Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 12

“யெகோவா தந்த அதிகாரத்தில் தைரியமாகப் பேசிவந்தார்கள்”

“யெகோவா தந்த அதிகாரத்தில் தைரியமாகப் பேசிவந்தார்கள்”

பவுலும் பர்னபாவும் மனத்தாழ்மையையும் விடாமுயற்சியையும் தைரியத்தையும் காட்டினார்கள்

அப்போஸ்தலர் 14:1-28-ன் அடிப்படையில்

1, 2. பவுலும் பர்னபாவும் லீஸ்திராவில் இருக்கிறபோது அடுத்தடுத்து என்ன சம்பவங்கள் நடக்கின்றன?

 லீஸ்திராவில் எங்கே பார்த்தாலும் கூச்சலும் குழப்பமுமாக இருக்கிறது. கருவறையிலிருந்தே கால் ஊனத்துடன் பிறந்த ஒருவன் முன்பின் தெரியாத இரண்டு பேரால் அற்புதமாக குணமடைந்து, மகிழ்ச்சியில் மான்போல் துள்ளிக் குதிக்கிறான். மக்கள் முகத்தில் ஆச்சரியம் அலை அலையாக பரவ, பூசாரி ஒருவன் அந்த மனிதர்களுக்கு மாலை சூட வருகிறான்; அந்த அன்னியர்களை தெய்வங்கள் என்றே அந்த ஊர்க்காரர்கள் முடிவுகட்டி விடுகின்றனர். பலிக்கான காளைகள் உறுமிக்கொண்டு நிற்க, அவற்றை பலி கொடுக்க ஒருபக்கம் சீயுஸ் பூசாரி தடபுடலாகத் தயாராகிக்கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், பவுலும் பர்னபாவும் ‘வேண்டாம்!’ என்று தொண்டை கிழிய மறுப்புக் குரல் கொடுக்கிறார்கள். மேலங்கிகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள் பாய்ந்து போய், தங்களை வணங்க வேண்டாம் என்று மன்றாடுகிறார்கள்; ஒருவழியாக, தாங்கள் கடவுள்கள் இல்லை என்பதை அந்தக் கூட்டத்தாருக்குப் புரிய வைக்கிறார்கள்.

2 பிற்பாடு... பவுலையும் பர்னபாவையும் எதிர்த்த யூதர்கள் பிசீதியாவிலிருந்த அந்தியோகியாவிலிருந்தும் இக்கோனியாவிலிருந்தும் வந்து சேருகிறார்கள். லீஸ்திரா மக்களிடையே பவுலையும் பர்னபாவையும் பற்றி விஷம் போன்ற வதந்திகளைப் பரப்பி அவர்களுடைய மனதை நஞ்சாக்குகிறார்கள். தெய்வங்கள் என்று சொல்லி மாலை சூடி மண்டியிட ஓடோடி வந்தவர்கள் இப்போது பவுலை சூழ்ந்துகொண்டு... அவர் மயக்கம் போட்டு மண்ணில் சாயும்வரை கல்லெறிகிறார்கள். கோபத்தை எல்லாம் கற்களால் கொட்டித் தீர்த்த பிறகு... அவர் செத்துவிட்டார் என்று நினைத்து அடிபட்ட உடலை நகரத்தின் வாசலுக்கு வெளியே தரதரவென இழுத்துவந்து போடுகிறார்கள்.

3. இந்த அதிகாரத்தில் என்னென்ன கேள்விகளை நாம் சிந்திப்போம்?

3 அதிரடியான இந்தச் சம்பவம் நடப்பதற்கு எது காரணமாக இருந்தது? பவுல், பர்னபா மற்றும் சலன புத்தியுள்ள லீஸ்திரா மக்கள் உட்பட்ட சம்பவத்திலிருந்து இன்று நல்ல செய்தியை பிரசங்கிக்கிறவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? ‘யெகோவா தந்த அதிகாரத்தில் தைரியமாகப் பேசி’ தொடர்ந்து ஊழியம் செய்துவந்த பர்னபா மற்றும் பவுலுடைய முன்மாதிரியை கிறிஸ்தவ மூப்பர்கள் எப்படிப் பின்பற்றலாம்?—அப். 14:3.

‘ஏராளமானவர்கள் . . . இயேசுவின் சீஷர்களானார்கள்’ (அப். 14:1-7)

4, 5. பவுலும் பர்னபாவும் ஏன் இக்கோனியாவுக்குப் பயணம் செய்தார்கள், அங்கே என்ன நடந்தது?

