Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 18

கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்குப் பணம் கிடைக்கும் விதம்

கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்குப் பணம் கிடைக்கும் விதம்

அதிகாரத்தின் முக்கியக் குறிப்பு

கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு யெகோவாவின் மக்கள் பண உதவி செய்யும் விதமும், அதற்கான காரணமும்

1, 2. (அ) பைபிள் மாணாக்கர்களுக்கு எங்கிருந்து பண உதவி கிடைக்கிறது என்று கேட்ட ஒரு ஊழியரிடம் சகோதரர் ரஸல் என்ன சொன்னார்? (ஆ) இந்த அதிகாரத்தில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

 ரிஃபார்ம்ட் சர்ச்சைச் சேர்ந்த ஒரு ஊழியர், சகோதரர் சார்ல்ஸ் டி. ரஸலிடம் வந்து, ஊழிய வேலைகளைச் செய்ய பைபிள் மாணாக்கர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்று கேட்டார்.

அதற்கு, “நாங்கள் யாரிடமும் பணம் வசூலிப்பது கிடையாது” என்று சகோதரர் ரஸல் அவரிடம் சொன்னார்.

“அப்படியென்றால், உங்களுக்கு எப்படிப் பணம் கிடைக்கிறது?” என்று அந்த ஊழியர் கேட்டார்.

அதற்கு ரஸல் இப்படிப் பதிலளித்தார்: “உண்மையைச் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். எங்களுடைய கூட்டங்களுக்கு மக்கள் வரும்போது அவர்களிடம் யாருமே காணிக்கைப் பையை நீட்டுவது கிடையாது. ஆனால், இப்படிக் கூட்டங்கள் நடத்துவதற்கு செலவாகும் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அதனால், ‘இந்த மன்றத்துக்கு ஏதாவது ஒருவிதத்தில் பணம் செலவாகியிருக்கும். . . . என் பங்கிற்கு நன்கொடை கொடுக்க நான் என்ன செய்யலாம்?’ என்று அவர்கள் யோசிக்கிறார்கள்.”

அந்த ஊழியரால் அதை நம்பவே முடியவில்லை.

அப்போது சகோதரர் ரஸல், “நான் உண்மையாகத்தான் சொல்கிறேன். கூட்டத்துக்கு வருகிறவர்கள் என்னிடம், ‘நன்கொடை கொடுக்க நான் என்ன செய்யலாம்?’ என்று கேட்கிறார்கள். கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெற்ற ஒருவருக்குப் பண வசதி இருந்தால் அவர் கடவுளுக்கு நன்கொடை கொடுக்க விரும்புவார். ஒருவேளை அவருக்குப் பண வசதி இல்லையென்றால், நன்கொடை கொடுக்கும்படி நாம் ஏன் அவரைக் கட்டாயப்படுத்த வேண்டும்?” என்று சொன்னார். a

2 சகோதரர் ரஸல் ‘உண்மையைத்தான்’ சொன்னார். உண்மை வணக்கத்தை ஆதரிப்பதற்காக நன்கொடைகளை மனப்பூர்வமாகக் கொடுக்கும் பழக்கம் ஆரம்பத்திலிருந்தே கடவுளுடைய மக்களுக்கு இருந்திருக்கிறது. இதைப் பற்றிய சில பைபிள் உதாரணங்களையும், நவீன கால உதாரணங்களையும் இந்த அதிகாரத்தில் பார்ப்போம். இன்று, கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக எப்படிப் பண உதவி கிடைக்கிறது என்பதைப் படிக்கும்போது, ‘கடவுளுடைய அரசாங்கத்துக்கு நான் எப்படி ஆதரவு காட்டலாம்?’ என்று நாம் ஒவ்வொருவருமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

‘யெகோவாவுக்கு உள்ளப்பூர்வமாகக் காணிக்கை கொடுக்க விரும்புகிறவர்கள் அதைக் கொண்டுவரட்டும்’

3, 4. (அ) தன்னை வணங்குகிறவர்கள்மேல் யெகோவாவுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? (ஆ) வழிபாட்டுக் கூடாரத்தைக் கட்டுவதற்கு இஸ்ரவேலர்கள் எப்படி ஆதரவு கொடுத்தார்கள்?

