Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 10

ஆன்மீக விஷயங்களில் ராஜா தன் மக்களைப் புடமிடுகிறார்

ஆன்மீக விஷயங்களில் ராஜா தன் மக்களைப் புடமிடுகிறார்

அதிகாரத்தின் முக்கியக் குறிப்பு

இயேசு தன் மக்களைப் புடமிட்டு சுத்தப்படுத்திய விதமும், அதற்கான காரணமும்

1-3. ஆலயம் அசுத்தமாக இருந்ததைப் பார்த்தபோது இயேசு என்ன செய்தார்?

 எருசலேமில் இருந்த ஆலயத்தின்மீது இயேசுவுக்கு அதிக மதிப்பு இருந்தது. ஏனென்றால், பல வருஷங்களாகவே அது உண்மை வணக்கத்தின் மையமாக இருந்தது. பரிசுத்தமான கடவுளாகிய யெகோவாவை வணங்கும் இடம் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும். ஆனால், கி.பி. 33, நிசான் 10-ஆம் நாளில் இயேசு அந்த ஆலயத்துக்குப் போன சமயத்தில், அது அசுத்தமாக இருந்தது. அதைப் பார்த்தபோது அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அங்கே அப்படி என்ன நடந்தது?—மத்தேயு 21:12, 13-ஐ வாசியுங்கள்.

2 ஆலயத்தில், யூதரல்லாத மக்களுக்கான பிரகாரத்தில் வியாபாரிகளும் காசு மாற்றுபவர்களும் இருந்தார்கள். பேராசை பிடித்த அந்த ஆட்கள், யெகோவாவுக்கு பலிகளைச் செலுத்த வந்த மக்களிடம் அநியாயமாக நடந்துகொண்டார்கள். a அதனால் இயேசு, “அங்கே விற்றுக்கொண்டும் வாங்கிக்கொண்டும் இருந்த எல்லாரையும் வெளியே துரத்தினார்; காசு மாற்றுபவர்களின் மேஜைகளை . . . கவிழ்த்துப்போட்டார்.” (நெகேமியா 13:7-9-ஐ ஒப்பிடுங்கள்.) சுயநலம் பிடித்த அந்த ஆட்கள், அவருடைய தகப்பனின் வீட்டை ‘கொள்ளைக்காரர்களின் குகையாக்கியதால்’ அவர்களை அவர் வெளிப்படையாகக் கண்டித்தார். இதன் மூலம் யெகோவாவை வணங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட அந்த ஆலயத்தின் மீது தனக்கு எந்தளவு மதிப்பு இருந்தது என்பதைக் காட்டினார். ஆம், அவருடைய தகப்பனை வணங்குவதற்கான இடத்தைச் சுத்தமாக வைக்க வேண்டியிருந்தது!

3 இயேசு மேசியானிய ராஜாவாக ஆன பிறகு, இன்னொரு ஆலயத்தைச் சுத்தப்படுத்தினார். இந்த ஆலயத்துக்கும், யெகோவா ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இன்று அவரை வணங்குகிறவர்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அப்படியானால், அவர் எந்த ஆலயத்தைச் சுத்தப்படுத்தினார்?

“லேவியின் மகன்களை” சுத்தப்படுத்துகிறார்

4, 5. (அ) பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் 1914-லிருந்து 1919-ன் ஆரம்பம்வரை, எப்படிப் புடமிடப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டார்கள்? (ஆ) கடவுளுடைய மக்களைப் புடமிட்டு சுத்தப்படுத்துவது அதோடு முடிந்துவிட்டதா? விளக்குங்கள்.

