Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 15

வணக்கச் சுதந்திரத்துக்காகப் போராடுதல்

வணக்கச் சுதந்திரத்துக்காகப் போராடுதல்

அதிகாரத்தின் முக்கியக் குறிப்பு

தன்னைப் பின்பற்றியவர்கள், சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெறுவதற்காகவும் கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்கான உரிமையைப் பெறுவதற்காகவும் போராட, கிறிஸ்து உதவிய விதம்

1, 2. (அ) கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களில் ஒருவர் என்பதற்கு என்ன ஆதாரம் உங்களுக்கு இருக்கிறது? (ஆ) சுதந்திரமாக யெகோவாவை வணங்க யெகோவாவின் சாட்சிகள் சில சமயங்களில் ஏன் போராட வேண்டியிருந்தது?

 கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களில் நீங்களும் ஒருவரா? ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்கிற நீங்கள் அந்த அரசாங்கத்தின் குடிமக்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. அந்த அரசாங்கத்தின் குடிமக்களில் ஒருவராக இருப்பதற்கு ஆதாரமாக, பாஸ்போர்ட்டோ வேறு ஏதாவது அடையாள அட்டையோ தேவையில்லை. நீங்கள் யெகோவாவை வணங்கும் விதம்தான் அதற்கு ஆதாரம். கடவுளை உண்மையோடு வணங்குவதற்கு அவர் சொல்லும் விஷயங்களை நம்பினால் மட்டும் போதாது. அதைச் செயலில் காட்ட வேண்டும். அதாவது, அவருடைய அரசாங்கத்தின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். ஏனென்றால், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் நம் வணக்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. பிள்ளைகளை வளர்ப்பது, சிகிச்சை முறைகளைத் தேர்ந்தெடுப்பது போன்ற விஷயங்களும் அதில் உட்பட்டிருக்கிறது.

2 ஆனால், நாம் உயர்வாக மதிக்கும் குடியுரிமையையும், அதோடு சம்பந்தப்பட்ட சட்டங்களையும் இந்த உலகம் அந்தளவுக்கு மதிப்பதில்லை. கடவுளை நாம் சுதந்திரமாக வணங்குவதைத் தடுப்பதற்கு அல்லது நம் வணக்கத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதற்கு சில அரசாங்கங்கள் முயற்சி செய்திருக்கின்றன. மேசியானிய ராஜாவின் சட்டங்களின்படி வாழ, அவருடைய ஊழியர்கள் சிலசமயங்களில் போராட வேண்டியிருந்திருக்கிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஏனென்றால், பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள்கூட சுதந்திரமாக யெகோவாவை வணங்க அடிக்கடி போராட வேண்டியிருந்தது.

3. எஸ்தர் ராணி வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய மக்கள் எதற்காகப் போராட வேண்டியிருந்தது?

3 உதாரணத்துக்கு, எஸ்தர் ராணி வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய மக்கள் உயிரோடு இருப்பதற்கே போராட வேண்டியிருந்தது. ஏன்? பெர்சிய சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த எல்லா யூதர்களையும் கொல்வதற்காக, பொல்லாத பிரதம மந்திரியான ஆமான் சூழ்ச்சி செய்தான். அதற்காக பெர்சிய ராஜாவான அகாஸ்வேருவிடம், “அவர்களுடைய [யூதர்களுடைய] சட்டங்கள் மற்ற இனத்தாருடைய சட்டங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கின்றன” என்று சொன்னான். (எஸ்தர் 3:8, 9, 13) யெகோவா தன்னுடைய ஊழியர்களைக் காப்பாற்றினாரா? நிச்சயம் காப்பாற்றினார். யூதர்களைப் பாதுகாக்கும்படி பெர்சிய ராஜாவிடம் முறையிடுவதற்காக எஸ்தரும் மொர்தெகாயும் எடுத்த முயற்சியை யெகோவா ஆசீர்வதித்தார்.—எஸ்தர் 9:20-22.

4. இந்த அதிகாரத்தில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

4 நம் காலத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? அரசாங்க அதிகாரிகள் சிலசமயங்களில் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக என்ன செய்திருக்கிறார்கள் என்று முந்தின அதிகாரத்தில் பார்த்தோம். இந்த அதிகாரத்தில், கடவுளைச் சுதந்திரமாக வணங்குவதைத் தடுக்க அரசாங்கங்கள் எப்படி முயற்சி செய்திருக்கின்றன என்று பார்ப்போம். முக்கியமாக மூன்று விஷயங்களைக் கவனிப்போம்: (1) ஒரு அமைப்பாக நாம் செயல்படுவதற்கும், நமக்கு விருப்பமான வணக்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்குமான உரிமை, (2) பைபிள் நியமங்கள் அடிப்படையில் சிகிச்சைகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம், (3) யெகோவாவின் நெறிமுறைகளின்படி பிள்ளைகளை வளர்க்க பெற்றோருக்கு இருக்கும் உரிமை. இந்த ஒவ்வொரு விஷயத்திலும் மேசியானிய அரசாங்கத்தின் உண்மையுள்ள குடிமக்கள் தங்களுடைய குடியுரிமையைப் பாதுகாக்க எப்படித் தைரியமாகப் போராடியிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். அவர்களுடைய முயற்சிகளுக்கு எப்படிப் பலன் கிடைத்திருக்கிறது என்றும் பார்ப்போம்.

அடிப்படை உரிமைகளுக்காகவும் சட்டப்பூர்வ அங்கீகாரத்துக்காகவும் போராடுதல்

5. சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெறுவதால் உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றன?

5 யெகோவாவை வணங்க மனித அரசாங்கங்களிடமிருந்து சட்டப்பூர்வ அங்கீகாரத்தை நாம் பெற வேண்டுமா? வேண்டியதில்லை. ஆனாலும், சட்டப்பூர்வ அங்கீகாரம் இருந்தால் தொல்லையில்லாமல் யெகோவாவை வணங்க முடியும். உதாரணத்துக்கு, நம் சொந்த ராஜ்ய மன்றங்களிலும் மாநாட்டு மன்றங்களிலும் சுதந்திரமாகக் கூடிவர முடியும்; பைபிள் பிரசுரங்களை அச்சடிக்க முடியும்; மற்ற நாடுகளிலிருந்து அவற்றைச் சுலபமாகப் பெற்றுக்கொள்ள முடியும்; எந்தத் தடையும் இல்லாமல் எல்லாருக்கும் நல்ல செய்தியைச் சொல்ல முடியும். நிறைய நாடுகளில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகள் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனால், சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற மற்ற மதங்களுக்கு இருக்கும் மதச் சுதந்திரத்தை இவர்களாலும் அனுபவிக்க முடிகிறது. சில சமயங்களில் அரசாங்கங்கள் நமக்கிருக்கும் அடிப்படை உரிமைகளைத் தடைசெய்திருக்கின்றன, அல்லது நமக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரத்தைக் கொடுக்க மறுத்திருக்கின்றன. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் என்ன நடந்திருக்கிறது?

