Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 17

‘உங்கள் மகா பரிசுத்த விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்’

‘உங்கள் மகா பரிசுத்த விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்’

“உங்களுடைய மகா பரிசுத்த விசுவாசத்தை அஸ்திவாரமாக வைத்து உங்களைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்; . . . எப்போதும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள்.”—யூதா 20, 21.

1, 2. ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும், அப்படிச் செய்வது ஏன் முக்கியம்?

நாம் அனைவரும் ஆரோக்கியமாக, திடகாத்திரமாக இருக்கவே ஆசைப்படுகிறோம். உடல் வளர்ச்சிக்கு சத்துள்ள உணவும் அளவான உடற்பயிற்சியும் நல்ல பராமரிப்பும் அவசியம். இதற்கெல்லாம் முயற்சி தேவைப்பட்டாலும் இவற்றை நாம் நிறுத்திவிடுவதில்லை; ஏனென்றால், இவை நம் தற்போதைய வாழ்க்கையை மட்டுமல்ல எதிர்கால வாழ்க்கையையும் பாதிக்கின்றன. அதோடு, மற்றொரு விதமான வளர்ச்சிக்கும் நாம் கவனம் செலுத்த வேண்டும். அது என்ன?

2 “கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள்” என்று கிறிஸ்தவர்களை சீஷரான யூதா உந்துவித்தபோது அந்த வளர்ச்சியைப் பற்றி குறிப்பிட்டார். அதைத்தான் அந்த வசனத்தின் முதல் பகுதியில் வாசிக்கிறோம்: “உங்களுடைய மகா பரிசுத்த விசுவாசத்தை அஸ்திவாரமாக வைத்து உங்களைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்.” (யூதா 20, 21) ஆம், கடவுளுடைய அன்பில் நிலைத்திருப்பதற்கு உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்? நாம் செய்ய வேண்டிய மூன்று காரியங்களை இப்போது நாம் சிந்திப்போம்.

யெகோவாவின் நீதியான நெறிமுறைகள்மீது விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்

3-5. (அ) கடவுளுடைய சட்டங்களை நாம் எப்படி நினைக்க வேண்டுமென சாத்தான் விரும்புகிறான்? (ஆ) கடவுளுடைய சட்டங்களை நாம் எப்படிக் கருத வேண்டும், நம் சிந்தனையை அது எப்படிப் பாதிக்க வேண்டும்? உதாரணத்துடன் விளக்கவும்.

3 முதலாவதாக, கடவுளுடைய சட்டங்கள்மீது நம் விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும். இந்தப் புத்தகத்தில், நடத்தை சம்பந்தமாக யெகோவா தந்திருக்கும் நீதியான நெறிமுறைகளைப் பற்றி நிறைய படித்திருப்பீர்கள். அவற்றைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? யெகோவாவின் சட்டங்கள், நியமங்கள், நெறிமுறைகள் எல்லாம் மிகவும் கெடுபிடியானவை, கொடூரமானவை என தந்திரமாக உங்களை நம்ப வைக்கவே சாத்தான் விரும்புகிறான். இதே தந்திரத்தைத்தான் ஏதேன் தோட்டத்தில் பயன்படுத்தி வெற்றி பெற்றான்; அதனால், இன்றைக்கும் இதையே அவன் பயன்படுத்துகிறான். (ஆதியாகமம் 3:1-6) சாத்தானின் இந்தத் தந்திரம் உங்களிடம் பலிக்குமா? அது உங்கள் மனநிலையைப் பொறுத்தே உள்ளது.

