Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 17

ராத்திரி நேரத்தில் நிக்கொதேமுவுக்குக் கற்பிக்கிறார்

ராத்திரி நேரத்தில் நிக்கொதேமுவுக்குக் கற்பிக்கிறார்

யோவான் 2:23–3:21

  • நிக்கொதேமுவிடம் இயேசு பேசுகிறார்

  • ‘மறுபடியும் பிறப்பது’ என்றால் என்ன?

கி.பி. 30-ஆம் வருஷத்தின் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவதற்காக எருசலேமுக்கு இயேசு போகிறார். அங்கே பெரிய பெரிய அற்புதங்களைச் செய்கிறார். அவற்றைப் பார்த்து, நிறைய பேர் அவர்மேல் நம்பிக்கை வைக்கிறார்கள். நிக்கொதேமு என்பவரும் இயேசுவைப் பார்த்து அசந்துபோகிறார். நிக்கொதேமு ஒரு பரிசேயர்; நியாயசங்கம் என்று அழைக்கப்படுகிற யூத உயர் நீதிமன்றத்தின் உறுப்பினர். இயேசுவிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். ஆனாலும், யூதத் தலைவர்கள் யாராவது பார்த்துவிட்டால் தன்னைத் தவறாக நினைத்துவிடுவார்களோ என்று பயப்படுகிறார். அதனால், இருட்டிய பிறகு இயேசுவைப் பார்க்கப் போகிறார்.

அவர் இயேசுவிடம், “ரபீ, நீங்கள் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் செய்கிற இந்த அடையாளங்களைக் கடவுளுடைய உதவி இல்லாமல் யாராலும் செய்ய முடியாது” என்று சொல்கிறார். அப்போது இயேசு, கடவுளுடைய அரசாங்கத்துக்குள் நுழைய ஒருவன் ‘மறுபடியும் பிறக்க’ வேண்டும் என்று சொல்கிறார்.—யோவான் 3:2, 3.

ஒருவனால் எப்படி மறுபடியும் பிறக்க முடியும்? “இரண்டாவது தடவை அவன் தன்னுடைய தாயின் வயிற்றிலிருந்து பிறக்க முடியாது, இல்லையா?” என்று இயேசுவிடம் நிக்கொதேமு கேட்கிறார்.—யோவான் 3:4.

ஆனால், மறுபடியும் பிறப்பது என்பதற்கு இது அர்த்தம் கிடையாது. “தண்ணீராலும் கடவுளுடைய சக்தியாலும் ஒருவன் பிறக்கவில்லை என்றால், அவன் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் நுழைய முடியாது” என்று இயேசு சொல்கிறார். (யோவான் 3:5) இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது, கடவுளுடைய சக்தி அவர்மேல் இறங்கியது. இப்படி, “தண்ணீராலும் கடவுளுடைய சக்தியாலும்” அவர் பிறந்தார். அந்தச் சமயத்தில், “இவர் என் அன்பு மகன், நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. (மத்தேயு 3:16, 17) இப்படிச் சொன்னதன் மூலம், இயேசு ஒரு விசேஷ விதத்தில் தன்னுடைய மகனாக ஆகியிருப்பதையும், அவர் பரலோக அரசாங்கத்துக்குள் நுழைவார் என்பதையும் கடவுள் தெரியப்படுத்தினார். ஞானஸ்நானம் எடுத்த மற்ற ஆட்கள்மீது, கி.பி. 33-ஆம் வருஷம் பெந்தெகொஸ்தே நாளில் கடவுளுடைய சக்தி ஊற்றப்படும். அப்போது, அவர்கள் கடவுளுடைய மகன்களாக மறுபடியும் பிறப்பார்கள்.—அப்போஸ்தலர் 2:1-4.

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு சொல்லிக்கொடுத்த விஷயங்கள் நிக்கொதேமுவுக்குப் புரியவில்லை. அதனால், மனிதகுமாரனான தனக்கு கடவுள் கொடுத்திருக்கிற விசேஷ பொறுப்பைப் பற்றி இயேசு அவருக்கு விளக்கமாகச் சொல்கிறார். “வனாந்தரத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல் மனிதகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போதுதான், அவரை நம்புகிற எல்லாரும் முடிவில்லாத வாழ்வைப் பெறுவார்கள்” என்று நிக்கொதேமுவிடம் இயேசு சொல்கிறார்.—யோவான் 3:14, 15.

பல வருஷங்களுக்கு முன், இஸ்ரவேலர்களில் சிலரை விஷப் பாம்புகள் கடித்தன. அப்போது, மோசே செய்து வைத்த செம்புப் பாம்பைப் பார்த்தவர்கள் உயிர்பிழைத்தார்கள். (எண்ணாகமம் 21:9) அதேபோல், பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமையாக இருக்கிற எல்லா மனிதர்களும் கடவுளுடைய மகன்மேல் விசுவாசம் வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும். இந்த அன்பான ஏற்பாட்டை யெகோவாதான் செய்தார் என்பதை நிக்கொதேமுவுக்குப் புரியவைப்பதற்காக, “கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்” என்று இயேசு சொல்கிறார். (யோவான் 3:16) தன் மூலமாகத்தான் மனிதர்களுக்கு மீட்பு கிடைக்கும் என்ற உண்மையைத் தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்து ஆறு மாதங்களுக்குப் பிறகு இயேசு சொல்கிறார்.

அதோடு, ‘இந்த உலகத்தை நியாயந்தீர்ப்பதற்காக கடவுள் தன்னுடைய மகனை இந்த உலகத்துக்கு அனுப்பவில்லை’ என்று நிக்கொதேமுவிடம் இயேசு சொல்கிறார். அதாவது, எல்லா மனிதர்களுக்கும் மரண தண்டனை கொடுப்பதற்காக கடவுள் அவரை அனுப்பவில்லை. அதற்குப் பதிலாக, இந்த ‘உலகத்தை மீட்பதற்காகவே’ கடவுள் அவரை அனுப்பினார் என்று இயேசு சொல்கிறார்.—யோவான் 3:17.

நிக்கொதேமு மற்றவர்களை நினைத்துப் பயந்ததால், இருட்டிய பிறகு இயேசுவைப் பார்க்க வந்தார். கடைசியாக இயேசு அவரிடம், “நியாயத்தீர்ப்புக்கு அடிப்படையாக இருப்பது இதுதான்: இந்த உலகத்துக்கு ஒளி [தன் வாழ்க்கை மற்றும் போதனைகள் மூலமாக இயேசு ஒளியாக இருக்கிறார்] வந்திருக்கிறது. ஆனாலும், மக்களுடைய செயல்கள் பொல்லாதவையாக இருப்பதால் ஒளிக்குப் பதிலாக இருளையே விரும்புகிறார்கள். கெட்ட செயல்களைத் தொடர்ந்து செய்கிறவன் ஒளியை வெறுக்கிறான், தன்னுடைய செயல்கள் அம்பலமாகிவிட கூடாது என்பதற்காக ஒளியிடம் வராமல் இருக்கிறான். நீதியான செயல்களைச் செய்கிறவனோ, தன்னுடைய செயல்கள் கடவுளுடைய விருப்பத்தின்படி இருக்கின்றன என்பது வெளிப்படுவதற்காக ஒளியிடம் வருகிறான்” என்று சொல்கிறார்.—யோவான் 3:19-21.

ஒரு பரிசேயராகவும் இஸ்ரவேலில் போதகராகவும் இருக்கிற நிக்கொதேமு, கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் இயேசுவுக்கு இருக்கிற பொறுப்பைப் பற்றி அன்றைக்குத் தெரிந்துகொள்கிறார். அதைப் பற்றி யோசிப்பதா, அல்லது விட்டுவிடுவதா என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும்.