Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 6

பிரசங்க வேலை செய்பவர்கள்​​—⁠தங்களை மனப்பூர்வமாக அர்ப்பணிக்கும் ஊழியர்கள்

பிரசங்க வேலை செய்பவர்கள்​​—⁠தங்களை மனப்பூர்வமாக அர்ப்பணிக்கும் ஊழியர்கள்

அதிகாரத்தின் முக்கியக் குறிப்பு

பிரசங்க வேலை செய்பவர்களின் ஒரு படையை ராஜா திரட்டுகிறார்

1, 2. என்ன மாபெரும் வேலையைப் பற்றி இயேசு முன்னறிவித்தார், என்ன முக்கியமான கேள்விக்குப் பதிலைத் தெரிந்துகொள்ள வேண்டும்?

 அரசியல் தலைவர்கள் கொடுக்கிற வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேறாமல் போகின்றன. நல்ல தலைவர்களால்கூட தங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடிவதில்லை. ஆனால், மேசியானிய ராஜாவான இயேசு கிறிஸ்து, தான் சொன்னதைக் கண்டிப்பாகச் செய்வார்.

2 1914-ல் இயேசு ராஜாவானபோது, சுமார் 1,900 வருஷங்களுக்கு முன் அவர் சொன்ன தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதற்கான சமயம் வந்தது. அவர் இறப்பதற்கு முன், “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் . . . பிரசங்கிக்கப்படும்” என்று சொன்னார். (மத். 24:14) அந்த வார்த்தைகளின் நிறைவேற்றம், அவர் ராஜ அதிகாரத்தில் வந்ததற்கு ஒரு அடையாளமாக இருக்கும். ஆனால், முக்கியமான ஒரு கேள்விக்கு நாம் பதிலைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கடைசி நாட்களில், சுயநலமான... அன்பில்லாத... கடவுள்பக்தி இல்லாத... மக்கள் வாழ்கிற இந்தக் காலத்தில், பிரசங்க வேலைக்காக தங்களை மனப்பூர்வமாக அர்ப்பணிக்கிறவர்களின் ஒரு படையை ராஜா எப்படித் திரட்டுவார்? (மத். 24:12; 2 தீ. 3:1-5) உண்மைக் கிறிஸ்தவர்களான நம் எல்லாருக்குமே ஊழியம் செய்ய வேண்டிய பொறுப்பு இருப்பதால், இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

3. இயேசுவுக்கு என்ன உறுதியான நம்பிக்கை இருந்தது, மற்றவர்கள்மீது நம்பிக்கை வைக்க இயேசு யாரிடமிருந்து கற்றுக்கொண்டார்?

3 இயேசு அந்தத் தீர்க்கதரிசனத்தில், நல்ல செய்தி “பிரசங்கிக்கப்படும்” என்று சொன்னதைக் கவனியுங்கள். இந்தக் கடைசி நாட்களில் தனக்கு மனப்பூர்வமாக ஆதரவு கொடுப்பவர்கள் இருப்பார்கள் என்று இயேசு உறுதியாக நம்பியதை இந்த வார்த்தை காட்டியது. இப்படிப்பட்ட நம்பிக்கையை வளர்க்க இயேசு யாரிடமிருந்து கற்றுக்கொண்டார்? தன்னுடைய தகப்பனிடமிருந்து கற்றுக்கொண்டார். (யோவா. 12:45; 14:9) தன்னை மனப்பூர்வமாக வணங்கியவர்கள்மீது யெகோவா நம்பிக்கை வைத்திருந்ததை, இயேசு பூமிக்கு வருவதற்கு முன் பரலோகத்தில் இருந்தபோதே நேரடியாகப் பார்த்தார். யெகோவா தன் மக்கள்மேல் நம்பிக்கை வைத்திருந்ததை எப்படிக் காட்டினார் என்று பார்க்கலாம்.

“உங்களுடைய மக்கள் மனப்பூர்வமாகத் தங்களை அர்ப்பணிப்பார்கள்”

4. என்ன வேலைக்கு ஆதரவு கொடுக்கும்படி இஸ்ரவேலர்களிடம் யெகோவா கேட்டார், அப்போது ஜனங்கள் என்ன செய்தார்கள்?

