Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 21

கடவுளுடைய அரசாங்கம் எதிரிகளை ஒழித்துக்கட்டுகிறது

கடவுளுடைய அரசாங்கம் எதிரிகளை ஒழித்துக்கட்டுகிறது

அதிகாரத்தின் முக்கியக் குறிப்பு

அர்மகெதோன் போருக்கு முன் நடக்கவிருக்கும் சம்பவங்கள்

1, 2. (அ) நம் ராஜா, 1914 முதற்கொண்டு ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் என்பதற்கு என்ன அத்தாட்சிகள் இருக்கின்றன? (ஆ) எதைப் பற்றி இந்த அதிகாரத்தில் பார்ப்போம்?

 எதிரிகளின் நடுவே கடவுளுடைய அரசாங்கம் சாதித்திருக்கிற விஷயங்களைப் பற்றிப் படிக்கும்போது நம் விசுவாசம் பலப்படுகிறது. (சங். 110:2) மனப்பூர்வமாகப் பிரசங்க வேலை செய்கிறவர்களின் ஒரு படையை நம் ராஜா திரட்டியிருக்கிறார். தன்னைப் பின்பற்றுகிறவர்களை ஆன்மீக விஷயங்களிலும் ஒழுக்க விஷயங்களிலும் சுத்தப்படுத்தி, புடமிட்டிருக்கிறார். கடவுளுடைய அரசாங்கத்தின் எதிரிகள் நமக்குள் பிரிவினை உண்டாக்குவதற்கு எடுத்திருக்கிற எல்லா முயற்சிகளின் மத்தியிலும், இன்று நாம் உலகளவில் ஒரே குடும்பம்போல் ஒற்றுமையாக இருக்கிறோம். இப்படிப்பட்ட பல விஷயங்களை கடவுளுடைய அரசாங்கம் சாதித்திருப்பதைப் பற்றி இந்தப் புத்தகத்தில் படித்தோம். நம் ராஜா, 1914 முதற்கொண்டு எதிரிகளின் நடுவே ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் என்பதற்கு இவை தெள்ளத் தெளிவான அத்தாட்சிகளாக இருக்கின்றன.

2 வியக்கவைக்கும் இன்னும் பல விஷயங்களை கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் சாதிக்கப்போகிறது. அந்த அரசாங்கம் ‘வந்து’ அதன் எதிரிகளை ‘நொறுக்கி, அடியோடு அழித்துவிடும்.’ (மத். 6:10; தானி. 2:44) ஆனால், அந்தச் சமயம் வருவதற்கு முன், வேறு சில முக்கியமான சம்பவங்கள் நடக்கும். என்ன சம்பவங்கள்? அதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள சில பைபிள் தீர்க்கதரிசனங்கள் உதவுகின்றன. என்ன சம்பவங்கள் சீக்கிரத்தில் நடக்கவிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள அவற்றில் சில தீர்க்கதரிசனங்களை இப்போது பார்க்கலாம்.

‘எதிர்பாராத நேரத்தில் அழிவு வருவதற்கு’ முன் நடக்கவிருக்கும் சம்பவங்கள்

3. முதலில் நடக்கவிருக்கும் என்ன சம்பவத்தைப் பார்க்க நாம் ஆவலோடு காத்திருக்கிறோம்?

3 சமாதானத்தைப் பற்றிய அறிவிப்பு. தெசலோனிக்கேயர்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில், நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற முதல் சம்பவத்தைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 தெசலோனிக்கேயர் 5:2, 3-ஐ வாசியுங்கள்.) “மகா பாபிலோன்” தாக்கப்படும் சம்பவத்தோடு “யெகோவாவின் நாள்” ஆரம்பமாகும் என்று அந்தக் கடிதத்தில் பவுல் குறிப்பிட்டார். (வெளி. 17:5) ஆனாலும், யெகோவாவின் நாள் ஆரம்பிப்பதற்குச் சற்று முன்பு அரசியல் தலைவர்கள், “சமாதானம், பாதுகாப்பு!” என்று அறிவிப்பு செய்வார்கள். அது ஒரேவொரு அறிவிப்பாக இருக்கலாம், அல்லது தொடர்ச்சியாகச் செய்யப்படும் குறிப்பிடத்தக்க அறிவிப்புகளாக இருக்கலாம். மதத் தலைவர்களும் அந்த அறிவிப்பைச் செய்வார்களா? அவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இருப்பதால் அரசியல் தலைவர்களோடு சேர்ந்து, “சமாதானம் இருக்கிறது!” என்று சொல்லலாம். (எரே. 6:14; 23:16, 17; வெளி. 17:1, 2) சமாதானத்தையும் பாதுகாப்பையும் பற்றிய இந்த அறிவிப்பு யெகோவாவின் நாள் ஆரம்பிக்கப் போவதற்கு அறிகுறியாக இருக்கும். கடவுளுடைய அரசாங்கத்தின் எதிரிகளால் “தப்பிக்கவே முடியாது.”