4 சில நாட்களுக்கு முன்பு, பவுலுக்கும் பர்னபாவுக்கும் எதிராக யூதர்கள் கலகத்தைத் தூண்டிவிட்டதால் அந்த இரண்டு பேரும் ரோம நகரத்தைவிட்டு, அதாவது பிசீதியாவிலிருந்த அந்தியோகியாவைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஆனால், அவர்கள் மனமுடைந்துவிடவில்லை. அதற்குப் பதிலாக, ‘தங்கள் பாதத்தில் படிந்த தூசியை [அந்த மக்களுக்கு] எதிராக உதறிவிட்டார்கள்.’ (அப். 13:50-52; மத். 10:14) எதிர்ப்பவர்களைக் கடவுளுடைய கையில் விட்டுவிட்டு பவுலும் பர்னபாவும் அமைதியாக அந்த நகரத்தைவிட்டுப் புறப்பட்டார்கள். (அப். 18:5, 6; 20:26) முகத்தில் சந்தோஷ ஒளி சிறிதும் குறையாமல் அவர்கள் தங்களுடைய ஊழியப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். தென்கிழக்கு திசையில் கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் பயணம் செய்த பிறகு, டாரஸ் மற்றும் சுல்தான் மலைத்தொடர்களுக்கு மத்தியில் வீற்றிருக்கும் செழிப்பான மேட்டு நிலப்பகுதியை அடைந்தார்கள்.

5 முதலில், பவுலும் பர்னபாவும் இக்கோனியாவில் தங்கினார்கள்; இது, முழுக்க முழுக்க கிரேக்க கலாச்சாரம் பரவியிருந்த ஒரு நகரம்; அதோடு, ரோம மாகாணமாகிய கலாத்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் விளங்கியது. a செல்வாக்குமிக்க யூதர்களும் யூத மதத்துக்கு மாறியவர்கள் பலரும் இந்த நகரத்தில் வாழ்ந்து வந்தார்கள். பவுலும் பர்னபாவும் தங்களுடைய வழக்கத்தின்படி, ஜெபக்கூடத்துக்குள் நுழைந்து பிரசங்கம் செய்யத் தொடங்கினார்கள். (அப். 13:5, 14) “அங்கே அவர்கள் திறமையாகப் பேசியதால் ஏராளமான யூதர்களும் கிரேக்கர்களும் இயேசுவின் சீஷர்களானார்கள்.”—அப். 14:1.

6. பவுலும் பர்னபாவும் திறமைமிக்க போதகர்களாக இருந்ததற்கு காரணம் என்ன, நாம் எப்படி அவர்களைப் பின்பற்றலாம்?

6 பவுலும் பர்னபாவும் பேசிய விதம் ஏன் அத்தனை உள்ளங்களைக் கவர்ந்தது? வேத ஞானத்தின் களஞ்சியமாக விளங்கினார் பவுல். இயேசுதான் வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியா என்பதை நிரூபிப்பதற்கு சரித்திரம், தீர்க்கதரிசனம், மோசேயின் திருச்சட்டம் ஆகியவற்றிலிருந்து திறம்பட மேற்கோள் காட்டிப் பேசினார். (அப். 13:15-31; 26:22, 23) பர்னபாவின் பேச்சில், மக்கள்மீது அவர் கொண்டிருந்த அக்கறை பளிச்சிட்டது. (அப். 4:36, 37; 9:27; 11:23, 24) அவர்கள் இருவரும் தங்களுடைய சொந்த அறிவின்மீது சார்ந்திருக்கவில்லை, அதற்கு பதிலாக “யெகோவா தந்த அதிகாரத்தில்” பேசினார்கள். ஊழியத்தில் அந்த மிஷனரிகளை நீங்கள் எப்படிப் பின்பற்றலாம்? கடவுளுடைய வார்த்தையை நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். கேட்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வசனங்களைத் தேர்ந்தெடுங்கள். கேட்பவருக்கு ஆறுதல் தரும் விதத்தில் எப்படிப் பேசலாம் என்று யோசியுங்கள். எப்போதும் யெகோவாவின் வார்த்தையின் அடிப்படையில் கற்றுக்கொடுங்கள், உங்கள் சொந்த அறிவில் அல்ல.