4 இஸ்ரவேல் மக்கள், தன்னை வணங்குவதற்காக ஒரு வழிபாட்டுக் கூடாரத்தைக் கட்டும்படி யெகோவா மோசேயிடம் சொன்னபோது என்ன நடந்தது என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த வேலைக்கு ஆதரவு கொடுக்கும்படி மோசே மூலம் யெகோவா எல்லா மக்களுக்கும் அழைப்பு கொடுத்தார். “யெகோவாவுக்கு உள்ளப்பூர்வமாக [அதாவது, மனப்பூர்வமாக] காணிக்கை கொடுக்க விரும்புகிறவர்கள்” அதைக் கொண்டுவரலாம் என்று மோசே சொன்னார். அப்போது ஜனங்கள் என்ன செய்தார்கள்? “ஒவ்வொரு நாள் காலையிலும் ஜனங்கள் விருப்பத்தோடு காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள். . . . இனி எந்தப் பொருளையும் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டாம்” என்று சொல்லுமளவுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள். (யாத். 35:5; 36:3, 6) யெகோவா அவர்கள்மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை.

5, 6. சங்கீதம் 110:1-3-ன்படி, இந்த முடிவு காலத்தில் உண்மை வணக்கத்தார் எப்படிப்பட்ட மனப்பான்மையைக் காட்டுவார்கள் என்று யெகோவாவும் இயேசுவும் எதிர்பார்த்தார்கள்?

5 இந்தக் கடைசி நாட்களில், தன்னை வணங்கும் மக்களுக்கு அதே போன்ற மனப்பான்மை இருக்கும் என்று யெகோவா எதிர்பார்த்தாரா? ஆம், எதிர்பார்த்தார். இயேசு பூமியில் பிறப்பதற்கு 1,000-க்கும் அதிகமான வருஷங்களுக்கு முன், தாவீதை யெகோவா ஒரு தீர்க்கதரிசனம் எழுதும்படி செய்தார். அந்தத் தீர்க்கதரிசனம், மேசியா தன் ஆட்சியை ஆரம்பிக்கப்போகும் காலத்தைப் பற்றியது. (சங்கீதம் 110:1-3-ஐ வாசியுங்கள்.) ராஜாவாக நியமிக்கப்பட்ட இயேசுவுக்கு, எதிரிகள் இருந்தாலும் அவருக்கு ஆதரவு கொடுக்கும் ஒரு படையும் இருக்கும் என்று அந்த வசனங்கள் காட்டின. ராஜாவுக்குச் சேவை செய்யும்படி அந்தப் படையினரை யாரும் கட்டாயப்படுத்த வேண்டியிருக்காது. வாலிபர்கள்கூட தங்களை மனப்பூர்வமாக அர்ப்பணிப்பார்கள். காலையில் பூமியைப் போர்த்தியிருக்கும் பனித்துளிகளைப் போல அவர்கள் ஏராளமாக இருப்பார்கள்.

கடவுளுடைய அரசாங்கத்துக்கு மனப்பூர்வமாக ஆதரவு கொடுப்பவர்கள் பனித்துளிகளைப் போல ஏராளமாக இருக்கிறார்கள் (பாரா 5)

6 சங்கீதம் 110-ல் தன்னைப் பற்றிதான் தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டிருக்கிறது என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. (மத். 22:42-45) அதனால், இந்தப் பூமியில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்குத் தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணிக்கும் ஆதரவாளர்கள் தனக்கு இருப்பார்கள் என்ற உறுதியான நம்பிக்கை இயேசுவுக்கு இருந்தது. அவருடைய நம்பிக்கை வீண்போனதா? சரித்திரம் என்ன காட்டுகிறது? இந்தக் கடைசி நாட்களில் பிரசங்க வேலை செய்வதற்கு ராஜாவினால் ஒரு படையைத் திரட்ட முடிந்திருக்கிறதா?

“அந்தச் செய்தியை அறிவிப்பது என் கடமை, அது என் பாக்கியம்”

7. இயேசு ராஜாவான பிறகு, தன்னைப் பின்பற்றுகிறவர்கள் செய்ய வேண்டியிருந்த வேலைக்கு அவர்களைத் தயார்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்?