4. சமாதானம், பாதுகாப்பு பற்றிய தீர்க்கதரிசனத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதால் நாம் எப்படி நன்மை அடைகிறோம்?

4 இந்தத் தீர்க்கதரிசனத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதால் நாம் எப்படி நன்மை அடையலாம்? “நீங்கள் இருட்டில் இருப்பவர்கள் அல்ல; அதனால், வெளிச்சத்தில் திடீரென்று மாட்டிக்கொள்கிற திருடர்களைப் போல் நீங்கள் அந்த நாளில் மாட்டிக்கொள்ள மாட்டீர்கள்” என்று பவுல் எழுதினார். (1 தெ. 5:3, 4) தற்போது நடக்கிற உலகச் சம்பவங்கள் எதற்கு அறிகுறியாக இருக்கின்றன என்று மற்ற மக்களுக்குத் தெரியாது; ஆனால் நமக்குத் தெரியும். சமாதானம், பாதுகாப்பு பற்றிய தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறும்? அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுவரையில் நாம் “விழிப்போடும் தெளிந்த புத்தியோடும் இருக்க வேண்டும்.”—1 தெ. 5:6; செப். 3:8.

மிகுந்த உபத்திரவத்தின் ஆரம்பம்

5. எந்தச் சம்பவம் ‘மிகுந்த உபத்திரவத்தின்’ ஆரம்பமாக இருக்கும்?

5 மதத்தின் மீது தாக்குதல். “‘இதோ! சமாதானம், பாதுகாப்பு!’ என்று அவர்கள் சொல்லும்போது, . . . எதிர்பாராத நேரத்தில் திடீரென்று அவர்களுக்கு அழிவு வரும்” என்று பவுல் எழுதியதை யோசித்துப் பாருங்கள். மின்னல் அடித்தவுடன் இடி சத்தம் கேட்பது போல, “சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பு செய்யப்பட்டவுடன் திடீரென அழிவு வரும். முதலாவதாக, பொய் மத உலகப் பேரரசான “மகா பாபிலோன்” அழிக்கப்படும். இது “விபச்சாரி” என்றும் அழைக்கப்படுகிறது. (வெளி. 17:5, 6, 15) கிறிஸ்தவமண்டலமும் மற்ற எல்லா பொய் மத அமைப்புகளும் அழிக்கப்படும்போது “மிகுந்த உபத்திரவம்” ஆரம்பமாகும். (மத். 24:21; 2 தெ. 2:8) பலருக்கு இந்தச் சம்பவம் அதிர்ச்சியாக இருக்கும். ஏனென்றால், அதுவரை அந்த விபச்சாரி, “நான் ஒரு ராணி . . . நான் ஒருபோதும் துக்கப்பட மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டிருப்பாள். ஆனால், திடீரெனத் தாக்கப்படும்போது தான் தப்புக்கணக்குப் போட்டிருந்ததைப் புரிந்துகொள்வாள். சொல்லப்போனால் “ஒரே நாளில்,” அதாவது திடீரென்று அழிக்கப்படுவாள்.—வெளி. 18:7, 8

6. எது ‘மகா பாபிலோனை’ தாக்கும்?

