Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 89

யூதேயாவுக்குப் போகிற வழியில் பெரேயாவில் கற்பிக்கிறார்

யூதேயாவுக்குப் போகிற வழியில் பெரேயாவில் கற்பிக்கிறார்

லூக்கா 17:1-10 யோவான் 11:1-16

  • மற்றவர்களைப் பாவம் செய்ய வைப்பது மிகப் பெரிய தவறு

  • மன்னியுங்கள், விசுவாசம் காட்டுங்கள்

கொஞ்சக் காலமாக, ‘யோர்தானுக்கு அக்கரையிலுள்ள’ பெரேயா என்ற இடத்தில் இயேசு இருக்கிறார். (யோவான் 10:40) இப்போது, அவர் தெற்கில் இருக்கிற எருசலேமை நோக்கிப் பயணம் செய்கிறார்.

இயேசு தனியாகப் பயணம் செய்யவில்லை. அவருடைய சீஷர்கள் அவருடன் போகிறார்கள். வரி வசூலிக்கிறவர்கள், பாவிகள் உட்பட பலர் “கூட்டம் கூட்டமாக” அவருடன் போகிறார்கள். (லூக்கா 14:25; 15:1) இயேசு சொல்வதையும் செய்வதையும் குறை சொல்லிக்கொண்டே இருக்கிற பரிசேயர்களும் வேத அறிஞர்களும்கூட அந்தக் கூட்டத்தில் இருக்கிறார்கள். காணாமல் போன ஆடு, காணாமல் போன மகன், பணக்காரன் மற்றும் லாசரு பற்றிய உவமைகளையெல்லாம் இவர்கள் கேட்டிருந்தார்கள். இப்போது, அவற்றைப் பற்றியெல்லாம் இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.—லூக்கா 15:2; 16:14.

இயேசு இவர்களுடைய குற்றச்சாட்டுகளையும் ஏளனப் பேச்சையும் மனதில் வைத்து இப்போது தன் சீஷர்களிடம் பேச ஆரம்பிக்கிறார். கலிலேயாவில் ஏற்கெனவே சொன்ன சில விஷயங்களைப் பற்றி மறுபடியும் சீஷர்களிடம் சொல்கிறார்.

உதாரணமாக, “மக்களைப் பாவம் செய்ய வைக்கிற காரியங்கள் கண்டிப்பாக வரும். ஆனால், அவை எந்த மனுஷனால் வருகிறதோ அந்த மனுஷனுக்குக் கேடுதான் வரும்! . . . உங்களைக் குறித்துக் கவனமாயிருங்கள். உங்கள் சகோதரன் பாவம் செய்தால் அவனை எச்சரியுங்கள்; அவன் மனம் திருந்தினால் அவனை மன்னியுங்கள். அவன் உங்களுக்கு விரோதமாக ஒரே நாளில் ஏழு தடவை பாவம் செய்து அந்த ஏழு தடவையும் உங்களிடம் வந்து, ‘மனம் திருந்திவிட்டேன்’ என்று சொன்னால், நீங்கள் அவனை மன்னிக்க வேண்டும்” என்று சீஷர்களிடம் சொல்கிறார். (லூக்கா 17:1-4) இயேசு சொன்ன கடைசி குறிப்பைக் கேட்டதும், ஏழு தடவை மன்னிப்பதைப் பற்றி முன்பு அவரிடம் கேட்டது பேதுருவின் ஞாபகத்துக்கு வந்திருக்கும்.—மத்தேயு 18:21.

இயேசு சொல்கிறபடி அவர்களால் நடக்க முடியுமா? “எங்களுடைய விசுவாசத்தை அதிகமாக்குங்கள்” என்று இயேசுவிடம் அவர்கள் சொல்கிறார்கள். அப்போது அவர், “உங்களுக்குக் கடுகளவு விசுவாசம் இருந்தால்கூட இந்த முசுக்கட்டை மரத்தைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்!’ என்று நீங்கள் சொன்னால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்” என்று உறுதியளிக்கிறார். (லூக்கா 17:5, 6) ஓரளவு விசுவாசம் இருந்தால்கூட பெரிய விஷயங்களைச் சாதிக்க முடியும்.

