Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 8

பிரசங்கிப்பதற்கான கருவிகள்​—⁠உலகெங்குமுள்ள மக்களுக்காகப் பிரசுரங்களைத் தயாரித்தல்

பிரசங்கிப்பதற்கான கருவிகள்​—⁠உலகெங்குமுள்ள மக்களுக்காகப் பிரசுரங்களைத் தயாரித்தல்

அதிகாரத்தின் முக்கியக் குறிப்பு

எல்லா தேசங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்த மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்ல உதவும் கருவிகளை யெகோவா கொடுத்துவருகிறார்

1, 2. (அ) முதல் நூற்றாண்டில், ரோம சாம்ராஜ்யம் முழுவதும் நல்ல செய்தியைப் பரப்புவதற்கு எது உதவியது? (ஆ) இன்று நமக்கு யெகோவாவின் ஆதரவு இருப்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது? (“ 670-க்கும் அதிகமான மொழிகளில் நல்ல செய்தி” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

 கி.பி. 33-ல், பெந்தெகொஸ்தே பண்டிகைக்காக பல இடங்களிலிருந்து எருசலேமுக்கு வந்திருந்தவர்கள் மலைத்துப்போனார்கள்! ஏன்? ஏனென்றால், அங்கிருந்த கலிலேயர்கள் வெவ்வேறு மொழிகளில் சரளமாகப் பேசினார்கள். அவர்கள் பேசிய விஷயம் அங்கு வந்திருந்தவர்களின் மனதைக் கவர்ந்தது. அந்தக் கலிலேயர்கள் எல்லாரும் இயேசுவின் சீஷர்கள். வெவ்வேறு மொழிகளைப் பேசும் அற்புதமான வரம் அப்போதுதான் அவர்களுக்குக் கிடைத்திருந்தது. அவர்களுக்குக் கடவுளுடைய ஆதரவு இருந்தது என்பதற்கு அது ஒரு அத்தாட்சியாக இருந்தது. (அப்போஸ்தலர் 2:1-8, 12, 15-17-ஐ வாசியுங்கள்.) அன்று அவர்கள் சொன்ன நல்ல செய்தியைப் பல பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் கேட்டார்கள். அதன் பிறகு, அந்தச் செய்தி ரோம சாம்ராஜ்யம் முழுவதும் பரவியது.—கொலோ. 1:23.

2 இன்று வெவ்வேறு மொழிகளைப் பேசும் அற்புதமான வரம் கடவுளுடைய ஊழியர்களுக்கு இல்லை. ஆனாலும், அவர்கள் இயேசுவின் சீஷர்கள் பேசியதைவிட அதிகமான மொழிகளில், சொல்லப்போனால் 670-க்கும் அதிகமான மொழிகளில், நல்ல செய்தியை மொழிபெயர்க்கிறார்கள். (அப். 2:9-11) அவர்கள் ஏராளமான பிரசுரங்களைப் பல மொழிகளில் பிரசுரித்திருப்பதால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி உலகின் மூலைமுடுக்கெல்லாம் எட்டியிருக்கிறது. a ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவைப் பயன்படுத்தி பிரசங்க வேலையை யெகோவா வழிநடத்தி வருகிறார் என்பதற்கு இதுவும் ஒரு தெளிவான அத்தாட்சி. (மத். 28:19, 20) பிரசங்க வேலையைச் செய்வதற்கு, கடந்த 100 வருஷங்களுக்கும் மேலாக நாம் பயன்படுத்தியிருக்கும் சில கருவிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம். அதைப் பற்றிப் படிக்கும்போது, மக்கள்மேல் தனிப்பட்ட அக்கறை காட்டுவதற்கு நம் ராஜா எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். அதோடு, நாம் கடவுளுடைய வார்த்தையைக் கற்றுக்கொடுப்பவர்களாக இருப்பதற்கு எப்படி உற்சாகப்படுத்தியிருக்கிறார் என்பதையும் கவனியுங்கள்.—2 தீ. 2:2.

