Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 90

‘உயிர்த்தெழுதலும் வாழ்வும்’

‘உயிர்த்தெழுதலும் வாழ்வும்’

யோவான் 11:17-37

  • லாசரு இறந்த பிறகு, இயேசு வருகிறார்

  • “உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக” இருக்கிறார்

பெரேயாவிலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவுக்குப் பக்கத்தில் இயேசு வந்துவிட்டார். இந்தக் கிராமம் எருசலேமுக்குக் கிழக்கே கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. லாசரு இறந்து ஒருசில நாட்கள் ஆகியிருக்கின்றன. அவருடைய சகோதரிகளான மரியாளும் மார்த்தாளும் துக்கத்தில் இருப்பதால், அவர்களுக்கு ஆறுதல் சொல்ல நிறைய பேர் வந்திருக்கிறார்கள்.

அப்போது ஒருவர், இயேசு வந்துகொண்டிருப்பதாக மார்த்தாளிடம் சொல்கிறார். உடனே, அவள் இயேசுவைப் பார்ப்பதற்காக வேகவேகமாகப் போகிறாள். இயேசுவைப் பார்த்ததும், “எஜமானே, நீங்கள் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்று சொல்கிறாள். ஒருவேளை, மார்த்தாளின் மனதிலும் அவளுடைய சகோதரியின் மனதிலும் நான்கு நாட்களாக இந்த எண்ணம் ஓடிக்கொண்டிருந்திருக்கலாம். இந்தச் சூழ்நிலையிலும், மார்த்தாள் நம்பிக்கை இழந்துவிடவில்லை. “நீங்கள் கடவுளிடம் எதைக் கேட்டாலும் அவர் உங்களுக்குத் தருவாரென்று இப்போதும் நம்புகிறேன்” என்று அவள் சொல்கிறாள். (யோவான் 11:21, 22) இப்போதும் தன்னுடைய சகோதரனை உயிர்த்தெழுப்ப இயேசுவினால் முடியும் என்று அவள் நம்புகிறாள்.

இயேசு அவளிடம், “உன் சகோதரன் எழுந்திருப்பான்” என்று சொல்கிறார். எதிர்காலத்தில் இந்தப் பூமியில் நடக்கப்போகிற உயிர்த்தெழுதலைப் பற்றி இயேசு சொல்வதாக மார்த்தாள் நினைத்துக்கொள்கிறாள். ஆபிரகாமுக்கும் மற்ற உண்மையுள்ள ஊழியர்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. அதனால், “கடைசி நாளில் உயிர்த்தெழுதல் நடக்கும்போது அவன் உயிரோடு வருவான் என்று எனக்குத் தெரியும்” என்று நம்பிக்கையோடு சொல்கிறாள்.—யோவான் 11:23, 24.

ஆனால், இப்போதே அவர்களுடைய வேதனையை இயேசுவினால் தீர்க்க முடியுமா? மரணத்தை ஜெயிக்கிற சக்தியை கடவுள் தனக்குத் தந்திருப்பதை மார்த்தாளுக்கு இயேசு ஞாபகப்படுத்துகிறார். “என்மேல் விசுவாசம் வைக்கிறவன் இறந்தாலும் உயிர்பெறுவான். உயிரோடிருந்து என்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் இறந்துபோகவே மாட்டார்கள்” என்று சொல்கிறார்.—யோவான் 11:25, 26.

தன்னுடைய காலத்தில் உயிரோடு இருக்கிற சீஷர்கள் இறந்துபோகவே மாட்டார்கள் என்று இயேசு சொல்லவில்லை. தானும்கூட இறந்துபோக வேண்டியிருக்கும் என்று தன் அப்போஸ்தலர்களிடம் அவர் சொல்லியிருந்தார். (மத்தேயு 16:21; 17:22, 23) அப்படியானால், இயேசு சொன்னதற்கு என்ன அர்த்தம்? தன்மீது விசுவாசம் வைக்கிறவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும் என்றுதான் இயேசு இங்கே சொல்கிறார். இறந்துபோன நிறைய பேருக்கு, உயிர்த்தெழுதலின் மூலம் அந்த வாழ்வு கிடைக்கும். ஆனால், சாத்தானுடைய உலகம் முடிவுக்கு வருகிற சமயத்தில் வாழ்கிற உண்மையுள்ள நபர்கள், ஒருவேளை இறந்துபோகாமலேயே அந்த வாழ்வைப் பெறலாம். எப்படியிருந்தாலும், அவர்மீது விசுவாசம் வைக்கிற யாரும் நிரந்தரமாக அழிந்துபோக மாட்டார்கள் என்று நாம் நம்பிக்கையோடு இருக்கலாம்.

“நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்” என்று இயேசு அப்போதுதான் சொல்லியிருந்தார். அப்படியானால், சில நாட்களுக்கு முன்பு இறந்த லாசருவை உயிர்த்தெழுப்ப இயேசுவினால் முடியுமா? இயேசு மார்த்தாளிடம், “இதை நம்புகிறாயா?” என்று கேட்கிறார். அதற்கு அவள், “ஆமாம், எஜமானே. நீங்கள்தான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்து, நீங்கள்தான் இந்த உலகத்துக்கு வரவேண்டியவர் என்பதை நம்புகிறேன்” என்று சொல்கிறாள். அன்றைக்கே இயேசுவினால் ஏதாவது செய்ய முடியும் என்ற விசுவாசத்தோடு மார்த்தாள் தன் வீட்டுக்கு வேகமாகப் போகிறாள். தன் சகோதரி மரியாளிடம் போய், “போதகர் வந்திருக்கிறார், உன்னைக் கூப்பிடுகிறார்” என்று அவள் காதில் சொல்கிறாள். (யோவான் 11:25-28) உடனே, மரியாள் வீட்டிலிருந்து கிளம்பிப் போகிறாள். அவள் லாசருவின் கல்லறைக்குப் போகிறாள் என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களும் அவள் பின்னாலேயே போகிறார்கள்.

மரியாள் இயேசுவிடம் போய், அழுதுகொண்டே அவருடைய காலில் விழுகிறாள். மார்த்தாள் சொன்ன மாதிரியே அவளும், “எஜமானே, நீங்கள் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்று சொல்கிறாள். மரியாளும் மற்றவர்களும் அழுவதைப் பார்த்ததும் இயேசுவின் மனம் உருகுகிறது. அவர் உள்ளம் குமுறி, மனம் கலங்கி, கண்ணீர்விடுகிறார். அவர் லாசருமேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை அங்கிருக்கிறவர்கள் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் வேறு சிலர், “குருடனுடைய கண்களைத் திறந்த இவரால் லாசருவின் சாவைத் தடுக்க முடியவில்லையா?” என்று கேட்கிறார்கள்.—யோவான் 11:32, 37.