4 உதாரணமாக, ஓர் அழகிய பூங்காவில் நீங்கள் நடந்து செல்கிறீர்கள். அப்போது, குறிப்பிட்ட ஒரு பகுதிக்குள் நுழைய முடியாதபடி உயரமான வேலி அமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறீர்கள். வேலிக்கு அந்தப் பக்கத்தில் இருக்கும் பகுதி பசுமையாய் காட்சியளிக்கிறது. அங்கு போவதற்கு இந்த வேலி தடையாக இருக்கிறதே என்று நீங்கள் முதலில் நினைக்கலாம். ஆனால், உற்றுப் பார்க்கும்போது, இரைதேடும் ஒரு கொடிய சிங்கம் உங்கள் கண்ணில் படுகிறது. அந்த வேலியின் அருமை இப்போது உங்களுக்குப் புரிகிறது. ஆம், அது உங்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கிறது. நிஜத்திலும், ஒரு கொடிய மிருகம் உங்களை விழுங்கப் பார்க்கிறதா? “தெளிந்த புத்தியோடு இருங்கள், விழிப்புடன் இருங்கள்! உங்கள் எதிரியான பிசாசு கர்ஜிக்கிற சிங்கம்போல் யாரை விழுங்கலாம் என்று அலைந்து திரிகிறான்” என பைபிள் எச்சரிக்கிறது.—1 பேதுரு 5:8.

5 சாத்தான் கர்ஜிக்கிற சிங்கம் போன்றவன். அவனுக்கு நாம் இரையாகக் கூடாது என யெகோவா விரும்புவதால், அவனுடைய ‘சூழ்ச்சிகளிலிருந்து’ நம்மைப் பாதுகாக்க சட்டங்களைத் தந்திருக்கிறார். (எபேசியர் 6:11) அந்தச் சட்டங்களைப் பற்றி நாம் சிந்திக்கும்போதெல்லாம் அவை நம் பரலோகத் தகப்பனுடைய அன்பின் வெளிக்காட்டாக இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி நாம் யோசித்தால்தான், கடவுளுடைய சட்டங்கள் நமக்குப் பாதுகாப்பும் சந்தோஷமும் தருவதாக இருக்கும். “விடுதலை அளிக்கும் பரிபூரணமான சட்டத்தைக் கூர்ந்து கவனித்து அதை விடாமல் கடைப்பிடிக்கிறவன் . . . சந்தோஷமாக இருக்கிறான்” என்று சீஷரான யாக்கோபு சொன்னார்.—யாக்கோபு 1:25.

6. கடவுளுடைய நீதியான சட்டங்களின் மீதும் நியமங்களின் மீதும் நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு எது மிகச் சிறந்த வழி? உதாரணம் தருக.

6 கடவுளுடைய சட்டங்களின்படி வாழ்வதுதான் அவர் மீதும் அவருடைய சட்டங்களில் பொதிந்துள்ள ஞானத்தின் மீதும் நம் விசுவாசத்தைப் பலப்படுத்த மிகச் சிறந்த வழி. உதாரணமாக, ‘கிறிஸ்துவின் சட்டத்தில்,’ அவர் “கட்டளையிட்ட எல்லாவற்றையும்” மற்றவர்களுக்குக் கற்பிக்கும் கட்டளையும் உட்பட்டிருக்கிறது. (கலாத்தியர் 6:2; மத்தேயு 28:19, 20) அதோடு, வழிபாட்டுக்காகவும் சகோதர கூட்டுறவுக்காகவும் தொடர்ந்து ஒன்றுகூடி வர வேண்டும் என்ற கட்டளையைக் கிறிஸ்தவர்கள் மனதில் வைத்திருக்கிறார்கள். (எபிரெயர் 10:24, 25) அதுமட்டுமல்ல, நாம் தவறாமலும் அடிக்கடியும் இதயப்பூர்வமாய் ஜெபிக்க வேண்டும் என்பதும் கடவுளுடைய கட்டளைகளில் ஒன்று. (மத்தேயு 6:5-8; 1 தெசலோனிக்கேயர் 5:17) இந்தக் கட்டளைகளுக்கு இசைவாக நாம் நடக்கும்போது, அவை கடவுளுடைய அன்பான வழிகாட்டுதல்கள் என்பதைப் புரிந்துகொள்கிறோம். அவற்றுக்குக் கீழ்ப்படியும்போது இந்தப் பொல்லாத உலகில் நாம் பெறவே முடியாத மகிழ்ச்சியையும் திருப்தியையும் பெறுகிறோம். கடவுளுடைய சட்டங்களைக் கடைப்பிடித்ததால் நீங்கள் எப்படிப் பயனடைந்திருக்கிறீர்கள் என்பதை யோசித்துப் பார்க்கும்போது அவற்றின் மீது உங்கள் விசுவாசம் பலப்படுகிறதல்லவா?