7 இயேசு ராஜாவான பிறகு, தன்னைப் பின்பற்றுகிறவர்கள் ஒரு மாபெரும் வேலையைச் செய்வதற்கு அவர்களைத் தயார்படுத்த நடவடிக்கை எடுத்தார். அதிகாரம் 2-ல் நாம் பார்த்தபடி, அவர் கடவுளுடைய மக்களை 1914-லிருந்து 1919-ன் ஆரம்பம்வரை சோதனையிட்டு, சுத்தப்படுத்தினார். (மல். 3:1-4) பிறகு 1919-ல், அவர்களை வழிநடத்த உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை நியமித்தார். (மத். 24:45) அப்போதிலிருந்து அந்த அடிமை, மாநாடுகளில் கொடுக்கப்படும் பேச்சுகள் மூலமாகவும் பிரசுரங்கள் மூலமாகவும் ஆன்மீக உணவைக் கொடுக்க ஆரம்பித்தது. கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருக்கும் பிரசங்க வேலையில் ஈடுபடும் முக்கியமான பொறுப்பு இருப்பதை, அந்தப் பிரசுரங்களும் பேச்சுகளும் திரும்பத் திரும்ப வலியுறுத்தின.

8-10. பிரசங்க வேலைக்கு மாநாடுகள் எப்படித் தூண்டுதல் அளித்தன? ஒரு உதாரணம் சொல்லுங்கள். (“ பிரசங்க வேலைக்குத் தூண்டுதல் அளித்த ஆரம்பகால மாநாடுகள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

8 மாநாடுகளில் கொடுக்கப்பட்ட பேச்சுகள். முதல் உலகப் போருக்குப் பிறகு ஒரு குறிப்பிடத்தக்க மாநாடு நடந்தது. புதிய வழிநடத்துதலுக்காக ஆவலோடு காத்திருந்த பைபிள் மாணாக்கர்கள், 1919, செப்டம்பர் 1 முதல் 8 வரை அமெரிக்கா, ஒஹாயோவிலுள்ள சீடர் பாயின்ட்டில் நடந்த அந்த மாநாட்டுக்குக் கூடிவந்தார்கள். “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை அறிவிப்பதுதான் . . . ஒரு கிறிஸ்தவரின் முக்கியமான வேலை” என்று அந்த மாநாட்டின் இரண்டாம் நாள் பேச்சில் சகோதரர் ரதர்ஃபர்ட் தெளிவாகச் சொன்னார்.

9 அந்த மாநாட்டின் முக்கியப் பேச்சை ஐந்தாம் நாளில் சகோதரர் ரதர்ஃபர்ட் கொடுத்தார். “சக வேலையாட்களுக்கு ஒரு செய்தி” என்பதுதான் அந்தப் பேச்சின் தலைப்பு. அவர் கொடுத்த பேச்சு, பிற்பாடு காவற்கோபுரத்தில் “கடவுளுடைய அரசாங்கத்தை அறிவித்தல்” என்ற தலைப்பில் வெளிவந்தது. அந்தப் பேச்சில் அவர் இப்படிச் சொன்னார்: ‘அமைதியாக உட்கார்ந்து யோசிக்கும் சமயங்களில் ஒரு கிறிஸ்தவருக்கு, “நான் இந்த உலகத்தில் வாழ்வதற்கான காரணம் என்ன?” என்ற கேள்வி மனதில் வரலாம். அதற்கான பதில் இதுதான்: “சமரசமாக்கும் செய்தியை இந்த உலகத்துக்கு அறிவிக்கும்படி எஜமான் என்னை தூதுவராக நியமித்திருக்கிறார். அந்தச் செய்தியை அறிவிப்பது என் கடமை, அது என் பாக்கியம்.”’

