Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 12

“பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே” பேசுங்கள்

“பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே” பேசுங்கள்

“கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வர வேண்டாம். . . . பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்.”—எபேசியர் 4:29.

1-3. (அ) யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் ஒரு பரிசு எது, அதைச் சிலர் எப்படித் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்? (ஆ) கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க பேசும் திறனை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

உங்கள் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரிய ஒருவருக்கு ஒரு பரிசு தந்திருக்கிறீர்கள். அதை அவர் கண்டபடி பயன்படுத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உதாரணமாக, அவருக்கு ஒரு காரை பரிசாகக் கொடுத்திருக்கிறீர்கள்; அதை அவர் கன்னாபின்னாவென ஓட்டுகிறார், ஆட்கள்மீது மோதி அவர்களைக் காயப்படுத்துகிறார் என்றெல்லாம் கேள்விப்பட்டால் உங்களுக்கு வருத்தமாக இருக்காதா?

2 தெளிவாகவும் புரியும்படியும் பேசும் அருமையான திறமையை யெகோவா நமக்குப் பரிசாகத் தந்திருக்கிறார்; “நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், மிகச் சிறந்த அன்பளிப்புகள் ஒவ்வொன்றும்” அவரிடமிருந்தே வருகின்றன. (யாக்கோபு 1:17) மிருகங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுகிற இந்தப் பரிசு, நம்முடைய எண்ணங்களை மட்டுமல்ல, நம் உணர்ச்சிகளையும் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த உதவுகிறது. உங்கள் நேசத்துக்குரியவர் அந்த காரை தவறாகப் பயன்படுத்தியது போலவே மனிதர்கள் இந்தப் பரிசைத் தவறாகப் பயன்படுத்திவிடலாம். பேசும் திறனை அவர்கள் தவறாகப் பயன்படுத்தி, மற்றவர்களுடைய மனதைக் காயப்படுத்தும்போது யெகோவாவுக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கும்!

3 யெகோவாவுடைய அன்பில் நிலைத்திருப்பதற்கு, பேசும் திறன் எனும் பரிசை அவருடைய நோக்கத்திற்கு இசைவாக பயன்படுத்த வேண்டும். எப்படிப்பட்ட பேச்சை அவர் விரும்புகிறார் என்பதைக் குறித்து நமக்குத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வர வேண்டாம்; கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமாய் இருப்பதற்காக, சூழ்நிலைக்கு ஏற்றபடி, அவர்களைப் பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (எபேசியர் 4:29) நாம் பேசும் விதத்தைக் குறித்து ஏன் கவனமாக இருக்க வேண்டும், எப்படிப்பட்ட பேச்சை நாம் தவிர்க்க வேண்டும், மற்றவர்களைப் ‘பலப்படுத்தும்’ விதமாக எப்படிப் பேசுவது என்ற கேள்விகளை இப்போது சிந்திக்கலாம்.

பேசும் விதத்தைக் குறித்து ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

4, 5. வார்த்தைகளுக்கு இருக்கும் வலிமையை பைபிளிலுள்ள சில நீதிமொழிகள் எப்படி விவரிக்கின்றன?

4 நாம் பேசும் விதத்தைக் குறித்து ஏன் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு முதல் காரணம்: வார்த்தைகளுக்கு அதிக வலிமை இருக்கிறது. “சாந்தமான நாவு வாழ்வளிக்கும் மரம்போல் இருக்கிறது. ஆனால், பொய்புரட்டு மனதை நொறுக்கிவிடுகிறது” என்று நீதிமொழிகள் 15:4 சொல்கிறது. வெயிலில் வாடுகிற மரத்திற்குத் தண்ணீர் புத்துயிர் அளிப்பது போல், இனிமையான பேச்சு அதைக் கேட்பவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். நெறிபிறழ்ந்த நாவிலிருந்து பிறக்கும் வஞ்சக வார்த்தைகளோ பிறருடைய இதயத்தைச் சுக்குநூறாக்கிவிடும். சொல்லப்போனால், நாம் பேசும் வார்த்தைகளுக்குக் காயப்படுத்தும் சக்தியும் உண்டு, காயத்தை ஆற்றும் சக்தியும் உண்டு.—நீதிமொழிகள் 18:21.

