Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 16

வணக்கத்துக்காக ஒன்றுகூடி வருதல்

வணக்கத்துக்காக ஒன்றுகூடி வருதல்

அதிகாரத்தின் முக்கியக் குறிப்பு

கூட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்களும் கூட்டங்களின் முக்கியத்துவமும்

1. சீஷர்கள் ஒன்றுகூடி வந்தபோது அவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது, அது அவர்களுக்கு ஏன் தேவைப்பட்டது?

 இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, சீஷர்கள் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவதற்காக ஒன்றுகூடி வந்தார்கள். ஆனால், அவர்கள் எதிரிகளுக்குப் பயந்து கதவுகளைப் பூட்டிவைத்திருந்தார்கள். அந்தச் சமயத்தில், இயேசு அவர்கள் நடுவில் தோன்றி, “கடவுளுடைய சக்தியைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். அதைக் கேட்டதும் அவர்களுடைய பயமெல்லாம் நிச்சயம் பறந்துபோயிருக்கும்! (யோவான் 20:19-22-ஐ வாசியுங்கள்.) பிற்பாடு, சீஷர்கள் திரும்பவும் ஒன்றுகூடி வந்தார்கள். அப்போது, அவர்கள்மேல் யெகோவா தன்னுடைய சக்தியைப் பொழிந்தார். அவர்கள் செய்யவிருந்த பிரசங்க வேலைக்கு அந்தச் சக்தி எந்தளவுக்கு உதவியாக இருந்திருக்கும்!—அப். 2:1-7.

2. (அ) இன்று யெகோவா நமக்கு எப்படிப் பலம் தருகிறார், அது நமக்கு ஏன் தேவை? (ஆ) குடும்ப வழிபாடு ஏன் ரொம்ப முக்கியம்? (அடிக்குறிப்பையும், பக்கம் 175-லுள்ள “ குடும்ப வழிபாடு” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

2 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போல இன்று நாமும் நிறைய சவால்களைச் சந்திக்கிறோம். (1 பே. 5:9) சில சமயங்களில், நம்மில் சிலருக்கு மனித பயம் தொற்றிக்கொள்ளலாம். யெகோவா தரும் பலத்தால் மட்டுமே நம்மால் தொடர்ந்து பிரசங்க வேலை செய்ய முடியும். (எபே. 6:10) முக்கியமாக, கூட்டங்கள் மூலம் யெகோவா நமக்குப் பலம் தருகிறார். இன்று வாரா வாரம் நடக்கிற உற்சாகமளிக்கும் இரண்டு கூட்டங்களில் நாம் கலந்துகொள்கிறோம். ஒரு கூட்டத்தில் பொதுப் பேச்சும் காவற்கோபுர படிப்பும் இருக்கும். வார நாட்களில், நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் என்ற பெயரில் இன்னொரு கூட்டமும் நடக்கும். a அதுபோக, வருஷா வருஷம் நடக்கிற மண்டல மாநாடு, இரண்டு வட்டார மாநாடுகள், கிறிஸ்துவின் மரண நினைவு நாள் அனுசரிப்பு ஆகிய நான்கு நிகழ்ச்சிகளில் நாம் கலந்துகொள்கிறோம். இந்த எல்லா கூட்டங்களிலும் நாம் கலந்துகொள்வது ஏன் ரொம்ப முக்கியம்? நம் கூட்டங்களில் எப்படிப் படிப்படியாக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? கூட்டங்கள் பற்றிய நம் மனப்பான்மை நம்மைப் பற்றி எதைத் தெரியப்படுத்துகிறது?

ஏன் ஒன்றுகூடி வரவேண்டும்?

3, 4. யெகோவா தன் மக்களுக்கு என்ன கட்டளை கொடுத்திருக்கிறார்? உதாரணங்களைக் கொடுங்கள்.

3 மக்கள் தன்னை வணங்க ஒன்றுகூடி வரவேண்டும் என்ற கட்டளையை யெகோவா பல காலத்துக்கு முன்பே கொடுத்திருந்தார். உதாரணத்துக்கு, கி.மு. 1513-ல் இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த திருச்சட்டத்தில், ஓய்வுநாளை அனுசரிக்க வேண்டுமென்ற ஒரு கட்டளை இருந்தது. ஒவ்வொரு குடும்பமும் தன்னை வணங்குவதற்காகவும், திருச்சட்டத்தின் போதனைகளைக் கற்றுக்கொள்வதற்காகவும் அந்த நாள் கொடுக்கப்பட்டது. (உபா. 5:12; 6:4-9) இஸ்ரவேலர்கள் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தபோது அவர்களுடைய குடும்பங்கள் பலப்பட்டன. அதோடு, அந்த முழு ஜனமும் யெகோவாவுடன் நெருங்கிய பந்தத்தை வைத்துக்கொள்ளவும் அவருக்கு முன் சுத்தமானவர்களாக இருக்கவும் முடிந்தது. ஆனால், திருச்சட்டத்தின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனபோது, அவர்கள் கடவுளுடைய தயவை இழந்தார்கள். அந்தக் கட்டளைகளில் ஒன்றுதான் கடவுளை வணங்குவதற்காகக் கூடிவருவது.—லேவி. 10:11; 26:31-35; 2 நா. 36:20, 21.

