Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 4

யெகோவா தன் பெயரை மகிமைப்படுத்துகிறார்

யெகோவா தன் பெயரை மகிமைப்படுத்துகிறார்

அதிகாரத்தின் முக்கியக் குறிப்பு

கடவுளுடைய மக்கள் அவருடைய பெயருக்குத் தர வேண்டிய முக்கியத்துவத்தைத் தருகிறார்கள்

1, 2. புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் எப்படிக் கடவுளுடைய பெயருக்கு மகிமை சேர்த்திருக்கிறது?

 டிசம்பர் 2, 1947, செவ்வாய்க்கிழமை அன்று, நியு யார்க்கிலுள்ள புருக்லின் பெத்தேலைச் சேர்ந்த பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்கள் சிலர், ஒரு மாபெரும் வேலையை ஆரம்பித்தார்கள். அதுதான் பைபிளை மொழிபெயர்க்கும் வேலை. அந்த வேலை ரொம்பக் கஷ்டமாக இருந்தாலும், 12 வருஷங்களுக்கு அதை விடாமுயற்சியுடன் செய்தார்கள். கடைசியில், மார்ச் 13, 1960, ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த வேலை முடிந்தது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஜூன் 18, 1960-ல் இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் நடந்த ஒரு மாநாட்டில், சகோதரர் நேதன் நார், பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை ஆங்கிலத்தில் வெளியிட்டார். அதைப் பற்றிய அறிவிப்பைக் கேட்டு, அங்கே கூடியிருந்தவர்கள் சிலிர்த்துப்போனார்கள். ‘இந்த நாள், உலகம் முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு மிகவும் சந்தோஷமான நாள்!’ என்று சகோதரர் நார் சொன்னார். கூடிவந்திருந்த எல்லாருடைய உணர்ச்சிகளையும் அவருடைய வார்த்தைகள் வெளிக்காட்டின. கடவுளுடைய பெயர் நிறைய இடங்களில் இருந்ததுதான் அந்தப் புதிய மொழிபெயர்ப்பின் ஒரு சிறப்பம்சம். அது அவர்களுடைய சந்தோஷத்துக்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.

1950-ல் நடந்த தேவராஜ்ய அதிகரிப்பு என்ற மாநாட்டில் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது (இடது: யாங்கி ஸ்டேடியம், நியு யார்க் நகரம்; வலது: கானா)

2 நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர் இல்லை. கடவுளுடைய பெயரை மனிதர்களின் நினைவிலிருந்தே துடைத்தழிக்க வேண்டும் என்பதுதான் சாத்தானின் நோக்கம். ஆனால், பரலோக நம்பிக்கையுள்ள யெகோவாவின் ஊழியர்கள் சாத்தானுக்கு எதிராகத் துணிந்து செயல்பட்டார்கள். அன்று வெளியிடப்பட்ட புதிய உலக மொழிபெயர்ப்பின் முன்னுரையில், “கடவுளுடைய பெயர் மூலமொழியில் எந்தெந்த இடங்களில் இருந்ததோ அங்கே அதை மறுபடியும் பயன்படுத்தியிருப்பதுதான் இந்த மொழிபெயர்ப்பின் மிக முக்கியமான அம்சம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, இந்த புதிய உலக மொழிபெயர்ப்பு யெகோவா என்ற பெயரை 7,000 தடவைக்கும் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறது. இந்த மொழிபெயர்ப்பு நம் பரலோகத் தகப்பனான யெகோவாவின் பெயருக்கு எந்தளவு மகிமை சேர்த்திருக்கிறது!

3. (அ) கடவுளுடைய பெயரின் அர்த்தத்தைப் பற்றி நம் சகோதரர்கள் எதைப் புரிந்துகொண்டார்கள்? (ஆ) யாத்திராகமம் 3:13, 14-ஐ நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? (“ கடவுளுடைய பெயரின் அர்த்தம்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