5 வார்த்தைகளுக்கு இருக்கும் வலிமையைக் குறித்து மற்றொரு நீதிமொழி தத்ரூபமாய் விவரிக்கிறது: “யோசிக்காமல் பேசுவது வாள் போலக் குத்தும்.” (நீதிமொழிகள் 12:18) யோசிக்காமல் படபடவென பேசப்படும் வார்த்தைகள் ஆழமான காயங்களை ஏற்படுத்தி உறவுகளுக்கு உலை வைத்துவிடும். வார்த்தைகள் எப்போதாவது உங்களுடைய இதயத்தை வாள்போல் ஊடுருவியிருக்கின்றனவா? அதே நீதிமொழி “ஞானமுள்ளவனின் நாவு காயத்தை ஆற்றும்” என்று சொல்கிறது. தெய்வீக ஞானமுள்ளவர் யோசித்துப் பேசும் வார்த்தைகள் நெஞ்சுக்குப் பால்வார்க்கும், உறவுகளுக்கு உரம்சேர்க்கும். அன்பான வார்த்தைகளின் ஆற்றும் வலிமையை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? (நீதிமொழிகள் 16:24-ஐ வாசியுங்கள்.) வார்த்தைகளுக்கு அதிக வலிமை இருப்பதை நாம் அறிந்திருப்பதால், மற்றவர்களுடைய மனதைக் காயப்படுத்தும் விதமாகப் பேசாமல் மற்றவர்களுடைய மனக்காயத்தை ஆற்றும் விதமாக பேசவே விரும்புகிறோம்.

சாந்தமான பேச்சு மனதுக்கு இதமளிக்கிறது

6. நாவை அடக்குவது ஏன் பெரும் போராட்டமாக இருக்கிறது?

6 நாம் என்னதான் முயற்சி செய்தாலும் நம் நாவை முழுமையாக அடக்க முடியாது. நாம் பேசும் விதத்தைக் குறித்து ஏன் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இரண்டாம் காரணம்: பாவ இயல்பு நம் நாவைத் தவறாகப் பயன்படுத்த தூண்டுகிறது. நம் இதயத்தில் இருப்பதுதான் வார்த்தைகளாக வெளிவருகின்றன; “மனுஷர்களுடைய உள்ளம் மோசமாக இருக்கிறது.” (ஆதியாகமம் 8:21; லூக்கா 6:45) எனவே, நம் நாவைக் கட்டுப்படுத்துவது பெரும் போராட்டமாக இருக்கிறது. (யாக்கோபு 3:2-4-ஐ வாசியுங்கள்.) நாவை நம்மால் முழுமையாக அடக்க முடியாவிட்டாலும் அதை நல்ல விதத்தில் பயன்படுத்த முயற்சி செய்ய முடியும். எதிர்நீச்சல் போடும் ஒருவர் நீரோட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவது போல், நாவைத் தவறாகப் பயன்படுத்தத் தூண்டும் பாவ இயல்பை எதிர்த்து நாம் தொடர்ந்து போராட வேண்டும்.

7, 8. நாம் பேசும் விதத்தைக் கடவுள் எந்தளவு முக்கியமாய்க் கருதுகிறார்?

7 நாம் பேசும் விதத்தைக் குறித்து ஏன் கவனமாயிருக்க வேண்டும் என்பதற்கு மூன்றாம் காரணம்: நாம் பேசும் விதத்தைக் குறித்து யெகோவா நம்மிடம் கணக்குக் கேட்பார். நம் நாவைப் பயன்படுத்தும் விதம் மற்றவர்களோடு நமக்குள்ள பந்தத்தை மட்டுமல்ல, யெகோவாவோடு நமக்குள்ள பந்தத்தையும் பாதிக்கிறது. “கடவுளை வழிபடுவதாக நினைத்துக்கொண்டிருக்கிற ஒருவன் தன் நாக்கை அடக்காமல் தன் இதயத்தை ஏமாற்றிக்கொண்டிருந்தால், அவனுடைய வழிபாடு வீணானதாக இருக்கும்” என்று யாக்கோபு 1:26 சொல்கிறது. முந்தைய அதிகாரத்தில் பார்த்தபடி, நம் பேச்சுக்கும் வழிபாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நம் நாவை அடக்காமல் புண்படுத்துகிற வார்த்தைகளை, விஷம் நிறைந்த வார்த்தைகளைப் பேசினால், கடவுளுக்கு நாம் செய்யும் சேவை அனைத்தும் அவர் பார்வையில் வீணாகவே இருக்கும். சிந்திக்க வேண்டிய விஷயம், அல்லவா?—யாக்கோபு 3:8-10.