10 அந்த முக்கியப் பேச்சில், த கோல்டன் ஏஜ் (இன்று விழித்தெழு! என்று அழைக்கப்படுகிறது) என்ற புதிய பத்திரிகை சீக்கிரத்தில் வெளியிடப்படும் என்று சகோதரர் ரதர்ஃபர்ட் சொன்னார். கடவுளுடைய அரசாங்கம்தான் மனிதர்களுக்கான ஒரே நம்பிக்கை என்பதை மக்களுக்கு அறிவிப்பதற்காக இது பயன்படுத்தப்படும் என்று சொன்னார். பிறகு, மாநாட்டுக்கு வந்திருந்தவர்களிடம் ‘இந்தப் பத்திரிகையை மக்களுக்குக் கொடுக்க எத்தனை பேர் ஆர்வமாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். “மாநாட்டுக்கு வந்திருந்த ஆறாயிரம் பேரும் எழுந்து நின்றார்கள். அது வியக்கவைக்கும் காட்சியாக இருந்தது” என்று அந்த மாநாட்டைப் பற்றி ஒரு அறிக்கை சொன்னது. a கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ஆர்வமாக அறிவிக்க மனப்பூர்வமான ஆதரவாளர்கள் ராஜாவுக்கு இருந்தார்கள் என்பதை இது தெளிவாகக் காட்டியது.

11, 12. இயேசு முன்னறிவித்த வேலை எப்போது நடக்கும் என்று 1920-ல் வெளிவந்த காவற்கோபுரம் சொன்னது?

11 பிரசுரங்கள். இயேசு முன்னறிவித்த வேலை, அதாவது கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கும் வேலை, எந்தளவு முக்கியம் என்பதை காவற்கோபுர கட்டுரைகள் தெளிவாகக் காட்ட ஆரம்பித்தன. 1920-களின் ஆரம்பத்தில் வெளிவந்த காவற்கோபுர பத்திரிகைகளிலிருந்து சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

12 மத்தேயு 24:14-ன் நிறைவேற்றமாக என்ன செய்தி பிரசங்கிக்கப்படும்? அது எப்போது செய்யப்படும்? ஜூலை 1, 1920, காவற்கோபுரத்தில் “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி” என்ற கட்டுரை வெளிவந்தது. அதில், “இந்தப் பழைய சகாப்தம் முடிவுக்கு வரும் என்பதும் மேசியானிய அரசாங்கம் அதன் ஆட்சியை ஆரம்பிக்கும் என்பதும்தான் இந்த நல்ல செய்தி” என்று சொல்லப்பட்டிருந்தது. இந்தச் செய்தி எப்போது பிரசங்கிக்கப்படும் என்றும் அந்தக் கட்டுரை தெளிவாகக் காட்டியது. “இந்தச் செய்தி [முதல்] உலகப் போருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்துக்கும்’ இடைப்பட்ட காலத்தில் பிரசங்கிக்கப்பட வேண்டும்” என்று தெளிவாகச் சொன்னது. அதனால், ‘இந்த நல்ல செய்தியை கிறிஸ்தவமண்டல நாடுகளில் பிரசங்கிப்பதற்கு இதுதான் சரியான சமயம்’ என்று அந்தக் கட்டுரை குறிப்பிட்டது.

13. மனப்பூர்வமாக ஊழியம் செய்ய 1921-ல் வெளிவந்த காவற்கோபுரம் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை எப்படி உற்சாகப்படுத்தியது?

13 இயேசு முன்னறிவித்த வேலையைச் செய்யும்படி கடவுளுடைய மக்கள் கட்டாயப்படுத்தப்படுவார்களா? இல்லை. மார்ச் 15, 1921, காவற்கோபுரத்தில் வெளிவந்த “தைரியமாக இருங்கள்” என்ற கட்டுரை, பிரசங்க வேலையை மனப்பூர்வமாகச் செய்யும்படி பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தியது. “இந்த வேலையைச் செய்வது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியமாகவும் அதை என் கடமையாகவும் நினைக்கிறேனா?” என்று ஒவ்வொருவரும் தங்களைக் கேட்டுக்கொள்ளும்படி அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருந்தது. “இதை நீங்கள் புரிந்துகொண்டால் நீங்களும் எரேமியாவைப் போலவே உணருவீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எரேமியாவின் இதயத்தில் இருந்த கடவுளுடைய வார்த்தை, ‘அவருடைய எலும்புகளுக்குள் அடைத்து வைக்கப்பட்ட நெருப்புபோல் இருந்தது.’ அதனால் அதைப் பற்றி அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை” என்றும் அந்தக் கட்டுரை சொன்னது. (எரே. 20:9) கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையோடு ஆதரவு கொடுப்பவர்கள்மேல் யெகோவாவும் இயேசுவும் எந்தளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த உற்சாகமூட்டும் கட்டுரை காட்டியது.

