Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 3

யெகோவா தன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறார்

யெகோவா தன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறார்

அதிகாரத்தின் முக்கியக் குறிப்பு

யெகோவா தனக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத் தன்னுடைய நோக்கத்தைப் படிப்படியாக வெளிப்படுத்துகிறார்

1, 2. யெகோவா தன்னுடைய நோக்கத்தை மக்களுக்கு எப்படி வெளிப்படுத்தினார்?

 பொறுப்புள்ள பெற்றோர் குடும்ப விஷயங்களைப் பற்றி தங்களுடைய பிள்ளைகளிடம் பேசுவார்கள். ஆனாலும், எல்லா விஷயங்களையும் அவர்களிடம் சொல்ல மாட்டார்கள். பிள்ளைகளால் புரிந்துகொள்ள முடிந்த விஷயங்களை மட்டுமே பேசுவார்கள்.

2 அதேபோல், யெகோவாவும் தன்னுடைய நோக்கத்தை மனிதர்களுக்குப் படிப்படியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவும், எந்தச் சமயத்தில் வெளிப்படுத்த வேண்டுமென நினைத்தாரோ அந்தச் சமயத்தில் அதைச் செய்திருக்கிறார். யெகோவா தன்னுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை எப்படி ஆரம்பத்திலிருந்தே வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை இப்போது பார்க்கலாம்.

ஒரு அரசாங்கம் ஏன் தேவைப்பட்டது?

3, 4. மனிதர்களுடைய வாழ்க்கையை யெகோவா முன்தீர்மானித்தாரா? விளக்குங்கள்.

3 மனிதர்களைப் படைத்தபோது, மேசியானிய அரசாங்கம் யெகோவாவுடைய நோக்கத்தின் பாகமாக இருக்கவில்லை. ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், மனிதர்களுடைய வாழ்க்கையை அவர் முன்தீர்மானிக்கவில்லை. சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையோடுதான் அவர்களைப் படைத்தார். ஆதாம்-ஏவாளிடம் தன்னுடைய நோக்கத்தைப் பற்றி இப்படிச் சொன்னார்: “நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.” (ஆதி. 1:28) நன்மை, தீமை பற்றிய தன்னுடைய நெறிமுறைகளை அவர்கள் மதித்து நடக்க வேண்டும் என்றும் யெகோவா எதிர்பார்த்தார். (ஆதி. 2:16, 17) இந்த விஷயத்தில், ஆதாமும் ஏவாளும் கடவுளுக்கு உண்மையாக இருந்திருக்க முடியும். அவர்களும் அவர்களுடைய சந்ததியும் கடவுளுக்கு உண்மையாக இருந்திருந்தால், மேசியானிய அரசாங்கம் தேவைப்பட்டிருக்காது. இந்த முழு பூமியும் பரிபூரண மனிதர்களால் நிறைந்திருக்கும், எல்லாருமே யெகோவாவை வணங்கும் மக்களாக இருந்திருப்பார்கள்.

4 ஆனால், சாத்தானும் ஆதாம்-ஏவாளும் கீழ்ப்படியாமல் போய்விட்டார்கள். அதற்காக, இந்தப் பூமியைப் பரிபூரண மனிதர்களால் நிரப்ப வேண்டுமென்ற நோக்கத்தை யெகோவா மாற்றிவிடவில்லை. அதை நிறைவேற்றும் விதத்தை மட்டுமே மாற்றினார். அதை இப்படி விளக்கலாம்: ஒரு இடத்துக்குப் போய்ச் சேர்வதற்காக ஒரு குறிப்பிட்ட தண்டவாளத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில், சிலருடைய கெட்ட செயல்களால் தடம்புரண்டுவிடலாம். ஆனால், யெகோவாவின் நோக்கம் அப்படிப்பட்டது கிடையாது. தான் சொன்னதை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது. (ஏசாயா 55:11-ஐ வாசியுங்கள்.) தன் நோக்கத்தை நிறைவேற்றுவதில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால், வேறு ஏதாவது விதத்தில் அதை நிறைவேற்றுவார். a (யாத். 3:14, 15) அதை எந்த விதத்தில் நிறைவேற்றப்போகிறார் என்பதைப் பற்றி தன்னுடைய உண்மை ஊழியர்களுக்கு சரியான சமயத்தில் தெரியப்படுத்துவார்.

5. ஏதேனில் நடந்த கலகத்துக்குப் பிறகு யெகோவா என்ன செய்தார்?

5 ஏதேனில் நடந்த கலகத்துக்குப் பிறகு, யெகோவா ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்த தீர்மானித்தார். (மத். 25:34) அந்த அரசாங்கம், மனிதர்களை மறுபடியும் பரிபூரண நிலைக்குக் கொண்டுவரும். அதோடு, சாத்தானுடைய ஆட்சியால் வந்த பாதிப்புகளைச் சரிசெய்யும். ஏதேனில் கலகம் நடந்த சமயத்திலிருந்தே அந்த அரசாங்கத்தைப் பற்றி யெகோவா படிப்படியாக வெளிப்படுத்த ஆரம்பித்தார். (ஆதி. 3:14-19) ஆனாலும், அதைப் பற்றிய எல்லா விவரங்களையும் ஒரே சமயத்தில் வெளிப்படுத்தவில்லை.

அரசாங்கத்தைப் பற்றிய உண்மைகளை யெகோவா வெளிப்படுத்த ஆரம்பிக்கிறார்

6. யெகோவா என்ன வாக்குக் கொடுத்தார், ஆனால் எதைத் தெரியப்படுத்தவில்லை?

6 யெகோவா தன்னுடைய முதல் தீர்க்கதரிசனத்திலேயே, ஒரு “சந்ததி” பாம்பை ஒழித்துக்கட்டும் என்று வாக்குக் கொடுத்தார். (ஆதியாகமம் 3:15-ஐ வாசியுங்கள்.) ஆனால், அந்தச் சந்ததியும், பாம்பின் சந்ததியும் யார் என்பதை அப்போது அவர் தெரியப்படுத்தவில்லை. சொல்லப்போனால், சுமார் 2,000 வருஷங்களுக்கு அதைப் பற்றி அவர் எதையும் சொல்லவில்லை. b

7. ஆபிரகாமை யெகோவா ஏன் தேர்ந்தெடுத்தார், இதிலிருந்து என்ன முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?

7 பிறகு, ஆபிரகாமை யெகோவா தேர்ந்தெடுத்து அவர் மூலமாக அந்தச் சந்ததி வரும் என்று சொன்னார். ஆபிரகாம், ‘யெகோவாவின் பேச்சை கேட்டு’ நடந்ததால்தான் அவரைத் தேர்ந்தெடுத்தார். (ஆதி. 22:18) இதிலிருந்து ஒரு முக்கியமான பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்: தனக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு மட்டுமே யெகோவா தன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறார்.சங்கீதம் 25:14-ஐ வாசியுங்கள்.

8, 9. வாக்குக் கொடுக்கப்பட்ட சந்ததியைப் பற்றி ஆபிரகாமிடமும் யாக்கோபிடமும் யெகோவா என்ன விவரங்களைத் தெரியப்படுத்தினார்?

8 யெகோவா ஒரு தேவதூதர் மூலமாக தன்னுடைய நண்பரான ஆபிரகாமிடம் அந்தச் சந்ததியைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரியப்படுத்தினார். அவர் வாக்குக் கொடுத்த அந்தச் சந்ததி ஒரு மனிதராக இருப்பார் என்று சொன்னார். (ஆதி. 22:15-17; யாக். 2:23) ஆனால், இந்த மனிதர் எப்படிப் பாம்பை ஒழித்துக்கட்டுவார்? அந்தப் பாம்பு யார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை பிற்பாடு படிப்படியாக வெளிப்படுத்தினார்.

