Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 53

இயற்கைச் சக்திகளைக் கட்டுப்படுத்துகிற ஒரு ராஜா

இயற்கைச் சக்திகளைக் கட்டுப்படுத்துகிற ஒரு ராஜா

மத்தேயு 14:22-36 மாற்கு 6:45-56 யோவான் 6:14-25

  • இயேசுவை ராஜாவாக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்

  • தண்ணீர்மேல் இயேசு நடக்கிறார், புயல்காற்றை அடக்குகிறார்

ஆயிரக்கணக்கான மக்களுக்கு அற்புதமாக உணவளிக்கிற சக்தி இயேசுவுக்கு இருப்பதைப் பார்த்து மக்கள் மலைத்துப்போகிறார்கள். “இந்த உலகத்துக்கு வர வேண்டிய தீர்க்கதரிசி நிச்சயமாகவே இவர்தான்” என்ற முடிவுக்கு வருகிறார்கள். ‘இவர்தான் மேசியா, இவர் ராஜாவாக ஆகிவிட்டால் நன்றாக இருக்கும்’ என்று நினைக்கிறார்கள். (யோவான் 6:14; உபாகமம் 18:18) அதனால், இயேசுவைப் பிடித்து ராஜாவாக்குவதற்கு அந்த மக்கள் திட்டம் போடுகிறார்கள்.

அவர்களுடைய திட்டத்தை இயேசு புரிந்துகொள்கிறார். அந்தக் கூட்டத்தாரை அனுப்பிவிட்டு, சீஷர்களையும் படகில் ஏறி புறப்படும்படி சொல்கிறார். சீஷர்களும் பெத்சாயிதா வழியாக, கப்பர்நகூமுக்குப் போகப் புறப்படுகிறார்கள். இயேசு தனியாக ஒரு மலைக்குப் போய் அன்று ராத்திரி முழுவதும் ஜெபம் செய்கிறார்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் பொழுது விடிந்துவிடும். இப்போது நிலா வெளிச்சத்தில், சீஷர்கள் போய்க்கொண்டிருக்கிற படகை இயேசு தூரத்திலிருந்து பார்க்கிறார். அங்கே பயங்கரமாகப் புயல் வீசுவதால், கடல் அலைகள் சீறிக்கொண்டிருக்கின்றன. ‘எதிர்க்காற்று வீசுவதால் படகை ஓட்ட முடியாமல் சீஷர்கள் திணறுகிறார்கள்.’ (மாற்கு 6:48) இயேசு மலையிலிருந்து இறங்கி, கடல்மேல் நடந்து, அவர்களை நோக்கிப் போகிறார். அதற்குள் அவர்கள் ‘மூன்று அல்லது நான்கு மைல் தூரத்துக்கு படகை ஓட்டியிருந்தார்கள்.’ (யோவான் 6:19) இயேசு அவர்களைக் கடந்து போவதுபோல் போகிறார். சீஷர்கள் அவரைப் பார்த்ததும் பயந்துபோய், “ஏதோ மாய உருவம்!” என்று அலறுகிறார்கள்.—மாற்கு 6:49.

அப்போது இயேசு, “தைரியமாக இருங்கள், நான்தான்; பயப்படாதீர்கள்” என்று சொல்லி அவர்களைத் தைரியப்படுத்துகிறார். உடனே பேதுரு, “எஜமானே, நீங்களா? அப்படியானால், நானும் தண்ணீர்மேல் நடந்து உங்களிடம் வருவதற்குக் கட்டளையிடுங்கள்” என்று சொல்கிறார். அதற்கு இயேசு, “வா!” என்று சொல்கிறார். பேதுரு படகிலிருந்து இறங்கி, தண்ணீர்மேல் நடந்து இயேசுவை நோக்கிப் போகிறார். ஆனால், புயல்காற்றைப் பார்த்ததும் பயந்துபோய்த் தண்ணீரில் மூழ்க ஆரம்பிக்கிறார். உடனே, “எஜமானே, என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று அலறுகிறார். இயேசு உடனே தன் கையை நீட்டி பேதுருவைப் பிடித்து, “விசுவாசத்தில் குறைவுபட்டவனே, ஏன் சந்தேகப்பட்டாய்?” என்று கேட்கிறார்.—மத்தேயு 14:27-31.

பேதுருவும் இயேசுவும் படகில் ஏறிய பிறகு, புயல்காற்று அடங்கிவிடுகிறது. இதைப் பார்த்து சீஷர்களுக்கு ஒரே ஆச்சரியம்! ஆனால், இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. சில மணிநேரங்களுக்கு முன்புதான் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இயேசு அற்புதமாக உணவளித்திருந்தார். இப்படி “அற்புதமாய் ரொட்டிகளைக் கொடுத்தவரால் இந்த அற்புதத்தையும் செய்ய முடியும்” என்பதை அவர்கள் புரிந்திருந்தால், அவர் தண்ணீர்மேல் நடந்ததையும் புயல்காற்றை அடக்கியதையும் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார்கள். இப்போது அவர்கள் இயேசு முன்னால் தலைவணங்கி, “நீங்கள் உண்மையிலேயே கடவுளுடைய மகன்தான்” என்று சொல்கிறார்கள்.—மாற்கு 6:52; மத்தேயு 14:33.

சீக்கிரத்திலேயே கப்பர்நகூமுக்குத் தெற்கே இருக்கிற கெனேசரேத்து சமவெளிக்கு அவர்கள் போய்ச் சேர்கிறார்கள். அந்த இடம் அழகாகவும் செழிப்பாகவும் இருக்கிறது. அவர்கள் படகை நங்கூரமிட்டு நிறுத்திய பிறகு, கரைக்கு வருகிறார்கள். மக்கள் இயேசுவைப் பார்த்ததுமே அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அவர்களும் சுற்றுவட்டாரத்தில் இருக்கிறவர்களும் நோயாளிகளைக் கூட்டிக்கொண்டு அவரிடம் வருகிறார்கள். அவருடைய மேலங்கியின் ஓரத்தைத் தொடுகிறவர்கள்கூட குணமாகிறார்கள்.

இதற்கிடையே, இயேசு அற்புதமாக உணவளித்ததைப் பார்த்த மக்களுக்கு அவர் அங்கிருந்து போன விஷயம் தெரிந்துவிடுகிறது. திபேரியாவிலிருந்து சிறிய படகுகள் வந்ததும், அவர்கள் அந்தப் படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக்கொண்டு கப்பர்நகூமுக்குப் போகிறார்கள். அவரைப் பார்த்ததும், “ரபீ, எப்போது இங்கே வந்தீர்கள்?” என்று கேட்கிறார்கள். (யோவான் 6:25) ஆனால், ஒரு நல்ல காரணத்துக்காக இயேசு அவர்களைக் கண்டிக்கிறார். அது என்னவென்று அடுத்த அதிகாரத்தில் தெரிந்துகொள்வோம்.