4 இயேசு வைத்த முன்மாதிரியைக் கவனியுங்கள். ஒவ்வொரு வாரமும் ஓய்வுநாளில் ஜெபக்கூடத்துக்குப் போகும் பழக்கம் அவருக்கு இருந்தது. (லூக். 4:16) இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, அவருடைய சீஷர்களும் அவரைப் போலவே வணக்கத்துக்காக தவறாமல் ஒன்றுகூடி வந்தார்கள். அவர்கள் ஓய்வுநாள் சட்டத்தின் கீழ் இல்லாவிட்டாலும் அப்படிச் செய்தார்கள். (அப். 1:6, 12-14; 2:1-4; ரோ. 14:5; கொலோ. 2:13, 14) அப்படிப்பட்ட கூட்டங்கள் மூலம் போதனைகளையும் உற்சாகத்தையும் பெற்றார்கள். அதுமட்டுமல்ல ஜெபங்கள், குறிப்புகள், பாடல்கள் மூலம் கடவுளுக்குப் புகழ்ச்சி பலிகளைச் செலுத்தினார்கள்.—கொலோ. 3:16; எபி. 13:15.

இயேசுவின் சீஷர்கள் ஒருவரை ஒருவர் பலப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் ஒன்றுகூடி வந்தார்கள்

5. கூட்டங்களிலும் மாநாடுகளிலும் நாம் ஏன் கலந்துகொள்கிறோம்? (பக்கம் 176-ல் “ கடவுளுடைய மக்களை ஒன்றுபடுத்தும் மாநாடுகள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

5 கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்துகொள்வதன் மூலம் நாமும் கடவுளுடைய அரசாங்கத்துக்கு ஆதரவு காட்டுகிறோம்; அங்கே கடவுளுடைய சக்தியால் நாம் பலம் பெறுகிறோம். அதோடு, நம் விசுவாசத்தை வெளிப்படுத்தும் பதில்களைச் சொல்வதன் மூலமும் ஆன்மீக விஷயங்களைக் கலந்துபேசுவதன் மூலமும் மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறோம். மிக முக்கியமாக ஜெபங்கள், பதில்கள், பாடல்கள் மூலம் யெகோவாவை வணங்குவதற்கான வாய்ப்பு நமக்கு இருக்கிறது. இஸ்ரவேலர்கள் மற்றும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நடத்திய கூட்டங்களுக்கும் நாம் நடத்தும் கூட்டங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆனாலும், நம்முடைய கூட்டங்களும் முக்கியமானவைதான். நம் காலத்தில், கூட்டங்களை நடத்தும் முறையில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன?

“அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும்” ஊக்கப்படுத்துகிற கூட்டங்கள்

6, 7. (அ) என்ன நோக்கத்துக்காகக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன? (ஆ) கூட்டங்கள் நடத்தப்பட்ட விதம் எப்படி தொகுதிக்குத் தொகுதி வித்தியாசப்பட்டிருந்தது?

6 சகோதரர் சார்ல்ஸ் டேஸ் ரஸல், சத்தியத்தைக் கண்டுபிடிப்பதற்காக பைபிளை ஆராய்ச்சி செய்யத் தொடங்கியபோது ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டார். தனக்கு இருந்த அதே லட்சியமுள்ள ஆட்களோடு ஒன்றுகூடி வருவதன் அவசியத்தைப் புரிந்துகொண்டார். 1879-ல் ரஸல் இப்படி எழுதினார்: “பிட்ஸ்பர்க்கில், நானும் மற்றவர்களும் பைபிளை ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு பைபிள் வகுப்பைத் துவங்கினோம். நாங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒன்றுகூடி வந்தோம்.” காவற்கோபுர பத்திரிகையின் வாசகர்கள் பைபிளைப் படிக்க ஒன்றுகூடி வரும்படி உற்சாகப்படுத்தப்பட்டார்கள். 1881-க்குள் பென்ஸில்வேனியாவிலுள்ள பிட்ஸ்பர்க்கில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் புதன்கிழமைகளிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. “கிறிஸ்தவக் கூட்டுறவையும் அன்பையும்” அனுபவிப்பதற்காகவும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவதற்காகவுமே கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்று நவம்பர் 1895, காவற்கோபுரம் சொன்னது.எபிரெயர் 10:24, 25-ஐ வாசியுங்கள்.