9 வாக்குக் கொடுத்த அந்தச் சந்ததி ஆபிரகாமின் பேரனான யாக்கோபின் வம்சத்தில் வர வேண்டும் என்று யெகோவா முடிவு செய்தார். யாக்கோபு கடவுள்மேல் அதிக விசுவாசம் வைத்திருந்தார். (ஆதி. 28:13-22) அந்தச் சந்ததி யாக்கோபின் மகனான யூதாவின் வம்சத்தில் வருவார் என்று யெகோவா யாக்கோபிடம் சொன்னார். யூதாவின் வம்சத்தில் வருபவரிடம் “செங்கோல்,” அதாவது ஆட்சி செய்யும் அதிகாரம், கொடுக்கப்படும் என்றும் ‘ஜனங்கள் எல்லாரும் அவருக்குக் கீழ்ப்படிவார்கள்’ என்றும் யாக்கோபு தீர்க்கதரிசனம் சொன்னார். (ஆதி. 49:1, 10) இதன் மூலம், வாக்குக் கொடுத்த அந்தச் சந்ததி ஒரு ராஜாவாக ஆவார் என்பதை யெகோவா தெரியப்படுத்தினார்.

10, 11. தாவீதிடமும் தானியேலிடமும் யெகோவா ஏன் தன்னுடைய நோக்கத்தைத் தெரியப்படுத்தினார்?

10 யூதா இறந்து சுமார் 650 வருஷங்களுக்குப் பிறகு, அவருடைய வம்சத்தில் வந்த தாவீது ராஜாவிடம் யெகோவா தன்னுடைய நோக்கத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரியப்படுத்தினார். தாவீதை, “தன்னுடைய இதயத்துக்குப் பிடித்த” மனிதன் என்று யெகோவா சொன்னார். (1 சா. 13:14; 17:12; அப். 13:22) தாவீது கடவுளுக்குப் பயந்து நடந்ததால், அவரோடு யெகோவா ஒரு ஒப்பந்தம் செய்யத் தீர்மானித்தார். அந்த ஒப்பந்தத்தின்படி, தாவீதின் வம்சத்தில் வருகிற ஒருவர் என்றென்றும் ஆட்சி செய்வார் என்று வாக்குக் கொடுத்தார்.—2 சா. 7:8, 12-16.

11 தாவீதோடு ஒப்பந்தம் செய்து சுமார் 500 வருஷங்களுக்குப் பிறகு, தானியேல் தீர்க்கதரிசி மூலமாக யெகோவா இன்னொரு விஷயத்தைத் தெரியப்படுத்தினார். மேசியா, அதாவது அபிஷேகம் செய்யப்பட்டவர், சரியாக எந்த வருஷத்தில் தோன்றுவார் என்பதைத் தெரியப்படுத்தினார். (தானி. 9:25) யெகோவா தானியேலை “மிகவும் பிரியமானவன்” என்று சொன்னார். ஏனென்றால், தானியேல் அதிக பயபக்தியோடு யெகோவாவை வணங்கிவந்தார்.—தானி. 6:16; 9:22, 23.

12. தானியேலிடம் என்ன செய்யும்படி சொல்லப்பட்டது, ஏன்?

12 வாக்குக் கொடுத்த சந்ததியைப் பற்றி, அதாவது மேசியாவைப் பற்றி, நிறைய விவரங்களை எழுத தானியேலைப் போன்ற உண்மையுள்ள தீர்க்கதரிசிகளை யெகோவா பயன்படுத்தினார். ஆனாலும், அவர்கள் எழுதிய தீர்க்கதரிசனங்களை அவர்களாலேயே முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால், தன்னுடைய ஊழியர்கள் அதைப் புரிந்துகொள்வதற்கு யெகோவா குறித்திருந்த நேரம் அப்போது வரவில்லை. உதாரணத்துக்கு, கடவுளுடைய அரசாங்கம் நிறுவப்படுவது சம்பந்தமான ஒரு தரிசனம் தானியேலுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், யெகோவா குறித்திருந்த நேரம் வரும்வரை அந்தத் தீர்க்கதரிசனத்தை முத்திரை போட்டு வைக்கும்படி தானியேலிடம் சொல்லப்பட்டது. அதைப் புரிந்துகொள்வதற்கான நேரம் வரும்போதுதான் ‘உண்மையான அறிவு பெருகும்.’—தானி. 12:4.

மேசியானிய அரசாங்கத்தைப் பற்றிய விவரங்களை எழுத தானியேலைப் போன்ற உண்மையுள்ள தீர்க்கதரிசிகளை யெகோவா பயன்படுத்தினார்

கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி இயேசு தெரியப்படுத்திய விஷயங்கள்

13. (அ) வாக்குக் கொடுக்கப்பட்ட சந்ததி யார்? (ஆ) ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தைப் பற்றி இயேசு தெரியப்படுத்திய விஷயங்கள் என்ன?