3 தன்னை உண்மையோடு வணங்குகிறவர்கள்மேல் யெகோவா நம்பிக்கை வைத்திருக்கிறார். நன்கொடை கொடுப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால், உள்ளப்பூர்வமாக அதைக் கொடுப்பதன் மூலம் தன்மேல் இருக்கும் பயபக்தியை அவர்கள் வெளிக்காட்டுவார்கள் என்று யெகோவாவுக்குத் தெரியும். இஸ்ரவேலர்களின் சரித்திரத்திலிருந்து இரண்டு உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.

4 இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வெளியே கூட்டிக்கொண்டு வந்த பிறகு, ஒரு வழிபாட்டுக் கூடாரத்தைக் கட்டும்படி யெகோவா அவர்களிடம் சொன்னார். சுலபமாகப் பிரித்துக் கொண்டுபோக முடிகிற அந்தக் கூடாரத்தைக் கட்டுவதற்காகவும் அலங்கரிப்பதற்காகவும் அதிகமான பொருள்கள் தேவைப்பட்டிருக்கும். அந்தக் கட்டுமான வேலைக்கு ஆதரவளிக்க மக்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்படி மோசேயிடம் யெகோவா சொன்னார். அதனால் மோசே, “யெகோவாவுக்கு உள்ளப்பூர்வமாகக் காணிக்கை கொடுக்க விரும்புகிறவர்கள் [அதை] . . . கொண்டுவரலாம்” என்று மக்களிடம் சொன்னார். (யாத். 35:5) எகிப்தில் அடிமைகளாக ‘படாத பாடுபட்டு, சக்கையாகப் பிழிந்தெடுக்கப்பட்ட’ மக்கள் மோசே சொன்னதைக் கேட்டு என்ன செய்தார்கள்? (யாத். 1:14) அவர்கள் தங்கம், வெள்ளி, மற்றும் விலைமதிப்புள்ள பொருள்களைக் கொடுத்து முழு ஆதரவு காட்டினார்கள். அவர்கள் கொடுத்த பெரும்பாலான பொருள்கள் தங்களுடைய முன்னாள் எஜமான்களான எகிப்தியர்களிடமிருந்து பெற்றுக்கொண்டதாக இருக்கலாம். (யாத். 12:35, 36) தேவைப்பட்டதற்கும் அதிகமான நன்கொடையை இஸ்ரவேலர்கள் கொடுத்தார்கள். “இனி எந்தப் பொருளையும் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டாம்” என்று சொல்லுமளவுக்குக் கொண்டுவந்தார்கள்.—யாத். 36:4-7.

5. ஆலயத்தைக் கட்டும் வேலைக்காகக் காணிக்கை தர இஸ்ரவேலர்களுக்கு தாவீது வாய்ப்பு கொடுத்தபோது அவர்கள் என்ன செய்தார்கள்?

5 சுமார் 475 வருஷங்களுக்குப் பிறகு, தாவீது ஆலயத்தைக் கட்டுவதற்காக தன்னுடைய “சொத்திலிருந்து” நன்கொடை கொடுத்தார். உண்மை வணக்கத்துக்காக இந்தப் பூமியில் கட்டப்பட்ட முதல் கட்டிடம் அதுதான். அந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு நன்கொடை கொடுக்க சக இஸ்ரவேலர்களுக்கும் அவர் வாய்ப்பு கொடுத்தார். அவர்களிடம், “இன்று யெகோவாவுக்குக் காணிக்கை கொடுக்க யாரெல்லாம் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது ‘மக்கள் முழு இதயத்தோடு யெகோவாவுக்குக் காணிக்கை கொடுத்தார்கள். . . . அவர்களாகவே விருப்பப்பட்டு காணிக்கை கொடுத்தார்கள்.’ (1 நா. 29:3-9) அந்த நன்கொடைகளின் உண்மையான ஊற்றுமூலர் யெகோவாதான் என்பதை உணர்ந்த தாவீது, “உங்கள் கையிலிருந்து வாங்கியதைத்தான் உங்களுக்குத் திருப்பித் தந்திருக்கிறோம்” என்று ஜெபத்தில் சொன்னார்.—1 நா. 29:14.

