Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 99

கண் தெரியாதவர்களைக் குணமாக்குகிறார், சகேயுவுக்கு உதவுகிறார்

கண் தெரியாதவர்களைக் குணமாக்குகிறார், சகேயுவுக்கு உதவுகிறார்

மத்தேயு 20:29-34 மாற்கு 10:46-52 லூக்கா 18:35–19:10

  • கண் தெரியாத ஆட்களை எரிகோவில் குணமாக்குகிறார்

  • வரி வசூலிப்பவனான சகேயு திருந்துகிறான்

இயேசுவும் அவரோடு பயணம் செய்கிறவர்களும் எரிகோவுக்கு வருகிறார்கள். அங்கிருந்து எருசலேமுக்குப் பயணம் செய்ய ஒரு நாள் ஆகும். எரிகோ ஒரு இரட்டை நகரம். பழைய எரிகோ நகரத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில், ரோமர்களுடைய காலத்தில் கட்டப்பட்ட புதிய எரிகோ நகரம் இருக்கிறது. இயேசுவும் அவருடன் வந்த கூட்டத்தாரும், ஒரு எரிகோவிலிருந்து மற்றொரு எரிகோவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். மக்கள் நடந்துபோகிற சத்தத்தைக் கண் தெரியாத இரண்டு பிச்சைக்காரர்கள் கேட்கிறார்கள். அவர்களில் ஒருவன் பெயர் பர்திமேயு.

இயேசு அந்த வழியாகப் போகிறார் என்று தெரிந்துகொண்டதும், பர்திமேயுவும் அவனுடன் இருக்கிறவனும், “எஜமானே, தாவீதின் மகனே, எங்களுக்கு இரக்கம் காட்டுங்கள்” என்று சத்தமாகச் சொல்கிறார்கள். (மத்தேயு 20:30) கூட்டத்திலிருக்கிற சிலர், அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லி அதட்டுகிறார்கள். ஆனால், அவர்கள் இரண்டு பேரும் இன்னும் சத்தமாகக் கூப்பிடுகிறார்கள். அதைக் கேட்டதும் இயேசு அங்கே நின்றுவிடுகிறார். சத்தம் போடுகிற ஆட்களைக் கூட்டிக்கொண்டு வரும்படி தன்னோடு இருக்கிறவர்களிடம் சொல்கிறார். அவர்கள் அந்தப் பிச்சைக்காரர்களிடம் போய், அவர்களில் ஒருவனிடம், “தைரியமாக எழுந்து வா, அவர் உன்னைக் கூப்பிடுகிறார்” என்று சொல்கிறார்கள். (மாற்கு 10:49) அவன் சந்தோஷமாகத் தன்னுடைய மேலங்கியைத் தூக்கியெறிந்துவிட்டு, துள்ளியெழுந்து இயேசுவிடம் போகிறான்.

“உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும்?” என்று இயேசு கேட்கிறார். அதற்கு அந்தப் பிச்சைக்காரர்கள் இரண்டு பேரும், “எஜமானே, தயவுசெய்து எங்களுக்குக் கண்பார்வை கொடுங்கள்” என்று சொல்கிறார்கள். (மத்தேயு 20:32, 33) அவர்களைப் பார்த்து இயேசு இரக்கப்படுகிறார். அதனால், அவர்களுடைய கண்களைத் தொடுகிறார். அவர்களில் ஒருவனிடம், “உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது, நீ போகலாம்” என்று சொல்கிறார். (மாற்கு 10:52) அவர்கள் இரண்டு பேருக்கும் பார்வை கிடைக்கிறது. அவர்கள் கடவுளைப் புகழ ஆரம்பிக்கிறார்கள். நடந்ததையெல்லாம் பார்த்த மக்களும் கடவுளைப் புகழ்கிறார்கள். இப்போது பார்வை பெற்ற இரண்டு பேரும் இயேசுவைப் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.