13 தாவீதின் வம்சத்தில் வந்த, வாக்குக் கொடுக்கப்பட்ட சந்ததி இயேசுதான் என்று யெகோவா தெளிவாகக் காட்டினார். அவர்தான் ராஜாவாக ஆட்சி செய்யப்போகிறவர். (லூக். 1:30-33; 3:21, 22) இயேசு தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்தபோது, கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி மக்கள் புரிந்துகொள்ள அவர் உதவினார். இருட்டில் இருந்த மக்கள்மேல் சூரிய வெளிச்சம் பிரகாசித்ததுபோல் அது இருந்தது. (மத். 4:13-17) உதாரணத்துக்கு, சாத்தானை ‘கொலைகாரன்’ என்றும் ‘பொய்க்குத் தகப்பன்’ என்றும் அழைப்பதன் மூலம், ஆதியாகமம் 3:14, 15-ல் சொல்லப்பட்டுள்ள ‘பாம்பு’ யார் என்பதை இயேசு தெளிவாக அடையாளம் காட்டினார். (யோவா. 8:44) யோவானுக்கு இயேசு கொடுத்த வெளிப்படுத்துதலில், ‘பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறவன்தான்’ அந்த ‘பழைய பாம்பு’ என்று சொன்னார். c (வெளிப்படுத்துதல் 1:1; 12:9-ஐ வாசியுங்கள்.) அதோடு, வாக்குக் கொடுக்கப்பட்ட சந்ததியான இயேசு, சாத்தானை ஒழித்துக்கட்டி ஏதேனில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தை எப்படி நிறைவேற்றுவார் என்றும் சொன்னார்.—வெளி. 20:7-10.

14-16. இயேசு வெளிப்படுத்திய எல்லா சத்தியங்களையும் முதல் நூற்றாண்டிலிருந்த சீஷர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டார்களா? விளக்குங்கள்.

14 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு விவரமாகச் சொன்ன விஷயங்களை இந்தப் புத்தகத்தின் முதல் அதிகாரத்தில் பார்த்தோம். ஆனால், அந்த அரசாங்கத்தைப் பற்றி தன்னுடைய சீஷர்கள் தெரிந்துகொள்ள விரும்பிய எல்லா விவரங்களையும் அவர் சொல்லவில்லை. அவர் குறிப்பாகச் சொன்ன சில விஷயங்களைக்கூட அவரைப் பின்பற்றியவர்கள் பிறகுதான் புரிந்துகொண்டார்கள். சில சமயங்களில், தங்களுடைய எஜமான் வெளிப்படுத்திய சத்தியங்களைப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் முழுமையாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள். அதற்குச் சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.

15 கடவுளுடைய அரசாங்கத்தில் தன்னோடு சேர்ந்து ஆட்சி செய்யப்போகிறவர்கள் பூமியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கி.பி. 33-ல் இயேசு தெளிவாகச் சொன்னார். அவர்கள் பரலோகத்துக்குரிய உடலில் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்றும் சொன்னார். ஆனால், அவருடைய சீஷர்கள் இந்த விஷயத்தை உடனடியாகப் புரிந்துகொள்ளவில்லை. (தானி. 7:18; யோவா. 14:2-5) கடவுளுடைய அரசாங்கம் எப்போது நிறுவப்படும் என்பதையும் அதே வருஷத்தில் தெரியப்படுத்தினார். அவர் பரலோகத்துக்குப் போய் பல வருஷங்களுக்குப் பிறகுதான் அது நிறுவப்படும் என்பதை உவமைகள் மூலம் தெரியப்படுத்தினார். (மத். 25:14, 19; லூக். 19:11, 12) இந்த முக்கியமான விஷயத்தைச் சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதனால்தான், இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட பிறகு, “இந்தச் சமயத்திலா இஸ்ரவேலுக்கு அரசாங்கத்தை மீட்டுத் தரப்போகிறீர்கள்?” என்று அவரிடம் கேட்டார்கள். ஆனால், இயேசு அந்தச் சமயத்தில் அவர்களிடம் அதைப் பற்றி கூடுதலாக எதையும் சொல்லவில்லை. (அப். 1:6, 7) இன்னொரு சமயத்தில், அவரோடு சேர்ந்து ஆட்சி செய்யப்போகிற ‘சிறுமந்தையின்’ பாகமாக இல்லாத ‘வேறே ஆடுகளை’ பற்றி இயேசு சொன்னார். (யோவா. 10:16; லூக். 12:32) 1914-ல் கடவுளுடைய அரசாங்கம் நிறுவப்பட்டு சில வருஷங்களுக்குப் பிறகுதான், இந்த இரண்டு வகுப்பாரும் யார் என்பதை கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள்.