6. 1940-களின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு என்ன பிரச்சினை வந்தது?

6 ஆஸ்திரேலியா. 1940-களின் ஆரம்பத்தில் அங்கே என்ன நடந்தது என்று கவனியுங்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகள், போர் நடவடிக்கைகளுக்கு எதிரானவை என்று ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரல் நினைத்தார். அதனால், நம் வேலைகளுக்கு எதிராகத் தடை உத்தரவு போடப்பட்டது; யெகோவாவின் சாட்சிகளால் சுதந்திரமாகக் கூடிவரவோ ஊழியம் செய்யவோ முடியவில்லை; பெத்தேல் மூடப்பட்டது; ராஜ்ய மன்றங்கள் கைப்பற்றப்பட்டன; பைபிள் பிரசுரங்களை வைத்திருப்பதும்கூட தடை செய்யப்பட்டது. அங்கே நம் வேலைகள் பல வருஷங்களுக்கு ரகசியமாகச் செய்யப்பட்டு வந்தாலும், ஜூன் 14, 1943-ல் உயர் நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கியபோது யெகோவாவின் சாட்சிகளுக்கு விடிவு காலம் பிறந்தது.

7, 8. வணக்கச் சுதந்திரத்துக்காக ரஷ்யாவிலுள்ள சகோதரர்கள் பல வருஷங்களாகப் போராடியதைப் பற்றி விளக்குங்கள்.

7 ரஷ்யா. பல வருஷங்களாக கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகள் தடை செய்யப்பட்டிருந்தன. ஆனால், 1991-ல் அவர்களுடைய வேலைகள் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டன. முன்னாள் சோவியத் யூனியன் பிளவுபட்ட பிறகு, 1992-ல் ரஷ்ய அரசாங்கம் நமக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுத்தது. ஆனால், நம்மை எதிர்த்த சிலர், முக்கியமாக ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சைச் சேர்ந்தவர்கள், நம்முடைய வளர்ச்சியைப் பார்த்து எரிச்சல் அடைந்தார்கள். 1995-லிருந்து 1998-க்கு இடைப்பட்ட காலத்தில் அவர்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக அடுத்தடுத்து ஐந்து குற்ற வழக்குகளைத் தொடுத்தார்கள். ஆனால், ஒவ்வொரு வழக்கிலும், எதிர்த்தரப்பு வக்கீலால் யெகோவாவின் சாட்சிகள்மேல் குற்றம் இருப்பதாக நிரூபிக்க முடியவில்லை. விடாப்பிடியாக இருந்த அந்த எதிரிகள், 1998-ல் யெகோவாவின் சாட்சிகள் பல சட்டங்களை மீறியதாக வழக்குத் தொடுத்தார்கள். அந்த வழக்கில் யெகோவாவின் சாட்சிகளுக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைத்தாலும் எதிரிகள் மேல்முறையீடு செய்தார்கள். மே 2001-ல், அந்த மேல்முறையீட்டின் பேரில் நடத்தப்பட்ட வழக்கில் யெகோவாவின் சாட்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அக்டோபர் மாதத்தில் அந்த வழக்கு மறுபடியும் விசாரணை செய்யப்பட்டது. அதன்படி மாஸ்கோவில் யெகோவாவின் சாட்சிகளுடைய அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்துக்குச் சொந்தமான எல்லாவற்றையும் பறிமுதல் செய்யும்படியும் அவர்களுடைய வேலைகளைத் தடை செய்யும்படியும் 2004-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

8 அதைத் தொடர்ந்து யெகோவாவின் சாட்சிகளுக்கு நிறைய துன்புறுத்தல்கள் வந்தன. (2 தீமோத்தேயு 3:12-ஐ வாசியுங்கள்.) அவர்கள் பல தொல்லைகளையும் தாக்குதல்களையும் எதிர்ப்பட்டார்கள். அவர்களுடைய பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, வணக்கத்துக்காகக் கூடிவரும் மன்றங்களை வாடகைக்கு எடுப்பதற்கோ சொந்தமாகக் கட்டுவதற்கோ கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவையெல்லாம் நம் சகோதர சகோதரிகளுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்! 2001-ல் யெகோவாவின் சாட்சிகள் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் (ECHR) வழக்குத் தொடுத்தார்கள். 2004-ல் நீதிமன்றத்தில் கூடுதல் விவரங்களைச் சமர்ப்பித்தார்கள். 2010-ல் ECHR தீர்ப்பு வழங்கியது. கீழ் நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்புகளை அது ரத்துசெய்தது. ரஷ்யாவில் யெகோவாவின் சாட்சிகள் தடை செய்யப்பட்டதற்கு முக்கியக் காரணம் மதவெறிதான் என்பது நீதிமன்றத்துக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஏனென்றால், அவர்களுக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தால் பார்க்க முடியவில்லை. அவர்களுடைய சட்டப்பூர்வ உரிமையை ரத்துசெய்யும் எண்ணத்தோடுதான் அந்தத் தடை உத்தரவு போடப்பட்டது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. அந்தத் தீர்ப்பினால், யெகோவாவின் சாட்சிகளுடைய மதச் சுதந்திரத்துக்கான உரிமை திரும்பவும் கிடைத்தது. ECHR-ன் தீர்ப்பின்படி நடக்க, ரஷ்ய அதிகாரிகள் பலர் தவறியிருந்தாலும், இப்படிப்பட்ட தீர்ப்புகளால் கடவுளுடைய மக்கள் அதிக தைரியத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

டீடாஸ் மானுஸாக்கிஸ் (பாரா 9)

9-11. ஒன்றுசேர்ந்து சுதந்திரமாக கடவுளை வணங்க கிரீஸிலுள்ள யெகோவாவின் மக்கள் எப்படிப் போராடியிருக்கிறார்கள், அதனால் என்ன பலன்கள் கிடைத்திருக்கின்றன?