14, 15. எப்படிப்பட்ட ஊழியத்தில் ஈடுபடும்படி 1922-ல் வெளிவந்த காவற்கோபுரம் பரலோக நம்பிக்கையுள்ளவர்களை உற்சாகப்படுத்தியது?

14 உண்மைக் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை மற்றவர்களிடம் எப்படிச் சொல்ல வேண்டும்? ஆகஸ்ட் 15, 1922, காவற்கோபுரத்தில் “ஊழியம் முக்கியம்” என்ற தலைப்பில் சுருக்கமான, அதே சமயத்தில் முக்கியமான ஒரு கட்டுரை வெளிவந்தது. அந்தக் கட்டுரை பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை இப்படி உற்சாகப்படுத்தியது: “கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரம் வரப்போகிறது என்று வீடு வீடாகப் போய்ச் சொல்லுங்கள், நம்முடைய பிரசுரங்களை எல்லாருக்கும் சுறுசுறுப்பாகக் கொடுங்கள்.”

15 ஆம், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை எல்லாருக்கும் சொல்வது ஒரு கிறிஸ்தவருக்குக் கிடைத்த பாக்கியம், அது அவருடைய கடமை. இந்த உண்மையைத் தொடர்ந்து வலியுறுத்துவதற்கு, 1919-லிருந்து கிறிஸ்து தன்னுடைய உண்மையும் விவேகமும் உள்ள அடிமையைப் பயன்படுத்தியிருக்கிறார். அப்படியானால், பிரசங்க வேலையைச் செய்யும்படி பைபிள் மாணாக்கர்களிடம் சொல்லப்பட்டபோது அவர்கள் என்ன செய்தார்கள்?

“உண்மையுள்ளவர்கள் மனப்பூர்வமாக ஊழியம் செய்வார்கள்”

16. எல்லாருமே ஊழியத்தில் ஈடுபட வேண்டும் என்று சொல்லப்பட்டபோது, ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மூப்பர்களில் சிலர் என்ன சொன்னார்கள்?

16 பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் எல்லாருமே ஊழியத்தில் ஈடுபட வேண்டியதில்லை என்று 1920-களிலும் 1930-களிலும் சிலர் சொன்னார்கள். அவர்களைப் பற்றி நவம்பர் 1, 1927, காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “சர்ச்சில் [சபையில்] மூப்பர் என்ற பொறுப்பில் இருக்கும் சிலர் . . . ஊழியத்தில் ஈடுபடுவதில்லை, தங்கள் சகோதரர்களையும் அதில் ஈடுபட உற்சாகப்படுத்துவதில்லை. . . . கடவுளையும், அவர் நியமித்த ராஜாவையும், அவருடைய அரசாங்கத்தையும் பற்றிய செய்தியை வீடு வீடாகப் போய் மக்களுக்குச் சொல்வது மடத்தனம் என்று நினைக்கிறார்கள்.” அதனால், “உண்மையுள்ளவர்கள், அப்படிப்பட்டவர்களை குறித்துவைத்து, அவர்களோடு சகவாசம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இனிமேல் மூப்பராக இருக்கும் பொறுப்பை அவர்களுக்குக் கொடுக்க முடியாது என்றும், அவர்களிடம் சொல்லிவிட வேண்டும்” என்று அந்தக் கட்டுரை குறிப்பாகச் சொன்னது. b

17, 18. தலைமை அலுவலகத்திலிருந்து வழிநடத்துதல் கிடைத்தபோது சபைகளிலிருந்த பெரும்பாலோர் என்ன செய்தார்கள், கடந்த 100-க்கும் அதிகமான வருஷங்களில் லட்சக்கணக்கானோர் என்ன செய்திருக்கிறார்கள்?

