Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 93

மனிதகுமாரன் வெளிப்படுவார்

மனிதகுமாரன் வெளிப்படுவார்

லூக்கா 17:20-37

  • கடவுளுடைய அரசாங்கம் அவர்கள் மத்தியில் இருக்கிறது

  • மனிதகுமாரன் வெளிப்படும்போது என்ன நடக்கும்?

இயேசு இப்போது சமாரியாவிலோ கலிலேயாவிலோ இருக்கலாம். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பரிசேயர்கள் அவரிடம் கேட்கிறார்கள். அது பகட்டாகவும் ஆரவாரமாகவும் வரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், “கடவுளுடைய அரசாங்கம் வெளிப்படையாகத் தெரியும் விதத்தில் வராது. ‘இங்கே பாருங்கள்!’ அல்லது ‘அங்கே பாருங்கள்!’ என்று மக்கள் சொல்லிக்கொண்டும் இருக்க மாட்டார்கள். இதோ! கடவுளுடைய அரசாங்கம் உங்கள் மத்தியிலேயே இருக்கிறது” என்று இயேசு சொல்கிறார்.—லூக்கா 17:20, 21.

கடவுளுடைய ஊழியர்களின் இதயத்தில் அந்த அரசாங்கம் ஆட்சி செய்கிறது என்று இயேசு சொல்வதாக சிலர் நினைக்கலாம். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால், இயேசு இந்த வார்த்தைகளைப் பரிசேயர்களிடம் சொல்கிறார். அவர்களுடைய இதயங்களில் கடவுளுடைய அரசாங்கம் இல்லை. அது அவர்கள் மத்தியில்தான் இருக்கிறது. ஏனென்றால், அந்த அரசாங்கத்தின் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற இயேசு அவர்கள் மத்தியில் இருக்கிறார்.—மத்தேயு 21:5.

கடவுளுடைய அரசாங்கம் வரப்போவதைப் பற்றிக் கூடுதல் விவரங்களை இயேசு தன் சீஷர்களிடம் சொல்கிறார். அநேகமாக, பரிசேயர்கள் அங்கிருந்து போன பிறகு இயேசு இதைச் சொல்லியிருக்கலாம். “மனிதகுமாரனுடைய நாட்களில் ஒரு நாளைப் பார்க்க வேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுகிற காலம் வரும், ஆனால் அதைப் பார்க்க மாட்டீர்கள்” என்று முதலில் அவர்களிடம் சொல்கிறார். (லூக்கா 17:22) மனிதகுமாரன் எதிர்காலத்தில்தான் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக ஆட்சி செய்வார் என்று இயேசு இங்கே குறிப்பிடுகிறார். அதற்கு முன்பே, அவர் எப்போது ஆட்சி செய்ய ஆரம்பிப்பார் என்று தெரிந்துகொள்ள சீஷர்களில் சிலர் ஆசைப்பட்டிருக்கலாம். ஆனால், கடவுள் குறித்து வைத்திருக்கிற நேரத்தில் மனிதகுமாரன் வரும்வரை அவர்கள் தொடர்ந்து காத்திருக்க வேண்டும்.

பிறகு இயேசு, “மக்கள் உங்களிடம், ‘அங்கே பாருங்கள்!’ அல்லது ‘இங்கே பாருங்கள்!’ என்று சொல்வார்கள். ஆனால், வெளியே போகாதீர்கள், அவர்களுக்குப் பின்னாலும் ஓடாதீர்கள். ஏனென்றால், வானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை மின்னல் மின்னுவதுபோல் மனிதகுமாரன் தன்னுடைய நாளில் வெளிப்படுவார்” என்று அவர்களிடம் சொல்கிறார். (லூக்கா 17:23, 24) போலி மேசியாக்களின் பின்னால் போகாமல் இயேசுவின் சீஷர்கள் எப்படி ஜாக்கிரதையாக இருக்கலாம்? வானத்தில் மின்னல் வெட்டும்போது, அது ரொம்பத் தூரம்வரை பளிச்சென்று தெரியும். அதேபோல, உண்மையான மேசியா ராஜாவாக வந்திருப்பதும் தெளிவாகத் தெரியும் என்று இயேசு சொல்கிறார். அவருடைய ஆட்சி ஆரம்பமாகிவிட்டது என்பதற்கான அத்தாட்சி, அதைக் கூர்ந்து கவனிக்கிற எல்லாருக்கும் நன்றாகத் தெரியும்.

