Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 22

கடவுளுடைய அரசாங்கம் அவருடைய விருப்பத்தைப் பூமியில் நிறைவேற்றுகிறது

கடவுளுடைய அரசாங்கம் அவருடைய விருப்பத்தைப் பூமியில் நிறைவேற்றுகிறது

அதிகாரத்தின் முக்கியக் குறிப்பு

மனிதர்கள் மற்றும் பூமி சம்பந்தமாக கடவுள் கொடுத்திருக்கிற எல்லா வாக்குறுதிகளையும் அவருடைய அரசாங்கம் நிறைவேற்றுகிறது

1, 2. (அ) பூஞ்சோலைப் பூமி நிச்சயம் வரும் என்பதை நினைத்துப்பார்ப்பது சிலசமயம் ஏன் கஷ்டமாக இருக்கலாம்? (ஆ) கடவுளுடைய வாக்குறுதிகள்மீது நமக்கிருக்கும் விசுவாசத்தைப் பலப்படுத்த எது உதவும்?

 கடவுள்பக்தியுள்ள ஒரு சகோதரர் நாள் முழுக்க வேலை செய்துவிட்டு சபைக் கூட்டத்துக்கு ரொம்பக் களைப்பாக வருகிறார். வேலை செய்யும் இடத்தில் அவருடைய முதலாளி படுத்தும் பாடு... குடும்பத்தைப் பராமரிப்பதில் இருக்கும் சவால்கள்... மனைவிக்கு இருக்கும் வியாதி... இவையெல்லாம் அவருடைய மனதை வாட்டினாலும் அவர் கூட்டத்துக்கு வந்திருக்கிறார். ஆரம்பப் பாடலுக்கான இசையைக் கேட்டதும் அவர் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். சகோதர சகோதரிகளுடன் ராஜ்ய மன்றத்தில் இருப்பதை நினைத்துச் சந்தோஷப்படுகிறார். அந்தப் பாடல் பூஞ்சோலைப் பூமியில் கிடைக்கப்போகும் வாழ்க்கை பற்றியது. அதன் வரிகள் பூஞ்சோலைப் பூமியில் இருப்பதுபோல் கற்பனை செய்துபார்க்க அவரைத் தூண்டுகிறது. இது அவருக்கு ரொம்பப் பிடித்த பாடல். பல கஷ்டங்கள் மத்தியிலும், குடும்பத்தோடு சேர்ந்து அதைப் பாடும்போது அது அவருடைய மனதுக்கு ஆறுதலைத் தருகிறது.

2 உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருந்திருக்கிறதா? நம்மில் நிறைய பேருக்கு இந்த அனுபவம் இருந்திருக்கும். இன்று நம் வாழ்க்கை, பிரச்சினைகளால் நிறைந்திருப்பதால் பூஞ்சோலைப் பூமி நிச்சயம் வரும் என்பதை நினைத்துப்பார்ப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். உண்மையிலேயே, பூஞ்சோலைப் பூமிக்கு நேர்மாறான ஒரு உலகத்தில் நாம் வாழ்கிறோம். இன்று, ‘சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கிறது.’ (2 தீ. 3:1) அப்படியானால், பூஞ்சோலைப் பூமி நிச்சயம் வரும் என்று நம்புவதற்கு எது நமக்கு உதவும்? கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் பூமியை ஆட்சி செய்யும் என்று நாம் எப்படி உறுதியாக நம்பலாம்? யெகோவா சொன்ன தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியதை கடந்த காலத்தில் வாழ்ந்த அவருடைய மக்கள் கண்கூடாகப் பார்த்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இப்போது நாம் பார்க்கலாம். பிறகு, அந்தத் தீர்க்கதரிசனங்களும் அதுபோன்ற மற்ற தீர்க்கதரிசனங்களும் இன்று எப்படி நிறைவேறி வருகின்றன என்று பார்க்கலாம். அவை நம் நம்பிக்கையைப் பலப்படுத்தும். கடைசியாக, அந்தத் தீர்க்கதரிசனங்கள் எதிர்காலத்தில் எப்படி நிறைவேறும் என்பதையும் பார்ப்போம்.

கடந்த காலத்தில் யெகோவா தன் வாக்குறுதிகளை நிறைவேற்றிய விதம்

3. சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனில் இருந்த யூதர்களுக்கு எந்த வாக்குறுதி ஆறுதலாக இருந்தது?

3 கி.மு. ஆறாம் நூற்றாண்டில், சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனில் இருந்த யூதர்களின் வாழ்க்கையைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். நிறைய பேர் தங்களுடைய பெற்றோரைப் போலவே சிறையிருப்பில்தான் வளர்ந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கை கஷ்டமாக இருந்தது. யெகோவாவை வணங்கியதற்காக, பாபிலோன் மக்கள் அவர்களைக் கேலி செய்தார்கள். (சங். 137:1-3) ஆனாலும், உண்மையுள்ள யூதர்கள் சிறையிருப்பில் இருந்த காலமெல்லாம் ஒரு விஷயத்தை மனதில் பசுமையாக வைத்திருந்தார்கள். தங்களுடைய தாய்நாட்டுக்குத் திரும்பக் கூட்டிக்கொண்டு போவதாக யெகோவா கொடுத்திருந்த வாக்குறுதிதான் அது. தாய்நாட்டில் நிலைமை ரொம்ப அருமையாக இருக்கும் என்று யெகோவா சொல்லியிருந்தார். யூதா தேசம் ஏதேன் தோட்டத்தைப் போல, அதாவது ஒரு பூஞ்சோலையைப் போல ஆகும் என்று சொன்னார். (ஏசாயா 51:3-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய மக்களின் நம்பிக்கையைப் பலப்படுத்துவதற்காகவே அந்த வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. அவர்களுடைய மனதைக் குடைந்துகொண்டிருந்த சந்தேகங்களை அந்த வாக்குறுதிகள் போக்கியிருக்கும். எப்படி? சில தீர்க்கதரிசனங்களைக் கவனியுங்கள்.