9 கிரீஸ். 1983-ல் கிரீட் தீவிலுள்ள ஹெராக்லியான் என்ற இடத்தில் யெகோவாவின் சாட்சிகள் வணக்கத்துக்காகக் கூடிவருவதற்கு சகோதரர் டீடாஸ் மானுஸாக்கிஸ் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தார். (எபி. 10:24, 25) யெகோவாவின் சாட்சிகள் வணக்கத்துக்காக அந்த அறையைப் பயன்படுத்துவதைப் பார்த்த ஆர்த்தடாக்ஸ் சர்ச்சைச் சேர்ந்த ஒரு பாதிரி, அரசாங்க அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தார். ஏன்? யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகள் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் நம்பிக்கைகளிலிருந்து வித்தியாசப்படுவதால் அப்படிச் செய்தார். அதனால், டீடாஸ் மானுஸாக்கிஸையும் இன்னும் மூன்று யெகோவாவின் சாட்சிகளையும் அதிகாரிகள் விசாரணை செய்தார்கள். பிறகு, அந்த நான்கு பேரும் அபராதம் கட்ட வேண்டும் என்றும் இரண்டு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தின் உண்மையுள்ள குடிமக்களாக இருந்ததால், அந்தத் தீர்ப்பு தங்களுக்கு இருந்த மதச் சுதந்திரத்தைப் பறித்ததாக நினைத்தார்கள். அதனால், உள்ளூர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தார்கள். கடைசியில் இந்த வழக்கு ECHR-க்கு போனது.

10 1996-ல் ECHR-ன் தீர்ப்பு, உண்மை வணக்கத்தை எதிர்த்தவர்களுக்குப் பேரடியாக இருந்தது. “கிரீஸ் நாட்டு சட்டத்தின்படி, யெகோவாவின் சாட்சிகள் ஒரு ‘அங்கீகரிக்கப்பட்ட மதம்’” என்றும் கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் யெகோவாவின் சாட்சிகளுடைய “மதச் சுதந்திரத்தைப் பாதிக்கிறது” என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதோடு, “மத நம்பிக்கைகளும் அதை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் முறைகளும் சட்டப்பூர்வமானவையா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை” கிரீஸ் நாட்டு அரசாங்கத்துக்கு கிடையாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்துசெய்யப்பட்டு திரும்பவும் அவர்களுக்கு மதச் சுதந்திரம் கொடுக்கப்பட்டது.

11 கிரீஸில் பிரச்சினை அதோடு முடிந்ததா? இல்லை. கிரீஸிலுள்ள காசான்றீ என்ற இடத்தில் நடந்த வழக்கு 12 வருஷங்களுக்கு நீடித்தது. கடைசியாக 2012-ல் யெகோவாவின் சாட்சிகளுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தடவை ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் பிஷப் பிரச்சினையைக் கிளப்பிவிட்டார். கிரீஸ் நாட்டின் அரசுப் பேரவை (நிர்வாகம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் மிகப் பெரிய நீதிமன்றம்) கடவுளுடைய மக்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. மதச் சுதந்திரம் சம்பந்தமான கிரீஸ் நாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதோடு, யெகோவாவின் சாட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட மதம் கிடையாது என்று அடிக்கடி எழுப்பப்படும் குற்றச்சாட்டு செல்லாது என்றும் அந்த நீதிமன்றம் சொன்னது. “‘யெகோவாவின் சாட்சிகளுடைய’ கொள்கைகள் வெளிப்படையாக இருக்கின்றன. அதனால், அவர்களுடைய மதம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான்” என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. காசான்றீயிலுள்ள சின்ன சபையைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் இப்போது தங்களுடைய சொந்த ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களை நடத்த முடிவதை நினைத்து ரொம்பச் சந்தோஷப்படுகிறார்கள்.

12, 13. பிரான்சில், ‘சட்டத்தின் பெயரில் பிரச்சினைகளை உண்டாக்க’ எதிரிகள் எப்படி முயற்சி செய்திருக்கிறார்கள், அதன் விளைவு என்ன?

12 பிரான்சு. கடவுளுடைய மக்களை எதிர்ப்பதற்காக சிலர் ‘சட்டத்தின் பெயரில் பிரச்சினைகளை உண்டாக்கியிருக்கிறார்கள்.’ (சங்கீதம் 94:20-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு 1990-களின் மத்திபத்தில், பிரான்சு நாட்டின் வரித்துறை அதிகாரிகள், யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்திய ATJ (Association Les Témoins de Jéhovah) என்ற சட்டப்பூர்வ நிறுவனத்தின் கணக்குகளைத் தணிக்கை (Audit) செய்ய ஆரம்பித்தார்கள். அந்தத் தணிக்கையின் உண்மையான நோக்கத்தைப் பற்றி அந்த நாட்டின் பட்ஜெட் அமைச்சர் இப்படிச் சொன்னார்: “இந்தத் தணிக்கைக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படலாம். இல்லையென்றால் அதன்மேல் குற்ற வழக்கு தொடுக்கப்படலாம், . . . அதனால், அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவது கஷ்டமாகலாம் அல்லது நம் பகுதியில் அதன் எல்லா வேலைகளும் முற்றிலும் நிறுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்படலாம்.” தணிக்கையில் எந்தத் தவறும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும், ATJ-ன் வேலைகள் முடங்கி போகுமளவுக்கு ஒரு பெரிய தொகையை வரியாகக் கட்டும்படி வரித்துறை அதிகாரிகள் சொன்னார்கள். அந்த வரியைக் கட்டுவதற்கு கிளை அலுவலகத்தை மூடிவிட்டு எல்லா கட்டிடங்களையும் விற்பதைத் தவிர நம் சகோதரர்களுக்கு வேறு எந்த வழியும் இருந்திருக்காது. அது பேரிடியாக இருந்தாலும் கடவுளுடைய மக்கள் சோர்ந்துபோகவில்லை. அந்த அநியாயத்தை எதிர்த்து கடினமாகப் போராடினார்கள். கடைசியில், 2005-ல் அவர்கள் ECHR-ல் வழக்குத் தொடுத்தார்கள்.

13 ஜூன் 30, 2011-ல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மதச் சுதந்திரத்துக்கான உரிமை எல்லாருக்கும் இருப்பதால், ஒருவரின் மத நம்பிக்கைகள் அல்லது அவற்றை வெளிப்படுத்தும் விதம் சரியா தவறா என்று தீர்மானிக்கும் உரிமை அரசாங்கத்துக்குக் கிடையாது; அசாதாரணமான சூழ்நிலைகளில் மட்டுமே அரசாங்கம் அப்படிச் செய்வது சரியாக இருக்கும் என்று நீதிமன்றம் சொன்னது. “விதிக்கப்பட்ட வரியால் . . . அந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக இருந்த எல்லாவற்றையும் இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். அதனால், அந்த மதத்தைச் சேர்ந்தவர்களுடைய வழிபாடு சம்பந்தப்பட்ட எல்லா அம்சங்களும் தடைபட்டிருக்கும்” என்றும் அந்த நீதிமன்றம் குறிப்பிட்டது. பிறகு, யெகோவாவின் சாட்சிகளுக்குச் சாதகமாக நீதிமன்றம் ஒருமனதாகத் தீர்ப்பு வழங்கியது. இறுதியில், பிரான்சு அரசாங்கம் ATJ-க்கு எதிராக விதித்த வரியை வட்டியோடு திருப்பிக் கொடுத்தது. சந்தோஷமான இன்னொரு விஷயம் என்னவென்றால், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க கிளை அலுவலகத்தின் எல்லா சொத்துகளையும் அரசாங்கம் திருப்பிக் கொடுத்துவிட்டது.