16 இயேசு பூமியில் இருந்தபோது தன்னுடைய சீஷர்களிடம் நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்க முடியும். ஆனால், அவற்றை அவர்களால் அப்போது புரிந்துகொள்ள முடியாது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. (யோவா. 16:12) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நிறைய விஷயங்கள் முதல் நூற்றாண்டிலேயே வெளிப்படுத்தப்பட்டன. ஆனாலும், அது அறிவு பெருகுவதற்கான சமயமாக இருக்கவில்லை.

‘முடிவு காலத்தில்’ உண்மையான அறிவு பெருகுகிறது

17. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய சத்தியங்களைப் புரிந்துகொள்ள நாம் என்ன செய்ய வேண்டும், ஆனால், அது மட்டும் போதுமா?

17 ‘முடிவு காலத்தில்’ பலர் கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி “அலசி ஆராய்வார்கள், உண்மையான அறிவும் பெருகும்” என்று தானியேலுக்கு யெகோவா வாக்குக் கொடுத்தார். (தானி. 12:4) அந்த உண்மையான அறிவைப் பெற விரும்புகிறவர்கள் அதற்காகக் கடினமாக உழைக்க வேண்டும். நாம் என்னதான் பைபிளை அலசி ஆராய்ந்தாலும், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய சத்தியங்களைப் புரிந்துகொள்ளும் பாக்கியத்தை யெகோவா நமக்குக் கொடுத்தால்தான் அவற்றை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.மத்தேயு 13:11-ஐ வாசியுங்கள்.

18. யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்கள் எப்படி விசுவாசத்தையும் மனத்தாழ்மையையும் காட்டியிருக்கிறார்கள்?

18 1914-க்கு முன்பு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய சத்தியங்களை யெகோவா படிப்படியாக வெளிப்படுத்தியது போல, முடிவு காலத்திலும் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார். கடந்த 100 வருஷங்களில், கடவுளுடைய மக்கள் தங்களுடைய புரிந்துகொள்ளுதலில் பல தடவை மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. இந்தப் புத்தகத்தின் 4, 5 அதிகாரங்களில் அதைப் பற்றிப் பார்ப்போம். யெகோவாவின் ஆதரவு இல்லாததால்தான் அவர்கள் அப்படிச் செய்ய வேண்டியிருந்ததா? இல்லை. யெகோவா தன்னுடைய மக்களுக்கு எப்போதுமே ஆதரவு கொடுக்கிறார். ஏனென்றால், அவருக்குப் பயந்து நடக்கிறவர்கள், அவர் விரும்புகிற குணங்களான விசுவாசத்தையும், மனத்தாழ்மையையும் காட்டியிருக்கிறார்கள். (எபி. 11:6; யாக். 4:6) பைபிளில் சொல்லப்பட்டுள்ள எல்லா வாக்குறுதிகளும் கண்டிப்பாக நிறைவேறும் என்பதில் யெகோவாவின் ஊழியர்கள் விசுவாசம் வைத்திருக்கிறார்கள். அந்த வாக்குறுதிகள் எப்படி நிறைவேறும் என்பதைத் தவறாகப் புரிந்துகொள்ளும்போது அதை மனத்தாழ்மையோடு ஒத்துக்கொள்கிறார்கள். அவர்கள் எந்தளவுக்கு மனத்தாழ்மையோடு நடந்துகொண்டார்கள் என்பதைப் பற்றி மார்ச் 1, 1925, காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “கடவுள் சொன்னதை கடவுளால் மட்டுமே விளக்க முடியும் என்று நமக்குத் தெரியும். அவர் தன்னுடைய வார்த்தையைத் தன் மக்களுக்குச் சரியான விதத்தில், சரியான நேரத்தில் விளக்குவார்.”