7, 8. யெகோவாவுடைய சட்டங்களின்படி தொடர்ந்து வாழ்வது ரொம்ப கஷ்டம் என நினைக்கிறவர்களுக்கு அவருடைய வார்த்தை என்ன உறுதியளிக்கிறது?

7 யெகோவாவுடைய சட்டங்களின்படி தொடர்ந்து வாழ்வது ரொம்ப கஷ்டம் என சிலர் நினைக்கிறார்கள். ஏதாவது பாவம் செய்துவிடுவோமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள். நீங்களும் அப்படிப் பயந்தால் இந்த வார்த்தைகளை மனதில்கொள்ளுங்கள்: “யெகோவாவாகிய நானே உங்கள் கடவுள். உங்களுக்குப் பிரயோஜனமானதை நான் கற்றுக்கொடுக்கிறேன். நீங்கள் நடக்க வேண்டிய வழியில் உங்களை நடத்துகிறேன். நீங்கள் என்னுடைய கட்டளைகளைக் கேட்டு நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது, உங்கள் சமாதானம் ஆற்றைப் போலவும், உங்கள் நீதி கடல் அலைகளைப் போலவும் இருக்கும்.” (ஏசாயா 48:17, 18) நம்பிக்கையூட்டும் இந்த வார்த்தைகளை எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

8 நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தால் நமக்குத்தான் நன்மை என இந்த வசனத்தின் மூலம் அவர் நினைப்பூட்டுகிறார். அவருக்குக் கீழ்ப்படிந்தால் இரண்டு விதத்தில் ஆசீர்வாதம் பெறுவோம் என அவர் வாக்குறுதி அளிக்கிறார். ஒன்று, அமைதி தவழ்கிற, பெருக்கெடுத்து ஓடுகிற, வற்றாமல் இருக்கிற நதியைப் போல் நம் வாழ்வில் சமாதானம் இருக்கும். அடுத்ததாக, நம் நீதி கடலின் அலைகளைப் போல இருக்கும். கடற்கரை ஓரமாக நின்று அலைகள் அடிப்பதை பார்க்கும்போது அவை ஓய்வதில்லை என்பதை உணருவீர்கள். அவை காலமெல்லாம் அடித்துக் கொண்டேதான் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த அலைகளைப் போலவே நீங்களும் நல்ல காரியங்களைத் செய்துகொண்டே இருக்க முடியும் என யெகோவா சொல்கிறார். அவருக்கு நீங்கள் விசுவாசமாக இருக்க முயலும்வரை நீங்கள் தடுமாறி விழ அனுமதிக்க மாட்டார்! (சங்கீதம் 55:22-ஐ வாசியுங்கள்.) யெகோவா தந்திருக்கும் இந்த அருமையான வாக்குறுதிகள் அவர் மீதும் அவருடைய நீதியான சட்டங்கள் மீதும் உங்கள் விசுவாசத்தை பலப்படுத்துகின்றன, அல்லவா?

“முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேற வேண்டும்”

9, 10. (அ) முதிர்ச்சி என்பது ஒவ்வொரு கிறிஸ்தவரும் அடைய வேண்டிய சிறந்த லட்சியம் என ஏன் சொல்லலாம்? (ஆ) ஆன்மீகச் சிந்தையைக் கொண்டிருப்பது ஏன் சந்தோஷத்தைத் தருகிறது?

9 நாம் செய்ய வேண்டிய இரண்டாவது காரியம், “முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேற வேண்டும்” என்ற வேதவசனத்தைப் பின்பற்றுவதாகும். (எபிரெயர் 6:2) முதிர்ச்சி என்பது ஒவ்வொரு கிறிஸ்தவரும் அடைய வேண்டிய சிறந்த லட்சியம். நாம் இன்று பரிபூரணத்தை அடைய முடியாவிட்டாலும் முதிர்ச்சியை எட்ட முடியும். அதோடு, கிறிஸ்தவர்கள் முதிர்ச்சியை நோக்கி முன்னேறும்போது, யெகோவாவுக்கு சேவை செய்வதில் அதிக மகிழ்ச்சி காண்கிறார்கள். ஏன் அப்படி?

