Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 81

எந்த விதத்தில் இயேசுவும் கடவுளும் ஒன்றாயிருக்கிறார்கள்?

எந்த விதத்தில் இயேசுவும் கடவுளும் ஒன்றாயிருக்கிறார்கள்?

யோவான் 10:22-42

  • “நானும் என் தகப்பனும் ஒன்றாயிருக்கிறோம்”

  • இயேசு தன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொள்வதாக யூதர்கள் குற்றம்சாட்டுகிறார்கள், இயேசு அதை மறுக்கிறார்

ஆலய அர்ப்பணப் பண்டிகைக்காக (ஹனுக்கா) எருசலேமுக்கு இயேசு வந்திருக்கிறார். ஆலயம் மறுபடியும் அர்ப்பணிக்கப்பட்டதன் நினைவாக இது கொண்டாடப்படுகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, எருசலேமை சீரியர்கள் கைப்பற்றினார்கள். சீரியாவின் ராஜாவான நான்காம் ஆண்டியோகஸ் எப்பிஃபேனீஸ் கடவுளுடைய ஆலயத்தில் இருக்கிற பெரிய பலிபீடத்தின்மீது பொய்க் கடவுளுக்காக ஒரு பலிபீடத்தைக் கட்டினான். பிற்பாடு, யூத ஆலய குரு ஒருவரின் மகன்கள் எருசலேமைக் கைப்பற்றி, ஆலயத்தை மறுபடியும் யெகோவாவுக்கு அர்ப்பணித்தார்கள். இதன் நினைவாக, வருஷா வருஷம் கிஸ்லே மாதம் 25-ஆம் தேதியில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிஸ்லே மாதம், நவம்பர் பாதியில் ஆரம்பித்து டிசம்பர் பாதியில் முடியும்.

இப்போது குளிர்காலம். ஆலயத்தில் இருக்கிற சாலொமோன் மண்டபத்தில் இயேசு நடந்துகொண்டிருக்கிறார். யூதர்கள் அவரைச் சுற்றிவளைத்து, “எவ்வளவு காலத்துக்குத்தான் உன்னைப் பற்றிச் சொல்லாமல் எங்களைக் காக்க வைப்பாய்? நீதான் கிறிஸ்து என்றால், அதை எங்களுக்கு வெளிப்படையாகச் சொல்லிவிடு” என்று கேட்கிறார்கள். (யோவான் 10:22-24) அதற்கு இயேசு, “நான் உங்களுக்குச் சொன்னேன், ஆனால் நீங்கள் நம்பவில்லை” என்கிறார். கிணற்றுக்குப் பக்கத்தில் சமாரியப் பெண்ணிடம் சொன்னதைப் போல, தான் கிறிஸ்து என்று நேரடியாக இயேசு அவர்களிடம் சொல்லவில்லை. (யோவான் 4:25, 26) ஆனால், “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருந்திருக்கிறேன்” என்று சொன்னதன் மூலம், தான் யார் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.—யோவான் 8:58.

கிறிஸ்து என்ன செய்வார் என்று வேதவசனங்கள் முன்கூட்டியே சொல்லியிருக்கின்றன. தான் செய்கிற செயல்களோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, தான் கிறிஸ்து என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். அதனால்தான், அவர் மேசியா என்ற விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சீஷர்களிடம் சொல்லியிருந்தார். ஆனால் இப்போது, தன்னை எதிர்க்கிற யூதர்களைப் பார்த்து, ‘என் தகப்பனுடைய பெயரில் நான் செய்கிற செயல்களே என்னைப் பற்றிச் சாட்சி கொடுக்கின்றன. நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள்’ என்று நேரடியாகச் சொல்கிறார்.—யோவான் 10:25, 26.

இயேசுதான் கிறிஸ்து என்று அவர்கள் ஏன் நம்புவதில்லை? “நீங்கள் என் மந்தையைச் சேர்ந்த ஆடுகள் இல்லை, அதனால்தான் நம்பாமல் இருக்கிறீர்கள். என் ஆடுகள் என்னுடைய குரலைக் கேட்கின்றன, நான் அவற்றைத் தெரிந்து வைத்திருக்கிறேன், அவை என் பின்னால் வருகின்றன. நான் அவற்றுக்கு முடிவில்லாத வாழ்வு தருகிறேன், அவை ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. அவற்றை ஒருவனும் என் கையிலிருந்து பறித்துக்கொள்ள மாட்டான். என்னுடைய தகப்பன் எனக்குக் கொடுத்திருக்கும் அந்த ஆடுகள் மற்ற எல்லாவற்றையும்விட மதிப்புள்ளவை” என்று இயேசு சொல்கிறார். பிறகு, அவருக்கும் அவருடைய தகப்பனுக்கும் இடையில் இருக்கிற நெருக்கமான பந்தத்தைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “நானும் என் தகப்பனும் ஒன்றாயிருக்கிறோம்.” (யோவான் 10:26-30) இயேசு பூமியில் இருக்கிறார், அவருடைய தகப்பனோ பரலோகத்தில் இருக்கிறார். அதனால், தானும் தன் தகப்பனும் ஒரே நபர் என்று இயேசு சொல்லியிருக்க முடியாது. இருவரும் ஒற்றுமையாக, ஒரே குறிக்கோளோடு வேலை செய்கிறார்கள் என்பதுதான் இயேசு சொன்னதற்கு அர்த்தம்.