6 எது ‘மகா பாபிலோனை’ தாக்கும்? ‘பத்துக் கொம்புகளுடைய’ ஒரு “மூர்க்க மிருகம்” அதைத் தாக்கும். அந்த மூர்க்க மிருகம் ஐக்கிய நாட்டுச் சங்கத்தைக் குறிப்பதாக வெளிப்படுத்துதல் புத்தகத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம். பத்துக் கொம்புகள் எதைக் குறிக்கின்றன? “கருஞ்சிவப்பு நிறமுள்ள” அந்த மூர்க்க மிருகத்துக்கு தற்போது ஆதரவு கொடுக்கிற எல்லா அரசியல் அமைப்புகளையும் குறிக்கின்றன. (வெளி. 17:3, 5, 11, 12) அந்தத் தாக்குதல் எந்தளவுக்குப் பயங்கரமாக இருக்கும்? ஐக்கிய நாட்டு சங்கத்தின் பாகமாக இருக்கும் நாடுகள், அந்த விபச்சாரியின் செல்வத்தைச் சூறையாடி, “அவளுடைய சதையைத் தின்று, அவளை நெருப்பில் முழுவதுமாகச் சுட்டெரித்துவிடும்” என்று பைபிள் சொல்கிறது.வெளிப்படுத்துதல் 17:16-ஐ வாசியுங்கள். a

7. மத்தேயு 24:21, 22-ல் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகள் முதல் நூற்றாண்டில் எப்படி நிறைவேறின, எதிர்காலத்தில் எப்படி நிறைவேறும்?

7 அந்த நாட்கள் குறைக்கப்படும். மிகுந்த உபத்திரவத்தின் இந்தக் கட்டத்தில் என்ன நடக்கும் என்று நம் ராஜா தெரியப்படுத்தியிருக்கிறார். “தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்காக அந்த நாட்கள் குறைக்கப்படும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:21, 22-ஐ வாசியுங்கள்.) கி.பி. 66-ல், எருசலேம்மீது ரோமப் படை நடத்திய தாக்குதலை யெகோவா ‘குறைத்தபோது,’ அதாவது நிறுத்தியபோது, இயேசு சொன்ன வார்த்தைகள் சிறிய அளவில் நிறைவேறின. (மாற். 13:20) அதனால், எருசலேமிலும் யூதேயாவிலும் இருந்த கிறிஸ்தவர்களால் தங்களுடைய உயிரைப் பாதுகாத்துக்கொள்ள முடிந்தது. அப்படியானால், வரப்போகும் மிகுந்த உபத்திரவத்தின்போது உலகளவில் என்ன சம்பவங்கள் நடக்கும்? மதங்கள்மீது ஐக்கிய நாடுகள் நடத்தும் தாக்குதலை, நம் ராஜா மூலமாக யெகோவா ‘குறைப்பார்,’ அதாவது நிறுத்துவார். அதனால், பொய் மதத்தோடு சேர்ந்து உண்மை மதம் அழிக்கப்படாது. எல்லா பொய் மத அமைப்புகளும் அழிக்கப்படும்போது, உண்மை மதம் மட்டும் நிலைத்திருக்கும். (சங். 96:5) மிகுந்த உபத்திரவத்தின் இந்த ஆரம்பக் கட்டத்துக்குப் பிறகு என்ன சம்பவங்கள் நடக்கும் என்று இப்போது பார்க்கலாம்.

அர்மகெதோனுக்கு முன் நடக்கும் சம்பவங்கள்

8, 9. உண்மையிலேயே வானத்தில் அற்புதமான நிகழ்வுகள் நடக்கும் என்று இயேசு குறிப்பிட்டாரா, அதைப் பார்த்து மக்கள் என்ன செய்வார்கள்?

8 அர்மகெதோனுக்கு முன் சில முக்கியமான சம்பவங்கள் நடக்கும் என்று கடைசி நாட்களைப் பற்றிய தீர்க்கதரிசனத்தில் இயேசு குறிப்பிட்டார். அவற்றில் முதல் இரண்டு சம்பவங்களைப் பற்றி மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய சுவிசேஷப் புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ளன. அதைப் பற்றி நாம் பார்க்கலாம்.மத்தேயு 24:29-31-ஐ வாசியுங்கள்; மாற். 13:23-27; லூக். 21:25-28.