10 முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் எல்லாவற்றையும் யெகோவாவின் கண்ணோட்டத்தில் பார்க்கிறார். (யோவான் 4:23) “பாவ வழியில் நடக்கிறவர்கள் பாவ காரியங்களைப் பற்றியே யோசிக்கிறார்கள். ஆனால், கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்கிறவர்கள் கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றியே யோசிக்கிறார்கள்” என்று பவுல் எழுதினார். (ரோமர் 8:5) பாவ சிந்தை உள்ளவருக்கு சந்தோஷம் கிடைக்காது. ஏனென்றால், அவர் சுயநலமுள்ளவராக, முன்யோசனையற்றவராக, பொருளாசை உள்ளவராக இருப்பார். ஆன்மீகச் சிந்தை உள்ளவரோ சந்தோஷமுள்ளவர்; ஏனென்றால் ‘சந்தோஷமுள்ள கடவுளாகிய’ யெகோவா மீதே தன் கண்களை ஒருமுகப்படுத்துகிறார். (1 தீமோத்தேயு 1:11) அப்படிப்பட்டவர் யெகோவாவைப் பிரியப்படுத்துவதிலேயே கண்ணாய் இருக்கிறார். சோதனைகளின் மத்தியிலும் அவர் சந்தோஷமாக இருக்கிறார். ஏன்? சாத்தானை பொய்யனாக நிரூபிப்பதற்கும், உத்தமத்தை வளர்த்துக்கொள்வதற்கும், அதன் மூலம் நம் பரலோகத் தகப்பனை சந்தோஷப்படுத்துவதற்கும் சோதனைகள் வாய்ப்பளிக்கின்றன.—நீதிமொழிகள் 27:11; யாக்கோபு 1:2, 3-ஐ வாசியுங்கள்.

11, 12. (அ) கிறிஸ்தவரின் “பகுத்தறியும் திறன்களை” பற்றி பவுல் என்ன சொன்னார், ‘பயிற்றுவிப்பது’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தையின் அர்த்தம் என்ன? (ஆ) ஒரு குழந்தைக்கோ ஜிம்னாஸ்டிக் வீரருக்கோ எப்படிப்பட்ட பயிற்சி தேவை?

11 ஆன்மீகச் சிந்தையைப் பெறுவதற்கும் முதிர்ச்சி அடைவதற்கும் பயிற்சி தேவை. இந்த வசனத்தை சிந்தித்துப் பாருங்கள்: “திட உணவோ முதிர்ச்சியுள்ளவர்களுக்கே உரியது; சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்திப் பயிற்றுவித்திருக்கிற ஆட்களுக்கே உரியது.” (எபிரெயர் 5:14) பகுத்தறியும் திறன்களைப் ‘பயிற்றுவிப்பது’ பற்றி பவுல் குறிப்பிட்டபோது, முதல் நூற்றாண்டில் கிரீஸ் நாட்டு உடற்பயிற்சி மையங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தினார். ஏனென்றால், பயிற்றுவிப்பது என்பதற்கான கிரேக்க வார்த்தையை ‘ஜிம்னாஸ்டிக் வீரர் போல பயிற்றுவிப்பது’ எனவும் மொழிபெயர்க்கலாம். ‘ஜிம்னாஸ்டிக்’ பயிற்சியில் என்ன உட்பட்டிருக்கிறது என இப்போது சிந்திக்கலாம்.

