Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 102

எருசலேமுக்குள் ராஜா நுழைகிறார்

எருசலேமுக்குள் ராஜா நுழைகிறார்

மத்தேயு 21:1-11, 14-17 மாற்கு 11:1-11 லூக்கா 19:29-44 யோவான் 12:12-19

  • எருசலேமுக்குள் இயேசு நுழைகிறார், மக்கள் வாழ்த்துகிறார்கள்

  • எருசலேமின் அழிவைப் பற்றி முன்னறிவிக்கிறார்

அடுத்தநாள் நிசான் 9, ஞாயிற்றுக்கிழமை அன்று, இயேசு தன் சீஷர்களோடு பெத்தானியாவிலிருந்து புறப்பட்டு எருசலேமுக்குப் பயணம் செய்கிறார். ஒலிவ மலையில் இருக்கிற பெத்பகே என்ற ஊருக்குப் பக்கத்தில் அவர்கள் வருகிறார்கள்.

அப்போது இயேசு தன்னுடைய சீஷர்கள் இரண்டு பேரிடம், “அதோ! அங்கே தெரிகிற அந்தக் கிராமத்துக்குப் போங்கள்; அங்கே போனவுடன், ஒரு கழுதையும் அதன் குட்டியும் கட்டி வைக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பீர்கள்; அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டுவாருங்கள். யாராவது உங்களிடம் ஏதாவது கேட்டால், ‘அவை எஜமானுக்கு வேண்டும்’ என்று சொல்லுங்கள். உடனே அவற்றை அவர் அனுப்பிவிடுவார்” என்று சொல்கிறார்.—மத்தேயு 21:2, 3.

பைபிள் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதற்காக இயேசு இதைச் சொல்கிறார் என்பதைச் சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை. சகரியா தீர்க்கதரிசனம் அப்போது நிறைவேறியதைப் பிற்பாடுதான் புரிந்துகொள்கிறார்கள். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா “தாழ்மையுள்ளவர்” என்றும், அவர் எருசலேமுக்குள் ‘ஒரு கழுதையின் மேல், கழுதைக்குட்டியின் மேல் ஏறிவருவார்’ என்றும் சகரியா தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தார்.—சகரியா 9:9.

சீஷர்கள் பெத்பகேக்கு வந்து, அந்தக் கழுதையையும் அதன் குட்டியையும் அவிழ்க்கிறார்கள். அப்போது அங்கே நின்றுகொண்டிருக்கிற சிலர், “கழுதைக்குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்கிறார்கள். (மாற்கு 11:5) அவை எஜமானுக்கு வேண்டும் என்று சீஷர்கள் சொன்னதும், அந்த ஆட்கள் அவர்களைப் போகவிடுகிறார்கள். சீஷர்கள் தங்களுடைய மேலங்கிகளை அந்தக் கழுதையின் மேலும் அதன் குட்டியின் மேலும் போடுகிறார்கள். இயேசு அந்தக் கழுதைக்குட்டியின் மேல் உட்காருகிறார்.

எருசலேமை நோக்கி இயேசு பயணம் செய்யச் செய்யக் கூட்டம் அலைமோத ஆரம்பிக்கிறது. நிறைய பேர் தங்களுடைய உடைகளை வழியில் விரிக்கிறார்கள். மற்றவர்களோ, மரக் கிளைகளை உடைத்து வழியில் போடுகிறார்கள். இன்னும் சிலர், “பாதையோரத்திலிருந்து இளங்கிளைகளை” ஒடித்துக்கொண்டு வந்து வழியில் பரப்புகிறார்கள். “கடவுளே, இவரைக் காத்தருளுங்கள்! யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்! வரப்போகிற நம் தந்தை தாவீதின் அரசாங்கம் ஆசீர்வதிக்கப்பட்டது!” என்று அவர்கள் ஆரவாரம் செய்கிறார்கள். (மாற்கு 11:8-10) கூட்டத்தில் இருக்கிற பரிசேயர்களில் சிலர் இதையெல்லாம் கேட்டு எரிச்சலடைகிறார்கள். அதனால், “போதகரே, உங்களுடைய சீஷர்களை அதட்டுங்கள்” என்று அவரிடம் சொல்கிறார்கள். அப்போது இயேசு, “நான் உங்களுக்குச் சொல்கிறேன், இவர்கள் அமைதியாக இருந்தால் இந்தக் கற்களே சத்தமிடும்” என்று சொல்கிறார்.—லூக்கா 19:39, 40.