4. தாய்நாட்டுக்குத் திரும்பும் யூதர்களுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பு இருக்கும் என்று யெகோவா சொன்னார்?

4 பாதுகாப்பு. பாபிலோனில் இருந்த யூதர்கள், நிஜமாகவே ஒரு பூஞ்சோலைக்கு அல்ல, 70 வருஷங்களுக்குப் பாழாய்க் கிடந்த இடத்துக்குத்தான் திரும்பி வரவிருந்தார்கள். அவர்களில் சிலர் அந்த இடத்தை இதற்குமுன் பார்த்ததுகூட கிடையாது. அப்போதெல்லாம் சிங்கம், ஓநாய், சிறுத்தை போன்ற கொடிய மிருகங்கள் அந்த இடங்களில் சகஜமாகச் சுற்றித் திரிந்தன. அதனால், ஒரு குடும்பத் தலைவர் இப்படி நினைத்திருக்கலாம்: ‘என் மனைவி, பிள்ளைகளுக்கு எந்த ஆபத்தும் வராமல் எப்படிப் பார்த்துக்கொள்வேன்? என் ஆடுமாடுகளை எப்படிப் பாதுகாப்பேன்?’ அப்படி நினைப்பது இயல்புதான். ஆனால், ஏசாயா 11:6-9-லுள்ள கடவுளின் வாக்குறுதியை யோசித்துப் பாருங்கள். (வாசியுங்கள்.) அது அவர்களுக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும் என்றும் நினைத்துப் பாருங்கள். கவிதை நடையில் சொல்லப்பட்டுள்ள அந்த வார்த்தைகள் மூலம் யெகோவா அவர்களுக்கு நம்பிக்கை அளித்தார். அவர்களையும் அவர்களுடைய ஆடுமாடுகளையும் பாதுகாப்பதாக வாக்குக் கொடுத்தார். சிங்கம் வைக்கோலைத் தின்னும் என்ற வார்த்தைகளின் அர்த்தம் என்ன? யூதர்களின் ஆடுமாடுகளை அது ஒன்றும் செய்யாது என்பதையே அந்த வார்த்தைகள் அர்த்தப்படுத்தின. உண்மையுள்ள யூதர்கள் அந்தக் கொடிய மிருகங்களைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது. ஏனென்றால், தாய்நாட்டுக்குத் திரும்பிவரும் யூதர்கள், வனாந்தரத்திலும் காடுகளிலும்கூட பாதுகாப்பாக இருப்பார்கள் என்று யெகோவா வாக்குக் கொடுத்தார்.—எசே. 34:25.

5. யெகோவா ஏராளமாக உணவு கொடுப்பார் என்பதை நம்ப எந்தத் தீர்க்கதரிசனங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பும் யூதர்களுக்கு உதவின?

5 ஏராளமான உணவு. அவர்களுக்கு வேறு கவலைகளும் இருந்திருக்கும். ‘தாய்நாட்டுக்குப் போன பிறகு, என் குடும்பத்துக்கு உணவளிக்க என்ன செய்வேன்? எங்கே குடியிருப்போம்? எனக்கு ஏதாவது வேலை இருக்குமா? பாபிலோனியர்களுடைய ஆதிக்கத்தில் இருந்ததைவிட வாழ்க்கை நன்றாக இருக்குமா?’ என்றெல்லாம் அவர்கள் யோசித்திருக்கலாம். இப்படிப்பட்ட கேள்விகளுக்குக்கூட தன்னுடைய தீர்க்கதரிசி மூலம் யெகோவா பதிலளித்தார். கீழ்ப்படிதலுள்ள தன் மக்களுக்கு ஏற்ற காலத்தில் மழையைக் கொடுப்பதாக யெகோவா வாக்குக் கொடுத்தார். அதனால், “நிலத்திலிருந்து சத்தான உணவுப் பொருள்கள் ஏராளமாக விளையும்.” (ஏசா. 30:23) வீடு மற்றும் வேலை சம்பந்தமாக யெகோவா இந்த வாக்குறுதியைக் கொடுத்தார்: “ஜனங்கள் வீடுகளைக் கட்டி அதில் குடியிருப்பார்கள். திராட்சைத் தோட்டங்களை அமைத்து அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள். ஒருவர் கட்டும் வீட்டில் இன்னொருவர் குடியிருக்க மாட்டார். ஒருவருடைய தோட்டத்தின் விளைச்சலை இன்னொருவர் சாப்பிட மாட்டார்.” (ஏசா. 65:21, 22) ஆம், பாபிலோனில் வாழ்ந்த வாழ்க்கையைவிட யூதா தேசத்தில் அவர்களுடைய வாழ்க்கை பல விதங்களில் சிறந்ததாக இருக்கும். ஆனால், அவர்கள் சிறைப்பட்டுப் போவதற்கு காரணமாக இருந்த முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி என்ன சொல்லலாம்? அதை இப்போது பார்க்கலாம்.

