Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 101

பெத்தானியாவில் சீமோனின் வீட்டில் விருந்து

பெத்தானியாவில் சீமோனின் வீட்டில் விருந்து

மத்தேயு 26:6-13 மாற்கு 14:3-9 யோவான் 11:55–12:1

  • எருசலேமுக்குப் பக்கத்தில் இருக்கிற பெத்தானியாவுக்கு இயேசு போகிறார்

  • இயேசுவின் தலையில் வாசனை எண்ணெயை மரியாள் ஊற்றுகிறாள்

எரிகோவிலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவுக்கு இயேசு பயணம் செய்கிறார். பெத்தானியாவுக்குப் போக வேண்டுமென்றால், ரொம்பக் கஷ்டமான மலைப்பாதையில் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் ஏறிப் போக வேண்டும். கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 820 அடி கீழே எரிகோ இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 2,000 அடி உயரத்தில் பெத்தானியா இருக்கிறது. லாசருவும் அவருடைய இரண்டு சகோதரிகளும் இந்தச் சின்ன கிராமத்தில் வாழ்கிறார்கள். அது எருசலேமிலிருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரத்தில், ஒலிவ மலையின் கிழக்கு மலைச் சரிவில் இருக்கிறது.

பஸ்கா பண்டிகைக்காக யூதர்களில் நிறைய பேர் ஏற்கெனவே எருசலேமுக்கு வந்துவிட்டார்கள். ஒருவேளை, அவர்கள் ஒரு பிணத்தைத் தொட்டிருக்கலாம் அல்லது தீட்டுப்படுத்துகிற வேறு எதையாவது செய்திருக்கலாம். அதனால், “தூய்மைச் சடங்கு செய்துகொள்வதற்காக” பஸ்காவுக்கு முன்பே அவர்கள் வந்துவிட்டார்கள். (யோவான் 11:55; எண்ணாகமம் 9:6-10) சீக்கிரமாக வந்தவர்களில் சிலர் ஆலயத்தில் கூடிவருகிறார்கள். பஸ்கா பண்டிகைக்கு இயேசு வருவாரா மாட்டாரா என்று அவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.—யோவான் 11:56.

சொல்லப்போனால், இயேசுவைப் பற்றி மக்கள் பலவிதமாகப் பேசிக்கொள்கிறார்கள். மதத் தலைவர்களில் சிலர் அவரை ‘பிடித்து,’ கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால், இயேசு இருக்கிற இடம் யாருக்காவது தெரியவந்தால், அதைத் தங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றும்கூட கட்டளை போட்டிருக்கிறார்கள். (யோவான் 11:57) லாசருவை அவர் உயிரோடு எழுப்பிய சமயத்திலேயே, அவரைக் கொலை செய்ய அவர்கள் முயற்சி செய்திருந்தார்கள். (யோவான் 11:49-53) அதனால், இயேசு வருவாரா என்று சிலர் சந்தேகப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

“பஸ்கா பண்டிகைக்கு ஆறு நாட்களுக்கு முன்பு,” வெள்ளிக்கிழமை அன்று இயேசு பெத்தானியாவுக்கு வந்துசேர்கிறார். (யோவான் 12:1) சூரியன் மறைந்த பிறகு ஒரு புதிய நாள் (ஓய்வுநாள், நிசான் 8) ஆரம்பிக்கும். அதனால், ஓய்வுநாள் ஆரம்பமாவதற்கு முன்பே இயேசு தன் பயணத்தை முடித்துவிடுகிறார். யூதச் சட்டத்தின்படி, ஓய்வுநாளில் பயணம் செய்வது தவறு. அதனால் ஓய்வுநாளில், அதாவது வெள்ளிக்கிழமை சூரியன் மறைந்ததிலிருந்து சனிக்கிழமை சூரியன் மறையும்வரை, எரிகோவிலிருந்து இயேசு புறப்பட்டிருக்க மாட்டார். இதற்கு முன்பு, பெத்தானியாவுக்கு வந்தபோது லாசருவின் வீட்டுக்கு இயேசு போயிருந்தார். அநேகமாக, இப்போதும் இயேசு அங்கே போயிருக்கலாம்.