9 வானத்தில் நடக்கும் அற்புதமான நிகழ்வுகள். “சூரியன் இருண்டுவிடும், சந்திரன் ஒளி கொடுக்காது, வானத்திலிருந்து நட்சத்திரங்கள் விழும்” என்று இயேசு முன்னறிவித்தார். இதன் அர்த்தம் என்ன? மக்கள் ஆன்மீக ஒளியைத் தேடி, அதாவது வழிநடத்துதலைத் தேடி, மதத் தலைவர்களிடம் போக மாட்டார்கள். ஏனென்றால், மதங்களின் அழிவுக்குப் பிறகு யாரும் அவர்களை மதத் தலைவர்களாகக் கருத மாட்டார்கள். உண்மையிலேயே வானத்தில் அற்புதமான நிகழ்வுகள் நடக்கும் என்று இயேசு குறிப்பிட்டாரா? ஒருவேளை அவர் அதையும் அர்த்தப்படுத்தியிருக்கலாம். (ஏசா. 13:9-11; யோவே. 2:1, 30, 31) அந்த அற்புதமான நிகழ்வுகளைப் பார்த்து மக்கள் என்ன செய்வார்கள்? அவர்கள், “என்ன செய்வதென்று தெரியாமல் . . . தத்தளிப்பார்கள்.” (லூக். 21:25; செப். 1:17) “என்ன நடக்குமோ என்ற பயத்தில்” கடவுளுடைய அரசாங்கத்தின் எதிரிகளுக்கு “தலைசுற்றும்.” அவர்கள் ‘ராஜாக்களாக’ இருந்தாலும் சரி, ‘அடிமைகளாக’ இருந்தாலும் சரி, பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடுவார்கள். ஆனாலும், மறைந்துகொள்ள பாதுகாப்பான எந்த இடமும் அவர்களுக்குக் கிடைக்காது. நம் ராஜாவின் கோபத்திலிருந்து அவர்களால் தப்பிக்கவே முடியாது.—லூக். 21:26; 23:30; வெளி. 6:15-17.

10. இயேசு என்ன தீர்ப்பு வழங்குவார், அதைக் கேட்டு கடவுளுடைய அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் என்ன செய்வார்கள், அதன் எதிரிகள் என்ன செய்வார்கள்?

10 செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பிரிப்பது. அடுத்ததாக, கடவுளுடைய அரசாங்கத்தின் எதிரிகள் எல்லாரும் ஒரு சம்பவத்தைப் பார்க்க வேண்டியிருக்கும். அது அவர்களுடைய வேதனையை இன்னும் அதிகமாக்கும். “மனிதகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களில் வருவதை அவர்கள் பார்ப்பார்கள்” என்று இயேசு சொன்னார். (மாற். 13:26) அந்தக் காட்சி, இயேசு தீர்ப்பளிக்க வந்திருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இருக்கும். அந்தத் தீர்ப்பைப் பற்றிய கூடுதலான விவரங்களை, கடைசி நாட்களைப் பற்றிய அதே தீர்க்கதரிசனத்தில் இயேசு சொன்னார். செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய உவமையிலிருந்து இதை நாம் தெரிந்துகொள்ளலாம். (மத்தேயு 25:31-33, 46-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையோடு ஆதரவு கொடுப்பவர்கள் ‘செம்மறியாடுகளாக’ தீர்ப்பளிக்கப்படுவார்கள். அவர்கள் தங்களுடைய ‘விடுதலை நெருங்கிவிட்டது’ என்பதை அறிந்து தங்கள் ‘தலைகளை உயர்த்துவார்கள்.’ (லூக். 21:28) ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தின் எதிரிகள் ‘வெள்ளாடுகளாக’ தீர்ப்பளிக்கப்படுவார்கள். தாங்கள் ‘நிரந்தரமாக அழிக்கப்படப்போவதை’ நினைத்து “நெஞ்சில் அடித்துக்கொண்டு புலம்புவார்கள்.”—மத். 24:30; வெளி. 1:7.

11. நடக்கவிருக்கும் சம்பவங்களைப் பற்றி நாம் சிந்திக்கும்போது எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்?

