Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 1

“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”

“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”

அதிகாரத்தின் முக்கியக் குறிப்பு

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு கற்றுக்கொடுத்த விஷயங்கள்

1, 2. யெகோவா சொன்ன எந்த வார்த்தைகளை இயேசுவின் மூன்று அப்போஸ்தலர்கள் கேட்டார்கள், அதைக் கேட்ட பிறகு என்ன செய்தார்கள்?

 ஒன்றைச் செய்யும்படி யெகோவா தேவனே உங்களிடம் சொல்வதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர் எதைச் செய்யச் சொன்னாலும் உடனே செய்வீர்களா? கண்டிப்பாகச் செய்வீர்கள்!

2 அப்படிப்பட்ட ஒரு அனுபவம்தான், கி.பி. 32-ல் பஸ்கா பண்டிகை முடிந்து கொஞ்ச நாளுக்குப் பிறகு, இயேசுவின் அப்போஸ்தலர்களான பேதுருவுக்கும் யாக்கோபுக்கும் யோவானுக்கும் கிடைத்தது. (மத்தேயு 17:1-5-ஐ வாசியுங்கள்.) அவர்கள் இயேசுவோடு சேர்ந்து “உயரமான ஒரு மலைக்கு” போனபோது, ஒரு தரிசனத்தைப் பார்த்தார்கள். எதிர்காலத்தில் இயேசு, மகிமையுள்ள பரலோக ராஜாவாக இருக்கும் காட்சியை அவர்கள் அதில் பார்த்தார்கள். பேதுருவுக்கு, அது ஒரு நிஜமான காட்சிபோல் தெரிந்ததால் அவர் தன்னையும் அந்தக் காட்சியின் பாகமாக நினைத்துப் பேச ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில், ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. சரித்திரத்தில் அதுவரை, சிலருக்கு மட்டுமே கிடைத்திருந்த ஒரு பாக்கியம் பேதுருவுக்கும் மற்ற இரண்டு அப்போஸ்தலர்களுக்கும் அப்போது கிடைத்தது. அவர்கள் யெகோவாவின் குரலைக் கேட்டார்கள்! அவர், இயேசுவைத் தன் மகன் என்று சொன்னதோடு, “இவர் சொல்வதைக் கேளுங்கள்” என்றும் சொன்னார். அப்போஸ்தலர்கள் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்கள். இயேசு கற்றுக்கொடுத்த விஷயங்களைக் கேட்டார்கள், அதைக் கேட்கும்படி மற்றவர்களையும் உற்சாகப்படுத்தினார்கள்.—அப். 3:19-23; 4:18-20.

வேறெந்த விஷயத்தையும்விட கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றித்தான் இயேசு அதிகமாகப் பேசினார்

3. நாம் ஏன் இயேசு சொல்வதைக் கேட்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்? அதனால் எந்த விஷயத்தைப் பற்றி நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்?

3 “இவர் சொல்வதைக் கேளுங்கள்” என்ற வார்த்தைகள், நம்முடைய நன்மைக்காக பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. (ரோ. 15:4) நாம் ஏன் இயேசு சொல்வதைக் கேட்க வேண்டும்? ஏனென்றால், அவர் யெகோவாவின் சார்பில் பேசுபவராக இருந்தார்; மனிதர்கள் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவருடைய தகப்பன் விரும்பினாரோ அதைத்தான் அவர் எப்போதும் கற்றுக்கொடுத்தார். (யோவா. 1:1, 14) வேறெந்த விஷயத்தையும்விட கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றித்தான், அதாவது கிறிஸ்து இயேசுவும் 1,44,000 பேரும் அடங்கிய மேசியானிய அரசாங்கத்தைப் பற்றித்தான், இயேசு அதிகமாகப் பேசினார். அதனால் அந்தப் பரலோக அரசாங்கத்தைப் பற்றி நாம் கவனமாக ஆராய்ந்து பார்க்கலாம். (வெளி. 5:9, 10; 14:1-3; 20:6) முதலில், அந்த அரசாங்கத்தைப் பற்றி இயேசு ஏன் அந்தளவுக்கு அதிகமாகப் பேசினார் என்று பார்க்கலாம்.