ஒருவர் தன்னைப் பற்றி அளவுக்கதிகமாக நினைக்கக் கூடாது, மனத்தாழ்மையாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இயேசு அடுத்ததாகச் சொல்கிறார். அவர் தன் அப்போஸ்தலர்களிடம், “ஒரு அடிமை வயலில் உழுதுவிட்டு அல்லது மந்தையை மேய்த்துவிட்டு வந்ததுமே, ‘நீ வந்து முதலில் சாப்பிடு’ என்று எந்த எஜமானாவது சொல்வாரா? அதற்குப் பதிலாக, ‘நீ எனக்கு உணவு தயார் செய்து, துண்டைக் கட்டிக்கொண்டு எனக்குப் பரிமாறு; நான் சாப்பிட்டுக் குடித்த பிறகு நீ போய்ச் சாப்பிட்டுக் குடிக்கலாம்’ என்றுதானே சொல்வார்? கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்ததற்காக அந்த அடிமைக்கு அவர் நன்றியுள்ளவராக இருக்க மாட்டார்தானே? அதனால் நீங்களும் கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும் செய்து முடித்த பின்பு, ‘நாங்கள் ஒன்றுக்கும் உதவாத அடிமைகள்; செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்தோம்’ என்று சொல்லுங்கள்” என்கிறார்.—லூக்கா 17:7-10.

கடவுளுடைய ஊழியர்கள் ஒவ்வொருவரும் அவருடைய சேவைக்குத் தங்கள் வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க வேண்டும். கடவுளுடைய குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக இருந்து அவரை வணங்குவது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை ஒவ்வொருவரும் மனதில் வைக்க வேண்டும்.

இதற்குப் பிறகு, லாசருவின் சகோதரிகளான மரியாளும் மார்த்தாளும் அனுப்பிய ஒருவர் இயேசுவிடம் வருகிறார். யூதேயாவில் இருக்கிற பெத்தானியாவில் இவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனுப்பிய ஆள் இயேசுவிடம் வந்து, “எஜமானே, உங்கள் பாசத்துக்குரிய நண்பன் வியாதியாக இருக்கிறான்” என்று சொல்கிறார்.—யோவான் 11:1-3.

தன்னுடைய நண்பரான லாசருவின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று கேள்விப்பட்டதும் இயேசு துக்கத்தில் துவண்டுவிடவில்லை. அதற்குப் பதிலாக, “இந்த வியாதியின் முடிவில் மரணம் அல்ல, கடவுளுக்கு மகிமைதான் உண்டாகும்; இதன் மூலம் கடவுளுடைய மகனுக்கும் மகிமை உண்டாகும்” என்று சொல்கிறார். தான் இருக்கிற இடத்திலேயே இன்னும் இரண்டு நாட்களுக்குத் தங்குகிறார். பிறகு தன்னுடைய சீஷர்களிடம், “மறுபடியும் யூதேயாவுக்குப் போகலாம், வாருங்கள்” என்று சொல்கிறார். அதற்குச் சீஷர்கள், “ரபீ, சமீபத்தில்தான் யூதேய மக்கள் உங்களைக் கல்லெறிந்து கொல்லப் பார்த்தார்கள், மறுபடியுமா அங்கே போகப்போகிறீர்கள்?” என்று கேட்கிறார்கள்.—யோவான் 11:4, 7, 8.

அப்போது இயேசு, “பகலுக்கு 12 மணிநேரம் இருக்கிறது, இல்லையா? ஒருவன் பகலில் நடந்தால் தடுக்கி விழ மாட்டான். ஏனென்றால், அவன் இந்த உலகத்தின் ஒளியைப் பார்க்கிறான். ஆனால், ஒருவன் இருட்டில் நடந்தால் தடுக்கி விழுவான். ஏனென்றால், அவனிடம் ஒளி இல்லை” என்று சொல்கிறார். (யோவான் 11:9, 10) தன்னுடைய ஊழியத்துக்கு கடவுள் குறித்திருக்கிற நேரம் இன்னும் முடியவில்லை என்ற அர்த்தத்தில் அவர் இப்படிச் சொல்லியிருக்கலாம். அதுவரை, தனக்கு இருக்கிற கொஞ்ச நேரத்தை இயேசு முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்.

பிறகு இயேசு, “நம்முடைய நண்பன் லாசரு தூங்குகிறான், அவனை எழுப்புவதற்காக நான் அங்கே போகப்போகிறேன்” என்று சொல்கிறார். லாசரு வெறுமனே தூங்குவதாகச் சீஷர்கள் நினைக்கிறார்கள். அதனால், “எஜமானே, அவன் தூங்கினால் குணமாகிவிடுவானே” என்று சொல்கிறார்கள். அப்போது இயேசு, “லாசரு இறந்துவிட்டான் . . . இப்போது நாம் அவனிடம் போகலாம்” என்று வெளிப்படையாகச் சொல்கிறார்.—யோவான் 11:11-15.

யூதேயாவில் இயேசு கொல்லப்படலாம் என்று தெரிந்தும், அவருக்கு ஆதரவு கொடுக்க தோமா தயாராக இருக்கிறார். அவர் மற்ற சீஷர்களிடம், “நாம் அவரோடு சேர்ந்து சாக வேண்டியிருந்தாலும் சரி, அவரோடு போகலாம், வாருங்கள்” என்று சொல்கிறார்.—யோவான் 11:16.