6. ரொம்பக் காலமாகவே யூதர்கள் எந்த விதத்தில் வியாதிப்பட்டிருந்தார்கள், ஆனால், தாய்நாட்டுக்குத் திரும்பும் யூதர்களுக்கு யெகோவா என்ன வாக்குக் கொடுத்தார்?

6 ஆன்மீக ஆரோக்கியம். கடவுளுடைய மக்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போவதற்கு முன்பே ஆன்மீக விதத்தில் வியாதிப்பட்டிருந்தார்கள். ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா தன்னுடைய மக்களிடம் இப்படிச் சொன்னார்: “உங்கள் தலை முழுக்க புண் வந்திருக்கிறது. இதயம் முழுக்க கோளாறு இருக்கிறது.” (ஏசா. 1:5) ஆன்மீக விதத்தில், அவர்கள் குருடர்களாகவும் செவிடர்களாகவும் இருந்தார்கள். எப்படியென்றால், அவர்கள் யெகோவாவின் ஆலோசனைகளைக் கேட்காமல் தங்களுடைய காதுகளை அடைத்துக்கொண்டார்கள்; அவர் கொடுத்த அறிவொளியைப் பார்க்காமல் தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள். (ஏசா. 6:10; எரே. 5:21; எசே. 12:2) தாய்நாட்டுக்குத் திரும்பும் யூதர்களுக்கு இதே பிரச்சினைகள் இருந்தால், தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்க முடியுமா? அவர்கள் மறுபடியும் யெகோவாவின் தயவை இழந்துவிடுவார்கள், இல்லையா? யெகோவா கொடுத்த இந்த வாக்குறுதி அவர்களுக்கு நிச்சயம் நம்பிக்கை அளித்திருக்கும்: “அந்த நாளில், காது கேட்காதவர்களுக்கு அந்தப் புத்தகத்தின் வார்த்தைகள் கேட்கும். பார்வை இல்லாதவர்களின் கண்கள் இருளைவிட்டு நீங்கி பார்வை அடையும்.” (ஏசா. 29:18) ஆம், தண்டனையைப் பெற்று திருந்திய மக்களை ஆன்மீக விதத்தில் யெகோவா குணமாக்குவார். அவர் சொல்வதைக் கேட்டு, அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்வரையில், அவர்களுக்குத் தேவையான வழிநடத்துதலையும் அறிவொளியையும் யெகோவா கொடுப்பார். வாழ்வுக்கான பாதையில் தொடர்ந்து நடக்க அது அவர்களுக்கு உதவும்.

7. நாடுகடத்தப்பட்ட தன்னுடைய மக்களுக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதிகள் எப்படி நிறைவேறின, அதனால் நம்முடைய விசுவாசம் ஏன் பலப்படுகிறது?

7 யெகோவா தன்னுடைய மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினாரா? தாய்நாட்டுக்குத் திரும்பிய யூதர்களின் சரித்திரம் இதற்குப் பதில் சொல்கிறது. அவர்களுக்குப் பாதுகாப்பு, ஏராளமான உணவு, ஆன்மீக ஆரோக்கியம் போன்றவற்றைக் கொடுத்து யெகோவா ஆசீர்வதித்தார். உதாரணத்துக்கு, சுற்றியிருந்த மக்கள் பலசாலிகளாகவும் எண்ணிக்கையில் அதிகமானவர்களாகவும் இருந்தபோதிலும் அவர்களிடமிருந்து யூதர்களை யெகோவா பாதுகாத்தார். அவர்களுடைய ஆடுமாடுகள் கொடிய மிருகங்களுக்கு இரையாகவில்லை. பூஞ்சோலை வாழ்க்கை பற்றி ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் ஆகியோர் எழுதிய தீர்க்கதரிசனங்களின் சிறியளவு நிறைவேற்றத்தைத்தான் அந்த யூதர்கள் பார்த்தார்கள். ஆனாலும், அந்தச் சமயத்தில் அவர்களுக்கு என்னவெல்லாம் தேவைப்பட்டதோ அவையெல்லாம் பூர்த்தி செய்யப்பட்டன. அதைப் பார்த்து அவர்கள் பூரித்துப்போனார்கள். அன்று தன் மக்களுக்கு யெகோவா செய்ததை நினைத்துப் பார்க்கும்போது நம்முடைய விசுவாசம் இன்னும் பலப்படும். அந்தத் தீர்க்கதரிசனங்களின் சிறியளவு நிறைவேற்றமே சிலிர்ப்பூட்டும் அளவுக்கு இருந்ததென்றால், அவை பெரியளவில் நிறைவேறும்போது எப்படியிருக்கும்? இன்று நமக்காக யெகோவா என்ன செய்திருக்கிறார் என்று இப்போது பார்க்கலாம்.

நம் காலத்துக்கான தீர்க்கதரிசனங்களை யெகோவா நிறைவேற்ற ஆரம்பிக்கிறார்

8. கடவுளுடைய மக்கள் எப்படிப்பட்ட “தேசத்தில்” வாழ்கிறார்கள்?