“இதயத்தில் நிறைந்திருப்பதை . . .”

4. கடவுளுடைய அரசாங்கம் தன் இதயத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது என்பதை இயேசு எப்படிக் காட்டினார்?

4 கடவுளுடைய அரசாங்கம் இயேசுவின் இதயத்தில் முக்கிய இடம் பிடித்திருந்தது. ஏன் அப்படிச் சொல்கிறோம்? பொதுவாக, நாம் எதை மிக முக்கியமாக நினைக்கிறோமோ அதைப் பற்றித்தான் அதிகமாகப் பேசுவோம். “இதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது” என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். (மத். 12:34) தனக்குக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு பேசினார். நான்கு சுவிசேஷப் புத்தகங்களிலும் அந்த அரசாங்கத்தைப் பற்றி 100-க்கும் அதிகமான குறிப்புகள் இருக்கின்றன; அவற்றில் பெரும்பாலானவற்றை இயேசுதான் சொன்னார். கடவுளுடைய அரசாங்கம்தான் இயேசு பிரசங்கித்த செய்தியின் மையப் பொருளாக இருந்தது. அதனால்தான் அவர், “மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார். (லூக். 4:43) அவர் உயிரோடு எழுப்பப்பட்ட பிறகும்கூட, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றித்தான் தன் சீஷர்களிடம் பேசினார். (அப். 1:3) நிச்சயமாகவே, அந்த அரசாங்கத்தை இயேசு மிக உயர்வாக மதித்ததால்தான் அந்தளவுக்கு அதைப் பற்றிப் பேசினார்.

5-7. (அ) கடவுளுடைய அரசாங்கம் யெகோவாவின் இதயத்திலும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது என்று எப்படிச் சொல்கிறோம்? உதாரணம் கொடுங்கள். (ஆ) கடவுளுடைய அரசாங்கம் நம் இதயத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது என்று நாம் எப்படிக் காட்டலாம்?

5 கடவுளுடைய அரசாங்கம் யெகோவாவின் இதயத்திலும் முக்கிய இடம் பிடித்திருந்தது. எப்படிச் சொல்கிறோம்? நமக்குத் தெரிந்தபடி, யெகோவாதான் தன்னுடைய ஒரே மகனாகிய இயேசுவை இந்தப் பூமிக்கு அனுப்பினார்; யெகோவாவிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களைத்தான் இயேசு கற்றுக்கொடுத்தார். (யோவா. 7:16; 12:49, 50) அதுமட்டுமல்ல, இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிய விஷயங்களை நான்கு சுவிசேஷப் புத்தகங்களிலும் பதிவு செய்ய வைத்திருப்பதும்கூட யெகோவாதான். இது எதை அர்த்தப்படுத்துகிறது என்று கவனியுங்கள்.

‘கடவுளுடைய அரசாங்கம் என் இதயத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறதா?’ என்று நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்

6 உங்களுடைய குடும்ப ஃபோட்டோக்களை ஒரு ஆல்பத்தில் வைப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்களிடம் எக்கச்சக்கமான ஃபோட்டோக்கள் இருக்கின்றன, ஆனால் எல்லாவற்றையுமே ஆல்பத்தில் வைக்க முடியாது. அப்போது என்ன செய்வீர்கள்? எதையெல்லாம் அதில் வைக்கலாம் என்று தீர்மானிப்பீர்கள். சுவிசேஷப் புத்தகங்கள் ஒரு ஃபோட்டோ ஆல்பத்தைப் போலத்தான் இருக்கின்றன; அவை, இயேசுவைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இயேசு பூமியில் இருந்தபோது சொன்ன எல்லா விஷயங்களையும், செய்த எல்லா விஷயங்களையும் பதிவு செய்யும்படி சுவிசேஷ எழுத்தாளர்களை யெகோவா தூண்டவில்லை. (யோவா. 20:30; 21:25) அவற்றில் சிலவற்றை மட்டுமே பதிவு செய்ய அவர்களுக்குத் தன்னுடைய சக்தியைக் கொடுத்தார்; அந்த விஷயங்கள், இயேசு எதற்காக ஊழியம் செய்தார் என்பதையும், யெகோவா எதை மிக முக்கியமாக நினைக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. (2 தீ. 3:16, 17; 2 பே. 1:21) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு கற்றுக்கொடுத்த விஷயங்கள் சுவிசேஷப் புத்தகங்களில் நிறைந்திருப்பதால், அந்த அரசாங்கம் யெகோவாவின் இதயத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது என்று நாம் நம்பலாம். தன்னுடைய அரசாங்கத்தைப் பற்றி நாம் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று யெகோவா விரும்புவது எவ்வளவு பெரிய விஷயம், இல்லையா?