7 பல வருஷங்களாக, ஒவ்வொரு தொகுதியிலிருந்த பைபிள் மாணாக்கர்களும் ஒவ்வொரு விதமாக கூட்டங்களை நடத்தினார்கள். கூட்டங்கள் எத்தனை முறை நடத்தப்பட்டது என்பதிலும் வித்தியாசம் இருந்தது. உதாரணத்துக்கு, அமெரிக்காவிலுள்ள பைபிள் மாணாக்கர்களின் ஒரு தொகுதி அனுப்பிய கடிதத்தில் (1911-ல் பிரசுரிக்கப்பட்டது) இப்படிச் சொல்லப்பட்டிருந்தது: “வாரத்துக்கு குறைந்தது ஐந்து கூட்டங்களை நாங்கள் நடத்துகிறோம்.” திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் மூன்று கூட்டங்களையும், ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு கூட்டங்களையும் அவர்கள் நடத்தினார்கள். ஆப்பிரிக்காவிலுள்ள பைபிள் மாணாக்கர்களின் ஒரு தொகுதி அனுப்பிய கடிதத்தில் (1914-ல் பிரசுரிக்கப்பட்டது) இப்படிச் சொல்லப்பட்டிருந்தது: “நாங்கள் மாதத்துக்கு இரண்டு முறை கூட்டங்கள் நடத்துகிறோம். வெள்ளிக்கிழமையில் ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமைவரை அந்தக் கூட்டங்கள் நீடிக்கும்.” கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, இப்போது நடத்தப்படுகிற அதே முறையில் கூட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. ஒவ்வொரு கூட்டத்தையும் பற்றிய சரித்திரத்தை இப்போது பார்க்கலாம்.

8. ஆரம்பத்தில் என்னென்ன தலைப்புகளில் பொதுப் பேச்சுகள் கொடுக்கப்பட்டன?

8 பொதுப் பேச்சு. காவற்கோபுர பத்திரிகையைச் சகோதரர் ரஸல் பிரசுரிக்க ஆரம்பித்த அடுத்த வருஷத்தில், அதாவது 1880-ல், அவர் இயேசுவைப் போல பல இடங்களுக்குப் பயணம் செய்து பிரசங்கிக்க ஆரம்பித்தார். (லூக். 4:43) அவர் எங்கெல்லாம் போனாரோ அங்கெல்லாம் பேச்சுகளைக் கொடுத்தார். இன்று கொடுக்கப்படும் பொதுப் பேச்சுகளுக்கு அதுதான் ஆரம்பமாக இருந்தது. சகோதரர் ரஸல், “‘கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தமான விஷயங்கள்’ என்ற தலைப்பில் பொது மக்களிடம் பேசுவார்” என்று அவருடைய பயணத்தைப் பற்றி அறிவிப்பு செய்த காவற்கோபுரம் சொன்னது. 1911-ல் பல நாடுகளில் வகுப்புகள், அதாவது சபைகள் ஆரம்பிக்கப்பட்டன. ‘நியாயத்தீர்ப்பு,’ ‘மீட்புவிலை’ போன்ற தலைப்புகளில் ஆறு பேச்சுகளைக் கொடுப்பதற்காகச் சுற்றுவட்டாரத்தில் இருந்த பல இடங்களுக்குத் தகுதியுள்ள பேச்சாளர்களை அனுப்பும்படி ஒவ்வொரு சபைக்கும் சொல்லப்பட்டது. ஒவ்வொரு பேச்சின் முடிவிலும் அடுத்த வாரத்தில் பேச்சு கொடுக்கப்போகிறவரின் பெயரும் அந்தப் பேச்சின் தலைப்பும் அறிவிக்கப்பட்டது.

9. பொதுப் பேச்சுகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன, இந்தக் கூட்டத்துக்கு உங்களுடைய ஆதரவை நீங்கள் எப்படிக் காட்டலாம்?