இயேசு எரிகோ வழியாகப் போகும்போது மக்கள் கூட்டம் கூட்டமாக அவருடன் போகிறார்கள். கண் தெரியாத ஆட்களைக் குணப்படுத்தியவரைப் பார்க்க எல்லாரும் ஆசைப்படுகிறார்கள். மக்கள் எல்லா பக்கங்களிலிருந்தும் இயேசுவை நெருக்கித் தள்ளுகிறார்கள். அதனால், ஒரு சிலரால் அவரைக் கொஞ்சம்கூட பார்க்க முடிவதில்லை. சகேயுவின் நிலைமையும் அதுதான். எரிகோவிலும் அதைச் சுற்றியிருக்கிற இடங்களிலும் உள்ள வரி வசூலிக்கிறவர்களுக்கு அவன் தலைவனாக இருக்கிறான். அவன் குள்ளமாக இருப்பதால், சுற்றி என்ன நடக்கிறதென்று அவனுக்குத் தெரியவில்லை. அதனால், இயேசு போய்க்கொண்டிருக்கிற வழியில், முன்னால் ஓடிப்போய், ஒரு காட்டத்தி மரத்தின் மேல் ஏறுகிறான். அங்கிருந்து அவனால் எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க முடிகிறது. இயேசு அந்த இடத்துக்கு வந்ததும் அண்ணாந்து பார்த்து, “சகேயு, சீக்கிரம் இறங்கி வா; நான் இன்றைக்கு உன் வீட்டில் தங்க வேண்டும்” என்று சொல்கிறார். (லூக்கா 19:5) சகேயு அந்த மரத்திலிருந்து இறங்கி, தன் வீட்டுக்கு வரப்போகிற முக்கியமான விருந்தாளியைக் கவனிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேகமாகப் போகிறான்.

நடந்ததைப் பார்த்த மக்கள், முணுமுணுக்க ஆரம்பிக்கிறார்கள். சகேயு ஒரு பாவி, அவன் வீட்டில் இயேசு தங்குவது சரியில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். சகேயு வரி வசூலிக்கும்போது, மக்களிடமிருந்து அதிகமான பணத்தை வாங்குவான். இப்படி அநியாயமாகப் பணம் சம்பாதித்துதான் அவன் பணக்காரனாக ஆகியிருந்தான்.

சகேயுவின் வீட்டுக்குள் இயேசு போவதைப் பார்க்கிற எல்லாரும், “ஒரு பாவியின் வீட்டுக்கு விருந்தாளியாகப் போகிறாரே” என்று முணுமுணுக்க ஆரம்பிக்கிறார்கள். சகேயு திருந்துவான் என்ற நம்பிக்கை இயேசுவுக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. சகேயு எழுந்து நின்று, “எஜமானே, இதோ! என் சொத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; மற்றவர்களிடமிருந்து அபகரித்ததையெல்லாம் நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்” என்று சொல்கிறான்.—லூக்கா 19:7, 8.

சகேயு உண்மையிலேயே திருந்திவிட்டான் என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. யாரிடமிருந்து எவ்வளவு பணத்தை வசூலித்திருக்கிறான் என்பதை அவனிடம் இருக்கிற பதிவுகளை வைத்து அவனால் கணக்குப் போட முடியும். அதை நான்கு மடங்காகத் திருப்பித் தருவதாக அவன் வாக்குக் கொடுக்கிறான். இப்படித் திருச்சட்டத்தில் சொல்லப்பட்டதைவிட அதிகமாக நஷ்ட ஈடு கொடுக்க முன்வருகிறான். (யாத்திராகமம் 22:1; லேவியராகமம் 6:2-5) அதோடு, தன்னுடைய சொத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுவதாகவும் வாக்குக் கொடுக்கிறான்.

சகேயு திருந்திவிட்டதைப் பார்த்து இயேசு சந்தோஷப்படுகிறார். அதனால் அவனிடம், “இன்று இந்த வீட்டுக்கு மீட்பு வந்திருக்கிறது; ஏனென்றால், இவனும் ஆபிரகாமின் மகன்தான். வழிதவறிப்போனவர்களைத் தேடுவதற்கும் மீட்பதற்குமே மனிதகுமாரன் வந்தார்” என்று சொல்கிறார்.—லூக்கா 19:9, 10.

சமீபத்தில், காணாமல் போன மகனைப் பற்றிய உவமையைச் சொன்னதன் மூலம் யெகோவாவை விட்டு விலகியவர்களின் நிலையை இயேசு விளக்கியிருந்தார். (லூக்கா 15:11-24) இப்போது, கிட்டத்தட்ட காணாமல் போயிருந்த ஒருவன் மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டதை ஒரு நிஜ உதாரணத்தின் மூலம் எல்லாருக்கும் காட்டிவிட்டார். சகேயு போன்ற ஆட்களிடம் இயேசு அக்கறை காட்டுவதால், மதத் தலைவர்களும் அவர்களைப் பின்பற்றுகிறவர்களும் இயேசுவைக் குறை சொல்கிறார்கள். ஆனாலும், இயேசு வழிதவறிப்போன ஆபிரகாமின் மகன்களைத் தொடர்ந்து தேடுகிறார். அவர்களை நல்ல வழிக்குக் கொண்டுவருகிறார்.