ஜிம்னாஸ்டிக் வீரர் தன் உடலை பயிற்சியினால் பழக்குவிக்கிறார்

12 நாம் பிறந்தபோது நம் உடல் எந்தப் பயிற்சியும் பெற்றிருக்கவில்லை. உதாரணமாக, ஒரு சிறு குழந்தைக்குத் தன் கைகால்களை எப்படிப் பயன்படுத்துவதென தெரியாது. அதனால், அது இஷ்டத்திற்கு கைகால்களை ஆட்டுகிறது. சில சமயங்களில் தன் முகத்திலேயே அடித்துக்கொள்கிறது. அதனால் எரிச்சலடைகிறது, அதிர்ச்சியும் அடைகிறது. அது போகப் போக தன் கைகால்களைச் சரியாகப் பயன்படுத்தப் பழகிக்கொள்கிறது. முதலில் அந்தக் குழந்தை தவழுகிறது, பின்பு தத்தித் தத்தி நடக்கிறது, பின்பு ஓடத் தொடங்குகிறது. * சரி, இப்போது ஒரு ஜிம்னாஸ்டிக் வீரரைப் பற்றி பார்ப்போம். அவர் தன் உடலை ரப்பராக வளைத்து, நளினமாகவும் கனகச்சிதமாகவும் சாகசம் புரிவதைப் பார்க்கும்போது அவர் மிகுந்த பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அவர் திடீரென ஒரு ஜிம்னாஸ்டிக் வீரராக மாறிவிடவில்லை. மணிக்கணக்காக அயராமல் பயிற்சி எடுத்ததால்தான் ஒரு ஜிம்னாஸ்டிக் வீரராக ஆக முடிந்தது. ஆனால், இப்படிப்பட்ட உடற்பயிற்சி ‘ஓரளவுதான் நன்மை தரும்’ என்று பைபிள் சொல்கிறது. அப்படியென்றால், ஆன்மீக ரீதியில் நம் பகுத்தறியும் திறன்களை பயிற்றுவிப்பது எவ்வளவு முக்கியம்!—1 தீமோத்தேயு 4:8.

13. நம் பகுத்தறியும் திறன்களை நாம் எப்படிப் பயிற்றுவிக்கலாம்?

13 பகுத்தறியும் திறன்களைப் பயிற்றுவிக்க உதவும் பல விஷயங்களை இந்தப் புத்தகத்தில் சிந்தித்திருக்கிறோம்; இவை ஆன்மீகச் சிந்தையுள்ள நபராக யெகோவாவுக்கு விசுவாசமாய் இருக்க உங்களுக்கு உதவும். அன்றாட வாழ்வில் தீர்மானங்கள் எடுக்கும்போது, கடவுளுடைய நியமங்களையும் சட்டங்களையும் பற்றி தியானித்து ஜெபம் செய்யுங்கள். நீங்கள் தீர்மானம் எடுக்கும்போதெல்லாம் இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இது சம்பந்தமாக பைபிளில் என்ன நியமங்களும் சட்டங்களும் இருக்கின்றன? நான் அவற்றை எப்படிக் கடைப்பிடிக்கலாம்? நான் என்ன செய்தால் என் பரலோகத் தகப்பனுக்குப் பிரியமாக இருக்கும்?’ (நீதிமொழிகள் 3:5, 6-ஐயும் யாக்கோபு 1:5-ஐயும் வாசியுங்கள்.) இப்படி நீங்கள் தீர்மானம் எடுக்கும்போதெல்லாம் உங்கள் பகுத்தறியும் திறன்கள் இன்னும் நன்றாக பயிற்றுவிக்கப்படும். இப்படிப்பட்ட பயிற்சி உங்களை ஆன்மீகச் சிந்தையுள்ள நபராக மாற்றும், அவ்வாறு நிலைத்திருக்கவும் உதவும்.

14. ஆன்மீக ரீதியில் வளர நாம் எதன்மீது பசியார்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும், அதே சமயத்தில் எதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

14 நாம் முதிர்ச்சி அடைந்திருந்தாலும்கூட, ஆன்மீக ரீதியில் வளர்ந்துகொண்டே இருக்கலாம். உடல் வளர்ச்சிக்கு உணவு அத்தியாவசியம். அதனால்தான், ‘திட உணவு முதிர்ச்சியுள்ளவர்களுக்கே உரியது’ என்று பவுல் சொன்னார். விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு தொடர்ந்து திடமான ஆன்மீக உணவை உட்கொள்ள வேண்டும். நீங்கள் கற்றுக்கொண்டவற்றை கடைப்பிடித்தால், அதுவே ஞானம்; “ஞானம்தான் முக்கியம்” என்று பைபிள் சொல்கிறது. ஆகவே, நம் பரலோகத் தகப்பன் போதிக்கிற அருமையான சத்தியங்கள்மீது நாம் பசியார்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். (நீதிமொழிகள் 4:5-7; 1 பேதுரு 2:2) அறிவையும் தெய்வீக ஞானத்தையும் பெறுகையில் நமக்கு தற்பெருமையோ தலைக்கனமோ வந்துவிடக்கூடாது. நமக்கு கர்வம் வந்துவிடாதபடி அல்லது ஏதாவது கெட்ட சிந்தை மனதில் வேர்விடாதபடி தொடர்ந்து நம்மைச் சோதித்துப் பார்க்க வேண்டும். “நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்பதை எப்போதும் சோதித்துப் பாருங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உங்களையே எப்போதும் ஆராய்ந்து பாருங்கள்” என்று பவுல் சொன்னார்.—2 கொரிந்தியர் 13:5.

