Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 6

தைரியசாலி தாவீது

தைரியசாலி தாவீது

உனக்குப் பயமா இருந்தா என்ன செய்வ?— ஓடிப்போய் அம்மா-அப்பாவை பிடிச்சுக்குவ, இல்லையா? அம்மா-அப்பா உனக்கு உதவி செய்வாங்க. உனக்கு உதவி செய்ய இன்னொருத்தரும் ரொம்ப ஆசையா இருக்கிறார். அவர் ரொம்ப பலசாலி. அவர் யார் தெரியுமா?— அவர்தான் யெகோவா. யெகோவாவை நம்பினா எதுக்குமே பயப்பட வேண்டாம். தாவீது-னு ஒரு பையன் இருந்தான். அவன் யெகோவா மேல நம்பிக்கை வைச்சிருந்தான். அவனைப் பத்தி இப்போ படிக்கலாமா?

தாவீது குழந்தையா இருந்தப்போ அவனோட அம்மா-அப்பா அவனுக்கு யெகோவாவை பத்தி சொல்லிக் கொடுத்தாங்க. தாவீதுக்கு யெகோவாவை ரொம்பப் பிடிக்கும். என்ன நடந்தாலும் தாவீது பயப்படவே மாட்டான். ஏன் தெரியுமா? யெகோவா நண்பன் மாதிரி கூடவே இருப்பார், அவனுக்கு உதவி செய்வார்னு நம்பினான். ஒருநாள் தாவீது ஆடு மேய்ச்சுட்டு இருந்தான். அப்போ பெரிய சிங்கம் வந்தது. ஒரு ஆட்டை பிடிச்சிட்டு போயிடுச்சு! தாவீது என்ன செய்தான்? அந்த சிங்கத்தைத் துரத்திட்டு ஓடினான். சிங்கத்தோட தாடியைப் பிடிச்சு, அடிச்சு கொன்னுட்டான். இன்னொரு நாள் ஆட்டை பிடிக்க கரடி வந்தது. அதையும் தாவீது கொன்னுட்டான். தாவீதுக்கு எப்படி இவ்ளோ சக்தி கிடைச்சுது?— ஆமா, யெகோவாதான் கொடுத்தார்.

இன்னொரு நாள் என்ன நடந்தது தெரியுமா? பெலிஸ்திய நாட்டு மக்கள் இஸ்ரவேல் மக்களோட சண்டை போட வந்தாங்க. பெலிஸ்திய நாட்டுல ரொம்ப ரொம்ப உயரமா ஒருத்தன் இருந்தான். பார்க்க ராட்சஸன் மாதிரி இருப்பான். அவன் பேரு கோலியாத். இஸ்ரவேல் மக்களை கேலி செய்தான், யெகோவாவையும் கேலி செய்தான். ‘தைரியம் இருந்தா என்கூட வந்து சண்டை போடுங்க, பார்க்கலாம்’னு சொன்னான். இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் அவனைப் பார்த்து பயந்து நடுங்கினாங்க. ஆனா தாவீது மட்டும் பயப்படவே இல்லை. ‘யெகோவா என்கூட இருக்கிறார். நான் உன்னோட சண்டை போட்டு, உன்னை கொல்லப்போறேன், பாரு’னு கோலியாத்கிட்ட சொன்னான். தாவீதுக்கு ரொம்ப தைரியம், இல்லையா?— சரி, அப்புறம் என்ன நடந்தது?

தாவீது ஒரு கவணையும் 5 கல்லையும் எடுத்துக்கிட்டான். நீ கவணைப் பார்த்திருக்கியா? இந்தப் படத்தில தாவீது கையில வைச்சிருக்கான் பாரு, அதுதான் கவண். கோலியாத் இந்தச் சின்ன பையனைப் பார்த்து, கிண்டல் பண்ணி சிரிச்சான். ஆனா தாவீது, ‘உன்கிட்ட கத்திதானே இருக்கு. என்கூட யெகோவாவே இருக்கிறார்’னு அவன்கிட்ட சொன்னான். உடனே, ஒரு கல்லை எடுத்து கவண்ல வைச்சு, கோலியாத்தைப் பார்த்து எறிஞ்சான். அந்தக் கல் நேரா கோலியாத்தோட நெத்தியில போய் அடிச்சிது. அவ்ளோதான்! கோலியாத் அப்படியே விழுந்து செத்துப்போயிட்டான். அதைப் பார்த்த பெலிஸ்திய வீரர்கள் ஒரே ஓட்டமா ஓடிட்டாங்க. இந்தச் சின்னப் பையன் எப்படி ஒரு ராட்சஸனைச் சாகடிச்சான்?— யெகோவாதான் அவனுக்கு உதவி செய்தார். அந்த ராட்சஸனைவிட யெகோவா ரொம்ப ரொம்ப பலசாலி.

யெகோவா தாவீதின் நண்பர், அதனால தாவீது எதுக்குமே பயப்படல

இந்தக் கதையில நீ என்ன கத்துக்கிட்ட?— எல்லாரையும்விட யெகோவாதான் பலசாலி. அவர் உனக்கு நண்பன் மாதிரி. இனிமேல் உனக்கு பயமா இருந்தா, யெகோவாகிட்ட ஜெபம் பண்ணு. அப்போ, நீயும் தாவீது மாதிரி தைரியமா இருக்கலாம்.

பைபிளில் படிங்க