“கடவுள் . . . தன்னுடைய வார்த்தையைத் தன் மக்களுக்குச் சரியான விதத்தில், சரியான நேரத்தில் விளக்குவார்”

19. இப்போது நாம் எதைப் புரிந்துகொள்ள யெகோவா உதவியிருக்கிறார், ஏன்?

19 கடவுளுடைய அரசாங்கம் 1914-ல் நிறுவப்பட்டபோது, அந்த அரசாங்கம் பற்றிய தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறும் என்பதை கடவுளுடைய மக்கள் ஓரளவுதான் புரிந்து வைத்திருந்தார்கள். (1 கொ. 13:9, 10, 12) கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சில விஷயங்களை நாம் தவறாகப் புரிந்துகொண்டோம். முந்தின பாராவில் குறிப்பிடப்பட்ட காவற்கோபுரம், இன்னொரு விஷயத்தையும் சொன்னது: “ஒரு தீர்க்கதரிசனம் நிறைவேறிய பிறகு அல்லது நிறைவேறும் சமயத்தில்தான் நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடியும் என்பதை மனதில் வைக்க வேண்டும்.” இது எவ்வளவு உண்மை என்பதை இத்தனை வருஷங்களில் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். இந்த முடிவு காலத்தின் கடைசிக் கட்டத்தில், கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தமான நிறைய தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியிருக்கின்றன, நிறைவேறிக்கொண்டும் வருகின்றன. கடவுளுடைய மக்கள் மனத்தாழ்மையுள்ளவர்களாகவும், தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ள மனமுள்ளவர்களாகவும் இருப்பதால், தன்னுடைய நோக்கத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள யெகோவா அவர்களுக்கு உதவியிருக்கிறார். அதனால், உண்மையான அறிவு பெருகியிருக்கிறது!

புரிந்துகொள்ளுதலில் ஏற்பட்ட மாற்றங்கள் கடவுளுடைய மக்களுக்கு ஒரு சோதனையாக இருந்தது

20, 21. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் புரிந்துகொள்ளுதலில் மாற்றங்கள் வந்தபோது அவர்கள் என்ன செய்தார்கள்?

20 சத்தியத்தை நாம் புரிந்துகொண்ட விதத்தில் யெகோவா சில மாற்றங்களைச் செய்யும்போது, ஒருவிதத்தில் நாம் சோதிக்கப்படுகிறோம். அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள நமக்கு இரண்டு குணங்கள் தேவைப்படுகின்றன. அதாவது விசுவாசமும் மனத்தாழ்மையும் தேவைப்படுகின்றன. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு சோதனை வந்தது. அந்தச் சமயத்தில் வாழ்ந்த ஒரு யூத கிறிஸ்தவராக உங்களைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். திருச்சட்டத்தை நீங்கள் உயர்வாக மதிக்கிறீர்கள், ஒரு இஸ்ரவேலராக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறீர்கள். இப்போது கடவுளுடைய சக்தியின் உதவியால் அப்போஸ்தலன் பவுல் எழுதிய சில கடிதங்கள் உங்களுக்குக் கிடைக்கின்றன. இனிமேல் திருச்சட்டத்தைப் பின்பற்ற வேண்டியதில்லை என்றும் இஸ்ரவேல் மக்களைக் கடவுள் ஒதுக்கிவிட்டார் என்றும் அந்தக் கடிதங்களில் வாசிக்கிறீர்கள். இஸ்ரவேலர்களுக்குப் பதிலாக யூதர்களும் மற்ற தேசத்து மக்களும் அடங்கிய ஆன்மீக இஸ்ரவேலர்களை யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றும் வாசிக்கிறீர்கள். (ரோ. 10:12; 11:17-24; கலா. 6:15, 16; கொலோ. 2:13, 14) அந்தச் சூழ்நிலையில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

21 கடவுளுடைய சக்தியின் உதவியோடு பவுல் எழுதிய விஷயங்களை மனத்தாழ்மையுள்ள கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அவர்களை யெகோவா ஆசீர்வதித்தார். (அப். 13:48) மற்றவர்கள் அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, தங்களுடைய சொந்தக் கருத்திலேயே விடாப்பிடியாக இருந்தார்கள். (கலா. 5:7-12) அவர்கள் தங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் கிறிஸ்துவோடு ஆட்சி செய்யும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.—2 பே. 2:1.