வழக்குகளில் நியாயம் கிடைக்காததால் கஷ்டங்களை அனுபவித்து வருகிற சகோதர சகோதரிகளுக்காகத் தவறாமல் நாம் ஜெபம் செய்யலாம்

14. வணக்கச் சுதந்திரத்துக்காகப் போராடுகிற நம் சகோதரர்களுக்காக நீங்கள் என்ன செய்யலாம்?

14 வணக்க விஷயத்தில் இன்றும் யெகோவாவின் மக்கள் எஸ்தர், மொர்தெகாயைப் போல செயல்படுகிறார்கள். யெகோவா எதிர்பார்க்கிறபடி அவரை வணங்குவதற்கான சுதந்திரத்தைப் பெற போராடுகிறார்கள். (எஸ்தர் 4:13-16) இந்த விஷயத்தில் நீங்கள் என்ன செய்யலாம்? வழக்குகளில் நியாயம் கிடைக்காததால் கஷ்டங்களை அனுபவிக்கிற சகோதர சகோதரிகளுக்காகத் தவறாமல் ஜெபம் செய்யலாம். கஷ்டங்களையும் துன்புறுத்தல்களையும் அனுபவிக்கிற நம் சகோதர சகோதரிகள் சார்பாக நாம் செய்யும் ஜெபங்களுக்கு அதிக சக்தி இருக்கிறது. (யாக்கோபு 5:16-ஐ வாசியுங்கள்.) இப்படிப்பட்ட ஜெபங்களுக்கு யெகோவா பதிலளிக்கிறாரா? அவர் கண்டிப்பாகப் பதிலளிக்கிறார் என்பதற்கு வழக்குகளில் கிடைத்த வெற்றிகள் மிகப் பெரிய அத்தாட்சி!—எபி. 13:18, 19.

நம் நம்பிக்கைகளின் அடிப்படையில் சிகிச்சைகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்

15. இரத்தத்தைப் பயன்படுத்துவது சம்பந்தமான என்ன விஷயங்களைக் கடவுளுடைய மக்கள் மனதில் வைக்கிறார்கள்?

15 இரத்தத்தைத் தவறாகப் பயன்படுத்துவது இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. ஆனால், இதைப் பற்றி கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களுக்குக் கொடுக்கப்பட்ட தெளிவான ஆலோசனையை அதிகாரம் 11-ல் பார்த்தோம். (ஆதி. 9:5, 6; லேவி. 17:11; அப்போஸ்தலர் 15:28, 29-ஐ வாசியுங்கள்.) நாம் இரத்தத்தை ஏற்றிக்கொள்ளாவிட்டாலும், நமக்கும் நம் அன்பானவர்களுக்கும் மிகச் சிறந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். அதேசமயத்தில், அந்தச் சிகிச்சை கடவுளுடைய சட்டங்களுக்கு முரணாக இல்லாதபடி பார்த்துக்கொள்கிறோம். மனசாட்சி மற்றும் மத நம்பிக்கைகளின் அடிப்படையில், எந்தச் சிகிச்சையை ஏற்றுக்கொள்வது, எதை மறுப்பது என்று தீர்மானிக்கும் உரிமை மக்களுக்கு இருக்கிறது என்பதை நிறைய நாடுகளில் இருக்கும் மிகப் பெரிய நீதிமன்றங்கள் ஒத்துக்கொள்கின்றன. ஆனால், இந்த விஷயத்தில் சில நாடுகளிலுள்ள கடவுளுடைய மக்கள் பயங்கரமான சவால்களை எதிர்ப்பட்டிருக்கிறார்கள். சில உதாரணங்களைக் கவனியுங்கள்.

16, 17. ஜப்பானிலுள்ள ஒரு சகோதரிக்குக் கொடுக்கப்பட்ட என்ன சிகிச்சை அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அவருடைய ஜெபத்துக்கு எப்படிப் பதில் கிடைத்தது?

16 ஜப்பான். மிசாய் டாகிடா என்ற 63 வயது சகோதரிக்கு ஒரு பெரிய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவர் கடவுளுடைய அரசாங்கத்தின் உண்மையுள்ள குடிமக்களில் ஒருவராக இருந்ததால், தனக்கு இரத்தம் இல்லாத மாற்று சிகிச்சை கொடுக்கும்படி டாக்டரிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அறுவைச் சிகிச்சையின்போது அவருக்கு இரத்தம் ஏற்றப்பட்டது. இந்த விஷயம் சில மாதங்களுக்குப் பிறகு தெரியவந்தபோது அவருக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. டாக்டர்கள், தன்னுடைய விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்காமல் தன்னை ஏமாற்றியதால், ஜூன் 1993-ல் சகோதரி டாகிடா அந்த டாக்டர்கள்மீதும் மருத்துவமனைமீதும் வழக்குத் தொடுத்தார். அடக்கமான, அமைதியான அந்தச் சகோதரிக்கு அசைக்க முடியாத விசுவாசம் இருந்தது. உடம்பு முடியாத சூழ்நிலையிலும் ஒரு மணி நேரத்துக்கும்மேல் நீதிமன்றத்தில் தைரியமாகப் பேசினார். அவர் இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பும்கூட நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடைய விசுவாசமும் தைரியமும் நம் மனதைக் கவருகிறது, இல்லையா? இந்தப் போராட்டத்தில் வெற்றி தரும்படி யெகோவாவிடம் இடைவிடாமல் ஜெபம் செய்ததாக சகோதரி டாகிடா சொல்லியிருந்தார். தன்னுடைய ஜெபங்களுக்கு யெகோவா கண்டிப்பாகப் பதில் கொடுப்பார் என்று அவர் உறுதியாக நம்பினார். யெகோவா பதில் கொடுத்தாரா?

17 சகோதரி டாகிடா இறந்து மூன்று வருஷங்களுக்குப் பிறகு, ஜப்பான் உச்ச நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. அவர் அவ்வளவு தெளிவாகச் சொல்லியும் இரத்தம் ஏற்றியது தவறு என்று நீதிமன்றம் சொன்னது. எப்படிப்பட்ட சிகிச்சையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை “தீர்மானிக்கும் உரிமை” ஒருவருக்கு இருப்பதால் “அந்த நபரின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்” என்று பிப்ரவரி 29, 2000-ல் கொடுக்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் அடிப்படையில் சகோதரி டாகிடா போராடியதால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது? இப்போது ஜப்பானில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள், தங்களுடைய விருப்பத்துக்கு எதிராக இரத்தம் ஏற்றப்படுமோ என்ற பயமில்லாமல் சிகிச்சை பெற முடிகிறது.

