Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 5

கடவுளுடைய அரசாங்கத்தின் மீது ராஜா ஒளியைப் பிரகாசிக்கச் செய்கிறார்

கடவுளுடைய அரசாங்கத்தின் மீது ராஜா ஒளியைப் பிரகாசிக்கச் செய்கிறார்

அதிகாரத்தின் முக்கியக் குறிப்பு

கடவுளுடைய அரசாங்கத்தையும், அதன் ஆட்சியாளர்களையும், குடிமக்களையும், அதற்கு உண்மையாக இருப்பதன் அவசியத்தையும் பற்றிய முக்கியமான உண்மைகளை கடவுளுடைய மக்கள் புரிந்துகொள்கிறார்கள்

1, 2. இயேசு எந்த விதத்தில் ஒரு ஞானமுள்ள வழிகாட்டியாக இருந்தார்?

 அழகான ஒரு நகரத்தை அனுபவமுள்ள ஒரு வழிகாட்டி, உங்களுக்குச் சுற்றிக்காட்டுவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்களும் உங்களோடு இருப்பவர்களும் முதல் தடவையாக அந்த நகரத்துக்குப் போயிருக்கிறீர்கள். அதனால், அந்த வழிகாட்டி சொல்வதையெல்லாம் உன்னிப்பாகக் கவனிக்கிறீர்கள். அந்த நகரத்தில் இன்னும் பார்க்காத இடங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ரொம்ப ஆர்வமாக இருக்கிறீர்கள். அதனால், வழிகாட்டியிடம் நிறைய கேள்விகள் கேட்கிறீர்கள். ஆனால், அந்த இடங்களுக்குப் போய்ச்சேரும் வரையில் உங்கள் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வதில்லை. எப்போது பதில் சொல்வது சரியாக இருக்குமோ அப்போது அதை உங்களுக்குச் சொல்கிறார். அவர் அப்படி ஞானமாக நடந்துகொள்வதைப் பார்த்து நீங்கள் வியந்துபோகிறீர்கள்.

2 ஒரு விதத்தில், உண்மைக் கிறிஸ்தவர்களான நாம் அந்தச் சுற்றுலாப் பயணிகளைப் போலவே இருக்கிறோம். மிக அருமையான ஒரு நகரத்தைப் பற்றிய விஷயங்களை, அதாவது ‘உறுதியான அஸ்திவாரங்களைக் கொண்ட நகரத்தை’ பற்றிய விஷயங்களை, நாம் ஆர்வத்தோடு தெரிந்துகொள்கிறோம். (எபி. 11:10) அதுதான் கடவுளுடைய அரசாங்கம். இயேசு பூமியில் இருந்தபோது சீஷர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய ஆழமான விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தார். அந்த அரசாங்கத்தைப் பற்றி அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் அவர் பதில் சொன்னாரா? அதைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஒரே சமயத்தில் சொல்லிவிட்டாரா? இல்லை. “இன்னும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன, ஆனால் இப்போது அவற்றை உங்களால் புரிந்துகொள்ள முடியாது” என்று அவர் சொன்னார். (யோவா. 16:12) மிகவும் ஞானமுள்ள வழிகாட்டியான இயேசு, எல்லா விஷயங்களையும் ஒரே சமயத்தில் சொல்லி தன் சீஷர்களைத் திணறடிக்கவில்லை.

3, 4. (அ) உண்மைக் கிறிஸ்தவர்களுக்குக் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு எப்படித் தொடர்ந்து கற்றுக்கொடுத்திருக்கிறார்? (ஆ) இந்த அதிகாரத்தில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 இயேசு பூமியிலிருந்த கடைசி நாளில் யோவான் 16:12-லுள்ள அந்த வார்த்தைகளைச் சொன்னார். அவர் இறந்த பிறகு, உண்மையுள்ள மக்களுக்கு கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எப்படித் தொடர்ந்து சொல்லிக்கொடுப்பார்? ‘சத்தியத்தை வெளிப்படுத்துகிற சக்தி . . . சத்தியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவி செய்யும்’ என்று தன் அப்போஸ்தலர்களுக்கு இயேசு உறுதியளித்தார். (யோவா. 16:13) இந்தச் சக்தி, பொறுமையான ஒரு வழிகாட்டி போல இருக்கிறது. இந்தச் சக்தியைப் பயன்படுத்தியே இயேசு தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிக் கற்றுக்கொடுக்கிறார். அதுவும் அவர்கள் எப்போது கற்றுக்கொள்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறாரோ அப்போது கற்றுக்கொடுக்கிறார்.

