Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 30

கடவுளின் மகன்தான் இயேசு

கடவுளின் மகன்தான் இயேசு

யோவான் 5:17-47

  • கடவுள்தான் என் தகப்பன் என்று இயேசு சொல்கிறார்

  • உயிர்த்தெழுதலைப் பற்றிய வாக்குறுதி

இயேசு ஓய்வுநாளில் ஒரு நோயாளியைக் குணமாக்கியதால், அவர் ஓய்வுநாளை மதிக்கவில்லை என்று யூதர்கள் சிலர் பழி போடுகிறார்கள். அதற்கு இயேசு, “என் தகப்பன் இதுவரை வேலை செய்துவந்திருக்கிறார், நானும் வேலை செய்துவருகிறேன்” என்று சொல்கிறார்.—யோவான் 5:17.

ஓய்வுநாளைப் பற்றித் திருச்சட்டத்தில் கொடுக்கப்பட்ட கட்டளையை இயேசு மீறவில்லை. கடவுள் எப்போதும் நல்லது செய்கிறார். அவரைப் பின்பற்றுவதால் இயேசுவும் பிரசங்கிப்பது, குணமாக்குவது போன்ற நல்ல செயல்களைச் செய்கிறார். அவற்றை எல்லா நாட்களிலும் செய்கிறார். இயேசு சொன்ன பதிலைக் கேட்டு யூதர்களுக்குக் கோபம் அதிகமாகிறது. அதனால், இயேசுவைத் தீர்த்துக்கட்ட வழி தேடுகிறார்கள். அவர்கள் ஏன் இந்தளவுக்குக் கோபப்படுகிறார்கள்?

குணமாக்குவதன் மூலம் இயேசு ஓய்வுநாள் சட்டத்தை மீறுகிறார் என்று தவறாக நினைத்துக்கொண்டு யூதர்கள் ஏற்கெனவே அவர்மேல் கோபமாக இருக்கிறார்கள். இப்போது, அவர் தன்னைக் கடவுளின் மகன் என்று சொன்னதைக் கேட்டதும் அவர்களுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. கடவுளைத் தன்னுடைய சொந்த தகப்பன் என்று சொல்லி, அவர் தன்னைக் கடவுளுக்குச் சமமாக்கிக்கொண்டதாக யூதர்கள் நினைக்கிறார்கள். இப்படிச் சொல்வது யெகோவாவைப் பழிப்பதற்குச் சமம் என்று கருதுகிறார்கள். ஆனால், இயேசு அவர்களைப் பார்த்து பயப்படவில்லை. யெகோவாவுக்கும் தனக்கும் இடையே இருக்கிற விசேஷ பந்தத்தைப் பற்றிக் கூடுதலாக அவர்களிடம் சொல்கிறார். “மகன்மேல் தகப்பன் பாசம் வைத்திருப்பதால், தான் செய்கிற எல்லாவற்றையும் அவருக்குக் காட்டுகிறார்” என்று அவர்களிடம் சொல்கிறார்.—யோவான் 5:20.

பரலோகத் தகப்பன்தான் எல்லாருக்கும் உயிர் கொடுப்பவர். இறந்தவர்களை உயிரோடு எழுப்புகிற சக்தியைச் சிலருக்குக் கொடுத்ததன் மூலம், அவர் இதை ஏற்கெனவே நிரூபித்திருக்கிறார். “இறந்தவர்களைத் தகப்பன் உயிரோடு எழுப்புவது போலவே மகனும் தனக்கு விருப்பமானவர்களை உயிரோடு எழுப்புகிறார்” என்று இயேசு சொல்கிறார். (யோவான் 5:21) இந்த வார்த்தைகள் அருமையான எதிர்கால நம்பிக்கையைத் தருகின்றன. இன்றும்கூட, ஆன்மீக ரீதியில் இறந்துபோனவர்களை இயேசு உயிரோடு எழுப்புகிறார். அதனால்தான், “என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புகிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்; அவன் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாமல் சாவைக் கடந்து வாழ்வைப் பெறுவான்” என்று அவர் சொல்கிறார்.—யோவான் 5:24.

இந்த வார்த்தைகளைச் சொல்வதற்கு முன், இயேசு யாரையும் உயிரோடு எழுப்பியதாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. ஆனால், இறந்துபோனவர்கள் நிஜமாகவே உயிரோடு எழுந்திருப்பார்கள் என்று அந்த யூதர்களிடம் இயேசு சொல்கிறார். “நேரம் வருகிறது; அப்போது, நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்” என்று சொல்கிறார்.—யோவான் 5:28, 29.

இப்படி இயேசுவின் கையில் மிகப் பெரிய பொறுப்பு இருந்தாலும்கூட, தான் கடவுளுக்குக் கீழ்ப்பட்டவர் என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார். “என்னால் எதையுமே சொந்தமாகச் செய்ய முடியாது. . . . நான் என்னுடைய விருப்பத்தை அல்ல, என்னை அனுப்பியவருடைய விருப்பத்தையே நாடுகிறேன்” என்று சொல்கிறார். (யோவான் 5:30) முதல் தடவையாக, கடவுளுடைய நோக்கம் நிறைவேறுவதில் தனக்கு இருக்கும் முக்கியப் பொறுப்பைப் பற்றி அவர் வெளிப்படையாகப் பேசுகிறார். இந்த விஷயங்களுக்கு இயேசுவைத் தவிர வேறொருவரும் சாட்சியாக இருக்கிறார். “நீங்கள் யோவானிடம் [யோவான் ஸ்நானகரிடம்] ஆள் அனுப்பினீர்கள், அவர் சத்தியத்தைப் பற்றிச் சாட்சி கொடுத்தார்” என்று இயேசு அந்த யூதர்களுக்கு ஞாபகப்படுத்துகிறார்.—யோவான் 5:33.

இரண்டு வருஷங்களுக்கு முன்பு, தனக்குப் பின் வரப்போகிறவரைப் பற்றி, அதாவது “கிறிஸ்து” என்றும் “வரவேண்டிய தீர்க்கதரிசி” என்றும் சொல்லப்பட்டவரைப் பற்றி, யூத மதத் தலைவர்களிடம் யோவான் சொல்லியிருந்தார். (யோவான் 1:20-25) இயேசுவை எதிர்க்கிறவர்கள் அதைக் கேள்விப்பட்டிருப்பார்கள். இப்போது சிறையில் இருக்கிற யோவானை ஒருகாலத்தில் அந்த யூதர்கள் உயர்வாக மதித்தார்கள். அதனால் இயேசு, “கொஞ்சக் காலம் அவருடைய ஒளியில் சந்தோஷமாக இருக்க விரும்பினீர்கள்” என்று அவர்களிடம் சொல்கிறார். (யோவான் 5:35) ஆனால், யோவான் ஸ்நானகருடைய சாட்சியைவிட முக்கியமான சாட்சி ஒன்று இருப்பதாக இயேசு சொல்கிறார்.

“நான் செய்து வருகிற செயல்கள்தான், [சற்றுமுன் அவர் ஒருவரைக் குணமாக்கியதும் இதில் அடங்கும்] தகப்பன் என்னை அனுப்பினார் என்பதற்குச் சாட்சி கொடுக்கின்றன” என்று இயேசு சொல்கிறார். அதோடு, “என்னை அனுப்பிய தகப்பனே என்னைப் பற்றிச் சாட்சி கொடுத்திருக்கிறார்” என்றும் சொல்கிறார். (யோவான் 5:36, 37) உதாரணமாக, இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது கடவுள் அவரைப் பற்றிச் சாட்சி கொடுத்தார்.—மத்தேயு 3:17.

உண்மையைச் சொல்லப்போனால், இயேசுவை ஒதுக்கித்தள்ளுவதற்கு அவருடைய எதிரிகள் எந்தச் சாக்குப்போக்கும் சொல்ல முடியாது. வேதவசனங்களை ஆராய்ந்து படிப்பதாக அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், அந்த வசனங்களே இயேசுவைப் பற்றிச் சாட்சி சொல்கின்றன. அதனால்தான், “நீங்கள் மோசேயை நம்பினால் என்னையும் நம்புவீர்கள். ஏனென்றால், அவர் என்னைப் பற்றி எழுதியிருக்கிறார். அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால், நான் சொல்கிறவற்றை எப்படி நம்புவீர்கள்?” என்று கடைசியாக இயேசு அவர்களிடம் கேட்கிறார்.—யோவான் 5:46, 47.