சத்திய விதைகளை விதைக்க ராஜா தன் ஊழியர்களைத் தயார்படுத்துகிறார்

3. பிரசங்க வேலையில் நாம் ஏன் பல விதமான கருவிகளைப் பயன்படுத்துகிறோம்?

3 இயேசு, “பரலோக அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை” விதைகளுக்கும், ஒருவருடைய இதயத்தை நிலத்துக்கும் ஒப்பிட்டார். (மத். 13:18, 19) விதையை நிலத்தில் விதைப்பதற்காக ஒரு விவசாயி பல விதமான கருவிகளைப் பயன்படுத்தி அந்த நிலத்தைப் பண்படுத்துவார். அதேபோல், சத்திய விதையை லட்சக்கணக்கான மக்களின் இதயத்தில் விதைப்பதற்காக யெகோவாவின் மக்கள் பல விதமான கருவிகளைப் பயன்படுத்தி, மக்களின் இதயத்தைத் தயார்படுத்தியிருக்கிறார்கள். அவற்றில் சில கருவிகள் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன. புத்தகங்கள், பத்திரிகைகள் போன்ற கருவிகள் இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏராளமான மக்களுக்கு நல்ல செய்தியை அறிவிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஊழிய முறைகளைப் பற்றி முந்தின அதிகாரத்தில் பார்த்தோம். இந்த அதிகாரத்தில், மக்களை நேரில் சந்தித்து பேச யெகோவாவின் ஊழியர்களுக்கு உதவியாக இருந்த கருவிகளைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்.—அப். 5:42; 17:2, 3.

கனடாவிலுள்ள டோரான்டோவில், ஃபோனோகிராஃபுகளையும் ஒலிபெருக்கி கருவிகளையும் தயாரிக்கிறார்கள்

4, 5. ஃபோனோகிராஃப் ரெக்கார்டுகள் எப்படிப் பயன்படுத்தப்பட்டன? ஆனால், அது ஏன் அந்தளவு பயனுள்ளதாக இருக்கவில்லை?

4 பதிவு செய்யப்பட்ட பேச்சுகள். 1930-களிலும் 1940-களிலும் பிரஸ்தாபிகள் பைபிள் பேச்சுகளை ஃபோனோகிராஃப் மூலம் போட்டுக்காட்டினார்கள். ஒவ்வொரு பேச்சும் ஐந்து நிமிஷங்களுக்கும் குறைவாக இருந்தது. “திரித்துவம்,” “உத்தரிக்கும் ஸ்தலம்,” “ராஜ்யம்” போன்ற சிறிய தலைப்புகளிலும் சில பேச்சுகள் இருந்தன. ஃபோனோகிராஃபுகளை எப்படிப் பயன்படுத்தினார்கள்? அமெரிக்காவில் 1930-ல் ஞானஸ்நானம் எடுத்த சகோதரர் க்லேட்டன் உட்வர்த் ஜூனியர் இப்படிச் சொன்னார்: “நான் ஒரு சின்ன ஃபோனோகிராஃப் பெட்டியை ஊழியத்துக்குக் கொண்டுபோனேன். அதை இயக்குவதற்காக அதிலுள்ள ஸ்பிரிங்கைச் சுற்றிவிட வேண்டியிருந்தது. ஃபோனோகிராஃபில் ஒரு முள் இணைக்கப்பட்டிருக்கும். அதைக் கழட்டி மாட்ட முடியும். பதிவு செய்யப்பட்ட பேச்சுகளைக் கொண்ட ஒரு ரெக்கார்டை ஃபோனோகிராஃபில் வைத்து அதன்மேல் சரியான இடத்தில் அந்த முள்ளை நிறுத்தும்போது பேச்சுகளைக் கேட்க முடியும். நான் ஒரு வீட்டிற்குப் போனதும், ஒரு பேச்சைப் போட்டுக்காட்டுவதற்காக ஃபோனோகிராஃபைத் தயாராக வைப்பேன். பிறகு, வீட்டின் கதவைத் தட்டுவேன். வீட்டில் இருப்பவர் வெளியே வந்ததும் அவரிடம், ‘ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் கேட்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்’ என்று சொல்வேன்.” மக்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்? “பெரும்பாலும் மக்கள் நன்றாகக் கேட்டார்கள். ஆனால், சிலர் கதவை மூடிவிடுவார்கள். சில சமயம் நான் ஃபோனோகிராஃபை விற்க வந்திருப்பதாக மக்கள் நினைத்தார்கள்” என்று சகோதரர் உட்வர்த் சொல்கிறார்.

