Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 12

‘சமாதானத்தின் கடவுளை’ சேவிக்க ஒழுங்கமைக்கப்படுதல்

‘சமாதானத்தின் கடவுளை’ சேவிக்க ஒழுங்கமைக்கப்படுதல்

அதிகாரத்தின் முக்கியக் குறிப்பு

யெகோவா தன்னுடைய மக்களைப் படிப்படியாக ஒழுங்கமைக்கிறார்

1, 2. ஜனவரி 1895, காவற்கோபுரத்தில் என்ன மாற்றம் செய்யப்பட்டது, அதைப் பற்றி சகோதரர்கள் என்ன சொன்னார்கள்?

 பக்திவைராக்கியமுள்ள பைபிள் மாணாக்கர் ஜான் ஏ. பானெட், ஜனவரி 1895, காவற்கோபுரத்தைப் பார்த்து சிலிர்த்துப்போனார். ஏனென்றால், அந்தப் பத்திரிகையின் அட்டைப்படம் மாற்றப்பட்டிருந்தது. இரவு நேரத்தில், கொந்தளிக்கும் கடல்மீது ஒளிவீசும் ஒரு கலங்கரை விளக்கத்தின் படம் அதில் போடப்பட்டிருந்தது. அந்த மாற்றத்தைப் பற்றிய ஒரு அறிவிப்பு அந்தப் பத்திரிகையில் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் தலைப்பு, “நம் புதிய உடை.”

2 அந்த அட்டைப்படம் சகோதரர் பானெட்டின் மனதைக் கவர்ந்ததால், சகோதரர் ரஸலுக்கு அவர் ஒரு கடிதம் எழுதினார். ‘நம் பத்திரிகையின் புதிய அட்டைப்படம் மிகவும் அருமையாக இருக்கிறது’ என்று அதில் குறிப்பிட்டார். ஜான் எச். ப்ரவுன் என்ற விசுவாசமுள்ள இன்னொரு பைபிள் மாணாக்கர் அட்டைப்படத்தைப் பற்றி இப்படி எழுதினார்: “அலைகள் மோதினாலும் புயல் அடித்தாலும் உறுதியான அஸ்திவாரத்தின் மீது கம்பீரமாக நிற்கும் கோபுரம் கண்ணைக் கவருகிறது.” அந்த வருஷத்தில் வந்த நிறைய மாற்றங்களில் அதுதான் முதல் மாற்றமாக இருந்தது. நவம்பர் மாதத்தில் மற்றொரு பெரிய மாற்றம் நடந்தது. அந்த மாற்றம் கொந்தளிக்கும் பிரச்சினையோடு சம்பந்தப்பட்டிருந்தது.

3, 4. நவம்பர் 15, 1895, காவற்கோபுரத்தில் என்ன பிரச்சினையைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது, என்ன முக்கியமான மாற்றத்தைப் பற்றி அறிவிக்கப்பட்டது?

3 நவம்பர் 15, 1895, காவற்கோபுரத்தில் ஒரு பிரச்சினையைப் பற்றிய விலாவாரியான கட்டுரை வெளிவந்தது. அதில் பைபிள் மாணாக்கர்களின் சமாதானத்தைக் கெடுத்துப்போடுகிற பிரச்சினையைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. ஒவ்வொரு சபையிலும் யார் தலைவராக இருக்க வேண்டும் என்ற வாக்குவாதம் சகோதரர்களுக்கு இடையே அதிகமாகிக்கொண்டே போனது. பிரிவினையை உண்டாக்கும் மனப்பான்மை தவறு என்பதைப் புரியவைக்க அந்தக் கட்டுரையில் ஒரு உதாரணம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரை, நம் அமைப்பை ஒரு கப்பலுக்கு ஒப்பிட்டிருந்தது. முன்நின்று வழிநடத்துகிறவர்கள், புயல் போன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்கும் அளவுக்கு, கப்பலைப் போல இருக்கும் அமைப்பைத் தயார்படுத்தவில்லை என்று வெளிப்படையாக அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. அவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது?

4 ஒரு பொறுப்பான கப்பல் கேப்டன், புயல் வருவதற்கு முன்பே இரண்டு விஷயங்களை உறுதி செய்துகொள்வார். உயிர்காக்கும் கருவிகள் கப்பலில் இருக்கின்றனவா என்றும், கப்பலில் வேலை செய்கிறவர்கள் புயலைச் சமாளிப்பதற்குத் தயாராக இருக்கிறார்களா என்றும் பார்த்துக்கொள்வார். அதேபோல, அமைப்பை வழிநடத்தியவர்களும், புயல் போன்ற சூழ்நிலையைச் சமாளிக்க எல்லா சபைகளும் தயாராக இருக்கின்றனவா என்று உறுதி செய்ய வேண்டியிருந்தது. அதற்காக ஒரு முக்கியமான மாற்றத்தைப் பற்றிய அறிவிப்பு அந்தக் கட்டுரையில் செய்யப்பட்டது. “மந்தையை ‘மேற்பார்வை செய்வதற்கு’” உடனடியாக “ஒவ்வொரு சபையிலும் மூப்பர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டது.—அப். 20:28.