6. கடவுளுடைய அரசாங்கத்தின் வேலைகளுக்குப் பணம் ஏன் தேவைப்படுகிறது, அதனால் என்ன கேள்விகள் எழும்புகின்றன?

6 மோசேயும் சரி, தாவீதும் சரி, நன்கொடை கொடுக்கும்படி கடவுளுடைய மக்களைக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மக்கள் மனப்பூர்வமாக நன்கொடைகளைக் கொடுத்தார்கள். நம் நாளைப் பற்றி என்ன சொல்லலாம்? கடவுளுடைய அரசாங்கம் செய்கிற எல்லா வேலைகளுக்கும் பணம் தேவை என்று நமக்கு நன்றாகத் தெரியும். பைபிள்களையும், பிரசுரங்களையும் அச்சடித்து வினியோகிப்பதற்கும்... ராஜ்ய மன்றங்கள், மாநாட்டு மன்றங்கள், கிளை அலுவலகங்கள் ஆகியவற்றைக் கட்டுவதற்கும்... பேரழிவுகளில் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு நிவாரண உதவிகளைச் செய்வதற்கும்... எக்கச்சக்கமாக பணமும் பொருள்களும் தேவைப்படுகின்றன. அதனால் சில முக்கியமான கேள்விகள் எழும்புகின்றன. ‘இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் கிடைக்கிறது? ராஜாவாகிய இயேசு, நன்கொடை கொடுக்கும்படி தன்னைப் பின்பற்றுகிறவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறதா?’

“ஆதரவு கேட்டு மனிதர்களிடம் கெஞ்சவோ உதவி கேட்கவோ மாட்டோம்”

7, 8. யெகோவாவின் மக்கள் பணத்துக்காக ஏன் யாரிடமும் கெஞ்சுவதோ உதவி கேட்பதோ கிடையாது?

7 சர்ச்சுகளில் பணம் திரட்டுவதுபோல், சகோதரர் ரஸலும் அவருடைய நண்பர்களும் பணம் திரட்ட விரும்பவில்லை. காவற்கோபுர பத்திரிகையின் இரண்டாவது இதழ், “‘சீயோனின் காவற்கோபுரம்’ உங்களுக்கு வேண்டுமா?” என்ற தலைப்பில் வெளிவந்தது. அதில் ரஸல் இப்படிச் சொல்லியிருந்தார்: “‘சீயோனின் காவற்கோபுரத்துக்கு’ யெகோவாவின் ஆதரவு இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். அதனால், ஆதரவு கேட்டு மனிதர்களிடம் கெஞ்சவோ உதவி கேட்கவோ மாட்டோம். ‘வெள்ளியும் என்னுடையது, தங்கமும் என்னுடையது’ என்று சொன்ன கடவுள், இந்த வேலைக்கு ஆதரவு கொடுப்பதை எப்போது நிறுத்துகிறாரோ அப்போது இந்தப் பத்திரிகையை அச்சடிப்பதை நிறுத்த வேண்டிய சமயம் வந்துவிட்டது என்று நாங்கள் புரிந்துகொள்வோம்.” (ஆகா. 2:7-9) இப்போது, 130 வருஷங்களுக்கும் அதிகமாக ஆகிவிட்டது. இன்றும் நம் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, காவற்கோபுர பத்திரிகையும் பிரசுரிக்கப்பட்டு வருகிறது.