7 ‘கடவுளுடைய அரசாங்கம் என் இதயத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறதா?’ என்று நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். அது நம் இதயத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தால், அதைப் பற்றி இயேசு என்ன கற்றுக்கொடுத்தார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்போம்; அதாவது, அது ஏன் முக்கியம்... அது எப்படி வரும்... அது எப்போது வரும்... என்றெல்லாம் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்போம்.

“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”—எப்படி?

8. கடவுளுடைய அரசாங்கத்தின் முக்கியத்துவத்தை இயேசு எப்படிக் காட்டினார்?

8 இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தைப் பற்றிக் கவனியுங்கள். கடவுளுடைய அரசாங்கம் எதையெல்லாம் சாதிக்கும் என்பதை இயேசு அதில் மிக எளிமையாகவும் சுருக்கமாகவும் சொன்னார்; இப்படி, அது எந்தளவுக்கு முக்கியம் என்பதைக் காட்டினார். அந்த ஜெபத்தில், ஏழு விஷயங்களுக்காக விண்ணப்பம் செய்யும்படி அவர் சொன்னார். முதல் மூன்று விஷயங்கள் யெகோவாவின் நோக்கங்களோடு சம்பந்தப்பட்டவை. அதாவது, அவருடைய பெயர் பரிசுத்தப்படுவது, அவருடைய அரசாங்கம் வருவது, அவருடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேறுவது ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டவை. (மத்தேயு 6:9, 10-ஐ வாசியுங்கள்.) இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடைய விஷயங்கள். மேசியானிய அரசாங்கத்தின் மூலமாகத்தான் யெகோவா தன் பெயரைப் பரிசுத்தப்படுத்தி, தன் விருப்பத்தை நிறைவேற்றுவார்.

9, 10. (அ) கடவுளுடைய அரசாங்கம் எப்படி வரும்? (ஆ) பைபிள் தரும் எந்த வாக்குறுதிகள் நிறைவேறுவதைப் பார்க்க நீங்கள் ஏங்குகிறீர்கள்?

9 கடவுளுடைய அரசாங்கம் எப்படி வரும்? “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்” என்று நாம் ஜெபம் செய்யும்போது, அந்த அரசாங்கம் ஒரு நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கிறோம். அந்த அரசாங்கம் வரும்போது, பூமியிலுள்ள நிலைமைகளை அது அடியோடு மாற்றிவிடும். மனித அரசாங்கங்களையும் இந்தப் பொல்லாத உலகத்திலுள்ள மற்ற எல்லாவற்றையும் அழித்துவிட்டு, நீதியுள்ள புதிய உலகத்தைக் கொண்டுவரும். (தானி. 2:44; 2 பே. 3:13) அந்த அரசாங்கம் முழு பூமியையும் ஒரு பூஞ்சோலையாக மாற்றும். (லூக். 23:43) கடவுளுடைய நினைவில் இருக்கிறவர்கள் உயிரோடு எழுப்பப்பட்டு, தங்களுடைய அன்பானவர்களோடு சேர்ந்து வாழ்வார்கள். (யோவா. 5:28, 29) கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் பரிபூரணம் அடைந்து, என்றென்றும் வாழ்வார்கள். (வெளி. 21:3-5) கடைசியில், யெகோவாவின் விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவது போலவே பூமியிலும் முழுமையாக நிறைவேறும்! பைபிள் தரும் இந்த வாக்குறுதிகள் நிறைவேறுவதைப் பார்க்க நீங்கள் ஏங்கவில்லையா? உண்மையில், கடவுளுடைய அரசாங்கம் வர வேண்டும் என்று நீங்கள் ஜெபம் செய்யும்போதெல்லாம், இந்த அருமையான வாக்குறுதிகள் நிறைவேற வேண்டும் என்றுதான் கேட்கிறீர்கள்.

