Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 72

பிரசங்கிப்பதற்காக 70 பேரை அனுப்புகிறார்

பிரசங்கிப்பதற்காக 70 பேரை அனுப்புகிறார்

லூக்கா 10:1-24

  • இயேசு 70 சீஷர்களைத் தேர்ந்தெடுத்து பிரசங்கிப்பதற்காக அனுப்புகிறார்

இப்போது கி.பி. 32-ஆம் வருஷத்தின் பிற்பகுதி. இயேசு ஞானஸ்நானம் எடுத்து கிட்டத்தட்ட மூன்று வருஷங்கள் ஓடிவிட்டன. சமீபத்தில்தான் இயேசுவும் அவருடைய சீஷர்களும் கூடாரப் பண்டிகைக்காக எருசலேமுக்குப் போயிருந்தார்கள். அநேகமாக, இன்னமும் அவர்கள் எருசலேமுக்குப் பக்கத்தில்தான் இருக்க வேண்டும். (லூக்கா 10:38; யோவான் 11:1) தன்னுடைய ஊழியத்தின் கடைசி ஆறு மாதங்களைப் பெரும்பாலும் யூதேயா அல்லது யோர்தான் ஆற்றின் அக்கரையில் இருக்கிற பெரேயா மாகாணத்தில் இயேசு செலவிடுகிறார். அந்த இடங்களிலும் அவர் பிரசங்கிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

கி.பி. 30-ஆம் வருஷத்தின் பஸ்கா முடிந்த பிறகு, இயேசு சில மாதங்களுக்கு யூதேயாவில் பிரசங்கித்தார். அங்கிருந்து கலிலேயாவுக்குப் போனபோது சமாரியா வழியாகப் பயணம் செய்தார். பிறகு கி.பி. 31-ஆம் வருஷத்தின் பஸ்கா சமயத்தில், எருசலேமிலிருந்த யூதர்கள் அவரைக் கொல்வதற்கு முயற்சி செய்தார்கள். அடுத்த ஒன்றரை வருஷங்களுக்கு, இயேசு பெரும்பாலும் வடக்கே இருக்கிற கலிலேயாவில் கற்பித்துவந்தார். அந்தச் சமயத்தில், நிறைய பேர் அவரைப் பின்பற்ற ஆரம்பித்திருந்தார்கள். கலிலேயாவில் இருந்தபோது, பிரசங்கிப்பதற்கு இயேசு தன்னுடைய சீஷர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். “பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது என்று பிரசங்கியுங்கள்” என்று சொல்லி அவர்களை அனுப்பினார். (மத்தேயு 10:5-7) இப்போது, யூதேயாவில் பிரசங்கிக்க ஏற்பாடுகள் செய்கிறார்.

முதலில், 70 சீஷர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்புகிறார். யூதேயாவில் பிரசங்கிக்க இப்போது 35 குழுக்கள் தயாராக இருக்கின்றன. அங்கே “அறுவடை அதிகமாக இருக்கிறது, ஆனால் வேலையாட்கள் குறைவாக இருக்கிறார்கள்.” (லூக்கா 10:2) முதலில், அவர்கள் போய்ப் பிரசங்கிப்பார்கள். அதற்குப் பிறகு இயேசு அந்த இடங்களுக்குப் போவார். அந்த 70 பேரும் நோயாளிகளைக் குணமாக்குவார்கள்; இயேசு பிரசங்கித்த அதே செய்தியைத்தான் அவர்களும் பிரசங்கிப்பார்கள்.