8 யெகோவாவின் மக்கள் பணத்துக்காக யாரிடமும் கெஞ்சுவதில்லை. தங்களுடைய கூட்டங்களுக்கு வருகிறவர்களிடம் காணிக்கைத் தட்டுகளை நீட்டுவதில்லை. பணம் கேட்டு யாருக்கும் கடிதம் அனுப்புவதில்லை. பணத்துக்காக பொருள்களை ஏலம் விடுவதும் இல்லை. பல வருஷங்களுக்கு முன் காவற்கோபுரத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகளின்படியே அவர்கள் இன்றும் நடக்கிறார்கள். “மற்ற சர்ச்சுகளைப் போல கடவுளுடைய வேலையைச் செய்ய மக்களிடம் பணம் கேட்க வேண்டும் என்று நாங்கள் ஒருநாளும் நினைத்தது கிடையாது . . . கடவுளுடைய பெயரைச் சொல்லி பணம் திரட்டுவது அவருக்குப் பிடிக்காது என்றும் அதை அவர் வெறுக்கிறார் என்றும் அதற்காக நன்கொடை கொடுத்தவர்களையும், அந்தப் பணத்தால் செய்யப்பட்ட வேலைகளையும் கடவுள் ஆசீர்வதிக்க மாட்டார் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று அந்தப் பத்திரிகையில் சொல்லப்பட்டிருந்தது. b

“ஒவ்வொருவரும் . . . தன் இதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும்”

9, 10. நாம் மனப்பூர்வமாகக் காணிக்கை கொடுப்பதற்கு ஒரு காரணம் என்ன?

9 கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாகிய நம்மை நன்கொடை கொடுக்கும்படி யாரும் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, கடவுளுடைய அரசாங்கத்தின் வேலைகளை ஆதரிக்க நம்மிடம் இருக்கும் பணம், பொருள் போன்றவற்றை சந்தோஷமாகக் கொடுக்கிறோம். ஏன் அப்படி மனப்பூர்வமாகக் கொடுக்கிறோம்? மூன்று காரணங்களை இப்போது பார்க்கலாம்.

10 முதல் காரணம், யெகோவாமேல் நமக்கு இருக்கும் அன்பும், “அவருக்குப் பிரியமான காரியங்களை” செய்ய வேண்டும் என்ற ஆசையும்தான், மனப்பூர்வமாக நன்கொடைகளைக் கொடுக்க நம்மைத் தூண்டுகின்றன. (1 யோ. 3:22) இப்படி உள்ளப்பூர்வமாக நன்கொடை கொடுக்கிறவர்களை யெகோவா ரொம்ப நேசிக்கிறார். கொடுப்பது சம்பந்தமாக அப்போஸ்தலன் பவுல் சொன்னதைக் கவனியுங்கள். (2 கொரிந்தியர் 9:7-ஐ வாசியுங்கள்.) உண்மைக் கிறிஸ்தவர் ஒருவர் வேண்டாவெறுப்பாகவோ கட்டாயத்தின் பேரிலோ கொடுப்பதில்லை. ஆனால், “தன் இதயத்தில் தீர்மானித்தபடியே” கொடுக்கிறார். c அதாவது தேவையை உணர்ந்து, அதற்காகத் தன்னுடைய பங்கில் என்ன செய்யலாம் என்று யோசித்து நன்கொடையைக் கொடுக்கிறார். அப்படி “சந்தோஷமாகக் கொடுப்பவரைத்தான் கடவுள் நேசிக்கிறார்.” இந்த வசனத்தை மற்றொரு மொழிபெயர்ப்பு இப்படிச் சொல்கிறது: “உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.”

மொசாம்பிக்கிலுள்ள நம் சிறுவர்களும் கொடுப்பதில் சந்தோஷப்படுகிறார்கள்

11. நம்மால் முடிந்த மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுக்க எது நம்மைத் தூண்டுகிறது?

11 இரண்டாவது காரணம், யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களுக்கு நன்றி காட்டுவதற்காக நாம் நன்கொடை கொடுக்கிறோம். இது சம்பந்தமாக, நம்மை யோசிக்க வைக்கும் ஒரு நியமத்தைத் திருச்சட்டத்தில் பார்க்கலாம். (உபாகமம் 16:16, 17-ஐ வாசியுங்கள்.) வருஷந்தோறும் நடக்கும் மூன்று பண்டிகைகளுக்காக வரும்போது ஒவ்வொரு இஸ்ரவேல ஆணும், தன்னை யெகோவா “எந்தளவு ஆசீர்வதித்திருக்கிறாரோ” அந்தளவு காணிக்கையைக் கொண்டுவர வேண்டியிருந்தது. அதனால், அந்தப் பண்டிகைகளுக்கு முன்பு, ஒவ்வொரு ஆணும் யெகோவா தனக்குக் கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களை யோசித்துப் பார்த்து, அவருக்கு எதைக் கொடுப்பது சிறந்ததாக இருக்கும் என்று தீர்மானிக்க வேண்டியிருந்தது. அதேபோல், யெகோவா நம்மை எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார் என்று யோசிக்கும்போது நம்மிடம் இருக்கும் சிறந்ததை அவருக்குக் கொடுக்க நாமும் தூண்டப்படுகிறோம். நாம் பொருள்களையோ பணத்தையோ மனப்பூர்வமாகக் கொடுக்கும்போது, யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களுக்கு நாம் எந்தளவு நன்றியோடு இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்.—2 கொ. 8:12-15.