8 ஆம், பேசும் திறனைத் தவறாகப் பயன்படுத்தாமலிருக்க நமக்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. மற்றவர்களைப் பலப்படுத்துகிற கண்ணியமான பேச்சைப் பற்றி சிந்திப்பதற்கு முன்பு, உண்மைக் கிறிஸ்தவர்கள் அறவே தவிர்க்க வேண்டிய பேச்சைப் பற்றி சிந்திப்போம்.

மனதை ரணமாக்கும் பேச்சு

9, 10. (அ) இன்றைய மக்களின் அன்றாடப் பேச்சில் எது கலந்திருக்கிறது? (ஆ) நாம் ஏன் ஆபாசப் பேச்சை அறவே தவிர்க்க வேண்டும்? (அடிக்குறிப்பையும் காண்க.)

9 ஆபாசப் பேச்சு. சபித்தல், பழித்தல், ஆபாசம் ஆகியவை இன்றைய மக்களின் அன்றாட பேச்சில் கலந்திருக்கிறது. அநேகர் தங்கள் பேச்சை சுவாரஸ்யமாக்க நினைக்கும்போது அல்லது வாயில் வார்த்தைகள் வராமல் தடுமாறும்போது கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். மக்களைச் சிரிக்க வைப்பதற்காக நகைச்சுவை நடிகர்கள் பெரும்பாலும் தரக்குறைவான, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். என்றாலும், ஆபாசப் பேச்சு வேடிக்கை சமாச்சாரம் அல்ல. ‘ஆபாசப் பேச்சை’ அறவே விட்டுவிடும்படி சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கொலோசெ பட்டணத்திலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் அறிவுரை கொடுத்தார். (கொலோசெயர் 3:8) உண்மைக் கிறிஸ்தவர்கள் மத்தியில் ‘ஆபாசத்தை பற்றிய பேச்சுகூட இருக்கக் கூடாது’ என்று எபேசு சபைக்கு பவுல் எழுதினார்.—எபேசியர் 5:3, 4.

10 ஆபாசப் பேச்சை யெகோவா அருவருக்கிறார். அவரை நேசிப்பவர்களும் அதை அருவருக்கிறார்கள். நாம் யெகோவாவை நேசித்தால் ஆபாசப் பேச்சை அறவே தவிர்ப்போம். பவுல் குறிப்பிட்ட ‘பாவ இயல்புக்குரிய செயல்களின்’ பட்டியலில் ‘அசுத்தமான நடத்தையும்’ உட்பட்டிருப்பதைக் கவனியுங்கள்; ‘அசுத்தமான நடத்தை’ என்பதில் அசுத்தமான பேச்சும் அடங்கும். (கலாத்தியர் 5:19-21) இது சிந்திக்க வேண்டிய விஷயம். ஆபாசமான, கீழ்த்தரமான, தரக்குறைவான பேச்சைத் தவிர்க்கும்படி ஒரு கிறிஸ்தவருக்கு பல தடவை அறிவுரை கொடுத்தும் அவர் திருந்தவில்லை என்றால் சபைநீக்கம் செய்யப்படலாம். *

11, 12. (அ) மற்றவர்களைப் பற்றிய பேச்சு எப்போது தீங்கிழைக்கும் வீண்பேச்சாகிறது? (ஆ) யெகோவாவின் ஊழியர்கள் இல்லாததையும் பொல்லாததையும் பேசுவதை ஏன் தவிர்க்க வேண்டும்?

11 தீங்கிழைக்கும் வீண்பேச்சு, இல்லாததையும் பொல்லாததையும் பேசுதல். பொதுவாக மனிதர்கள் அடுத்தவர்களைப் பற்றி அளவளாவுகிறார்கள். ஆனால், மற்றவர்களைப் பற்றி பேசுவதே தவறா? மற்றவர்களைப் பற்றி ஏதாவது நல்ல விஷயத்தையோ உபயோகமான விஷயத்தையோ பேசினால் அதில் எந்தத் தவறுமில்லை. உதாரணமாக, சமீபத்தில் யார் ஞானஸ்நானம் பெற்றார்கள், ஆன்மீக ரீதியில் யாருக்கெல்லாம் உதவி தேவை என்பதைப் பற்றி பேசுவதில் தவறில்லை. முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்கள் மற்றவர்களுடைய நலனில் அதிக அக்கறை காட்டினார்கள்; சக விசுவாசிகளைப் பற்றிய அவசியமான தகவலைப் பரிமாறிக்கொண்டார்கள். (எபேசியர் 6:21, 22; கொலோசெயர் 4:8, 9) என்றாலும், உண்மைகளைத் திரித்துக் கூறினால் அல்லது அந்தரங்க விஷயங்களை அலசினால் அது தீங்கிழைக்கும் வீண்பேச்சாகிறது. இதைவிட அபாயம் என்னவென்றால், அது மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுவதற்கு வழிநடத்தலாம், அப்படிப்பட்ட பேச்சு பயங்கர கெடுதலை உண்டாக்கிவிடும். இல்லாததையும் பொல்லாததையும் பேசுவது என்றால் “ஒருவர்மீது பொய் குற்றம் சாட்டி . . . அவருடைய நற்பெயரைக் கெடுத்து அவர்மீது களங்கம் கற்பிப்பதாகும்.” உதாரணமாக, இயேசுவின் நற்பெயரைக் கெடுப்பதற்காக பரிசேயர்கள் அவர்மீது அபாண்டமாகப் பழிசுமத்தினார்கள். (மத்தேயு 9:32-34; 12:22-24) இல்லாததையும் பொல்லாததையும் பேசுவது பெரும்பாலும் சண்டை சச்சரவுக்கு வழிவகுக்கிறது.—நீதிமொழிகள் 26:20.

12 பேசும் திறன் எனும் பரிசை ஒருவர் அவதூறு பேசவோ பிரிவினை ஏற்படுத்தவோ பயன்படுத்தினால் அவரை யெகோவா பொறுத்துக்கொள்ள மாட்டார். ‘சகோதரர்களுக்கு இடையே சண்டை சச்சரவுகளை மூட்டிவிடுகிறவர்களை’ அவர் வெறுக்கிறார். (நீதிமொழிகள் 6:16-19) “இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன்” என்பதற்கான கிரேக்க வார்த்தை டையபோலோஸ்; இது சாத்தானுடைய பட்டப்பெயர்களில் ஒன்று. கடவுளுக்கு எதிராக அவன் இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவனாக இருப்பதால் “பிசாசு” என்று அழைக்கப்படுகிறான். (வெளிப்படுத்துதல் 12:9, 10) இப்படிப்பட்ட பேச்சைத் தவிர்க்காவிட்டால் ஒரு கருத்தில் நாமும் பிசாசைப் போலாகிவிடுவோம். இல்லாததையும் பொல்லாததையும் பேசுவது பாவ இயல்புக்குரிய செயல்களான ‘கருத்துவேறுபாடுகளையும்’ ‘பிரிவினைகளையும்’ தூண்டுவதால் கிறிஸ்தவ சபையில் அதற்கு இடமில்லை. (கலாத்தியர் 5:19-21) எனவே, ஒருவரைப் பற்றி உங்கள் காதுக்கு எட்டிய தகவலை மற்றவர்களிடம் சொல்வதற்கு முன்பு உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இது உண்மையா? இதை நான் மற்றவர்களிடம் சொன்னால் அவர்மீது அன்பு காட்டுவதாக இருக்குமா? இந்த விஷயத்தை நான் மற்றவர்களிடம் சொல்லித்தான் ஆகவேண்டுமா?’1 தெசலோனிக்கேயர் 4:11-ஐ வாசியுங்கள்.

13, 14. (அ) பழிப்பேச்சினால் ஒருவர் எப்படிப் பாதிக்கப்படுகிறார்? (ஆ) சபித்துப் பேசுவது என்றால் என்ன, சபித்துப் பேசுகிறவர் எப்படி ஆபத்தைத் தேடிக்கொள்வார்?