1940-க்குள் 90-க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பேச்சுகள் பயன்படுத்தப்பட்டன; 10 லட்சத்துக்கும் அதிகமான ஃபோனோகிராஃப் ரெக்கார்டுகள் தயாரிக்கப்பட்டன

5 1940-க்குள் 90-க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பேச்சுகள் பயன்படுத்தப்பட்டன. 10 லட்சத்துக்கும் அதிகமான ஃபோனோகிராஃப் ரெக்கார்டுகள் தயாரிக்கப்பட்டன. பிரிட்டனில் பயனியராகவும் பிற்பாடு ஆளும் குழு அங்கத்தினராகவும் இருந்த ஜான் ஈ. பார் இப்படிச் சொன்னார்: “1936-லிருந்து 1945 வரைக்கும் ஃபோனோகிராஃப் இல்லாமல் நான் ஊழியத்துக்குப் போனதே கிடையாது. அதுமட்டும் இல்லையென்றால் எனக்குக் கை உடைந்ததுபோல் இருக்கும். சகோதரர் ரதர்ஃபர்ட் கொடுத்த பேச்சின் ரெக்கார்ட்டை, ஃபோனோகிராஃபில் போட்டுக்காட்டும்போதெல்லாம் அவருடைய குரலைக் கேட்பது எனக்கு ரொம்ப உற்சாகமாக இருக்கும். ஊழியத்தில் அவர் என்னோடு இருப்பதுபோல் நான் உணர்வேன். ஆனாலும், ஃபோனோகிராஃப் மூலம் மக்களுக்குக் கற்றுக்கொடுக்கவோ அவர்களுடைய இதயத்தைத் தொடவோ முடியவில்லை.”

6, 7. (அ) பிரசங்க அட்டைகளைப் பயன்படுத்தியதால் கிடைத்த நன்மைகள் என்ன? ஆனால், அவற்றைப் பயன்படுத்துவதில் என்ன பிரச்சினைகள் இருந்தன? (ஆ) ஊழியத்தில் நம்மைப் பேச வைப்பதற்கு யெகோவா என்ன செய்தார்?

6 பிரசங்க அட்டைகள். 1933-லிருந்து வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பிரசங்க அட்டைகளைப் பயன்படுத்தும்படி பிரஸ்தாபிகளிடம் சொல்லப்பட்டது. அந்த அட்டையின் நீளம் 5 அங்குலம், அகலம் 3 அங்குலம். அதில் சுருக்கமான ஒரு பைபிள் செய்தியும், ஒரு பைபிள் பிரசுரத்தைப் பற்றிய விவரமும் இருந்தது. வீட்டுக்காரர் விரும்பினால் அந்தப் பிரசுரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு பிரஸ்தாபி அந்த அட்டையை வீட்டுக்காரரிடம் கொடுத்து அதை வாசிக்கச் சொல்வார். “பிரசங்க அட்டையைப் பயன்படுத்தி ஊழியம் செய்வது எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது” என்று லில்லியன் கம்மரூட் என்ற சகோதரி சொன்னார். அவர் பிற்பாடு, பியூர்டோ ரிகோவிலும் அர்ஜென்டினாவிலும் மிஷனரியாகச் சேவை செய்தார். பிரசங்க அட்டையைப் பயன்படுத்துவது அவருக்கு ஏன் பிடித்திருந்தது? “அப்போதெல்லாம் எல்லாராலுமே ஊழியத்தில் திறமையாகப் பேச முடியவில்லை. அதனால், மக்களை நேரில் சந்திக்க பிரசங்க அட்டை ரொம்ப உதவியாக இருந்தது” என்று அவர் சொன்னார்.