10 கடவுளுடைய அரசாங்கம் இன்னும் ‘வரவில்லை’ என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால், மனித அரசாங்கங்கள் இன்னும் ஆட்சி செய்துகொண்டுதான் இருக்கின்றன, நீதியுள்ள புதிய உலகமும் இன்னும் வரவில்லை. ஆனால், சந்தோஷமான செய்தி என்னவென்றால், கடவுளுடைய அரசாங்கம் ஏற்கெனவே நிறுவப்பட்டுவிட்டது. இதைப் பற்றி அடுத்த அதிகாரத்தில் விவரமாகப் பார்ப்போம். அந்த அரசாங்கம் எப்போது நிறுவப்படும் என்பதைப் பற்றியும், இந்தப் பூமிக்கு எப்போது வரும் என்பதைப் பற்றியும் இயேசு சொன்னதை இப்போது பார்க்கலாம்.

கடவுளுடைய அரசாங்கம் எப்போது நிறுவப்படும்?

11. கடவுளுடைய அரசாங்கம் நிறுவப்படுவது சம்பந்தமாக இயேசு எதைச் சுட்டிக்காட்டினார்?

11 கடவுளுடைய அரசாங்கம் முதல் நூற்றாண்டில் நிறுவப்படும் என்று இயேசுவின் சீஷர்களில் சிலர் எதிர்பார்த்தார்கள்; ஆனால், அது அப்போது நிறுவப்படாது என்று இயேசு சுட்டிக்காட்டினார். (அப். 1:6) இரண்டு வருஷ இடைவெளிக்குள் இயேசு சொன்ன இரண்டு உவமைகளைப் பற்றிக் கவனியுங்கள்.

12. கோதுமைப் பயிர்களையும் களைகளையும் பற்றிய உவமை, கடவுளுடைய அரசாங்கம் முதல் நூற்றாண்டில் நிறுவப்படவில்லை என்பதை எப்படிக் காட்டியது?

12 கோதுமைப் பயிர்களையும் களைகளையும் பற்றிய உவமை. (மத்தேயு 13:24-30-ஐ வாசியுங்கள்.) ஒருவேளை கி.பி. 31-ன் ஆரம்பத்தில் இயேசு இந்த உவமையைச் சொல்லியிருக்கலாம். அதன் அர்த்தத்தை அவர் தன் சீஷர்களுக்கு விளக்கினார். (மத். 13:36-43) அந்த உவமையின் சாராம்சமும் அர்த்தமும் இதுதான்: அப்போஸ்தலர்களின் மரணத்துக்குப் பிறகு, கோதுமைப் பயிர்களுக்கு (‘கடவுளுடைய அரசாங்கத்தின் மகன்களான’ பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு) இடையே களைகளை (போலி கிறிஸ்தவர்களை) பிசாசு விதைப்பான். அறுவடைக் காலம்வரை, அதாவது ‘இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை’ கோதுமைப் பயிர்களும் களைகளும் ஒன்றாக வளரும்படி விடப்படும். அறுவடைக் காலம் ஆரம்பித்த பிறகு, களைகள் ஒன்றுசேர்க்கப்படும். பின்பு, கோதுமைப் பயிர்கள் ஒன்றுசேர்க்கப்படும். அப்படியென்றால், முதல் நூற்றாண்டில், கடவுளுடைய அரசாங்கம் நிறுவப்படாது என்றும் கோதுமைப் பயிர்களும் களைகளும் சேர்ந்து வளரும் காலம் முடிந்த பிறகுதான் அது நிறுவப்படும் என்றும் அந்த உவமை காட்டியது. அதன்படியே, அவை சேர்ந்து வளரும் காலம் 1914-ல் முடிந்தது. அந்த வருஷத்தில்தான் அறுவடைக் காலம் ஆரம்பமானது.