9 உலகம் முழுவதும் பொதுப் பேச்சு கொடுப்பதற்கான ஏற்பாடு பற்றி 1945-ல் வெளிவந்த காவற்கோபுரம் சொன்னது. “இந்தக் காலத்தில் எதிர்ப்படுகிற முக்கியமான பிரச்சினைகளை” பற்றி எட்டு பைபிள் பேச்சுகள் கொடுக்கப்படும் என்று அது அறிவித்தது. பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் உண்மையுள்ள அடிமை கொடுத்த தலைப்புகளில் பேச்சுகளைக் கொடுத்ததோடு அவர்களாகவே சொந்தமாகத் தயாரித்த பேச்சுகளையும் கொடுத்தார்கள். பல வருஷங்களுக்கு இப்படி நடந்தது. ஆனால், சபைகளுக்குக் கொடுக்கப்பட்ட குறிப்புத்தாளின் அடிப்படையில்தான் பேச்சுகளைக் கொடுக்க வேண்டும் என்று 1981-ல், எல்லா பேச்சாளர்களுக்கும் சொல்லப்பட்டது. b 1990 வரை பொதுப் பேச்சுக்கான சில குறிப்புத்தாள்களில், பேச்சுக்கு இடையே சபையாரிடம் கலந்தாலோசிக்கும்படி அல்லது நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யும்படி சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அந்த வருஷத்திலிருந்து இப்படிச் செய்வதில் மாற்றம் ஏற்பட்டது. அப்போதிலிருந்து பொதுப் பேச்சுகளுக்கு இடையே வேறு எதுவும் சேர்க்கப்படவில்லை. ஜனவரி 2008-ல் இன்னொரு மாற்றம் செய்யப்பட்டது. பொதுப் பேச்சுகளின் நேரம் 45 நிமிஷங்களிலிருந்து 30 நிமிஷங்களாகக் குறைக்கப்பட்டது. பொதுப் பேச்சு கொடுக்கப்படும் விதங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டாலும், நன்றாகத் தயாரித்துக் கொடுக்கப்படும் பேச்சுகள் கடவுளுடைய வார்த்தையின் மீதுள்ள நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன. அதோடு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி நமக்குத் தொடர்ந்து கற்றுத்தருகின்றன. (1 தீ. 4:13, 16) பைபிள் சார்ந்த இப்படிப்பட்ட சிறந்த பேச்சுகளைக் கேட்க ஆர்வம் காட்டுகிறவர்களையும், உங்களுடைய மறுசந்திப்புகளையும் நீங்கள் அழைக்கிறீர்களா?

10-12. (அ) காவற்கோபுர படிப்பில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டன? (ஆ) நாம் ஒவ்வொருவரும் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்?

10 காவற்கோபுர படிப்பு. சபைகளில் பேச்சுகளைக் கொடுப்பதற்கும் பிரசங்க வேலையை முன்நின்று வழிநடத்துவதற்கும் காவற்கோபுர சங்கத்தால் அனுப்பிவைக்கப்பட்ட ஊழியர்கள் 1922-ல் ஒரு விஷயத்தைச் சிபாரிசு செய்தார்கள். அதாவது, காவற்கோபுர படிப்புக்காக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யும்படி சொன்னார்கள். அவர்களுடைய ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி, ஆரம்பத்தில் காவற்கோபுர படிப்பு வாரத்தின் மத்திபத்தில் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டது.

1931-ல் கானாவில் காவற்கோபுர படிப்பு

11 இந்தக் கூட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கான கூடுதல் ஆலோசனை ஜூன் 15, 1932, காவற்கோபுரத்தில் கொடுக்கப்பட்டது. பெத்தேலில் நடத்தப்படுவது போலவே ஒரு சகோதரர் இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அதில் சொல்லப்பட்டிருந்தது. பாராக்களை வாசிப்பதற்காக மூன்று சகோதரர்கள் முன்வரிசையில் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாராவை வாசிப்பார்கள். அப்போதெல்லாம் கட்டுரைகளில் கேள்விகள் இருக்காது. அதனால், வாசிக்கப்பட்ட விஷயங்களிலிருந்து கேள்விகளைக் கேட்கும்படி அந்தப் படிப்பை நடத்துபவர் சபையாரிடம் சொல்வார். பிறகு, அதற்கான பதில்களைச் சொல்லும்படி சபையாரிடமே கேட்பார். ஒருவேளை கூடுதல் விளக்கம் தேவைப்பட்டால் அவரே “சுருக்கமான, தெளிவான” விளக்கத்தைக் கொடுக்க வேண்டியிருந்தது.

12 ஆரம்பத்தில், பெரும்பாலான சகோதர சகோதரிகள் எந்த காவற்கோபுரத்தைச் சபையில் படிக்க விரும்பினார்களோ அதைப் படிப்பதற்கான அனுமதி இருந்தது. ஆனால், எல்லா சபைகளும் அந்தந்த மாதத்துக்கான இதழைப் படிக்க வேண்டும் என்று ஏப்ரல் 15, 1933, காவற்கோபுரம் சொன்னது. அந்தப் படிப்பு, ஞாயிற்றுக்கிழமையில் நடத்தப்பட வேண்டும் என்று 1937-ல் சொல்லப்பட்டது. இந்தப் படிப்பில் செய்யப்பட்ட இன்னும் சில மாற்றங்களைப் பற்றி அக்டோபர் 1, 1942, காவற்கோபுரம் சொன்னது. இந்த மாற்றங்களின் அடிப்படையில்தான் இன்றுவரை காவற்கோபுர படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. படிப்புக் கட்டுரைகளில், அந்தந்த பக்கங்களின் கீழே கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கும் என்றும் அந்தக் கேள்விகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த காவற்கோபுர கட்டுரை சொன்னது. அதோடு, அந்தப் படிப்பு ஒரு மணிநேரத்துக்கு நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டது. பதில் சொல்பவர்கள், பாராவிலிருந்து வாசிக்காமல் “சொந்த வார்த்தைகளில்” சொல்ல வேண்டுமென்ற ஆலோசனையும் அதில் கொடுக்கப்பட்டிருந்தது. காவற்கோபுர படிப்பு இன்றுவரை முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால், அதன் மூலமாகத்தான் உண்மையும் விவேகமும் உள்ள அடிமை ஏற்ற வேளையில் ஆன்மீக உணவைக் கொடுத்துவருகிறது. (மத். 24:45) நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘ஒவ்வொரு வாரமும் காவற்கோபுர படிப்புக்காக நான் தயாரிக்கிறேனா? முடிந்தவரை பதில்களைச் சொல்ல முயற்சி செய்கிறேனா?’