8 யெகோவாவின் மக்கள் இன்று ஒரே தேசத்தாராக இல்லை. அவர்கள் ஒரே நாட்டில் வாழ்வதும் இல்லை. அதற்குப் பதிலாக, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் ஒரு ஆன்மீக தேசமாக, ‘கடவுளுடைய இஸ்ரவேலர்களாக’ இருக்கிறார்கள். (கலா. 6:16) அவர்களுடைய தோழர்களான ‘வேறே ஆடுகள்’ அவர்களோடு சேர்ந்து ஒரே தேசத்தாரைப் போல வாழ்கிறார்கள், ஒற்றுமையாக யெகோவாவை வணங்குகிறார்கள். இப்படி வணங்குவது அவர்களுடைய வாழ்க்கையின் முக்கிய அம்சமாக இருக்கிறது. (யோவா. 10:16; ஏசா. 66:8) எப்படிப்பட்ட “தேசத்தை” யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார்? அவர் நமக்கு ஒரு ஆன்மீகப் பூஞ்சோலையைக் கொடுத்திருக்கிறார். ஏதேன் தோட்டத்தைப் போன்ற சூழலைப் பற்றி யெகோவா கொடுத்த வாக்குறுதிகள் ஆன்மீக விதத்தில் இந்தப் பூஞ்சோலையில் நிறைவேறியிருக்கின்றன. சில உதாரணங்களைக் கவனியுங்கள்.

9, 10. (அ) ஏசாயா 11:6-9-ல் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் இன்று எப்படி நிறைவேறிவருகிறது? (ஆ) கடவுளுடைய மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட சமாதானத்தை இன்று பார்க்கிறோம்?

9 பாதுகாப்பு. ஏசாயா 11:6-9-ல் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தில், காட்டு மிருகங்கள் மனிதர்களோடும் வீட்டு விலங்குகளோடும் ஒற்றுமையாக, சமாதானமாக இருப்பதைப் பற்றி அருமையாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இந்த வசனங்கள் இன்று ஆன்மீக விதத்தில் நிறைவேறியிருக்கின்றனவா? ஆம் நிறைவேறியிருக்கின்றன. காட்டு மிருகங்கள் எந்தத் தீங்கும் செய்யாது என்பதற்கான காரணத்தை 9-ஆம் வசனத்தில் பார்க்கிறோம். “கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போல பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்” என்று அது சொல்கிறது. ‘யெகோவாவைப் பற்றிய அறிவு’ மிருகங்களின் சுபாவத்தை மாற்றுமா? இல்லை. மனிதர்களுடைய சுபாவத்தைத்தான் மாற்றும். அவர்கள் உன்னதமான கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவருடைய சமாதானமான வழிகளில் நடக்கக் கற்றுக்கொள்கிறார்கள். அதனால்தான், அந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை நம்முடைய ஆன்மீகப் பூஞ்சோலையில் இன்று பார்க்க முடிகிறது. அது மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது! கடவுளுடைய அரசாங்கத்தின் கீழ், கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் தங்களுடைய மிருகத்தனமான குணங்களை விட்டுவிட்டு சகோதர சகோதரிகளோடு சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்கிறார்கள்.

10 உதாரணத்துக்கு, இந்தப் புத்தகத்தில் கிறிஸ்தவ நடுநிலைமை பற்றிப் பார்த்தோம். நடுநிலைமையோடு இருப்பதற்கான பைபிள் சார்ந்த காரணத்தையும், அப்படி இருந்ததால் கடவுளுடைய மக்களுக்கு வந்த துன்புறுத்தலைப் பற்றியும் பார்த்தோம். இந்தக் கொடூரமான உலகத்தில், ஏராளமாக இருக்கும் கடவுளுடைய மக்கள் எந்தவித வன்முறையிலும் ஈடுபடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். கொன்றுவிடுவதாக மிரட்டப்பட்டாலும் உறுதியாக இருக்கிறார்கள். இது எவ்வளவு ஆச்சரியமான விஷயம்! ஏசாயா சொன்னபடி, மேசியானிய அரசாங்கத்தின் குடிமக்கள் உண்மையிலேயே சமாதானத்தை அனுபவிக்கிறார்கள் என்பதற்கு இது சிறந்த அத்தாட்சி, இல்லையா? தன்னுடைய சீஷர்களுக்கான அடையாளம், அவர்கள் மத்தியில் இருக்கும் அன்புதான் என்று இயேசு சொன்னார். (யோவா. 13:34, 35) உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லாரும் சபையில் சமாதானமாக, அன்பாக, மென்மையாக நடந்துகொள்வதற்கு “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” மூலம் கிறிஸ்து பொறுமையாகச் சொல்லித்தருகிறார்.—மத். 24:45-47.

11, 12. இன்று உலகத்தில் எப்படிப்பட்ட பஞ்சம் இருக்கிறது, ஆனாலும் யெகோவா தன்னுடைய மக்களுக்கு ஏராளமான உணவை எப்படிக் கொடுத்திருக்கிறார்?

