Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 24

கலிலேயாவில் பெரியளவில் செய்த ஊழியம்

கலிலேயாவில் பெரியளவில் செய்த ஊழியம்

மத்தேயு 4:23-25 மாற்கு 1:35-39 லூக்கா 4:42, 43

  • இயேசு தன்னுடைய நான்கு சீஷர்களோடு கலிலேயா எங்கும் பயணம் செய்கிறார்

  • அவருடைய போதனைகளும் செயல்களும் பிரபலமாகின்றன

கப்பர்நகூமில் இயேசு தன்னுடைய நான்கு சீஷர்களோடு நாள் முழுவதும் ஏகப்பட்ட வேலைகளைச் செய்கிறார். அன்று சாயங்காலமே, கப்பர்நகூமில் இருக்கிற மக்கள் தங்கள் வீட்டில் இருக்கிற நோயாளிகளை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு வருகிறார்கள். அதனால், தன் பரலோகத் தகப்பனிடம் தனியாகப் பேச இயேசுவுக்கு நேரமே கிடைக்கவில்லை.

விடியற்காலையில், இன்னமும் இருட்டாக இருக்கும்போதே, அவர் எழுந்து வெளியே போகிறார். தனிமையான ஓர் இடத்துக்குப் போய் தன் தகப்பனிடம் ஜெபம் செய்கிறார். ஆனால், கொஞ்ச நேரம்தான் அவரால் ஜெபம் செய்ய முடிகிறது. ஏனென்றால், இயேசு தங்களோடு இல்லை என்று தெரிந்ததும், “சீமோனும் அவரோடு இருந்தவர்களும்” இயேசுவைத் தேட ஆரம்பிக்கிறார்கள். பேதுருவின் (சீமோனின்) வீட்டில் இயேசு தங்கியிருந்ததால், அவருடைய தலைமையில் எல்லாரும் தேடப் போயிருக்கலாம்.—மாற்கு 1:36; லூக்கா 4:38.

கடைசியில், இயேசு இருக்கும் இடத்தை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். அப்போது பேதுரு, “எல்லாரும் உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று இயேசுவிடம் சொல்கிறார். (மாற்கு 1:37) இயேசு தங்களோடு தங்க வேண்டும் என்று கப்பர்நகூமில் இருக்கிற மக்கள் ஆசைப்படுகிறார்கள். இயேசு செய்த உதவிகளை அவர்கள் உயர்வாக மதிக்கிறார்கள். அதனால், ‘தங்களைவிட்டுப் போகாதபடி அவரைத் தடுக்கப் பார்க்கிறார்கள்.’ (லூக்கா 4:42) ஆனால், இயேசு வெறுமனே அற்புதமாக நோயாளிகளைக் குணமாக்கத்தான் இந்தப் பூமிக்கு வந்தாரா? கப்பர்நகூமில் இருக்கிற மக்களுக்கு உதவி செய்துகொண்டு அங்கேயே இருந்துவிடுவாரா? இதைப் பற்றி அவர் என்ன சொல்கிறார்?

இயேசு தன் சீஷர்களிடம், “பக்கத்திலுள்ள வேறு ஊர்களுக்குப் போகலாம், வாருங்கள்; அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும்; இதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்” என்று சொல்கிறார். அதேபோல், தங்களோடு தங்கும்படி சொன்ன மக்களிடமும், “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தை பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொல்கிறார்.—மாற்கு 1:38; லூக்கா 4:43.

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதற்காகவே இயேசு முக்கியமாக பூமிக்கு வந்திருக்கிறார். அந்த அரசாங்கம் மட்டும்தான் கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தும்; மனிதர்களுடைய எல்லா பிரச்சினைகளையும் நிரந்தரமாகச் சரிசெய்யும். கடவுள்தான் தன்னை அனுப்பினார் என்று காட்டுவதற்காக இயேசு அற்புதங்களைச் செய்கிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன் மோசேயும்கூட அற்புதங்களைச் செய்து, கடவுள்தான் தன்னை அனுப்பினார் என்று நிரூபித்திருந்தார்.—யாத்திராகமம் 4:1-9, 30, 31.

இயேசு கப்பர்நகூமிலிருந்து கிளம்பி மற்ற நகரங்களில் பிரசங்கிக்கப் போகிறார். பேதுருவும் அவருடைய சகோதரர் அந்திரேயாவும், யோவானும் அவருடைய சகோதரர் யாக்கோபும் அவருடன் போகிறார்கள். அவருடன் பயணம் செய்யும் முதல் சீஷர்கள் இவர்கள்தான். ஒரு வாரத்துக்கு முன்புதான், தன்னுடன் ஊழியம் செய்ய வரும்படி இயேசு அவர்களைக் கூப்பிட்டிருந்தார்.

இந்த நான்கு சீஷர்களோடு கலிலேயாவில் இயேசு செய்த ஊழியத்துக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. இயேசுவைப் பற்றிய செய்தி எட்டுத்திக்கிலும் பரவுகிறது. “அவரைப் பற்றிய பேச்சு சீரியா முழுவதும்,” தெக்கப்போலி என்று அழைக்கப்படுகிற பத்து நகரங்களின் பகுதியிலும், யோர்தான் ஆற்றின் அக்கரையிலும் பரவுகிறது. (மத்தேயு 4:24, 25) இந்தப் பகுதிகளிலிருந்தும் யூதேயாவிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, இயேசு மற்றும் அவருடைய சீஷர்களின் பின்னால் போகிறார்கள். நோயாளிகளையும் பேய் பிடித்தவர்களையும் அவரிடம் கூட்டிக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் எல்லாரையும் இயேசு குணமாக்குகிறார்.