11 ‘எல்லா தேசத்தாரையும்’ அவர் வெள்ளாடுகளாகவும் செம்மறியாடுகளாகவும் பிரித்த பிறகு, சில முக்கியமான சம்பவங்கள் நடக்கும். அது அர்மகெதோன் போர் ஆரம்பிப்பதற்கு முன்பு நடக்கும். (மத். 25:32) அவற்றில் இரண்டு சம்பவங்களை இப்போது பார்க்கலாம். ஒன்று, கோகுவின் தாக்குதல். மற்றொன்று, பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் கூட்டிச்சேர்க்கப்படுவது. இந்த இரண்டு சம்பவங்களைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, இவை நடக்க வேண்டிய சமயத்தைப் பற்றி பைபிள் திட்டவட்டமாகக் குறிப்பிடுவதில்லை என்பதை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். சொல்லப்போனால், ஒரு சம்பவம் நடந்து முடிவதற்குள் அடுத்த சம்பவம் நடக்க ஆரம்பிக்கலாம்.

12. கடவுளுடைய அரசாங்கத்துக்கு எதிராக முழுவீச்சோடு தாக்குதல் நடத்த சாத்தான் என்ன செய்வான்?

12 முழுவீச்சோடு நடத்தப்படும் தாக்குதல். பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் மீதியானோரையும் அவர்களுடைய தோழர்களான வேறே ஆடுகளையும் தாக்க, மாகோகு தேசத்தின் கோகுவை சாத்தான் தூண்டிவிடுவான். (எசேக்கியேல் 38:2, 11-ஐ வாசியுங்கள்.) பரலோகத்திலிருந்து சாத்தான் பூமிக்குத் தள்ளப்பட்ட பிறகு, கடவுளுடைய அரசாங்கத்துக்கு எதிராக அவன் நடத்தியிருக்கும் தாக்குதல்களில் இது கடைசி தாக்குதலாக இருக்கும். அதாவது, பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் மீதியானோருக்கு எதிராக அவன் நடத்திவருகிற தாக்குதல்களில் கடைசி தாக்குதலாக இருக்கும். (வெளி. 12:7-9, 17) முக்கியமாக, சுத்திகரிக்கப்பட்ட கிறிஸ்தவச் சபைக்கு பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் கூட்டிச்சேர்க்கப்பட ஆரம்பித்ததிலிருந்து, அவர்கள் அனுபவிக்கிற ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் குலைத்துப்போட சாத்தான் முயற்சி செய்திருக்கிறான். ஆனால், அவனுடைய முயற்சிகளெல்லாம் வீணாகத்தான் போயிருக்கின்றன. (மத். 13:30) இருந்தாலும், எல்லா பொய் மத அமைப்புகளும் அழிக்கப்பட்ட பிறகு கடவுளுடைய மக்கள் “மதில்களோ கதவுகளோ தாழ்ப்பாள்களோ” இல்லாமல், அதாவது எந்தப் பாதுகாப்பும் இல்லாமல், வாழ்வதுபோல் சாத்தானுக்குத் தோன்றும். அவர்களைத் தாக்குவதற்கு அதுதான் சரியான சமயம் என்று அவன் நினைப்பான். கடவுளுடைய அரசாங்கத்துக்கு ஆதரவு காட்டுகிறவர்களை முழுவீச்சோடு தாக்குவதற்கு அவன் பொல்லாத மனித அரசாங்கங்களைத் தூண்டிவிடுவான்.

13. தன்னுடைய மக்களின் சார்பாக யெகோவா என்ன செய்வார்?