சீமோன் என்பவரும் பெத்தானியாவில் வாழ்கிறார். இயேசுவையும் அவருடைய நண்பரான லாசருவையும், இயேசுவின் மற்ற நண்பர்களையும் சனிக்கிழமை சாயங்காலம் தன் வீட்டுக்கு விருந்து சாப்பிட சீமோன் கூப்பிடுகிறார். “தொழுநோயாளியாக இருந்த” சீமோன் என்று இவர் அழைக்கப்படுகிறார். ஒரு காலத்தில் தொழுநோயாளியாக இருந்த இவரை இயேசு குணமாக்கியிருக்கலாம். மார்த்தாள் எப்போதும் போலச் சுறுசுறுப்பாக விருந்தாளிகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறாள். மரியாள் தன் முழு கவனத்தையும் இயேசுவிடம் செலுத்துகிறாள். இந்தத் தடவை, அவள் செய்கிற ஒரு செயலால் அங்கே சலசலப்பு ஏற்படுகிறது.

மரியாள் ஒரு வெண்சலவைக்கல் குப்பியைத் திறக்கிறாள். இந்தச் சிறிய குப்பியில், ‘ஒரு ராத்தல் அளவுள்ள சுத்தமான, மிகவும் விலை உயர்ந்த சடாமாஞ்சி என்ற வாசனை எண்ணெய்’ இருக்கிறது. (யோவான் 12:3) இது மிகவும் விலை உயர்ந்தது. இதன் விலை (300 தினாரியு) கிட்டத்தட்ட ஒரு வருஷ சம்பளத்துக்குச் சமம்! மரியாள் இதை இயேசுவின் தலையிலும் பாதத்திலும் ஊற்றுகிறாள். பிறகு, அவருடைய பாதத்தைத் தன் தலைமுடியால் துடைக்கிறாள். வீடு முழுவதும் அந்த எண்ணெயின் வாசம் வீசுகிறது.

அவள் செய்ததைப் பார்த்து சீஷர்கள் கோபப்பட்டு, “இந்த வாசனை எண்ணெயை ஏன் இப்படி வீணாக்குகிறாள்?” என்று கேட்கிறார்கள். (மாற்கு 14:4) “இந்த வாசனை எண்ணெயை 300 தினாரியுவுக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று யூதாஸ் இஸ்காரியோத்து கேட்கிறான். (யோவான் 12:5) ஏழைகள்மேல் இருந்த அக்கறையால் யூதாஸ் இப்படிக் கேட்கவில்லை. சீஷர்களுடைய பணப்பெட்டி அவனிடம் இருந்ததால், அதிலிருந்து அவன் பணத்தைத் திருடிவந்தான்.

மரியாளுக்கு ஆதரவாக இயேசு பேசுகிறார். “ஏன் இந்தப் பெண்ணின் மனதை நோகடிக்கிறீர்கள்? இவள் எனக்கு நல்லதுதான் செய்தாள். ஏனென்றால், ஏழைகள் எப்போதும் உங்களோடு இருக்கிறார்கள், ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை. இந்தப் பெண் என்னுடைய உடல்மேல் இந்த வாசனை எண்ணெயை ஊற்றி, நான் அடக்கம் செய்யப்படுவதற்கு என்னைத் தயார்செய்திருக்கிறாள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், உலகில் எங்கெல்லாம் நல்ல செய்தி பிரசங்கிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இந்தப் பெண் செய்த காரியமும் இவள் நினைவாகச் சொல்லப்படும்” என்று சொல்கிறார்.—மத்தேயு 26:10-13.

அவர் பெத்தானியாவுக்கு வந்து ஒரு நாளுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் அங்கே இருக்கிறார் என்ற விஷயம் எல்லாருக்கும் பரவுகிறது. நிறைய யூதர்கள் சீமோனின் வீட்டுக்கு வருகிறார்கள். அவர்கள் இயேசுவைப் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல், “[இயேசு] உயிரோடு எழுப்பிய லாசருவைப் பார்ப்பதற்காகவும்” வருகிறார்கள். (யோவான் 12:9) லாசரு உயிரோடு இருப்பதால்தான் நிறைய பேர் இயேசுமேல் விசுவாசம் வைப்பதாக மதத் தலைவர்கள் நினைக்கிறார்கள். அதனால், இயேசுவை மட்டுமல்லாமல் லாசருவையும் கொலை செய்ய முதன்மை குருமார்கள் இப்போது திட்டம் போடுகிறார்கள். இவர்கள் எவ்வளவு மோசமான ஆட்கள், பார்த்தீர்களா?