Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 47

ஒரு சிறுமி உயிரோடு எழுப்பப்படுகிறாள்

ஒரு சிறுமி உயிரோடு எழுப்பப்படுகிறாள்

மத்தேயு 9:18, 23-26 மாற்கு 5:22-24, 35-43 லூக்கா 8:40-42, 49-56

  • யவீருவின் மகளை இயேசு உயிரோடு எழுப்புகிறார்

இரத்தப்போக்கால் அவதிப்பட்ட பெண்ணை இயேசு குணமாக்கியதை யவீரு பார்க்கிறார். அவருடைய மகளையும் இயேசுவினால் கண்டிப்பாகக் குணமாக்க முடியும். ஆனால், “இந்நேரத்துக்குள் என் மகள் செத்துப்போயிருப்பாள்” என்று யவீரு நினைக்கிறார். (மத்தேயு 9:18) அப்படி ஏதாவது நடந்தாலும் இயேசுவினால் உதவி செய்ய முடியுமா?

இரத்தப்போக்கிலிருந்து குணமான பெண்ணிடம் இயேசு பேசிக்கொண்டிருக்கும்போதே யவீருவின் வீட்டிலிருந்து சில ஆட்கள் வருகிறார்கள். அவர்கள் யவீருவிடம், “உங்கள் மகள் இறந்துவிட்டாள்! இனி எதற்காகப் போதகரைத் தொந்தரவு செய்ய வேண்டும்?” என்று சொல்கிறார்கள்.—மாற்கு 5:35.

யவீருவுக்கு இடிவிழுந்ததுபோல் இருக்கிறது. அவர் அந்த ஊரில் எல்லாராலும் மதிக்கப்படுகிறவர், செல்வாக்கு உள்ளவர். ஆனால், இப்போது எதுவும் செய்யமுடியாமல் நிலைகுலைந்து நிற்கிறார். அவருடைய ஒரே மகள் இப்போது இறந்துவிட்டாள்! அந்த ஆட்கள் சொன்னது இயேசுவின் காதிலும் விழுகிறது. அவர் யவீருவிடம் திரும்பி, “பயப்படாதே, விசுவாசத்தோடு இரு” என்று சொல்கிறார்.—மாற்கு 5:36.

பிறகு, யவீருவோடு சேர்ந்து அவருடைய வீட்டுக்குப் போகிறார். அங்கே ஒரே கூச்சலாக இருக்கிறது. அவருடைய வீட்டில் கூடியிருக்கிற மக்கள் அழுகிறார்கள்... கதறுகிறார்கள்... துக்கத்தில் நெஞ்சில் அடித்துக்கொள்கிறார்கள். இயேசு உள்ளே போய், “சிறுமி சாகவில்லை, அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள்” என்று சொல்லி எல்லாரையும் திடுக்கிட வைக்கிறார். (மாற்கு 5:39) அவர் சொன்னதைக் கேட்டு அவர்கள் ஏளனமாகச் சிரிக்கிறார்கள். அந்தச் சிறுமி செத்துப்போய்விட்டாள் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், தூங்குகிறவர்களை எழுப்புவது போல, இறந்தவர்களை கடவுளுடைய சக்தியின் மூலம் உயிரோடு எழுப்ப முடியும் என்பதை இயேசு அவர்களுக்குக் காட்டப்போகிறார்.

பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரையும் இறந்துபோன சிறுமியின் பெற்றோரையும் தவிர மற்ற எல்லாரையும் இயேசு வெளியே அனுப்புகிறார். இவர்கள் ஐந்து பேரை மட்டும் கூட்டிக்கொண்டு அந்தச் சிறுமி படுத்திருக்கிற இடத்துக்குப் போகிறார். அவளுடைய கையைப் பிடித்து, ‘“தலீத்தா கூமி” என்று சொல்கிறார். அதற்கு, “சிறுமியே, ‘எழுந்திரு!’ என்று நான் உனக்குச் சொல்கிறேன்” என்று அர்த்தம்.’ (மாற்கு 5:41) உடனே, அந்தச் சிறுமி எழுந்து நடக்க ஆரம்பிக்கிறாள். அவளுடைய அப்பா-அம்மாவின் சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை! அந்தச் சிறுமி சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுக்கும்படி இயேசு சொல்கிறார். அவள் இப்போது நிஜமாகவே உயிரோடு இருக்கிறாள் என்பதற்கு இது அத்தாட்சியாக இருக்கிறது.

பொதுவாக, தான் குணப்படுத்துகிற ஆட்களிடம் அதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு சொல்வார். அதைத்தான் யவீருவிடமும் அவருடைய மனைவியிடமும்கூட சொல்கிறார். ஆனாலும், இந்தச் செய்தி “அந்தப் பகுதியெங்கும்” பரவுகிறது. (மத்தேயு 9:26) உங்களுக்குப் பிரியமான ஒருவர் உயிரோடு எழுப்பப்படுவதை நீங்கள் பார்த்தால், அதைப் பற்றி எல்லாரிடமும் சந்தோஷமாகச் சொல்ல மாட்டீர்களா? பைபிள் பதிவுகளின்படி, இது இயேசு செய்த இரண்டாவது உயிர்த்தெழுதல்.