13. இயேசு பரலோகத்துக்குப் போனதுமே மேசியானிய ராஜாவாக நியமிக்கப்பட மாட்டார் என்பதை எந்த உதாரணத்தின் மூலம் சுட்டிக்காட்டினார்?

13 மினா பற்றிய உவமை. (லூக்கா 19:11-13-ஐ வாசியுங்கள்.) கி.பி. 33-ல், இயேசு கடைசி தடவை எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்த சமயத்தில் இந்த உவமையைச் சொன்னார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த சிலர், எருசலேமுக்குப் போனதுமே இயேசு தன்னுடைய அரசாங்கத்தை நிறுவுவார் என்று நினைத்தார்கள். அவர்கள் நினைத்தது தவறு என்பதையும், அவருடைய அரசாங்கம் பல வருஷங்களுக்குப் பிறகுதான் நிறுவப்படும் என்பதையும் காட்ட இயேசு இன்னொரு உவமையைச் சொன்னார். அதில், ‘அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு’ தன்னை ஒப்பிட்டுப் பேசினார். அவர் ‘ராஜ அதிகாரத்தைப் பெற்றுவர தூர தேசத்துக்குப் புறப்பட்டதாக’ சொன்னார். a இயேசுவின் விஷயத்தில் அந்த ‘தூர தேசம்’ பரலோகத்தைக் குறித்தது. அங்குதான் அவர் தன்னுடைய தகப்பனிடமிருந்து ராஜ அதிகாரத்தைப் பெறவிருந்தார். ஆனால், பரலோகத்துக்குப் போனதுமே தான் மேசியானிய ராஜாவாக நியமிக்கப்பட மாட்டார் என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. குறித்த காலம்வரை அவர் கடவுளுடைய வலது பக்கத்தில் காத்திருக்க வேண்டியிருந்தது. சொல்லப்போனால், அவர் பல நூற்றாண்டுகளாகக் காத்திருந்தார்.—சங். 110:1, 2; மத். 22:43, 44; எபி. 10:12, 13.

கடவுளுடைய அரசாங்கம் எப்போது வரும்?

14. (அ) அப்போஸ்தலர்களில் நான்கு பேர் கேட்ட கேள்விக்கு இயேசு என்ன பதில் சொன்னார்? (ஆ) இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் அவருடைய பிரசன்னத்தைப் பற்றியும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும் என்ன காட்டுகிறது?

14 இயேசு கொல்லப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன், அவருடைய அப்போஸ்தலர்களில் நான்கு பேர் அவரிடம், “உங்களுடைய பிரசன்னத்துக்கும் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள். (மத். 24:3; மாற். 13:4) அப்போது இயேசு, அதற்கு அடையாளமாக உலகம் முழுவதும் என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்று சொன்னார். அது மத்தேயு 24, 25 அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடவுளுடைய அரசாங்கம் நிறுவப்படும்போது அவருடைய பிரசன்னம் ஆரம்பமாகும்; கடவுளுடைய அரசாங்கம் வரும்போது அவருடைய பிரசன்னம் முடிவடையும். இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் 1914-ஆம் வருஷத்திலிருந்து நிறைவேறிவருகிறது என்பதற்குப் போதுமான அத்தாட்சி இருக்கிறது. b அதனால், அந்த வருஷத்தில்தான் இயேசுவின் பிரசன்னம் ஆரம்பமானது, கடவுளுடைய அரசாங்கமும் நிறுவப்பட்டது.

15, 16. “இந்தத் தலைமுறை” யாரைக் குறிக்கிறது?

15 அப்படியானால், கடவுளுடைய அரசாங்கம் எப்போது வரும்? அந்தத் தேதியை இயேசு சொல்லவில்லை. (மத். 24:36) ஆனால், அது ரொம்பச் சீக்கிரத்தில் வரும் என்பதை அவர் சொன்ன ஒரு விஷயம் தெளிவாகக் காட்டுகிறது. அவர் கொடுத்த அடையாளத்தின் நிறைவேற்றத்தை “இந்தத் தலைமுறை” பார்த்த பிறகுதான் கடவுளுடைய அரசாங்கம் வருமென்று அவர் சுட்டிக்காட்டினார். (மத்தேயு 24:32-34-ஐ வாசியுங்கள்.) “இந்தத் தலைமுறை” யாரைக் குறிக்கிறது? இயேசுவின் வார்த்தைகளிலிருந்து அதை இப்போது பார்க்கலாம்.