22. கடவுளுடைய நோக்கம் சம்பந்தமான புரிந்துகொள்ளுதலில் மாற்றங்கள் வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

22 கடந்த சில வருஷங்களில், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி நாம் புரிந்துகொண்ட விஷயங்களில் யெகோவா சில மாற்றங்களைச் செய்திருக்கிறார். உதாரணத்துக்கு, வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகள் பிரிக்கப்படுவது போல, கடவுளுடைய அரசாங்கத்தின் செய்தியைக் கேட்காத ஆட்களிலிருந்து கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் பிரிக்கப்படுவது எப்போது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள யெகோவா நமக்கு உதவியிருக்கிறார். 1,44,000 பேரைத் தேர்ந்தெடுப்பது எப்போது முடிவடையும் என்பதை நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். அதோடு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு சொன்ன உவமைகளின் அர்த்தம் என்ன... 1,44,000 பேரில் கடைசி நபர் எப்போது பரலோகத்துக்கு எழுப்பப்படுவார்... என்பதையும் அவர் நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். d நம்முடைய புரிந்துகொள்ளுதலில் இதுபோன்ற மாற்றங்கள் வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுடைய விசுவாசம் பலப்படுமா? மனத்தாழ்மையுள்ள தன் மக்களை யெகோவா தொடர்ந்து வழிநடத்துகிறார் என்பதை உங்களால் உணர முடிகிறதா? தனக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு யெகோவா தன்னுடைய நோக்கத்தைப் படிப்படியாக வெளிப்படுத்துவார் என்ற உங்கள் நம்பிக்கையை அடுத்துவரும் அதிகாரங்கள் இன்னும் பலப்படுத்தும்.

a கடவுளுடைய பெயர், “ஆகும்படி” என்ற அர்த்தமுள்ள எபிரெய வினைச்சொல்லிலிருந்து வருகிறது. யெகோவா என்ற பெயர், அவர் தன் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. “கடவுளுடைய பெயரின் அர்த்தம்” என்ற பெட்டியைப் பக்கம் 43-ல் பாருங்கள்.

b நம்மைப் பொறுத்தவரை 2,000 வருஷங்கள் என்பது ஒரு நீண்ட காலப்பகுதியாகத் தெரியலாம். ஆனால், அன்றிருந்தவர்கள் ரொம்பக் காலம் வாழ்ந்தார்கள் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஆதாம் இறப்பதற்கு முன்பே, நோவாவின் அப்பாவான லாமேக்கு பிறந்துவிட்டார்; லாமேக்கு இறப்பதற்கு முன்பே நோவாவின் மகனான சேம் பிறந்துவிட்டார்; சேம் இறப்பதற்கு முன்பே ஆபிரகாம் பிறந்துவிட்டார். 2,000 வருஷ காலப்பகுதிக்குள் இவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.—ஆதி. 5:5, 31; 9:29; 11:10, 11; 25:7.

c “சாத்தான்” என்ற பெயர் எபிரெய வேதாகமத்தில் 18 தடவை வருகிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் 30 தடவைக்கும் மேல் வருகிறது. எபிரெய வேதாகமம் சாத்தானுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பதிலாக மேசியாவை அடையாளம் கண்டுகொள்வதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. மேசியா வந்த பிறகு, சாத்தான் யார் என்பதை அவர் வெட்டவெளிச்சமாக்கினார். அது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

d புரிந்துகொள்ளுதலில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்த காவற்கோபுர கட்டுரைகளைப் பாருங்கள்: அக்டோபர் 15, 1995, பக்கங்கள் 23-28; ஜனவரி 15, 2008, பக்கங்கள் 20-24; ஜூலை 15, 2008, பக்கங்கள் 17-21; ஜூலை 15, 2013, பக்கங்கள் 9-14.