அதைக் கேட்டு யூதர்கள் பயங்கர கோபத்தோடு, அவரைக் கொல்வதற்காகக் கற்களை எடுக்கிறார்கள். ஆனால் இயேசு பயப்படாமல், “என் தகப்பன் சொன்னபடி எத்தனையோ நல்ல செயல்களை உங்கள் முன்னால் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றில் எந்தச் செயலுக்காக நீங்கள் என்மேல் கல்லெறிகிறீர்கள்?” என்கிறார். அதற்கு அவர்கள், “நல்ல செயலுக்காக அல்ல, கடவுளை நிந்தித்துப் பேசியதற்காக உன்மேல் கல்லெறிகிறோம்; நீ . . . உன்னைக் கடவுளாக்கிக்கொள்கிறாய்” என்கிறார்கள். (யோவான் 10:31-33) தான்தான் கடவுள் என்று இயேசு சொன்னதே இல்லை. பிறகு, ஏன் இப்படிப் பழிபோடுகிறார்கள்?

சில விஷயங்களைச் செய்ய தனக்கு சக்தி இருப்பதாக இயேசு சொல்கிறார். ஆனால், அது கடவுளுக்கு மட்டுமே இருப்பதாக யூதர்கள் நம்புகிறார்கள். உதாரணமாக, “ஆடுகளை” பற்றிச் சொல்லும்போது, “நான் அவற்றுக்கு முடிவில்லாத வாழ்வு தருகிறேன்” என்று இயேசு சொல்லியிருந்தார்; இதைத் தருகிற சக்தி மனிதர்களுக்குக் கிடையாது. (யோவான் 10:28) தன்னுடைய தகப்பனிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதாக இயேசு வெளிப்படையாகச் சொல்லியிருந்தார். ஆனாலும், யூதர்கள் இந்த உண்மையை அலட்சியம் செய்தார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களுடைய திருச்சட்டத்தில் [சங்கீதம் 82:6-ல்] ‘“நீங்கள் எல்லாரும் கடவுள்கள்” எனச் சொன்னேன்’ என்று எழுதப்பட்டிருக்கிறது, இல்லையா? கடவுளுடைய வார்த்தையால் கண்டனம் செய்யப்பட்டவர்களையே ‘கடவுள்கள்’ என்று அவர் அழைத்திருக்கிறார்; . . . அப்படியிருக்கும்போது, தகப்பனால் புனிதமாக்கப்பட்டும் இந்த உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை ‘கடவுளுடைய மகன்’ என்று சொன்னதற்காகவா ‘கடவுளை நிந்திக்கிறாய்’ என்று சொல்கிறீர்கள்?” என கேட்கிறார்; இப்படி, அவர்களுடைய பொய்க் குற்றச்சாட்டைத் தவிடுபொடியாக்குகிறார்.—யோவான் 10:34-36.

அநியாயம் செய்கிற நீதிபதிகளைக்கூட “கடவுள்கள்” என்று வேதவசனங்கள் சொல்கின்றன. அப்படியிருக்கும்போது, ‘நான் கடவுளுடைய மகன்’ என்று சொன்னதற்காக இயேசுவை அவர்கள் எப்படிக் குறை சொல்லலாம்? கடைசியாக, அவர்களை நம்ப வைக்கக்கூடிய ஒரு விஷயத்தை அவர் சொல்கிறார். “என் தகப்பனின் செயல்களை நான் செய்யாவிட்டால், நீங்கள் என்னை நம்ப வேண்டியதில்லை. அவற்றைச் செய்கிறேன் என்றால், என்னை நீங்கள் நம்பாவிட்டால்கூட, என் செயல்களையாவது நம்புங்கள்; அப்போது, என் தகப்பன் என்னோடு ஒன்றுபட்டிருக்கிறார் என்பதையும், நானும் என் தகப்பனோடு ஒன்றுபட்டிருக்கிறேன் என்பதையும் தெரிந்துகொள்வீர்கள், தொடர்ந்து தெரிந்துகொண்டே இருப்பீர்கள்” என்கிறார்.—யோவான் 10:37, 38.

இதைக் கேட்டதும், இயேசுவைப் பிடிக்க யூதர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால், இயேசு தப்பித்துவிடுகிறார். அவர் எருசலேமிலிருந்து புறப்பட்டு, யோர்தான் ஆற்றைக் கடக்கிறார். கிட்டத்தட்ட நான்கு வருஷங்களுக்கு முன்பு யோவான் ஞானஸ்நானம் கொடுத்துவந்த பகுதிக்குப் போகிறார். அநேகமாக, இது கலிலேயா கடலின் தெற்கு முனைக்குப் பக்கத்தில் இருந்திருக்கலாம்.

யூதர்கள் கூட்டமாக இயேசுவிடம் வந்து, “யோவான் எந்தவொரு அற்புதமும் செய்யவில்லை; ஆனால், இவரைப் பற்றி யோவான் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்கிறது” என்கிறார்கள். (யோவான் 10:41) இவர்களில் பலர் இயேசுமேல் விசுவாசம் வைக்கிறார்கள்.