17 தலைமை அலுவலகத்திலிருந்து கிடைத்த வழிநடத்துதலை சபைகளிலிருந்த பெரும்பாலோர் ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டார்கள். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சொல்வதை பெரிய பாக்கியமாக நினைத்தார்கள். “உண்மையுள்ளவர்கள் மனப்பூர்வமாக ஊழியம் செய்வார்கள்” என்று மார்ச் 15, 1926, காவற்கோபுரம் சொன்னது. அவர்கள் சங்கீதம் 110:3-ல் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளின்படி நடந்துகொண்டார்கள். மேசியானிய ராஜாவுக்கு மனப்பூர்வமாக ஆதரவு கொடுத்தார்கள்.

18 கடந்த 100-க்கும் அதிகமான வருஷங்களில், லட்சக்கணக்கானோர் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எல்லாருக்கும் சொல்ல தங்களை மனப்பூர்வமாக அர்ப்பணித்திருக்கிறார்கள். அடுத்த சில அதிகாரங்களில், அவர்கள் எப்படிப் பிரசங்கித்தார்கள் என்று பார்ப்போம். அதாவது, அவர்கள் ஊழியம் செய்த முறைகளையும், ஊழியத்தில் பயன்படுத்திய கருவிகளையும், அதனால் அவர்களுக்கு என்ன பலன்கள் கிடைத்தன என்றும் பார்ப்போம். முதலாவதாக, இந்தச் சுயநலமான உலகத்திலும், லட்சக்கணக்கான மக்கள் ஏன் மனப்பூர்வமாகப் பிரசங்க வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று இப்போது பார்ப்போம். இதைப் பற்றிப் படிக்கும்போது, ‘நல்ல செய்தியை நான் ஏன் மற்றவர்களுக்குச் சொல்கிறேன்?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ளலாம்.

“கடவுளுடைய அரசாங்கத்துக்கு . . . முதலிடம் கொடுங்கள்”

19. “கடவுளுடைய அரசாங்கத்துக்கு . . . முதலிடம் கொடுங்கள்” என்று இயேசு கொடுத்த ஆலோசனைக்கு நாம் ஏன் கீழ்ப்படிகிறோம்?

19 “கடவுளுடைய அரசாங்கத்துக்கு . . . முதலிடம் கொடுங்கள்” என்று தன்னைப் பின்பற்றியவர்களுக்கு இயேசு ஆலோசனை கொடுத்தார். (மத். 6:33) இந்த ஆலோசனைக்கு நாம் ஏன் கீழ்ப்படிகிறோம்? ஏனென்றால், கடவுளுடைய அரசாங்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி, அதாவது கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் அந்த அரசாங்கம் வகிக்கும் முக்கிய பங்கைப் பற்றி, நாம் அறிந்திருக்கிறோம். கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தமான சிலிர்க்கவைக்கும் உண்மைகளை அவருடைய சக்தி படிப்படியாக வெளிப்படுத்தியதைப் பற்றி முந்தின அதிகாரத்தில் பார்த்தோம். இந்த அருமையான உண்மைகள் நம் மனதைத் தொடுவதால், கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்க நாம் தூண்டப்படுகிறோம்.

புதைத்து வைக்கப்பட்ட பொக்கிஷத்தைக் கண்டுபிடித்ததும் ஒருவர் பெருமகிழ்ச்சி அடைவதுபோல், கிறிஸ்தவர்களும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ளும்போது ரொம்பச் சந்தோஷப்படுகிறார்கள் (பாரா 20)

20. தன்னுடைய ஆலோசனைக்கு தன்னைப் பின்பற்றுபவர்கள் எப்படிப் பிரதிபலிப்பார்கள் என்று இயேசுவின் உவமை காட்டுகிறது?

20 தன்னுடைய ஆலோசனைக்கு, தன்னைப் பின்பற்றுகிறவர்கள் எப்படிப் பிரதிபலிப்பார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். அது நமக்கு எப்படித் தெரியும்? நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட பொக்கிஷத்தைப் பற்றிய உவமையைச் சிந்தித்துப் பாருங்கள். (மத்தேயு 13:44-ஐ வாசியுங்கள்.) அந்த உவமையில் சொல்லப்பட்ட மனிதன், நிலத்தில் வேலை செய்யும்போது, ஒரு பொக்கிஷத்தைக் கண்டுபிடிக்கிறான். அது எந்தளவு விலைமதிப்புள்ளது என்பதை உடனடியாகப் புரிந்துகொள்கிறான். அடுத்து என்ன செய்கிறான்? “தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்குகிறான்.” நமக்கு என்ன பாடம்? கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய உண்மைகளையும் அதன் மதிப்பையும் புரிந்துகொள்ளும்போது, நம் வாழ்க்கையில் அதற்குத்தான் முதலிடம் கொடுப்போம். அதற்காக என்னென்ன தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தாலும் அவற்றைச் சந்தோஷமாகச் செய்வோம். c