13, 14. சபை பைபிள் படிப்பு எப்படி ஆரம்பமானது, இந்தக் கூட்டத்தில் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?

13 சபை பைபிள் படிப்பு. 1890-களின் ஆரம்பத்தில் மில்லெனியல் டான் என்ற புத்தகத்தின் பல தொகுதிகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தன. அப்போது, சகோதரர் எச். என். ரான் (அமெரிக்காவிலுள்ள மேரிலாந்தைச் சேர்ந்த பால்டிமோரில் வாழ்ந்தவர்) இந்தப் புத்தகங்களைப் படிப்பதற்கு, கூட்டங்களை ஏற்பாடு செய்யும்படி சிபாரிசு செய்தார். அந்தக் கூட்டங்கள், “டான் சர்கில்ஸ்” என்று அழைக்கப்பட்டன. அவை பெரும்பாலும் வீடுகளில்தான் நடத்தப்பட்டன. அந்தக் கூட்டத்துக்கு எந்தளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதைச் சகோதரர்கள் பார்க்க நினைத்தார்கள். செப்டம்பர் 1895-க்குள் அமெரிக்காவில் இருந்த பல நகரங்களில் அந்தக் கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்தது. அதனால், அந்தக் கூட்டத்தை பைபிள் மாணாக்கர்கள் எல்லாரும் நடத்தும்படி அந்த மாத காவற்கோபுரம் சொன்னது. அதோடு, அந்தப் படிப்பை நடத்தும் சகோதரருக்கு நன்றாக வாசிக்கத் தெரிந்திருந்திருக்க வேண்டும் என்றும் சொன்னது. அவர் ஒரு வாக்கியத்தை வாசித்த பிறகு, கூடிவந்திருந்தவர்கள் அதிலிருந்து குறிப்புகள் சொல்லும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. பாராவிலுள்ள ஒவ்வொரு வாக்கியத்தையும் வாசித்து, அவற்றைக் கலந்துபேசிய பிறகு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களையும் அவர் வாசிக்க வேண்டியிருந்தது. ஒரு அதிகாரத்தை முடித்த பிறகு, கூடிவந்திருந்த ஒவ்வொருவரும் படித்த விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டியிருந்தது.

14 இந்தக் கூட்டத்தின் பெயர் பலமுறை மாற்றப்பட்டது. டான் சர்கில்ஸ் என்ற பெயர் பெரோயன் சர்கில்ஸ் என்று மாற்றப்பட்டது. முதல் நூற்றாண்டில் வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்த பெரோயர்களை மனதில் வைத்து இந்தப் பெயர் கொடுக்கப்பட்டது. (அப். 17:11) பிறகு, அந்தக் கூட்டத்தின் பெயர் சபை புத்தகப் படிப்பு என்று மாற்றப்பட்டது. இன்று சபை பைபிள் படிப்பு என்று அழைக்கப்படுகிறது. வீடுகளில் தொகுதி தொகுதியாகக் கூடிவருவதற்குப் பதிலாக முழு சபையும் ராஜ்ய மன்றத்தில் கூடிவருகிறது. பல வருஷங்களாக இந்தக் கூட்டத்தில் வித்தியாசமான புத்தகங்கள், சிற்றேடுகள், சில சமயங்களில் காவற்கோபுர கட்டுரைகள்கூட கலந்தாலோசிக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்திலிருந்தே எல்லாரும் பதில் சொல்லும்படி உற்சாகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பைபிளை நன்றாகப் புரிந்துகொள்ள இந்தக் கூட்டம் ரொம்பவே உதவியாக இருந்திருக்கிறது. நீங்கள் தவறாமல் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உங்களால் முடிந்தவரை பதில் சொல்ல முயற்சி செய்கிறீர்களா?

15. தேவராஜ்ய ஊழியப் பள்ளி என்ன நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது?

