Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 50

துன்புறுத்தல் மத்தியிலும் பிரசங்கிக்கத் தயார்படுத்துகிறார்

துன்புறுத்தல் மத்தியிலும் பிரசங்கிக்கத் தயார்படுத்துகிறார்

மத்தேயு 10:16–11:1 மாற்கு 6:12, 13 லூக்கா 9:6

  • இயேசு தன் அப்போஸ்தலர்களுக்குப் பயிற்சி கொடுத்து அனுப்புகிறார்

இயேசு தன் அப்போஸ்தலர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்புவதற்கு முன், பிரசங்க வேலை சம்பந்தமாக அருமையான அறிவுரைகளைக் கொடுக்கிறார். அதோடு, அந்த வேலையை எதிர்ப்பவர்களைப் பற்றியும் எச்சரிக்கிறார். “இதோ! ஓநாய்கள் நடுவில் ஆடுகளை அனுப்புவதுபோல் உங்களை அனுப்புகிறேன் . . . எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், மனுஷர்கள் உங்களை உள்ளூர் நீதிமன்றங்களுக்குக் கொண்டுபோய் நிறுத்துவார்கள்; தங்களுடைய ஜெபக்கூடங்களில் உங்களை முள்சாட்டையால் அடிப்பார்கள். அதுமட்டுமல்ல, நீங்கள் என்னுடைய சீஷர்களாக இருப்பதால், உங்களை ஆளுநர்களுக்கும் ராஜாக்களுக்கும் முன்னால் நிறுத்துவார்கள்” என்று சொல்கிறார்.—மத்தேயு 10:16-18.

இயேசுவின் சீஷர்களுக்குப் பயங்கரமான துன்புறுத்தல் வரலாம். ஆனாலும், இயேசு அவர்களைத் தைரியப்படுத்துகிறார். “அவர்கள் உங்களை அதிகாரிகள்முன் நிறுத்தும்போது, எப்படிப் பேசுவது என்றோ என்ன பேசுவது என்றோ கவலைப்படாதீர்கள். நீங்கள் என்ன பேச வேண்டுமோ அது அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். அப்போது நீங்களாகவே பேச மாட்டீர்கள், உங்கள் பரலோகத் தகப்பனுடைய சக்தி உங்களைப் பேச வைக்கும்” என்று சொல்கிறார். அதோடு, “சகோதரனின் சாவுக்குச் சகோதரனும், பிள்ளையின் சாவுக்கு அப்பாவும் காரணமாக இருப்பார்கள். பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களுடைய சாவுக்குக் காரணமாவார்கள். நீங்கள் என் சீஷர்களாக இருப்பதால் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள்; ஆனால், முடிவுவரை சகித்திருப்பவர்தான் மீட்புப் பெறுவார்” என்றும் சொல்கிறார்.—மத்தேயு 10:19-22.

பிரசங்க வேலை மிக முக்கியமானது. அதைச் செய்யும்போது சீஷர்கள் விவேகமாக நடந்துகொள்ள வேண்டும் என்று இயேசு சொல்கிறார். அப்போதுதான், சீஷர்களால் அந்த வேலையைத் தொடர்ந்து செய்ய முடியும். “அவர்கள் உங்களை ஒரு நகரத்தில் துன்புறுத்தினால், வேறொரு நகரத்துக்குத் தப்பித்து ஓடுங்கள்; உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனிதகுமாரன் வருவதற்குள் இஸ்ரவேலில் உள்ள எல்லா நகரங்களிலும் பிரசங்கித்து முடித்திருக்கவே மாட்டீர்கள்” என்கிறார்.—மத்தேயு 10:23.

இயேசு தன்னுடைய 12 அப்போஸ்தலர்களுக்கு அருமையான அறிவுரைகளையும், எச்சரிப்புகளையும் கொடுக்கிறார்; அவர்களை உற்சாகப்படுத்துகிறார். ஆனால், இந்த வார்த்தைகளை அந்த 12 பேருக்காக மட்டும் அவர் சொல்லவில்லை, அவர் இறந்து உயிர்த்தெழுந்த பிறகு பிரசங்க வேலையைச் செய்யப்போகிற எல்லாருக்காகவும்தான் சொல்கிறார். ஏனென்றால், அப்போஸ்தலர்கள் பிரசங்கிக்கப் போன இடங்களில் இருக்கிறவர்கள் மட்டுமல்ல, ‘எல்லா மக்களும் அவர்களை வெறுப்பார்கள்’ என்று இயேசு சொல்கிறார். அதோடு, அப்போஸ்தலர்கள் கலிலேயாவில் பிரசங்கித்த அந்தச் சமயத்தில், அவர்களை யாரும் ஆளுநர்களிடமோ ராஜாக்களிடமோ கொண்டுபோனதாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை; அப்போஸ்தலர்களின் குடும்பத்தார் யாரும் அவர்களுடைய சாவுக்குக் காரணமாக இருந்ததாகவும் பதிவுகள் இல்லை.