3 “இருக்கிறவராக இருக்கிறேன்” என்பதுதான் கடவுளுடைய பெயரின் அர்த்தம் என்று பைபிள் மாணாக்கர்கள் ஆரம்பத்தில் நினைத்தார்கள். (யாத். 3:14, தமிழ் O.V.) அதனால்தான், ஜனவரி 1, 1926, காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “யெகோவா என்ற பெயர், . . . அவருக்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை என்பதை அர்த்தப்படுத்துகிறது.” ஆனால், புதிய உலக மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய வேலையை ஆரம்பிப்பதற்கு முன், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள யெகோவா அவர்களுக்கு உதவினார். அவர் என்றென்றும் இருக்கிறவர் என்பது மட்டுமே அவருடைய பெயரின் அர்த்தம் கிடையாது. அவர் நோக்கமுள்ள கடவுள், தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுபவர் என்ற மிக முக்கியமான அர்த்தமும் அந்தப் பெயரில் அடங்கியிருப்பதைப் புரிந்துகொள்ள உதவினார். யெகோவா என்ற பெயரின் நேரடி அர்த்தம் “ஆகும்படி செய்பவர்” என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அவர் இந்தப் பிரபஞ்சத்தையும் புத்திக்கூர்மையுள்ள படைப்புகளையும் உண்டாக்கியதோடு, தொடர்ந்து தன்னுடைய விருப்பமும் நோக்கமும் நிறைவேறிக்கொண்டே இருக்கும்படி செய்கிறார். ஆனாலும், கடவுளுடைய பெயர் மகிமைப்படுத்தப்படுவது ஏன் ரொம்ப முக்கியம்? கடவுளுடைய பெயரை மகிமைப்படுத்துவதற்கு நாம் என்ன செய்யலாம்?

கடவுளுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்

4, 5. (அ) “உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று ஜெபிக்கும்போது என்ன செய்யும்படி நாம் யெகோவாவிடம் கேட்கிறோம்? (ஆ) கடவுள் எப்போது அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவார், எப்படி?

4 தன்னுடைய பெயர் மகிமைப்பட வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். சொல்லப்போனால், அவருடைய முக்கியமான நோக்கமே அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதுதான். இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தில் அவர் குறிப்பிட்ட முதல் விஷயம் அதைத் தெளிவாகக் காட்டுகிறது. “உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று ஜெபிக்கும்படி அவர் சொன்னார். (மத். 6:9) இப்படி ஜெபிக்கும்போது என்ன செய்யும்படி நாம் யெகோவாவிடம் கேட்கிறோம்?

5 முதல் அதிகாரத்தில் பார்த்தபடி, யெகோவாவின் நோக்கத்தோடு சம்பந்தப்பட்ட மூன்று விஷயங்களுக்காக ஜெபம் செய்ய இயேசு சொல்லிக்கொடுத்தார். “உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்பது முதல் விஷயம். ‘உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் நிறைவேற வேண்டும்’ என்பவை அடுத்த இரண்டு விஷயங்கள். (மத். 6:10) அப்படியென்றால், கடவுளுடைய அரசாங்கம் வருவதற்கும் அவருடைய விருப்பம் நிறைவேறுவதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி யெகோவாவிடம் நாம் கேட்பதுபோல், அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்கிறோம். அதாவது, ஏதேனில் கலகம் நடந்த சமயத்திலிருந்து அவருடைய பெயருக்கு ஏற்பட்ட எல்லா களங்கத்தையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி யெகோவாவிடம் கேட்கிறோம். இப்படி நாம் ஜெபிக்கும்போது யெகோவா என்ன செய்வார்? ‘மற்ற ஜனங்களின் நடுவில் கெடுக்கப்பட்ட என்னுடைய மகத்தான பெயரை நான் பரிசுத்தப்படுத்துவேன்’ என்று அவர் சொல்கிறார். (எசே. 36:23; 38:23) அர்மகெதோன் போரில், பொல்லாதவர்களை யெகோவா அழிக்கும்போது எல்லா படைப்புகளுக்கும் முன்பாக தன்னுடைய பெயரை அவர் பரிசுத்தப்படுத்துவார்.

6. கடவுளுடைய பெயரை நம்மால் எப்படிப் பரிசுத்தப்படுத்த முடியும்?

