Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 68

கடவுளின் மகன் “உலகத்துக்கு ஒளியாக” இருக்கிறார்

கடவுளின் மகன் “உலகத்துக்கு ஒளியாக” இருக்கிறார்

யோவான் 8:12-36

  • மகன் யார் என்பதை இயேசு விளக்குகிறார்

  • யூதர்கள் எந்த விதத்தில் அடிமைகளாக இருக்கிறார்கள்?

கூடாரப் பண்டிகையின் கடைசி நாளில், அதாவது ஏழாவது நாளில், ஆலயத்தில் “காணிக்கைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில்” இயேசு கற்பித்துக்கொண்டிருக்கிறார். (யோவான் 8:20; லூக்கா 21:1) அநேகமாக, இந்தப் பகுதி பெண்களின் பிரகாரத்தில் இருந்திருக்கலாம். இங்கேதான் மக்கள் காணிக்கைகளைப் போடுவார்கள்.

பண்டிகை வந்துவிட்டால், ராத்திரி நேரத்தில் இந்தப் பகுதியே பிரகாசமாக இருக்கும். ஏனென்றால், பிரமாண்டமான நான்கு குத்துவிளக்குகள் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் இருக்கிற நான்கு பெரிய கிண்ணங்களில் எண்ணெய் நிரப்பப்பட்டிருக்கும். இந்தக் குத்துவிளக்குகள் பிரகாசமாக எரிவதால், ரொம்பத் தூரத்தில் இருக்கிற இடங்கள்கூட வெளிச்சமாக இருக்கும். இயேசு அடுத்ததாகச் சொல்கிற விஷயம் இதைத்தான் மக்களுக்கு ஞாபகப்படுத்துகிறது. ஏனென்றால் அவர், “நான் இந்த உலகத்துக்கு ஒளியாக இருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிற யாரும் ஒருபோதும் இருளில் நடக்க மாட்டார்கள், ஆனால் வாழ்வு தரும் ஒளியைப் பெற்றிருப்பார்கள்” என்று சொல்கிறார்.—யோவான் 8:12.

அதைக் கேட்டு பரிசேயர்கள் கோபப்படுகிறார்கள். “உன்னைப் பற்றி நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல” என்று சொல்கிறார்கள். அதற்கு இயேசு, “என்னைப் பற்றி நானே சாட்சி கொடுத்தாலும் என் சாட்சி உண்மையானதுதான்; ஏனென்றால், நான் எங்கிருந்து வந்தேன், எங்கே போகிறேன் என்று எனக்குத் தெரியும். ஆனால், நான் எங்கிருந்து வந்தேன், எங்கே போகிறேன் என்று உங்களுக்குத் தெரியாது” என்று சொல்கிறார். அதோடு, “‘இரண்டு பேருடைய சாட்சி உண்மையானது’ என்று உங்கள் திருச்சட்டத்திலேயே எழுதப்பட்டிருக்கிறது. நான் என்னைப் பற்றிச் சாட்சி கொடுக்கிறேன், என்னை அனுப்பிய தகப்பனும் என்னைப் பற்றிச் சாட்சி கொடுக்கிறார்” என்றும் சொல்கிறார்.—யோவான் 8:13-18.

பரிசேயர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அவர்கள், “உன்னுடைய தகப்பன் எங்கே?” என்று கேட்கிறார்கள். அதற்கு இயேசு, “உங்களுக்கு என்னையும் தெரியாது, என் தகப்பனையும் தெரியாது. உங்களுக்கு என்னைத் தெரிந்திருந்தால், என் தகப்பனையும் தெரிந்திருக்கும்” என்று நேரடியாகச் சொல்கிறார். (யோவான் 8:19) இயேசுவைக் கைது செய்ய வேண்டும் என்று பரிசேயர்கள் நினைத்தாலும், அந்தச் சமயத்தில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இயேசு ஏற்கெனவே சொன்ன ஒரு விஷயத்தை மறுபடியும் சொல்கிறார். இயேசு அவர்களிடம், “நான் போகிறேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் உங்கள் பாவத்திலேயே சாவீர்கள். நான் போகும் இடத்துக்கு உங்களால் வர முடியாது” என்று சொல்கிறார். இயேசு சொன்னதை யூதர்கள் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். அதனால், “‘நான் போகும் இடத்துக்கு உங்களால் வர முடியாது’ என்று சொல்கிறானே, இவன் என்ன தற்கொலையா செய்துகொள்ளப்போகிறான்?” என்று பேசிக்கொள்கிறார்கள். இயேசு எங்கிருந்து வந்தார் என்பது அவர்களுக்குத் தெரியாததால், அவர் சொன்னது அவர்களுக்குப் புரியவில்லை. அதனால் இயேசு, “நீங்கள் கீழே இருந்து வந்தவர்கள். நான் மேலே இருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்திலிருந்து வந்தவர்கள். நான் இந்த உலகத்திலிருந்து வரவில்லை” என்று விளக்குகிறார்.—யோவான் 8:21-23.