எதிர்காலத்தில் நடக்கப்போவதைப் பற்றித்தான் இயேசு தன் அப்போஸ்தலர்களிடம் சொன்னார் என்பது தெளிவாகத் தெரிகிறது. “மனிதகுமாரன் வருவதற்குள்” அவருடைய சீஷர்கள் எல்லா நகரங்களிலும் பிரசங்கித்து முடித்திருக்க மாட்டார்கள் என்று இயேசு சொன்னதைக் கவனியுங்கள். மகிமைப்படுத்தப்பட்ட ராஜாவான இயேசு கிறிஸ்து கடவுளால் நியமிக்கப்பட்ட நீதிபதியாக வருவதற்கு முன் அவருடைய சீஷர்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கித்து முடித்திருக்க மாட்டார்கள் என்பதுதான் இதற்கு அர்த்தம்.

பிரசங்க வேலைக்கு எதிர்ப்பு வந்தால், சீஷர்கள் அதைப் பார்த்து ஆச்சரியப்படக் கூடாது. ஏனென்றால், “மாணவன் தன்னுடைய குருவைவிட பெரியவன் அல்ல, அடிமை தன்னுடைய எஜமானைவிட பெரியவன் அல்ல” என்று இயேசு சொல்கிறார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு பிரசங்கிப்பதால், மக்கள் அவரைக் கேவலமாக நடத்துகிறார்கள், துன்புறுத்துகிறார்கள். அவருடைய சீஷர்களையும் அதேபோலத்தான் நடத்துவார்கள். ஆனாலும், “உங்கள் உடலைக் கொல்ல முடிந்தாலும் உங்கள் உயிரைக் கொல்ல முடியாத ஆட்களுக்குப் பயப்படாதீர்கள். உயிர், உடல் இரண்டையுமே கெஹென்னாவில் அழிக்க முடிந்தவருக்கே பயப்படுங்கள்” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 10:24, 28.

இந்த விஷயத்தில் இயேசு நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். எல்லா சக்தியும் உள்ள யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதற்காக, அவர் மரணத்தையும் தைரியமாக ஏற்றுக்கொண்டார். சர்வவல்லமையுள்ள கடவுளால் மட்டும்தான் ஒருவரின் “உயிரை” (மறுபடியும் வாழ்வதற்கான நம்பிக்கையை) அழிக்கவோ, அவரை உயிரோடு எழுப்பி நிரந்தரமாக வாழ வைக்கவோ முடியும். இந்த வார்த்தைகள் அப்போஸ்தலர்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றன.

அடுத்ததாக, தன்னுடைய சீஷர்கள்மீது கடவுள் எந்தளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை உதாரணத்தோடு இயேசு விளக்குகிறார். “குறைந்த மதிப்புள்ள ஒரு காசுக்கு இரண்டு சிட்டுக்குருவிகளை விற்கிறார்கள்தானே? ஆனால், அவற்றில் ஒன்றுகூட உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியாமல் தரையில் விழுவதில்லை. . . . அதனால், பயப்படாதீர்கள்; சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மதிப்புள்ளவர்கள்” என்று அவர்களிடம் சொல்கிறார்.—மத்தேயு 10:29, 31.

இயேசுவின் சீஷர்கள் பிரசங்கிக்கிற செய்தியால் குடும்பத்தில் பிரிவினைகள் ஏற்படும். ஏனென்றால், ஒரே குடும்பத்தில் இருக்கிற சிலர் அதை ஏற்றுக்கொள்வார்கள், சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால்தான், “பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்” என்று இயேசு சொல்கிறார். உண்மைதான், பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள ஒருவருக்குத் தைரியம் தேவை. “என்மேல் காட்டும் பாசத்தைவிட தன் அப்பாவிடமோ அம்மாவிடமோ அதிக பாசம் காட்டுகிறவன் எனக்குச் சீஷனாக இருக்க முடியாது; என்மேல் காட்டும் பாசத்தைவிட தன் மகனிடமோ மகளிடமோ அதிக பாசம் காட்டுகிறவன் எனக்குச் சீஷனாக இருக்க முடியாது” என்று அவர் சொல்கிறார்.—மத்தேயு 10:34, 37.

எதிர்க்கிறவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சீஷர்களை அன்பாக வரவேற்கிற ஆட்களும் இருக்கத்தான் செய்வார்கள். “தாழ்மையானவர்களான இவர்களில் ஒருவர் என்னுடைய சீஷராக இருப்பதால், இவருக்கு ஒரு குவளை குளிர்ந்த தண்ணீர் கொடுக்கிறவனும்கூட கண்டிப்பாகத் தன்னுடைய பலனைப் பெறுவான்” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 10:42.

இயேசு கொடுத்த அறிவுரைகளையும், எச்சரிப்புகளையும், உற்சாகமான வார்த்தைகளையும் கேட்ட பிறகு, அப்போஸ்தலர்கள் புறப்பட்டு ‘கிராமம் கிராமமாகப் போய், அந்தப் பகுதி முழுவதும் நல்ல செய்தியை அறிவிக்கிறார்கள், நோயாளிகளைக் குணமாக்குகிறார்கள்.’—லூக்கா 9:6.