7. (அ) நல்ல செய்தியால் என்ன விளைவுகள் ஏற்படும்? (ஆ) நீங்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டதால் உங்கள் குடும்பத்தில் பிரிவினை உண்டாகியிருந்தால், நீங்கள் எதை மனதில் வைக்க வேண்டும்?

7 ஆனால், பவுலும் பர்னபாவும் சொன்னதை இக்கோனியாவில் இருந்த எல்லாருமே ஆர்வத்தோடு கேட்கவில்லை. “விசுவாசம் வைக்காத யூதர்கள் மற்ற தேசத்து மக்களுடைய மனதைக் கெடுத்து, அந்தச் சகோதரர்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டிவிட்டார்கள்” என்று லூக்கா சொன்னார். அதனால் அங்கேயே “பல வாரங்கள் தங்கி” நல்ல செய்தியை அறிவிப்பது அவசியம் என்பதை புரிந்துகொண்டு, பவுலும் பர்னபாவும் “தைரியமாகப் பேசிவந்தார்கள்.” அதன் விளைவாக, “நகர மக்களுக்கு இடையில் பிரிவினை உண்டானது; சிலர் யூதர்களின் பக்கமும் சிலர் அப்போஸ்தலர்களின் பக்கமும் சேர்ந்துகொண்டார்கள்.” (அப். 14:2-4) இன்றும் நல்ல செய்தி இதே விளைவைத்தான் மக்களிடம் ஏற்படுத்துகிறது. சிலரை அது ஒன்றாக்குகிறது, சிலருக்கு இடையே பிரிவினைகளை ஏற்படுத்துகிறது. (மத். 10:34-36) நீங்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டதால் உங்கள் குடும்பத்தில் பிரிவினை உண்டாகியிருந்தால், ஒன்றை நினைவில் வையுங்கள்: ஆதாரமற்ற வதந்தி அல்லது அப்பட்டமான பொய்யின் காரணமாகத்தான் பெரும்பாலும் எதிர்ப்பு வருகிறது. உங்களுடைய நல்நடத்தை, விஷம் போன்ற இந்த வதந்திகளை முறிக்கும் மருந்தாக இருக்கலாம், எதிர்ப்பவர்களுடைய மனதை இளகவும் வைக்கலாம்.—1 பே. 2:12; 3:1, 2.

8. பவுலும் பர்னபாவும் ஏன் இக்கோனியாவை விட்டுப் போனார்கள், அவர்களுடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

8 கொஞ்ச காலத்துக்குப் பிறகு, இக்கோனியாவில் இருந்த எதிரிகள் பவுலையும் பர்னபாவையும் கல்லெறிந்து கொல்ல திட்டம் தீட்டினார்கள். விஷயம் தெரிந்தவுடன் இந்த மிஷனரிகள் இன்னொரு இடத்துக்குப் போகத் தீர்மானித்தார்கள். (அப். 14:5-7) இன்றும் நல்ல செய்தியை அறிவிக்கிறவர்கள் இதே முறையைத்தான் பின்பற்றுகிறார்கள். எதிரிகள் நம்மைச் சொல்லால் தாக்கும்போது தைரியமாகப் பேசுகிறோம். (பிலி. 1:7; 1 பே. 3:13-15) ஆனால், வன்முறை வெடிக்க ஆரம்பிக்கும்போது ஏடாகூடமாக எதையாவது செய்வதைத் தவிர்க்கிறோம்; இல்லையென்றால், நம் உயிருக்கோ சக கிறிஸ்தவர்களின் உயிருக்கோ அநாவசியமாக ஆபத்து உண்டாகிவிடும்.—நீதி. 22:3.

“உயிருள்ள கடவுளிடம் திரும்புங்கள்” (அப். 14:8-19)

9, 10. லீஸ்திரா எங்கே இருந்தது, அங்கிருந்த மக்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