இந்தப் பூமிக்கு வருவதற்கு முன்பு பரலோகத்தில் இருந்ததைப் பற்றியும், தான் மேசியாவாக, அதாவது கிறிஸ்துவாக, இருப்பதைப் பற்றியும்தான் இயேசு இங்கே சொல்கிறார். நியாயப்படி பார்த்தால், இந்த மதத் தலைவர்கள் கிறிஸ்துவை அடையாளம் கண்டுபிடித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள், “நீ யார்?” என்று பயங்கர வெறுப்போடு கேட்கிறார்கள்.—யோவான் 8:25.

அவர்கள் இயேசுவை வெறுத்து ஒதுக்குகிறார்கள், எதிர்க்கிறார்கள். அதனால் அவர், “நான் ஏன்தான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்க வேண்டுமோ?” என்று சொல்கிறார். இருந்தாலும், தன்னுடைய தகப்பனைப் பற்றியும், கடவுளுடைய மகன் சொல்வதை யூதர்கள் ஏன் கேட்க வேண்டும் என்பதைப் பற்றியும் அவர்களுக்குப் புரிய வைக்க நினைக்கிறார். அதனால், “என்னை அனுப்பியவர் உண்மையானவர், அவரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்ட விஷயங்களைத்தான் இந்த உலகத்தில் பேசிக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்கிறார்.—யோவான் 8:25, 26.

தகப்பன்மேல் யூதர்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், இயேசு தன்னுடைய தகப்பன்மேல் நம்பிக்கை வைத்திருப்பதாகச் சொல்கிறார். “மனிதகுமாரனை நீங்கள் உயர்த்திய பின்பு நான்தான் அவர் என்றும், நான் எதையும் சொந்தமாகச் செய்வதில்லை என்றும், தகப்பன் எனக்குக் கற்றுக்கொடுத்தபடியே இந்த விஷயங்களைப் பேசுகிறேன் என்றும் தெரிந்துகொள்வீர்கள். என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். நான் எப்போதும் அவருக்குப் பிரியமான காரியங்களையே செய்வதால் அவர் என்னைத் தனியாக விட்டுவிடவில்லை” என்று சொல்கிறார்.—யோவான் 8:28, 29.

சில யூதர்கள் இயேசுமேல் விசுவாசம் வைக்கிறார்கள். அதனால் அவர்களிடம், “நீங்கள் எப்போதும் என் வார்த்தைகளைக் கடைப்பிடித்தால் நிஜமாகவே என் சீஷர்களாக இருப்பீர்கள்; சத்தியத்தைத் தெரிந்துகொள்வீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று சொல்கிறார்.—யோவான் 8:31, 32.

விடுதலையைப் பற்றி இயேசு சொன்னது சிலருக்கு விநோதமாகத் தெரிகிறது. அதனால் அவர்கள், “நாங்கள் ஆபிரகாமின் வம்சத்தில் வந்தவர்கள், எந்தக் காலத்திலும் எந்த மனுஷனுக்கும் நாங்கள் அடிமைகளாக இருந்தது கிடையாது. அப்படியிருக்கும்போது, நாங்கள் விடுதலையாவோம் என்று எப்படிச் சொல்கிறாய்?” என்று கோபமாகக் கேட்கிறார்கள். யூதர்கள் சில சமயங்களில் மற்ற தேசத்தாருடைய ஆதிக்கத்தின்கீழ் இருந்தது அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும், தங்களை அடிமைகள் என்று சொல்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், அவர்கள் இன்னமும் அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள் என்று இயேசு சொல்கிறார். அவர்களிடம், “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், பாவம் செய்கிற ஒவ்வொருவனும் பாவத்துக்கு அடிமையாக இருக்கிறான்” என்கிறார்.—யோவான் 8:33, 34.

தாங்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருப்பதை அந்த யூதர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு ஆபத்துதான் வரும். “ஒரு வீட்டில் அடிமை நிரந்தரமாக இருப்பதில்லை. மகனோ நிரந்தரமாக இருப்பார்” என்று இயேசு சொல்கிறார். (யோவான் 8:35) அடிமைக்குச் சொத்தில் எந்த உரிமையும் கிடையாது. அவன் எப்போது வேண்டுமானாலும் வீட்டிலிருந்து துரத்தப்படலாம். வீட்டின் உரிமையாளருக்குப் பிறந்த மகனோ, அவரால் தத்தெடுக்கப்பட்ட மகனோதான், “நிரந்தரமாக,” அதாவது உயிரோடிருக்கும்வரை அந்த வீட்டில் இருப்பார்.

மகனைப் பற்றிய சத்தியம், அதாவது மகனைப் பற்றிய உண்மைகள், மரணத்துக்கு வழிநடத்துகிற பாவத்திலிருந்து மக்களை நிரந்தரமாக விடுதலையாக்கும். அதனால், “மகன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையில் விடுதலையாவீர்கள்” என்று இயேசு சொல்கிறார்.—யோவான் 8:36.