ஜெபக்கூடங்களில் கற்பிப்பதற்குக் கவனம் செலுத்தாமல் வீடுகளுக்குப் போய்க் கற்பிக்கும்படி இயேசு அவர்களிடம் சொல்கிறார். “நீங்கள் ஒரு வீட்டுக்குள் போகும்போது, ‘இந்த வீட்டுக்குச் சமாதானம் கிடைக்கட்டும்’ என்று முதலில் வாழ்த்துச் சொல்லுங்கள். . . . சமாதானத்தை விரும்புகிறவர் அங்கே இருந்தால், நீங்கள் வாழ்த்திய சமாதானம் அவர்மேல் தங்கும்” என்று அவர்களிடம் சொல்கிறார். அவர்கள் என்ன செய்தியைப் பிரசங்கிப்பார்கள்? “கடவுளுடைய அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது” என்று சொல்லும்படி இயேசு அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்.—லூக்கா 10:5-9.

ஒரு வருஷத்துக்கு முன்பு, 12 அப்போஸ்தலர்களை அனுப்பியபோது கொடுத்த அறிவுரைகளைத்தான் இந்த 70 பேருக்கும் கொடுக்கிறார். மக்கள் எல்லாரும் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று எச்சரிக்கிறார். அவர்கள் சொல்கிற செய்தி நல்மனமுள்ள மக்களின் மனதைத் தயார்படுத்தும். பிற்பாடு, எஜமானாகிய இயேசு அங்கே வரும்போது அவர்களில் நிறைய பேர் அவரைச் சந்திக்கவும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக இருப்பார்கள்.

பின்பு, அந்த 70 பேரும் சந்தோஷத்தோடு திரும்பி வந்து, “எஜமானே, உங்கள் பெயரைச் சொல்லிக் கட்டளையிடும்போது பேய்கள்கூட எங்களுக்கு அடங்கிவிடுகின்றன” என்று சொல்கிறார்கள். அதைக் கேட்டு இயேசு ரொம்பச் சந்தோஷப்படுகிறார். ‘சாத்தான் பரலோகத்திலிருந்து மின்னல் வேகத்தில் விழுந்துவிட்டதை நான் பார்க்கிறேன். இதோ! பாம்புகளையும் தேள்களையும் மிதிப்பதற்கு நான் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன்’ என்று சொல்கிறார்.—லூக்கா 10:17-19.

தன்னுடைய சீஷர்கள் ஆபத்தான விஷயங்களையும் சமாளித்து வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையை இயேசு அவர்களுக்குத் தருகிறார். இதைத்தான் பாம்புகளையும் தேள்களையும் மிதிப்பதோடு இயேசு ஒப்பிட்டுப் பேசுகிறார். எதிர்காலத்தில், சாத்தான் பரலோகத்திலிருந்து கீழே விழுவான் என்பதை அவர்கள் நிச்சயம் நம்பலாம். அவர்களால் அற்புதங்களைச் செய்ய முடிந்தாலும், அதைவிட முக்கியமானது எது என்பதை இயேசு அவர்களுக்குப் புரிய வைக்க நினைக்கிறார். அதனால், “பேய்கள் உங்களுக்கு அடங்கிவிடுவதை நினைத்து சந்தோஷப்படாதீர்கள்; உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதை நினைத்தே சந்தோஷப்படுங்கள்” என்று சொல்கிறார்.—லூக்கா 10:20.

தாழ்மையுள்ள இந்த ஊழியர்களை, தன்னுடைய தகப்பன் பெரியளவில் பயன்படுத்துவதைப் பார்த்து இயேசு ரொம்பச் சந்தோஷப்படுகிறார். எல்லார் முன்பாகவும் அவரைப் புகழ்கிறார். பிறகு தன் சீஷர்களிடம், “நீங்கள் பார்க்கிறவற்றைப் பார்க்கும் கண்கள் சந்தோஷமானவை. ஏனென்றால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், நிறைய தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் பார்க்கிறவற்றைப் பார்க்க ஆசைப்பட்டும் பார்க்கவில்லை. நீங்கள் கேட்கிறவற்றைக் கேட்க ஆசைப்பட்டும் கேட்கவில்லை” என்று சொல்கிறார்.—லூக்கா 10:23, 24.