4 அதிகாரம் 2-ல் பார்த்தபடி 1914-ல் இயேசு ராஜாவான பிறகு, அவர் ஆன்மீக ஆலயத்தைச் சோதனையிடுவதற்காக தன்னுடைய தகப்பனோடு வந்தார். இந்த ஆலயம் தூய வணக்கத்திற்கான ஏற்பாட்டைக் குறிக்கிறது. b அப்படிச் சோதனையிட்டபோது “லேவியின் மகன்களை,” அதாவது பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை, சில விஷயங்களில் புடமிட்டு, சுத்தப்படுத்த வேண்டியிருந்ததை அவர் உணர்ந்தார். (மல். 3:1-3) 1914-லிருந்து 1919-ன் ஆரம்பம்வரை புடமிடுகிறவரான யெகோவா, தன்னுடைய மக்கள் பல்வேறு சோதனைகளையும் கஷ்டங்களையும் அனுபவிக்கும்படி விட்டுவிட்டார். இதன் மூலம் அவர்கள் புடமிடப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டார்கள். அதனால், பரலோக நம்பிக்கையுள்ள அந்த கிறிஸ்தவர்கள், நெருப்பு போன்ற சோதனைகளிலிருந்து சுத்தப்படுத்தப்பட்டவர்களாக வெளியே வந்தார்கள். மேசியானிய ராஜாவுக்கு ஆதரவு கொடுக்கத் தயாராக இருந்தார்கள்!

5 கடவுளுடைய மக்களைப் புடமிட்டு, சுத்தப்படுத்துவது அதோடு முடிந்துவிட்டதா? இல்லை. இந்தக் கடைசி நாட்களில், தன்னுடைய மக்கள் சுத்தமானவர்களாக இருப்பதற்கு மேசியானிய ராஜா மூலமாக யெகோவா தொடர்ந்து உதவிசெய்து வருகிறார். அப்போதுதான் அவர்களால் ஆன்மீக ஆலயத்தில் நிலைத்திருக்க முடியும். அடுத்த இரண்டு அதிகாரங்களில் ஒழுக்க விஷயத்திலும், அமைப்பு சம்பந்தப்பட்ட விஷயத்திலும் அவர்களை இயேசு எப்படிப் புடமிட்டிருக்கிறார் என்று பார்ப்போம். இப்போது, ஆன்மீக விஷயங்களில் தன்னுடைய மக்களைச் சுத்தப்படுத்துவதற்காக சுலபமாகக் கண்டுகொள்ளும் விதத்திலும் திரைக்குப் பின்னாலிருந்தும் இயேசு என்ன செய்திருக்கிறார் என்று பார்க்கலாம். இதைத் தெரிந்துகொள்வது நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும்.

“உங்களைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்”

6. சிறையிருப்பிலிருந்த யூதர்களுக்கு யெகோவா கொடுத்த கட்டளைகளிலிருந்து ஆன்மீகச் சுத்தத்தைப் பற்றி நாம் என்ன புரிந்துகொள்ளலாம்?

6 ஆன்மீகச் சுத்தம் என்றால் என்ன? இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாபிலோனிய சிறையிருப்பைவிட்டு புறப்படவிருந்த யூதர்களிடம் யெகோவா சொன்னதைக் கவனியுங்கள். (ஏசாயா 52:11-ஐ வாசியுங்கள்.) அவர்கள் ஆலயத்தைக் கட்டுவதற்காகவும், உண்மை வணக்கத்தைத் மறுபடியும் ஆரம்பிப்பதற்காகவும் எருசலேமுக்குத் திரும்பி வர வேண்டியிருந்தது. (எஸ்றா 1:2-4) பாபிலோனிய மதத்தின் எல்லா அசுத்தத்திலிருந்தும் அவர்கள் விடுபட்டிருக்க வேண்டும் என்று யெகோவா விரும்பினார். அதற்காக அவர் கொடுத்த கட்டளைகளைக் கவனியுங்கள்: “அசுத்தமான எதையும் தொடாதீர்கள்,” “அங்கிருந்து வெளியே வாருங்கள்,” “உங்களைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.” ஏனென்றால், யெகோவாவின் தூய வணக்கம், பொய் வணக்கத்தால் கறைப்பட்டுவிடாமல் இருக்க வேண்டியிருந்தது. இதிலிருந்து நாம் என்ன புரிந்துகொள்ளலாம்? ஆன்மீகச் சுத்தத்தைக் காப்பதற்கு, பொய் மதப் போதனைகளிலிருந்தும் பழக்கவழக்கங்களிலிருந்தும் விலகியிருக்க வேண்டும்.

