Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 9

நாசரேத்தில் வளர்கிறார்

நாசரேத்தில் வளர்கிறார்

மத்தேயு 13:55, 56 மாற்கு 6:3

  • யோசேப்பு-மரியாளின் குடும்பம் பெரிதாகிறது

  • இயேசு ஒரு தொழிலைக் கற்றுக்கொள்கிறார்

கலிலேயா மலைப்பகுதியில் இருக்கிற நாசரேத் என்ற சாதாரண நகரத்தில் இயேசு வளர்கிறார். இந்தச் சிறிய நகரம் கலிலேயா கடல் என்ற பெரிய ஏரிக்கு மேற்கே இருக்கிறது.

இயேசுவுக்குக் கிட்டத்தட்ட இரண்டு வயது இருக்கும்போது, யோசேப்பும் மரியாளும் இயேசுவைக் கூட்டிக்கொண்டு எகிப்திலிருந்து நாசரேத்துக்குப் போகிறார்கள். இந்தச் சமயத்தில் இயேசு அவர்களுக்கு ஒரே பிள்ளையாக இருந்திருக்கலாம். அதற்குப் பிறகு, அவர்களுக்கு யாக்கோபு, யோசே, சீமோன், யூதாஸ் ஆகியோர் பிறக்கிறார்கள். யோசேப்புக்கும் மரியாளுக்கும் பெண் பிள்ளைகளும் பிறக்கிறார்கள். மொத்தத்தில், இயேசுவுக்கு ஆறு தம்பி, தங்கைகளாவது இருந்திருக்கலாம்.

இயேசுவுக்கு இன்னும் சில சொந்தக்காரர்களும் இருக்கிறார்கள். நாம் ஏற்கெனவே எலிசபெத்தைப் பற்றியும் அவளுடைய மகன் யோவானைப் பற்றியும் படித்தோம். அவர்கள் நாசரேத்துக்குத் தெற்கில் பல கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் யூதேயாவில் வாழ்கிறார்கள். இயேசு வாழ்கிற கலிலேயாவிலும், அவருக்குச் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, சலோமேயும் அவளுடைய கணவர் செபெதேயுவும் கலிலேயாவில் குடியிருக்கிறார்கள். சலோமே ஒருவேளை மரியாளின் தங்கையாக, அதாவது இயேசுவின் சித்தியாக, இருக்கலாம். அவளுடைய மகன்களான யாக்கோபும் யோவானும் இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரர்கள். சின்ன வயதில், இயேசுவும் இவர்களும் சேர்ந்து வளர்ந்தார்களா என்று நமக்குத் தெரியாது. ஆனால், கடைசியில் இவர்கள் இயேசுவின் நெருங்கிய நண்பர்களாகவும் அப்போஸ்தலர்களாகவும் ஆகிறார்கள்.

யோசேப்பின் குடும்பம் பெரிதாகிக்கொண்டே இருப்பதால், அவர் கடினமாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அவர் தச்சு வேலை செய்கிறார். இயேசுவைத் தன்னுடைய சொந்த மகனைப் போல வளர்க்கிறார்; அதனால்தான், இயேசுவை “தச்சனுடைய மகன்” என்று மக்கள் சொல்கிறார்கள். (மத்தேயு 13:55) மர வேலைகள் செய்வதற்கு யோசேப்பு இயேசுவுக்குச் சொல்லிக்கொடுக்கிறார். அவரும் அதை நன்றாகக் கற்றுக்கொள்கிறார். அதனால்தான், பிற்பாடு இயேசுவை ஒரு “தச்சன்” என்று மக்கள் சொல்கிறார்கள்.—மாற்கு 6:3.

யோசேப்பும் அவருடைய குடும்பத்தாரும் யெகோவாவின் வணக்கத்துக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். திருச்சட்டத்தில் சொல்லியிருக்கிறபடி, யோசேப்பும் மரியாளும் தங்கள் “வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்திருக்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும்” கடவுளைப் பற்றித் தங்களுடைய பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கிறார்கள். (உபாகமம் 6:6-9) நாசரேத்தில் ஒரு ஜெபக்கூடம் இருக்கிறது. கடவுளை வணங்குவதற்காக யோசேப்பு தன் குடும்பத்தாரைத் தவறாமல் அங்கே கூட்டிக்கொண்டு போயிருப்பார். இயேசு “தன்னுடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில்” ஜெபக்கூடத்துக்குப் போனார் என்று பிற்பாடு லூக்கா அவரைப் பற்றி எழுதினார். (லூக்கா 4:16) அதோடு ஒவ்வொரு வருஷமும், எருசலேமில் இருக்கிற யெகோவாவின் ஆலயத்துக்கு அவர்கள் குடும்பமாகப் போகிறார்கள். அப்படிப் போவது அவர்களுக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது.