Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 12

இயேசு ஞானஸ்நானம் எடுக்கிறார்

இயேசு ஞானஸ்நானம் எடுக்கிறார்

மத்தேயு 3:13-17 மாற்கு 1:9-11 லூக்கா 3:21, 22 யோவான் 1:32-34

  • இயேசு ஞானஸ்நானம் எடுக்கிறார், அபிஷேகம் செய்யப்படுகிறார்

  • இயேசு தன்னுடைய மகன் என்று யெகோவா சொல்கிறார்

யோவான் ஸ்நானகர் பிரசங்கிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவரைப் பார்க்க யோர்தான் ஆற்றுக்கு இயேசு போகிறார். இப்போது இயேசுவுக்குச் சுமார் 30 வயது. இயேசு ஏன் அங்கே போகிறார்? வெறுமனே யோவானைப் பார்த்துப் பேசுவதற்காக அல்ல; அவருடைய வேலை எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவும் அல்ல; அவரிடம் ஞானஸ்நானம் எடுப்பதற்காகத்தான் இயேசு அங்கே போகிறார்.

அப்போது யோவான், “ஞானஸ்நானம் பெறுவதற்கு நான்தான் உங்களிடம் வர வேண்டும், நீங்கள் என்னிடம் வரலாமா?” என்று சொல்லி அவரைத் தடுக்கிறார். (மத்தேயு 3:14) இயேசு கடவுளுடைய மகன் என்று யோவானுக்குத் தெரியும். இயேசுவைச் சுமந்துகொண்டிருந்த மரியாளின் குரலைக் கேட்டு எலிசபெத்தின் வயிற்றில் இருந்தபோதே யோவான் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். யோவானின் அம்மா கண்டிப்பாக அந்தச் சம்பவத்தைப் பற்றி அவரிடம் சொல்லியிருப்பார். அதோடு, இயேசுவின் பிறப்பைப் பற்றி மரியாளிடம் காபிரியேல் தூதர் சொன்னதையும் அவர் கேள்விப்பட்டிருப்பார். இயேசு பிறந்த அந்த ராத்திரியில் மேய்ப்பர்கள்முன் தேவதூதர்கள் தோன்றிய விஷயமும் அவருக்குத் தெரிந்திருக்கும்.

பாவத்தைவிட்டு மனம் திருந்துகிறவர்களுக்குத்தான் யோவான் ஞானஸ்நானம் கொடுக்கிறார். ஆனால், இயேசு எந்தப் பாவமும் செய்யவில்லை. அதனால்தான் யோவான் அவரைத் தடுக்கிறார். ஆனாலும் இயேசு அவரிடம், “என்னைத் தடுக்காதே; இதன் மூலம்தான், நீதியான எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும்” என்று சொல்கிறார்.—மத்தேயு 3:15.

இயேசு ஏன் ஞானஸ்நானம் எடுக்கிறார்? மனம் திருந்தியதற்கு அடையாளமாக அல்ல; தன் அப்பாவின் விருப்பத்தைச் செய்ய தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதைக் காட்டுவதற்காகவே இயேசு ஞானஸ்நானம் எடுக்கிறார். (எபிரெயர் 10:5-7) அதுவரை இயேசு மர வேலை செய்துவந்தார்; ஆனால் இப்போது, அவர் ஊழியத்தை ஆரம்பிக்க வேண்டும். இந்த வேலையைச் செய்வதற்காகத்தான் பரலோகத் தகப்பன் அவரைப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார். இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது, ஏதாவது அற்புதம் நடக்கும் என்று யோவான் எதிர்பார்க்கிறாரா?

இதைப் பற்றி யோவானே இப்படிச் சொல்கிறார்: “தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுப்பதற்கு என்னை அனுப்பியவர், ‘கடவுளுடைய சக்தி இறங்கி யார்மேல் தங்குவதைப் பார்க்கிறாயோ அவர்தான் அந்தச் சக்தியால் ஞானஸ்நானம் கொடுப்பவர்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார்.” (யோவான் 1:33) அதனால், தன்னிடம் ஞானஸ்நானம் எடுக்கிற யாரோ ஒருவர்மேல் கடவுளுடைய சக்தி இறங்கும் என்று யோவான் எதிர்பார்க்கிறார். அவர் எதிர்பார்த்த மாதிரியே, இயேசு தண்ணீருக்குள்ளிருந்து வெளியே வரும்போது, ‘கடவுளுடைய சக்தி புறாவைப் போல் [இயேசுவின்] மேல் இறங்குகிறது.’—மத்தேயு 3:16.

இயேசு ஞானஸ்நானம் எடுக்கும்போது இன்னொரு விஷயமும் நடக்கிறது. அதாவது, “வானம் திறக்கப்பட்டது” என்று பைபிள் சொல்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? பூமிக்கு வருவதற்கு முன் பரலோகத்தில் வாழ்ந்த வாழ்க்கை அப்போது இயேசுவின் ஞாபகத்துக்கு வந்ததை இது குறிக்கலாம். அதாவது, கடவுளுடைய மகனாக பரலோகத்திற்குரிய உடலில் வாழ்ந்ததும் கடவுளிடமிருந்து கற்றுக்கொண்ட சத்தியங்களும் அப்போது அவருடைய ஞாபகத்துக்கு வந்தன.

இயேசு ஞானஸ்நானம் எடுக்கும்போது, “இவர் என் அன்பு மகன், நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்கிறது. (மத்தேயு 3:17) இது யாருடைய குரல்? இது இயேசுவின் குரலாக இருக்க முடியாது; ஏனென்றால், அவர் யோவானின் பக்கத்தில்தான் நின்றுகொண்டிருக்கிறார். அப்படியென்றால், இது கடவுளுடைய குரல். இதிலிருந்து, இயேசு சர்வவல்லமையுள்ள கடவுள் கிடையாது, கடவுளுடைய மகன் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இயேசு இந்தப் பூமிக்கு ஒரு மனிதராக வந்தபோது, ஆதாமைப் போலவே கடவுளின் பரிபூரண மகனாக இருந்தார். இயேசு ஞானஸ்நானம் எடுத்ததைப் பற்றிச் சொன்ன பிறகு சீஷரான லூக்கா இப்படி எழுதுகிறார்: “இயேசு ஊழியத்தை ஆரம்பித்த சமயத்தில் அவருக்குச் சுமார் 30 வயது. அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார்; யோசேப்பு ஹேலியின் மகன்; . . . தாவீதின் மகன்; . . . ஆபிரகாமின் மகன்; . . . நோவாவின் மகன்; . . . ஆதாமின் மகன்; ஆதாம் கடவுளின் மகன்.”—லூக்கா 3:23-38.

இயேசு ஞானஸ்நானம் எடுக்கும்போது, யெகோவா தன்னுடைய சக்தியை அவர்மீது ஊற்றுகிறார். அப்போது இயேசு ஒரு விசேஷ விதத்தில் கடவுளுடைய மகனாக ஆகிறார். அந்த நிமிஷத்திலிருந்து கடவுளைப் பற்றிய சத்தியங்களை அவரால் சொல்லிக்கொடுக்க முடிகிறது; வாழ்வுக்குப் போகிற வழியைக் காட்டவும் முடிகிறது. தன்னுடைய தகப்பன் கொடுத்த ஊழிய வேலையை இயேசு இப்போது செய்ய ஆரம்பிக்கிறார். அந்த ஊழியத்தின் முடிவில், பாவமுள்ள மனிதர்களுக்காக அவர் தன்னுடைய உயிரையே பலியாகக் கொடுப்பார்.