13 பழிப்பேச்சு. வார்த்தைகளுக்குக் காயப்படுத்தும் சக்தி இருக்கிறது என்று நாம் ஆரம்பத்தில் சிந்தித்தோம். உண்மைதான், பாவ இயல்பின் காரணமாக சில சமயங்களில் எதையாவது பேசிவிட்டு பின்பு வருத்தப்படுகிறோம். என்றாலும், கிறிஸ்தவ குடும்பத்திலோ சபையிலோ எப்படிப்பட்ட பேச்சையெல்லாம் நாம் அடியோடு தவிர்க்க வேண்டுமென பைபிள் குறிப்பிடுகிறது. “எல்லா விதமான மனக்கசப்பையும், சினத்தையும், கடும் கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும், மற்ற எல்லா விதமான கெட்ட குணத்தையும் உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள்” என்று கிறிஸ்தவர்களுக்கு பவுல் அறிவுரை கொடுத்தார். (எபேசியர் 4:31) ‘பழிப்பேச்சு’ என்ற பதத்தை, மற்ற மொழிபெயர்ப்புகள் “கடுஞ்சொற்கள்,” “அவமதிக்கும் பேச்சு” என்றும் மொழிபெயர்த்துள்ளன. ஒருவரைப் பழித்துப் பேசுவது, அதாவது இழிவுபடுத்தும் பட்டப்பெயரை வைத்து அழைப்பது அல்லது எப்போதும் கடுமையாகக் குறைகூறுவது, அவருடைய தன்மானத்தைப் பாதிக்கும், அவரை லாயக்கற்றவராக உணர செய்யும். இப்படிப்பட்ட பழிப்பேச்சு குறிப்பாக பிள்ளைகளின் மென்மையான இதயத்தை சுக்குநூறாக்கிவிடும்.—கொலோசெயர் 3:21.

14 சபித்துப் பேசுவதை, அதாவது ஒருவரை அவமானப்படுத்துவதற்காக அவரை நிந்திப்பதை, இழிவுபடுத்துவதை, பைபிள் கடுமையாகக் கண்டனம் செய்கிறது. ஒருவர் இப்படி வழக்கமாகப் பேசி வந்தால் அவர் ஆபத்தைத் தேடிக்கொள்வார்; திரும்பத்திரும்ப அறிவுரை கொடுக்கப்பட்டும் அவர் மனம் திருந்தாவிட்டால் சபையிலிருந்து நீக்கப்படுவார். தன் வழிகளை அவர் மாற்றிக்கொள்ளாவிட்டால், புதிய உலகில் வாழும் பாக்கியத்தையும் இழந்துவிடுவார். (1 கொரிந்தியர் 5:11-13; 6:9, 10) எனவே, தரக்குறைவாக, உண்மைக்கு மாறாக, அன்பற்ற விதமாக பேசும் பழக்கமுள்ளவராக நாம் இருந்தால், கடவுளுடைய அன்பில் நிச்சயம் நிலைத்திருக்க முடியாது. இப்படிப்பட்ட பேச்சு ஒருவருடைய மனதை ரணமாக்கும்.

“பலப்படுத்துகிற நல்ல” வார்த்தைகள்

15. “பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளை” பேசுவது என்றால் என்ன?

15 பேசும் திறன் எனும் பரிசைக் கடவுளுடைய நோக்கத்திற்கு இசைவாக எப்படிப் பயன்படுத்தலாம்? “பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே” பேசும்படி பைபிள் நமக்கு அறிவுறுத்துவதை நினைவுபடுத்திப் பாருங்கள். (எபேசியர் 4:29) மற்றவர்களைப் பலப்படுத்துகிற, உற்சாகப்படுத்துகிற, உந்துவிக்கிற வார்த்தைகளை நாம் பேசும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார். அப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசுவதற்கு முன்யோசனை அவசியம். ஏனென்றால், இன்னின்ன வார்த்தைகளைத்தான் நாம் பேச வேண்டுமென்று பைபிள் நமக்குச் சட்டம் போடுவதில்லை, ‘நல்ல வார்த்தைகளின்’ பட்டியலையும் தருவதில்லை. (தீத்து 2:8) “பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளை” பேசுவதற்கு மூன்று எளிய, ஆனால் முக்கியமான அம்சங்களை நாம் மனதில் வைக்க வேண்டும்: பேச்சு தரமானதாக இருக்க வேண்டும், உண்மையானதாக இருக்க வேண்டும், அன்பானதாக இருக்க வேண்டும்; இந்த அம்சங்களை மனதில் வைத்து, பலப்படுத்தும் பேச்சுக்கு சில உதாரணங்களைச் சிந்திப்போம்.—“ என் பேச்சு மற்றவர்களைப் பலப்படுத்துகிறதா?” என்ற பெட்டியைப் பக்கம் 160-ல் காண்க.