7. தன்னைப் பின்பற்றியவர்களை ஆன்மீக விஷயங்களில் சுத்தப்படுத்த இயேசு யாரைப் பயன்படுத்தினார்?

7 இயேசு ராஜாவாகி சில வருஷங்களுக்குப் பிறகு, தன்னைப் பின்பற்றியவர்களை ஆன்மீக விஷயங்களில் சுத்தமாக வைப்பதற்கு ஒரு ஏற்பாடு செய்தார். அதாவது, 1919-ல் உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை நியமித்தார். அவர்களைச் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. (மத். 24:45) 1919-க்குள், பைபிள் மாணாக்கர்கள் நிறைய பொய் மதப் போதனைகளிலிருந்து தங்களைச் சுத்தப்படுத்தியிருந்தார்கள். ஆனாலும், இன்னும் சில விஷயங்களில் அவர்கள் தங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் விட்டொழிக்க வேண்டியிருந்த பண்டிகைகளையும் பழக்கவழக்கங்களையும் பற்றிப் படிப்படியாக இந்த அடிமை மூலமாக கிறிஸ்து அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். (நீதி. 4:18) அதற்குச் சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.

கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட வேண்டுமா?

8. கிறிஸ்மஸ் பற்றி பல வருஷங்களுக்கு முன்பே பைபிள் மாணாக்கர்களுக்கு என்ன தெரிந்திருந்தது? ஆனாலும், அவர்கள் எதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை?

8 கிறிஸ்மஸ் பொய் மதத்திலிருந்து வந்தது என்பதையும், டிசம்பர் 25-ல் இயேசு பிறக்கவில்லை என்பதையும் பற்றி பல வருஷங்களுக்கு முன்பே பைபிள் மாணாக்கர்களுக்குத் தெரிந்திருந்தது. அதைப் பற்றி டிசம்பர் 1881, காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “பொய் மதத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். பெரும்பாலும், பெயரில்தான் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, பொய் மத குருக்கள் கிறிஸ்தவப் பாதிரிகள் என்று அழைக்கப்பட்டார்கள். பொய் மத பண்டிகைகளின் பெயரும் கிறிஸ்தவப் பெயராக மாற்றப்பட்டது. அந்தப் பண்டிகைகளில் ஒன்றுதான் கிறிஸ்மஸ்.” 1883-ல் வெளிவந்த காவற்கோபுரத்தில், “இயேசு எப்போது பிறந்தார்?” என்ற ஒரு கட்டுரை இருந்தது. அக்டோபர் மாதத்தின் ஆரம்பத்தில்தான் இயேசு பிறந்தார் என்று அதில் விளக்கப்பட்டிருந்தது. c ஆனாலும், கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடக் கூடாது என்பதை பைபிள் மாணாக்கர்கள் அப்போது சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. புருக்லின் பெத்தேல் குடும்பத்தினர்கூட அதைத் தொடர்ந்து கொண்டாடி வந்தார்கள். ஆனால், 1926-க்குப் பிறகு என்ன நடந்தது என்று இப்போது பார்க்கலாம்.

9. கிறிஸ்மஸ் பற்றி பைபிள் மாணாக்கர்கள் எதைப் புரிந்துகொண்டார்கள்?