4 உண்மைக் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள யெகோவாவின் சக்தி எப்படி வழிநடத்தியிருக்கிறது என்று இப்போது பார்க்கலாம். முதலாவதாக, கடவுளுடைய அரசாங்கம் எப்போது ஆட்சி செய்யத் தொடங்கியது என்பதைப் பற்றி ஆரம்பத்தில் என்ன புரிந்துவைத்திருந்தோம் என்று பார்க்கலாம். அடுத்ததாக, அந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்களும் குடிமக்களும் யார், அவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது என்று பார்க்கலாம். கடைசியாக, கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைக் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் எப்படித் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள் என்று பார்க்கலாம்.

ஒரு முக்கியமான வருஷத்தைப் புரிந்துகொள்ளுதல்

5, 6. (அ) கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்ய ஆரம்பித்ததைப் பற்றியும் அறுவடைக் காலத்தைப் பற்றியும் பைபிள் மாணாக்கர்கள் எப்படித் தவறாகப் புரிந்துகொண்டார்கள்? (ஆ) அப்படித் தவறாகப் புரிந்துகொண்டதால், இயேசு தன்னைப் பின்பற்றுகிறவர்களை வழிநடத்துகிறாரா இல்லையா என்று ஏன் சந்தேகப்படக் கூடாது?

5 இந்தப் புத்தகத்தின் 2-ஆம் அதிகாரத்தில் நாம் பார்த்தபடி, 1914-ஆம் வருஷம் பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறும் ஒரு முக்கியமான வருஷமாக இருக்கும் என்று பைபிள் மாணாக்கர்கள் பல வருஷங்களாகவே சுட்டிக்காட்டினார்கள். ஆனாலும், கிறிஸ்துவின் பிரசன்னம் 1874-ல் ஆரம்பித்துவிட்டதாகவும் 1878-ல் அவர் பரலோகத்தில் ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டதாகவும் நம்பினார்கள். அதோடு, அக்டோபர் 1914-க்குப் பிறகுதான் அந்த அரசாங்கம் முழுமையாகச் செயல்பட ஆரம்பிக்கும் என்றும் நம்பினார்கள். அறுவடைக் காலம், 1874-1914 வரை நீடிக்கும் என்றும் அதன் முடிவில் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் பரலோகத்துக்குப் போவார்கள் என்றும் நினைத்தார்கள். இப்படித் தவறாகப் புரிந்துகொண்டதால், அந்த உண்மைக் கிறிஸ்தவர்களைக் கடவுளுடைய சக்தியால் இயேசு வழிநடத்தினாரா இல்லையா என்ற சந்தேகம் வரலாமா?

6 வேண்டியதில்லை! ஆரம்பத்தில் பார்த்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். சுற்றுலாப் பயணிகள் அவசரப்பட்டு தங்களுடைய கருத்தைச் சொல்வதாலும் ஆர்வப் பசியில் கேள்விகள் கேட்பதாலும், அந்த வழிகாட்டி நம்பகமானவரா என்று சந்தேகப்படுவது சரியாக இருக்குமா? இருக்காது. அதேபோல், கடவுளுடைய சக்தி அவருடைய நோக்கத்தைப் பற்றிச் சரியான சமயத்தில் வெளிப்படுத்துவதற்கு முன்பே கடவுளுடைய மக்கள் தாங்களாகவே அதைப் பற்றித் தெரிந்துகொள்ள சிலசமயங்களில் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனாலும், கடவுளுடைய மக்களை இயேசு வழிநடத்துகிறார் என்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அதனால், உண்மைக் கிறிஸ்தவர்கள் தங்களைச் சரிசெய்துகொள்ளவும் தாழ்மையோடு தங்கள் கருத்துகளை மாற்றிக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள்.—யாக். 4:6.

7. கடவுளுடைய மக்கள்மேல் என்ன ஆன்மீக ஒளி பிரகாசித்தது?