21, 22. கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையான ஆதரவு தருபவர்கள், அதற்கு முதலிடம் கொடுப்பதை எப்படிக் காட்டுகிறார்கள்? ஒரு உதாரணம் சொல்லுங்கள்.

21 கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையான ஆதரவு தருபவர்கள், தாங்கள் அதற்கு முதலிடம் கொடுப்பதை வார்த்தைகளால் மட்டுமல்ல, செயல்களாலும் காட்டுகிறார்கள். அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை, திறமைகளை, வளங்களை பிரசங்க வேலைக்காக அர்ப்பணிக்கிறார்கள். முழுநேர ஊழியத்தில் ஈடுபடுவதற்காக நிறைய பேர் பெரிய பெரிய தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுப்பவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பதை அவர்கள் நேரடியாகப் பார்த்திருக்கிறார்கள். ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள்.

22 ஏவரி மற்றும் லொவீன்யா ப்ரிஸ்டோ தம்பதி, 1920-களின் இறுதியில் ஐக்கிய மாகாணங்களின் தெற்குப் பகுதியில் பயனியர்களாகச் சேவை செய்தார்கள். பல வருஷங்களுக்குப் பிறகு, லொவீன்யா இப்படிச் சொன்னார்: “நானும் என் கணவரும் பல வருஷம் சந்தோஷமாக பயனியர் சேவை செய்தோம். நிறைய சமயங்களில், பெட்ரோல் போடுவதற்கோ மளிகை சாமான்கள் வாங்குவதற்கோ எங்களிடம் பணம் இருக்கவில்லை. ஆனால், ஏதோவொரு விதத்தில் எங்களுடைய தேவைகளை யெகோவா பூர்த்தி செய்தார். எங்களுடைய பங்கில் பயனியர் சேவையை விடாமல் செய்தோம். தேவையானதெல்லாம் எப்போதுமே எங்களுக்குக் கிடைத்தது.” ப்ளோரிடாவிலுள்ள, பென்சாகோலாவில் சேவை செய்துகொண்டிருந்தபோது, பணக் கஷ்டத்தில் அவர்கள் தவித்த ஒரு சமயத்தைப் பற்றி லொவீன்யா சொன்னார். அன்று ஊழியத்தை முடித்துவிட்டு அவர்களுடைய வாகன வீட்டுக்குத் திரும்பியபோது, அதன் வாசலில் இரண்டு பெரிய பைகள் நிறைய மளிகை சாமான்கள் இருந்தன. “இது பென்சாகோலா சபையின் அன்பளிப்பு” என்ற ஒரு குறிப்பு அதில் எழுதி வைக்கப்பட்டிருந்தது. பல வருஷங்களாகச் செய்த முழுநேர சேவையைப் பற்றி லொவீன்யா இப்படிச் சொன்னார்: “யெகோவா நம்மை ஒருநாளும் கைவிட மாட்டார். அவர்மேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கை ஒருநாளும் வீண்போகாது.”

23. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொண்டதால் நீங்கள் எப்படி உணருகிறீர்கள், என்ன செய்யத் தீர்மானமாக இருக்கிறீர்கள்?

23 மற்றவர்கள் செய்கிற அளவுக்கு நம்மால் ஊழியம் செய்ய முடியாமல் போகலாம். நம் சூழ்நிலைகள் வித்தியாசப்படலாம். ஆனாலும், நல்ல செய்தியை முழு மூச்சோடு சொல்வதை நம் எல்லாராலுமே ஒரு பாக்கியமாகக் கருத முடியும். (கொலோ. 3:23) ஏனென்றால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி நாம் தெரிந்துகொண்ட அருமையான உண்மைகளைப் பொக்கிஷமாக நினைக்கிறோம். அதனால், அதைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல, நம்மால் முடிந்த எந்தத் தியாகத்தையும் செய்ய மனமுள்ளவர்களாகவும், ஆர்வமுள்ளவர்களாகவும் இருக்கிறோம்.