5. (அ) மூப்பர்களை நியமிக்கும் ஏற்பாடு சரியான சமயத்தில் செய்யப்பட்ட ஏற்பாடு என்று ஏன் சொல்லலாம்? (ஆ) என்ன கேள்விகளுக்கான பதிலைப் பார்க்கப்போகிறோம்?

5 சபையை உறுதியாக வைப்பதற்கு சரியான சமயத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் உலகப் போரின்போது வந்த பிரச்சினைகளைச் சமாளிக்க சகோதரர்களுக்கு இது உதவியாக இருந்தது. தொடர்ந்து வந்த வருஷங்களில், சபைகளை ஒழுங்கமைப்பதில் இன்னும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. யெகோவாவை இன்னும் நன்றாகச் சேவிக்க இந்த மாற்றங்கள் உதவியாக இருந்தன. இப்படி மாற்றங்கள் ஏற்படும் என்று பைபிளில் ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்ததா? சபைகள் ஒழுங்கமைக்கப்படுவது சம்பந்தமாக என்ன மாற்றங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? அதனால், நீங்கள் எப்படி நன்மை அடைந்திருக்கிறீர்கள்?

‘சமாதானத்தை உன் கண்காணியாக நியமிப்பேன்’

6, 7. (அ) ஏசாயா 60:17-ன் அர்த்தம் என்ன? (ஆ) ‘கண்காணி,’ ‘மேற்பார்வையாளர்’ என்ற வார்த்தைகள் எதைக் காட்டுகின்றன?

6 தன்னுடைய மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்போவதாக ஏசாயா மூலம் யெகோவா முன்னறிவித்ததைப் பற்றி இந்தப் புத்தகத்தின் 9-ஆம் அதிகாரத்தில் பார்த்தோம். (ஏசா. 60:22) அதே தீர்க்கதரிசனத்தில் யெகோவா பின்வரும் வாக்குறுதியையும் கொடுத்திருந்தார்: “செம்புக்குப் பதிலாகத் தங்கத்தையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரத்துக்குப் பதிலாகச் செம்பையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும் நான் கொண்டுவருவேன். சமாதானத்தை உன் கண்காணியாகவும், நீதியை உன் மேற்பார்வையாளராகவும் நியமிப்பேன்.” (ஏசா. 60:17) இந்தத் தீர்க்கதரிசனத்தின் அர்த்தம் என்ன? நம் நாளுக்கு இது எப்படிப் பொருந்துகிறது?

கெட்டதுக்குப் பதிலாக நல்லது பயன்படுத்தப்படும் என்று இங்கு சொல்லப்படவில்லை. நல்லதுக்குப் பதிலாக அதைவிட சிறந்தது பயன்படுத்தப்படும் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது

7 ஒரு பொருளுக்குப் பதிலாக மற்றொரு பொருள் பயன்படுத்தப்படும் என்று ஏசாயா தீர்க்கதரிசனம் சொல்கிறது. கெட்டதுக்குப் பதிலாக நல்லது பயன்படுத்தப்படும் என்று இங்கு சொல்லப்படவில்லை. நல்லதுக்குப் பதிலாக அதைவிட சிறந்தது பயன்படுத்தப்படும் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, செம்புக்குப் பதிலாகத் தங்கத்தைப் பயன்படுத்துவது, ஒரு முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்தச் சொல்லோவியத்தின் மூலம், தன்னுடைய மக்களின் நிலைமையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும் என்று யெகோவா முன்னறிவித்தார். எப்படிப்பட்ட முன்னேற்றத்தைப் பற்றி இந்தத் தீர்க்கதரிசனம் சொல்கிறது? ‘கண்காணி,’ ‘மேற்பார்வையாளர்’ என்ற வார்த்தைகளைக் குறிப்பிடுவதன் மூலம் தன்னுடைய மக்களைக் கவனிப்பதிலும் ஒழுங்கமைப்பதிலும் படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும் என்பதை யெகோவா தெரியப்படுத்தினார்.

8. (அ) ஏசாயா தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் முன்னேற்றங்களைக் கொண்டுவரப்போவது யார்? (ஆ) இந்த மாற்றங்களிலிருந்து நாம் எப்படி நன்மை அடைகிறோம்? (“ தாழ்மையாக ஏற்றுக்கொண்டார்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

8 இந்த முன்னேற்றங்களைக் கொண்டுவரப்போவது யார்? “தங்கத்தையும், . . . வெள்ளியையும், . . . நான் கொண்டுவருவேன். சமாதானத்தை . . . நியமிப்பேன்” என்று யெகோவாவே சொல்கிறார். ஆம், சபையை ஒழுங்கமைப்பதில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்குக் காரணம் யெகோவாதான், மனிதர்கள் கிடையாது. தன்னுடைய மகன் இயேசு, ராஜாவான சமயத்திலிருந்து அவர் மூலமாக யெகோவா இந்த முன்னேற்றங்களைச் செய்துவந்திருக்கிறார். இந்த மாற்றங்களிலிருந்து நாம் எப்படி நன்மை அடைகிறோம்? இந்த மாற்றங்களால் ‘சமாதானமும்’ ‘நீதியும்’ இருக்கும் என்று அதே வசனம் சொல்கிறது. கடவுளுடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு மாற்றங்களைச் செய்வதால் நாம் எல்லாரும் சமாதானமாக இருக்கிறோம். அதோடு, நாம் நீதியை நேசிப்பதால் ‘சமாதானத்தின் கடவுளான’ யெகோவாவைச் சேவிக்கத் தூண்டப்படுகிறோம்.—பிலி. 4:9.