7 1919-க்குப் பிறகு, கடவுளுடைய மக்கள்மேல் ஆன்மீக ஒளி அதிகமதிகமாகப் பிரகாசித்தது. (சங்கீதம் 97:11-ஐ வாசியுங்கள்.) 1925-ல் வெளிவந்த ஆங்கில காவற்கோபுரத்தில் “ஒரு தேசத்தின் பிறப்பு” என்ற மிக முக்கியமான ஒரு கட்டுரை இருந்தது. மேசியானிய அரசாங்கம் 1914-ல் நிறுவப்பட்டது என்பதற்குத் தெளிவான பைபிள் ஆதாரங்கள் அதில் இருந்தன. அந்த அரசாங்கம் பிறந்தபோது, வெளிப்படுத்துதல் 12-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள பெண், ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதைப் பற்றிய தீர்க்கதரிசனம் நிறைவேறியது. a போர் நடந்துகொண்டிருந்த அந்த வருஷங்களில் யெகோவாவின் மக்களுக்குப் பல துன்புறுத்தல்களும் கஷ்டங்களும் வந்தன. சாத்தான் பரலோகத்திலிருந்து கீழே தள்ளப்பட்டான் என்பதற்கும் அவன் “தனக்குக் கொஞ்சக் காலம்தான் இருக்கிறது என்று தெரிந்து பயங்கர கோபத்தோடு” இருக்கிறான் என்பதற்கும் இவை தெளிவான அடையாளங்கள் என்று அந்தக் கட்டுரை விளக்கியது.—வெளி. 12:12.

8, 9. (அ) கடவுளுடைய அரசாங்கம் எந்தளவு முக்கியமானது என்பது எப்படி வலியுறுத்தப்பட்டது? (ஆ) என்ன கேள்விகளுக்கான பதிலைப் பார்க்கப்போகிறோம்?

8 கடவுளுடைய அரசாங்கம் எந்தளவு முக்கியமானது? மீட்புவிலை மூலம் நமக்குக் கிடைக்கும் மீட்பைவிட கடவுளுடைய அரசாங்கம்தான் மிக முக்கியம் என்பதை 1928-ல் வெளிவந்த காவற்கோபுர கட்டுரைகள் வலியுறுத்த ஆரம்பித்தன. மேசியானிய அரசாங்கத்தின் மூலம்தான் யெகோவா தன்னுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவார், தன்னுடைய ஆட்சிதான் சரியானது என்பதை நிரூபிப்பார், மனிதர்களுக்கான தன் நோக்கத்தையும் நிறைவேற்றுவார்.

9 அந்த அரசாங்கத்தில் கிறிஸ்துவோடு ஆட்சி செய்யப்போகிறவர்கள் யார்? அந்த அரசாங்கத்தின் குடிமக்களாக இருக்கப்போகிறவர்கள் யார்? கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் என்ன வேலையில் மும்முரமாக ஈடுபட வேண்டும்?

பரலோக நம்பிக்கையுள்ளவர்களைக் கூட்டிச்சேர்க்க கவனம் செலுத்தப்படுகிறது

10. ரொம்பக் காலத்திற்கு முன்பே 1,44,000 பேரைப் பற்றி கடவுளுடைய மக்கள் என்ன தெரிந்துவைத்திருந்தார்கள்?

10 கிறிஸ்துவை உண்மையோடு பின்பற்றுகிற 1,44,000 பேர், அவரோடு பரலோகத்தில் ஆட்சி செய்வார்கள் என்பதை 1914-க்கும் பல வருஷங்களுக்கு முன்பே உண்மைக் கிறிஸ்தவர்கள் புரிந்துவைத்திருந்தார்கள். b அது சொல்லர்த்தமான ஒரு எண்ணிக்கை என்பதையும் அந்த எண்ணிக்கையின் பாகமானவர்களைக் கூட்டிச்சேர்ப்பது முதல் நூற்றாண்டிலேயே ஆரம்பமானது என்பதையும் பைபிள் மாணாக்கர்கள் புரிந்துகொண்டார்கள்.

11. கிறிஸ்துவுடைய மணமகளின் பாகமாக ஆகப்போகிறவர்கள் பூமியில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைப் பற்றி எப்படிப் படிப்படியாகப் புரிந்துகொண்டார்கள்?

11 ஆனால், கிறிஸ்துவுடைய மணமகளின் பாகமாக ஆகப்போகிறவர்களுக்கு பூமியில் என்ன வேலை கொடுக்கப்பட்டது? பிரசங்க வேலைக்கு இயேசு முக்கியத்துவம் கொடுத்ததையும் அதை அறுவடைக் காலத்தோடு சம்பந்தப்படுத்திப் பேசியதையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். (மத். 9:37; யோவா. 4:35) இரண்டாம் அதிகாரத்தில் நாம் பார்த்தபடி, அந்த அறுவடைக் காலம் 40 வருஷங்களுக்கு நீடிக்கும் என்றும், அதன் முடிவில் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அவர்கள் நம்பினார்கள். ஆனாலும், அந்த அறுவடை வேலை 40 வருஷங்களுக்குப் பிறகும் தொடர்ந்ததால், அவர்களுடைய புரிந்துகொள்ளுதலைச் சரிசெய்ய வேண்டியிருந்தது. களைகளான போலிக் கிறிஸ்தவர்களையும் கோதுமைப் பயிர்களான பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களையும் பிரிக்கும் காலம், அதாவது அறுவடைக் காலம், 1914-ல் ஆரம்பித்தது என்று இப்போது நாம் சரியாகப் புரிந்திருக்கிறோம். அந்த வருஷத்திலிருந்து, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களில் மீதியாக இருந்தவர்களைக் கூட்டிச்சேர்க்கும் வேலைக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது.