16, 17. (அ) நாம் ஏன் மற்றவர்களைப் பாராட்ட வேண்டும்? (ஆ) சபையிலும் குடும்பத்திலும் மற்றவர்களைப் பாராட்ட என்ன வாய்ப்புகள் இருக்கின்றன?

16 மனமார்ந்த பாராட்டு. ஒருவரை அங்கீகரிப்பதும் பாராட்டுவதும் அவசியம் என்பதை யெகோவாவும் இயேசுவும் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். (மத்தேயு 3:17; 25:19-23; யோவான் 1:47) கிறிஸ்தவர்களாகிய நாமும் மற்றவர்களை மனதார பாராட்டிப் பேச வேண்டும். ஏன்? “சரியான சமயத்தில் சொல்லப்படுகிற வார்த்தை எவ்வளவு அருமையானது!” என்று நீதிமொழிகள் 15:23 சொல்கிறது. உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மற்றவர்கள் என்னை மனமாரப் பாராட்டும்போது எனக்கு எப்படி இருக்கிறது? நான் அப்படியே சந்தோஷத்தில் பூரித்துப்போகிறேன், இல்லையா?’ ஆம், ஒருவர் உங்களை மனப்பூர்வமாகப் பாராட்டும்போது, அவர் உங்களை கவனித்திருக்கிறார் என்பதையும், உங்கள்மீது அக்கறை வைத்திருக்கிறார் என்பதையும், உங்கள் முயற்சிக்குப் பலன் கிடைத்திருக்கிறது என்பதையும் புரிந்துகொள்கிறீர்கள். இப்படிப்பட்ட பாராட்டு உங்கள் தன்னம்பிக்கையைக் கூட்டுகிறது, எதிர்காலத்தில் இன்னும் கடுமையாக உழைக்கவும் தூண்டுகிறது. பாராட்டு மழையில் நனையும்போது நீங்கள் பூரித்துப்போவதால் மற்றவர்கள்மீது நீங்களும் பாராட்டைப் பொழியலாமே!—மத்தேயு 7:12-ஐ வாசியுங்கள்.

17 மற்றவர்களிடம் நல்லதையே பார்க்க பழகிக்கொள்ளுங்கள், அவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் சபையில், ஒருவர் அருமையான பேச்சு கொடுப்பதை நீங்கள் கேட்கலாம், ஓர் இளைஞர் ஆன்மீக லட்சியங்களை அடைய உழைப்பதைக் கவனிக்கலாம், ஒரு முதியவர் தள்ளாடும் வயதிலும் கூட்டங்களுக்குத் தவறாமல் வருவதைப் பார்க்கலாம். அப்படிப்பட்டவர்களை நாம் மனமாரப் பாராட்டினால் அவர்கள் மனங்குளிர்வார்கள், ஆன்மீக ரீதியில் பலமடைவார்கள். அதேபோல் குடும்பத்தில், கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் மனப்பூர்வமாகப் பாராட்ட வேண்டும், பரஸ்பரம் நன்றி தெரிவிக்க வேண்டும். (நீதிமொழிகள் 31:10, 28) குறிப்பாக, பிள்ளைகள் செய்வதைக் கவனித்துப் பாராட்டினால் அவர்கள் நன்றாக வளருவார்கள். செடி நன்றாக வளர சூரிய ஒளியும் தண்ணீரும் முக்கியம், அதுபோல் பிள்ளைகள் நன்றாக வளர பாராட்டும் அங்கீகாரமும் முக்கியம். பெற்றோரே, உங்கள் பிள்ளைகள் நல்ல குணங்களைக் காட்டும்போதும் நல்லதை செய்ய முயற்சி எடுக்கும்போதும் அவர்களை வாயாரப் பாராட்டத் தவறாதீர்கள். அப்படிப் பாராட்டும்போது அவர்களது மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் துளிர்க்கும்; நல்ல காரியங்களைச் செய்ய இன்னும் கடினமாய் உழைக்க வேண்டுமென்ற உத்வேகம் பிறக்கும்.