11 ஏராளமான உணவு. இந்த உலகம் ஆன்மீகப் பஞ்சத்தில் வாடுகிறது. அதைப் பற்றி பைபிள் ஒரு முன்னெச்சரிக்கை கொடுத்தது. “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘ஒரு காலம் வரப்போகிறது, அப்போது தேசத்தில் பஞ்சத்தைக் கொண்டுவருவேன். அது உணவு கிடைக்காத பஞ்சமோ தண்ணீர் கிடைக்காத பஞ்சமோ இல்லை. அது யெகோவாவின் வார்த்தை கிடைக்காத பஞ்சம்.’” (ஆமோ. 8:11) கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் அந்தப் பஞ்சத்தில் வாடுகிறார்களா? தன்னுடைய மக்களுக்கும் எதிரிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை யெகோவா இப்படி முன்னறிவித்தார்: “என் ஊழியர்கள் சாப்பிடுவார்கள், ஆனால் நீங்கள் பசியில் வாடுவீர்கள். என் ஊழியர்கள் குடிப்பார்கள், ஆனால் நீங்கள் தாகத்தில் தவிப்பீர்கள். என் ஊழியர்கள் சந்தோஷமாக இருப்பார்கள், ஆனால் நீங்கள் அவமானத்தில் கூனிக்குறுகுவீர்கள்.” (ஏசா. 65:13) இந்த வார்த்தைகளின் நிறைவேற்றத்தைக் கவனித்திருக்கிறீர்களா?

12 பைபிள் பிரசுரங்கள், ஆடியோ-வீடியோக்கள், வெப்சைட்டில் வெளிவரும் தகவல்கள், கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றின் மூலம் இன்று நமக்கு ஏராளமான ஆன்மீக உணவு கிடைக்கிறது. அகலமும் ஆழமும் அதிகமாகிக்கொண்டே போகும் ஒரு ஆற்றைப் போல இவை இருக்கின்றன. ஆன்மீக விதத்தில் நாம் தொடர்ந்து உயிர்வாழ இவை உதவுகின்றன. (எசே. 47:1-12; யோவே. 3:18) ஏராளமான உணவு பற்றி யெகோவா கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறுவதைப் பார்த்து சிலிர்த்துப்போகிறீர்களா? யெகோவா தரும் உணவைத் தவறாமல் சாப்பிடுகிறீர்களா?

நாம் ஆன்மீக உணவைப் பெறுவதற்கும், ஆன்மீக விதத்தில் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கும் நம்முடைய சபைகள் உதவுகின்றன

13. பார்வையற்றோரின் கண்களும் கேட்க முடியாதவர்களின் காதுகளும் திறக்கப்படுவதைப் பற்றி யெகோவா கொடுத்த வாக்குறுதியின் நிறைவேற்றத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

13 ஆன்மீக ஆரோக்கியம். இன்று நிறைய பேர் ஆன்மீக விதத்தில் குருடர்களாகவும் செவிடர்களாகவும் இருக்கிறார்கள். (2 கொ. 4:4) ஆனாலும், இப்படிப்பட்ட குறைபாடுகளையும் வியாதிகளையும் உலகளவில் கிறிஸ்து குணமாக்கி வருகிறார். “அந்த நாளில், காது கேட்காதவர்களுக்கு அந்தப் புத்தகத்தின் வார்த்தைகள் கேட்கும். பார்வை இல்லாதவர்களின் கண்கள் இருளைவிட்டு நீங்கி பார்வை அடையும்” என்ற வாக்குறுதி இன்று நிறைவேறி வருகிறது. (ஏசா. 29:18) பார்வையற்றோரின் கண்களும் கேட்க முடியாதவர்களின் காதுகளும் திறக்கப்படுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஒருகாலத்தில் மதங்கள் கற்றுக்கொடுத்த பொய்களால் குருடர்களாகவும் செவிடர்களாகவும் இருந்தவர்களின் கண்களும் காதுகளும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து திருத்தமான அறிவைப் பெற்ற பிறகு திறக்கப்பட்டிருக்கின்றன. உலகம் முழுவதும் ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆன்மீக விதத்தில் குணமடைந்து வருகிறார்கள். இவர்கள் மகா பாபிலோனை விட்டு வெளியே வந்து ஆன்மீகப் பூஞ்சோலையில் நம்மோடு சேர்ந்து யெகோவாவை வணங்குகிறார்கள். யெகோவாவின் வாக்குறுதிகள் நிறைவேறியிருக்கின்றன என்பதற்கு இவர்கள் ஒவ்வொருவரும் உயிருள்ள அத்தாட்சிகளாக இருக்கிறார்கள்!

14. எந்த அத்தாட்சியைப் பற்றி யோசித்துப் பார்ப்பது நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும்?

14 இந்த முடிவு காலத்தில், கிறிஸ்து தன்னைப் பின்பற்றுகிறவர்களை ஆன்மீகப் பூஞ்சோலைக்குள் கொண்டுவந்திருப்பதற்கான தெளிவான அத்தாட்சி இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு அதிகாரத்திலும் இருக்கிறது. இந்தப் பூஞ்சோலையில் இன்று நாம் பல விதங்களில் ஆசீர்வாதங்களை அனுபவித்து வருகிறோம். அவற்றைப் பற்றி நாம் எப்போதும் யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படி யோசிக்கும்போது, எதிர்காலத்தைப் பற்றி யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதிகள்மீது நமக்கிருக்கும் விசுவாசம் இன்னும் அதிகமாகும்.

“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”

15. பூமி ஒரு பூஞ்சோலையாக மாறும் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?

15 இந்த முழு பூமியும் ஒரு பூஞ்சோலையாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆரம்பத்திலிருந்தே யெகோவாவின் நோக்கமாக இருந்திருக்கிறது. ஆதாம் ஏவாளை ஒரு அழகான பூஞ்சோலையில் அவர் குடிவைத்தார். பிள்ளைகளைப் பெற்று பூமியை நிரப்ப வேண்டும் என்றும் பூமியிலுள்ள எல்லா உயிரினங்களையும் பராமரிக்க வேண்டும் என்றும் அவர்களுக்குக் கட்டளை கொடுத்தார். (ஆதி. 1:28) ஆனால், அவர்கள் சாத்தான் பேச்சைக் கேட்டு கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். அதனால், தங்களுடைய சந்ததியை அபூரணத்துக்கும் பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமைகளாக்கிவிட்டார்கள். ஆனாலும் கடவுளுடைய நோக்கம் மாறவே இல்லை. அவர் ஒரு விஷயத்தைச் சொன்னால் அது கண்டிப்பாக நிறைவேறும். (ஏசாயா 55:10, 11-ஐ வாசியுங்கள்.) அதனால், ஆதாம் ஏவாளுடைய சந்ததியார் இந்தப் பூமியில் பிள்ளைகளைப் பெற்று நிரப்புவார்கள் என்றும் இந்தப் பூமி முழுவதையும் பண்படுத்தி அதை ஒரு பூஞ்சோலையாக மாற்றுவார்கள் என்றும் நாம் உறுதியாக நம்பலாம். அவர்கள் யெகோவாவுடைய படைப்புகள் எல்லாவற்றையும் நன்றாக கவனித்துக்கொள்வார்கள் என்றும் நம்பலாம். அந்தச் சமயத்தில், பூஞ்சோலை போன்ற சூழல் பற்றி சிறைபிடிக்கப்பட்ட யூதர்களிடம் சொல்லப்பட்டிருந்த தீர்க்கதரிசனங்கள் முழுமையாக நிறைவேறும். பின்வரும் உதாரணங்களைக் கவனியுங்கள்.

16. பூஞ்சோலையில் நமக்குக் கிடைக்கும் பாதுகாப்பைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

16 பாதுகாப்பு. கடைசியாக, ஏசாயா 11:6-9-ல் வர்ணிக்கப்பட்டுள்ள மனதைத் தொடும் விஷயங்கள் முழுமையாக நிறைவேறும். ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் பூமியில் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் பயமில்லாமல் போக முடியும். மனிதர்களும் சரி, மிருகங்களும் சரி, யாரும் யாருக்குமே பயப்பட வேண்டியிருக்காது. இந்த முழு பூமியும் உங்களுடைய வீடாக ஆகப்போகும் காலத்தைக் கற்பனை செய்துபாருங்கள். அப்போது ஆறுகளிலும், ஏரிகளிலும், கடலிலும் நீச்சலடிக்கலாம்; மலைகளில் ஏறலாம்; புல்வெளிகளில் சுற்றித்திரியலாம். ராத்திரி நேரத்தில் பயப்படாமல் எங்கு வேண்டுமானாலும் போகலாம். அதுமட்டுமல்ல, எசேக்கியேல் 34:25-லுள்ள வார்த்தைகள் நிறைவேறும்போது, கடவுளுடைய மக்கள் “வனாந்தரத்தில் பத்திரமாகத் தங்குவார்கள், காடுகளில் நிம்மதியாகப் படுத்துக்கொள்வார்கள்.”

17. கடவுளுடைய அரசாங்கம் இந்த உலகத்தை ஆட்சி செய்யும்போது யெகோவா நமக்கு ஏராளமாக உணவு கொடுப்பார் என்று ஏன் நிச்சயமாக இருக்கலாம்?

17 ஏராளமான உணவு. வறுமை, பஞ்சம், பட்டினி போன்றவை இல்லாத காலத்தைக் கற்பனை செய்துபாருங்கள். இன்று கடவுளுடைய மக்கள் அனுபவிக்கிற ஆன்மீகச் செழுமை, மேசியானிய அரசாங்கத்தின் ராஜா அவருடைய குடிமக்களுக்கு உணவளிப்பார் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இயேசு பூமியில் இருந்தபோது, அந்த வாக்குறுதிகளைத் தன்னால் நிறைவேற்ற முடியும் என்பதைச் சிறியளவில் செய்து காட்டினார். எப்படி? சில அப்பங்களையும் மீன்களையும் வைத்து பசியாயிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்தார். (மத். 14:17, 18; 15:34-36; மாற். 8:19, 20) கடவுளுடைய அரசாங்கம் முழு பூமியையும் ஆட்சி செய்யும்போது, இதுபோன்ற தீர்க்கதரிசனங்கள் நிஜமாகவே நிறைவேறும்: “நீங்கள் விதைத்த விதைகள் முளைப்பதற்குக் கடவுள் மழையைக் கொடுப்பார். நிலத்திலிருந்து சத்தான உணவுப் பொருள்கள் ஏராளமாக விளையும். அந்த நாளில், உங்களுடைய ஆடுமாடுகள் பரந்துவிரிந்த மேய்ச்சல் நிலங்களில் மேயும்.”—ஏசா. 30:23.

18, 19. (அ) ஏசாயா 65:20-22-லுள்ள வார்த்தைகளைப் படிக்கும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? (ஆ) நம்முடைய ஆயுள் காலம் ஒரு “மரத்தின் ஆயுள் காலத்தைப் போல” இருக்கும் என்று சொல்லப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன?