15. ஆன்மீக ரீதியில் வளர அன்பு ஏன் அவசியம்?

15 ஒருவர் திடகாத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தாலும், அவர் தொடர்ந்து சத்துள்ள உணவை உட்கொண்டு தன் உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டும். முதிர்ச்சியடையவும் ஆன்மீக ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளவும் நமக்கு எது அவசியம்? மிக முக்கியமாக, அன்பு அவசியம். யெகோவா மீதும் சக விசுவாசிகள் மீதும் தொடர்ந்து அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமக்கு அன்பு இல்லையென்றால், நாம் பெற்றிருக்கும் அறிவும், நாம் செய்யும் செயல்களும் வீணாகிவிடும்—அர்த்தமற்ற ஓசையைப் போல் இருக்கும். (1 கொரிந்தியர் 13:1-3) நமக்கு அன்பு இருந்தால், நாம் முதிர்ச்சியடைந்து ஆன்மீக ரீதியில் தொடர்ந்து வளருவோம்.

யெகோவா தரும் நம்பிக்கையில் மனதை ஊன்ற வையுங்கள்

16. எப்படிப்பட்ட மனநிலையை மக்கள் மனதில் சாத்தான் விதைக்கிறான், யெகோவா நமக்கு என்ன தற்காப்பு கருவியை அளித்திருக்கிறார்?

16 நாம் செய்ய வேண்டிய மூன்றாவது காரியம், யெகோவா தரும் நம்பிக்கையில் நம் மனதை ஊன்ற வைப்பதாகும். இப்படிச் செய்வதற்கு, நம் சிந்தனைகளைக் காத்துக்கொள்ள வேண்டும். எதிர்மறையான மனநிலையை, நம்பிக்கையின்மையை மக்கள் மனதில் விதைப்பதில் இந்த உலக அதிபதியாகிய சாத்தான் வல்லவனாக இருக்கிறான். (எபேசியர் 2:2) இப்படிப்பட்ட மனநிலை ஆபத்தானது, மரத்தைக் கறையான் அரிப்பது போல் ஒரு கிறிஸ்தவரின் மனதை அரித்துவிடும். ஆனால், யெகோவா நமக்கு ஒரு தற்காப்பு கருவியைக் கொடுத்திருக்கிறார். அதுதான் நம்பிக்கை.

17. நம்பிக்கையின் முக்கியத்துவத்தை கடவுளுடைய வார்த்தை எப்படி விளக்குகிறது?

17 சாத்தானையும் இந்த உலகையும் எதிர்ப்பதற்காக கடவுள் தந்திருக்கிற முழு கவசத்தின் பல்வேறு பாகங்களை பைபிள் பட்டியலிடுகிறது. அதன் முக்கிய பாகம் தலைக்கவசம், அதாவது “மீட்புக்கான நம்பிக்கை.” (1 தெசலோனிக்கேயர் 5:8) தலைக்கவசம் இல்லாவிட்டால் போரில் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை பைபிள் காலங்களில் வாழ்ந்த ஒரு வீரர் நன்றாகவே அறிந்திருந்தார். அன்று, தோலினால் செய்யப்பட்ட ஒரு தொப்பியின் மேல் உலோகக் கவசம் பொருத்தப்பட்டது. அந்தத் தலைக்கவசத்தை ஒருவர் அணிந்திருந்தால் தலைக்கு அதிக பாதிப்பு ஏற்படாது. ஆகவே, தலைக்கவசம் தலையைக் காப்பதுபோல், நம்பிக்கை நம் மனதை, அதாவது சிந்தனையை, காக்கும்.