பாப்லோ அல்பராசீனி (பாராக்கள் 18-20)

18-20. (அ) மருத்துவ முன்கோரிக்கை அட்டையைப் பயன்படுத்தி, இரத்தம் ஏற்றுவதை மறுக்க ஒருவருக்கு உரிமை இருப்பதை அர்ஜென்டினா உச்ச நீதிமன்றம் எப்படி உறுதிப்படுத்தியது? (ஆ) இரத்தம் ஏற்றுவதை மறுப்பதன் மூலம் கிறிஸ்துவின் வழிநடத்துதலுக்கு நாம் கீழ்ப்படிகிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

18 அர்ஜென்டினா. சுயநினைவை இழந்துவிடும் சூழ்நிலையில்கூட இரத்தம் ஏற்றப்படுவதைத் தடுக்க கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் முன்னதாகவே என்ன செய்யலாம்? நம் சார்பாகப் பேசும் ஒரு சட்டப்பூர்வ ஆவணத்தை எப்போதும் நம்மோடு வைத்திருக்கலாம். அதைத்தான், சகோதரர் பாப்லோ அல்பராசீனி செய்தார். மே 2012-ல் ஒரு கொள்ளைக்கூட்டத்தாரால் அவர் தாக்கப்பட்டு பலமுறை சுடப்பட்டார். சுயநினைவு இழந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனால், இரத்தம் ஏற்ற கூடாது என்று டாக்டர்களிடம் அவரால் சொல்ல முடியவில்லை. ஆனால், நான்கு வருஷங்களுக்கு முன்பே அவர் கையெழுத்துப் போட்டிருந்த மருத்துவ முன்கோரிக்கை அட்டை அவரிடம் இருந்தது. அவருடைய நிலைமை ரொம்ப மோசமாக இருந்ததால் அவருடைய உயிரைக் காப்பாற்ற அவருக்கு இரத்தம் ஏற்ற வேண்டும் என்று டாக்டர்கள் நினைத்தார்கள். இருந்தாலும், அந்த முன்கோரிக்கை அட்டையில் அவர் தெரிவித்திருந்தபடி இரத்தம் ஏற்றாமல் சிகிச்சை அளிக்க அவர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால், பாப்லோவுக்கு இரத்தம் ஏற்றுவதற்காக சத்தியத்தில் இல்லாத அவருடைய அப்பா நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொண்டார்.

19 உடனடியாக, பாப்லோவின் மனைவியின் சார்பாக வாதாடிய வக்கீல் மேல்முறையீடு செய்தார். சில மணிநேரங்களுக்குள், அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றியது. மருத்துவ முன்கோரிக்கை ஆவணத்தில் ஒருவர் தெரிவித்திருக்கும் விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாப்லோவின் அப்பா, அர்ஜென்டினா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனாலும், “[இரத்தம் ஏற்றுவதை மறுத்து முன்கோரிக்கை அட்டையில் பாப்லோ தெரியப்படுத்தியிருப்பது] பகுத்துணர்வோடும், சொந்த விருப்பத்தோடும், சுதந்திரத்தோடும் செய்யப்படவில்லை என்று சொல்ல” உச்ச நீதிமன்றத்துக்கு எந்தக் காரணமும் கிடைக்கவில்லை. “வயது வந்த தகுதியுள்ள எல்லாராலும் [தங்கள்] உடல்நலம் சம்பந்தமாக தங்களுடைய கோரிக்கைகளை முன்னதாகவே தெரியப்படுத்த முடியும். அதோடு, சில சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ அவர்களுக்கு உரிமை இருக்கிறது . . . சிகிச்சை அளிக்கும் டாக்டர் அப்படிப்பட்ட கோரிக்கைகளை மதிக்க வேண்டும்” என்று நீதிமன்றம் சொன்னது.

உங்கள் மருத்துவ முன்கோரிக்கை அட்டையைப் பூர்த்தி செய்துவிட்டீர்களா?

20 பிறகு, சகோதரர் பாப்லோ முழுமையாகக் குணமானார். முன்கோரிக்கை அட்டையைப் பூர்த்தி செய்து வைத்திருந்ததை நினைத்து அவரும் அவருடைய மனைவியும் சந்தோஷப்பட்டார்கள். இந்தச் சின்ன விஷயத்தை, அதேசமயத்தில் முக்கியமான விஷயத்தை, செய்ததன் மூலம் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவான கிறிஸ்துவுக்குத் தன்னுடைய கீழ்ப்படிதலை அவர் காட்டினார். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் முன்கோரிக்கை அட்டையைப் பூர்த்தி செய்துவிட்டீர்களா?

ஏப்ரில் கடோரா (பாராக்கள் 21-24)

21-24. (அ) மைனர் பிள்ளைகள் சம்பந்தமாகவும் அவர்களுக்கு இரத்தம் ஏற்றுவது சம்பந்தமாகவும் கனடா உச்ச நீதிமன்றம் என்ன முக்கியமான தீர்ப்பை வழங்கியது? (ஆ) இந்த வழக்கு என்ன செய்ய இளம் யெகோவாவின் சாட்சிகளைத் தூண்டியிருக்கிறது?

21 கனடா. பொதுவாக, தங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன சிகிச்சை கொடுப்பது என்று தீர்மானிக்கும் உரிமை பெற்றோருக்குத்தான் இருக்கிறது என்பதை நீதிமன்றங்கள் ஒத்துக்கொள்கின்றன. யோசித்து முடிவெடுக்க முடிந்த மைனர் பிள்ளைகள், (கனடாவில் 16 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகள் மைனர்களாகக் கருதப்படுகிறார்கள்) சிகிச்சை சம்பந்தப்பட்ட விஷயங்களில் தங்களுடைய தீர்மானத்தைச் சொல்லும்போது அதை மதிக்க வேண்டும் என்றும்கூட சிலசமயங்களில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியிருக்கின்றன. ஏப்ரில் கடோரா என்ற சகோதரியின் விஷயத்தில் நடந்ததைக் கவனியுங்கள். அவளுக்கு 14 வயது இருந்தபோது உடலுக்குள் அதிகமான இரத்தக் கசிவு ஏற்பட்டது. அதனால், அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான், மருத்துவ முன்கோரிக்கை அட்டையை அவள் பூர்த்தி செய்திருந்தாள். உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையிலும்கூட இரத்தம் ஏற்றக் கூடாது என்று அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அவளுக்குச் சிகிச்சை அளித்த டாக்டர் அவளுடைய விருப்பத்தை மதிக்கவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்றுக்கொண்டு அவளுக்கு இரத்தம் ஏற்றினார். அப்படிச் செய்தது கற்பழிப்புக்குச் சமம் என்று அவள் பிற்பாடு சொன்னாள்.

