Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 3

வழியைத் தயார்படுத்துகிறவர் பிறக்கிறார்

வழியைத் தயார்படுத்துகிறவர் பிறக்கிறார்

லூக்கா 1:57-79

  • யோவான் ஸ்நானகர் பிறக்கிறார், அவருக்குப் பெயர் வைக்கப்படுகிறது

  • யோவான் என்ன செய்வார் என்பதை சகரியா தீர்க்கதரிசனமாகச் சொல்கிறார்

எலிசபெத்துக்குக் குழந்தை பிறக்க ஒருசில நாட்களே இருக்கின்றன. அவளுடைய சொந்தக்காரப் பெண்ணான மரியாள் மூன்று மாதங்களுக்கு அவளோடு தங்கியிருக்கிறாள். பிறகு, அங்கிருந்து நாசரேத்தில் இருக்கும் தன்னுடைய வீட்டுக்குக் கிளம்புகிறாள். வடக்கில் இருக்கும் நாசரேத்துக்குப் போக மரியாள் ரொம்பத் தூரம் பயணம் செய்ய வேண்டும். இன்னும் ஆறு மாதங்களில் அவளுக்கும் குழந்தை பிறந்துவிடும்.

மரியாள் கிளம்பி சில நாட்களிலேயே, எலிசபெத்துக்குக் குழந்தை பிறக்கிறது. குழந்தையும் எலிசபெத்தும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அவள் தன்னுடைய மகனை அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்களிடமும் சொந்தக்காரர்களிடமும் காட்டுகிறாள். எல்லாரும் ரொம்பச் சந்தோஷப்படுகிறார்கள்.

ஆண் பிள்ளை பிறந்தால், எட்டாம் நாளில் அவனுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்திருந்தார். (லேவியராகமம் 12:2, 3) பொதுவாக, அதே நாளில்தான் குழந்தைக்குப் பெயரும் வைப்பார்கள். சகரியாவின் மகனுக்கும் சகரியா என்ற பெயரையே வைக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் எலிசபெத், “வேண்டாம்! இவனுக்கு யோவான் என்று பெயர் வைக்க வேண்டும்” என்று சொல்கிறாள். (லூக்கா 1:60) காபிரியேல் தூதர் இந்தக் குழந்தைக்கு யோவான் என்று பெயர் வைக்கச் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

எலிசபெத் சொன்னதை அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்களும் சொந்தக்காரர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. “உன் சொந்தக்காரர்களில் யாருக்குமே இந்தப் பெயர் இல்லையே” என்று அவர்கள் சொல்கிறார்கள். (லூக்கா 1:61) சகரியாவிடம் சைகை காட்டி, குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். சகரியா ஒரு பலகையைக் கேட்டு வாங்கி, அதில் “யோவான் என்று பெயர் வைக்க வேண்டும்” என்று எழுதுகிறார்.—லூக்கா 1:63.

அந்த நொடியே, சகரியா பேச ஆரம்பிக்கிறார். எலிசபெத்துக்கு ஒரு மகன் பிறப்பான் என்று தேவதூதர் சொன்னதை சகரியா நம்பாததால் அவருக்குப் பேச்சு வராமல் போனது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். சகரியா பேசுவதைப் பார்த்து, அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்களுக்கு ஒரே ஆச்சரியம்! “இந்தப் பிள்ளை எப்படிப்பட்ட ஆளாக ஆவானோ?” என்று அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். (லூக்கா 1:66) இந்தக் குழந்தைக்கு யோவான் என்று பெயர் வைக்க வேண்டுமென்பதுதான் கடவுளுடைய விருப்பம் என்று அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

பிறகு சகரியா கடவுளுடைய சக்தியால் நிறைந்து, “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா புகழப்படட்டும். ஏனென்றால், அவர் தன்னுடைய மக்கள்மேல் கவனத்தைத் திருப்பி, அவர்களுக்கு விடுதலை கொடுத்திருக்கிறார். பலம்படைத்த மீட்பர் ஒருவரை தன்னுடைய ஊழியனாகிய தாவீதின் வம்சத்தில் நமக்காக வர வைத்திருக்கிறார்” என்று சொல்கிறார். (லூக்கா 1:68, 70) சில மாதங்களுக்குப் பின் பிறக்கவிருந்த எஜமானாகிய இயேசுவைத்தான் “பலம்படைத்த மீட்பர்” என்று சகரியா குறிப்பிடுகிறார். இயேசு மூலமாகத்தான் கடவுள் நம்மை ‘எதிரிகளுடைய கைகளிலிருந்து காப்பாற்றி, நாம் உயிரோடிருக்கிற காலமெல்லாம் உண்மையோடும் நீதியோடும் தைரியத்தோடும் அவர்முன் பரிசுத்த சேவை செய்கிற பாக்கியத்தை நமக்குக் கொடுப்பார்’ என்றும் சகரியா சொல்கிறார்.—லூக்கா 1:74, 75.

தன்னுடைய மகனைப் பற்றியும் சகரியா தீர்க்கதரிசனமாக இப்படிச் சொல்கிறார்: “குழந்தையே, நீ உன்னதமான கடவுளுடைய தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; யெகோவாவுக்கு முன்னே போய் அவருக்காக வழிகளைத் தயார்படுத்துவாய். நம் கடவுள் காட்டுகிற கரிசனையால் அவருடைய மக்களுக்குப் பாவ மன்னிப்பின் மூலம் கிடைக்கிற மீட்பைப் பற்றிச் சொல்வாய். இந்தக் கரிசனையால், சூரிய உதயத்தைப் போன்ற ஓர் ஒளி மேலே இருந்து நம்மிடம் வந்து, இருட்டிலும் மரணத்தின் நிழலிலும் உட்கார்ந்திருப்பவர்களுக்கு வெளிச்சத்தைத் தரும்; அதோடு, நம்முடைய கால்களைச் சமாதான வழியில் கொண்டுபோகும்.” (லூக்கா 1:76-79) இந்தத் தீர்க்கதரிசனத்தைப் படிக்கும்போது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!

இதற்குள், நாசரேத்தில் இருக்கிற தன் வீட்டுக்கு மரியாள் வந்துசேர்கிறாள். அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவள் கர்ப்பமாக இருப்பது வெளியே தெரிந்தால் என்ன ஆகும்?