Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 14

பயனியர்களுக்காக என்னென்ன பள்ளிகள் நடத்தப்படுகிறது?

பயனியர்களுக்காக என்னென்ன பள்ளிகள் நடத்தப்படுகிறது?

அமெரிக்கா

கிலியட் பள்ளி, பேட்டர்சன், நியு யார்க்

பனாமா

கடவுள் சொல்வதை நன்றாக கற்றுக்கொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் நிறைய ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். முழுநேரமாக ஊழியம் செய்பவர்களுக்கு விசேஷ பயிற்சி பள்ளிகளை நடத்துகிறார்கள். ‘ஊழியத்தை முழுமையாகச் செய்ய’ இந்தப் பள்ளிகள் அவர்களுக்கு உதவியாக இருக்கின்றன.—2 தீமோத்தேயு 4:5.

பயனியர் ஊழியப் பள்ளி. ஒழுங்கான பயனியர் ஊழியத்தை, ஒரு வருடத்திற்கும் அதிகமாக செய்கிறவர்கள் இந்தப் பள்ளியில் கலந்துகொள்ளலாம். ஏதாவது ஒரு ராஜ்ய மன்றத்தில் இந்தப் பள்ளி ஆறு நாட்களுக்கு நடக்கும். வீட்டுக்கு வீடு ஊழியம், மறுசந்திப்பு, பைபிள் படிப்பு... இதையெல்லாம் இன்னும் நன்றாகச் செய்வதற்கு இந்தப் பள்ளி பயனியர்களுக்கு உதவுகிறது. யெகோவாவிடம் உள்ள நட்பை பலப்படுத்துவதற்கும் ஊழியத்தை தொடர்ந்து செய்வதற்கும் இந்தப் பள்ளி அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி. இது இரண்டு மாதத்துக்கு நடக்கும். சொந்த ஊரை விட்டுவிட்டு வேறு இடத்துக்கு போய் ஊழியம் செய்ய தயாராக இருக்கிற பயனியர்களுக்காக இந்தப் பள்ளி நடத்தப்படுகிறது. 23 முதல் 65 வயது வரை உள்ள தம்பதிகளும் கல்யாணம் ஆகாத ஆண்களும் பெண்களும் இதில் கலந்துகொள்ளலாம். பிரசங்க வேலையை செய்ய அதிகமான ஆட்கள் தேவைப்படுகிற இடத்திற்குப் போக இவர்கள் தயாராக இருக்க வேண்டும். இதுவரை பூமியில் வாழ்ந்தவர்களில் தலைசிறந்த நற்செய்தியாளர் இயேசு கிறிஸ்துவைப் போலவே “இதோ, நான் இருக்கிறேன்! என்னை அனுப்புங்கள்!” என்று சொல்கிறார்கள். (ஏசாயா 6:8; யோவான் 7:29) அவர்கள் போகிற இடத்தில் வசதி குறைவாக இருக்கலாம். அங்கே இருக்கிற ஜனங்களுடைய பழக்கவழக்கம், சீதோஷ்ணம், சாப்பாடு... எல்லாமே வித்தியாசமாக இருக்கலாம். ஒருவேளை புதிய மொழியை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம். புது இடத்தில் போய் ஊழியம் செய்வதற்கு நிறைய நல்ல குணங்கள் தேவைப்படும். அதையெல்லாம் வளர்த்துக்கொள்ள இந்தப் பள்ளி உதவியாக இருக்கும். இன்னும் நிறையப் பொறுப்புகளை எடுத்து செய்வதற்கு யெகோவா அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்.

உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளி. “கிலியட்” என்ற எபிரெய வார்த்தைக்கு ‘சாட்சிக் குவியல்’ என்று அர்த்தம். 1943-ல் இந்தப் பள்ளி ஆரம்பித்ததிலிருந்து இது வரைக்கும் கிட்டத்தட்ட 8,000 பேர் மிஷனரிகளாகப் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். இவர்கள் “பூமியெங்கும்” சென்று பெரியளவில் சாட்சி கொடுத்திருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 13:47) உதாரணத்துக்கு, மிஷனரிகள் முதல் தடவையாக பெரு நாட்டிற்கு வந்தபோது, அங்கே ஒரு சபைகூட இல்லை. ஆனால், இன்று அந்த நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான சபைகள் இருக்கின்றன. அதேபோல், மிஷனரிகள் முதல் முதலில் ஜப்பானுக்கு வந்தபோது அங்கே 10 சாட்சிகள்கூட இல்லை. ஆனால் இன்று இரண்டு லட்சம் சாட்சிகள் அங்கு இருக்கிறார்கள். இந்தப் பள்ளியில் கலந்துகொள்கிறவர்கள் 5 மாதத்திற்கு பைபிளைப் பற்றி ஆழமாக படிக்கிறார்கள். விசேஷ பயனியர்கள், மிஷனரிகள், கிளை அலுவலகத்தில் வேலை செய்கிறவர்கள், வட்டார கண்காணியாக சேவை செய்கிறவர்கள் இந்தப் பள்ளியில் கலந்துகொள்வதற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். உலகம் முழுவதும் நடக்கிற பிரசங்க வேலையை இன்னும் முழுமையாக செய்வதற்கு இவர்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.

  • பயனியர் ஊழியப் பள்ளி ஏன் நடத்தப்படுகிறது?

  • யாருக்காக ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி நடத்தப்படுகிறது?