22 ஏப்ரிலும் அவளுடைய பெற்றோரும் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தார்கள். இரண்டு வருஷங்களுக்குப் பின், கனடா உச்ச நீதிமன்றத்துக்கு அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. கீழ் நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்பு சட்டப்படி தவறு என்று ஏப்ரில் சொன்னதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும், வழக்குக்காகச் செலவான பணத்தை அவளுக்குக் கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, ஏப்ரிலுக்கும் அவளைப் போல தீர்மானம் எடுக்குமளவுக்கு பக்குவமடைந்த மற்ற இளம் பிள்ளைகளுக்கும் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. அதாவது, தாங்கள் விரும்பிய சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்று சொன்னது. “16 வயதுக்குக் கீழுள்ள இளம் பிள்ளைகள் ஒரு சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ள விரும்புகிறார்களா, இல்லையா என்பதைச் சொல்ல அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதேசமயத்தில் அப்படிச் சொந்தமாக யோசித்து முடிவெடுக்கும் அளவுக்கு அவர்கள் பக்குவம் அடைந்திருக்க வேண்டும்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

23 உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு, யோசித்து முடிவெடுக்க முடிந்த மைனர் பிள்ளைகளின் சட்டப்பூர்வ உரிமைகளைத் தெளிவுபடுத்தியது. இது ரொம்ப முக்கியமான ஒரு தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு வருவதற்கு முன்பெல்லாம், 16 வயதுக்குக் கீழுள்ள ஒரு பிள்ளையின் விருப்பத்தைக் கேட்காமல், அந்தப் பிள்ளையின் நலனை மனதில் வைத்து நீதிமன்றமே தீர்மானம் எடுத்தது. ஆனால், இந்தத் தீர்ப்பு வந்த பிறகு 16 வயதுக்குக் கீழுள்ள ஒரு பிள்ளையின் விருப்பத்துக்கு எதிராக எந்தவொரு சிகிச்சைக்கும் அனுமதி வழங்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லாமல் போனது. சொந்தமாகத் தீர்மானம் எடுக்குமளவுக்கு அந்தப் பிள்ளைக்குப் பக்குவம் இருக்கிறதா என்பதை நிரூபிக்க நீதிமன்றம் முதலில் வாய்ப்பளிக்க வேண்டியிருந்தது.

“கடவுளுடைய பெயரை மகிமைப்படுத்துவதற்கும் சாத்தானைப் பொய்யன் என்று நிரூபிப்பதற்கும் எனக்கு ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்ததை நினைத்து நான் ரொம்பச் சந்தோஷப்படுகிறேன்”

24 ஏப்ரில் மூன்று வருஷங்கள் போராடியது பிரயோஜனமாக இருந்ததா? “ஆம்” என்று ஏப்ரில் சொல்கிறாள். அதோடு, “கடவுளுடைய பெயரை மகிமைப்படுத்துவதற்கும் சாத்தானைப் பொய்யன் என்று நிரூபிப்பதற்கும் எனக்கு ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்ததை நினைத்து நான் ரொம்பச் சந்தோஷப்படுகிறேன்” என்று சொல்கிறாள். இப்போது நல்ல ஆரோக்கியத்தோடு ஒரு ஒழுங்கான பயனியராக ஏப்ரில் சேவை செய்கிறாள். இன்றிருக்கும் இளம் பிள்ளைகள்கூட தங்களுடைய தீர்மானத்தில் உறுதியாக இருந்து கடவுளுடைய அரசாங்கத்தின் உண்மையான குடிமக்கள் என்பதை நிரூபிக்க முடியும் என்று ஏப்ரிலின் உதாரணம் காட்டுகிறது.—மத். 21:16.

யெகோவாவின் நெறிமுறைகளின்படி பிள்ளைகளை வளர்க்கும் உரிமை

25, 26. சில சமயங்களில், விவாகரத்தினால் என்னென்ன பிரச்சினைகள் வந்திருக்கின்றன?

25 பிள்ளைகளை வளர்ப்பதற்கான நெறிமுறைகளை யெகோவா பெற்றோருக்குக் கொடுத்திருக்கிறார்; அதன்படி அவர்களை வளர்க்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். (உபா. 6:6-8; எபே. 6:4) இந்தப் பொறுப்பைச் செய்வது அவ்வளவு சுலபம் கிடையாது, முக்கியமாக அப்பா-அம்மா விவாகரத்து செய்துகொள்ளும்போது! ஏனென்றால், பிள்ளையை வளர்க்கும் விஷயத்தில் அவர்களுக்கு முற்றிலும் வித்தியாசமான கருத்துகள் இருக்கலாம். உதாரணத்துக்கு, யெகோவாவின் சாட்சியாக இருப்பவர் பிள்ளையை பைபிள் நெறிமுறைகளின்படி வளர்க்க நினைக்கலாம். ஆனால் சாட்சியாக இல்லாதவர், அதை ஒத்துக்கொள்ளாமல் போகலாம். யெகோவாவின் சாட்சியாக இருப்பவர் ஒரு விஷயத்தைத் தாழ்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். விவாகரத்தினால் கணவன்-மனைவி என்ற உறவுதான் துண்டிக்கப்படுகிறது; பெற்றோர்-பிள்ளை என்ற உறவு துண்டிக்கப்படுவதில்லை.

26 சத்தியத்தில் இல்லாத அப்பாவோ அம்மாவோ பிள்ளையை அல்லது பிள்ளைகளை தன்னுடைய மத நம்பிக்கைகளின்படி வளர்க்க விரும்பலாம். அதனால், பிள்ளையை வளர்க்கும் உரிமையைப் பெறுவதற்காக வழக்குத் தொடுக்கலாம். ஒரு பிள்ளை, யெகோவாவின் சாட்சியாக வளர்க்கப்படுவது ஆபத்தானது என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். அப்படி வளர்க்கப்பட்டால், பிள்ளைகளால் பிறந்தநாளையோ பண்டிகைகளையோ கொண்டாட முடியாமல் போய்விடும் என்று அவர்கள் சொல்லலாம். அதோடு, உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் அவர்களுக்கு இரத்தம் ஏற்ற முடியாமல் போய்விடும் என்றும் அவர்கள் சொல்லலாம். ஆனால், பெரும்பாலான நீதிமன்றங்கள் பிள்ளைக்கு எது நல்லது என்பதை மனதில் வைத்துதான் தீர்ப்பு வழங்குகின்றன. பெற்றோரின் மதம் ஆபத்தானதா இல்லையா என்பதை வைத்து தீர்ப்பு வழங்குவது கிடையாது. இதற்குச் சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.

