Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 83

விருந்துக்கு அழைப்பு

விருந்துக்கு அழைப்பு

லூக்கா 14:7-24

  • மனத்தாழ்மையைப் பற்றிய பாடம்

  • விருந்தாளிகள் சாக்குப்போக்கு சொல்கிறார்கள்

நீர்க்கோவை நோயால் பாதிக்கப்பட்ட மனிதனை இயேசு அப்போதுதான் குணமாக்கியிருந்தார். இயேசு இன்னமும் அந்தப் பரிசேயனின் வீட்டில்தான் இருக்கிறார். அங்கே வந்திருக்கிற விருந்தாளிகள் முக்கியமான இடங்களில் போய் உட்காருவதை இயேசு கவனிக்கிறார். மனத்தாழ்மையைப் பற்றிக் கற்றுக்கொடுப்பதற்கு இயேசு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறார்.

“யாராவது உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்தால், மிக முக்கியமான இடத்தில் போய் உட்காராதீர்கள். ஏனென்றால், உங்களைவிட முக்கியமான நபரும் அழைக்கப்பட்டிருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் உங்களிடம் வந்து, ‘இவருக்கு இந்த இடத்தைக் கொடுங்கள்’ என்று சொல்வார். அப்போது, நீங்கள் அவமானத்தோடு கடைசி இடத்துக்குப் போக வேண்டியிருக்கும்” என்று இயேசு சொல்கிறார்.—லூக்கா 14:8, 9.

அடுத்ததாக, “நீங்கள் அழைக்கப்பட்டிருந்தால், கடைசி இடத்தில் போய் உட்காருங்கள்; உங்களை அழைத்தவர் வந்து, ‘நண்பரே, முன்னால் வந்து உட்காருங்கள்’ என்று சொல்வார். அப்போது, மற்ற விருந்தினர்கள்முன் உங்களுக்குக் கெளரவமாக இருக்கும்” என்று சொல்கிறார். அப்படி நடந்துகொள்வதுதான் மரியாதை என்பதற்காக மட்டுமே இயேசு இதைச் சொல்கிறாரா? இல்லை. ஏனென்றால், “தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்று அவர் கூடுதலாகச் சொல்கிறார். (லூக்கா 14:10, 11) மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளும்படி இயேசு எல்லாரையும் உற்சாகப்படுத்துகிறார்.

யாரை விருந்துக்குக் கூப்பிட்டால் கடவுள் சந்தோஷப்படுவார் என்று தன்னை விருந்துக்கு அழைத்த பரிசேயனிடம் இயேசு சொல்கிறார். “நீங்கள் மத்தியானத்தில் அல்லது சாயங்காலத்தில் விருந்து கொடுக்கும்போது, உங்கள் நண்பர்களையோ சகோதரர்களையோ சொந்தக்காரர்களையோ அக்கம்பக்கத்தில் இருக்கிற பணக்காரர்களையோ அழைக்காதீர்கள். அப்படி அழைத்தால் ஒருவேளை பதிலுக்கு அவர்களும் உங்களை எப்போதாவது அழைக்கலாம். அது உங்களுக்குக் கைமாறு செய்வதுபோல் ஆகிவிடும். அதனால் விருந்து கொடுக்கும்போது, ஏழைகளையும் உடல் ஊனமானவர்களையும் கால் ஊனமானவர்களையும் பார்வை இல்லாதவர்களையும் அழையுங்கள். அப்போது சந்தோஷப்படுவீர்கள். ஏனென்றால், உங்களுக்குக் கைமாறு செய்ய அவர்களிடம் ஒன்றும் இருக்காது” என்று சொல்கிறார்.—லூக்கா 14:12-14.

பொதுவாக எல்லாரும் தங்களுடைய நண்பர்கள், சொந்தக்காரர்கள் அல்லது அக்கம்பக்கத்தில் இருப்பவர்களைத்தான் விருந்துக்குக் கூப்பிடுவார்கள். அது தவறு என்று இயேசு சொல்லவில்லை. ஆனால், ஏழை எளியவர்கள், உடல் ஊனமானவர்கள், பார்வை இல்லாதவர்கள் ஆகியோருக்கு விருந்து கொடுத்தால் நிறைய ஆசீர்வாதம் கிடைக்கும் என்றுதான் வலியுறுத்துகிறார். இயேசு தன்னை விருந்துக்கு அழைத்தவரிடம், “நீதிமான்கள் உயிரோடு எழுப்பப்படும்போது உங்களுக்குக் கைமாறு கிடைக்கும்” என்று சொல்கிறார். இயேசு சொன்னதை விருந்தாளி ஒருவர் ஒத்துக்கொண்டு, “கடவுளுடைய அரசாங்கத்தில் விருந்து சாப்பிடுகிறவன் சந்தோஷமானவன்” என்று சொல்கிறார். (லூக்கா 14:15) அதை ஒரு பாக்கியமாக அவர் நினைக்கிறார். ஆனால், எல்லாரும் அப்படி நினைப்பதில்லை. இதைப் பற்றி இயேசு ஒரு உவமையைச் சொல்கிறார்.