16 “இந்தத் தலைமுறை.” உலக மக்களைப் பற்றி இயேசு பேசிக்கொண்டிருந்தாரா? இல்லை. அவர் இந்தத் தீர்க்கதரிசனத்தை யாரிடம் சொன்னார் என்பதை யோசித்துப் பாருங்கள். ‘அவரிடம் தனியாக வந்து’ கேள்வி கேட்ட சில அப்போஸ்தலர்களிடம்தான் சொன்னார். (மத். 24:3) சீக்கிரத்தில் அந்த அப்போஸ்தலர்கள் கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்படவிருந்தார்கள். ‘இந்தத் தலைமுறையை’ பற்றி சொல்வதற்கு முன்பு இயேசு சொன்ன விஷயத்தைக் கவனியுங்கள். “அத்தி மர உவமையிலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதில் இளங்கிளைகள் தோன்றி, இலைகள் துளிர்க்க ஆரம்பித்ததுமே கோடைக் காலம் நெருங்கிவிட்டது என்று தெரிந்துகொள்கிறீர்கள். அப்படியே, இவையெல்லாம் நடப்பதை நீங்கள் பார்க்கும்போது, கதவுக்குப் பக்கத்திலேயே அவர் வந்துவிட்டார் என்று தெரிந்துகொள்ளுங்கள்” என்று அவர் சொன்னார். இயேசு முன்னறிவித்த சம்பவங்களை உலக மக்கள் அல்ல, பரலோக நம்பிக்கையுள்ள அவருடைய சீஷர்கள்தான் பார்ப்பார்கள்; அதன் முக்கியத்துவத்தையும், அதாவது இயேசு ‘கதவுக்குப் பக்கத்திலேயே வந்துவிட்டார்’ என்பதையும் அவர்கள்தான் புரிந்துகொள்வார்கள். அப்படியென்றால், இயேசு “இந்தத் தலைமுறை” என்ற வார்த்தைகளை, பரலோக நம்பிக்கையுள்ள தன் சீஷர்களை மனதில் வைத்தே சொன்னார்.

17. “தலைமுறை” என்ற வார்த்தையும், “இவையெல்லாம்” என்ற வார்த்தையும் எதை அர்த்தப்படுத்துகின்றன?

17 “இவையெல்லாம் நடப்பதற்கு முன்பு . . . ஒருபோதும் ஒழிந்துபோகாது.” இந்த வார்த்தைகள் எப்படி நிறைவேறும்? இதைத் தெரிந்துகொள்ள, “தலைமுறை” என்ற வார்த்தையும், “இவையெல்லாம்” என்ற வார்த்தையும் எதை அர்த்தப்படுத்துகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். “தலைமுறை” என்ற வார்த்தை, ஒரே காலப்பகுதியில் வாழ்கிற வித்தியாசப்பட்ட வயதினரைக் குறிக்கிறது. ஒரு தலைமுறையின் காலப்பகுதி நீண்டதாக இருக்காது; அதுமட்டுமல்ல, அந்தக் காலப்பகுதிக்கு ஒரு முடிவும் இருக்கிறது. (யாத். 1:6) “இவையெல்லாம்” என்பது, இயேசுவுடைய பிரசன்னத்தின்போது, அதாவது 1914-ஆம் வருஷத்திலிருந்து ‘மிகுந்த உபத்திரவம்வரை,’ நடக்கப்போவதாகச் சொல்லப்பட்டுள்ள எல்லா சம்பவங்களையும் குறிக்கிறது.—மத். 24:21.

18, 19. இயேசு சொன்ன ‘இந்தத் தலைமுறையை’ பற்றி நாம் என்ன புரிந்துகொள்ளலாம், இதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்?