பிரசங்க அட்டை (இத்தாலிய மொழியில்)

7 1918-ல் ஞானஸ்நானம் எடுத்த சகோதரர் டேவிட் ரூஷ் இப்படிச் சொன்னார்: “பைபிள் விஷயங்களைச் சரியாகப் பேச முடியும் என்ற நம்பிக்கை சிலருக்கு மட்டும்தான் இருந்தது. அதனால், பிரசங்க அட்டைகளைப் பயன்படுத்தி ஊழியம் செய்வது சகோதர சகோதரிகளுக்கு ரொம்ப வசதியாக இருந்தது.” ஆனால், பிரசங்க அட்டையைப் பயன்படுத்துவதில் சில பிரச்சினைகளும் இருந்தன. “சில சமயங்களில் நாங்கள் சந்தித்த ஆட்கள் எங்களை ஊமைகள் என்று நினைத்தார்கள். ஒருவிதத்தில் எங்களில் நிறைய பேர் ஊமைகளைப் போலத்தான் இருந்தோம். ஆனால், மக்களிடம் நேரடியாகப் பேச யெகோவா தன் ஊழியர்களைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார். சீக்கிரத்திலேயே, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பைபிளைப் பயன்படுத்தி மக்களிடம் பேச அவர் கற்றுக்கொடுத்தார். 1943-ல் ஆரம்பிக்கப்பட்ட தேவராஜ்ய ஊழியப் பள்ளி மூலம் அதைச் செய்தார்.”எரேமியா 1:6-9-ஐ வாசியுங்கள்.

8. இயேசு உங்களுக்குப் பயிற்சி கொடுக்க அனுமதிப்பதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

8 புத்தகங்கள். 1914-லிருந்து பைபிள் விஷயங்களை விளக்கும் 100-க்கும் அதிகமான புத்தகங்களை யெகோவாவின் மக்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் சில புத்தகங்கள், ஊழியத்தில் திறமையாகப் பேச பிரஸ்தாபிகளைத் தயார்படுத்தின. சுமார் 70 வருஷங்களாக பிரஸ்தாபியாக இருந்துவரும் சகோதரி ஆனா லார்சன் இப்படிச் சொன்னார்: “தேவராஜ்ய ஊழியப் பள்ளி மூலமாகவும் அதற்காகப் பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் மூலமாகவும் திறமையாக ஊழியம் செய்ய யெகோவா எங்களுக்கு உதவி செய்திருக்கிறார். அதற்கு அவர் பயன்படுத்திய முதல் புத்தகம், ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு தேவராஜ்ய உதவி. இந்த ஆங்கிலப் புத்தகம் 1945-ல் வெளிவந்தது. பிறகு 1946-ல், ‘எந்தவொரு நல்ல வேலையையும் செய்யத் தகுதிபெறுதல்’ (ஆங்கிலம்) என்ற புத்தகம் வெளிவந்தது. 2001-ல் தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் என்ற புத்தகம் வெளிவந்தது. இப்போது இதைத்தான் நாம் பயன்படுத்துகிறோம்.” ஆம், ‘ஊழியர்களாக இருக்க போதிய தகுதியை’ பெற, தேவராஜ்ய ஊழியப் பள்ளி மூலமாகவும் இப்படிப்பட்ட புத்தகங்கள் மூலமாகவும் யெகோவா நமக்கு உதவியிருக்கிறார். (2 கொ. 3:5, 6) இன்று ஊழியத்தை நன்றாகச் செய்ய வார நாட்களில் நடக்கும் கூட்டங்கள் நமக்குப் பயிற்சி தருகின்றன. ஒவ்வொரு மாதமும் வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம் நமக்குக் கிடைக்கிறது. அதிலுள்ள ஆலோசனைகளை நீங்கள் முழுமையாகப் பின்பற்றுகிறீர்களா? அப்படி நீங்கள் பின்பற்றினால், சிறந்த போதகராக ஆவதற்கு கிறிஸ்து பயிற்சியளிக்க உங்களை அனுமதிக்கிறீர்கள் என்று அர்த்தம்.—2 கொ. 9:6; 2 தீ. 2:15.