6 யெகோவாவின் பெயர் ஏற்கெனவே முழுமையான அர்த்தத்தில் பரிசுத்தமாக இருக்கிறது. அதனால், அந்தப் பெயரை நம்மால் இன்னும் பரிசுத்தமாக்கவோ புனிதமாக்கவோ முடியாது. ஆனாலும், மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்த யெகோவா தன் ஊழியர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அப்படியென்றால், கடவுளுடைய பெயரை நம்மால் எப்படிப் பரிசுத்தப்படுத்த முடியும்? “பரலோகப் படைகளின் யெகோவா . . . மட்டும்தான் பரிசுத்தமானவர் என்பதை மனதில் வைக்க வேண்டும்” என்று ஏசாயா எழுதினார். அதோடு, தன்னுடைய மக்களைப் பற்றி ஏசாயா மூலம் யெகோவா இப்படிச் சொன்னார்: “அவர்கள் என் பெயரைப் பரிசுத்தப்படுத்துவார்கள். . . . இஸ்ரவேலின் கடவுளுக்கு முன்னால் பயபக்தியுடன் நிற்பார்கள்.” (ஏசா. 8:13; 29:23) அதனால், யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்த, மற்ற எல்லா பெயர்களையும்விட அவருடைய பெயரைத் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும் உயர்ந்ததாகவும் நாம் நினைக்க வேண்டும். அதோடு, மற்றவர்களும் அந்தப் பெயரைப் பரிசுத்தப்படுத்த நாம் உதவ வேண்டும். யெகோவாவை நம்முடைய ஆட்சியாளராக ஏற்றுக்கொண்டு அவருக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படியும்போது கடவுளுடைய பெயருக்கு நாம் பயபக்தியையும் காட்டுகிறோம்.—நீதி. 3:1; வெளி. 4:11.

கடவுளுடைய பெயரால் அழைக்கப்படவும் அதை மகிமைப்படுத்தவும் தயாராவது

7, 8. (அ) கடவுளுடைய மக்கள் அவருடைய பெயரால் அழைக்கப்படுவதற்கு முன்பு, ஏன் கொஞ்சக் காலம் தேவைப்பட்டது? (ஆ) இப்போது நாம் எதைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்?

7 1870-லிருந்து கடவுளுடைய ஊழியர்கள் தங்களுடைய பிரசுரங்களில் அவருடைய பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஆகஸ்ட் 1879-ல் வந்த காவற்கோபுரத்திலும் அதே வருஷத்தில் வெளிவந்த மணமகளின் பாடல்கள் என்ற ஆங்கிலப் பாட்டுப் புத்தகத்திலும் யெகோவா என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும், தன்னுடைய பரிசுத்த பெயரால் அழைக்கப்படும் மாபெரும் பாக்கியத்தைப் பெறுவதற்கு முன் அவர்கள் சில தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று யெகோவா எதிர்பார்த்தார். அதற்கு அவர்களை யெகோவா எப்படித் தயார்படுத்தினார்?

8 1800-களின் முடிவிலும் 1900-களின் ஆரம்பத்திலும் தன்னுடைய பெயரோடு சம்பந்தப்பட்ட முக்கியமான உண்மைகளைத் தன்னுடைய மக்கள் புரிந்துகொள்ள யெகோவா உதவினார். அவற்றில் மூன்று உண்மைகளை இப்போது பார்க்கலாம்.

9, 10. (அ) ஆரம்பத்தில் வெளிவந்த காவற்கோபுர கட்டுரைகள் ஏன் இயேசுவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தன? (ஆ) 1919-லிருந்து என்ன மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது, அதன் விளைவு என்ன? (“ கடவுளுடைய பெயரை காவற்கோபுர பத்திரிகை எப்படி மகிமைப்படுத்தியிருக்கிறது?” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

9 முதலாவதாக, கடவுளுடைய பெயருக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை யெகோவாவின் ஊழியர்கள் புரிந்துகொண்டார்கள். ஆரம்பத்திலிருந்த பைபிள் மாணாக்கர்கள், மீட்புவிலையின் ஏற்பாடுதான் பைபிளின் முக்கிய போதனை என்று நினைத்தார்கள். அதனால், காவற்கோபுர பத்திரிகை இயேசுவின் பெயரை அதிகமாகப் பயன்படுத்தியது. உதாரணத்துக்கு, அந்தப் பத்திரிகை வெளிவந்து கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு யெகோவாவின் பெயரைவிட இயேசுவின் பெயரைத்தான் பத்து மடங்கு அதிகமாகப் பயன்படுத்தியது. அதனால்தான், ஆரம்பத்தில் பைபிள் மாணாக்கர்கள் இயேசுவுக்கு “அளவுக்கதிகமாக முக்கியத்துவம்” கொடுத்தார்கள் என்று மார்ச் 15, 1976, காவற்கோபுரம் குறிப்பிட்டது. காலம் போகப் போக, தன்னுடைய பெயருக்கு பைபிள் எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள யெகோவா அவர்களுக்கு உதவினார். அதனால், பைபிள் மாணாக்கர்கள் என்ன செய்தார்கள்? 1919-லிருந்து “மேசியாவின் பரலோகத் தகப்பனான யெகோவாவுக்கு அதிக மதிப்புக் கொடுக்க ஆரம்பித்தார்கள்” என்று அதே காவற்கோபுரம் குறிப்பிட்டது. சொல்லப்போனால், 1920 முதல் 1929 வரை வெளிவந்த காவற்கோபுர கட்டுரைகளில் கடவுளுடைய பெயர் 6,500-க்கும் அதிகமான தடவை பயன்படுத்தப்பட்டது.