9 பவுலும் பர்னபாவும் லீஸ்திராவுக்குப் புறப்பட்டுப் போனார்கள்; இது, இக்கோனியாவுக்குத் தென்மேற்கில் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற ஒரு ரோம குடியிருப்பு. பிசீதியாவிலிருந்த அந்தியோகியாவுடன் லீஸ்திராவுக்கு நெருங்கிய உறவு இருந்தது. ஆனால் பிசீதியாவிலிருந்த அந்தியோகியாவில் இருந்ததைப் போல லீஸ்திராவில் பெரிய யூத சமுதாயம் இல்லை. அங்கிருந்த மக்கள் கிரேக்க மொழி பேசியபோதிலும் அவர்களுடைய தாய்மொழி லிக்கவோனியா. இந்த நகரத்தில் ஜெபக்கூடம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை, அதனால்தான் பவுலும் பர்னபாவும் ஒரு பொது இடத்தில் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். முன்பு எருசலேமில், பிறவியிலேயே கால் ஊனமாயிருந்த ஒரு மனிதனை பேதுரு சுகப்படுத்தினார்; அதைப் பார்த்து திரளான மக்கள் விசுவாசிகளாக மாறினார்கள். (அப். 3:1-10) அதேபோல் லீஸ்திராவில், பிறவியிலேயே ஊனமாக இருந்த ஒரு மனிதனை பவுல் சுகப்படுத்தினார். (அப். 14:8-10) ஆனால், இவர் செய்த அற்புதம் விபரீத விளைவுகளை ஏற்படுத்தின.

10 இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் விவரிக்கப்பட்டபடி, ஊனமாக இருந்த அந்த மனிதன் காலூன்றி நின்றபோது லீஸ்திராவில் பொய் தெய்வங்களை வணங்கிய மக்கள் உடனே தவறான முடிவுக்கு வந்துவிட்டார்கள். பர்னபாவை சீயுஸ், அதாவது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம், என்று சொன்னார்கள்; பவுலை ஹெர்மஸ், அதாவது சீயுஸின் மகன் என்றும் தெய்வங்களின் தூதுவர் என்றும் கூறினார்கள். (பக்கம் 97-ல் “ லீஸ்திராவும் சீயுஸ் - ஹெர்மஸ் வழிபாடும்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) ஆனால் பர்னபாவும் பவுலும், தாங்கள் சொன்னதும் செய்ததும் இப்படிப்பட்ட பொய் தெய்வங்களின் அதிகாரத்தால் அல்ல, ஒரே உண்மைக் கடவுளான யெகோவாவின் அதிகாரத்தால்தான் என்பதைப் படாதபாடு பட்டு அந்தக் கூட்டத்தினருக்கு உணர்த்தினார்கள்.—அப். 14:11-14.

“இந்த வீணான காரியங்களை விட்டுவிட்டு, வானத்தையும் பூமியையும் . . . படைத்த உயிருள்ள கடவுளிடம் திரும்புங்கள்.”—அப்போஸ்தலர் 14:15

11-13. (அ) லீஸ்திரா மக்களிடம் பவுலும் பர்னபாவும் என்ன சொன்னார்கள்? (ஆ) பவுலும் பர்னபாவும் சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் முதல் பாடம் என்ன?

11 தடாலடியாகச் சம்பவங்கள் நடந்தபோதிலும், கேட்கிறவர்களுடைய இதயத்தைத் தொடும் விதத்தில் பேச பவுலும் பர்னபாவும் முடிந்தளவு முயற்சி செய்தார்கள். மற்ற மதங்களை சேர்ந்த மக்களுக்கு திறம்பட்ட விதத்தில் நல்ல செய்தியைப் பிரசங்கிப்பது எப்படி என்பதை லூக்கா இந்தச் சம்பவத்தின் மூலம் நமக்குத் தெரிவிக்கிறார். பவுலும் பர்னபாவும் கேட்போருடைய ஆர்வத்தை எப்படித் தூண்டினார்கள் என்பதைக் கவனியுங்கள். “மக்களே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போல் குறைபாடுகள் உள்ள மனிதர்கள்தான். இந்த வீணான காரியங்களை விட்டுவிட்டு, வானத்தையும் பூமியையும் கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்த உயிருள்ள கடவுளிடம் திரும்புங்கள், அதற்காகவே உங்களுக்கு நல்ல செய்தியைச் சொல்கிறோம். கடந்த காலங்களில் அவர் எல்லா தேசத்து மக்களையும் அவரவருடைய இஷ்டப்படி நடக்க அனுமதித்திருந்தார். ஆனாலும், அவர் தன்னைப் பற்றிச் சாட்சி கொடுக்காமல் இருந்ததில்லை. எப்படியென்றால், வானத்திலிருந்து மழையையும், பருவ காலங்களில் அமோக விளைச்சலையும், ஏராளமான உணவையும் உங்களுக்குத் தந்து, உங்கள் உள்ளத்தைச் சந்தோஷத்தால் நிரப்பி நன்மை செய்திருக்கிறார்” என்று சொன்னார்கள்.—அப். 14:15-17.