அந்தச் சமயத்தில் மக்களின் மனப்பான்மை எப்படி இருக்கும் என்பதைக் காட்டுவதற்காக, ஏற்கெனவே நடந்த சில சம்பவங்களை இயேசு குறிப்பிடுகிறார். “நோவாவின் நாட்களில் நடந்தது போலவே மனிதகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். . . . லோத்துவின் நாட்களில் நடந்தது போலவும் நடக்கும்; மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் வாங்கிக்கொண்டும் விற்றுக்கொண்டும் நட்டுக்கொண்டும் கட்டிக்கொண்டும் இருந்தார்கள். ஆனால், சோதோம் நகரத்தைவிட்டு லோத்து வெளியே போன நாளில் வானத்திலிருந்து நெருப்பும் கந்தகமும் பெய்து அவர்கள் எல்லாரையும் அழித்துப்போட்டது. மனிதகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்” என்று அவர் சொல்கிறார்.—லூக்கா 17:26-30.

நோவாவின் காலத்திலும், லோத்துவின் காலத்திலும் வாழ்ந்த மக்கள் சாப்பிடுவது, குடிப்பது, வாங்குவது, விற்பது, நடுவது, கட்டுவது போன்ற அன்றாட வேலைகளைச் செய்ததற்காக அழிக்கப்பட்டார்கள் என்று இயேசு சொல்லவில்லை. நோவாவும் லோத்துவும் அவர்களுடைய குடும்பத்தாரும்கூட இந்த வேலைகளில் சிலவற்றைச் செய்தார்கள். ஆனால் மற்றவர்கள், கடவுளுடைய விருப்பம் என்னவென்பதைத் தெரிந்துகொள்ளாமல் தங்களுடைய வேலைகளிலேயே மூழ்கியிருந்தார்கள். முக்கியமான காலத்தில் வாழ்வதைப் புரிந்துகொள்ளாமல் இருந்தார்கள். அதனால், தன்னுடைய சீஷர்கள் கடவுளுடைய விருப்பம் என்னவென்பதைத் தெரிந்துகொள்வதில் கவனமாக இருக்க வேண்டும், அதைச் செய்வதில் மும்முரமாக இருக்க வேண்டும் என்று இயேசு சொல்கிறார். எதிர்காலத்தில் கடவுள் அழிவைக் கொண்டுவரும்போது, தப்பிப்பிழைப்பதற்கான வழியை அவர்களுக்குக் காட்டுகிறார்.

இந்த உலகத்தில் இருக்கிற பொருள்களைப் பார்த்து சீஷர்களின் கவனம் சிதறிவிடக் கூடாது. அதனால் இயேசு, “அந்த நாளில், வீட்டு மாடியில் இருப்பவர் தன் வீட்டில் இருக்கிற பொருள்களை எடுப்பதற்காகக் கீழே இறங்கி வர வேண்டாம். வயலில் இருப்பவர் தான் விட்டுவந்த பொருள்களை எடுப்பதற்காகத் திரும்பிப் போக வேண்டாம். லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள்” என்று சொல்கிறார். (லூக்கா 17:31, 32) ஏனென்றால், அவள் கடைசியில் உப்புச் சிலையானாள்.

மனிதகுமாரன் ராஜாவாக ஆட்சி செய்யும் காலத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கும் என்பதைப் பற்றிக் கூடுதலான சில தகவல்களை இயேசு சொல்கிறார். “நான் உங்களுக்குச் சொல்கிறேன், அந்த இரவில் ஒரே படுக்கையில் இரண்டு பேர் படுத்திருப்பார்கள்; அவர்களில் ஒருவன் அழைத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்” என்று தன் சீஷர்களிடம் சொல்கிறார். (லூக்கா 17:34) இதிலிருந்து, சிலர் மீட்புப் பெறுவார்கள், சிலர் கைவிடப்பட்டு தங்கள் உயிரை இழப்பார்கள் என்பது தெரிகிறது.

சீஷர்கள் அவரிடம், “எங்கே, எஜமானே?” என்று கேட்கிறார்கள். அதற்கு அவர், “பிணம் எங்கேயோ அங்கே கழுகுகளும் வந்து கூடும்” என்கிறார். (லூக்கா 17:37) மீட்புப் பெறுகிறவர்கள் தொலைநோக்குப் பார்வையுள்ள கழுகுகளைப் போல இருப்பார்கள். இந்தச் சீஷர்கள் உண்மையான கிறிஸ்துவிடம், அதாவது மனிதகுமாரனிடம், கூடிவருவார்கள். இது எதிர்காலத்தில் நடக்கும். அந்தச் சமயத்தில், விசுவாசம் வைக்கிறவர்களின் உயிரைக் காப்பாற்றுகிற சத்தியங்களை இயேசு தன் சீஷர்களுக்குத் தெரியப்படுத்துவார்.