Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 82

பெரேயாவில் இயேசு ஊழியம் செய்கிறார்

பெரேயாவில் இயேசு ஊழியம் செய்கிறார்

லூக்கா 13:22–14:6

  • இடுக்கமான கதவு வழியாக நுழைய தீவிர முயற்சி அவசியம்

  • எருசலேமில்தான் இயேசு கொல்லப்பட வேண்டும்

யூதேயாவிலும் எருசலேமிலும் இருக்கிற மக்களுக்கு இயேசு கற்பித்திருந்தார், அவர்களைக் குணமாக்கியிருந்தார். இப்போது அவர் யோர்தான் ஆற்றைக் கடந்து பெரேயா மாகாணத்துக்குப் போகிறார். அங்கே இருக்கிற ஒவ்வொரு நகரத்துக்கும் போய்க் கற்பிக்கிறார். ஆனால், சீக்கிரத்தில் அவர் எருசலேமுக்குத் திரும்பிவிடுவார்.

அவர் பெரேயாவில் இருக்கும்போது, ஒருவன் அவரிடம் வந்து, “எஜமானே, மீட்கப்படுகிறவர்கள் சிலர்தானா?” என்று கேட்கிறான். நிறைய பேர் மீட்புப் பெறுவார்களா, சிலர்தான் மீட்புப் பெறுவார்களா என்று மதத் தலைவர்கள் பல காலமாக விவாதித்துவந்தது அவனுக்குத் தெரிந்திருக்கலாம். எத்தனை பேர் மீட்புப் பெறுவார்கள் என்பதைப் பற்றிச் சொல்லாமல், மீட்புப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இயேசு சொல்கிறார். “இடுக்கமான கதவு வழியாக நுழைவதற்குத் தீவிரமாக முயற்சி செய்யுங்கள்” என்று அவர் சொல்கிறார். உண்மைதான், அதற்காக நாம் கடுமையாக போராட வேண்டும். “ஏனென்றால், நிறைய பேர் உள்ளே நுழையப் பார்ப்பார்கள். ஆனால், நுழைய முடியாமல்போகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்கிறார்.—லூக்கா 13:23, 24.

தீவிரமாக முயற்சி செய்வது ஏன் முக்கியம் என்பதைக் காட்ட இயேசு இந்த உதாரணத்தைச் சொல்கிறார்: “வீட்டுச் சொந்தக்காரர் எழுந்து கதவைப் பூட்டிய பின்பு நீங்கள் வெளியில் நின்று கதவைத் தட்டி, ‘எஜமானே, கதவைத் திறங்கள்’ என்று சொல்வீர்கள். . . . ஆனால் அவர், ‘நீங்கள் எங்கிருந்து வந்தவர்களோ, உங்களை எனக்குத் தெரியாது. அநீதி செய்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டுப் போய்விடுங்கள்!’ என்று சொல்வார்.”—லூக்கா 13:25-27.

தாமதமாக வருகிறவருக்கு என்ன கதி ஏற்படும் என்பதை இந்த உதாரணம் காட்டுகிறது. ஒருவர் தனக்கு வசதியாக இருக்கிற நேரத்தில் வந்தால், அதற்குள் கதவு பூட்டப்பட்டுவிடும். அவருக்குச் சிரமமாக இருந்தாலும், அவர் சீக்கிரமாக வர வேண்டும். இயேசுவின் போதனையைக் கேட்ட நிறைய பேர் இந்த மனிதனைப் போலத்தான் இருந்தார்கள். இயேசு அவர்களுக்கு நேரடியாகக் கற்பித்தார். அவர் சொல்வதைக் கேட்டு அவர்கள் பயன் அடைந்திருக்கலாம். உண்மை வணக்கத்துக்குத் தங்கள் வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க வாய்ப்பு கிடைத்தும், அவர்கள் அதைத் தவற விட்டுவிட்டார்கள். இயேசு யாரிடம் அனுப்பப்பட்டாரோ, அவர்களில் பெரும்பாலோர், மக்களை மீட்பதற்காகக் கடவுள் செய்த ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் வெளியே வீசப்படும்போது, ‘அங்கே அழுது அங்கலாய்ப்பார்கள்;’ ஆனால், “கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும்,” அதாவது எல்லா தேசங்களிலிருந்தும், மக்கள் வந்து “கடவுளுடைய அரசாங்கத்தில் விருந்து சாப்பிட உட்காருவார்கள்” என்று இயேசு சொல்கிறார்.—லூக்கா 13:28, 29.

“பிந்தினவர்கள் [யூதரல்லாதவர்கள், ஒடுக்கப்பட்ட யூதர்கள்] முந்தினவர்களாக ஆவார்கள், முந்தினவர்கள் [ஆபிரகாமின் வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் பெருமைப்படுகிற மதத் தலைவர்கள்] பிந்தினவர்களாக ஆவார்கள்” என்று இயேசு சொல்கிறார். (லூக்கா 13:30) “பிந்தினவர்களாக ஆவார்கள்” என்றால், இந்த மதத் தலைவர்களைப் போன்ற நன்றிகெட்ட ஆட்கள் கடவுளுடைய அரசாங்கத்தில் இருக்கவே மாட்டார்கள் என்றுதான் அர்த்தம்.