9. சபையின் ஒழுங்குக்கும் ஒற்றுமைக்கும் எது அஸ்திவாரமாக இருக்கிறது, ஏன்?

9 கடவுளைப் பற்றி பவுல் சொன்னதைக் கவனியுங்கள். கடவுளை, ‘குழப்பத்தின் கடவுள் அல்ல, ஒழுங்கின் கடவுள்’ என்று சொல்லாமல், “சமாதானத்தின் கடவுள்” என்று அவர் சொன்னார். (1 கொ. 14:33) ஏன் அப்படிச் சொன்னார்? ஏனென்றால், ஒழுங்கு இருக்கும் இடத்தில் சமாதானம் இருக்கும் என்று சொல்ல முடியாது. உதாரணத்துக்கு, படைவீரர்கள் ஒழுங்காக அணிவகுத்துப் போகலாம். ஆனால், அவர்கள் போர் செய்வதற்காகத்தான் போகிறார்களே தவிர சமாதானம் செய்வதற்காக அல்ல. அதனால், கிறிஸ்தவர்களாகிய நாம் ஒரு முக்கியமான விஷயத்தை மனதில் வைக்க வேண்டும்: ஒழுங்குடன் செயல்படுகிற ஒரு அமைப்புக்கு சமாதானம் என்ற அஸ்திவாரம் இல்லையென்றால், அது எப்போது வேண்டுமானாலும் அழிந்துவிடலாம். ஆனால், கடவுள் தரும் சமாதானம் இருந்தால், அங்கே எப்போதும் ஒழுங்கு இருக்கும். “சமாதானத்தைத் தருகிற கடவுள்” நம் அமைப்பைப் புடமிட்டு, வழிநடத்தி வருவதற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்! (ரோ. 15:33) உலகம் முழுவதுமுள்ள சபைகளுக்கு கடவுள் தரும் சமாதானம் அஸ்திவாரமாக இருப்பதால், நாம் ஒற்றுமையாகவும் ஒழுங்காகவும் செயல்படுகிறோம்.—சங். 29:11.

10. (அ) ஆரம்ப வருஷங்களில் நம் அமைப்பில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டன? (“ கண்காணிக்கும் விதத்தில் ஏற்பட்ட மாற்றம்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) (ஆ) என்ன கேள்விகளுக்கான பதிலைப் பார்க்கப்போகிறோம்?

10 கண்காணிக்கும் விதத்தில் ஏற்பட்ட மாற்றம்” என்ற பெட்டியிலிருந்து, ஆரம்ப வருஷங்களில் நம் அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். சமீப காலத்தில் யெகோவா, ‘செம்புக்குப் பதிலாகத் தங்கத்தை’ பயன்படுத்துவது போன்ற என்ன மாற்றங்களை நம் ராஜாவின் மூலம் செய்திருக்கிறார்? கண்காணிக்கும் விதத்தில் செய்யப்பட்ட இந்த மாற்றங்களால், உலகம் முழுவதுமுள்ள சபைகளில் சமாதானமும் ஒற்றுமையும் எப்படிச் செழித்தோங்கியிருக்கின்றன? ‘சமாதானத்தின் கடவுளுக்கு’ சேவை செய்ய அவை உங்களுக்கு எப்படி உதவியிருக்கின்றன?

சபையை கிறிஸ்து வழிநடத்தும் விதம்

11. (அ) பைபிளை ஆராய்ச்சி செய்ததால் என்ன விஷயம் புரியவந்தது? (ஆ) ஆளும் குழுவிலிருந்த சகோதரர்கள் என்ன செய்யத் தீர்மானமாக இருந்தார்கள்?

11 1964-லிருந்து 1971 வரை விரிவான ஒரு பைபிள் படிப்பு திட்டத்தை ஆளும் குழு மேற்பார்வை செய்தது. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவச் சபை செயல்பட்ட விதத்தைப் பற்றியும் இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் அதில் ஆராய்ச்சி செய்யப்பட்டது. a முதல் நூற்றாண்டு சபைகள், ஒரே ஒரு மூப்பராலோ கண்காணியாலோ மேற்பார்வை செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக ஒரு மூப்பர் குழுவால் மேற்பார்வை செய்யப்பட்டது என்பது தெரியவந்தது. (பிலிப்பியர் 1:1-ஐயும் 1 தீமோத்தேயு 4:14-ஐயும் வாசியுங்கள்.) அதனால், கடவுளுடைய மக்களை ஒழுங்கமைப்பதில் முன்னேற்றங்களைச் செய்ய ராஜாவான இயேசுதான் தங்களை வழிநடத்துகிறார் என்பதை ஆளும் குழுவிலிருந்த சகோதரர்கள் புரிந்துகொண்டார்கள். ராஜாவின் வழிநடத்துதலின்படி செயல்பட அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள். மூப்பர்களை நியமிக்கும் விஷயத்தில் பைபிள் சொல்கிறபடி உடனடியாக மாற்றங்களைச் செய்தார்கள். 1970-களின் ஆரம்பத்தில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் என்ன?

