Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 2

பிறப்பதற்கு முன்பே இயேசு மகிமைப்படுத்தப்படுகிறார்

பிறப்பதற்கு முன்பே இயேசு மகிமைப்படுத்தப்படுகிறார்

லூக்கா 1:34-56

  • மரியாள் தன் சொந்தக்காரப் பெண்ணான எலிசபெத்தைப் பார்க்கப் போகிறாள்

இளம் மரியாள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள் என்று காபிரியேல் தூதர் சொல்கிறார். அவருக்கு இயேசு என்று பெயர் வைக்க வேண்டும் என்றும், அவர் ராஜாவாக என்றென்றும் ஆட்சி செய்வார் என்றும் சொல்கிறார். அப்போது மரியாள் அவரிடம், “இது எப்படி நடக்கும்? நான் கன்னிப்பெண்ணாக இருக்கிறேனே” என்று கேட்கிறாள்.—லூக்கா 1:34.

அதற்கு காபிரியேல், “கடவுளுடைய சக்தி உன்மேல் வரும்; உன்னதமான கடவுளுடைய வல்லமை உன்மேல் தங்கும். அதனால், உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும், கடவுளுடைய மகன் என்றும் அழைக்கப்படும்” என்று சொல்கிறார்.—லூக்கா 1:35.

மரியாள் இதை நம்ப வேண்டும் என்பதற்காக காபிரியேல் அவளிடம், “இதோ! உன் சொந்தக்காரப் பெண் எலிசபெத்தும் வயதான காலத்தில் ஒரு மகனை வயிற்றில் சுமக்கிறாள்; மலடி என்று அழைக்கப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம். கடவுளால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி எதுவுமே இல்லை” என்று சொல்கிறார்.—லூக்கா 1:36, 37.

காபிரியேல் சொன்னதை மரியாள் ஏற்றுக்கொண்டாள் என்பதை அவளுடைய பதிலே காட்டுகிறது. ஏனென்றால், “இதோ! நான் யெகோவாவின் அடிமைப் பெண்! நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்று அவள் சொல்கிறாள்.—லூக்கா 1:38.

காபிரியேல் போனதும், எலிசபெத்தைப் போய்ப் பார்க்க மரியாள் புறப்படுகிறாள். எலிசபெத்தும் அவளுடைய கணவர் சகரியாவும் எருசலேமுக்குப் பக்கத்தில் இருக்கிற யூதேயா மலைப்பகுதியில் வாழ்கிறார்கள். நாசரேத்திலிருக்கும் மரியாளுடைய வீட்டிலிருந்து அங்கே போவதற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகும்.

கடைசியில், சகரியாவின் வீட்டுக்கு மரியாள் வருகிறாள். உள்ளே நுழையும்போதே தன்னுடைய சொந்தக்காரப் பெண்ணான எலிசபெத்தை வாழ்த்துகிறாள். உடனே, எலிசபெத் கடவுளுடைய சக்தியால் நிறைந்து, “நீ பெண்களிலேயே மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள்; உன் வயிற்றிலுள்ள குழந்தையும் ஆசீர்வதிக்கப்பட்டது! என் எஜமானுடைய தாய் என்னைப் பார்க்க வருவதற்கு நான் என்ன பாக்கியம் செய்தேன்! இதோ! நீ வாழ்த்திய சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள குழந்தை சந்தோஷத்தில் துள்ளியது” என்று மரியாளிடம் சொல்கிறாள்.—லூக்கா 1:42-44.

அப்போது மரியாள், “யெகோவாவை நான் புகழ்கிறேன். என் மீட்பராகிய கடவுளை நினைத்து என் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்குகிறது. ஏனென்றால், அவர் தன்னுடைய அடிமைப் பெண்ணின் தாழ்ந்த நிலையைக் கவனித்திருக்கிறார். இதுமுதல் எல்லா தலைமுறையினரும் என்னை சந்தோஷமானவள் என்று புகழ்வார்கள். ஏனென்றால், வல்லமையுள்ள கடவுள் எனக்காக அற்புதமான செயல்களைச் செய்திருக்கிறார்” என்று நன்றி பொங்க சொல்கிறாள். கடவுளின் தயவு தனக்குக் கிடைத்திருந்தாலும், எல்லாப் புகழும் கடவுளுக்கே சேர வேண்டும் என்று மரியாள் நினைக்கிறாள். அதனால், “அவருடைய பெயர் பரிசுத்தமானது. அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்குத் தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காட்டுகிறார்” என்று சொல்கிறாள்.—லூக்கா 1:46-50.

அதோடு, “அவர் தன்னுடைய கைகளால் வல்லமையான செயல்களைச் செய்திருக்கிறார். இதயத்தில் கர்வமுள்ளவர்களைச் சிதறிப்போக வைத்திருக்கிறார். அதிகாரமுள்ளவர்களைச் சிம்மாசனங்களிலிருந்து இறக்கியிருக்கிறார், தாழ்ந்தவர்களை உயர்த்தியிருக்கிறார். ஏழைகளுக்கு நல்ல நல்ல காரியங்களைக் கொடுத்து முழுமையாகத் திருப்திப்படுத்தியிருக்கிறார்; பணக்காரர்களை வெறுங்கையோடு அனுப்பியிருக்கிறார். ஆபிரகாமுக்கும் அவருடைய வம்சத்துக்கும் என்றென்றும் இரக்கம் காட்டுவதாக நம்முடைய முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைத்துப் பார்த்து, தன்னுடைய ஊழியனான இஸ்ரவேலுக்கு உதவி செய்திருக்கிறார்” என்று சொல்லி கடவுளைப் புகழ்கிறாள்; கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு மரியாள் இந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொல்கிறாள்.—லூக்கா 1:51-55.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு, எலிசபெத்தோடு மரியாள் தங்கியிருக்கிறாள். பிரசவம் நெருங்கிக்கொண்டிருக்கிற இந்தச் சமயத்தில் எலிசபெத்துக்கு மரியாள் நிறைய உதவி செய்திருக்கலாம். இந்த உண்மையுள்ள இரண்டு பெண்களும் கடவுளுடைய உதவியால் குழந்தையைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை நினைத்து ரொம்பச் சந்தோஷப்படுகிறார்கள்.

பிறப்பதற்கு முன்பே இயேசுவுக்கு எவ்வளவு மரியாதை கிடைத்தது என்று பாருங்கள். எலிசபெத் அவரை ‘என் எஜமான்’ என்று சொன்னாள். அதுமட்டுமல்ல, மரியாள் வாழ்த்திய சத்தத்தைக் கேட்டதும் எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை “சந்தோஷத்தில் துள்ளியது.” ஆனால் பிற்பாடு, மரியாளுக்கும் அவள் வயிற்றிலிருக்கிற குழந்தைக்கும் இதுபோன்ற மரியாதை மற்றவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. இதைப் பற்றி நாம் பின்வரும் அதிகாரங்களில் படிப்போம்.