15 தேவராஜ்ய ஊழியப் பள்ளி. நியு யார்க்கிலுள்ள புருக்லின் தலைமை அலுவலகத்தில் சேவை செய்த சகோதரர் கேரி பார்பர் இப்படிச் சொன்னார்: “பிப்ரவரி 16, 1942, திங்கள்கிழமை இரவில், புருக்லின் பெத்தேலைச் சேர்ந்த எல்லா சகோதரர்களுக்கும் ஒரு அழைப்பு கொடுக்கப்பட்டது. தேவராஜ்ய ஊழியப் பள்ளி என்று பின்னர் அழைக்கப்பட்ட ஒரு பள்ளியில் சேரும்படி அவர்கள் சொல்லப்பட்டார்கள்.” பிற்பாடு ஆளும் குழு அங்கத்தினராக ஆன சகோதரர் பார்பர், அந்தப் பள்ளி “நம் காலத்தில் யெகோவா தன்னுடைய மக்களுக்காகச் செய்திருக்கும் மிகச் சிறந்த ஏற்பாடு” என்று சொன்னார். கற்றுக்கொடுப்பதிலும் பிரசங்கிப்பதிலும் திறமைகளை வளர்த்துக்கொள்ள அந்தப் பள்ளி சகோதரர்களுக்கு ரொம்பவே உதவியாக இருந்தது. அதனால், 1943-லிருந்து தேவராஜ்ய ஊழியத்திற்கான பயிற்சி (ஆங்கிலம்) என்ற சிறுபுத்தகம் உலகம் முழுவதும் இருந்த சபைகளுக்குக் கிடைக்க ஆரம்பித்தது. “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி சிறந்த விதத்தில் சாட்சி கொடுக்க [கடவுளுடைய மக்கள்] பயிற்சி பெறுவதற்காக” தேவராஜ்ய ஊழியப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது என்று ஜூன் 1, 1943, காவற்கோபுரம் சொன்னது.—2 தீ. 2:15.

16, 17. தேவராஜ்ய ஊழியப் பள்ளி பேச்சுத் திறமையை வளர்த்துக்கொள்வதற்கு மட்டும்தான் உதவியதா? விளக்குங்கள்.

16 ஒரு பெரிய கூட்டத்துக்கு முன்பாக பேச்சு கொடுப்பது ஆரம்பத்தில் நிறைய பேருக்கு ரொம்பப் பயமாக இருந்தது. க்ளேடன் உட்வர்த் என்ற சகோதரர் (1918-ல் சகோதரர் ரதர்ஃபர்டும் மற்றவர்களும் அநியாயமாக சிறையில் போடப்பட்டபோது இவருடைய அப்பாவும் அவர்களில் ஒருவராக இருந்தார்) 1943-ல் இந்தப் பள்ளியில் சேர்ந்தபோது எப்படி உணர்ந்தார் என்பதைப் பற்றி இப்படிச் சொன்னார்: “பேச்சு கொடுப்பது எனக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. என் நாக்கு அப்படியே பெரிதாகிக்கொண்டே போனதுபோல் இருந்தது. என் தொண்டை வறண்டுபோனது. சில சமயங்களில் என் குரல் முனகுவது போல் இருக்கும், சில சமயங்களில் கத்துவது போல் இருக்கும்.” ஆனால், சகோதரர் க்ளேடன் நன்றாக முன்னேற்றம் செய்தபோது அவருக்கு பொதுப் பேச்சு கொடுக்க நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. வெறுமனே பேச்சுத் திறமையை வளர்த்துக்கொள்வதற்கு மட்டும் அந்தப் பள்ளி கற்றுத்தரவில்லை. மனத்தாழ்மையாக இருப்பதும் யெகோவாவைச் சார்ந்து இருப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதையும் அந்தப் பள்ளி கற்றுக்கொடுத்தது. “பேச்சு கொடுப்பவர் முக்கியம் கிடையாது, அவர் நன்றாகத் தயாரிப்பதும் யெகோவாவையே முழுமையாக நம்பியிருப்பதும்தான் முக்கியம் என்பதை நான் புரிந்துகொண்டேன். அப்போதுதான் பேச்சாளர் சொல்வதை எல்லாரும் ஆர்வமாகக் கேட்பார்கள். அந்தப் பேச்சிலிருந்து ஏதாவது கற்றுக்கொள்வார்கள்” என்று சகோதரர் க்ளேடன் சொன்னார்.

17 1959-ல் சகோதரிகளும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேரும்படி அழைக்கப்பட்டார்கள். மாநாட்டில் அதைப் பற்றி அறிவிப்பு செய்யப்பட்டபோது எப்படியிருந்தது என்று சகோதரி எட்னா பாவர் சொல்கிறார்: “அந்த அறிவிப்பைக் கேட்ட சகோதரிகள் எந்தளவு சந்தோஷப்பட்டார்கள் என்று எனக்கு ஞாபகம் இருக்கிறது. அப்போதிலிருந்து சகோதரிகளுக்கும் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.” பல வருஷங்களாக நிறைய சகோதர சகோதரிகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்து யெகோவாவினால் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று இப்படிப்பட்ட பயிற்சியை வார நாட்களில் நடக்கும் கூட்டத்திலிருந்து நாம் பெறுகிறோம்.ஏசாயா 54:13-ஐ வாசியுங்கள்.