12, 13. மனப்பூர்வமாகக் காணிக்கை கொடுப்பதன் மூலம் நம் ராஜாமீது அன்பு வைத்திருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டுகிறோம், நாம் ஒவ்வொருவரும் எவ்வளவு காணிக்கை கொடுக்க வேண்டும்?

12 மூன்றாவது காரணம், மனப்பூர்வமாய் நன்கொடை கொடுப்பதன் மூலம் நம் ராஜாவான இயேசு கிறிஸ்துமீது நமக்கு அன்பு இருப்பதைக் காட்டுகிறோம். எப்படி? பூமியில் இருந்த கடைசி இரவன்று இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்னதைக் கவனியுங்கள். (யோவான் 14:23-ஐ வாசியுங்கள்.) “ஒருவனுக்கு என்மேல் அன்பு இருந்தால், அவன் என் வார்த்தையின்படி நடப்பான்” என்று இயேசு சொன்னார். பூமி முழுவதும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும் என்ற கட்டளையும் அவர் சொன்ன ‘வார்த்தையில்’ ஒன்று. (மத். 24:14; 28:19, 20) அந்த வார்த்தைக்கு நாம் எப்படிக் கீழ்ப்படிகிறோம்? கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதற்காக நம்முடைய நேரம், சக்தி, பணம், பொருள் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறோம். இப்படிச் செய்யும்போது மேசியானிய ராஜாமீது நமக்கு அன்பு இருப்பதைக் காட்டுகிறோம்.

13 கடவுளுடைய அரசாங்கத்தின் உண்மையுள்ள குடிமக்களான நாம், பண உதவி செய்வதன் மூலம் கடவுளுடைய அரசாங்கத்துக்கு முழுமனதோடு ஆதரவு காட்டுகிறோம். அப்படியானால், நாம் எவ்வளவு கொடுக்க வேண்டும்? அது நம் ஒவ்வொருவருடைய சொந்தத் தீர்மானம். நம்மால் எந்தளவு கொடுக்க முடியுமோ அந்தளவு கொடுக்கலாம். நிறைய சகோதர சகோதரிகளுக்கு அதிக பண வசதியில்லை. (மத். 19:23, 24; யாக். 2:5) ஆனாலும், முழுமனதோடு அவர்கள் கொடுக்கும் சிறிய காணிக்கையைக்கூட யெகோவாவும் அவருடைய மகனும் உயர்வாக மதிக்கிறார்கள். இது நமக்கு ஆறுதலாக இருக்கிறது, இல்லையா?—மாற். 12:41-44.

பணம் எப்படிக் கிடைக்கிறது?

14. பல வருஷங்களாக, யெகோவாவின் சாட்சிகள் பைபிள் பிரசுரங்களை எதன் அடிப்படையில் கொடுத்தார்கள்?

14 பல வருஷங்களாக, யெகோவாவின் சாட்சிகள் பைபிள் பிரசுரங்களைப் பணத்துக்குக் கொடுத்தார்கள். வசதிவாய்ப்பு இல்லாதவர்கள்கூட நம் பிரசுரங்களைப் வாங்கிக்கொள்வதற்காக மிகக் குறைவான தொகையே அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஆர்வம் காட்டிய ஒருவருக்கு பணம் கொடுக்க வசதி இல்லாதபோது, பணம் வாங்காமலேயே பிரஸ்தாபிகள் அவர்களுக்குப் பிரசுரங்களைக் கொடுத்தார்கள். நல்மனமுள்ள மக்கள் அதைப் படித்து நன்மை அடைய வேண்டும் என்பதே அவர்களுடைய உள்ளப்பூர்வமான ஆசையாக இருந்தது.

