Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 26

“உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”

“உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”

மத்தேயு 9:1-8 மாற்கு 2:1-12 லூக்கா 5:17-26

  • பக்கவாத நோயாளியின் பாவத்தை மன்னித்து, அவனைக் குணப்படுத்துகிறார்

இயேசுவைப் பற்றிய செய்தி எல்லா இடங்களுக்கும் பரவுகிறது. அவருடைய போதனையைக் கேட்பதற்காகவும் அவர் செய்கிற அற்புதங்களைப் பார்ப்பதற்காகவும் ஒதுக்குப்புறமான இடங்களுக்குக்கூட நிறைய பேர் பயணம் செய்து வருகிறார்கள். சில நாட்கள் கழித்து, அவருடைய ஊழியத்தின் மைய இடமாக இருக்கிற கப்பர்நகூமுக்கு அவர் திரும்பிப் போகிறார். அவர் வந்துவிட்டார் என்ற செய்தி கலிலேயா கடலோரமாக இருக்கிற இந்த நகரத்திலிருந்து மற்ற இடங்களுக்குப் பரவுகிறது. அவரைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் அவர் தங்கியிருக்கிற வீட்டுக்கு வருகிறார்கள். கலிலேயா, யூதேயா ஆகிய இடங்களிலிருந்தும் எருசலேம் நகரத்திலிருந்தும் பரிசேயர்கள், திருச்சட்டப் போதகர்கள் ஆகியோரும் அங்கே வருகிறார்கள்.

‘நிறைய பேர் அங்கே வந்திருப்பதால், வாசல்கதவின் பக்கத்தில்கூட நிற்க முடியாதளவுக்குக் கூட்டம் நிரம்பி வழிகிறது. அவர்களிடம் கடவுளுடைய வார்த்தையை அவர் பேச ஆரம்பிக்கிறார்.’ (மாற்கு 2:2) இப்போது ஒரு அற்புதமான சம்பவம் நடக்கப்போகிறது. இந்தச் சம்பவத்திலிருந்து, மனிதர்கள் படுகிற கஷ்டத்துக்கு முக்கியக் காரணம் எதுவோ, அதை நீக்கும் சக்தி இயேசுவுக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வோம். அதோடு, யாரையெல்லாம் அவர் குணமாக்க விரும்புகிறாரோ அவர்களையெல்லாம் அவரால் குணமாக்க முடியும் என்பதையும் தெரிந்துகொள்வோம்.

கூட்டமாக இருக்கிற அந்த அறையில் இயேசு கற்பித்துக்கொண்டிருக்கும்போது, பக்கவாத நோயாளி ஒருவனை நான்கு பேர் படுக்கையோடு தூக்கிக்கொண்டு வருகிறார்கள். தங்களுடைய நண்பனை இயேசு குணமாக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால், கூட்டம் அதிகமாக இருப்பதால் “இயேசுவுக்குப் பக்கத்தில் அவனைக் கொண்டுபோக முடியவில்லை.” (மாற்கு 2:4) அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! அதனால், அவர்கள் தட்டையாக இருக்கிற வீட்டுக்கூரையின் மேல் ஏறி, ஓடுகளைப் பிரிக்கிறார்கள். பிறகு, அந்தப் பக்கவாத நோயாளியைப் படுக்கையோடு வீட்டுக்குள் இறக்குகிறார்கள்.

இதைப் பார்த்து இயேசுவுக்கு கோபம் வருகிறதா? இல்லவே இல்லை! அவர்களுடைய விசுவாசத்தைப் பார்த்து இயேசு அசந்துபோகிறார். அவர் பக்கவாத நோயாளியிடம், “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன” என்று சொல்கிறார். (மத்தேயு 9:2) இயேசுவினால் பாவங்களை மன்னிக்க முடியுமா? இயேசு சொன்னதைக் கேட்டு வேத அறிஞர்களும் பரிசேயர்களும் கோபப்படுகிறார்கள். “இந்த மனுஷன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் தெய்வ நிந்தனை செய்கிறான். கடவுள் ஒருவரைத் தவிர வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று யோசிக்கிறார்கள்.—மாற்கு 2:7.

அவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்பதை இயேசு உடனடியாகப் புரிந்துகொள்கிறார். அதனால், “உங்கள் இதயத்தில் ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்? இந்தப் பக்கவாத நோயாளியிடம், ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன’ என்று சொல்வது சுலபமா, அல்லது ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று சொல்வது சுலபமா?” என்று கேட்கிறார். (மாற்கு 2:8, 9) இயேசு சீக்கிரத்தில் தன்னுடைய உயிரைப் பலியாகக் கொடுக்கப்போகிறார். அந்தப் பலியின் அடிப்படையில் அந்த மனிதனுடைய பாவத்தை அவரால் மன்னிக்க முடியும்.

பூமியில் மனிதர்களின் பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் இயேசுவுக்கு இருக்கிறது. இதைத் தன்னிடம் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இயேசு காட்டுகிறார். இயேசு அந்தப் பக்கவாத நோயாளியிடம் திரும்பி, “நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போ” என்று கட்டளையிடுகிறார். உடனடியாக அவன் எழுந்து, தன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கும் முன்னால் வெளியே நடந்துபோகிறான். எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம்! “இந்த மாதிரி ஒன்றை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை” என்று சொல்லி எல்லாரும் கடவுளைப் புகழ்கிறார்கள்.—மாற்கு 2:11, 12.

பாவத்துக்கும் நோய்க்கும் சம்பந்தம் இருப்பதாக, அதாவது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் உடல் ஆரோக்கியம் அடைவதற்கும் சம்பந்தம் இருப்பதாக, இயேசு இங்கே சொல்வதைக் கவனியுங்கள். நம்முடைய முதல் தகப்பனான ஆதாம் பாவம் செய்தான்; அதன் விளைவாக நோயையும் மரணத்தையும் அவனுடைய வாரிசுகளான நாம் அனுபவிக்கிறோம் என்று பைபிள் சொல்கிறது. கடவுளை நேசித்து, அவருக்குச் சேவை செய்கிற எல்லாருடைய பாவங்களையும் கடவுளுடைய ஆட்சியில் இயேசு மன்னிப்பார். அப்போது நோய்கள் எல்லாம் பறந்துவிடும்!—ரோமர் 5:12, 18, 19.