18, 19. சக விசுவாசிகளை உற்சாகப்படுத்தவும் ஆறுதல்படுத்தவும் நாம் ஏன் பெரும் முயற்சி எடுக்க வேண்டும், எப்படி எடுக்க வேண்டும்?

18 உற்சாகப்படுத்துவதும் ஆறுதல்படுத்துவதும். ‘எளியவர்கள்’ மீதும் ‘நெஞ்சம் நொறுங்கியவர்கள்’ மீதும் யெகோவா ஆழ்ந்த அக்கறை வைத்திருக்கிறார். (ஏசாயா 57:15) “எப்போதும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள்,” “மனச்சோர்வால் வாடுகிறவர்களிடம் ஆறுதலாகப் பேசுங்கள்” என்று அவருடைய வார்த்தை நமக்கு அறிவுரை கூறுகிறது. (1 தெசலோனிக்கேயர் 5:11, 14) துக்கத்தில் துவண்டிருப்பவர்களை உற்சாகப்படுத்தவும் ஆறுதல்படுத்தவும் அவர்களைத் தேற்றவும் நாம் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்து கடவுள் சந்தோஷப்படுகிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

மற்றவர்களைப் பலப்படுத்தும் விதத்தில் நாம் பேசும்போது யெகோவா மகிழ்கிறார்

19 அப்படியானால், மனச்சோர்வடைந்த ஒரு கிறிஸ்தவரை நீங்கள் என்ன சொல்லி தேற்றுவீர்கள்? அவருடைய பிரச்சினையை நீங்கள் சரிசெய்ய வேண்டுமென நினைக்காதீர்கள். அநேக சந்தர்ப்பங்களில், சாதாரணமாக நாம் பேசும் வார்த்தைகள்தான் பெரும்பாலும் உதவியாய் இருக்கின்றன. மனமுடைந்திருக்கும் அந்த நபர்மீது உங்களுக்கு அக்கறையும் கரிசனையும் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். அவருடன் சேர்ந்து ஜெபம் செய்யுங்கள்; யெகோவாவும் மற்றவர்களும் அவரை எந்தளவு நேசிக்கிறார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள உதவும்படி மன்றாடுங்கள். (யாக்கோபு 5:14, 15) சபைக்கு அவர் தேவை என்றும், சபையார் அவரை உயர்வாய் மதிக்கிறார்கள் என்றும் அவருக்கு உறுதியளியுங்கள். (1 கொரிந்தியர் 12:12-26) அவர்மீது யெகோவா அக்கறை வைத்திருக்கிறார் என்பதை அவருக்கு உணர்த்த ஊக்கமூட்டும் ஒரு வசனத்தை வாசித்துக் காட்டுங்கள். (சங்கீதம் 34:18; மத்தேயு 10:29-31) மனமொடிந்திருக்கும் நபருடன் நேரம் செலவிட்டு, அவரிடம் “நல்ல வார்த்தை” பேசினால், அதுவும் இதயப்பூர்வமாக பேசினால், அவர் நேசிக்கப்படுகிறார், மதிக்கப்படுகிறார் என நிச்சயம் புரிந்துகொள்வார்.நீதிமொழிகள் 12:25-ஐ வாசியுங்கள்.

20, 21. ஒருவருடைய ஆலோசனை திறம்பட்டதாக இருக்க எந்த அம்சங்கள் உதவும்?

20 பயனுள்ள ஆலோசனை. பாவ இயல்புள்ளவர்களான நம் அனைவருக்கும் அவ்வப்போது ஆலோசனை அவசியம்தான். “ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள். அப்போதுதான் எதிர்காலத்தில் ஞானமுள்ளவனாக ஆவாய்” என்று பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. (நீதிமொழிகள் 19:20) மூப்பர்கள் மட்டும்தான் மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுக்க வேண்டும் என்றில்லை. பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆலோசனை கொடுக்கிறார்கள். (எபேசியர் 6:4) முதிர்ச்சியுள்ள சகோதரிகள் இளம் சகோதரிகளுக்கு ஆலோசனை கொடுக்கலாம். (தீத்து 2:3-5) நாம் யாருக்கு ஆலோசனை வழங்குகிறோமோ அவர்மீது அன்பு வைத்திருந்தால் அவருடைய உணர்ச்சிகளைப் புண்படுத்தாத விதத்தில் ஆலோசனை வழங்குவோம். அன்புடன் ஆலோசனை கொடுக்க நமக்கு எது உதவும்? சிறந்த முறையில் ஆலோசனை வழங்க உதவும் மூன்று அம்சங்களைக் கவனியுங்கள்: ஆலோசனை கொடுப்பவரின் மனநிலை, ஆலோசனை வழங்குவதற்கான காரணம், ஆலோசனை கொடுக்கப்படும் விதம்.