10 யெகோவாவின் பெயருக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுத்ததன் மூலம் அவருடைய பெயரை எந்தளவு நேசிக்கிறார்கள் என்பதை நம் சகோதரர்கள் காட்டினார்கள். மோசேயைப் போலவே அவர்களும் “யெகோவாவின் பெயரை” புகழ ஆரம்பித்தார்கள். (உபா. 32:3; சங். 34:3) அப்படிச் செய்ததால், பைபிளில் வாக்குக் கொடுத்திருக்கிறபடியே, தன்னுடைய பெயருக்காக அவர்கள் காட்டிய அன்பைப் பார்த்து யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார்.—சங். 119:132; எபி. 6:10.

11, 12. (அ) 1919-க்குப் பிறகு, நம் பிரசுரங்களில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது? (ஆ) எந்த வேலைக்கு யெகோவா தன்னுடைய ஊழியர்களின் கவனத்தைத் திருப்பினார், ஏன்?

11 இரண்டாவதாக, உண்மைக் கிறிஸ்தவர்கள் கடவுள் கொடுத்த வேலையைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொண்டார்கள். 1919-க்குப் பிறகு, கடவுளுடைய மக்களை வழிநடத்திய பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்கள் ஏசாயா புத்தகத்திலிருந்த தீர்க்கதரிசனங்களை அலசி ஆராய ஆரம்பித்தார்கள். அப்போதிலிருந்து நம்முடைய பிரசுரங்களில் வந்த கட்டுரைகள் பிரசங்க வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தன. இது ‘ஏற்ற வேளையில் கொடுக்கப்பட்ட உணவு’ என்று ஏன் சொல்லலாம்?—மத். 24:45.

12 “நான் தேர்ந்தெடுத்திருக்கிற என் ஊழியனே, நீ என்னுடைய சாட்சியாக இருக்கிறாய்” என்று ஏசாயா மூலமாக யெகோவா சொன்ன வார்த்தைகளைப் பற்றி 1919-க்கு முன்பு வெளிவந்த காவற்கோபுர கட்டுரைகளில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. (ஏசாயா 43:10-12-ஐ வாசியுங்கள்.) ஆனால், 1919-க்குப் பிறகு, இந்த வசனங்களுக்கு நம்முடைய பிரசுரங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதாவது, பரலோக நம்பிக்கையுள்ள எல்லாருமே யெகோவாவைப் பற்றி சாட்சி கொடுக்கும் வேலையில் ஈடுபடும்படி சொல்லப்பட்டது. சொல்லப்போனால், 1925 முதல் 1931 வரை மட்டுமே மொத்தம் 57 காவற்கோபுர இதழ்களில் ஏசாயா 43-ஆம் அதிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏசாயாவின் வார்த்தைகள் உண்மைக் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்துவதாக அந்த ஒவ்வொரு இதழும் குறிப்பிட்டது. தன்னுடைய ஊழியர்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலைக்கு யெகோவா அவர்களுடைய கவனத்தைத் திருப்பினார் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஏன் அப்படிச் செய்தார்? அவர்கள் ‘தகுதியுள்ளவர்களா என்று முதலில் சோதிப்பதற்காகவே’ யெகோவா அப்படிச் செய்தார். (1 தீ. 3:10) கடவுளுடைய பெயரில் பைபிள் மாணாக்கர்கள் அழைக்கப்படுவதற்கு முன் அவர்கள் உண்மையிலேயே அவருடைய சாட்சிகளாக இருக்க விரும்புகிறார்கள் என்பதை தங்கள் செயலில் காட்ட வேண்டியிருந்தது.—லூக். 24:47, 48.