9, 10. சத்திய விதைகளை விதைப்பதற்கும், அவற்றுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்கும் புத்தகங்கள் எப்படி உதவியிருக்கின்றன?

9 அடிப்படை பைபிள் சத்தியங்களை விளக்க உதவும் புத்தகங்களையும் யெகோவா தன்னுடைய அமைப்பின் மூலமாக நமக்குக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, 1968-ல் வெளிவந்த நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகம் ரொம்பவே பிரயோஜனமாக இருந்தது. ஊழியத்தில் அதன் பலன்களை உடனடியாகப் பார்க்க முடிந்தது. “சத்தியம் புத்தகத்துக்கு அமோக வரவேற்பு இருந்தது. அதனால், செப்டம்பர் மாதம் புருக்லின் ஃபேக்ட்ரியில் அந்தப் புத்தகத்தை அச்சடிப்பதற்காகவே நைட் ஷிஃப்ட் போடப்பட்டது” என்று நவம்பர் 1968, நம் ராஜ்ய ஊழியம் சொன்னது. ஏனென்றால், “ஆகஸ்ட் மாதத்தில் அச்சடித்துக் கொடுத்ததுபோக இன்னும் கூடுதலாக 15 லட்சம் பிரதிகள் தேவைப்பட்டன” என்று அதே கட்டுரை சொன்னது. 1982-க்குள் 10 கோடிக்கும் அதிகமான பிரதிகள் 116 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டன. 1968-லிருந்து 1982 வரையில், அதாவது 14 வருஷங்களில், 10 லட்சம் ஆட்கள் யெகோவாவின் சாட்சிகளாக ஆவதற்கு இந்தப் புத்தகம் உதவியது. b

10 பைபிள் படிப்பு நடத்துவதற்கு உதவும் இன்னொரு மிகச் சிறந்த புத்தகம் 2005-ல் வெளியிடப்பட்டது. அதுதான் பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகம். இந்தப் புத்தகத்தின் கிட்டத்தட்ட 20 கோடி பிரதிகள் 256 மொழிகளில் அச்சடிக்கப்பட்டன. இதனால் கிடைத்த பலன்? 2005-லிருந்து 2012 வரையில், அதாவது ஏழே வருஷங்களில், கிட்டத்தட்ட 12 லட்சம் ஆட்கள் யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள். அந்த வருஷங்களில் பைபிள் படிப்புகளின் எண்ணிக்கையும் 60 லட்சத்திலிருந்து 87 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்தது. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய சத்திய விதைகளை விதைப்பதற்கும், அவற்றுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்கும் நாம் எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!1 கொரிந்தியர் 3:6, 7-ஐ வாசியுங்கள்.

11, 12. பைபிள் வசனங்களை அடிப்படையாக வைத்து, யார் யாருக்காக நம் பத்திரிகைகள் தயாரிக்கப்பட்டன?

11 பத்திரிகைகள். ஆரம்பத்தில், காவற்கோபுர பத்திரிகை ‘பரலோக அழைப்பை’ பெற்ற ‘சிறுமந்தைக்காகவே’ தயாரிக்கப்பட்டது. (லூக். 12:32; எபி. 3:1) அக்டோபர் 1, 1919-ல் பொது மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் இன்னொரு பத்திரிகையை யெகோவாவின் அமைப்பு வெளியிட்டது. இந்தப் பத்திரிகை பைபிள் மாணாக்கர்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் ரொம்பவே பிரபலமாக ஆனது. அதனால், பல வருஷங்களுக்கு காவற்கோபுரத்தைவிட இந்தப் பத்திரிகையின் வினியோகிப்பு பல மடங்கு அதிகமாக இருந்தது. முதலில் இந்தப் பத்திரிகை த கோல்டன் ஏஜ் என்று அழைக்கப்பட்டது. 1937-ல் இதன் பெயர் கான்சலேஷன் என்று மாற்றப்பட்டது. 1946-லிருந்து இது விழித்தெழு! என்று அழைக்கப்படுகிறது.