13 இந்தத் தாக்குதல் எப்படி நடக்கும் என்று எசேக்கியேல் சொல்கிறார். ‘வடகோடியில் இருக்கிற உன்னுடைய இடத்திலிருந்து நிறைய ஆட்களோடு நீ வருவாய். அவர்கள் எல்லாருமே மாபெரும் படையாகவும் பெரிய கூட்டமாகவும் குதிரைகளின் மேல் வருவார்கள். தேசத்தை மூடுகிற மேகம் போல நீ என்னுடைய ஜனங்களுக்கு எதிராக வருவாய்’ என்று கோகுவைப் பற்றி எசேக்கியேல் தீர்க்கதரிசனம் சொல்கிறது. (எசே. 38:15, 16) இந்தத் தாக்குதலை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது என்று தோன்றலாம். ஆனால், யெகோவா என்ன செய்வார்? “என்னுடைய கோபம் நெருப்பாகப் பற்றியெரியும்” என்றும் “ஒரு வாளை வர வைப்பேன்” என்றும் யெகோவா சொல்கிறார். (எசே. 38:18, 21; சகரியா 2:8-ஐ வாசியுங்கள்.) ஆம், பூமியிலுள்ள தன்னுடைய மக்களின் சார்பாக யெகோவா குறுக்கிடுவார். அதுதான் அர்மகெதோன் போர்.

14, 15. முழுவீச்சோடு சாத்தான் தாக்க ஆரம்பிப்பதற்கும் அர்மகெதோனுக்கும் இடைப்பட்ட ஒரு கட்டத்தில் வேறு என்ன சம்பவமும் நடக்கும்?

14 அர்மகெதோன் போரின்போது யெகோவா தன்னுடைய மக்களை எப்படிப் பாதுகாப்பார் என்பதைச் சிந்திப்பதற்கு முன், இரண்டாவது முக்கியமான சம்பவத்தைப் பார்க்கலாம். இந்தச் சம்பவம், முழுவீச்சோடு சாத்தான் தாக்க ஆரம்பிப்பதற்கும், அர்மகெதோன் போரின்போது யெகோவா தன்னுடைய மக்களின் சார்பாக குறுக்கிட ஆரம்பிப்பதற்கும் இடைப்பட்ட ஒரு கட்டத்தில் நடக்கும். 11-வது பாராவில் பார்த்தபடி, பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் மீதியானோரைக் கூட்டிச்சேர்ப்பதுதான் இந்த இரண்டாவது சம்பவம்.

15 பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் கூட்டிச்சேர்க்கப்படுவது. ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை’ பற்றி, அதாவது கடவுளுடைய சக்தியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களைப் பற்றி, இயேசு சொன்னது மத்தேயு மற்றும் மாற்கு சுவிசேஷங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அர்மகெதோன் போருக்கு முன் அடுத்தடுத்து நடக்க வேண்டிய சம்பவங்களில் இதுவும் ஒன்று. (பாரா 7-ஐப் பாருங்கள்.) தான் ராஜாவாக வரும்போது செய்யப்போவதைப் பற்றி இயேசு இப்படி முன்னறிவித்தார்: “அவர் தேவதூதர்களை அனுப்பி, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பூமியின் ஒரு முனையிலிருந்து வானத்தின் மறுமுனைவரை நான்கு திசைகளிலிருந்தும் கூட்டிச்சேர்ப்பார்.” (மாற். 13:27; மத். 24:31) கூட்டிச்சேர்ப்பது பற்றி இந்த வசனத்தில் இயேசு குறிப்பிட்டதன் அர்த்தம் என்ன? மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு சற்று முன்பு பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் மீதியானோர் பெற்றுக்கொள்ளும் கடைசி முத்திரையைப் பற்றி இயேசு இங்கு குறிப்பிடவில்லை. (வெளி. 7:1-3) அதற்குப் பதிலாக, மிகுந்த உபத்திரவத்தின்போது நடக்கும் ஒரு சம்பவத்தைப் பற்றியே குறிப்பிட்டார். கடவுளுடைய மக்கள்மீது சாத்தான் முழுவீச்சோடு தாக்குதலை ஆரம்பித்த பிறகு ஒரு கட்டத்தில் பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் மீதியானோர் பரலோகத்தில் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள்.

16. அர்மகெதோன் போரின்போது உயிர்த்தெழுப்பட்ட பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் என்ன செய்வார்கள்?