13. மிக முக்கியமான உண்மையை பைபிள் எப்படி வெளிப்படுத்தியது?

13 மூன்றாவதாக, யெகோவாவின் மக்கள் அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவது எந்தளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டார்கள். கடவுளுடைய பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்கி அதைப் பரிசுத்தப்படுவதுதான் மிக மிக முக்கியம் என்பதை 1920-களில் அவர்கள் புரிந்துகொண்டார்கள். மிக முக்கியமான இந்த உண்மையை பைபிள் எப்படி வெளிப்படுத்தியது? இரண்டு உதாரணங்களைக் கவனியுங்கள். எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களை யெகோவா காப்பாற்றியதற்கான முக்கியக் காரணம் என்ன? ‘பூமியெங்கும் என் பெயர் அறிவிக்கப்படுவதற்குத்தான்’ என்று யெகோவாவே சொன்னார். (யாத். 9:16) இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாமல் போனபோது, யெகோவா ஏன் அவர்கள்மேல் இரக்கம் காட்டினார்? ‘அவர்களோடு இருந்த மற்ற ஜனங்கள் மத்தியில் தன்னுடைய பெயர் கெட்டுவிடக் கூடாது’ என்பதற்காகத்தான் அப்படிச் செய்தார். (எசே. 20:8-10) பைபிளிலுள்ள இந்தப் பதிவுகளிலிருந்தும் மற்ற பதிவுகளிலிருந்தும் பைபிள் மாணாக்கர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள்?

14. (அ) 1920-களின் முடிவில் கடவுளுடைய மக்கள் எதைப் புரிந்துகொண்டார்கள்? (ஆ) கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவதைப் பற்றி பைபிள் மாணாக்கர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டதும் பிரசங்க வேலையை எப்படிக் கருதினார்கள்? (“ பிரசங்கிப்பதற்கு மிக முக்கியமான காரணம்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

14 சுமார் 2,700 வருஷங்களுக்கு முன்பு, ஏசாயா சொன்ன வார்த்தைகளின் முக்கியத்துவத்தை 1920-களின் முடிவில் கடவுளுடைய மக்கள் புரிந்துகொண்டார்கள். “உங்கள் பெயருக்கு மகிமை சேர்ப்பதற்காக உங்கள் ஜனங்களை இப்படி வழிநடத்தினீர்கள்” என்று யெகோவாவைப் பற்றி ஏசாயா சொன்னார். (ஏசா. 63:14) தங்களுக்குக் கிடைக்கப்போகும் மீட்பைவிட, கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதுதான் ரொம்ப முக்கியம் என்பதை பைபிள் மாணாக்கர்கள் புரிந்துகொண்டார்கள். (ஏசா. 37:20; எசே. 38:23) “எல்லா படைப்புகளுக்கும் முன்பாக யெகோவாவுடைய பெயருக்கு ஏற்பட்ட களங்கம் நீக்கப்பட வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது” என 1929-ல் வெளிவந்த தீர்க்கதரிசனம் என்ற ஆங்கில புத்தகம் சொன்னது. இந்தப் புதிய புரிந்துகொள்ளுதல், யெகோவாவைப் பற்றி சாட்சி கொடுக்க அவருடைய ஊழியர்களைத் தூண்டியது. அதோடு, அவருடைய பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்கவும் அவர்களைத் தூண்டியது.

15. (அ) 1930-களின் ஆரம்பத்தில் நம் சகோதரர்கள் எதைப் பற்றியெல்லாம் புரிந்துகொண்டார்கள்? (ஆ) அவர்கள் என்ன பாக்கியத்தைப் பெற்றார்கள்?