12 கடந்த வருஷங்களில் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் எழுத்து நடையிலும் வடிவத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனாலும், அவற்றின் நோக்கம் மாறவே இல்லை. கடவுளுடைய அரசாங்கத்தை விளம்பரப்படுத்துவதும் மக்களின் விசுவாசத்தைப் பலப்படுத்துவதும்தான் அவற்றின் நோக்கம். இன்று, இந்த காவற்கோபுர பத்திரிகை படிப்பு இதழ், பொது இதழ் என இரண்டு பதிப்புகளாக வெளிவருகின்றன. படிப்பு இதழ் ‘வீட்டாருக்காக,’ அதாவது ‘சிறுமந்தைக்காகவும்’ ‘வேறே ஆடுகளுக்காகவும்,’ தயாரிக்கப்படுகிறது. c (மத். 24:45; யோவா. 10:16) சத்தியத்தைப் பற்றித் தெரியாவிட்டாலும் சிலருக்கு பைபிள்மீதும் கடவுள்மீதும் மதிப்பு இருக்கும். அப்படிப்பட்ட ஆட்களுக்காக பொது இதழ் தயாரிக்கப்படுகிறது. (அப். 13:16) பைபிளைப் பற்றியும் உண்மை கடவுளான யெகோவாவைப் பற்றியும் தெரியாத ஆட்களுக்காக விழித்தெழு! பத்திரிகை தயாரிக்கப்படுகிறது.—அப். 17:22, 23.

13. நம் பத்திரிகைகள் படைத்த சாதனைகளில் உங்கள் மனதைக் கவர்ந்தது எது? (“ உலக சாதனை படைத்த பிரசுரங்கள்” என்ற பட்டியலிலிருந்து சொல்லுங்கள்.)

13 2014-லிருந்து ஒவ்வொரு மாதமும் சுமார் 4 கோடியே 60 லட்சம் காவற்கோபுர பத்திரிகைகளும், 4 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான விழித்தெழு! பத்திரிகைகளும் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. விழித்தெழு! பத்திரிகை சுமார் 100 மொழிகளிலும் காவற்கோபுர பத்திரிகை 200-க்கும் அதிகமான மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கின்றன. உலகிலேயே அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டு, வினியோகிக்கப்படுகிற பத்திரிகைகள் இவைதான். இது ஒரு பெரிய சாதனையாக இருந்தாலும், இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், எந்தச் செய்தி உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும் என்று இயேசு சொன்னாரோ அந்தச் செய்தி இந்தப் பத்திரிகைகளில் இருக்கின்றன.—மத். 24:14.

14. நாம் எதை மும்முரமாக வினியோகித்திருக்கிறோம், ஏன்?

14 பைபிள். 1896-ல் சகோதரர் ரஸலும் அவருடைய நண்பர்களும், நம் பிரசுரங்களை அச்சடிக்க பயன்படுத்திய நிறுவனத்தின் பெயரில் சிறிய மாற்றம் செய்தார்கள். அதாவது, நம் நிறுவனத்தின் பெயரோடு பைபிள் என்ற வார்த்தையைச் சேர்த்தார்கள். அதனால், அதன் பெயர் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி என்று ஆனது. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிப்பதற்கு, பைபிளை முக்கியமான கருவியாக நாம் பயன்படுத்துவதால் இந்தப் புதிய பெயர் பொருத்தமாக இருக்கிறது. (லூக். 24:27) இந்தச் சட்டப்பூர்வ நிறுவனத்தின் பெயருக்கேற்ப கடவுளுடைய ஊழியர்கள் பைபிளை மும்முரமாக வினியோகித்திருக்கிறார்கள். அதோடு, பைபிளைப் படிக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள். அதற்காக, 1926-ல் த எம்ஃபடிக் டயக்லாட், அதாவது பென்ஜமின் வில்சன் மொழிபெயர்த்த கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம், நம் சொந்த அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டது. 1942-ன் ஆரம்பத்தில் கிங் ஜேம்ஸ் வர்ஷன் பைபிள் அச்சடிக்கப்பட்டு, சுமார் ஏழு லட்சம் பிரதிகள் வினியோகிக்கப்பட்டன. இரண்டே வருஷங்களுக்குப் பிறகு, அமெரிக்கன் ஸ்டான்டர்ட் வர்ஷன் பைபிள் அச்சடிக்கப்பட்டது. அதில் யெகோவாவின் பெயர் 6,823 இடங்களில் இருக்கிறது. 1950-க்குள் இந்த பைபிளின் 2,50,000-க்கும் அதிகமான பிரதிகள் வினியோகிக்கப்பட்டன.