18, 19. நம்பிக்கையைக் காத்துக்கொள்வதில் இயேசு என்ன முன்மாதிரி வைத்தார், நாம் எப்படி அவரைப் பின்பற்றலாம்?

18 நம்பிக்கையைக் காத்துக்கொள்வதில் இயேசு தலைசிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார். பூமியில் அவர் வாழ்ந்த கடைசி இரவில் அவர் எதையெல்லாம் சகித்தார் என்பதை யோசித்துப் பாருங்கள். நெருங்கிய நண்பனே காசுக்காக அவரைக் காட்டிக்கொடுத்தான். இன்னொரு நண்பரோ அவரை யாரென்றே தெரியாது என்று சொல்லிவிட்டார். மற்றவர்கள் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். அவரது சொந்த ஊர்க்காரர்கள் அவருக்கு எதிராகத் திரண்டு, அவரைச் சித்திரவதைக் கம்பத்தில் ஏற்றிக் கொல்லுமாறு கூக்குரலிட்டார்கள். வாழ்வில் நாம் எதிர்ப்பட்ட அல்லது எதிர்ப்படப் போகும் எந்தவொரு சோதனையையும்விட பயங்கரமான சோதனைகளை இயேசு எதிர்ப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். சகித்துக்கொள்ள எது அவருக்கு உதவியது? எபிரெயர் 12:2 பதிலளிக்கிறது: “அவர் தன் முன்னால் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தின் காரணமாக அவமானத்தைப் பொருட்படுத்தாமல் மரக் கம்பத்தில் வேதனைகளைச் சகித்தார்; இப்போது, கடவுளுடைய சிம்மாசனத்தின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.” “தன் முன்னால் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தின்” மீதே இயேசு எப்போதும் தன் கண்களை ஊன்ற வைத்தார்.

19 இயேசுவுக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த சந்தோஷம் என்ன? தான் சகித்திருந்தால் யெகோவாவின் புனித பெயரைப் பரிசுத்தப்படுத்துவதில் பங்களிக்க முடியும் என்பதை அவர் நம்பினார். சாத்தான் ஒரு பொய்யன் என்பதற்கு தான் மாபெரும் அத்தாட்சி அளிக்க முடியும் என்பதையும் நம்பினார். வேறெந்த நம்பிக்கையும் இதைவிட அதிக சந்தோஷத்தை அவருக்குத் தந்திருக்க முடியாது! உத்தமமாக நிலைத்திருந்தால் யெகோவா தக்க பலன் அளிப்பார் என அவர் அறிந்திருந்தார்—தன் தகப்பனோடு ஒன்றுசேரும் அற்புத தருணம் அவருக்குக் காத்திருந்தது. வாழ்க்கையின் மிக இக்கட்டான சமயங்களிலும்கூட மகிழ்ச்சியூட்டும் இந்த நம்பிக்கையை இயேசு மனதில் வைத்திருந்தார். நாமும் அவ்வாறே செய்ய வேண்டும். நமக்கு முன்பும் ஒரு சந்தோஷம் இருக்கிறது. யெகோவா தன்னுடைய உன்னத பெயரைப் பரிசுத்தப்படுத்துவதில் பங்குகொள்ளும் பாக்கியத்தைத் தந்து நம் ஒவ்வொருவரையும் கௌரவப்படுத்தியிருக்கிறார். யெகோவாவை நம் உன்னத அரசராக ஏற்றுக்கொள்வதன் மூலமும், எப்பேர்ப்பட்ட துன்பங்களும் சோதனைகளும் வந்தாலும் அவருடைய அன்பில் நிலைத்திருப்பதன் மூலமும் சாத்தானை நாம் பொய்யனாக நிரூபிக்கலாம்.

20. நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ள உங்களுக்கு எது உதவும்?