15 1930-களின் ஆரம்பத்தில், கடவுளுடைய பெயரின் முக்கியத்துவத்தை நம் சகோதரர்கள் சரியாகப் புரிந்துகொண்டார்கள்; அவர் கொடுத்த வேலையைப் பற்றியும் சரியாகப் புரிந்துகொண்டார்கள்; கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவது எவ்வளவு முக்கியம் என்பதையும் நன்றாகப் புரிந்துகொண்டார்கள். அப்போது, தன்னுடைய பெயரால் அழைக்கப்படும் பாக்கியத்தை யெகோவா அவர்களுக்குக் கொடுத்தார். அதை எப்படிச் செய்தார் என்பதைக் கடந்த கால சம்பவங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

“தன்னுடைய பெயருக்கென்று ஒரு ஜனத்தை” யெகோவா தேர்ந்தெடுக்கிறார்

16. (அ) யெகோவா எப்படி மிகச் சிறந்த விதத்தில் தன்னுடைய பெயரை மகிமைப்படுத்தியிருக்கிறார்? (ஆ) கடந்த காலத்தில், யார் கடவுளுடைய பெயரால் அழைக்கப்பட்டார்கள்?

16 தன்னுடைய பெயரால் அழைக்கப்படுகிற ஒரு ஜனத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் யெகோவா மிகச் சிறந்த விதத்தில் தன்னுடைய பெயரை மகிமைப்படுத்துகிறார். கி.மு. 1513-லிருந்து இஸ்ரவேலர்கள் கடவுளுடைய மக்களாக இருந்தார்கள். (ஏசா. 43:12) ஆனால், அவர்களோடு கடவுள் செய்த ஒப்பந்தத்தை அவர்கள் மீறிவிட்டார்கள். அதனால், கி.பி. 33-ல் அவரோடு இருந்த விசேஷ பந்தத்தை அவர்கள் இழந்துவிட்டார்கள். சீக்கிரத்திலேயே யெகோவா, “மற்ற தேசத்து மக்கள்மேல் தன் கவனத்தைத் திருப்பி, அவர்கள் மத்தியிலிருந்து தன்னுடைய பெயருக்கென்று ஒரு ஜனத்தை” தேர்ந்தெடுத்தார். (அப். 15:14) புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மக்கள் “கடவுளுடைய இஸ்ரவேலர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள். பரலோக நம்பிக்கையுள்ள இந்த கிறிஸ்தவர்கள் பல தேசங்களைச் சேர்ந்தவர்கள்.—கலா. 6:16.

17. எந்த வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியாதபடி சாத்தான் செய்துவிட்டான்?

17 சுமார் கி.பி. 44-ல் கிறிஸ்துவின் சீஷர்கள், “தெய்வீக வழிநடத்துதலால் . . . கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.” (அப். 11:26) ஆரம்பத்தில், இந்தப் பெயர் உண்மைக் கிறிஸ்தவர்களை மட்டுமே குறித்ததால் இது அவர்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டியது. (1 பே. 4:16) இருந்தாலும், களைகள் மற்றும் கோதுமைப் பயிர்கள் பற்றிய உவமையில் இயேசு சொன்னதுபோல், எல்லாவிதமான போலிக் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும்படி சாத்தான் செய்துவிட்டான். அதனால், பல நூற்றாண்டுகளுக்கு உண்மைக் கிறிஸ்தவர்களுக்கும் போலிக் கிறிஸ்தவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் போனது. ஆனால், 1914-ல் “அறுவடைக் காலம்” ஆரம்பமானபோது இந்த நிலைமை மாறியது. ஏனென்றால், தேவதூதர்கள் உண்மைக் கிறிஸ்தவர்களிலிருந்து போலிக் கிறிஸ்தவர்களைப் பிரித்தெடுக்க ஆரம்பித்தார்கள்.—மத். 13:30, 39-41.

18. நமக்கு ஒரு புதிய பெயர் தேவை என்பதைப் புரிந்துகொள்ள நம் சகோதரர்களுக்கு எது உதவியது?

18 உண்மையுள்ள அடிமையை 1919-ல் நியமித்த பிறகு, யெகோவா தன் மக்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய வேலையைப் பற்றிப் புரிய வைத்தார். அவர்கள் வீடு வீடாக ஊழியம் செய்ய ஆரம்பித்தார்கள். அந்த வேலை, போலிக் கிறிஸ்தவர்களிலிருந்து தங்களைப் பிரித்துக் காட்டியதை அவர்கள் உடனடியாகப் புரிந்துகொண்டார்கள். அதைப் புரிந்துகொண்ட பிறகு, “பைபிள் மாணாக்கர்கள்” என்ற பெயர் அந்தளவுக்கு தங்களை மற்றவர்களிலிருந்து பிரித்துக் காட்டவில்லை என்பதைத் தெரிந்துகொண்டார்கள். பைபிளைப் படிப்பது மட்டுமல்ல, கடவுளைப் பற்றிச் சாட்சி கொடுப்பதும், அவருடைய பெயருக்கு மதிப்புக் கொடுப்பதும், அதை மகிமைப்படுத்துவதும்தான் அவர்களுக்கு மிக முக்கியமாக இருந்தது. அப்படியானால், எந்தப் பெயரால் அழைக்கப்படுவது அவர்கள் செய்த வேலைக்குப் பொருத்தமாக இருக்கும்? 1931-ல் அந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்தது.