12 யோசிக்க வைக்கும் இந்த வார்த்தைகளிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? முதலாவதாக, பவுலும் பர்னபாவும் மற்றவர்களைவிட தங்களை உயர்வாக நினைக்கவில்லை. தங்களுக்கு இல்லாத தகுதியை இருப்பதுபோல் காட்டிக்கொள்ளவும் இல்லை. அதற்குப் பதிலாக, அந்த மக்களுக்கு இருக்கிற அதே பலவீனங்கள் தங்களுக்கும் இருக்கிறது என்பதைத் தாழ்மையுடன் ஒத்துக்கொண்டார்கள். உண்மைதான், பவுலும் பர்னபாவும் கடவுளுடைய சக்தியைப் பெற்றிருந்தார்கள், பொய்மத போதனைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள், கிறிஸ்துவுடன் ஆட்சி செய்யும் எதிர்பார்ப்பையும் பெற்றிருந்தார்கள். ஆனால், லீஸ்திராவிலிருந்த மக்களும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்தால் அதே ஆசீர்வாதங்களைப் பெற முடியும் என்பதை உணர்ந்திருந்தார்கள்.

13 ஊழியத்தில் சந்திக்கும் நபர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்? நமக்குச் சமமானவர்களாகப் பார்க்கிறோமா? சத்தியங்களைக் கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவும்போது பவுலையும் பர்னபாவையும் போல நமக்கு மகிமையைத் தேடாமல் இருக்கிறோமா? 19-ம் நூற்றாண்டின் கடைசியிலும் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் பிரசங்க வேலையை முன்நின்று நடத்திய பிரபல போதகரான சார்ல்ஸ் டேஸ் ரஸல் இந்த விஷயத்தில் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரி. அவர் இப்படி எழுதினார்: “எங்களுக்கோ எங்கள் எழுத்துக்களுக்கோ எந்தப் புகழையும், கௌரவத்தையும் நாங்கள் எதிர்பார்ப்பதில்லை; ‘ரெவரண்ட்’ அல்லது ‘ரபீ’ என்று அழைக்கப்படுவதையும் நாங்கள் விரும்புவதில்லை.” சகோதரர் ரஸலின் தாழ்மையான குணம் பவுலையும் பர்னபாவையும் நம் கண்முன் நிறுத்துகிறது. அதேபோல், நாம் பிரசங்கிக்கும்போது நமக்கு மகிமை சேர்ப்பது நம்முடைய நோக்கம் கிடையாது, “உயிருள்ள கடவுளிடம்” திரும்புவதற்கு எல்லா மக்களுக்கும் உதவுவதே நம் நோக்கம்.

14-16. லீஸ்திரா மக்களிடம் பவுலும் பர்னபாவும் பேசிய விஷயத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் இரண்டாவது, மூன்றாவது பாடங்கள் என்ன?

14 பவுல் மற்றும் பர்னபாவின் பேச்சிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் இரண்டாவது பாடத்தைக் கவனியுங்கள். இந்த மிஷனரிகள் சூழ்நிலைக்கு ஏற்றபடி பேசினார்கள். இக்கோனியாவிலிருந்த யூதர்களையும் யூத மதத்துக்கு மாறியவர்களையும் போல, லீஸ்திரா மக்களுக்கு வேதாகமத்தைப் பற்றியோ இஸ்ரவேலருக்கு கடவுள் செய்த மகத்தான செயல்களைப் பற்றியோ எள்ளளவும் தெரியாது. அதுமட்டுமல்ல, அவர்கள் விவசாயிகள். லீஸ்திராவில் மிதமான சீதோஷ்ண நிலை இருந்தது, பூமியும் செழிப்பாக இருந்தது. படைப்பாளரின் குணங்களை படம்பிடித்துக் காட்டும் நிறைய விஷயங்களை லீஸ்திரா மக்கள் தினம் தினம் பார்த்தார்கள்; பருவ காலங்களிலும் அமோக விளைச்சலிலும் கடவுளுடைய குணங்களை காட்டும் நிறைய ஆதாரங்களை அவர்கள் பார்த்தார்கள். அவர்களின் மனதைத் தொட இந்த விஷயங்களை அடிப்படையாக வைத்தே பவுலும் பர்னபாவும் பேசினார்கள்.—ரோமர் 1:19, 20.

