Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 76

பரிசேயனோடு விருந்து சாப்பிடுகிறார்

பரிசேயனோடு விருந்து சாப்பிடுகிறார்

லூக்கா 11:37-54

  • வெளிவேஷக்காரர்களான பரிசேயர்களை இயேசு கண்டிக்கிறார்

இயேசு யூதேயாவில் இருக்கும்போது, ஒரு பரிசேயன் அவரை விருந்துக்குக் கூப்பிடுகிறான். (லூக்கா 11:37, 38) சாப்பிடுவதற்கு முன்பு, முழங்கைவரை கழுவுவதைப் பரிசேயர்கள் ஒரு சடங்காகச் செய்துவந்தார்கள். ஆனால், இயேசு அப்படிச் செய்யவில்லை. (மத்தேயு 15:1, 2) முழங்கைவரை கழுவுவது தப்பில்லை, ஆனால் அப்படிச் செய்யும்படி திருச்சட்டத்தில் கடவுள் சொல்லவில்லை.

இயேசு அந்தப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்காததைப் பார்த்து பரிசேயர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இயேசு இதைப் புரிந்துகொள்கிறார். அதனால், “பரிசேயர்களே, கிண்ணத்தையும் பாத்திரத்தையும் வெளிப்புறத்தில் சுத்தம் செய்கிறீர்கள், உங்கள் உட்புறமோ பேராசையாலும் அக்கிரமத்தாலும் நிறைந்திருக்கிறது. புத்தியில்லாதவர்களே! வெளிப்புறத்தை உண்டாக்கியவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையா?” என்று சொல்கிறார்.—லூக்கா 11:39, 40.

சாப்பிடுவதற்கு முன்பு சுத்தமாகக் கை கழுவுவதில் எந்தத் தவறும் இல்லை. பக்திமான்களைப் போல வெளிவேஷம் போடுவதுதான் தவறு. சடங்குக்காகக் கைகளைக் கழுவுகிற பரிசேயர்களும் மற்ற ஆட்களும், தங்கள் இதயத்தில் இருக்கும் கெட்ட விஷயங்களைச் சுத்தமாக்குவதில்லை. அதனால் இயேசு, “உட்புறத்தில் இருப்பவற்றைத் தானதர்மம் செய்யுங்கள். அப்போது, எல்லாமே உங்களுக்குச் சுத்தமாக இருக்கும்” என்று ஆலோசனை கொடுக்கிறார். (லூக்கா 11:41) அது எவ்வளவு உண்மை! அன்பு பொங்கும் இதயத்தால் தூண்டப்பட்டு நாம் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நீதிமான்களைப் போல வேஷம் போட்டு, மற்றவர்களைக் கவருவதற்காகக் கொடுக்கக் கூடாது.

பரிசேயர்களும் சிலவற்றைக் கொடுக்கிறார்கள் என்பது உண்மைதான். அதைப் பற்றி இயேசு அவர்களிடம், “நீங்கள் புதினாவிலும் சதாப்புவிலும் மற்ற எல்லா புல்பூண்டுகளிலும் பத்திலொரு பாகத்தைக் கொடுக்கிறீர்கள். ஆனால், நியாயத்தையும் கடவுள்மேல் காட்ட வேண்டிய அன்பையும் ஒதுக்கித்தள்ளுகிறீர்கள். இவற்றை நீங்கள் கண்டிப்பாகக் கடைப்பிடித்திருக்க வேண்டும், அவற்றையும் விட்டுவிடாமல் இருந்திருக்க வேண்டும்” என்று சொல்கிறார். (லூக்கா 11:42) விளைச்சலில் பத்திலொரு பாகத்தை (தசமபாகத்தை) கொடுக்க வேண்டும் என்று திருச்சட்டம் சொல்லியிருந்தது. (உபாகமம் 14:22) உணவுக்கு மணம் சேர்க்கிற புதினா, சதாப்பு போன்ற மூலிகைகளிலும் பத்திலொரு பாகத்தை அவர்கள் கொடுக்க வேண்டியிருந்தது. பரிசேயர்கள் இவற்றையெல்லாம் பார்த்து பார்த்து செய்தார்கள். ஆனால் திருச்சட்டத்தில் சொல்லப்பட்டபடி, நியாயம் செய்வது, அடக்கமாக இருப்பது போன்ற மிக முக்கியமான விஷயங்களை விட்டுவிட்டார்கள்.—மீகா 6:8.