9 கிறிஸ்மஸைப் பற்றி பைபிள் மாணாக்கர்கள் இன்னும் ஆழமாக ஆராய்ந்து பார்த்தார்கள். அப்போது, கிறிஸ்மஸின் ஆரம்பமும், அதோடு சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்களும் உண்மையில் கடவுளை அவமதிக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார்கள். டிசம்பர் 14, 1927, த கோல்டன் ஏஜ் பத்திரிகையில் “கிறிஸ்மஸின் ஆரம்பம்” என்ற கட்டுரை வந்தது. கிறிஸ்மஸ் பண்டிகை, சுகபோகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஒரு பொய் மத பண்டிகை என்றும், அது சிலை வழிபாட்டுடன் சம்பந்தப்பட்ட ஒரு பண்டிகை என்றும் அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. இந்தப் பண்டிகையைக் கொண்டாடும்படி கிறிஸ்து கட்டளையிடவில்லை என்றும் அந்தக் கட்டுரை தெளிவாகக் காட்டியது. அதன் முடிவில், நேரடியாகவே இப்படிச் சொல்லப்பட்டிருந்தது: “இந்தப் பண்டிகை தொடர்ந்து கொண்டாடப்பட வேண்டும் என்பதற்குத் தூண்டுதலாக இருப்பது இந்த உலகமும், நம் பாவ ஆசைகளும், பிசாசும்தான். . . . யெகோவாவின் சேவைக்குத் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் இதைக் கொண்டாடக் கூடாது என்பதற்கு இதுவே போதுமான அத்தாட்சியாக இருக்கிறது.” அதனால், பெத்தேல் குடும்பத்தினர் அந்த டிசம்பர் மாதத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி, கிறிஸ்மஸ் கொண்டாடவே இல்லை.

10. (அ) டிசம்பர் 1928-ல் கிறிஸ்மஸ் பற்றி இன்னும் என்ன தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டது? (“ கிறிஸ்மஸ்—அதன் ஆரம்பமும் நோக்கமும்” என்ற பெட்டியையும் பாருங்கள்.) (ஆ) தவிர்க்க வேண்டிய மற்ற பண்டிகைகளையும் கொண்டாட்டங்களையும் பற்றி கடவுளுடைய மக்களுக்கு எப்படி எச்சரிப்பு கொடுக்கப்பட்டது? (“ மற்ற பண்டிகைகளையும் கொண்டாட்டங்களையும் பற்றிய உண்மைகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

10 அடுத்த வருஷத்தில், பைபிள் மாணாக்கர்கள் கிறிஸ்மஸ் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்துகொண்டார்கள். டிசம்பர் 12, 1928-ல் நம் தலைமை அலுவலகத்தின் அங்கத்தினரான சகோதரர் ரிச்சர்ட் எச். பார்பர் ரேடியோவில் ஒரு பேச்சு கொடுத்தார். இந்தப் பண்டிகை, அசுத்தமான பொய் மதத்திலிருந்து வந்த பண்டிகை என்பதை அம்பலப்படுத்தினார். தலைமை அலுவலகத்திலிருந்து தெளிவான ஆலோசனை கிடைத்தபோது, கடவுளுடைய மக்கள் என்ன செய்தார்கள்? உதாரணத்துக்கு, சகோதரர் சார்லஸ் ப்ரான்ட்லைனும் அவருடைய குடும்பத்தாரும் கிறிஸ்மஸ் கொண்டாடுவதை நிறுத்திவிட்டார்கள். அவர் இப்படிச் சொல்கிறார்: “பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட விஷயங்களைச் செய்யாமல் இருப்பது எங்களுக்குக் கஷ்டமாக இருந்ததா? இல்லவே இல்லை. . . . அழுக்கான உடையைக் கழற்றி தூக்கியெறிவது போலத்தான் அது இருந்தது.” சகோதரர் ஹென்றி ஏ. கேன்ட்வெல் (இவர் பிற்பாடு பயணக் கண்காணியாகச் சேவை செய்தவர்) இதே போன்ற ஒரு விஷயத்தைச் சொன்னார்: “யெகோவாவுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை விட்டுவிடுவதன் மூலம் அவர்மேல் எங்களுக்கு அன்பு இருப்பதைக் காட்ட முடிந்தது. அதை நினைத்து நாங்கள் சந்தோஷப்பட்டோம்.” ஆம், கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் மாற்றங்கள் செய்யத் தயாராக இருந்தார்கள். அசுத்தமான வழிபாட்டிலிருந்து வந்த பண்டிகைக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்கக் கூடாது என்று நினைத்தார்கள். dயோவா. 15:19; 17:14.