18 இன்று பலருக்கு வசதியான ஒரு சொந்த வீடோ, திருப்தியான ஒரு நல்ல வேலையோ இல்லை. ஊழல் நிறைந்த இந்த உலகத்தில் நாள் முழுக்க பாடுபட்டாலும் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளும் அளவுக்கு வருமானம் கிடைப்பதில்லை என்றுதான் பலர் நினைக்கிறார்கள். பணக்காரர்களும் பேராசை பிடித்தவர்களும்தான் லாபத்தை அள்ளிக்கொண்டு போவதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறும்போது எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்: “ஜனங்கள் வீடுகளைக் கட்டி அதில் குடியிருப்பார்கள். திராட்சைத் தோட்டங்களை அமைத்து அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள். ஒருவர் கட்டும் வீட்டில் இன்னொருவர் குடியிருக்க மாட்டார். ஒருவருடைய தோட்டத்தின் விளைச்சலை இன்னொருவர் சாப்பிட மாட்டார். ஏனென்றால், மரத்தின் ஆயுள் காலத்தைப் போல என் ஜனங்களின் ஆயுள் காலமும் இருக்கும். நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தங்கள் உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிப்பார்கள்.”—ஏசா. 65:20-22.

19 நம்முடைய ஆயுள் காலம் ஒரு “மரத்தின் ஆயுள் காலத்தைப் போல” இருக்கும் என்று சொல்லப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன? ஒரு மிகப் பெரிய மரத்தின் கீழ் நீங்கள் நிற்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்களுடைய தாத்தா-பாட்டி பிறப்பதற்கு முன்பிருந்தே, ஏன், அவர்களுடைய தாத்தா-பாட்டி பிறப்பதற்கு முன்பிருந்தே அந்த மரம் அங்கு இருப்பதைக் கேள்விப்பட்டு மலைத்துப்போகிறீர்கள். உங்களுடைய வாழ்நாள் காலத்துக்குப் பிறகுகூட அந்த மரம் ரொம்பக் காலத்துக்கு உயிர்வாழலாம். ஏனென்றால், நாம் அபூரணராக இருப்பதால் கொஞ்சக் காலத்துக்குத்தான் உயிர்வாழ்கிறோம். ஆனால், வரவிருக்கும் பூஞ்சோலைப் பூமியில் நாம் நீண்ட காலத்துக்கு சமாதானமாக வாழ்வோம் என்று யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். இதற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்! (சங். 37:11, 29) அந்தக் காலம் சீக்கிரத்தில் வரப்போகிறது. அப்போதும்கூட நீண்ட காலத்துக்கு வாழும் மரங்கள் இருக்கும். ஆனால், நம்முடைய வாழ்நாள் காலத்தோடு ஒப்பிடும்போது அந்த மரங்களின் வாழ்நாள் காலம் புல்லைப் போலத்தான் இருக்கும்!

20. கடவுளுடைய அரசாங்கத்தின் உண்மையுள்ள குடிமக்கள் எப்படிப் பூரண ஆரோக்கியத்தை அனுபவிப்பார்கள்?

20 பூரண ஆரோக்கியம். இன்று உலகிலுள்ள எல்லாருக்கும் வியாதியும் மரணமும் வருகிறது. ஒரு விதத்தில், நாம் எல்லாருமே வியாதிப்பட்டிருக்கிறோம் என்று சொல்லலாம். உயிரைப் பறிக்கும் பாவம் என்ற வியாதி எல்லாரையும் தொற்றியிருக்கிறது. இந்த வியாதிக்கு ஒரே நிவாரணம், கிறிஸ்துவின் மீட்புப் பலிதான். (ரோ. 3:23; 6:23) ஆயிர வருஷ ஆட்சியின்போது, அந்த மீட்புப் பலியிலிருந்து மக்கள் முழுமையாக நன்மை அடைய, இயேசுவும் அவருடைய சக ராஜாக்களும் உதவுவார்கள். பிறகு படிப்படியாக பாவத்தைச் சுவடுதெரியாமல் நீக்கிவிடுவார்கள். அப்போது, “‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள். தேசத்து ஜனங்களுடைய குற்றங்கள் மன்னிக்கப்பட்டிருக்கும்” என்ற தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேறும். (ஏசா. 33:24) கண் தெரியாதவர்களோ, காது கேட்காதவர்களோ, உடல் ஊனமானவர்களோ இல்லாத ஒரு காலத்தைக் கற்பனை செய்துபாருங்கள். (ஏசாயா 35:5, 6-ஐ வாசியுங்கள்.) இயேசுவால் குணப்படுத்த முடியாத வியாதி எதுவுமே இருக்காது. உடல், மனம் அல்லது உணர்ச்சி சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளையும் அவரால் நீக்க முடியும். கடவுளுடைய அரசாங்கத்தின் உண்மையுள்ள குடிமக்கள் பூரண ஆரோக்கியத்தை அனுபவிப்பார்கள்!

21. கடைசியில் மரணத்துக்கு என்ன ஆகும், அது சம்பந்தமான வாக்குறுதி ஏன் ஆறுதலைத் தருகிறது?