12. (அ) ஆளும் குழுவில் என்ன மாற்றம் செய்யப்பட்டது? (ஆ) ஆளும் குழு இன்று எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது? (“ கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தமாக ஆளும் குழு செய்யும் வேலைகள்” என்ற பெட்டியைப் பாருங்கள், பக்கம் 130.)

12 முதன்முதலில் ஆளும் குழுவில் மாற்றம் செய்யப்பட்டது. அதுவரைக்கும், ஆளும் குழுவிலிருந்த பரலோக நம்பிக்கையுள்ள ஏழு சகோதரர்கள்தான் பென்ஸில்வேனியாவைச் சேர்ந்த உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் இயக்குநர் குழுவாக இருந்தார்கள். ஆனால், 1971-ல் ஆளும் குழு அங்கத்தினர்களின் எண்ணிக்கை 7-லிருந்து 11-ஆக உயர்த்தப்பட்ட பிறகு, இயக்குநர் குழுவும் ஆளும் குழுவும் தனித்தனியாகச் செயல்பட்டது. ஆளும் குழுவின் அங்கத்தினர்கள் எல்லாருமே தங்களைச் சரிசமமானவர்களாகக் கருதினார்கள். அதனால், ஆளும் குழுவின் சேர்மனாக இருக்கும் பொறுப்பை ஒவ்வொரு வருஷமும் அகர வரிசைப்படி (alphabetical order) மாற்றிக்கொண்டார்கள்.

13. (அ) 40 வருஷங்களுக்குச் சபையில் என்ன ஏற்பாடு இருந்தது? (ஆ) 1972-ல் ஆளும் குழு என்ன செய்தது?

13 அடுத்ததாக, சபைகளில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. எப்படி? 1932-லிருந்து 1972 வரை ஒரே ஒரு சகோதரர்தான் சபையை மேற்பார்வை செய்துவந்தார். 1936 வரை, அந்தச் சகோதரர் சர்வீஸ் டைரக்டர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார். அதன்பிறகு, அந்தப் பெயர் சபை ஊழியர் என்றும், பிறகு சபைக் கண்காணி என்றும் மாற்றப்பட்டது. நியமிக்கப்பட்ட அந்தச் சகோதரர் சபையாரின் ஆன்மீகத் தேவைகளை நன்றாகக் கவனித்துக்கொண்டார். சபைக் கண்காணி, பொதுவாக சபை சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி மற்ற சபை ஊழியர்களோடு கலந்து பேசாமல் அவராகவே தீர்மானம் எடுத்தார். ஆனால் 1972-ல், ஆளும் குழு ஒரு பெரிய மாற்றத்தைச் செய்தது. அது என்ன?

14. (அ) அக்டோபர் 1, 1972-ல் என்ன புது ஏற்பாடு அமலுக்கு வந்தது? (ஆ) மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிலிப்பியர் 2:3-லுள்ள ஆலோசனையை எப்படிப் பின்பற்றுகிறார்?

14 ஒரு சபையில், ஒரே ஒரு சபைக் கண்காணி இருப்பதற்குப் பதிலாக, பைபிளிலுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்த மற்ற சகோதரர்களும் மூப்பர்களாக நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு மூப்பர் குழுவாகச் செயல்பட்டு சபையை மேற்பார்வை செய்வார்கள். இந்தப் புது ஏற்பாடு அக்டோபர் 1, 1972-ல் அமலுக்கு வந்தது. இன்று, மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் தன்னை மற்ற மூப்பர்களைவிட உயர்ந்தவராக நினைப்பதில்லை, அதற்குப் பதிலாக ‘தன்னைத் தாழ்த்திக்கொள்கிறார்.’ (லூக். 9:48) தாழ்மையுள்ள இந்தச் சகோதரர்கள், உலகம் முழுவதும் இருக்கிற நம் சகோதர சகோதரிகளுக்குக் கிடைத்த பெரிய ஆசீர்வாதம்!—பிலி. 2:3.

நம் ராஜா, தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்காக மேய்ப்பர்களை ஏற்ற சமயத்தில் ஞானமாக நியமித்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது

15. (அ) மூப்பர் குழு ஏற்பாட்டினால் என்ன நன்மைகள் கிடைத்திருக்கின்றன? (ஆ) நம் ராஜா, ஞானமாகச் செயல்பட்டிருக்கிறார் என்று எது காட்டுகிறது?