16 பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் மீதியானோர் அர்மகெதோனுக்கு முன்பே கூட்டிச்சேர்க்கப்படுவார்களா? அவர்கள் கூட்டிச்சேர்க்கப்படும் சமயத்தை வைத்துப் பார்க்கும்போது, கடவுளுடைய போரான அர்மகெதோன் ஆரம்பிப்பதற்கு முன் அவர்கள் எல்லாரும் பரலோகத்தில் இருப்பார்கள் என்று தெரிந்துகொள்கிறோம். கிறிஸ்துவுடன் சேர்ந்து கடவுளுடைய அரசாங்கத்தின் எதிரிகளை “இரும்புக் கோலால்” அழிப்பதற்கான அதிகாரத்தை அவருடன் பரலோகத்தில் ஆட்சி செய்யப்போகும் 1,44,000 பேர் பெற்றுக்கொள்வார்கள். (வெளி. 2:26, 27) அதன் பிறகு, யெகோவாவின் மக்களைத் தாக்கப்போகும் எதிரிகளின் ‘மாபெரும் படையை’ மாவீரரும் ராஜாவுமான கிறிஸ்து, நேருக்கு நேர் எதிர்த்துப் போரிட புறப்பட்டுச் செல்வார். (எசே. 38:15) அப்போது, உயிர்த்தெழுப்பட்ட பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் வல்லமையுள்ள தேவதூதர்களோடு சேர்ந்து அவரைப் பின்தொடர்ந்து போவார்கள். அந்த நேருக்கு நேர் மோதலோடு அர்மகெதோன் போர் ஆரம்பமாகும்.—வெளி. 16:16.

மிகுந்த உபத்திரவத்தின் மாபெரும் உச்சக்கட்டம்

அர்மகெதோன் போர் ஆரம்பிக்கிறது!

17. அர்மகெதோனின்போது ‘வெள்ளாடுகளுக்கு’ என்ன நடக்கும்?

17 தீர்ப்பு நிறைவேற்றப்படுகிறது. அர்மகெதோன் போர், மிகுந்த உபத்திரவத்தின் உச்சக்கட்டமாக இருக்கும். அந்தச் சமயத்தில் இயேசு இன்னொரு பொறுப்பையும் எடுத்துக்கொள்வார். அவர் ‘எல்லா தேசத்தாருக்கும்,’ அதாவது ‘வெள்ளாடுகளாக’ ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்ட எல்லாருக்கும், நீதிபதியாக இருப்பதோடு அவர் கொடுத்த தீர்ப்பை நிறைவேற்றுபவராகவும் இருப்பார். (மத். 25:32, 33) நம் ராஜா, ‘கூர்மையான நீண்ட வாளால்’ ‘தேசத்தாரை வெட்டிப் போடுவார்.’ ஆம், வெள்ளாடுகளைப் போல் இருக்கும் எல்லாரும், ‘ராஜாக்களாக’ இருந்தாலும் சரி, ‘அடிமைகளாக’ இருந்தாலும் சரி, “நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள்.”—வெளி. 19:15, 18; மத். 25:46.

18. (அ) ‘செம்மறியாடுகளாக’ தீர்ப்பளிக்கப்படுகிறவர்கள் ஏன் சந்தோஷப்படுவார்கள்? (ஆ) இயேசு தன்னுடைய வெற்றியை முழுமையாக்க என்ன செய்வார்?

18 ‘செம்மறியாடுகளாக’ தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! ஒரு கட்டத்தில் அவர்கள் பாதுகாப்பே இல்லாத நிலையில், அதாவது ‘வெள்ளாடுகளாக’ இருக்கும் சாத்தானின் பெரிய படையால் மிதிக்கப்படும் நிலையில் இருப்பார்கள். ஆனால், ‘திரள் கூட்டத்தாரான’ இந்த ‘செம்மறியாடுகள்’ எதிரியின் தாக்குதலிலிருந்து தப்பித்து “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” வெளியே வருவார்கள். (வெளி. 7:9, 14) அடுத்து, கடவுளுடைய அரசாங்கத்தின் எல்லா எதிரிகளையும் இயேசு தோற்கடிப்பார்; சாத்தானையும் அவனுடைய பேய்களையும் அதலபாதாளத்தில் தள்ளுவார். அங்கே அவர்கள் ஆயிரம் வருஷங்களுக்கு செத்த நிலையில், அதாவது செயலற்ற நிலையில் இருப்பார்கள்.வெளிப்படுத்துதல் 6:2; 20:1-3-ஐ வாசியுங்கள்.