21 ஆலோசனை பலன் தருமா இல்லையா என்பது அதைக் கொடுப்பவரைப் பொறுத்தே உள்ளது. ‘ஆலோசனையை ஏற்றுக்கொள்வது எனக்கு எப்போது சுலபமாக இருக்கிறது?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். ஒருவர் ஏதோ விரக்தியாலோ, தப்பான உள்நோக்கத்தாலோ அல்ல, உங்கள் மீதுள்ள அக்கறையால்தான் ஆலோசனை கொடுக்கிறார் என்று உங்களுக்குத் தெரிந்திருந்தால் அந்த ஆலோசனையை நீங்கள் சுலபமாக ஏற்றுக்கொள்வீர்கள். எனவே, மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கும்போது உங்களுடைய மனநிலையும் நோக்கமும் அப்படித்தானே இருக்க வேண்டும்? ஓர் ஆலோசனை பயனுள்ளதாக இருப்பதற்கு, அது கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் இருக்க வேண்டும். (2 தீமோத்தேயு 3:16) பைபிளிலிருந்து நேரடியாக மேற்கோள் காட்டினாலும் சரி காட்டாவிட்டாலும் சரி, நாம் கொடுக்கும் ஆலோசனை அதன் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். எனவே, மூப்பர்கள் தங்களது சொந்த கருத்துகளை மற்றவர்கள்மீது திணிக்காதபடி கவனமாயிருக்கிறார்கள்; தாங்கள் சொல்வதைத்தான் பைபிளும் சொல்கிறது என்பதை நிரூபிப்பதற்காக வசனங்களைத் திரித்துக்கூற மாட்டார்கள். ஆலோசனை நல்ல பலனளிக்க வேண்டுமானால், அதைச் சரியான முறையில் வழங்க வேண்டும். கனிவுடன் ஆலோசனை கொடுக்கும்போது அதை ஏற்றுக்கொள்வது சுலபம்; அதைப் பெறுகிறவரின் தன்மானமும் பாதிக்கப்படாது.—கொலோசெயர் 4:6.

22. பேசும் திறன் எனும் பரிசை நீங்கள் எப்படிப் பயன்படுத்தப்போகிறீர்கள்?

22 ஆம், பேசும் திறன் என்பது கடவுள் நமக்குத் தந்த அருமையான பரிசு. நாம் யெகோவாவை நேசித்தால் இந்தப் பரிசைத் தவறாகப் பயன்படுத்த மாட்டோம். நாம் பேசும் வார்த்தைகளுக்கு மற்றவர்களைப் பலப்படுத்தவோ அவர்களுடைய மனதை ரணப்படுத்தவோ வலிமை இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. இந்தப் பரிசை அதைத் தந்தவரின் நோக்கத்திற்கு இசைவாகவே, அதாவது மற்றவர்களைப் ‘பலப்படுத்தவே,’ நாம் பயன்படுத்துவோமாக. அப்படிச் செய்தால் நம் பேச்சு நம்மைச் சுற்றியுள்ளவர்களின் மனதை மயிலிறகு போல் வருடும்; அதோடு, கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க நமக்கு உதவும்.

^ பாரா. 10 பைபிளில், “அசுத்தமான நடத்தை” என்ற பதம் விரிவான அர்த்தம் கொண்டது, பலதரப்பட்ட பாவங்களைக் குறிக்க இந்தப் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில அசுத்தமான பழக்கங்களுக்கு நீதிவிசாரணை நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றாலும், படுமோசமாய்க் கருதப்படும் அசுத்தமான பழக்கத்தில் ஒருவர் தொடர்ந்து ஈடுபட்டால் சபைநீக்கம் செய்யப்படுவார்.—2 கொரிந்தியர் 12:21; எபேசியர் 4:19; காவற்கோபுரம் ஜூலை 15, 2006 இதழில், “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியைக் காண்க.