1914-ல் அறுவடைக் காலம் ஆரம்பித்தது (பாரா 11)

12, 13. பத்துக் கன்னிப்பெண்களையும் தாலந்தையும் பற்றி இயேசு சொன்ன உவமைகள் எப்படிக் கடைசி நாட்களில் நிறைவேறியிருக்கின்றன?

12 பிரசங்க வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்காக, உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை கிறிஸ்து 1919-லிருந்து வழிநடத்தி வருகிறார். அந்த வேலையை முதல் நூற்றாண்டிலேயே தன்னுடைய சீஷர்களுக்குக் கொடுத்திருந்தார். (மத். 28:19, 20) அதை அவர்கள் செய்வதற்கு என்னென்ன குணங்கள் அவசியம் என்றும் அவர் சொன்னார். இரண்டு உவமைகள் மூலமாக அதைத் தெரியப்படுத்தினார். கன்னிப்பெண்களைப் பற்றிய உவமையின் மூலம், பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் கவனமுள்ளவர்களாக, அதாவது ஆன்மீக விஷயங்களில் விழிப்புள்ளவர்களாக, இருக்க வேண்டும் என்று சொன்னார். அப்போதுதான், பரலோகத்தில் நடக்கப்போகும் மாபெரும் திருமண விருந்தில் கலந்துகொள்ள முடியும். அதுதான் 1,44,000 பேர் அடங்கிய ‘மணமகளோடு’ கிறிஸ்து ஒன்றுசேரும் திருமண விருந்து. (வெளி. 21:2) அடுத்ததாக, தாலந்து பற்றிய உவமையின் மூலம், பரலோக நம்பிக்கையுள்ள ஊழியர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரசங்க வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்ய வேண்டும் என்று சொன்னார்.—மத். 25:1-30.

13 கடந்த நூற்றாண்டில், பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் விழிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்திருக்கிறார்கள். அதற்கான பலனை அவர்கள் கண்டிப்பாகப் பெறுவார்கள். ஆனால், இந்த அறுவடை வேலை கிறிஸ்துவோடு சேர்ந்து ஆட்சி செய்யப்போகிற 1,44,000 பேரில் மீதியாக இருப்பவர்களைக் கூட்டிச்சேர்ப்பதோடு முடிந்துவிடுமா?

கடவுளுடைய அரசாங்கம் அதன் குடிமக்களைக் கூட்டிச்சேர்க்கிறது

14, 15. நிறைவேறித்தீர்ந்த இரகசியம் என்ற புத்தகத்தில் எந்த நான்கு வகுப்பாரைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது?

14 உண்மையுள்ள ஆண்களும் பெண்களும் பல காலமாகவே, வெளிப்படுத்துதல் 7:9-14-ல் சொல்லப்பட்டிருக்கும் ‘திரள் கூட்டம்’ யார் என்பதைத் தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். அந்தத் திரள் கூட்டம் யார் என்பதைக் கிறிஸ்து வெளிப்படுத்துவதற்கான நேரம் வருவதற்கு முன்பே அதைப் பற்றி பலவிதங்களில் விளக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்தத் திரள் கூட்டம் யார் என்பதைத் தெளிவாகப் புரிந்திருக்கிறோம், அந்த எளிமையான சத்தியத்தை நேசிக்கிறோம்.