15, 16. (அ) 1990-ல், பிரசுரங்களைக் கொடுக்கும் விதத்தில் ஆளும் குழு என்ன மாற்றம் செய்தது? (ஆ) மனப்பூர்வமான நன்கொடைகள் எப்படிக் கொடுக்கப்படுகின்றன? (“ நம் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

15 ஆனால் 1990-ல், ஆளும் குழு ஒரு மாற்றத்தைச் செய்தது. அந்த வருஷத்திலிருந்து அமெரிக்காவில், எல்லா பிரசுரங்களும் நன்கொடையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டன. அந்தப் பகுதியிலிருந்த எல்லா சபைகளுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருந்தது: “பிரஸ்தாபிகளிடமும் பொது மக்களிடமும் பணம் வாங்காமலேயே பத்திரிகைகளும் பிரசுரங்களும் கொடுக்கப்படும். அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை இருப்பதாகவோ, குறிப்பிட்டளவு நன்கொடை கொடுத்தால்தான் பிரசுரம் கிடைக்கும் என்பதாகவோ சொல்லக்கூடாது. . . . நம் கல்வி புகட்டும் வேலைக்கு ஒருவர் நன்கொடை தர விரும்பினால் அதை அவர் தரலாம். அவர் அப்படித் தந்தாலும் தராவிட்டாலும் அவருக்குப் பிரசுரத்தைக் கொடுக்கலாம்.” நாம் கடவுளுக்காக மனப்பூர்வமாக இந்த வேலையைச் செய்கிறோம் என்பதை இந்த ஏற்பாடு காட்டியது. நாம் “கடவுளுடைய வார்த்தையை வைத்துப் பணம் சம்பாதிப்பதில்லை” என்பதையும் இது தெளிவாகக் காட்டியது. (2 கொ. 2:17) பிற்பாடு, உலகம் முழுவதுமுள்ள எல்லா சபைகளிலும் இந்த ஏற்பாடு அமல்படுத்தப்பட்டது.

16 நன்கொடைகள் எப்படிக் கொடுக்கப்படுகின்றன? யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றங்களில் நன்கொடை பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. நன்கொடை கொடுக்க விரும்புகிறவர்கள் அதை அந்தப் பெட்டியில் போடலாம், அல்லது, யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்துகிற சட்டப்பூர்வ நிறுவனங்கள் ஒன்றுக்கு அதை அனுப்பலாம். மனப்பூர்வமான நன்கொடைகளை எப்படியெல்லாம் கொடுக்கலாம் என்பதைப் பற்றிய ஒரு கட்டுரை ஒவ்வொரு வருஷமும் காவற்கோபுரத்தில் வெளிவருகிறது.

பணம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது?

17-19. நன்கொடைப் பணம் (அ) உலகளாவிய வேலைக்காக, (ஆ) உலகளாவிய ராஜ்ய மன்ற கட்டுமான வேலைக்காக, (இ) சபையின் செலவுகளுக்காக எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்று விளக்குங்கள்.

17 உலகளாவிய வேலை. உலகளாவிய பிரசங்க வேலைக்கான செலவுகளை ஈடுகட்டுவதற்கு இந்தப் பணம் பயன்படுத்தப்படுகிறது. பிரசுரங்களை அச்சடித்து உலகம் முழுவதும் வினியோகிப்பது, கிளை அலுவலகங்களைக் கட்டுவது, அவற்றைப் பராமரிப்பது, பல்வேறு பைபிள் பள்ளிகளை நடத்துவது போன்றவற்றுக்கு ஆகும் செலவுகளும் இதில் அடங்கும். அதோடு மிஷனரிகள், பயணக் கண்காணிகள், விசேஷ பயனியர்கள் ஆகியோரின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கும் இந்தப் பணம் பயன்படுத்தப்படுகிறது. பேரழிவுகளின்போது நம் சகோதர சகோதரிகளுக்கு நிவாரண உதவிகளைச் செய்வதற்கும் இந்த நன்கொடை பயன்படுத்தப்படுகிறது. d