20 விசுவாசமுள்ள தன்னுடைய ஊழியர்களுக்குப் பலனளிக்க யெகோவாவுக்கு விருப்பம் இருக்கிறது, பேராவலும் இருக்கிறது. (ஏசாயா 30:18; மல்கியா 3:10-ஐ வாசியுங்கள்.) தன்னுடைய ஊழியர்களின் நியாயமான ஆசைகளை நிறைவேற்ற அவர் ஆவலாய் இருக்கிறார். (சங்கீதம் 37:4) எனவே, உங்களுக்கு முன்னால் இருக்கிற நம்பிக்கையின் மீது உங்கள் மனதை உறுதியாய் ஊன்றவையுங்கள். சாத்தானுடைய இந்தப் பொல்லாத உலகத்தின் எதிர்மறையான, கீழ்த்தரமான, குதர்க்கமான சிந்தனைகளுக்கு ஒருபோதும் இடங்கொடுக்காதீர்கள். இந்த உலகத்தின் சிந்தை உங்கள் மனதிற்குள்ளோ இதயத்திற்குள்ளோ படிப்படியாக நுழைவதாய் நீங்கள் உணர்ந்தால், ‘எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானத்தைப்’ பெற யெகோவாவிடம் ஊக்கமாய் ஜெபம் செய்யுங்கள். கடவுள் தரும் அப்படிப்பட்ட சமாதானம் உங்கள் இதயத்தையும் மனதையும் காத்துக்கொள்ளும்.—பிலிப்பியர் 4:6, 7.

21, 22. (அ) ‘திரள் கூட்டமான மக்களுக்கு’ மகத்தான என்ன நம்பிக்கை இருக்கிறது? (ஆ) கடவுள் தந்திருக்கும் எந்த நம்பிக்கை உங்கள் மனதை மிகவும் கவருகிறது, உங்கள் தீர்மானம் என்ன?

21 மெய்சிலிர்க்க வைக்கும் இந்த நம்பிக்கையை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்: ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிக்கும்’ ‘திரள் கூட்டமான மக்களின்’ பாகமாக நீங்கள் இருந்தால், விரைவில் உங்கள் முன்னால் விரியும் உலகை மனத்திரையில் ஓடவிடுங்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 14) சாத்தானும் பேய்களும் இல்லாத அந்த உலகில், இப்போது உங்களால் எண்ணிப்பார்க்க முடியாத நிம்மதியை நீங்கள் பெறுவீர்கள். சாத்தானின் செல்வாக்கே இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மில் யார்தான் அனுபவித்திருக்கிறோம்? இயேசுவும் அவருடைய துணை அரசர்களான 1,44,000 பேரும் தரும் வழிநடத்துதலின்கீழ் இந்தப் பூமியை பூஞ்சோலையாக மாற்றுவது என்னே ஓர் ஆனந்தம்! நோய்நொடியோ உடல் ஊனமோ இல்லாத உலகில் வாழ்வது, மண்ணின் மடியில் உறங்குவோர் எழுந்து வருகையில் அவர்களை வரவேற்பது, கடவுளின் ஆதிநோக்கத்தின்படி வாழ்க்கையை அனுபவிப்பது நமக்கு எவ்வளவு புத்துணர்ச்சி அளிக்கும்! பரிபூரணத்தை நோக்கி நாம் அடியெடுத்து வைக்கும்போது, இவற்றைவிட மிகப் பெரிய வெகுமதி நமக்கு காத்திருக்கும். ஆம், ரோமர் 8:21 சொல்கிறபடி, “கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலை” காத்திருக்கும்.

22 நீங்கள் இன்று நினைத்துக்கூட பார்க்க முடியாத மாபெரும் விடுதலையை அடைய வேண்டுமென யெகோவா விரும்புகிறார். இந்த விடுதலையை அடைவதற்கான ஒரே வழி கீழ்ப்படிதல். அப்படியானால், அனுதினமும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய நீங்கள் எடுத்து வருகிற கடும் முயற்சி தகுந்ததல்லவா? எனவே, கடவுளுடைய அன்பில் நித்தமும் நிலைத்திருப்பதற்கு உங்களுடைய மகா பரிசுத்த விசுவாசத்தைப் பலப்படுத்த முழுமுயற்சி எடுங்கள்!

^ பாரா. 12 நம் கைகால்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வு நமக்கு இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அதனால்தான், நாம் கண்களை மூடிக்கொண்டாலும் நம்மால் கைகளைத் தட்ட முடிகிறது. ஒரு நோயாளி இந்த உணர்வை இழந்தபோது நிற்கவோ நடக்கவோ உட்காரவோகூட முடியாமல் போய்விட்டது.