மாநாட்டு நிகழ்ச்சி நிரல், 1931

19, 20. (அ) 1931-ல் நடந்த மாநாட்டில் என்ன அறிவிப்பு செய்யப்பட்டது? (ஆ) புதிய பெயரைப் பெற்றுக்கொண்டபோது நம் சகோதரர்கள் என்ன செய்தார்கள்?

19 ஜூலை 1931-ல், அமெரிக்கா, ஒஹாயோவிலுள்ள கொலம்பஸில் நடந்த மாநாட்டுக்குச் சுமார் 15,000 பைபிள் மாணாக்கர்கள் வந்திருந்தார்கள். மாநாட்டு நிகழ்ச்சி நிரலின் முன்பக்கத்தில் “ஜே டபிள்யு” (JW) என்ற ஆங்கில எழுத்துக்கள் பெரிதாக எழுதப்பட்டிருந்ததை அவர்கள் பார்த்தார்கள். அதன் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தார்கள். அதன் அர்த்தம் ‘ஜஸ்ட் வாட்ச்’ (அதாவது, கொஞ்சம் கவனியுங்கள்) என்று சிலர் நினைத்தார்கள், இன்னும் சிலர் ‘ஜஸ்ட் வெய்ட்’ (அதாவது, கொஞ்சம் காத்திருங்கள்) என்று நினைத்தார்கள். பிறகு, ஜூலை 26, ஞாயிற்றுக்கிழமை, சகோதரர் ஜோசஃப் ரதர்ஃபர்ட் இந்த முக்கியத் தீர்மானத்தை அறிவித்தார்: “யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரால் நாம் அறியப்படவும் அழைக்கப்படவும் விரும்புகிறோம்.” மனதைக் குழப்பிய அந்த எழுத்துக்கள், ஜெஹோவாஸ் விட்னஸஸ் என்ற பெயரின் சுருக்கம் என்பதை அங்கிருந்தவர்கள் புரிந்துகொண்டார்கள். யெகோவாவின் சாட்சிகள் என்ற அந்தப் பெயர் ஏசாயா 43:10-ன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.

20 அங்கிருந்தவர்கள் அந்த அறிவிப்பைக் கேட்டதும், அரங்கமே அதிருமளவுக்கு ரொம்ப நேரம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அவர்களுடைய சந்தோஷ ஆரவாரம் ரேடியோ மூலம் பூமியின் மறுமுனைவரை எட்டியது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எர்னஸ்ட் மற்றும் நயோமி பார்பர் என்ற தம்பதி அதைப் பற்றி இப்படிச் சொன்னார்கள்: “அமெரிக்காவில் கைதட்ட ஆரம்பித்தவுடன் மெல்பர்னில் இருந்த சகோதரர்கள் எழுந்து நின்று ரொம்ப நேரத்துக்குக் கைதட்டினார்கள். அதை எங்களால் மறக்கவே முடியாது!” a

கடவுளுடைய பெயர் உலகெங்கும் மகிமைப்படுத்தப்படுகிறது

21. பிரசங்க வேலையை மும்முரமாகச் செய்ய இந்தப் புதிய பெயர் எப்படி ஒரு தூண்டுதலாக இருந்தது?

