Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 49

அப்போஸ்தலர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்

அப்போஸ்தலர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்

மத்தேயு 9:35–10:15 மாற்கு 6:6-11 லூக்கா 9:1-5

  • இயேசு மறுபடியும் கலிலேயாவில் பிரசங்கிக்கிறார்

  • பிரசங்கிப்பதற்காகத் தன்னுடைய அப்போஸ்தலர்களை அனுப்புகிறார்

கிட்டத்தட்ட இரண்டு வருஷங்களாக இயேசு மும்முரமாகப் பிரசங்கித்துக்கொண்டிருக்கிறார். இப்போது, கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறாரா? இல்லவே இல்லை! பிரசங்க வேலையை இன்னும் விரிவுபடுத்தத்தான் நினைக்கிறார். ‘இயேசு [கலிலேயாவில் இருக்கிற] எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் போய், அங்கிருக்கிற ஜெபக்கூடங்களில் கற்பிக்கிறார், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிறார், எல்லா விதமான நோய்களையும் எல்லா விதமான உடல் பலவீனங்களையும் குணமாக்குகிறார்.’ (மத்தேயு 9:35) அங்கே கவனிக்கிற விஷயங்களை வைத்து, பிரசங்க வேலையை இன்னும் விரிவுபடுத்த வேண்டும் என்று புரிந்துகொள்கிறார். இதை எப்படிச் செய்வார்?

இயேசு பயணம் செய்யும்போது, மக்கள் ஆன்மீக விதத்தில் நோயாளிகளாக இருப்பதையும், ஆறுதலுக்காக ஏங்குவதையும் பார்க்கிறார். அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் இருக்கிறார்கள்; கொடுமைப்படுத்தப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து இயேசுவின் மனம் உருகுகிறது. இயேசு தன் சீஷர்களிடம், “அறுவடை அதிகமாக இருக்கிறது, ஆனால் வேலையாட்கள் குறைவாக இருக்கிறார்கள். அதனால், அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பச் சொல்லி அறுவடையின் எஜமானிடம் கெஞ்சிக் கேளுங்கள்” என்று சொல்கிறார்.—மத்தேயு 9:37, 38.

அதற்காக, தன்னுடைய 12 அப்போஸ்தலர்களைக் கூப்பிட்டு, அவர்களை இரண்டு இரண்டு பேராகப் பிரிக்கிறார். அவர்களிடம், “மற்ற தேசத்தாரின் பகுதிக்குள் போகாதீர்கள்; சமாரியர்களுடைய எந்த நகரத்துக்குள்ளும் நுழையாதீர்கள். வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் தேசத்தாரிடமே போங்கள். அப்படிப் போகும்போது, ‘பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது’ என்று பிரசங்கியுங்கள்” என்று சொல்லி அனுப்புகிறார்.—மத்தேயு 10:5-7.

இயேசு தன்னுடைய மாதிரி ஜெபத்தில் சொன்ன அரசாங்கத்தைப் பற்றித்தான் அப்போஸ்தலர்கள் பிரசங்கிக்கிறார்கள். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவான இயேசு கிறிஸ்து அங்கே இருப்பதால், ‘பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது’ என்று அவர்கள் சொல்கிறார்கள். பரலோக அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை மக்கள் எப்படித் தெரிந்துகொள்வார்கள்? நோயாளிகளைக் குணமாக்கவும், இறந்தவர்களை உயிரோடு எழுப்பவும் இயேசு அவர்களுக்குச் சக்தி கொடுக்கிறார். இதையெல்லாம் இலவசமாகச் செய்யும்படி சொல்கிறார். அப்படியென்றால், சீஷர்கள் தங்களுடைய அடிப்படைத் தேவைகளுக்காக என்ன செய்வார்கள்?

இந்தப் பிரசங்கப் பயணத்தின்போது எதையும் எடுத்துக்கொண்டு போக வேண்டாம் என்று இயேசு தன் சீஷர்களிடம் சொல்கிறார். பணப் பைகளில் தங்கத்தையோ வெள்ளியையோ செம்பையோ அவர்கள் கொண்டுபோகக் கூடாது. பயணத்துக்காக உணவுப் பையையோ, கூடுதல் உடைகளையோ, செருப்புகளையோ எடுத்துக்கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், “வேலை செய்கிறவன் தன் உணவைப் பெறத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்” என்று சொல்லி இயேசு அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார். (மத்தேயு 10:10) அவர்கள் சொல்கிற செய்தியை ஏற்றுக்கொள்கிற மக்களே அவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வார்கள். அதனால், “நீங்கள் எந்த ஊரிலாவது ஒரு வீட்டுக்குப் போனால், அந்த ஊரைவிட்டுப் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள்” என்று இயேசு சொல்கிறார்.—மாற்கு 6:10.

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை எப்படிச் சொல்ல வேண்டும் என்பதையும்கூட இயேசு சொல்லித்தருகிறார். “ஒரு வீட்டுக்குள் போகும்போது, அங்கிருப்பவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். அந்த வீட்டில் இருப்பவர்கள் தகுதியுள்ளவர்களாக இருந்தால், நீங்கள் வாழ்த்துச் சொன்னபடி அவர்களுக்குச் சமாதானம் கிடைக்கட்டும்; தகுதியில்லாதவர்களாக இருந்தால், அந்தச் சமாதானம் உங்களிடமே திரும்பட்டும். யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அல்லது உங்களுடைய வார்த்தைகளைக் கேட்காவிட்டால், அந்த வீட்டையோ நகரத்தையோ விட்டுப் புறப்படும்போது உங்களுடைய பாதங்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்” என்று அவர்களிடம் சொல்கிறார்.—மத்தேயு 10:12-14.

ஒருவேளை, ஒட்டுமொத்த ஊருமே அவர்கள் சொல்கிற செய்தியைக் கேட்கவில்லை என்றால், அந்த ஊருக்கு என்ன நடக்கும்? கடுமையான தண்டனை கிடைக்கும் என்று இயேசு சொல்கிறார். “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளில் சோதோம் கொமோரா நகரங்களுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட அந்த நகரத்துக்குக் கிடைக்கும் தண்டனை பயங்கரமாக இருக்கும்” என்று இயேசு விளக்குகிறார்.—மத்தேயு 10:15.