பரிசேயர்களில் சிலர் இயேசுவிடம் வந்து, “இங்கிருந்து போய்விடுங்கள், ஏரோது [அந்திப்பா] உங்களைக் கொல்லத் திட்டம் போட்டிருக்கிறான்” என்று சொல்கிறார்கள். அநேகமாக, இயேசுவை அங்கிருந்து ஓட வைப்பதற்காக ஏரோது ராஜாவே இந்த வதந்தியைக் கிளப்பியிருக்கலாம். யோவான் ஸ்நானகரின் சாவுக்குத் தான் காரணமாக இருந்தது போல, இன்னொரு தீர்க்கதரிசியின் சாவுக்கும் காரணமாகிவிடுவோமோ என்று ஏரோது பயந்திருக்கலாம். இயேசு அந்தப் பரிசேயர்களிடம், “‘இன்றைக்கும் நாளைக்கும் பேய்களை விரட்டி, நோய்களைக் குணப்படுத்தி, மூன்றாம் நாளில் என் வேலையை முடித்துவிடுவேன்’ என்று நான் சொன்னதாக அந்தக் குள்ளநரியிடம் போய்ச் சொல்லுங்கள்” என்கிறார். (லூக்கா 13:31, 32) குள்ளநரிகள் ரொம்பத் தந்திரமானவை. அதனால், ஏரோதுவை “குள்ளநரி” என்று இயேசு சொல்லியிருக்கலாம். ஏரோதுவாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, இயேசுவை ஏமாற்ற முடியாது, அவரை அங்கிருந்து ஓட வைக்கவும் முடியாது. தன்னுடைய தகப்பன் கொடுத்த வேலையை அவர் செய்து முடிப்பார். அதுவும், தகப்பன் சொன்ன நேரத்தில் அதைச் செய்து முடிப்பார், மனிதர்கள் சொல்கிறபடி அந்த வேலையைச் செய்ய மாட்டார்.

எருசலேமை நோக்கி இயேசு பயணம் செய்கிறார். ஏனென்றால், “ஒரு தீர்க்கதரிசி எருசலேமுக்கு வெளியே சாவது சரியாக இருக்காது” என்று அவர் சொல்கிறார். (லூக்கா 13:33) மேசியா எருசலேமில்தான் சாக வேண்டும் என்று எந்தத் தீர்க்கதரிசனமும் சொல்லவில்லை. பிறகு ஏன் அங்கே கொல்லப்பட வேண்டும் என்று இயேசு சொல்கிறார்? ஏனென்றால், எருசலேம்தான் தலைநகரம். 71 உறுப்பினர்களைக் கொண்ட நியாயசங்கம், அதாவது யூத உயர் நீதிமன்றம், அங்குதான் இருக்கிறது. பொய்த் தீர்க்கதரிசி என்று குற்றம்சாட்டப்படுகிறவர்கள் அங்கே விசாரணை செய்யப்படுவார்கள். அதோடு, எருசலேமில்தான் மிருக பலிகளும் கொடுக்கப்பட்டன. அதனால், அவர் வேறெங்கும் கொல்லப்படுவது சரியாக இருக்காது என்று இயேசு சொல்கிறார்.

பிறகு, “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவளே! உன்னிடம் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொன்றவளே! கோழி தன் குஞ்சுகளை இறக்கைகளின் கீழே கூட்டிச்சேர்ப்பதுபோல் நான் உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்க்க எத்தனையோ தடவை ஆசைப்பட்டேன். ஆனால் மக்களே, நீங்கள் அதை விரும்பவில்லை! இதோ! உங்கள் வீடு ஒதுக்கித்தள்ளப்பட்டு உங்களிடமே விடப்படும்” என்று இயேசு புலம்புகிறார். (லூக்கா 13:34, 35) கடவுளுடைய மகனை அந்தத் தேசம் ஒதுக்கித்தள்ளுகிறது. அதன் விளைவுகளை அது சந்தித்தே தீரவேண்டும்!

எருசலேமுக்கு இயேசு போவதற்கு முன்பு, பரிசேயர்களின் தலைவன் ஒருவன் அவரைத் தன்னுடைய வீட்டில் விருந்து சாப்பிட கூப்பிடுகிறான். அது ஒரு ஓய்வுநாள். நீர்க்கோவை நோயால் (உடலில், பெரும்பாலும் கால்களிலும் பாதங்களிலும், அளவுக்கதிகமாக நீர் சேர்ந்துவிடும் ஒரு நோய்) பாதிக்கப்பட்ட ஒருவன் அங்கே இருக்கிறான். இயேசு அவனைக் குணமாக்குவாரா என்று அந்த விருந்துக்கு வந்திருக்கிறவர்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இயேசு அந்தச் சமயத்தில், பரிசேயர்களிடமும் திருச்சட்ட வல்லுநர்களிடமும், “ஓய்வுநாளில் குணமாக்குவது சரியா இல்லையா?” என்று கேட்கிறார்.—லூக்கா 14:3.

ஒருவரும் பதில் சொல்லவில்லை. இயேசு அந்த மனிதனைக் குணமாக்குகிறார். பிறகு அவர்களிடம், “ஓய்வுநாளில் உங்களுடைய பிள்ளையோ காளையோ கிணற்றில் விழுந்தால், அதை உடனே தூக்கிவிட மாட்டீர்களா?” என்று கேட்கிறார். (லூக்கா 14:5) இப்போதும், இயேசுவின் நியாயமான கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் எல்லாரும் அமைதியாக இருக்கிறார்கள்.