15 சபைப் பொறுப்புகளை மூப்பர் குழுவிலுள்ள சகோதரர்கள் பகிர்ந்து செய்யும் ஏற்பாடு உண்மையிலேயே ஒரு பெரிய முன்னேற்றம்தான். அதனால் கிடைத்த மூன்று நன்மைகளைக் கவனியுங்கள்: முதலாவதாக, இந்த ஏற்பாடு ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் வைக்க மூப்பர்களுக்கு உதவியது. சபையில் அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், இயேசுதான் சபையின் தலைவர் என்பதை நினைவில் வைக்க அவர்களுக்கு உதவியது. (எபே. 5:23) இரண்டாவதாக, நீதிமொழிகள் 11:14 சொல்கிறபடி, “ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி நிச்சயம்.” மூப்பர்கள், சபையின் நலனைப் பாதிக்கும் விஷயங்களைக் கலந்து பேசும்போதும், மற்ற மூப்பர்களின் கருத்துகளைக் கேட்கும்போதும், பைபிள் நியமங்களின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க முடிகிறது. (நீதி. 27:17) அந்தத் தீர்மானங்களை யெகோவா ஆசீர்வதிப்பதால் அவை வெற்றி பெறுகின்றன. மூன்றாவதாக, தகுதி பெற்ற மூப்பர்கள் நிறைய பேர் இருப்பதால், சபைகளை மேற்பார்வை செய்வதற்கும் சபையாரைக் கவனித்துக்கொள்வதற்கும் எங்கெல்லாம் மூப்பர்கள் தேவைப்படுகிறார்களோ அங்கெல்லாம் அவர்களை அமைப்பால் நியமிக்க முடிந்திருக்கிறது. (ஏசா. 60:3-5) இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: 1971-ல் உலகம் முழுவதும் 27,000 சபைகள் இருந்தன. ஆனால், 2013-ல் அந்த எண்ணிக்கை 1,13,000-ஐயும் தாண்டியிருக்கிறது. நம் ராஜா, தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்காக மேய்ப்பர்களை ஏற்ற சமயத்தில் ஞானமாக நியமித்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.—மீ. 5:5.

‘மந்தைக்கு முன்மாதிரிகளாக இருப்பது’

16. (அ) மூப்பர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது? (ஆ) ‘ஆட்டுக்குட்டிகளை மேய்க்க வேண்டும்’ என்று இயேசு கொடுத்த கட்டளையை பைபிள் மாணாக்கர்கள் எப்படிக் கருதினார்கள்?

16 பைபிள் மாணாக்கர்களுடைய காலத்திலேயே, மூப்பர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துவைத்திருந்தார்கள். அதாவது, சகோதர சகோதரிகள் தொடர்ந்து கடவுளுடைய ஊழியர்களாக இருப்பதற்கு உதவி செய்வது தங்களுடைய பொறுப்பு என்பதை உணர்ந்திருந்தார்கள். (கலாத்தியர் 6:10-ஐ வாசியுங்கள்.) “என் ஆட்டுக்குட்டிகளை . . . நீ மேய்க்க வேண்டும்” என்று இயேசு கொடுத்த கட்டளையைப் பற்றி 1908-ல் வெளிவந்த காவற்கோபுர கட்டுரை விளக்கியது. (யோவா. 21:15-17) அந்தக் கட்டுரை மூப்பர்களுக்கு இப்படிச் சொன்னது: “தன்னைப் பின்பற்றுகிறவர்களைப் போஷித்து பராமரிக்கும்படி எஜமான் கொடுத்த கட்டளை நம் இதயத்தில் முக்கியமானதாக இருக்க வேண்டும், அதை மிகப் பெரிய பாக்கியமாகவும் நாம் நினைக்க வேண்டும்.” மேய்ப்பர்களாகச் சேவை செய்வது எவ்வளவு முக்கியமான பொறுப்பு என்பதை 1925-ல் வெளிவந்த காவற்கோபுரம் மறுபடியும் மூப்பர்களுக்கு ஞாபகப்படுத்தியது. “சபை, கடவுளுக்குச் சொந்தமானது. . . . சகோதரர்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அவர்களுக்கு [மூப்பர்களுக்கு] இருப்பதால் கடவுள் அவர்களிடம் கணக்குக் கேட்பார்.”

17. திறமையுள்ள மேய்ப்பர்களாக இருக்க மூப்பர்களுக்கு என்ன உதவி கிடைத்திருக்கிறது?