இயேசு அவர்களைப் பார்த்து, “பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! ஏனென்றால், ஜெபக்கூடங்களில் முன்வரிசை இருக்கைகளில் உட்கார வேண்டுமென்றும், சந்தைகளில் மக்கள் உங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்றும் ஆசைப்படுகிறீர்கள். உங்களுக்குக் கேடுதான் வரும்! ஏனென்றால், வெளியே தெரியாத கல்லறைகளைப் போல நீங்கள் இருக்கிறீர்கள். கல்லறைகள் என்றே தெரியாமல் ஆட்கள் அவற்றின் மேல் நடந்துபோகிறார்கள்” என்று சொல்கிறார். (லூக்கா 11:43, 44) ஒருவேளை, மக்கள் இந்தக் கல்லறைகள்மீது மோதி, தீட்டானவர்களாக ஆகிவிடலாம். பரிசேயர்களுக்குள் இருக்கிற அசுத்தம் வெளியே தெரிவதில்லை என்பதைக் காட்டுவதற்குத்தான் இயேசு இந்த விஷயத்தைச் சொல்கிறார்.—மத்தேயு 23:27.

அப்போது, திருச்சட்ட வல்லுநன் ஒருவன் அவரிடம், “போதகரே, இதையெல்லாம் சொல்லி எங்களையும் அவமானப்படுத்துகிறீர்கள்” என்று சொல்கிறான். தாங்கள் மக்களுக்கு உதவி செய்யவில்லை என்பதை இவனைப் போன்ற திருச்சட்ட வல்லுநர்களும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் இயேசு, “திருச்சட்ட வல்லுநர்களே, உங்களுக்கும் கேடுதான் வரும்! ஏனென்றால், சுமப்பதற்குக் கஷ்டமாக இருக்கிற சுமைகளை மக்கள்மேல் சுமத்துகிறீர்கள், நீங்களோ அந்தச் சுமைகளை விரலால்கூட தொடுவதில்லை. உங்களுக்குக் கேடுதான் வரும்! ஏனென்றால், தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறை கட்டுகிறீர்கள், ஆனால் உங்கள் முன்னோர்கள்தான் அவர்களைக் கொலை செய்தார்கள்” என்று சொல்கிறார்.—லூக்கா 11:45-47.

வாய்மொழி பாரம்பரியங்களும், திருச்சட்டத்துக்குப் பரிசேயர்களால் கொடுக்கப்பட்ட விளக்கங்களும் பெரிய சுமை போல் இருப்பதாக இயேசு சொல்கிறார். எல்லாரும் இவற்றைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்த ஆட்கள் சொல்கிறார்கள். இப்படியெல்லாம் சொல்லி, மக்களைத் திணற வைக்கிறார்கள். ஆபேலையும் அவருக்குப் பிறகு வந்த கடவுளுடைய தீர்க்கதரிசிகளையும் இவர்களுடைய முன்னோர்கள் கொலை செய்தார்கள். இப்போது, தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறை கட்டுவதன் மூலம் அவர்களுக்கு மதிப்பு கொடுப்பதுபோல் இந்த ஆட்கள் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில், தங்களுடைய முன்னோர்கள் காட்டிய அதே மனப்பான்மையைத்தான் இவர்களும் காட்டுகிறார்கள்; முன்னோர்கள் செய்த அதே செயல்களைத்தான் இவர்களும் செய்கிறார்கள். கடவுளின் மிக முக்கியமான தீர்க்கதரிசியான இயேசுவையே அவர்கள் கொல்லப் பார்க்கிறார்கள். அதனால், இந்தத் தலைமுறையிடம் கடவுள் கணக்குக் கேட்பார் என்று இயேசு சொல்கிறார். 38 வருஷங்களுக்குப் பிறகு, கி.பி. 70-ல் அது நடந்தது.

இயேசு அவர்களிடம், “திருச்சட்ட வல்லுநர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! ஏனென்றால், அறிவு என்ற சாவியை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் உள்ளே போகவில்லை, போகிறவர்களையும் போக விடுவதில்லை” என்று சொல்கிறார். (லூக்கா 11:52) கடவுளுடைய வார்த்தைக்கு இவர்கள்தான் அர்த்தம் சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும். ஆனால், இந்த வல்லுநர்கள் கடவுளுடைய வார்த்தையைத் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் மக்களை விடுவதில்லை.

இயேசு சொன்னதைக் கேட்டு பரிசேயர்களும் வேத அறிஞர்களும் என்ன செய்கிறார்கள்? அவர் அங்கிருந்து புறப்பட்டபோது, அவரைக் கோபத்தோடு எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள்; கேள்விக்குமேல் கேள்வி கேட்டு அவரைத் துளைக்கிறார்கள். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குத் துளியும் கிடையாது. இயேசுவை ஏதாவது தவறாகச் சொல்ல வைத்து, அவரைக் கைது செய்வதற்குத்தான் அவர்கள் வழிதேடுகிறார்கள்.