18, 19. (அ) ஊழியத்தை நன்றாகச் செய்ய நடைமுறையான ஆலோசனைகள் இன்று நமக்கு எப்படிக் கிடைக்கின்றன? (ஆ) கூட்டங்களில் ஏன் பாடல்களைப் பாடுகிறோம்? (“ பைபிள் சத்தியத்தை வெளிப்படுத்தும் பாடல்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

18 ஊழியக் கூட்டம். 1919-லேயே ஊழியத்தை ஒழுங்கமைக்க கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், பிரசுரங்களை வினியோகிப்பதில் ஈடுபட்டவர்கள் மட்டுமே அந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டார்கள். 1923-லிருந்து மாதத்துக்கு ஒருமுறை ஊழியக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் சபையார் எல்லாருமே கலந்துகொள்ள வேண்டியிருந்தது. 1928-க்குள் சபைகளுக்கு இன்னொரு ஆலோசனையும் கொடுக்கப்பட்டது. அதாவது, ஒவ்வொரு வாரமும் ஊழியக் கூட்டம் நடத்தும்படி சொல்லப்பட்டது. டைரக்டர் என்ற பிரசுரத்திலுள்ள (பிறகு இது இன்ஃபார்மென்ட் என்றும் அதன்பின் நம் ராஜ்ய ஊழியம் என்றும் அழைக்கப்பட்டது) தகவலைப் பயன்படுத்தி ஊழியக் கூட்டத்தை நடத்தும்படி 1935-ல் வெளிவந்த காவற்கோபுரம் எல்லா சபைகளையும் உற்சாகப்படுத்தியது. அதன்பிறகு, ஒவ்வொரு சபையிலும் இந்தக் கூட்டம் தவறாமல் நடத்தப்பட்டு வந்தது.

19 ஊழியத்தை நன்றாகச் செய்ய வார நாட்களில் நடக்கும் கூட்டங்களிலிருந்து நமக்கு நடைமுறையான ஆலோசனைகள் கிடைக்கின்றன. (மத். 10:5-13) நீங்கள் ஒரு பிரஸ்தாபியாக இருந்தால், நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகத்தை நன்றாகப் படித்து அதிலிருக்கும் ஆலோசனைகளை ஊழியத்தில் பயன்படுத்துகிறீர்களா?

வருஷத்தின் மிக முக்கியமான கூட்டம்

முதல் நூற்றாண்டிலிருந்தே, கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு வருஷமும் கிறிஸ்துவின் மரண நாளை அனுசரிக்க ஒன்றுகூடி வந்திருக்கிறார்கள் (பாரா 20)

20-22. (அ) இயேசுவின் மரண நாளை நாம் ஏன் அனுசரிக்கிறோம்? (ஆ) ஒவ்வொரு வருஷமும் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால் நமக்கு என்ன நன்மை கிடைக்கிறது?

20 இயேசு தன்னைப் பின்பற்றியவர்களிடம், தான் வரும்வரை தன்னுடைய மரண நாளை அனுசரிக்கும்படி சொன்னார். பஸ்காவைப் போலவே கிறிஸ்துவின் மரண நினைவு நாளும் வருஷத்துக்கு ஒருமுறை அனுசரிக்கப்படுகிறது. (1 கொ. 11:23-26) ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்கானோர் இந்தக் கூட்டத்துக்கு வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியால் பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் வேறே ஆடுகளும் எவ்விதங்களில் நன்மை அடைகிறார்கள்? கிறிஸ்துவின் சக வாரிசுகளாக ஆகும் பாக்கியம் இருப்பதை பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு இது நினைப்பூட்டுகிறது. (ரோ. 8:17) கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவுக்கு ஆழ்ந்த மரியாதை காட்டவும் அவருக்கு உண்மையோடு இருக்கவும் வேறே ஆடுகளை இது தூண்டுகிறது.—யோவா. 10:16.

21 எஜமானின் இரவு விருந்துக்குக் கூடிவருவது எவ்வளவு முக்கியம் என்பதையும் அதை வருஷத்துக்கு ஒருமுறைதான் அனுசரிக்க வேண்டும் என்பதையும் சகோதரர் ரஸலும் அவருடைய நண்பர்களும் புரிந்துவைத்திருந்தார்கள். ஏப்ரல் 1880, காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “பல வருஷங்களாகவே, பிட்ஸ்பர்க்கிலிருக்கும் எங்களில் நிறைய பேர் வழக்கமாக . . . பஸ்காவை [நினைவு நாளை] அனுசரித்து நம் எஜமானின் உடலையும் இரத்தத்தையும் அடையாளப்படுத்துகிற சின்னங்களில் பங்குகொள்கிறோம்.” நினைவு நாள் நிகழ்ச்சியோடு சேர்த்து மாநாடுகளும் நடத்தப்பட்டன. 1889-ல் இப்படி நடந்த நிகழ்ச்சிக்கு 225 பேர் வந்தார்கள். 22 பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். புள்ளிவிவரங்கள் பதிவு செய்யப்பட்ட முதல் மாநாடு இதுதான்.