நம்மை எப்படித் தயார்படுத்திக்கொள்ளலாம்?

19, 20. ஏசாயா 26:20; 30:21-ல் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

19 அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவங்கள் சீக்கிரத்தில் நடக்கப்போவதால், அதற்காக நம்மை எப்படித் தயார்படுத்திக்கொள்ளலாம்? “கீழ்ப்படிதலை சார்ந்தே தப்பிப்பிழைத்தல் சாத்தியமாகும்” என சில வருஷங்களுக்கு முன் வெளிவந்த காவற்கோபுரம் குறிப்பிட்டது. ஏன்? பூர்வ பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன யூதர்களுக்கு யெகோவா கொடுத்த எச்சரிப்பிலிருந்து இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ளலாம். பாபிலோன் கைப்பற்றப்படும் என்று யெகோவா முன்னறிவித்திருந்தார். அந்தச் சம்பவத்துக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள கடவுளுடைய மக்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது? “என் ஜனங்களே, உங்களுடைய உள்ளறைகளுக்குப் போங்கள். கதவுகளை அடைத்துக்கொள்ளுங்கள். கடவுளுடைய கோபம் தீரும்வரை கொஞ்ச நேரத்துக்கு ஒளிந்துகொள்ளுங்கள்” என்று யெகோவா சொன்னார். (ஏசா. 26:20) இந்த வசனத்தில் “போங்கள்,” “அடைத்துக்கொள்ளுங்கள்,” “ஒளிந்துகொள்ளுங்கள்” என்ற வார்த்தைகளைக் கவனிக்கிறோம்; அவையெல்லாம் கட்டளைகள். அந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்த யூதர்கள் தங்களுடைய வீடுகளிலேயே இருந்திருப்பார்கள். தெருக்களில் ஆட்களைக் கொன்று குவித்துக்கொண்டிருந்த போர் வீரர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தப்பிப்பதும் தப்பிக்காமல் போவதும் யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைப் பொறுத்தே இருந்தது. b

20 இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? அன்று வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்களின் விஷயத்தில் பார்த்தது போலவே, சீக்கிரத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களிலிருந்து நாம் தப்பிப்பதும் தப்பிக்காமல் போவதும் யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைப் பொறுத்தே இருக்கிறது. (ஏசா. 30:21) இந்தக் கட்டளைகள் இன்று நமக்கு சபையின் மூலமாகக் கிடைக்கின்றன. அதனால், நமக்குக் கிடைக்கும் ஆலோசனைகளுக்கு முழு மனதோடு இப்போதே கீழ்ப்படியக் கற்றுக்கொள்ள வேண்டும். (1 யோ. 5:3) அப்படிச் செய்தால், எதிர்காலத்தில் கீழ்ப்படிவது ரொம்பச் சுலபமாக இருக்கும். அப்போது, நம் தகப்பனான யெகோவாவும் நம் ராஜாவான இயேசுவும் தரும் பாதுகாப்பை அனுபவிப்போம். (செப். 2:3) அப்படிப் பாதுகாக்கப்படும்போது, கடவுளுடைய அரசாங்கம் எதிரிகளை அடியோடு ஒழித்துக்கட்டுவதை நாம் பார்ப்போம். அது நம் நெஞ்சைவிட்டு ஒருபோதும் நீங்காது!

a ‘மகா பாபிலோனின்’ அழிவு, முக்கியமாக, பொய் மதங்களின் அழிவையே குறிக்கிறது. பொய் மதங்களைச் சேர்ந்த எல்லா மக்களையும் ஒட்டுமொத்தமாகக் கொன்றுகுவிப்பதைக் குறிப்பதில்லை. மகா பாபிலோனின் அழிவுக்குப் பிறகு, அதிலிருந்து தப்பிக்கிற பெரும்பாலானவர்கள் சகரியா 13:4-6-ல் சொல்லப்பட்டிருப்பதைப் போல தங்களுக்கும் மதத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை வெளிப்படையாகக் காட்ட முயற்சி செய்யலாம்.