24. இந்தக் கடைசி நாட்களில் கடவுளுடைய அரசாங்கம் சாதித்திருக்கிற மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று எது?

24 கடந்த நூறு வருஷங்களுக்கும் மேலாக, மத்தேயு 24:14-லுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளை நம் ராஜா நிறைவேற்றி வந்திருக்கிறார். அதுவும் யாரையும் கட்டாயப்படுத்தாமல் செய்திருக்கிறார். இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள், இந்தச் சுயநலமான உலகத்தை விட்டு வெளியே வந்து, ஊழிய வேலைக்குத் தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் அவர்கள் நல்ல செய்தியைச் சொல்லிவருவது, இயேசு ராஜ அதிகாரத்தில் வந்திருப்பதற்கு ஒரு அடையாளமாக இருக்கிறது. இது, இந்தக் கடைசி நாட்களில் கடவுளுடைய அரசாங்கம் சாதித்திருக்கிற மிகப் பெரிய சாதனைகளில் ஒன்றாக இருக்கிறது.

a யாரிடம் இந்த வேலை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்ற ஆங்கிலத் துண்டுப்பிரதி இப்படிச் சொன்னது: “வீடு வீடாகப் போய் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சொல்வதற்கு த கோல்டன் ஏஜ் பத்திரிகை பயன்படுத்தப்பட்டது. . . . அதை எல்லாருக்கும் அறிமுகப்படுத்துவதோடு ஒவ்வொரு வீட்டிலும் த கோல்டன் ஏஜ் பத்திரிகையைக் கொடுக்க வேண்டும். அவர்கள் அதற்குச் சந்தா கட்டினாலும் சரி, கட்டாவிட்டாலும் சரி, ஒரு பிரதியைக் கொடுக்க வேண்டும்.” அப்போதிலிருந்து பல வருஷங்களுக்கு த கோல்டன் ஏஜ் பத்திரிகையை மட்டுமல்ல காவற்கோபுர பத்திரிகையையும் மக்களுக்குச் சந்தா மூலம் கொடுக்கச் சொல்லி சகோதரர்கள் உற்சாகப்படுத்தப்பட்டார்கள். பிப்ரவரி 1, 1940-லிருந்து ஊழியத்தில் தனி பத்திரிகைகளைக் கொடுக்கும்படியும் எத்தனை பத்திரிகைகளைக் கொடுத்தார்கள் என்பதை அறிக்கை செய்யும்படியும் சொல்லப்பட்டார்கள்.

b அந்தக் காலத்தில், மூப்பர்களைச் சபையார்தான் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தார்கள். அதனால், ஊழிய ஏற்பாட்டை எதிர்த்தவர்களுக்கு ஓட்டுப் போட சபையார் மறுத்துவிடலாம். மூப்பர்களை நியமிக்கும் விஷயத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி 12-ஆம் அதிகாரத்தில் பார்ப்போம்.

c விலை உயர்ந்த முத்துக்களைத் தேடிப் பயணம் செய்கிற வியாபாரியைப் பற்றிய உவமையில் இதே விஷயத்தை இயேசு சொன்னார். அப்படிப்பட்ட முத்துக்களை அவன் கண்டுபிடித்ததும் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் விற்று அவற்றை வாங்குகிறான். (மத். 13:45, 46) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய உண்மைகளை வித்தியாசமான விதங்களில் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளலாம் என்பதையும் இந்த இரண்டு உவமைகள் காட்டுகின்றன. சிலர் எதேச்சையாக இந்த உண்மைகளைத் தெரிந்துகொள்கிறார்கள், மற்றவர்கள் இதைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். இந்த உண்மைகளை நாம் எப்படித் தெரிந்துகொண்டாலும் சரி, வாழ்க்கையில் கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுப்பதற்கு தியாகங்கள் செய்ய நாம் மனமுள்ளவர்களாக இருக்கிறோம்.