17 “இரும்புக்குப் பதிலாக வெள்ளியை” பயன்படுத்துவது போல் யெகோவா மற்றொரு முன்னேற்றத்தையும் செய்திருக்கிறார். மந்தையை மேய்க்கும் விஷயத்தில் திறமைகளை வளர்த்துக்கொள்ள மூப்பர்களுக்கு அமைப்பு மூலமாக அவர் உதவி செய்திருக்கிறார். எப்படி? அவர்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார். 1959-ல், மூப்பர்களுக்கான ராஜ்ய ஊழியப் பள்ளி முதன்முதலில் நடத்தப்பட்டது. அதில் “தனிப்பட்ட அக்கறை காட்டுதல்” என்ற தலைப்பில் ஒரு பாடம் நடத்தப்பட்டது. “பிரஸ்தாபிகளை அவர்களுடைய வீடுகளில் போய் சந்திப்பதற்கு அட்டவணை போடும்படி” பொறுப்பில் இருக்கிற சகோதரர்களுக்குச் சொல்லப்பட்டது. அப்படிச் சந்திக்கும்போது பிரஸ்தாபிகளை எப்படியெல்லாம் உற்சாகப்படுத்தலாம் என்றும் அந்த வகுப்பில் சொல்லித்தரப்பட்டது. 1966-ல் மற்றொரு ராஜ்ய ஊழியப் பள்ளி நடத்தப்பட்டது. “மேய்ப்பு சந்திப்பு செய்வதன் முக்கியத்துவம்” என்ற பொருளில் ஒரு வகுப்பு இருந்தது. அந்த வகுப்பின் முக்கிய நோக்கம் என்ன? சபையை முன்நின்று வழிநடத்துகிறவர்கள், “கடவுளுடைய மந்தையை அக்கறையோடு கவனித்துக்கொள்வதோடு ஊழியத்துக்கும் தங்கள் சொந்த குடும்பத்துக்கும் கவனம் செலுத்த வேண்டும்” என்று உற்சாகப்படுத்தப்பட்டார்கள். சமீப வருஷங்களில், மூப்பர்களுக்காக இன்னும் நிறைய பள்ளிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. யெகோவாவின் அமைப்பு தொடர்ந்து கொடுத்த இந்தப் பயிற்சிகளால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது? இன்று, கிறிஸ்தவச் சபைகளில் தகுதிபெற்ற ஆயிரக்கணக்கான சகோதரர்கள் ஆன்மீக மேய்ப்பர்களாகச் சேவை செய்கிறார்கள்.

1966-ல் பிலிப்பைன்ஸில் நடந்த ராஜ்ய ஊழியப் பள்ளி

18. (அ) மூப்பர்களிடம் என்ன முக்கியமான வேலை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது? (ஆ) கடினமாக உழைக்கும் மூப்பர்களை யெகோவாவும் இயேசுவும் ஏன் ரொம்ப நேசிக்கிறார்கள்?

18 ஒரு முக்கியமான வேலையைச் செய்வதற்காகத்தான் நம் ராஜாவான இயேசு மூலமாக மூப்பர்களை நியமிக்கும் ஏற்பாட்டை யெகோவா செய்திருக்கிறார். அது என்ன வேலை? மனித சரித்திரத்திலேயே படுமோசமான காலத்தில் கடவுளுடைய மந்தையை வழிநடத்துவதுதான் அந்த வேலை. (எபே. 4:11, 12; 2 தீ. 3:1) கடினமாக உழைக்கும் மூப்பர்களை யெகோவாவும் இயேசுவும் ரொம்பவே நேசிக்கிறார்கள். ஏனென்றால், “உங்களுடைய பொறுப்பில் இருக்கிற கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள்.  . . மனப்பூர்வமாகவும் . . . ஆர்வமாகவும் இதைச் செய்யுங்கள். . . . மந்தைக்கு முன்மாதிரிகளாக இருங்கள்” என்ற கட்டளைக்கு மூப்பர்கள் கீழ்ப்படிகிறார்கள். (1 பே. 5:2, 3) கிறிஸ்தவ மேய்ப்பர்கள் பல விஷயங்களில் மந்தைக்கு முன்மாதிரிகளாக இருக்கிறார்கள், சபையின் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கட்டிக்காக்கிறார்கள். அவற்றில் இரண்டை இப்போது பார்க்கலாம்.

இன்று மூப்பர்கள் கடவுளுடைய மந்தையை வழிநடத்தும் விதம்

19. நம்மோடு சேர்ந்து ஊழியம் செய்யும் மூப்பர்களைப் பற்றி எப்படி உணர்கிறோம்?

19 முதலாவதாக, மூப்பர்கள் சபையாரோடு சேர்ந்து வேலை செய்கிறார்கள். சுவிசேஷ எழுத்தாளரான லூக்கா இயேசுவைப் பற்றி இப்படிச் சொன்னார்: “அவர் நகரம் நகரமாகவும் கிராமம் கிராமமாகவும் போய் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தும் அறிவித்தும் வந்தார். பன்னிரண்டு பேரும் அவரோடு இருந்தார்கள்.” (லூக். 8:1) இயேசு அவருடைய சீஷர்களோடு சேர்ந்து ஊழியம் செய்தது போல, இன்று முன்மாதிரியுள்ள மூப்பர்கள் சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ஊழியம் செய்கிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் சபையின் சந்தோஷத்துக்கும் சமாதானத்துக்கும் அவர்கள் உதவுகிறார்கள். இப்படிப்பட்ட மூப்பர்களைப் பற்றி சபையார் எப்படி உணர்கிறார்கள்? சுமார் 88 வயதுள்ள சகோதரி ஜெனீன் இப்படிச் சொல்கிறார்: “மூப்பரோடு சேர்ந்து ஊழியம் செய்யும்போது அவரோடு பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளவும் முடிகிறது.” சுமார் 35 வயதுள்ள ஸ்டீவன் என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “ஒரு மூப்பர் என்னோடு சேர்ந்து வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது அவர் எனக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட உதவி கிடைக்கும்போது எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது.”

