வீட்டுக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். கணவனும் மனைவியும் பேசும் கனிவான, கண்ணியமான வார்த்தைகளையும், அவர்கள் செய்கிற முன்யோசனைமிக்க செயல்களையும் அந்த வீட்டுக்கு அழகு சேர்க்கும் அலங்காரப் பொருள்களாக நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இருவரும் அன்னியோன்னியமாக இருந்தால், உங்கள் மணவாழ்வு அலங்கரிக்கப்பட்ட வீட்டைப்போல ஜொலிக்கும். ஆனால், உங்களிடையே நெருக்கம் குறையும்போது இந்த அலங்காரப் பொருள்களும் படிப்படியாக மறைந்துபோகும், இதனால் உங்கள் மணவாழ்வு அலங்கரிக்கப்படாத வீட்டைப்போல களையிழந்து காணப்படும். “திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்” என்ற கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படிய விரும்புவதால், களையிழந்த உங்கள் மணவாழ்வு மீண்டும் களைகட்ட தேவையான நடவடிக்கை எடுப்பீர்கள். அருமையானதாக, மதிப்புமிக்கதாகக் கருதப்படும் மணவாழ்வை சரிப்படுத்த முயற்சி எடுப்பது தகுந்ததே. அதை நீங்கள் எப்படிச் செய்யலாம்? “வீடு ஞானத்தால் கட்டப்படும். பகுத்தறிவால் அது நிலைநிறுத்தப்படும். அறிவால் அதன் அறைகள் நிரப்பப்படும். எல்லாவித அருமையான பொக்கிஷங்களும் அவற்றில் குவித்து வைக்கப்படும்” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (நீதிமொழிகள் 24:3, 4) இந்த வசனத்தை எப்படி இல்லற வாழ்வில் பொருத்தலாம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

21. திருமண பந்தத்தை எப்படிப் படிப்படியாகப் பலப்படுத்தலாம்? (பக்கம் 149-ல் உள்ள பெட்டியையும் காண்க.)

21 ஒரு சந்தோஷமான வீட்டை நிரப்புகிற அருமையான பொக்கிஷங்கள் யாவை? தேவ பயம், உண்மையான அன்பு, உறுதியான விசுவாசம் போன்ற நல்ல பண்புகளே. (நீதிமொழிகள் 15:16, 17; 1 பேதுரு 1:7) இவையே திருமண பந்தத்தைப் பலப்படுத்தும். ஆனால், அருமையான பொக்கிஷங்கள் எப்படி அறைகளில் நிரப்பப்படும் என்று நீதிமொழிகள் 24:3, 4 சொல்கிறது? “அறிவால்” நிரப்பப்படும் என்று சொல்கிறது. ஆம், பைபிள் அறிவுரையை மக்கள் தங்களுடைய வாழ்வில் கடைப்பிடித்தால், அது அவர்களுடைய சிந்தனையை அடியோடு மாற்றும், ஒருவர்மீது ஒருவர் மீண்டும் அன்பைப் பொழியத் தூண்டும். (ரோமர் 12:2; பிலிப்பியர் 1:9) எனவே, நீங்களும் உங்கள் துணையும் நேரம் ஒதுக்கி மணவாழ்க்கை சம்பந்தமாக பைபிள் சொல்வதை தினவசனத்திலிருந்தோ காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகையிலிருந்தோ சிந்தித்துப் பார்க்கும்போதெல்லாம், திருமணம் எனும் வீட்டை அழகுபடுத்தும் ஓர் அலங்காரப் பொருளை ஆராய்ந்து பார்க்கிறீர்கள் என்றே சொல்ல வேண்டும். நீங்கள் ஆராய்ந்து பார்த்த அந்த அறிவுரையை யெகோவா மீதுள்ள அன்பினால் தூண்டப்பட்டு பின்பற்றினால் அந்த அலங்காரப் பொருளை உங்கள் வீட்டின் அறைகளுக்குள் கொண்டு வருகிறீர்கள் என்று சொல்லலாம். இதன் விளைவாக, உங்கள் மணவாழ்வு படிப்படியாக மீண்டும் ஜொலிக்க ஆரம்பிக்கலாம்.

22. திருமணத்தைப் பலப்படுத்த நம் பங்கில் முயற்சி எடுக்கும்போது என்ன திருப்தி கிடைக்கும்?

22 உண்மைதான், இந்த அலங்காரப் பொருள்களை ஒவ்வொன்றாக அதனதன் இடத்தில் மீண்டும் வைக்க கணிசமான நேரமும் முயற்சியும் தேவைப்படலாம். இருந்தாலும், உங்கள் பங்கைச் செய்வதற்கு நீங்கள் முயற்சி எடுத்தால், “ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்” என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்ற திருப்தியைப் பெறுவீர்கள். (ரோமர் 12:10; சங்கீதம் 147:11) அதைவிட முக்கியமாக, உங்கள் திருமண பந்தத்தை மதிக்க நீங்கள் ஊக்கமாய் முயற்சி செய்யும்போது கடவுளுடைய அன்பில் நிலைத்திருப்பீர்கள்.

^ பாரா. 6 பவுல் பல கட்டளைகளைக் கொடுத்துக்கொண்டே வந்தபோதுதான் திருமணத்தைப் பற்றிய இந்தக் கட்டளையையும் கொடுத்தார் எனச் சூழமைவு காட்டுகிறது.—எபிரெயர் 13:1-5.

^ பாரா. 11 இக்கட்டுரையில் எளிமைக்காக ஆண்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும், இதிலுள்ள நியமங்கள் பெண்களுக்கும் பொருந்தும்.