15 நிறைவேறித்தீர்ந்த இரகசியம் என்ற ஆங்கிலப் புத்தகம் 1917-ல் வெளியிடப்பட்டது. அதில், “பரலோகத்துக்குரிய மீட்பைப் பெறப்போகும் இரண்டு வகுப்பாரும் பூமிக்குரிய மீட்பைப் பெறப்போகும் இரண்டு வகுப்பாரும்” இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. வித்தியாசமான நம்பிக்கைகளைக் கொண்ட இந்த நான்கு வகுப்பார் யார்? முதல் வகுப்பார், கிறிஸ்துவோடு ஆட்சி செய்யப்போகும் 1,44,000 பேர். இரண்டாவது வகுப்பார், திரள் கூட்டமான மக்கள். இந்த மக்கள் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளுக்குப் போகிறவர்களைக் குறித்ததாக நினைத்தார்கள். அவர்களுக்கு ஓரளவு விசுவாசம் இருந்தாலும் பொய் மதத்தைவிட்டு வெளியே வருமளவுக்கு விசுவாசம் இருக்கவில்லை. அதனால், பரலோகத்தில் அவர்களுக்கு தாழ்வான ஸ்தானங்கள் கொடுக்கப்படும் என்று நினைத்தார்கள். பூர்வ காலத்தில் வாழ்ந்த ஆபிரகாம், மோசே போன்ற விசுவாசமுள்ளவர்கள், பூமியில் வாழும் நம்பிக்கையுள்ள மூன்றாவது வகுப்பார் என்று நினைத்தார்கள். நான்காவது வகுப்பார், உலகத்து மக்கள் என்றும் இவர்களுடைய அதிகாரிகளாக மூன்றாவது வகுப்பார் இருப்பார்கள் என்றும் நினைத்தார்கள்.

16. கடவுளுடைய மக்கள்மேல் எதைப் பற்றிய ஆன்மீக ஒளி 1923-லும் 1932-லும் பிரகாசித்தது?

16 கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள், திரள் கூட்டத்தைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள கடவுளுடைய சக்தி எப்படி உதவியது? ஆன்மீக ஒளி படிப்படியாக அவர்கள்மேல் பிரகாசித்தபோது அதைப் புரிந்துகொண்டார்கள். கிறிஸ்துவின் ஆட்சியின்போது பூமியில் வாழப்போகும் வகுப்பாரைப் பற்றி, அதாவது பரலோகத்துக்குப் போக வேண்டுமென்ற எந்தவித ஆசையும் இல்லாதவர்களைப் பற்றி, 1923-ன் ஆரம்பத்தில் வெளிவந்த காவற்கோபுரம் சொன்னது. 1932-ல் வெளிவந்த காவற்கோபுரம் யோனதாபைப் பற்றிக் குறிப்பிட்டது. பொய் வணக்கத்துக்கு எதிராக இஸ்ரவேலின் ராஜாவான யெகூ நடவடிக்கை எடுத்தபோது யோனதாப் அதற்கு ஆதரவாக இருந்தார். (2 ரா. 10:15-17) நம் காலத்தில், யோனதாபைப் போன்ற ஒரு வகுப்பார் இருப்பதாகவும், யெகோவா அவர்களை அர்மகெதோனிலிருந்து காப்பாற்றி இந்தப் பூமியில் வாழ வைக்கப்போவதாகவும் அந்தக் கட்டுரை சொன்னது.

17. (அ) 1935-ல் என்ன மாபெரும் ஆன்மீக ஒளி பிரகாசித்தது? (ஆ) திரள் கூட்டத்தார் யார் என்பதைப் பற்றி சரியாகப் புரிந்துகொண்டபோது உண்மைக் கிறிஸ்தவர்கள் எப்படி உணர்ந்தார்கள்? (“ நிம்மதிப் பெருமூச்சு” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

17 1935-ல் மாபெரும் ஆன்மீக ஒளி கடவுளுடைய மக்கள்மேல் பிரகாசித்தது. வாஷிங்டன், டி.சி.-யில் நடந்த மாநாட்டில் திரள் கூட்டமான மக்கள் பூமிக்குரிய வகுப்பாராக அடையாளம் காட்டப்பட்டார்கள். செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றி இயேசு சொன்ன உவமையிலுள்ள செம்மறியாடுகள் இவர்கள்தான். (மத். 25:33-40) இந்தத் திரள் கூட்டமான மக்கள் ‘வேறே ஆடுகளின்’ பாகமாக இருப்பார்கள். “அவற்றையும் நான் கொண்டுவர வேண்டும்” என்று இயேசு சொன்னார். (யோவா. 10:16) அந்த மாநாட்டில் ஜெ. எஃப். ரதர்ஃபர்ட், “பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ள எல்லாரும் தயவு செய்து எழுந்து நிற்கிறீர்களா?” என்று கேட்டதும், அங்கே கூடியிருந்தவர்களில் பாதிப் பேருக்கும் அதிகமானவர்கள் எழுந்து நின்றார்கள்! அப்போது அவர், “இதோ, இந்தத் திரள் கூட்டத்தைப் பாருங்கள்!” என்றார். தங்களுடைய எதிர்கால நம்பிக்கையைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொண்டதை நினைத்து நிறைய பேர் ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள்.

18. கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் ஊழியத்தில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்கள், அதன் பலன் என்ன?

18 அந்தச் சமயத்திலிருந்து, திரள் கூட்டத்தின் பாகமானவர்களைக் கூட்டிச்சேர்ப்பதற்காக கிறிஸ்து தன் மக்களை வழிநடத்தி வருகிறார். இந்தத் திரள் கூட்டத்தார் மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பிழைப்பார்கள். ஆரம்பத்தில், இந்தக் கூட்டிச்சேர்க்கும் வேலை அந்தளவுக்குப் பலன் தரவில்லை. அதனால்தான், “‘திரள் கூட்டம்’ அந்தளவுக்கு பெரிய கூட்டமாக இருக்காதென தோன்றுகிறது” என்று சகோதரர் ரதர்ஃபர்ட் ஒருசமயம் சொன்னார். ஆனால் அந்தச் சமயத்திலிருந்து, அறுவடை வேலையை யெகோவா அதிகமாக ஆசீர்வதித்திருப்பதை இன்று நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்! இயேசு முன்னறிவித்தபடி, பரலோக நம்பிக்கையுள்ளவர்களும், அவர்களுடைய நண்பர்களான “வேறே ஆடுகளும்” ‘ஒரே மேய்ப்பரின் கீழ் ஒரே மந்தையாக’ சேவை செய்து வருகிறார்கள். இயேசுவின் வழிநடத்துதலாலும் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலாலும் இது சாத்தியமாகியிருக்கிறது.

திரள் கூட்டத்தாரின் எண்ணிக்கை எந்தளவுக்கு அதிகரிக்கும் என்று சகோதரர் ரதர்ஃபர்ட்டால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை (இடது பக்கத்திலிருந்து: நேதன் எச். நார், ஜோஸஃப் எஃப். ரதர்ஃபர்ட், ஹேடன் ஸி. கவிங்டன்)

19. திரள் கூட்டத்தாரின் எண்ணிக்கை அதிகமாவதற்கு நாம் என்ன செய்யலாம்?

19 கிறிஸ்துவும் 1,44,000 பேரும் ஆட்சி செய்யும்போது, உண்மைக் கிறிஸ்தவர்களில் பெரும்பாலோர் பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ்வார்கள். எதிர்கால நம்பிக்கையைப் பற்றி பைபிள் சொல்கிற இந்தத் தெளிவான சத்தியத்தை கடவுளுடைய மக்கள் புரிந்துகொள்ள கிறிஸ்து உதவி செய்திருக்கிற விதம் நமக்கு அதிக சந்தோஷத்தைத் தருகிறது, இல்லையா? ஊழியத்தில் மக்களிடம் இந்த நம்பிக்கையைப் பற்றி நாம் சொல்வது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! நம்முடைய சூழ்நிலையைப் பொறுத்து, சுறுசுறுப்பாக ஊழியம் செய்தால் திரள் கூட்டத்தாரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். அது யெகோவாவின் பெயருக்கு இதுவரை இல்லாதளவுக்குப் புகழ் சேர்க்கும்!லூக்கா 10:2-ஐ வாசியுங்கள்.

திரள் கூட்டத்தாரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது

கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையாக இருப்பது என்றால் என்ன?

20. எவையெல்லாம் சாத்தானுடைய அமைப்பின் பாகமாக இருக்கின்றன, கடவுளுடைய அமைப்புக்கு உண்மையாக இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

20 கடவுளுடைய மக்கள் அவருடைய அரசாங்கத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்வதோடு, அதற்கு உண்மையாக இருப்பதன் அவசியத்தையும் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. இது சம்பந்தமாக 1922-ல் வெளிவந்த காவற்கோபுரம், இரண்டு அமைப்புகள் இருப்பதாகச் சொன்னது. ஒன்று யெகோவாவின் அமைப்பு, மற்றொன்று சாத்தானின் அமைப்பு. இந்த உலகத்திலுள்ள வர்த்தகமும் மதங்களும் அரசியலும் சாத்தானுடைய அமைப்பின் பாகமாக இருக்கின்றன. கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையாக இருப்பவர்கள் சாத்தானுடைய அமைப்புக்கு எந்த விதத்திலும் ஆதரவு கொடுக்கக் கூடாது. (2 கொ. 6:17) அதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

21. (அ) உண்மையுள்ள அடிமை, பெரிய வர்த்தக நிறுவனங்களைப் பற்றி எப்படி எச்சரித்து வந்திருக்கிறது? (ஆ) 1963-ல் வெளிவந்த காவற்கோபுரம் ‘மகா பாபிலோனை’ பற்றி என்ன சொன்னது?