11. மேசியானிய ராஜாவுக்கு நாம் எப்படி ஆதரவு காட்டலாம்?

11 உண்மையுள்ள அந்த பைபிள் மாணாக்கர்கள் எவ்வளவு சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்கள்! அவர்களுடைய முன்மாதிரியை யோசித்துப் பார்த்து நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையிடமிருந்து வரும் வழிநடத்துதலை நான் எப்படிக் கருதுகிறேன்? அதை நான் நன்றியோடு ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்கிறேனா?’ உண்மையுள்ள அடிமைக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படிவதன் மூலம், நம் ராஜாவுக்கு நாம் ஆதரவு கொடுக்கிறோம். ஏனென்றால், ஏற்ற சமயத்தில் ஆன்மீக உணவைக் கொடுக்க இந்த அடிமையைத்தான் அவர் பயன்படுத்துகிறார்.—அப். 16:4, 5.

கிறிஸ்தவர்கள் சிலுவையைப் பயன்படுத்த வேண்டுமா?

சிலுவையும் கிரீடமும் கொண்ட சின்னம் (பாராக்கள் 12, 13)

12. பைபிள் மாணாக்கர்கள் பல வருஷங்களாக சிலுவையை எப்படிக் கருதினார்கள்?

12 சிலுவை, கிறிஸ்தவர்களின் ஒரு அடையாளச் சின்னம் என்று பைபிள் மாணாக்கர்கள் பல வருஷங்களாக நினைத்துவந்தார்கள். சிலுவையை வணங்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. ஏனென்றால், சிலை வழிபாடு தவறு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. (1 கொ. 10:14; 1 யோ. 5:21) “எல்லா வித சிலை வழிபாடும் கடவுளுக்கு அருவருப்பானது” என்று 1883-ஆம் வருஷத்திலேயே காவற்கோபுரம் தெளிவாகச் சொன்னது. ஆனாலும், சிலுவையைத் தகுந்த விதத்தில் பயன்படுத்தினால் தவறில்லை என்று பைபிள் மாணாக்கர்கள் ஆரம்பத்தில் நினைத்தார்கள். உதாரணத்துக்கு, தங்களுடைய உடையில் சிலுவையும் கிரீடமும் கொண்ட பேட்ஜைக் குத்திக்கொள்வதைப் பெருமையாக நினைத்தார்கள். சாகும்வரை உண்மையோடு இருந்தால் வாழ்வின் கிரீடம் தங்களுக்குக் கிடைக்கும் என்று நினைத்து அப்படிச் செய்தார்கள். 1891-லிருந்து சிலுவையும் கிரீடமும் கொண்ட சின்னம் காவற்கோபுரத்தின் அட்டைப் பக்கத்தில் காணப்பட்டது.

13. சிலுவையைப் பயன்படுத்துவது சம்பந்தமாக கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் எதைப் புரிந்துகொண்டார்கள்? (“ சிலுவை பற்றி படிப்படியாகக் கிடைத்த விளக்கங்கள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

13 அந்தச் சின்னத்தை பைபிள் மாணாக்கர்கள் நெஞ்சார நேசித்தார்கள். ஆனால், 1920-களின் பிற்பகுதியிலிருந்து, சிலுவையைப் பயன்படுத்துவது சம்பந்தமான விஷயங்களை கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் படிப்படியாகப் புரிந்துகொண்டார்கள். 1928-ல் அமெரிக்காவில், மிச்சிகனிலுள்ள டெட்ராய்ட் என்ற இடத்தில் நடந்த மாநாட்டில் சொல்லப்பட்ட விஷயத்தைப் பற்றி சகோதரர் க்ரான்ட் சூட்டர் (இவர் பிற்பாடு, ஆளும் குழு அங்கத்தினராகச் சேவை செய்தவர்) இப்படிச் சொன்னார்: “சிலுவையும் கிரீடமும் கொண்ட சின்னங்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை என்று சொல்லப்பட்டதோடு அதைப் பயன்படுத்துவது தவறு என்றும் அந்த மாநாட்டில் சொல்லப்பட்டது.” அடுத்த சில வருஷங்களில் சிலுவை பற்றிய இன்னும் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. சுத்தமான, தூய்மையான வணக்கத்தில் சிலுவைக்கு எந்த இடமும் இல்லை என்பது தெளிவானது.