21 யெகோவாவின் சாட்சிகள் என்ற பைபிள் சார்ந்த பெயர், பிரசங்க வேலையை இன்னும் உற்சாகமாகச் செய்ய கடவுளுடைய ஊழியர்களுக்கு உதவியது. பயனியர்களான எட்வர்ட் மற்றும் ஜெஸி க்ரிம்ஸ் தம்பதி 1931-ல் கொலம்பஸில் நடந்த அந்த மாநாட்டில் கலந்துகொண்டார்கள். “நாங்கள் பைபிள் மாணாக்கர்கள் என்ற பெயரோடு வீட்டிலிருந்து கிளம்பினோம். ஆனால், யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரோடு வீடு திரும்பினோம். இப்போது கடவுளுடைய பெயரை மகிமைப்படுத்த உதவுகிற ஒரு பெயரைப் பெற்றிருப்பதை நினைத்து ரொம்பச் சந்தோஷப்படுகிறோம்” என்று அவர்கள் சொன்னார்கள். அந்த மாநாட்டுக்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகள் சிலர், கடவுளுடைய பெயரை மகிமைப்படுத்த ஒரு புதிய முறையைப் பயன்படுத்தினார்கள். ஊழியத்தில் சந்திக்கிறவர்களிடம் தங்களை அறிமுகப்படுத்த ஒரு அட்டையைக் கொடுத்தார்கள். “நான் ஒரு யெகோவாவின் சாட்சி. கடவுளாகிய யெகோவாவின் அரசாங்கத்தைப் பற்றிச் சொல்ல வந்திருக்கிறேன்” என்று அந்த அட்டையில் எழுதப்பட்டிருந்தது. கடவுளுடைய மக்கள் யெகோவா என்ற பெயரால் அழைக்கப்படுவதைப் பெருமையாக நினைத்தார்கள். அந்தப் பெயரின் முக்கியத்துவத்தை எல்லா இடங்களிலும் அறிவிக்கத் தயாராக இருந்தார்கள்.—ஏசா. 12:4.

“நாங்கள் பைபிள் மாணாக்கர்கள் என்ற பெயரோடு வீட்டிலிருந்து கிளம்பினோம். ஆனால், யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரோடு வீடு திரும்பினோம்”

22. யெகோவாவின் மக்கள் வித்தியாசமானவர்கள் என்பதை எது காட்டுகிறது?

22 இந்தப் பெயரை ஏற்றுக்கொள்வதற்கு பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்களை யெகோவா தூண்டி, இப்போது பல வருஷங்கள் கடந்துவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில், கடவுளுடைய மக்களின் அடையாளத்தை சாத்தானால் மறைக்க முடிந்திருக்கிறதா? மற்ற மதங்களிலிருந்து நாம் எப்படி வித்தியாசப்பட்டிருக்கிறோம் என்பதை மக்கள் புரிந்துகொள்ளாதபடி சாத்தானால் செய்ய முடிந்திருக்கிறதா? இல்லவே இல்லை. கடவுளுடைய சாட்சிகளாக நாம் முன்பைவிட இப்போது மற்ற மதங்களிலிருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டவர்களாகத் தெரிகிறோம். (மீகா 4:5-ஐயும் மல்கியா 3:18-ஐயும் வாசியுங்கள்.) சொல்லப்போனால், இன்று யாராவது யெகோவா என்ற பெயரைப் பயன்படுத்தினால், அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாகத்தான் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அந்தளவுக்கு, கடவுளுடைய பெயருக்கும் நமக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. மலைகளைப் போல இருக்கிற பொய் மதங்களால் யெகோவாவின் உண்மை வணக்கம் மறைக்கப்படுவதற்குப் பதிலாக, அது ‘எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.’ (ஏசா. 2:2) இன்று யெகோவாவின் வணக்கமும் அவருடைய புனிதமான பெயரும் மேலோங்கி இருக்கிறது.

23. சங்கீதம் 121:5-ல் யெகோவாவைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிற என்ன விஷயம் நமக்குத் தெம்பளிக்கிறது?

23 இப்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி, சாத்தானிடமிருந்து எப்படிப்பட்ட தாக்குதல்கள் வந்தாலும் யெகோவா நம்மைப் பாதுகாப்பார். இதைத் தெரிந்துகொள்வது நமக்கு எந்தளவுக்குத் தெம்பளிக்கிறது! (சங். 121:5) அதனால், சங்கீதக்காரனைப் போல நாமும் “யெகோவாவைக் கடவுளாகக் கொண்ட தேசம் சந்தோஷமானது. தன்னுடைய சொத்தாக அவர் தேர்ந்தெடுத்திருக்கிற ஜனம் சந்தோஷமானது” என்று சொல்ல முடியும்.—சங். 33:12.

a இப்படி ரேடியோவைப் பயன்படுத்தியதைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள அதிகாரம் 7, பக்கங்கள் 72-74-ஐப் பாருங்கள்.