21 ஊழல் செய்கிற பெரிய வர்த்தக நிறுவனங்களைப் பற்றி உண்மையுள்ள அடிமை, பிரசுரங்கள் மூலமாகத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. அதோடு, அந்த நிறுவனங்கள் ஊக்கப்படுத்துகிற பொருளாசையில் சிக்கிவிடாதபடி கடவுளுடைய மக்களை எச்சரித்தும் வருகிறது. (மத். 6:24) அதேபோல், சாத்தானுடைய அமைப்பின் பாகமான மதங்களைப் பற்றியும் நம் பிரசுரங்கள் தொடர்ந்து வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கின்றன. “மகா பாபிலோன்” என்பது கிறிஸ்தவமண்டலம் உட்பட முழு பொய் மத உலகப் பேரரசைக் குறிக்கிறதென 1963-ல் வெளிவந்த காவற்கோபுரம் தெளிவாகக் காட்டியது. அதனால்தான், ‘அவளைவிட்டு வெளியே வர,’ அதாவது பொய் மதப் பழக்கவழக்கங்களைவிட்டு வெளியே வர, எல்லா நாடுகளையும் கலாச்சாரத்தையும் சேர்ந்த மக்களுக்கு உதவி அளிக்கப்பட்டிருக்கிறது. (வெளி. 18:2, 4) இதைப் பற்றி 10-ஆம் அதிகாரத்தில் விளக்கமாகப் பார்ப்போம்.

22. முதல் உலகப் போரின்போது, ரோமர் 13:1-ஐ கடவுளுடைய மக்கள் எப்படிப் புரிந்துகொண்டார்கள்?

22 சாத்தானுடைய அமைப்பின் பாகமான அரசியலைப் பற்றி என்ன சொல்லலாம்? உண்மைக் கிறிஸ்தவர்கள் நாட்டுக்கு நாடு நடக்கும் போர்களிலும் சண்டை சச்சரவுகளிலும் கலந்துகொள்ளலாமா? கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் சக மனிதர்களைக் கொலை செய்யக் கூடாது என்பதை முதல் உலகப் போர் நடந்த சமயத்தில் பைபிள் மாணாக்கர்கள் புரிந்துவைத்திருந்தார்கள். (மத். 26:52) ஆனாலும், நிறைய பேர் ரோமர் 13:1-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனையின்படி “அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு” கீழ்ப்படிய வேண்டுமென்று நினைத்தார்கள். அதனால், ராணுவத்தில் சேர்ந்துகொண்டார்கள், ராணுவ உடைகளைப் போட்டுக்கொண்டார்கள், ஆயுதங்களைக்கூட எடுத்துக்கொண்டார்கள். ஆனால், எதிரியைச் சுட்டுக்கொல்லும்படி சொல்லப்பட்டபோது, அவர்கள் வானத்தை நோக்கிச் சுட்டார்கள்.

23, 24. இரண்டாம் உலகப் போரின்போது, ரோமர் 13:1-ஐ கடவுளுடைய மக்கள் எப்படிப் புரிந்துகொண்டார்கள்? அதைப் பற்றிய என்ன துல்லியமான விளக்கம் அவர்களுக்குக் கிடைத்தது?

23 1939-ல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தபோது, நடுநிலைமை பற்றி காவற்கோபுரம் விளக்கமாகச் சொன்னது. நாட்டுக்கு நாடு நடக்கிற போர்களிலும் சண்டை சச்சரவுகளிலும் கிறிஸ்தவர்களுக்கு எந்த ஈடுபாடும் இருக்கக் கூடாது என்று அந்தக் கட்டுரை தெளிவாகச் சொன்னது. அது சரியான சமயத்தில் கொடுக்கப்பட்ட வழிநடத்துதல்! அதனால், அந்தப் போரில் கலந்துகொண்ட நாடுகள்மேல் விழுந்த இரத்தப்பழிக்கு கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் ஆளாகவில்லை. ‘அதிகாரத்தில் இருக்கிறவர்கள்’ என ரோமர் 13:1-ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள், உலக அதிகாரிகளை அர்த்தப்படுத்தவில்லை, யெகோவாவையும் இயேசுவையும்தான் அர்த்தப்படுத்துகிறது என 1929-ன் ஆரம்பத்தில் வெளிவந்த நம் பிரசுரங்கள் விளக்கின. இது சம்பந்தமாக, இன்னும் தெளிவான விளக்கம் தேவைப்பட்டது.