14. சிலுவை பற்றி படிப்படியாக விளக்கம் கொடுக்கப்பட்டபோது கடவுளுடைய மக்கள் என்ன செய்தார்கள்?

14 சிலுவை பற்றி படிப்படியாக விளக்கம் கொடுக்கப்பட்டபோது கடவுளுடைய மக்கள் என்ன செய்தார்கள்? தாங்கள் நெஞ்சார நேசித்த அந்தச் சின்னத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினார்களா? பல வருஷங்களாக யெகோவாவுக்குச் சேவை செய்த லீலா ராபர்ட்ஸ் என்ற சகோதரி இப்படிச் சொன்னார்: “அது உண்மையிலேயே எதை அர்த்தப்படுத்தியது என்பதைத் தெரிந்துகொண்டபோது உடனடியாக அதைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டோம்.” உர்ஸ்லா ஸரன்க்கோ என்ற மற்றொரு சகோதரி இப்படிச் சொன்னார்: “நம் எஜமானின் மரணத்துக்கும், நம் கிறிஸ்தவ விசுவாசத்துக்கும் அடையாளமாக நாம் ஆசையோடு வைத்திருந்த சின்னம், பொய் மதத்திலிருந்து வந்த சின்னம் என்பதைப் புரிந்துகொண்டோம். நீதிமொழிகள் 4:18 சொல்கிறபடி, நம் பாதை அதிகமதிகமாகப் பிரகாசித்துக்கொண்டே வந்ததற்காக நன்றியோடு இருந்தோம்.” இதே போலத்தான் நிறைய பேர் உணர்ந்தார்கள். கிறிஸ்துவை உண்மையோடு பின்பற்றியவர்கள், அசுத்தமான பொய் மதப் பழக்கவழக்கங்கள் எதிலும் ஈடுபட விரும்பவில்லை.

15, 16. யெகோவாவின் ஆன்மீக ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரங்களைச் சுத்தமாக வைக்க நாம் தீர்மானமாக இருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

15 இன்று நம்முடைய தீர்மானமும் இதுதான். ஆன்மீக விஷயங்களில் தன்னுடைய மக்களைச் சுத்தமாக வைப்பதற்கு, சுலபமாகக் கண்டுகொள்ள முடிந்த உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை கிறிஸ்து பயன்படுத்தி வருகிறார் என்று நமக்குத் தெரியும். அதனால், பொய் மதத்தால் கறைப்பட்ட பண்டிகைகள், பழக்கவழக்கங்கள் பற்றி இந்த அடிமை எச்சரிக்கும்போது, அதற்கு உடனடியாக நாம் கீழ்ப்படிகிறோம். கிறிஸ்துவின் பிரசன்னம் ஆரம்பமான சமயத்தில் வாழ்ந்த சகோதர சகோதரிகளைப் போல, நாமும் யெகோவாவின் ஆன்மீக ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரங்களைச் சுத்தமாக வைக்கத் தீர்மானமாக இருக்கிறோம்.

16 ஆன்மீக விஷயங்களில் கறைப்படுத்துகிற ஆட்களிடமிருந்து யெகோவாவுடைய மக்களின் சபைகளைப் பாதுகாக்க திரைக்குப் பின்னாலிருந்தும் கிறிஸ்து வேலை செய்கிறார். இந்தக் கடைசி நாட்களில் அதை அவர் எப்படிச் செய்திருக்கிறார் என்று இப்போது பார்க்கலாம்.

“நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களை” தனியாகப் பிரித்தல்

17, 18. இழுவலை பற்றிய உவமையிலுள்ள விஷயங்களின் அர்த்தம் என்ன: (அ) இழுவலை கடலில் வீசப்படுவது, (ஆ) “எல்லா வகையான மீன்களையும்” வாரிக்கொள்வது, (இ) “நல்ல மீன்களைக் கூடைகளில்” சேகரிப்பது, (ஈ) ஆகாத மீன்களைத் தூக்கியெறிவது.

17 உலகம் முழுவதுமுள்ள கடவுளுடைய மக்களின் சபைகளை ராஜாவான இயேசு கிறிஸ்து கண்ணும் கருத்துமாக கவனித்துவருகிறார். நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத விதங்களில் கிறிஸ்துவும் தேவதூதர்களும் ஒரு பிரிக்கும் வேலையைச் செய்துவருகிறார்கள். இழுவலை பற்றிய உவமையில் இந்த வேலையைக் குறித்து இயேசு சொன்னார். (மத்தேயு 13:47-50-ஐ வாசியுங்கள்.) அந்த உவமையின் அர்த்தம் என்ன?

கடல்போல் இருக்கிற மனிதர்கள் மத்தியில் நல்ல செய்தி பிரசங்கிக்கப்படுவதை இழுவலை அர்த்தப்படுத்துகிறது (பாரா 18)

18 ‘கடலில் வீசப்படுகிற . . . இழுவலை’: கடல்போல் இருக்கிற மனிதர்கள் மத்தியில் நல்ல செய்தி பிரசங்கிக்கப்படுவதை இந்த இழுவலை அர்த்தப்படுத்துகிறது. “எல்லா வகையான மீன்களையும்” வாரிக்கொள்ளுதல்: நல்ல செய்தி எல்லா விதமான மக்களையும் கவருகிறது. அதாவது, உண்மைக் கிறிஸ்தவர்களாக ஆவதற்கு முயற்சி எடுக்கிறவர்களையும் கவருகிறது; சத்தியத்தை ஆர்வமாகக் கேட்டாலும் உண்மை வணக்கத்தினராக ஆகாதவர்களையும் கவருகிறது. e “நல்ல மீன்களைக் கூடைகளில்” சேகரித்தல்: நல்மனமுள்ள ஆட்கள், கூடைகளைப் போன்ற சபைகளில் சேர்க்கப்படுகிறார்கள். அங்கே அவர்கள் யெகோவாவுக்கு சுத்தமான வணக்கத்தைச் செலுத்த முடியும். “ஆகாத” மீன்களைத் தூக்கியெறிதல்: இந்தக் கடைசி நாட்களில், கிறிஸ்துவும் தேவதூதர்களும் “நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களை” தனியாகப் பிரித்துவருகிறார்கள். f இதன் மூலம் நல்மனமில்லாத ஆட்கள், அதாவது தவறான நம்பிக்கைகளை அல்லது பழக்கவழக்கங்களை விட்டுவிட மனமில்லாத ஆட்கள், சபைகளைக் கறைப்படுத்தாதபடி பாதுகாத்திருக்கிறார்கள். g

19. நம் ஆன்மீகச் சுத்தத்தையும் உண்மை வணக்கத்தின் தூய்மையையும் பாதுகாக்க, கிறிஸ்து செய்திருக்கிறவற்றைப் பற்றி எப்படி உணருகிறீர்கள்?