காணாமல் போன ஆட்டை ஒரு மேய்ப்பன் தேடுவதைப் போல சபையோடு தொடர்புகொள்வதை நிறுத்திவிட்டவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க மூப்பர்கள் முயற்சி செய்கிறார்கள்

20, 21. இயேசு சொன்ன உவமையிலுள்ள மேய்ப்பனை மூப்பர்கள் எப்படிப் பின்பற்றலாம்? உதாரணம் கொடுங்கள். (“ பலன் தந்த வாராந்தரச் சந்திப்புகள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

20 இரண்டாவதாக, சபையோடு தொடர்புகொள்வதை நிறுத்திவிட்டவர்கள்மீது அக்கறை காட்ட யெகோவாவின் அமைப்பு மூப்பர்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறது. (எபி. 12:12) ஆன்மீக விதத்தில் பலவீனமாக இருப்பவர்களுக்கு மூப்பர்கள் ஏன் உதவி செய்ய வேண்டும், அதை எப்படிச் செய்ய வேண்டும்? ஒரு மேய்ப்பனையும் காணாமல் போன ஒரு ஆட்டையும் பற்றி இயேசு சொன்ன உவமையில் இதற்குப் பதில் இருக்கிறது. (லூக்கா 15:4-7-ஐ வாசியுங்கள்.) தன்னுடைய மந்தையிலிருந்த ஒரு ஆடு காணாமல் போய்விட்டது என்று அந்த மேய்ப்பனுக்குத் தெரிந்தவுடன், அவருக்கு அந்த ஒரேவொரு ஆடுதான் இருந்ததுபோல் அதைத் தேடி அலைகிறார். அந்த மேய்ப்பனின் உதாரணத்தை இன்று மூப்பர்கள் எப்படிப் பின்பற்றுகிறார்கள்? காணாமல் போன ஆட்டை எப்படி அந்த மேய்ப்பன் ரொம்ப மதிப்புள்ளதாகப் பார்த்தாரோ, அதேபோல் சபையோடு தொடர்புகொள்வதை நிறுத்திவிட்டவர்களையும் மூப்பர்கள் ரொம்ப மதிப்புள்ளவர்களாகப் பார்க்கிறார்கள். ஆன்மீக விதத்தில் பலவீனமாக இருக்கிறவர்களைத் தேடிப் போய் அவர்களுக்கு உதவி செய்வதை மூப்பர்கள் வீண் என்று நினைப்பதில்லை. “வழிதவறிப்போன ஆட்டைக் கண்டுபிடிக்கிற வரைக்கும்” அதைத் தேடுகிற மேய்ப்பனைப் போல மூப்பர்களும் பலவீனமானவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவி செய்கிறார்கள்.

21 காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடித்தவுடன் அந்த மேய்ப்பன் என்ன செய்கிறார்? அதை மென்மையாகத் தூக்கி, ‘தோள்கள்மேல் போட்டுக்கொண்டு’ திரும்பவும் அதை மந்தையிடம் கொண்டுசேர்க்கிறார். அதேபோல், ஒரு மூப்பர் தன்னுடைய அன்பான வார்த்தைகளால் ஆன்மீக விதத்தில் பலவீனமாக இருக்கும் ஒருவரைப் பலப்படுத்தி, திரும்பவும் அவர் சபைக்கு வர உதவுகிறார். சபையோடு தொடர்புகொள்வதை நிறுத்திவிட்டிருந்த விக்டர் என்ற சகோதரருக்கும் இதுதான் நடந்தது. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அவர் இப்படிச் சொல்கிறார்: “நான் எட்டு வருஷம் செயலற்ற பிரஸ்தாபியாக இருந்த சமயத்தில், மூப்பர்கள் எனக்குத் தொடர்ந்து உதவி செய்தார்கள்.” எது விக்டருடைய மனதை ரொம்பவே தொட்டது? அவர் சொல்கிறார்: “என்னோடு பயனியர் பள்ளியில் கலந்துகொண்ட ஜான் என்ற மூப்பர் ஒரு நாள் என்னுடைய வீட்டுக்கு வந்தார். பயனியர் பள்ளியின்போது நாங்கள் சேர்ந்து எடுத்த சில ஃபோட்டோக்களைக் காட்டினார். அது கடந்த கால நினைவுகளை என் மனதுக்குக் கொண்டுவந்தது. அதனால், யெகோவாவின் சேவையில் நான் அனுபவித்த சந்தோஷத்தைத் திரும்பவும் பெற்றுக்கொள்ள ஏங்கினேன்.” விக்டரை ஜான் சந்தித்த பிறகு சீக்கிரத்திலேயே அவர் சபைக்கு வர ஆரம்பித்தார். இப்போது, அவர் மறுபடியும் ஒரு பயனியராகச் சேவை செய்கிறார். ஆம், அக்கறையுள்ள மூப்பர்கள் நம் சந்தோஷத்துக்குப் பெரிதும் உதவுகிறார்கள்.—2 கொ. 1:24. b