22 இன்று, நினைவு நாள் நிகழ்ச்சி மாநாடுகளின் பாகமாக நடத்தப்படுவது கிடையாது. ஆனாலும், ராஜ்ய மன்றத்திலோ வாடகைக்கு எடுக்கப்பட்ட மன்றத்திலோ நடத்தப்படும் அந்த நிகழ்ச்சிக்கு நாம் வாழும் பகுதியிலுள்ள எல்லாரையும் அழைக்கிறோம். 2013-ல் இயேசுவின் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு 1 கோடியே 90 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்திருந்தார்கள். இந்த முக்கியமான நிகழ்ச்சியில் நாம் கலந்துகொள்வதோடு மற்றவர்களையும் அழைப்பது நமக்குக் கிடைத்திருக்கும் பாக்கியம்! நினைவு நாளுக்கு வரும்படி ஒவ்வொரு வருஷமும் உங்களால் முடிந்தவரை நிறைய பேரை அழைக்கிறீர்களா?

நம் மனப்பான்மை எதைத் தெரியப்படுத்துகிறது?

23. கூட்டங்களுக்கு ஒன்றுகூடி வருவதை நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள்?

23 சபைக் கூட்டங்களுக்கு ஒன்றுகூடி வரவேண்டும் என்ற கட்டளையை நாம் பாரமானதாக நினைப்பதில்லை. (எபி. 10:24, 25; 1 யோ. 5:3) உதாரணத்துக்கு, யெகோவாவை வணங்குவதற்காக ஆலயத்துக்குப் போவது தாவீது ராஜாவுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. (சங். 27:4) அதுவும் கடவுளை நேசித்தவர்களோடு சேர்ந்து ஆலயத்துக்குப் போவது அவருக்குச் சந்தோஷமாக இருந்தது. (சங். 35:18) இயேசுவின் உதாரணத்தையும் கவனியுங்கள். சிறுவனாக இருந்தபோதே, தன்னுடைய தகப்பனின் வீட்டில் இருப்பது அவருக்கு ரொம்பப் பிடித்த விஷயமாக இருந்தது.—லூக். 2:41-49.

அதிக ஆர்வத்தோடு கூட்டங்களுக்குக் கூடிவருவது, கடவுளுடைய அரசாங்கம் நமக்கு எந்தளவுக்கு நிஜமானதாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது

24. கூட்டங்களுக்குப் போகும்போது என்னென்ன செய்ய நமக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன?

24 கூட்டங்களுக்குப் போகும்போது, யெகோவாமீது நமக்கு அன்பு இருப்பதையும் சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்த விரும்புவதையும் நாம் காட்டுகிறோம். கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக வாழ என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்ள ஆசைப்படுவதையும் காட்டுகிறோம். ஏனென்றால், அதற்கான பயிற்சி முக்கியமாக கூட்டங்களிலும் மாநாடுகளிலும்தான் கிடைக்கிறது. அதோடு, கூட்டங்களிலிருந்து நமக்கு இன்னொரு பலனும் கிடைக்கிறது. இன்று கடவுளுடைய அரசாங்கம் செய்துவருகிற மிக முக்கியமான ஒரு வேலையை, அதாவது நம் ராஜாவான இயேசு கிறிஸ்துவுக்கு சீஷர்களை உருவாக்கி அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் வேலையை, செய்வதற்கான திறமையும் பலமும் கிடைக்கிறது. (மத்தேயு 28:19, 20-ஐ வாசியுங்கள்.) அதிக ஆர்வத்தோடு கூட்டங்களுக்குக் கூடிவருவது, கடவுளுடைய அரசாங்கம் நம் ஒவ்வொருவருக்கும் எந்தளவுக்கு நிஜமானதாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அதனால், கூட்டங்களை எப்போதும் உயர்வாக நினைப்போமாக!

a ஒவ்வொரு குடும்பமும் அல்லது ஒவ்வொரு நபரும் வாரா வாரம் கூட்டங்களில் கலந்துகொள்வதோடு குடும்ப வழிபாட்டுக்கு அல்லது தனிப்பட்ட படிப்புக்கு நேரம் ஒதுக்க உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.

b 2013-க்குள் பொதுப் பேச்சு கொடுப்பதற்கு 180-க்கும் அதிகமான குறிப்புத்தாள்கள் இருந்தன.