24 1962-ல் ரோமர் 13:1-7-ஐச் சரியாகப் புரிந்துகொள்ள கடவுளுடைய சக்தி கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்கு உதவியது. அந்த வருஷத்தில் வெளிவந்த நவம்பர் 15 மற்றும் டிசம்பர் 1 காவற்கோபுரங்களில் அதைப் பற்றிய முக்கியமான கட்டுரைகள் இருந்தன. கடைசியில், கடவுளுடைய சட்டங்களுக்கு முரணாக இல்லாத விஷயங்களில் அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதைக் கடவுளுடைய மக்கள் புரிந்துகொண்டார்கள். “அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று இயேசு சொன்ன பிரபலமான வார்த்தைகளிலிருந்து இதைப் புரிந்துகொண்டார்கள். (லூக். 20:25) ‘அதிகாரத்தில் இருக்கிறவர்கள்’ உலக அதிகாரிகளைக் குறிக்கிறார்கள் என்பதையும் அவர்களுக்குக் கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதையும் உண்மைக் கிறிஸ்தவர்கள் இப்போது புரிந்திருக்கிறார்கள். ஆனாலும், எல்லா விஷயங்களிலும் கீழ்ப்படிவதை இது அர்த்தப்படுத்தாது. உலக அதிகாரிகள், யெகோவாவுக்குக் கீழ்ப்படியக் கூடாது என்று நம்மிடம் சொல்லும்போது, அப்போஸ்தலர்களைப் போல நாமும் “மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்.” (அப். 5:29) கடவுளுடைய மக்கள் எப்படி நடுநிலைமையைக் காட்டியிருக்கிறார்கள் என்பதைப் பற்றி இந்தப் புத்தகத்தின் 13, 14 அதிகாரங்களிலிருந்து கூடுதலாகத் தெரிந்துகொள்வோம்.

முடிவில்லாத வாழ்வைப் பற்றி பைபிளிலிருந்து மற்றவர்களுக்குச் சொல்வது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!

25. கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தமான உண்மைகளைப் புரிந்துகொள்ள கடவுளுடைய சக்தி வழிநடத்தியிருப்பதைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

25 கடந்த நூற்றாண்டில் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிக் கற்றுக்கொண்ட விஷயங்களை யோசித்துப் பாருங்கள். கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் எப்போது நிறுவப்பட்டது... அது எந்தளவுக்கு முக்கியமானது... என்று கற்றுக்கொண்டோம். உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு இருக்கிற இரண்டு நம்பிக்கைகள் பற்றி, அதாவது பரலோகத்துக்குரிய நம்பிக்கை மற்றும் பூமிக்குரிய நம்பிக்கை பற்றி, தெளிவாகப் புரிந்துகொண்டோம். கடவுளுடைய சட்டங்களை மீறாத வரையில் உலக அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதோடு, கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் தெரிந்துகொண்டோம். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: மதிப்புமிக்க இந்தச் சத்தியங்களைப் புரிந்துகொள்ளவும் அவற்றைக் கற்றுக்கொடுக்கவும் உண்மையுள்ள அடிமையை இயேசு கிறிஸ்து வழிநடத்தவில்லை என்றால் இந்த விஷயங்களெல்லாம் எனக்குத் தெரிந்திருக்குமா? கிறிஸ்துவும் கடவுளுடைய சக்தியும் நம்மை வழிநடத்துவது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்!

a ரோமன் கத்தோலிக்க சர்ச்சுக்கும் ரோம சாம்ராஜ்யத்திலிருந்த மற்ற மதங்களுக்கும் இடையே நடக்கப்போகும் போரைப் பற்றி இந்தத் தரிசனம் சுட்டிக்காட்டுவதாக முன்பு நம்பப்பட்டது.

b 1914-க்குள் கிறிஸ்தவர்களாக மாறும் யூதர்கள்தான் பரலோக நம்பிக்கையுள்ள 1,44,000 பேராக இருப்பார்கள் என்று ஜூன் 1880, காவற்கோபுரம் சொன்னது. ஆனாலும், 1880-களின் முடிவில் இன்று நாம் புரிந்துவைத்திருக்கும் சத்தியத்தோடு பெரும்பாலும் ஒத்துப்போகிற இன்னொரு விளக்கம் கொடுக்கப்பட்டது.