15 நாமும் அதேபோல் சூழ்நிலைக்கு ஏற்றபடி பேச முடியுமா? ஒரு விவசாயி வித்தியாசமான வயல்களில் ஒரே மாதிரியான விதையை விதைத்தாலும், நிலத்தைப் பண்படுத்த அவர் வித்தியாசமான முறைகளைப் பயன்படுத்த வேண்டும். சிலவகை நிலம் ஏற்கெனவே பதமாக இருக்கும், விதைப்பதற்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், சிலவகை நிலங்களை உழுது பண்படுத்த வேண்டியிருக்கும். அதேபோல, நாம் விதைக்கிற விதை ஒன்றுதான், கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற நல்ல செய்திதான் அது. ஆனால் பவுலையும் பர்னபாவையும் போல் நாம் இருந்தால், நம் செய்தியைக் கேட்கும் மக்களின் சூழ்நிலையையும் மதப் பின்னணியையும் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம். பின்பு அதற்கேற்றபடி நாம் பேசும் விதத்தை மாற்றிக்கொள்வோம்.—லூக். 8:11, 15.

16 இந்தப் பதிவிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் மூன்றாவது பாடத்தைக் கவனிப்போம். சில நேரங்களில் நாம் கடும் முயற்சி எடுத்தாலும் நாம் தூவும் விதைகளைப் பறவைகள் கொத்திக்கொண்டு போய்விடலாம் அல்லது அவை கற்பாறை நிலத்தில் விழுந்துவிடலாம். (மத். 13:18-21) அப்படி நடந்தால் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். ஏனென்றால், ரோம கிறிஸ்தவர்களுக்கு பவுல் சொன்னதுபோல், ‘நாம் ஒவ்வொருவரும் [நம்முடைய நல்ல செய்தியைக் கேட்கும் ஒவ்வொருவரும்கூட] அவரவர் செயல்களுக்காகக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும்.’—ரோ. 14:12.

‘அவர்களைப் பாதுகாக்கும்படி யெகோவாவிடம் வேண்டிக்கொண்டார்கள்’ (அப். 14:20-28)

17. தெர்பையிலிருந்து வந்தபின் பவுலும் பர்னபாவும் எங்கே பயணம் செய்தார்கள், ஏன்?

17 பவுல் இறந்துவிட்டார் என்று நினைத்து எதிரிகள் அவரை லீஸ்திராவுக்கு வெளியே போட்ட பிறகு, சீஷர்கள் அவரைச் சூழ்ந்து நிற்க, அவர் எழுந்து நகருக்குள் போய் அன்று இரவு தங்கினார். அடுத்த நாள் அவரும் பர்னபாவும் 100 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த தெர்பைக்குப் பயணம் செய்தார்கள். சில மணிநேரங்களுக்கு முன்பு கல்லடிபட்ட பவுலுக்கு இந்தப் பயணம் எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்! இருந்தாலும், அவரும் பர்னபாவும் சோர்ந்துவிடாமல் பயணத்தைத் தொடர்ந்தார்கள். கடைசியில் தெர்பைக்கு போய் சேர்ந்து, அங்கே “நிறைய பேரைச் சீஷர்களாக்கினார்கள்.” பிறகு, அங்கிருந்து சீரியாவிலிருந்த அந்தியோகியாவில் அவர் தங்கியிருந்த இடத்துக்குக் குறுக்குப் பாதையில் போகாமல், ‘லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் [பிசீதியாவிலிருந்த] அந்தியோகியாவுக்கும் திரும்பிப் போனார்கள்.’ எதற்காக? ‘சீஷர்களைப் பலப்படுத்தி . . . விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக.’ (அப். 14:20-22) எவ்வளவு அருமையான முன்மாதிரி! சொந்த சௌகரியத்தைவிட சபையில் இருந்தவர்களுடைய தேவைகளுக்கே அவர்கள் முதலிடம் கொடுத்தார்கள். இன்றைக்கு இருக்கும் பயணக் கண்காணிகளும் மிஷனரிகளும்கூட அவர்களுடைய முன்மாதிரியையே பின்பற்றுகிறார்கள்.

18. மூப்பர்கள் எப்படி நியமிக்கப்படுகிறார்கள்?