19 நம் ராஜாவான இயேசு கிறிஸ்து தன்னுடைய மக்களைப் பாதுகாக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வது, நம் மனதுக்குத் தெம்பளிக்கிறது, இல்லையா? முதல் நூற்றாண்டில் அவர் எந்தளவு பக்திவைராக்கியத்தோடு ஆலயத்தைச் சுத்தப்படுத்தினார் என்பதை நினைத்துப் பாருங்கள். இன்றும் உண்மை வணக்கத்தையும் அதன் வணக்கத்தாரையும் சுத்தப்படுத்தி பாதுகாப்பதில் அவர் அதே பக்திவைராக்கியத்தைக் காட்டுகிறார். இதைத் தெரிந்துகொள்வது நமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! கடவுளுடைய மக்களின் ஆன்மீகச் சுத்தத்தையும் உண்மை வணக்கத்தின் தூய்மையையும் பாதுகாக்க, கிறிஸ்து செய்திருக்கிற எல்லாவற்றுக்காகவும் நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! பொய் மதத்தோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் இருப்பதன் மூலம், நம் ராஜாவுக்கும் அவருடைய அரசாங்கத்துக்கும் நாம் ஆதரவு காட்டலாம்.

a வருடாந்தர வரி செலுத்த ஆலயத்துக்கு வந்த யூதர்கள் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயங்களைக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், காசு மாற்றுகிறவர்கள் அந்த நாணயங்களை மாற்றிக்கொடுக்க அதிக கட்டணம் வசூலித்தார்கள். ஆலயத்துக்கு வந்தவர்கள் பலிகளைச் செலுத்த மிருகங்களையும் வாங்க வேண்டியிருந்தது. வியாபாரிகள் அவர்களிடம் அதிக விலைக்கு அவற்றை விற்றார்கள். அதனால்தான், அவர்களையெல்லாம் ‘கொள்ளைக்காரர்கள்’ என்று இயேசு அழைத்தார்.

b யெகோவாவின் மக்கள், மிகப்பெரிய ஆன்மீக ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரங்களில் அவரை வணங்குகிறார்கள்.

c குளிர்காலத்தில் இயேசு பிறந்தார் என்ற விஷயம், “மேய்ப்பர்கள் மந்தையோடு வயல்வெளியில் இருந்தார்கள் என்ற பதிவோடு ஒத்துப்போகவில்லை” என்று இந்த ஆங்கிலக் கட்டுரை குறிப்பிட்டது.—லூக். 2:8.

d நவம்பர் 14, 1927-ல் சகோதரர் ஃப்ரெட்ரிக் டபுள்யூ. ஃப்ரான்ஸ் எழுதிய கடிதத்தில், “இந்த வருஷம் நாம் கிறிஸ்மஸ் கொண்டாட மாட்டோம். இனிமேல் கிறிஸ்மஸ் கொண்டாடக் கூடாது என்று பெத்தேல் குடும்பம் தீர்மானித்திருக்கிறது” என்று குறிப்பிட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 6, 1928-ல் எழுதிய கடிதத்தில், “பிசாசின் பாபிலோனிய பொய்ப் போதனைகளிலிருந்து நம் எஜமான் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுத்தப்படுத்தி வருகிறார்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

e 2013-ல், 79,65,954 பிரஸ்தாபிகள் இருந்தார்கள். ஆனால், நினைவுநாள் நிகழ்ச்சிக்கு 1,92,41,252 பேர் வந்திருந்தார்கள்.

f ஆகாத மீன்களிலிருந்து நல்ல மீன்களைப் பிரிப்பதும், வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகளைப் பிரிப்பதும் ஒன்றல்ல. (மத். 25:31-46) வெள்ளாடுகளையும் செம்மறியாடுகளையும் பிரிப்பது, அதாவது கடைசி நியாயத்தீர்ப்பு கொடுப்பது, மிகுந்த உபத்திரவத்தின்போது நடக்கும். அதனால், ஆகாத மீன்களைப் போல இருப்பவர்கள் யெகோவாவிடம் திரும்பி வரவும், கூடைகளைப் போன்ற சபைகளில் சேர்க்கப்படவும் இன்னும் வாய்ப்பு இருக்கிறது.—மல். 3:7.

g கடைசியில், ஆகாத மீன்களைப் போன்றவர்கள் அடையாள அர்த்தத்தில் கொழுந்துவிட்டு எரியும் சூளையில் வீசப்படுவார்கள். எதிர்காலத்தில் அவர்கள் அழிக்கப்படுவதை இது குறிக்கிறது.