15, 16. (அ) புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது? (“ சீக்கிரமாக பைபிளை மொழிபெயர்க்க எது உதவுகிறது?” என்ற பெட்டியிலிருந்து சொல்லுங்கள்.) (ஆ) பைபிளிலுள்ள வார்த்தைகள் உங்கள் மனதைத் தொட நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

15 1950-ல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது (2009-ல் தமிழில் வெளியிடப்பட்டது). 1961-ல் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் ஒரே தொகுப்பாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது (2016-ல் தமிழில் வெளியிடப்பட்டது). மூல எபிரெய பதிவுகளில் எங்கெல்லாம் யெகோவா என்ற பெயர் இருந்ததோ அங்கெல்லாம் அதை பயன்படுத்துவதன் மூலம் இந்த மொழிபெயர்ப்பு யெகோவாவுக்குப் புகழ் சேர்த்திருக்கிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலும் 237 தடவை கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. திருத்தமாகவும், வாசிப்பதற்கு சுலபமாகவும் இருப்பதற்காக ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் ஒருசில தடவை திருத்தியமைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் 2013-ல் இது திருத்தியமைக்கப்பட்டது. 2013-ன் புள்ளிவிவரப்படி 20 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் முழுமையாகவோ பகுதியாகவோ 121 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.

16 புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைத் தங்கள் சொந்த மொழியில் வாசித்தவர்களில் சிலர் என்ன சொன்னார்கள்? நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் இப்படிச் சொன்னார்: “எங்களுடைய பழைய நேபாளி பைபிளைப் புரிந்துகொள்வது ரொம்பவே கஷ்டம். ஏனென்றால், அது பழங்கால மொழியில் எழுதப்பட்டது. ஆனால், மக்கள் அன்றாடம் பேசும் மொழியில் இந்த பைபிள் எழுதப்பட்டிருப்பதால் இதை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது.” மத்திய ஆப்பிரிக்கக் குடியரசைச் சேர்ந்த ஒரு பெண், சாங்கோ மொழியில் இந்த பைபிளை வாசிக்க ஆரம்பித்தபோது அவளுடைய கண்கள் கலங்கின. “என் மனதைத் தொடும் விதத்தில் இந்த பைபிள் இருக்கிறது” என்று அவர் சொன்னார். அந்தப் பெண்ணைப் போல நாம் பைபிளைத் தினமும் படித்தால் அதிலுள்ள வார்த்தைகள் நம் மனதையும் தொடும்.—சங். 1:2; மத். 22:36, 37.

கருவிகளுக்காகவும் பயிற்சிகளுக்காகவும் நன்றி காட்டுவது

17. உங்களுக்குக் கிடைத்த கருவிகளுக்காகவும், பயிற்சிகளுக்காகவும் நீங்கள் எப்படி நன்றி காட்டலாம், அப்படிச் செய்தால் உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?