கண்காணிப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் கடவுளுடைய மக்களின் ஒற்றுமையைக் கட்டிக்காக்கிறது

22. நீதியும் சமாதானமும் எப்படி சபையின் ஒற்றுமைக்கு உதவுகின்றன? (“ எங்களுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

22 நாம் ஏற்கெனவே பார்த்தபடி, தன்னுடைய மக்கள் மத்தியில் நீதியும் சமாதானமும் அதிகமாகிக்கொண்டே இருக்கும் என்று யெகோவா முன்னறிவித்திருந்தார். (ஏசா. 60:17) சபையார் தொடர்ந்து ஒற்றுமையாக இருக்க இந்த இரண்டு குணங்கள் உதவும். முதலில், நீதி என்ற குணத்தைப் பற்றிப் பார்க்கலாம். “யெகோவா ஒருவரே” கடவுளாக இருப்பதால் அவருக்கு ஒரே நீதிதான் இருக்கிறது. (உபா. 6:4) அதனால், எல்லா நாடுகளில் இருக்கும் சபைகளிலும் ஒரே விதமான நீதிநெறிகள்தான் பின்பற்றப்படுகின்றன. எது சரி எது தவறு என்ற விஷயத்தில் அவருடைய நெறிமுறைகள் வித்தியாசப்படுவதில்லை. “பரிசுத்தவான்களுடைய சபைகள் எல்லாவற்றிலும்” ஒரே நெறிமுறைகள்தான் பின்பற்றப்படுகின்றன. (1 கொ. 14:33) கடவுளுடைய நெறிமுறைகளின்படி நடந்தால்தான் சபை செழித்தோங்கும். அடுத்து, சமாதானம் என்ற குணத்தைப் பற்றிப் பார்க்கலாம். நாம் சபைகளில் சமாதானத்தை அனுபவிப்பதோடு, நாம் ஒவ்வொருவரும் ‘சமாதானம் பண்ணுகிறவர்களாகவும்’ இருக்க வேண்டும் என்று நம் ராஜா விரும்புகிறார். (மத். 5:9) அதனால், ‘மற்றவர்களோடு சமாதானமாக இருப்பதற்கு . . .  நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய’ வேண்டும். சில சமயங்களில், மற்றவர்களோடு நமக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் அதைச் சரி செய்ய நாம்தான் முதற்படி எடுக்க வேண்டும். (ரோ. 14:19) இந்த வழிகளில் நாம் சபையின் சமாதானத்துக்கும் ஒற்றுமைக்கும் உதவுகிறோம்.—ஏசா. 60:18.

23. யெகோவாவின் ஊழியர்களாகிய நாம் இன்று எதை அனுபவிக்கிறோம்?

23 நவம்பர் 1895-ல், மூப்பர்களை நியமிக்கும் ஏற்பாட்டைப் பற்றி காவற்கோபுரம் முதன்முதலில் அறிவித்தபோது, பொறுப்பிலிருந்த சகோதரர்களும் மனதார ஆசைப்பட்ட ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். அது என்ன? சபைகளை ஒழுங்கமைப்பதில் செய்யப்பட்ட இந்தப் புது ஏற்பாடு “கடவுளுடைய மக்களைச் சீக்கிரத்தில் ஒன்றுசேர்க்க” உதவ வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அதற்காக, ஜெபமும் செய்தார்கள். கடந்த வருஷங்களில் நடந்ததையெல்லாம் நாம் யோசித்து பார்க்கும்போது, கண்காணிக்கும் விஷயத்தில் யெகோவா படிப்படியாகச் செய்திருக்கும் மாற்றங்களை நினைத்து நம் இதயம் நன்றியால் பொங்குகிறது, இல்லையா? நம் ராஜா மூலமாக யெகோவா செய்திருக்கும் இந்த மாற்றங்கள் அவரை ஒற்றுமையாக வணங்க உதவியிருக்கிறது. (சங். 99:4) அதனால், இன்று உலகம் முழுவதுமுள்ள யெகோவாவின் மக்களாகிய நாம் “ஒரே சிந்தையோடு” இருந்து, ‘ஒரே விதமாக நடந்துகொண்டு,’ ‘சமாதானத்தின் கடவுளை’ “தோளோடு தோள் சேர்ந்து” சந்தோஷமாக வணங்குகிறோம்.—2 கொ. 12:18; செப்பனியா 3:9-ஐ வாசியுங்கள்.

a இந்த விரிவான ஆராய்ச்சியில் கண்டுபிடித்த விஷயங்கள் ஏய்ட் டு பைபிள் அன்டர்ஸ்டான்டிங் என்ற பிரசுரத்தில் வெளியிடப்பட்டது.

b ஜனவரி 15, 2013, காவற்கோபுரம் பக்கங்கள் 27-31-ல் “‘நம் சந்தோஷத்துக்காக சக வேலையாட்களாக’ இருக்கும் கிறிஸ்தவ மூப்பர்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.