18 இயேசு சொன்ன ‘இந்தத் தலைமுறையில்’ பரலோக நம்பிக்கையுள்ள இரண்டு தொகுதியினர் இருக்கிறார்கள். முதல் தொகுதியினர், இயேசு சொன்ன அடையாளம் 1914-ல் நிறைவேற ஆரம்பித்ததைப் பார்த்தவர்கள். இரண்டாவது தொகுதியினர், கொஞ்சக் காலத்துக்காவது முதல் தொகுதியினர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்ந்தவர்கள். அந்த இரண்டாவது தொகுதியினரில் சிலராவது மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும்போது உயிரோடு இருப்பார்கள். அந்த இரண்டு தொகுதியினரையும் ஏன் ஒரே தலைமுறை என்று சொல்கிறோம்? ஏனென்றால், அந்த இரண்டு தொகுதியினரும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களாக கொஞ்சக் காலத்துக்காவது ஒரே காலப்பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள். c

19 இதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்? இயேசு பரலோகத்தில் ஏற்கெனவே ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டார் என்பதற்கான அடையாளம் உலகம் முழுவதும் தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, ‘இந்தத் தலைமுறையின்’ பாகமாக இன்று உயிரோடு இருக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு ரொம்ப வயதாகிக்கொண்டே போகிறது. இருந்தாலும், மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு முன்பு அவர்கள் அத்தனை பேரும் இறந்துபோக மாட்டார்கள், கொஞ்சம் பேராவது உயிரோடு இருப்பார்கள். அப்படியென்றால், ரொம்பச் சீக்கிரத்தில் கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியை ஆட்சி செய்யும் என்ற முடிவுக்கு நாம் வரலாம். இயேசு கற்றுக்கொடுத்தபடி, “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்” என்று நாம் செய்யும் ஜெபம் நிறைவேறுவதைப் பார்க்கும்போது எந்தளவுக்குப் பூரித்துப்போவோம்!

20. என்ன முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும், அடுத்த அதிகாரம் எதைப் பற்றி விளக்கும்?

20 “இவர் சொல்வதைக் கேளுங்கள்” என்று யெகோவா தன் மகனைப் பற்றிச் சொன்னதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாம், அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய ஆசைப்படுகிறோம். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு கற்றுக்கொடுத்த எல்லா விஷயங்களிலும் நாம் மிகுந்த ஆர்வம் காட்டுகிறோம். அந்த அரசாங்கம் ஏற்கெனவே எதையெல்லாம் சாதித்திருக்கிறது என்றும், இனிமேல் எதையெல்லாம் சாதிக்கப்போகிறது என்றும் தெரிந்துகொள்வது மிக முக்கியம். அதற்கு இந்தப் புத்தகம் உதவி செய்யும். பரலோகத்தில் கடவுளுடைய அரசாங்கம் நிறுவப்பட்ட காலத்தில் நடந்த பரபரப்பான சம்பவங்களைப் பற்றி அடுத்த அதிகாரம் விளக்கும்.

a மகா ஏரோது தான் இறப்பதற்கு முன், யூதேயாவையும் மற்ற பகுதிகளையும் ஆட்சி செய்ய தன் மகன் ஆர்க்கேலேயசைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், ஆர்க்கேலேயஸ் தன் ஆட்சியை ஆரம்பிப்பதற்கு முன் அகஸ்டஸ் சீசரின் அங்கீகாரத்தைப் பெற தூரத்திலிருந்த ரோமுக்குப் போக வேண்டியிருந்தது. இயேசு சொன்ன உவமை, மக்களுக்கு இதை ஞாபகப்படுத்தியிருக்கலாம்.

c முதல் தொகுதியைச் சேர்ந்த பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் இறந்த பிறகு, அதாவது 1914-ல் ‘வேதனைகள் ஆரம்பமானதை’ பார்த்தவர்கள் இறந்த பிறகு, பரலோக நம்பிக்கையுள்ளவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யாரும் ‘இந்தத் தலைமுறையை’ சேர்ந்தவர்கள் கிடையாது.—மத். 24:8.