பிறகு, எருசலேமைப் பார்த்து இயேசு அழுகிறார். “சமாதானத்துக்கு வழிநடத்துகிற காரியங்களை நீ இன்றைக்காவது பகுத்தறிந்திருக்கக் கூடாதா? இப்போது அவை உன் கண்களிலிருந்து மறைக்கப்பட்டிருக்கின்றன” என்று சொல்கிறார். வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் போனதற்கான விளைவை எருசலேம் அனுபவித்தே தீரும். “உன் எதிரிகள் உன்னைச் சுற்றிலும் கூர்முனை கொண்ட கம்பங்களால் அரண் எழுப்பி, உன்னை வளைத்துக்கொண்டு, எல்லா பக்கங்களிலிருந்தும் உன்னை நெருக்கி, உன்னையும் உன் பிள்ளைகளையும் அடித்து நொறுக்கி, ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடி உன்னைத் தரைமட்டமாக்கப்போகும் நாட்கள் வரும்” என்று தீர்க்கதரிசனமாகச் சொல்கிறார். (லூக்கா 19:42-44) இயேசு சொன்னபடியே, கி.பி. 70-ஆம் வருஷத்தில், எருசலேம் அழிந்தது.

எருசலேமுக்குள் இயேசு நுழையும்போது, “நகரத்திலிருந்த எல்லாரும் பரபரப்பாகி, ‘இவர் யார்?’” என்று கேட்கிறார்கள். அதற்கு அந்தக் கூட்டத்தார், “இவர்தான் முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசியான இயேசு! கலிலேயாவில் உள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்” என்று சொல்கிறார்கள். (மத்தேயு 21:10, 11) லாசருவை இயேசு உயிரோடு எழுப்பியதைப் பார்த்த ஆட்கள் அந்தக் கூட்டத்தில் இருக்கிறார்கள். அந்த அற்புதத்தைப் பற்றி மற்றவர்களிடம் அவர்கள் சொல்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கிற பரிசேயர்கள், தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று புலம்புகிறார்கள். “உலகமே அவன் பின்னால் போய்விட்டது” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள்.—யோவான் 12:18, 19.

எருசலேமுக்குள் நுழைந்ததும், இயேசு வழக்கம்போல ஆலயத்துக்குப் போய்க் கற்பிக்கிறார். கண் தெரியாதவர்களையும் கால் ஊனமானவர்களையும் குணமாக்குகிறார். ஆலயத்தில் இருக்கிற சிறுவர்கள், “கடவுளே, தாவீதின் மகனைக் காத்தருளுங்கள்!” என்று ஆரவாரம் செய்கிறார்கள். அவர் அற்புதங்கள் செய்வதையும், சிறுவர்கள் ஆரவாரம் செய்வதையும் முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் பார்த்து கோபப்படுகிறார்கள். அவரிடம், “இவர்கள் சொல்வதைக் கேட்கிறாயா?” என்கிறார்கள். அதற்கு இயேசு, “‘பிள்ளைகளின் வாயினாலும் குழந்தைகளின் வாயினாலும் உங்களுக்குப் புகழ் உண்டாகும்படி செய்தீர்கள்’ என்ற வார்த்தைகளை நீங்கள் வாசித்ததே இல்லையா?” என்று அவர்களையே கேள்வி கேட்கிறார்.—மத்தேயு 21:15, 16.

ஆலயத்தில் நடப்பதையெல்லாம் இயேசு பார்க்கிறார். நேரமாகிவிட்டதால் தன் சீஷர்களோடு அங்கிருந்து புறப்படுகிறார். நிசான் 10 ஆரம்பமாவதற்கு முன், அவர் பெத்தானியாவுக்குத் திரும்பிப் போகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கே தங்குகிறார்.