27, 28. யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளின்படி பிள்ளைகளை வளர்ப்பது ஆபத்தானது என்ற குற்றச்சாட்டுக்கு ஒஹாயோ உச்ச நீதிமன்றம் எப்படித் தீர்ப்பளித்தது?

27 அமெரிக்கா. யெகோவாவின் சாட்சியாக இல்லாத ஒரு அப்பா, தன்னுடைய மகன் பாபி, ஒரு யெகோவாவின் சாட்சியாக வளர்க்கப்படுவது ஆபத்தானது என்று குற்றம்சாட்டினார். அவர் சொன்னதை ஏற்றுக்கொண்ட கீழ் நீதிமன்றம் பிள்ளையை அவரிடம் ஒப்படைத்தது. அதேசமயத்தில், அவனுடைய அம்மா ஜெனிஃபருக்கு, அவனைப் போய்ப் பார்ப்பதற்கு மட்டும் அனுமதி வழங்கியது. ஆனால், “யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளை எந்த விதத்திலும் அவனுக்குச் சொல்லித்தர” கூடாது என்று உத்தரவிட்டது. கீழ் நீதிமன்றத்தின் உத்தரவுபடி சகோதரி ஜெனிஃபரால் யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளை மட்டுமல்ல, பைபிளைப் பற்றியும் அதிலிருக்கும் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றியும்கூட பேச முடியாமல் போய்விட்டது. சகோதரி ஜெனிஃபருக்கு எப்படி இருந்திருக்கும்! அவர் அப்படியே இடிந்துபோய்விட்டார். ஆனாலும், யெகோவா நடவடிக்கை எடுக்கும்வரை பொறுமையாக இருக்கக் கற்றுக்கொண்டதாக அவர் சொன்னார். “யெகோவா எப்போதும் என்கூட இருந்தார்” என்று அவர் பிற்பாடு சொன்னார். யெகோவாவுடைய அமைப்பின் உதவியோடு சகோதரி ஜெனிஃபர் பேட்டரின் வக்கீல், ஒஹாயோ உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்தார். 1992-ல் ஒஹாயோ உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை விசாரணை செய்தது.

28 “பிள்ளைகளுக்கு ஒழுக்கம் மற்றும் மத நம்பிக்கைகளைப் பற்றிச் சொல்லித்தர வேண்டிய அடிப்படை பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது” என்று சொல்லி கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய மத நம்பிக்கைகள் பிள்ளையின் உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் பாதிப்பு உண்டாக்குவதாக நிரூபிக்கப்பட்டால் தவிர, மதத்தைக் காரணங்காட்டி பிள்ளை வளர்ப்பு விஷயத்தில் பெற்றோருக்கு கட்டுப்பாடு விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது. யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகள் பிள்ளையின் உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்கு உச்ச நீதிமன்றத்தால் எந்த ஆதாரத்தையும் பார்க்க முடியவில்லை.

யெகோவாவின் சாட்சியாக இருக்கும் அப்பா அல்லது அம்மாவின் பொறுப்பில் பிள்ளைகள் வளரும்படி நிறைய நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியிருக்கின்றன

29-31. டென்மார்க்கிலுள்ள ஒரு சகோதரி தன் மகளை வளர்க்கும் பொறுப்பை ஏன் இழந்தார், இந்த விஷயத்தில் டென்மார்க் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது?

29 டென்மார்க். அனிட்டா ஹேன்சனுக்கு இதுபோன்ற ஒரு பிரச்சினை வந்தது. அவருக்கு அமாண்டா என்ற ஏழு வயது மகள் இருந்தாள். சகோதரி ஹேன்சனின் முன்னாள் கணவர், பிள்ளையை தன்னுடைய பொறுப்பில் ஒப்படைக்கும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 2000-ல், மாவட்ட நீதிமன்றம், பிள்ளையை சகோதரி ஹேன்சனின் பொறுப்பில் ஒப்படைத்தது. ஆனால், அமாண்டாவின் அப்பா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் மாற்றி, பிள்ளையை அதன் அப்பாவிடம் ஒப்படைத்தது. மத நம்பிக்கைகளின் அடிப்படையில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததால் அந்தப் பிரச்சினையை அப்பாவால்தான் சரியான விதத்தில் சரிசெய்ய முடியும் என்று சொல்லி உயர் நீதிமன்றம் அப்பாவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. அதனால், அமாண்டாவை வளர்க்கும் பொறுப்பை சகோதரி ஹேன்சன் இழந்தார். அதற்கு முக்கிய காரணம் அவர் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருந்ததுதான்.

30 அந்த வழக்கு நடந்துகொண்டிருந்த சமயத்தில் சகோதரி ஹேன்சன் என்ன செய்வதென்று தெரியாமல் ரொம்பவே குழம்பிப்போயிருந்தார். எப்படி ஜெபம் செய்வது என்றுகூட தெரியாமல் தவித்தார். “ஆனால், ரோமர் 8:26, 27 எனக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது. நான் சொல்ல நினைத்ததை யெகோவா புரிந்துகொண்டார் என்பதை என்னால் எப்போதும் உணர முடிந்திருக்கிறது. அவருடைய கண்கள் எப்போதும் என்மீது இருந்தது, அவர் என் கூடவே இருந்தார்” என்று சகோதரி ஹேன்சன் சொன்னார்.சங்கீதம் 32:8-ஐயும் ஏசாயா 41:10-ஐயும் வாசியுங்கள்.

31 சகோதரி ஹேன்சன், டென்மார்க் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். “பிள்ளை யாரிடம் வளர்வது நல்லது என்பதை நன்றாகச் சீர்தூக்கி பார்த்த பிறகுதான் அதை யாரிடம் ஒப்படைப்பது என தீர்மானிக்க முடியும்” என்று நீதிமன்றம் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டது. அதோடு, யெகோவாவின் சாட்சிகளுடைய “கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளின்” அடிப்படையில் அல்ல, பிரச்சினைகளை நல்ல விதத்தில் சமாளிப்பது அப்பாவா அம்மாவா என்பதை வைத்துதான் பிள்ளையை ஒப்படைக்க முடியும் என்றும் சொன்னது. ஒரு அம்மாவாக சகோதரி ஹேன்சனுக்கு பிள்ளையை வளர்ப்பதற்கான தகுதி இருக்கிறது என்று நீதிமன்றம் முடிவு செய்து, அமாண்டாவை அவரிடம் ஒப்படைத்தது. அதற்கு பிறகுதான் சகோதரி ஹேன்சனுக்கு நிம்மதியாக இருந்தது.

32. யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் பெற்றோர் பாகுபாடோடு நடத்தப்பட்டதை எதிர்த்து மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது?