17 நம் ராஜா இயேசு கிறிஸ்து நமக்குத் தந்திருக்கிற கருவிகளுக்காகவும், படிப்படியாகக் கொடுத்திருக்கிற பயிற்சிகளுக்காகவும் நீங்கள் நன்றி காட்டுகிறீர்களா? கடவுளுடைய அமைப்பு தயாரித்துக் கொடுக்கிற பிரசுரங்களைப் படிக்க நேரம் ஒதுக்குகிறீர்களா? மற்றவர்களுக்கு உதவி செய்ய அதிலிருக்கும் விஷயங்களைப் பயன்படுத்துகிறீர்களா? அப்படிச் செய்தால் நீங்களும் ஓப்பல் பெட்லர் என்ற சகோதரியைப் போலவே சொல்வீர்கள். அக்டோபர் 4, 1914-ல் ஞானஸ்நானம் எடுத்த அவர் இப்படிச் சொல்கிறார்: “பல வருஷங்களாக நானும் என் கணவரும் [எட்வர்ட்] ஃபோனோகிராஃபையும் பிரசங்க அட்டைகளையும் பயன்படுத்தினோம். புத்தகங்களையும், சிறுபுத்தகங்களையும், பத்திரிகைகளையும் கொடுத்து வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தோம். விசேஷ ஊழியங்களிலும் அணிவகுப்புகளிலும் கலந்துகொண்டோம். ஊழியத்தில் துண்டுப்பிரதிகளையும் கொடுத்தோம். கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, மறுசந்திப்பு செய்யவும் ஆர்வம் காட்டியவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்தவும் எங்களுக்குப் பயிற்சி கிடைத்தது. அதனால், நாங்கள் கடவுளுடைய சேவையில் எப்போதும் படு சுறுசுறுப்பாக ஈடுபட்டோம். சந்தோஷமாகவும் இருந்தோம்.” கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள், சத்திய விதைகளை விதைப்பதிலும், அறுவடை செய்வதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடுவார்கள் என்று இயேசு வாக்குக் கொடுத்திருந்தார். அவர்கள் ஒன்றுசேர்ந்து சந்தோஷப்படுவார்கள் என்றும் சொல்லியிருந்தார். சகோதரி ஓப்பலைப் போன்ற லட்சக்கணக்கானோர், இயேசு கொடுத்த வாக்கு எவ்வளவு உண்மை என்பதைத் தங்களுடைய அனுபவத்தில் பார்த்திருக்கிறார்கள்.யோவான் 4:35, 36-ஐ வாசியுங்கள்.

18. நமக்கு என்ன பாக்கியம் கிடைத்திருக்கிறது?

18 இதுவரை ராஜாவின் ஊழியர்களாக ஆகாதவர்கள் கடவுளுடைய மக்களை, “கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்கள்” என்று நினைக்கலாம். (அப். 4:13) ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சரித்திரத்திலேயே அதிகளவில் மொழிபெயர்க்கப்பட்டு, வினியோகிக்கப்படுகிற பிரசுரங்களைத் தயாரிக்க இந்தச் சாதாரண ஆட்களைத்தான் நம் ராஜா பயன்படுத்தியிருக்கிறார். மிக முக்கியமாக, எல்லா தேசத்து மக்களுக்கும் நல்ல செய்தியைச் சொல்ல உதவும் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு பயிற்சியும் உற்சாகமும் அளித்திருக்கிறார். சத்திய விதைகளை விதைப்பதிலும், அறுவடை வேலை மூலம் சீஷர்களை ஒன்றுசேர்ப்பதிலும் கிறிஸ்துவோடு சேர்ந்து வேலை செய்வது நமக்குக் கிடைத்த பெரிய பாக்கியம்!

a கடந்த பத்து வருஷங்களில் மட்டுமே, 2,000 கோடிக்கும் அதிகமான பைபிள் பிரசுரங்களை யெகோவாவின் மக்கள் தயாரித்திருக்கிறார்கள். அதோடு, jw.org என்ற நம் வெப்சைட்டை உலகிலுள்ள 270 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்க்கிறார்கள்.

b பைபிள் படிப்பு நடத்துவதற்காக கடவுளுடைய ஊழியர்களுக்கு உதவிய இன்னும் சில புத்தகங்கள்: கடவுளுடைய சுரமண்டலம் (1921, ஆங்கிலம்), தேவனே சத்தியபரர் (1946, ஆங்கிலம்), நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் (1989), நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு (1995).

c ‘வீட்டார்’ யார் என்பதைப் பற்றிய புதிய விளக்கத்தைத் தெரிந்துகொள்ள ஜூலை 15, 2013, காவற்கோபுரம் பக்கம் 23, பாரா 13-ஐப் பாருங்கள்.