18 பவுலும் பர்னபாவும் தங்கள் வார்த்தையாலும் முன்மாதிரியாலும் சீஷர்களைப் பலப்படுத்தியதோடு, ‘ஒவ்வொரு சபையிலும் அவர்களுக்காக மூப்பர்களை நியமித்தார்கள்.’ இந்த மிஷனரி பயணத்துக்கு “கடவுளுடைய சக்தியினால் அனுப்பப்பட்ட” போதிலும், பவுலும் பர்னபாவும் விரதமிருந்து, யெகோவாவிடம் ஜெபம் செய்து, அந்த மூப்பர்களை “பாதுகாக்கும்படி அவரிடம் வேண்டிக்கொண்டார்கள்.” (அப். 13:1-4; 14:23) அதே முறைதான் இன்றும் பின்பற்றப்படுகிறது. ஒரு சகோதரரை நியமிக்க சிபாரிசு செய்வதற்கு முன்பு, மூப்பர் குழு ஜெபம் செய்து, வேதவசனங்களில் சொல்லப்பட்டிருக்கும் தகுதிகள் அவருக்கு இருக்கின்றனவா என்பதை யோசித்துப் பார்க்கிறார்கள். (1 தீ. 3:1-10, 12, 13; தீத். 1:5-9; யாக். 3:17, 18; 1 பே. 5:2, 3) அந்தச் சகோதரர் எவ்வளவு காலம் கிறிஸ்தவராக இருக்கிறார் என்பதை வைத்து தீர்மானம் எடுக்கப்படுவதில்லை. அந்தச் சகோதரருடைய வாழ்க்கையில் கடவுளுடைய சக்தி எந்தளவு செயல்படுகிறது என்பதற்கு அவருடைய பேச்சு, நடத்தை, அவர் எடுத்திருக்கும் பெயர் ஆகியவை அத்தாட்சி அளிக்கும். கண்காணிகளுக்குரிய தகுதிகளை அவர் பூர்த்தி செய்வதைப் பொறுத்தே மந்தையை மேய்க்க அவருக்குத் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படுகிறது. (கலா. 5:22, 23) இப்படிப்பட்டவர்களை நியமிக்கும் பொறுப்பு வட்டாரக் கண்காணிகளுக்கு இருக்கிறது.—1 தீமோத்தேயு 5:22-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.

19. மூப்பர்கள் எதைப் பற்றிக் கணக்குக் கொடுக்க வேண்டும், பவுலையும் பர்னபாவையும் அவர்கள் எப்படிப் பின்பற்றுகிறார்கள்?

19 சபையை நடத்தும் விதத்தைப் பற்றித் தாங்கள் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை மூப்பர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். (எபி. 13:17) பவுலையும் பர்னபாவையும் போல ஊழியத்தை மூப்பர்கள் முன்நின்று நடத்துகிறார்கள். தங்களுடைய வார்த்தைகளால் சகோதர சகோதரிகளை பலப்படுத்துகிறார்கள். தங்கள் சொந்த சௌகரியத்தைவிட சபையில் இருக்கிறவர்களுடைய தேவைகளுக்கே முதலிடம் கொடுக்க மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.—பிலி. 2:3, 4.

20. நம் சகோதரர்களின் ஊழியத்தைப் பற்றிய அறிக்கைகளை வாசிக்கும்போது நாம் எப்படிப் பயனடைகிறோம்?

20 கடைசியில், பவுலும் பர்னபாவும் தங்கள் மிஷனரி ஊழியத்தின் மையத்துக்கு, அதாவது சீரியாவிலிருந்த அந்தியோகியாவுக்கு, திரும்பிய பிறகு, “தங்கள் மூலம் கடவுள் செய்த பல காரியங்களைப் பற்றியும், விசுவாசக் கதவை மற்ற தேசத்து மக்களுக்கு அவர் திறந்துவிட்டதைப் பற்றியும்” சொன்னார்கள். (அப். 14:27) உண்மையுள்ள நம் கிறிஸ்தவ சகோதரர்களின் ஊழியத்தைப் பற்றியும் அவர்களுடைய முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்ததைப் பற்றியும் வாசிக்க வாசிக்க... ‘யெகோவா தந்த அதிகாரத்தில் தைரியமாகப் பேச’ நாமும் உற்சாகம் பெறுவோம்.

a பக்கம் 96-ல், “ இக்கோனியா—பிரிகியர்களின் நகரம்” என்ற பெட்டியைப் பாருங்கள்.