21 ஆனால், வியாதியால் வரும் மரணத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? இதுவும்கூட பாவத்தின் விளைவுதான். இதை நம் “கடைசி எதிரி” என்று பைபிள் சொல்கிறது. அபூரண மனிதர்களால் இதன் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. (1 கொ. 15:26) ஆனால், யெகோவாவுக்கு முன் இது ஒரு பெரிய எதிரி கிடையாது. ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனத்தைக் கவனியுங்கள்: “மரணத்தை அவர் அடியோடு ஒழித்துக்கட்டுவார். உன்னதப் பேரரசராகிய யெகோவா எல்லாருடைய முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்.” (ஏசா. 25:8) அந்தச் சமயத்தை உங்கள் மனத்திரையில் பார்க்க முடிகிறதா? அப்போது சவ அடக்கங்களோ, கல்லறைகளோ இருக்காது. சோகத்தில் யாரும் கண்ணீர்விட மாட்டார்கள். அதற்குப் பதிலாக, ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கும். ஏனென்றால், இறந்துபோனவர்களைத் திரும்பவும் எழுப்பப் போவதாக யெகோவா கொடுத்த வாக்குறுதி அப்போது நிறைவேறும். (ஏசாயா 26:19-ஐ வாசியுங்கள்.) கடைசியில், மரணத்தால் ஏற்பட்ட காயங்கள் எல்லாமே ஆறிவிடும்.

22. மேசியானிய அரசாங்கம் கடவுளுடைய விருப்பத்தைப் பூமியில் நிறைவேற்றிய பிறகு என்ன நடக்கும்?

22 ஆயிர வருஷ ஆட்சியின் முடிவுக்குள், கடவுளுடைய அரசாங்கம் அவருடைய விருப்பத்தைப் பூமியில் நிறைவேற்றியிருக்கும். பிறகு, கிறிஸ்து தன் ஆட்சியுரிமையைத் தகப்பனிடம் ஒப்படைத்துவிடுவார். (1 கொ. 15:25-28) அதன் பின், அதலபாதாளத்தில் செயலற்ற நிலையில் இருந்த சாத்தான் விடுதலை செய்யப்படுவான். பரிபூரணர்களாக ஆக்கப்பட்ட மனிதர்கள் எல்லாரும் அவனுடைய கடைசி சோதனையைச் சந்திக்கத் தயாராக இருப்பார்கள். பிறகு, அந்தக் கொடிய பாம்பையும் அதன் ஆதரவாளர்களையும் கிறிஸ்து நசுக்கிப்போடுவார். (ஆதி. 3:15; வெளி. 20:3, 7-10) ஆனால், யெகோவாவை உண்மையோடு நேசிக்கிறவர்கள் எல்லாருக்கும் ஒரு பிரகாசமான எதிர்பார்ப்பு இருக்கும். அதை பைபிள் இப்படி அழகாக விவரிக்கிறது: உண்மையுள்ள மக்கள் “கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையை” பெறுவார்கள்.—ரோ. 8:21.

மனிதர்கள் மற்றும் பூமி சம்பந்தமாக கடவுள் கொடுத்திருக்கிற எல்லா வாக்குறுதிகளையும் அவருடைய அரசாங்கம் நிறைவேற்றும்

23, 24. (அ) கடவுளுடைய வாக்குறுதிகள் எல்லாம் நிச்சயம் நிறைவேறும் என்று நாம் ஏன் நம்பலாம்? (ஆ) நீங்கள் என்ன செய்யத் தீர்மானமாக இருக்கிறீர்கள்?

23 இதுவரை பார்த்த வாக்குறுதிகள் எல்லாம் வெறும் எதிர்பார்ப்புகளோ ஆசைகளோ கனவுகளோ அல்ல. அவை யெகோவா கொடுத்த வாக்குறுதிகள். அவை நிச்சயம் நிறைவேறும்! ஏன் அப்படிச் சொல்கிறோம்? இந்தப் புத்தகத்தின் முதல் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள். அவர் தன்னைப் பின்பற்றுகிறவர்களிடம் இப்படி ஜெபம் செய்யும்படி கற்றுக்கொடுத்தார்: “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்.” (மத். 6:9, 10) கடவுளுடைய அரசாங்கம் என்பது ஒருவருடைய கற்பனை அல்ல. அது நிஜமானது! அது இப்போது பரலோகத்தில் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. நூறு வருஷங்களாக அது யெகோவாவின் வாக்குறுதிகளை கிறிஸ்தவச் சபையில் எப்படியெல்லாம் நிறைவேற்றிவருகிறது என்பதை நம்மால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அப்படியானால், கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியை முழுமையாக ஆட்சி செய்யும்போது யெகோவாவின் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.

24 கடவுளுடைய அரசாங்கம் வரும் என்று நமக்குத் தெரியும். யெகோவாவின் வாக்குறுதிகள் எல்லாமே நிறைவேறும் என்றும் நமக்குத் தெரியும். ஏனென்றால், கடவுளுடைய அரசாங்கம் இப்போது ஆட்சி செய்துகொண்டிருக்கிறது! நாம் ஒவ்வொருவருமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி என்னவென்றால், ‘கடவுளுடைய அரசாங்கம் என்னை ஆட்சி செய்கிறது என்பதை நான் வாழும் விதம் காட்டுகிறதா?’ அந்த அரசாங்கத்தின் உண்மையுள்ள குடிமக்களாக வாழ நம்மால் முடிந்த எல்லாவற்றையும் இப்போதே செய்ய வேண்டும். அப்போதுதான், அந்தப் பரிபூரணமான, நீதியான ஆட்சியின் நன்மைகளை என்றென்றும் அனுபவிப்போம்!