32 ஐரோப்பாவிலுள்ள மற்ற நாடுகள். பிள்ளைகள் யாரிடம் வளர வேண்டும் என்ற வழக்கு, சிலசமயங்களில் உச்ச நீதிமன்றத்தையும் தாண்டி மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம்வரை (ECHR) போயிருக்கிறது. இப்படிப்பட்ட இரண்டு வழக்குகளில், கீழ் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றங்களும் மதத்தை அடிப்படையாக வைத்து, யெகோவாவின் சாட்சியாக இருந்த அப்பாவையோ அம்மாவையோ ஒரு விதமாகவும், யெகோவாவின் சாட்சியாக இல்லாதவர்களை இன்னொரு விதமாகவும் நடத்தியிருக்கிறது என்பதை ECHR ஒத்துக்கொண்டது. இதைப் பாகுபாடான செயல் என்று சொல்லி ECHR இப்படித் தீர்ப்பளித்தது: “மதத்தை மட்டும் அடிப்படையாக வைத்து வித்தியாசமாக நடந்துகொள்வது சரியல்ல.” ECHR-ன் தீர்ப்பினால் பயனடைந்த ஒரு அம்மா இப்படிச் சொல்கிறார்: “நான் என் பிள்ளைகளுக்குச் சிறந்ததைச் செய்ய நினைத்தேன், அதனால்தான் பைபிளின் நெறிமுறைகளின்படி வளர்த்தேன். ஆனால் நானே என் பிள்ளைகளுக்குக் கெடுதல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.”

33. பிலிப்பியர் 4:5-லுள்ள நியமத்தை யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் பெற்றோர் எப்படிப் பின்பற்றலாம்?

33 பிள்ளைகளை பைபிளின் நெறிமுறைகளின்படி வளர்ப்பதற்கு யெகோவாவின் சாட்சியாக இருக்கும் அப்பாவோ அம்மாவோ சட்டரீதியாக பிரச்சினைகளை எதிர்ப்படும்போது நியாயமானவர்களாக இருக்க முயற்சி செய்கிறார்கள். (பிலிப்பியர் 4:5-ஐ வாசியுங்கள்.) பிள்ளையைக் கடவுளுடைய வழியில் வளர்க்கும் பொறுப்பு, யெகோவாவின் சாட்சியாக இருக்கும் அப்பாவுக்கோ அம்மாவுக்கோ இருப்பதுபோலவே சாட்சியாக இல்லாத தங்களுடைய துணைக்கும் இருக்கிறது என்பதைப் புரிந்து நடக்கிறார்கள். பிள்ளைக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொடுக்கும் பொறுப்பை யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒரு அப்பாவோ அம்மாவோ எந்தளவுக்கு முக்கியமானதாக நினைக்கிறார்கள்?

34. நெகேமியா காலத்தில் வாழ்ந்த யூதர்களின் உதாரணத்திலிருந்து இன்று கிறிஸ்தவப் பெற்றோர் எப்படி நன்மை அடையலாம்?

34 நெகேமியாவின் காலத்தில் நடந்த சம்பவம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எருசலேமின் மதில்சுவர்களைப் பழுதுபார்த்து, திரும்பக் கட்டுவதற்கு யூதர்கள் கடினமாக உழைத்தார்கள். அப்படிச் செய்தால், சுற்றியிருந்த எதிரி தேசங்களிடமிருந்து தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாக்க முடியும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால்தான், “உங்கள் சகோதரர்களுக்காகவும் மனைவி மக்களுக்காகவும் வீடுகளுக்காகவும் துணிந்து போராடுங்கள்” என்று அவர்களிடம் நெகேமியா சொன்னார். (நெ. 4:14) அவர்கள் எடுத்த முயற்சிக்கும் நல்ல பலன் கிடைத்தது. அதேபோல், இன்றும் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளைச் சத்தியத்தில் வளர்க்க கடினமாக முயற்சி செய்கிறார்கள். பள்ளியிலும் சுற்றுவட்டாரத்திலும் நடக்கிற கெட்ட விஷயங்கள் பிள்ளைகளைப் பாதிக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட விஷயங்கள் மீடியா மூலம் வீட்டுக்குள்ளும் புகுந்துவிடலாம். அதனால் பெற்றோர்களே, பிள்ளைகளுக்காக பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் அதில் அவர்கள் ஆன்மீக விதத்தில் தழைத்து வளரவும் நீங்கள் எடுக்கிற முயற்சிக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

உண்மை வணக்கத்தை யெகோவா நிச்சயம் ஆதரிப்பார்

35, 36. சட்டப்பூர்வ உரிமைகளுக்காகப் போராடியதால் யெகோவாவின் சாட்சிகளுக்கு என்ன நன்மைகள் கிடைத்திருக்கின்றன, என்ன செய்ய நீங்கள் தீர்மானமாக இருக்கிறீர்கள்?

35 யெகோவாவைச் சுதந்திரமாக வணங்குவதற்கான உரிமையைப் பெற இன்று அவருடைய அமைப்பு எடுத்திருக்கிற முயற்சிகளை அவர் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. சட்டப்பூர்வ உரிமைகளுக்காகப் போராடிய சமயங்களில், கடவுளுடைய மக்களால் நீதிமன்றங்களில் இருந்தவர்களுக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் சிறந்த சாட்சி கொடுக்க முடிந்திருக்கிறது. (ரோ. 1:8) நீதிமன்றங்களில் கிடைத்த பல வெற்றிகளால் மற்றவர்களும் நன்மை அடைந்திருக்கிறார்கள். அதாவது, யெகோவாவின் சாட்சிகளாக இல்லாதவர்களால்கூட தங்களுடைய சமூக உரிமைகளைப் பெற முடிந்திருக்கிறது. ஆனாலும், நாம் சமுதாயத்தைச் சீர்திருத்த நினைப்பதில்லை; நம்மேல் சுமத்தப்படுகிற குற்றச்சாட்டுகளைப் பொய்யென்று நிரூபித்து காட்ட முயற்சி செய்வதுமில்லை. அதற்குப் பதிலாக, நமக்கு இருக்கும் சட்டப்பூர்வ உரிமைகளைப் பயன்படுத்தி உண்மை வணக்கத்தை நிலைநாட்டவும் அதை முன்னேற்றுவிக்கவும்தான் நாம் வழக்குத் தொடுக்கிறோம்.பிலிப்பியர் 1:7-ஐ வாசியுங்கள்.

36 யெகோவாவை வணங்குவதற்கான சுதந்திரத்தைப் பெற போராடியவர்களின் விசுவாசத்தை நாம் பின்பற்ற வேண்டும். அவர்களைப் போல நாமும் யெகோவாவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அவர் நம் வேலையை ஆதரிக்கிறார் என்றும், அவருடைய விருப்பத்தைச் செய்ய நமக்குத் தொடர்ந்து சக்தி தருவார் என்றும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.—ஏசா. 54:17.