18 உலகளாவிய ராஜ்ய மன்ற கட்டுமான வேலைகள். ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கோ அவற்றைப் புதுப்பிப்பதற்கோ சபைகளுக்கு உதவ இந்தப் பணம் பயன்படுத்தப்படுகிறது. நன்கொடைகள் கிடைக்க கிடைக்க, மற்ற சபைகளுக்கு உதவவும் அந்தப் பணம் பயன்படுத்தப்படுகிறது. e

19 சபைச் செலவுகள். ராஜ்ய மன்றத்தின் தேவைகளுக்காகவும் அதைப் பராமரிப்பதற்காகவும் இந்தப் பணம் பயன்படுத்தப்படுகிறது. உலகளாவிய வேலைக்காக சபையின் நன்கொடையிலிருந்து கொஞ்சப் பணத்தைக் கிளை அலுவலகத்துக்கு அனுப்ப மூப்பர்கள் சிபாரிசு செய்யலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சபையாரின் அங்கீகாரத்தைப் பெற அவர்கள்முன் மூப்பர்கள் ஒரு தீர்மானத்தை வைப்பார்கள். அந்தத் தீர்மானத்துக்குச் சபையார் முழு ஆதரவு கொடுத்தால் அந்தத் தொகை கிளை அலுவலகத்துக்கு அனுப்பப்படும். ஒவ்வொரு மாதமும் சபையின் கணக்குகளைக் கவனித்துக்கொள்ளும் சகோதரர், கணக்கு அறிக்கையைத் தயார் செய்வார். அது சபையாருக்கு முன் வாசிக்கப்படும்.

20. ‘உங்களுடைய மதிப்புமிக்க பொருள்களால்’ யெகோவாவை எப்படி மகிமைப்படுத்தலாம்?

20 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிக்கும் வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போது நம்முடைய ‘மதிப்புமிக்க பொருள்களை . . . கொடுத்து யெகோவாவை மகிமைப்படுத்த’ நாம் தூண்டப்படுகிறோம். (நீதி. 3:9, 10) நம்முடைய உழைப்பு, அறிவு, கிறிஸ்தவக் குணங்கள் மற்றும் திறமைகள் நம்முடைய மதிப்புமிக்க பொருள்களில் அடங்கும். இவை எல்லாவற்றையும் கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக முழுமையாய்ப் பயன்படுத்த நாம் விரும்புகிறோம். பணமும் பொருள்களும்கூட நம்முடைய மதிப்புமிக்க பொருள்களில் உட்பட்டிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நம்மால் முடிந்ததைக் கொடுக்க நாம் தீர்மானமாக இருக்க வேண்டும். மனப்பூர்வமாக நாம் கொடுக்கும் நன்கொடை யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிறது. அதோடு, மேசியானிய அரசாங்கத்துக்கு நாம் ஆதரவு கொடுப்பதையும் காட்டுகிறது.

a ஜூலை 15, 1915, காவற்கோபுரம் பக்கங்கள் 218-219 (ஆங்கிலம்).

b ஆகஸ்ட் 1, 1899, காவற்கோபுரம் பக்கம் 201 (ஆங்கிலம்).

c “தீர்மானித்தபடி” என்பதற்கான கிரேக்க வார்த்தை “முன்தீர்மானித்தல் என்ற கருத்தைத் தருகிறது” என்று ஒரு அறிஞர் சொல்கிறார். “கொடுப்பதில் எப்போதுமே ஒரு சந்தோஷம் இருந்தாலும், நாம் திட்டமிட்டு கொடுப்பது அவசியம், தவறாமல் கொடுப்பதும் அவசியம்” என்றும் அவர் சொல்கிறார்.—1 கொ. 16:2.

d நிவாரணப் பணிகளைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள அதிகாரம் 20-ஐப் பாருங்கள்.

e ராஜ்ய மன்ற கட்டுமான வேலைகளைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள அதிகாரம் 19-ஐப் பாருங்கள்.