“ஒரு மனுஷர் பெரிய விருந்தை ஏற்பாடு செய்து நிறைய பேரை அழைத்தார். . . . அவர் தன்னுடைய அடிமையைக் கூப்பிட்டு, ‘“எல்லாம் தயாராக இருக்கிறது, வாருங்கள்” என அழைக்கப்பட்டவர்களிடம் போய்ச் சொல்’ என்றார். ஆனால், அவர்கள் எல்லாருமே சாக்குப்போக்கு சொல்ல ஆரம்பித்தார்கள். முதலில் ஒருவன், ‘நான் ஒரு வயல் வாங்கியிருக்கிறேன். அதைப் போய்ப் பார்க்க வேண்டும், தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று சொன்னான். மற்றொருவன், ‘ஐந்து ஜோடி ஏர்மாடுகளை வாங்கியிருக்கிறேன். அவற்றைச் சோதித்துப் பார்க்கப் போகிறேன், தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று சொன்னான். இன்னொருவனோ, ‘எனக்கு இப்போதுதான் கல்யாணம் ஆகியிருக்கிறது. அதனால் நான் வர முடியாது’ என்று சொன்னான்.”—லூக்கா 14:16-20.

இவையெல்லாம் நொண்டிச்சாக்குகள்! பொதுவாக, வயலையும் மாடுகளையும் வாங்குவதற்கு முன்னால்தான் அவற்றைப் போய்ப் பார்ப்பார்கள். வாங்கிய பிறகு, அவற்றைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. மூன்றாவது ஆள், கல்யாணத்துக்குத் தயாராகிக்கொண்டு இல்லை. அவனுக்குக் கல்யாணம் முடிந்துவிட்டது. அதனால், முக்கியமான விருந்துக்கு வர அது ஒரு தடை கிடையாது. இந்தச் சாக்குப்போக்குகளைக் கேட்டதும் அவர்களை விருந்துக்கு அழைத்த எஜமானுக்குப் பயங்கர கோபம் வருகிறது.

உடனே அவர் தன் அடிமையிடம், “நீ நகரத்தில் இருக்கிற முக்கியத் தெருக்களுக்கும் வீதிகளுக்கும் சீக்கிரமாகப் போய், ஏழைகளையும் உடல் ஊனமானவர்களையும் பார்வை இல்லாதவர்களையும் கால் ஊனமானவர்களையும் இங்கே கூட்டிக்கொண்டு வா” என்று சொல்கிறார். அந்த அடிமையும் அப்படியே செய்கிறான். அதற்குப் பிறகும் இடம் இருக்கிறது. அதனால் எஜமான் அந்த அடிமையிடம், “நீ சாலைகளுக்கும் சந்துகளுக்கும் போய், என் வீடு நிரம்பும் அளவுக்கு ஆட்களை வற்புறுத்திக் கூட்டிக்கொண்டு வா. முதலில் அழைக்கப்பட்ட யாரும் நான் கொடுக்கிற விருந்தைச் சாப்பிடப்போவதில்லை என்று உங்கள் எல்லாருக்கும் சொல்கிறேன்” என்கிறார்.—லூக்கா 14:21-24.

பரலோக அரசாங்கத்தில் பங்கு பெறுவதற்கான அழைப்பை யெகோவா தேவன் எப்படி இயேசு கிறிஸ்து மூலமாக கொடுக்கிறார் என்பதை இந்த உவமை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. யூதர்கள், அதிலும் முக்கியமாக, மதத் தலைவர்களுக்குத்தான் முதல் அழைப்பு கிடைத்தது. ஆனால், இயேசு ஊழியம் செய்த காலம் முழுவதும் அவர்களில் பெரும்பாலோர் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், அந்த அழைப்பு மற்றவர்களுக்குக் கிடைக்கும். மதத் தலைவர்களால் கேவலமாகக் கருதப்பட்ட யூதர்களுக்கும், யூத மதத்துக்கு மாறியவர்களுக்கும் எதிர்காலத்தில் இரண்டாவது அழைப்பு கிடைக்கும் என்று இயேசு தெளிவாகச் சொல்கிறார். அதற்குப் பிறகு, கடவுளுக்கு முன்னால் நிற்கத் தகுதியில்லாதவர்கள் என்று யூதர்களால் கருதப்பட்ட மக்களுக்கு மூன்றாவது அழைப்பு கிடைக்கும். இதுதான் கடைசி அழைப்பு.—அப்போஸ்தலர் 10:28-48.

கடவுளுடைய அரசாங்கத்தில் விருந்து சாப்பிடுகிறவன் சந்தோஷமானவன்” என்று அந்த விருந்துக்கு வந்திருந்த ஒருவர் சொல்லியிருந்தார். அது உண்மை என்பதை இயேசுவின் வார்த்தைகள் நிரூபிக்கின்றன.